வியாழக்கிழமை மாலை
நேரத்து பெங்களூர் ரயிலில் ஓசூர் வருவதற்காக தனியாக பயணம் செய்தேன். நாகர்கோவிலில்
இருந்து புறப்படும் பொழுது வண்டியினுள் ஏறுவதற்கு முன்னால் ஒட்டியிருந்த சார்ட்டைப்
பார்த்தேன். எப்பொழுதுமே என் பெயரை பார்க்கும்போது எனக்குள் பரவசம் ஏற்படுவதுண்டு...முன் ஜாக்கிரதையும்
கூட. கோச் மாறி ஏறி சிரமப்படவும் கூடாதே.....
சார்ட்டில் வெற்றிடம் கூடுதலாக இருக்கக்
கண்டேன்..... என்ன....நாம் இண்டெர்நெட்டில் பார்க்கும்போது இடம் இல்லாதது போன்றல்லவா
கண்டோம்......சந்தேகத்துக்கு விடையேதும் கிட்டவில்லை....
எனது சீட் 60. தர்ட் ஏசி,வாசல்பக்கம். நிம்மதியாய் தூங்கமுடியாத இடமல்லவா ! மாற்று இடம்
கேட்டு வாங்கி 32-இல் இடம்பிடித்துக் கொண்டேன். அது பக்கவாட்டில் கீழ்த்தளப் படுக்கை.சரியாக 4.25க்கு இரயில் புறப்பட்டுச் சென்றது...
ரயில் திருநெல்வேலியை
அடையும்போது என் செல்போன் சிணுங்க நான் அதனுடன் உரையாட யாரென பார்த்தேன். அது லெக்ஷ்மணன்....
”ட்ரெயின் எங்க வந்திட்டிருக்கு ? அஞ்சு நிமிஷம் நிக்கும்ல்லா ? நான் உங்களை பாக்க
ஜங்க்ஷன் கிட்டக்க வந்துட்டேன்.”
“அய்யய்யோ....
ட்ரெயின் வந்தாச்சே.... இப்பம் கிளம்பீருமே......கிளம்பிடுச்சே...”
அல்வா,இரவுச் சாப்பிட
சப்பாத்தியுடன் வந்த அவன் ஏமாற்றத்துடன் .....” ட்ரெயின் எங்காவது கிறாசிங்கில் நிக்குமா....நிக்குது
போலத் தெரிகிறதே......”
நான் மனம் குழம்பிப்
போய் ....அவன் என் மீது வைத்திருக்கும் அன்பையும் அவன் செயலையும் நினைத்துக் கொண்டே
இருந்தேன். அவன் மிகவும் பிசியாக இருப்பவன் . இரண்டு தலைமை அலுவலகப் பொறுப்பாளராக இருப்பதால்
சமயம் ஒத்துழைக்காது. ஆகவே வரவேண்டாம்.ஒரு நிமிட நிற்பில் நாம் என்ன பேசிட முடியும்.....
என்று சொல்லியும் வந்து ஏமாந்துட்டானே.... சொன்னால் கேட்கவே மாட்டேங்குறானே.....இப்படி
நினைத்துக் கொண்டே அவன் அன்பு முக நினைப்பில் திகழ்ந்திருந்தேன்.....
மறுபடியும் அவன்
.....” கோவில்பட்டியில் இந்த ட்ரெயின் நிக்கும்ல்லா....”
”ஒரு நிமிடம் தான்
நிக்கும்.... ஏன்... நீ அங்கு வரப்போறியா..... வேண்டாம்......”
” இல்லப்பா......
நீங்க வாசல திறந்து வச்சு நிண்ணுங்க....ப்ளீஸ்பா..... ஒருவர் வந்து உங்கள்ட்ட ஒரு பார்சல்
தருவார்....”
”அவருக்கு என்னை
எப்படித் தெரியும்... எனக்கும் அவர் யாருண்ணு தெரியாதே’’’”
”நீங்க என்ன கலர்
உடுப்புப்பா போட்டிருக்கீங்க”
”நீல கோடு போட்ட
உடுப்பு... எனது பிளாக்கில் உள்ள போட்டொ பாத்திருப்பியே...அதே உடுப்பு.....வெள்ளை லுங்கி....”
அங்கங்கே கிறாசிங்.....
சும்மா நிற்கும் வண்டியைப் பாத்து கோபம் வந்தது....... சற்று காலதாமதமாய் கோவில்பட்டியை
நெருங்கியது.....
நான் கதவைத் திறக்கவும்
ஒருவர் கையில் ஒரு பார்சலுடன் வந்து கொண்டே இருந்தார்...... அவர் அவருடைய சீருடையில்
இருந்ததால் நம்மைத்தேடிவரும் அந்த ஆள் இவராகத்தான் இருக்கும்..... அந்த அவசரத்திலும் அவரைப்
பார்த்து கையை அசைத்து “ கொண்டாங்க..... நான் தான் நீங்க தேடுற ஆள்....” என்று சொல்லவும்
அவர் போணில் சார் கொடுத்திட்டேன்...நீங்க பேசுங்கோ என்ச் சொல்லி போனையும் என்னிடம்
தர நான் லெக்ஷ்மணனுடன் கிடைத்த விவரத்தை சொல்லவும் வண்டி கிளம்ப போணை அவரிடம் கொடுத்து
விட்டு என் இருக்கையில் போய் அமர்ந்தேன்.
இப்படியும் நடக்குமா
? இருக்கலாம்..... ஆனால் எனக்கு இந்தச் செயல் புதுசல்லவா? இப்படி அன்பு காண்பிப்பதற்கு....
நான் என்ன..... அதிகாரியா.....ஓய்வு பெற்ற ஒரு சாதாரணன் தானே.....
அன்புக்கு அடைக்கும்
தாள் இல்லை........