Wednesday, October 24, 2012

எழுபது வயதான இருவர் சந்தித்த அந்த நாள்....

நேற்று சரஸ்வதி - நவராத்திரி பூஜையின் இறுதி நாள் பூஜை .காலையில்  பெங்களூரில் இருந்து நாகர்கோவிலுக்கு  வந்த என் மகள் அவர்களது வீட்டில் இருந்தாள்.  இதன் காரணமாக எங்கேயும் வெளியிடங்களுக்கு செல்ல வேண்டாமே என முடிவெடுத்துக் கொண்டிருந்த என்னை என் நண்பரின் அழைப்பு கடுக்கரைக்குப் போய் வர வைத்தது. அன்று அவரது 65-ஆவது பிறந்த நாள்.

காலை 11.30 மணிக்கு நானும் அவரும் வழக்கம் போல் பேசிக் கொண்டிருந்தோம்.

" உனக்கு எங்க தாத்தாவின் தம்பியைத் தெரியுமா” என்று கேட்டார்.

“ ஏன் தெரியாது ! நல்லாத் தெரியுமே. எனக்கும் அவர் தாத்தாதானே. கடுக்கரையில் நெல்லுக் கடை வைத்திருந்தார்லா.....” என்றேன்.

“ உனக்கு பிளாக் எழுத ஒரு விசயம் சொல்லட்டுமா....”

அவன் சொல்ல ஆரம்பித்தான்.

“  ஒரு நாள் அந்த தாத்தாவை  எங்க வீட்டுக்கு மதிய சாப்பாட்டுக்காக அழைக்கப் போனேன். அவர் வெளியூரில் வசித்துவந்தார்.  பெரிய பண்ணையார். கடