Thursday, February 19, 2015

செப்பு மொழி பதினெட்டு உடைய பாரதமாதா சிந்தனையும் பதினெட்டுடையாள்

ஜாம்நகர்..... குஜராத்தில் ......இந்தியாவில் உள்ள ஒரு நகரம்.....ஜாம்நகர மாவட்டத் தலைநகர். மாநகராட்சி. இந்த நகருக்கு பழைய பெயர் ஒன்றுண்டு...நவநகர். இன்று இந்த நகரம் இந்தியாவின் எண்ணெய் நகரம்

குஜராத்தின் தலைநகரமான காந்திநகரில் இருந்து 340 கிலோ மீட் டர் தூரத்தில் இருக்கிறது. வடக்கே பாகிஸ்தான். மேற்கே அரபிக்கடல்.

ரிலையன்ஸ், எஸ்ஸார் எண்ணெய் நிறுவனங்கள் இங்குதான் உள்ளன.

ஜாம்நகர் வளர்ந்துவரும் ஒரு நகரம். இரு பெரும் எண்ணெய் நிறுவனங்கள் இருப்பதால் அப்பகுதி மிகவும் வளர்ந்து வருகிறது.மின்வெட்டு இல்லை


ஜாம்நகரில் பால் உற்பத்தி மிக மிக அதிகம். வெண்மைப்புரட்சி கண்ட குஜராத்தி ல் மக்கள் பசுக்களை,எருமை மாடுகளை அதிகமாய் வளர்த்து பால் வியாபாரம் செய்து மகிழ்வாய் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களை சந்திக்கும்போதெல்லாம் ‘ஜெய்கிருஷ்ணா’ என்று வணக்கம் சொல்வதற்குப் பதில் சொல்வார்கள்.
வெளியே சாலைகளில் மாடுகள் அங்கும் இயங்கும் தாறுமாறாக  அலைந்து திரிந்து கொண்டிருக்கும்….மாடுகளுக்கு தீவனமாய் புல் வாங்கிக் கொடுப்பது புண்ணியம் என்ற நம்பிக்கை அங்குள்ள மக்களுக்கு இருப்பதால் ஆங்காங்கே புல்கட்டுடன் வியாபாரிகள் இருப்பதையும் காணலாம்.

அவர்களுடைய உடை நம்மூர் வேட்டியல்ல…. பேண்ட்ஸ் என்றும் சொல்ல முடியாத வித்தியாசமான ஒண்ணு… தலைப்பாகை கட்டியிருப்பார்கள்….
உடை அநேகமாக வெள்ளைதான், லுங்கி அணிந்து யாரையும் காணவில்லை.

உணவும் வட இந்திய உணவு தான். ஹோட்டல்களில் தென் இந்திய உணவு கிடைக்கும்....  காசு சற்று கூடுதல். இங்கு எல்லா ஹோட்டல்களிலும் ருசியான மோர் கிடைக்கும். டீக்கடைகள் கூடுதலாக இருக்கு. ருசியான டீ ஐந்து ருபாய்க்கு கிடைக்கும். அளவு குறைவாகத் தான் இருக்கும்.( அடுப்பின் மீது கெட்டிலில் டீ இருக்கும். நம்மூர் போல உடனே போட்டுத் தருவதில்லை…)

நான் இருந்த இத்தனை நாட்களில் வெளியே செல்கையில் என்னைக் கவர்ந்த விசயம்.
எதிரே வருபவர்களில் பத்துக்கு எட்டுபேர் அதிக வயதுள்ளவர்களாகவே இருந்தனர்…. ஆங்காங்கே வயோதிகர்கள் மாலையில் நிழல் உள்ள இடங்களில் கூடியும், ஒரே வரிசையாகவும் அமர்ந்து மகிழ்வுடன் இருப்பதைக் கண்டேன்…..

சிறுவர் முதல் பெரியவர்கள் வரை பான் பராக் அல்லது பாக்கு மென்று துப்பிக் கொண்டே இருப்பார்கள்……யாரை பார்த்தாலும் கன்னம் உப்பியே இருக்கும்….வாயினுள் பாக்கு உந்திக்கொண்டே இருப்பதால்…..

சிகரெட்  கிடைக்கும். கடைகளில் இருக்கு. ஆனால் சாலையில் குடித்துக் கொண்டே வருவதைப் பார்க்கவே இல்லை. பலர் பீடி குடிக்கிறார்கள் .

காந்தி பிறந்த குஜராத் காந்தியின் மது மறுப்பு இங்குண்டு. இங்கு மட்டுமே உண்டு.அதிக விலை கொடுத்தால் கிடைக்கும்..... சனி ஞாயிறுகளில் தெற்கு பகுதியானப் பக்கத்து யூனியன் பிரதேசமான டையூ-க்குப் போய் மது அருந்துவதுண்டு…(நம்மூர் பாண்டிச்சேரி போல)

நாங்கள் வந்த ஜனுவரி பிற்பகுதியில் குளிர் அதிகம் குறைந்தது 8 செண்டி க்ரேட்… ஒருவாரம் ஆனது செட்டாக….

பெண்கள் தங்க ஆபரணங்கள் அணிந்து பார்க்கவில்லை….. அரசு பஸ் உண்டு .இரயில் நிலையம் உண்டு.
டீக்கடைகள் எதிலும் செய்தித் தாள் இல்லை…. சாலையோரக் கடைகளில் தினசரி இல்லை. பேப்பர் வேண்டுமெனில் பிளாட்பாரத்தில் காலையில் ஒரு குறிப்பிட்ட சமயத்தில் போய் வாங்கலாம். வீட்டிற்கு கொண்டு போடுவதுண்டு…..

அடுக்கு மாடிக் கட்டிடங்கள் வந்தவண்ணமாய் இருக்கின்றன.
எண்ணெய் நிறவனங்கள் வருகையால் ஆட்டோ, வீட்டு வாடகை மிக அதிகமாகி விட்டது.

ரெலையன்ஸ் கம்பெனியின் ஊழியர்களில் 2500 ஊழியர்கள் தங்க டவுண்ஷிப் உள்ளது. இந்தக் கம்பெனியின் உரிமையான நிலம்  மொத்தம் 7500 ஏக்கர். இப்பகுதி லண்டனின் மூன்றில் ஒரு பகுதி….
ரிஃபைனரியில் உபயோகத்தில் உள்ள அனைத்துக் குழாய்களை ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கி வைத்தால் ஒருமுனை இந்தியாவின் தென்முனையிலும் மறுமுனை வடமுனையிலும் இருக்குமாம்
80 சதவீத மக்கள் கல்வியறிவு உடையவர்கள்….ஆனாலும் ஆங்கிலத்தில் பேசுவதைக் காணமுடியவில்லை. இந்தியோ குஜராத்தியோ…….பேசும் மொழி.
ஒரு ஹோட்டலில் வித்தியாசமான அனுபவம் ஒன்று கண்டேன். இதுவரை எங்கும் காணாத அனுபவம். ஹோட்டலில் முதலில் ருபாய் கொடுத்து ஆயிரம் ருபாய் அல்லது ஐநூறு,….. கொடுத்து ஒரு கார்டு வாங்கணும். நாங்கள் வாங்கிய ஆயிரம் ருபாய் கார்டு…. அதனைக் கொண்டு போய் எந்த உணவு வேண்டுமோ....... தோசை எனில் அதற்கான கவுண்டரில்……சப்பாத்தி எனில் சப்பாத்திக் கவுண்டர்…. ஒவ்வொன்றிலும் போய் ஆர்டர் பண்ணணும்….அதற்கு கம்ப்யூட்டர் பில் தருவார்கள்…. எல்லா பில்களையும் கொடுத்து மீதிப் பணம் வாங்கணும்……. கூட்டம் அதிகம் இல்லாவிட்டால் நாம் தான் பிளேட்டை மேசைக்குக் கொண்டு போகணும்….

பாரதம்….. பல மாநிலங்கள்….கலாச்சார வேறுபாடு……..மொழி வேறுபாடு…..பல வேறுபாடுகள்…
செப்பு மொழி பதினெட்டு உடைய பாரதமாதா சிந்தனையும் பதினெட்டுடையாளாகவே இருக்கிறாள். ஒரே ஒரு சிந்தனை மட்டும் எல்லோர் உள்ளத்திலும் உள்ளது.  அது சட்டத்தை மீறுவது……
போக்குவரத்து விதிகள் மதிக்கப்படுவது குறைவே……

குஜராத்தை முஸ்லீம் மன்னர்கள் ஆண்டு வந்த காலம் 1411ல்.
1818ல் ப்ரட்டீஷ் கிழக்கு இந்தயக் கம்பெனி சூரத்தில் நுழைந்து ஆட்சி செய்தது.

1947-ல் சுதந்திர இந்தியாவில், சௌராஷ்ட்ரா, கச்சு பகுதி நீங்கலாக குஜராத்தின் அனைத்துப் பகுதியும் பம்பாய் மாநிலத்தின் பகுதியாக 1960 மே மாதம் ஒன்றாம் தேதி வரை இருந்தது.அதன்பிறகு பம்பாய் மகாராஷ்ட்ராவோடு இணந்தது. குஜராத் அஹமதாபாத்தை தலைநகரமாய் கொண்டு தனி மாநிலமானது. 1970 இல் தலைநகர் மாறியது.  புதிய தலைநகரம் காந்திநகர் ... இன்றும் அதுவே.....

தேர்தல் நடந்தபோது ஆர்ப்பாட்டம் எதுவுமே இல்லாமல் தேர்தல் நடந்ததாக அறிந்தேன் . ஜாம்நகர் பாராளுமன்ற தொகுதி  பா.ஜ.க விடம்….

இந்தியாவை ஒருங்கிணைத்த  இரும்புமனிதர் வல்லபாய் பட்டேல்  குஜராத்தில் பிறந்தவர்....

நமது இன்றையப் பிரதமர் குஜராத்தில் மூன்றுமுறை முதல் அமைச்சராக இருந்தவர்....

முக்கியமான ஒன்று.... மின்வெட்டு இல்லை......ஆச்சரியம்.....ஆனால் அதுவே உண்மை......  இதுவரை இலவசமாய் மக்கள் எதனையும் அரசிடம் இருந்து பெறவில்லை.

Monday, February 16, 2015

அழியாத.....காலத்தால் அழியாத காதல்....ஏழையின் காதல்

சாவிலும் இணைபிரியாத தம்பதி: மனைவி இறந்த சில மணி நேரத்தில் கணவரும் உயிரிழந்த சோகம் மைசூருவில் நெஞ்சை உருக்கும் சம்பவம்
இது தினத்தந்தியில் 14-02-15 வந்த செய்தி.

எனக்குத்தெரிந்த ஒருவர் கதை.....என் வீட்டைக் கட்டிய நல்ல மனிதர் ஒருவரின் கதை............

அவன் ஒருக் கட்டிடத்தொழிலாளி….தொழில் நுட்பம் தெரிந்தவன்…. இன்று நாகர்கோவிலிலும் அதன் பக்கத்து ஊர்களிலும் அவன் பெயர் சொல்லும்படியாக பல வீடுகள் இருக்கின்றன. பள்ளியில் ஐந்து வருடப் படிப்பு……… படிக்க வழியில்லை….. 
காலத்தின் கோலம் சுயம்புவின் (அவன் பெயர் சுயம்பு என இருக்கட்டுமே) வாழ்வில் அலங்கோலமாக மாறிற்று……..புள்ளிகள் முற்றுப் பெற்று கோடின்றி கிடப்பது போல் சுயம்பு கிடந்தான்…..
இல்லை என்பதுவே வழக்கமாக தினமும் கேட்கும் வார்த்தை அவன் தாயிடம் இருந்து.
பைசா கேட்டால் இல்லை என்றே தினமும் சொல்லும் அவன் தாயே இன்று இல்லை…… அவனுக்கு புரிந்து விட்டது….
நேற்று வரை இருந்த தாய் இன்று ஏன் இல்லாமல் போனாள் என்று……இல்லை என்று சொல்ல தாய் இன்று மட்டுமல்ல இனி என்றுமே இருக்கமாட்டாள்….
சுனாமி ஊரைச் சீரழித்தது போல் அவன் வாழ்க்கையும் நிலை குலைந்து போனது.
வீடு இருக்கு….. ஆள் இல்லை….
கோலப்புள்ளிகள் இருக்கின்றன.. கோடுகள் இல்லை.
கோடில்லா கோலமும், ஆளில்லா இல்லமும் அழகு தருவதில்லை.
சுயம்புக்கு இருப்பது எதுவும் இந்தச் சின்ன வயதில் உதவுவதாக இல்லை.
ஒரு கதவை அடைத்த ஆண்டவன் இன்னொரு கதவை திறப்பானல்லவா.
தாய்மாமன்  கடவுள் வடிவில் வந்தார். அவர்…… துவண்டு கிடந்த சுயம்புவை எடுத்து ஆதரவோடு அணைத்தான்……..அவன் கண்ணீரைத் துடைத்தான்….
மாமனோடு அவன் வீட்டுக்குச் சென்றான்......
ராமன் வீட்டில் தொட்டிலில் ஒரு பெண் குழந்தை ….. அதன் முதுகு கூனன் முதுகு போன்றிருந்தது….முகம் அழகாய் இருந்தது. மற்றபடி எதுவும் சொல்லும்படியாக இல்லை. விளையாட மச்சான்மார்கள் பலர்….. அவர்களில் எவனும் பள்ளிக்குச் செல்லாமல்….கூலி வேலைக்கும் கையாள் வேலைக்கும் சென்று வந்தனர்.
குடும்பம் கட்டுப்பாடில்லாததால்….. அந்த அறிவு அன்று விதைக்கப் படாததால் அந்த வீட்டில்  ஐந்து அரசனுடன் ஒரு அரசியும் வளர்ந்து வந்தனர்…..அத்தோடு சுயம்புவும் வளர்ந்தான்……
கையாளாகவே மாமன் கொத்தனாருடன் வேலைக்குச் சென்றான்…….. வேலை கற்றான்…….தன்னந்தனி ஆளாய் வேலை செய்துப் பழகியபின்  மாமன் அனுமதியோடு தன் வீட்டுக்குப் போனான்…..
அழகில்லா வீடு அவன் வருகையால்  அழகாய் மாறிற்று… அந்த ஊர் அவன் பிறந்த ஊர்…. அந்த ஊர்க்கோயில் தர்மகர்த்தாவானான்…. அவன் அம்மா தினமும் வணங்கிய வீட்டருகேயுள்ள அம்மன் கோயிலைப் புதுப்பித்தான்…. ஒரு திறமையான வாலிபன் எனப் பெயரும் பெற்றான் .அவன் வாழ்ந்த அக்கிராமமே அவன் வருகையால் புதுப் பொலிவு பெற்றது….
அவன் சிரித்தால் அழகு….. பேசினால் அழகு….அவன் சொன்னால் அதுதான் சட்டம்……
வாலிப வயதானால் வலிய வருமே உறவுகள். உறவுகளும் வந்தன…..காதல்…….அதுவும் வந்தது….….. ஒரு பெண் ……. தன் வீட்டு விளக்கை ஒளியேற்ற வரவேண்டும் ஒரு பெண்.. அது தான் விரும்பிய பெண்ணாகவும் தன்னையும் விரும்பிய பெண்ணாகவும்  இருக்கவேண்டுமே…… அப்படி ஒரு மங்கை கிடைத்தாள்….. இது பற்றி அவன் மாமனிடம் சொல்லி முறையாக உற்றார் உறவினருடன் சென்று பெண் கேட்க வேண்டுமே என நினைத்திருந்த வேளையில்………..
அவன் மாமனே வந்தான்….. நாளை வீட்டுக்கு வா……சுசீலையை பெண் பார்க்க வருகிறார்கள்………
வந்தவர்களுக்கு பெண் பிடிக்கவில்லை……. அவள் முகம் பேரழகு….. ஆனால் கூனியின் உடம்பைக் கொண்டவளல்லவா….யாரும் திருமணம் செய்ய விரும்பி வரவில்லை….
காலம் காத்திருக்குமா…..அதற்கென்ன கவலை…… ஓடிக்கொண்டேதானே இருக்கும்…..
வயது ஏற ஏற கவலை மாமனை வாட்டியதைக் கண்டு கலங்கினான் சுயம்பு.
தனது திருமணம் தடைபடுவதை உணர்ந்தான். தன் வயதும் ஏறிக்கொண்டே போனதையும் கண்டான்.
தன் மாமன் கவலையால் வாட அந்தக் குடும்பமே பொலிவிழக்க நேர்ந்ததைக் கண்ட சுயம்பு   தன்னைக் காப்பாற்றி ஆளாக்கிய மாமன் மகளைத் தானே மணக்காவிட்டால் வேறு யார் முன்வருவார்கள்….. இந்தச் சிந்தனையால்
தியாகியானான்…. தன் வீட்டில் கோடில்லா புள்ளிகளை கோடு போட , தன்வீட்டு விளக்கை ஏற்றிட மனப்பூர்வமாகச் சம்மதித்தான்…..
இரண்டு குடும்பங்களும் தழைத்தன…….சுயம்புவின் வீட்டுக்கு சுசீலை மனைவியாய் வந்ததால்..
அவள் போல் அன்புக்கு இணை இவ்வுலகில் யாருமில்லை….ஆயிரம் பொன் கிடைத்தாலும் இது போன்ற நற்பெண் கிடைக்குமா…. என்று பெயர் பெற்றாள்.. ஈருடல் ஒருயிராய் வாழ்ந்தார்கள்….. இருவருமே நோய் நொடியில்லாமல் வாழ்ந்தார்கள்…….
இருமகள், ஒருமகன்………
சக்கரம் வாழ்க்கையை தடங்கல்களின்றி உருட்டிக் கொண்டிருந்த வேளையில் யார் கண்பட்டதோ…..சோதனை ……….. சோதனை…… நோய்வடிவில் சுயம்புவை விரட்டியது. 
விதி விளையாடியது…. விஞ்ஞானத்துக்கே சவாலாய் இருக்கும் நோய்  தாக்கியது. தனது எழுபதாம் வயதில் ஆஸ்பத்திரிக்குச் செல்கிறார்………. பயம் அவரை விரட்டுகிறது . மனம் துடிக்கிறது…..தன்னைப்பற்றி பயப்படவில்லை……மகன் மகள் பற்றியும் வருந்தவில்லை.
அய்யோ!........ அவள் அனாதையாய்…….நினைக்கவே அவர் நெஞ்சம் பதறியது.
தான் போய்விட்டால் தன் அருமை மனைவியை யார் கவனிப்பார்கள்……..
தான் மடியுமுன் அவள் கதை முடியவேண்டுமென தினமும் வேண்டினேனே…..ஆண்டவன் நம்மை ஏமாற்றிவிட்டானே…….என்று அழுகிறார். தனக்குள் மட்டுமே  பேசி…..பேசி….. கதறி அழுகிறார்…… அவர் கண்ணீரைத் துடைக்க அருகில் யாருமில்லை.…
இது நாள்வரை காய்ச்சல் என்று கூடப் படுக்காத தன் கணவன் படும் சின்ன வேதனையைக் கூடத் தாங்க முடியாமல்……சுசீலைக் குமிறிக் குமிறி நெஞ்சு முட்ட ஏங்குகிறாள்…. ஏங்கியவள் துவண்டு விழுகிறாள்…. அதன்பிறகெ அங்கே ஏற்பட்ட நிசப்தமே …….பெரும் சப்தமாய் மாறியது .
இருதயம் அவளிடம் சொல்லாமலே இயக்கத்தை நிறுத்தி விட்டது.
மனைவி மறைந்த செய்தியை அவரிடம் சொல்ல அவர் அருகே சென்று பார்க்கிறார்கள்.
முகத்தில் புன்முறுவல்……முகம் ஆடாமல் அசையாமல்…….
அவள் கதையா…….அவர் கதையா….. யார் கதை முதலில் முடிந்தது….. யாருக்கும் தெரியாது…….. ஆண்டவன்………. அவன் ஒருவனே அறிவான்…….


Saturday, February 7, 2015

வயதானபின் கணவன் மனைவியரில் யார் முதலில்.......... தாலிகட்டியவனா?.....தாலி அணிந்தவளா?......

தாயோடு அறுசுவை போகும்,தந்தையோடு கல்வி போகும்,
மனைவியோடு எல்லாமே போகும் என ஆசிரியர் வகுப்பில் சொன்னது அடிக்கடி என் நினைவில் வந்து போகும்..... மனைவியின் பிரிவால் ஏற்படும் நிலை ஒரு வயதான மனிதனுக்கு ஏற்படவே கூடாது. மனைவி இருந்து கணவன் போனால் அந்தப் பெண் வாழ்க்கையை மகனுடன் .மகளுடன் அனுசரித்துப் போய் எஞ்சிய வாழ்வைக் கடந்து விடுவாள்.....ஆனால்,  ஒரு ஆணால் அது போன்று அவ்வளவு எளிதாக வாழ்க்கையை இனிவாய் முடிக்க முடியாது. ஆசிரியர் சொன்ன விளக்கம் இது.

அனைவருக்கும் வயதான காலத்தில் தாழ்வு மனப்பான்மை ஏற்படுமோ என்னவோ.....தெரியவில்லை....

எனது வயதான தந்தை தன் இறுதிக் காலத்தில் சொல்வார்....  தாங்கள் இருவருமே ஒரே சமயத்தில் இறையடி சேரணும்.... சேர்ந்தால் இருவருமே யோகம் செய்தவர்கள்.ஒருவர்போய் மற்றொருவர் இருந்தால் அவமானப்பட வேண்டியதிருக்கும்.... ஆனால்

என் தந்தை மறைந்தபின் என் தாயர் எங்களுடன் 15 வருடங்கள் ராஜா இல்லா ராணி போல் வாழ்ந்து மறைந்தாள்..... என்பதுவே உண்மை....

வரும் வாழ்க்கையை அதன் போக்கிலேயே போகவிட்டு, இரவு தூங்கப் போவதும் மறுநாள் கண் விழித்தபின்னால்தான் உயிரோடு இருப்பதை உணர்வதாகவும் காலத்தைக் கழித்துக்கொண்டிருக்கிறார்கள் பலர்.....

வறுமையும் வெறுமையும் வயோதிகத்தில் இல்லாமல் இருக்க வேண்டுமெனில் கணவனும் மனைவியும் சேர்ந்தே உயிரோடு இருந்தால் மட்டுமே இயலும். இயற்கை இதற்கு உதவி செய்வதில்லை....சேர்ந்தே வாழ விரும்பும் எவரும் ஒரே நாளில்  மறைவதில்லை....

யார் முதலில் இறப்பது......?  ஆண் .....அதுவும் முதியவயதினர்.....மனைவிக்கு முன்னால் போனால் பாக்கியம் செய்தவன்.....

ஒரு கதை......மங்கையர் மலர்.....பெப்ருவரி 1-15 இதழில்  இறையன்பு எழுதிய
” அவள் ஏன் அப்படிச் சொன்னாள் ?’.... படித்தேன்..... ஆச்சரியம்......எனக்குப் பிடித்த..... ரசித்த கதையாய் அமைந்தது.....

சுருக்கமாகச் சொல்வதானால் .............

கதை நாயகி பெயர் சபர்மதி....வயது எழுபது.... அந்த ஊர் அரங்கத்தில் ஒரு மகான்....அவரை தரிசித்து வணங்க வரிசை வரிசையாய் வந்து ஆசீர்வாதம் பெற்றுச் செல்கிறார்கள். சபர்மதியும் வணங்குகிறாள்....மகான்,’’ தீர்க்க சுமங்கலியாய் வாழ்க.......என வாழ்த்த, பதறிய சபர்மதி .” அப்படி மட்டும் வாழ்த்தாதீங்க சாமி. அவர் எனக்கு முன்னாடி போயிடணும்”......... என வேண்டுகிறாள். இப்படி ஒரு கிராதகியா என அவளை கரப்பான்பூச்சியைப் பார்ப்பதைப் போல அரங்கத்தில் உள்ளவர்கள் பார்க்கிறார்கள். அவள் ஏன் அப்படி சொன்னாள் ? .......

 இதனை அறிய வேண்டுமானால் அந்த அழகு கதையத்தான் படிக்கவேண்டும்.........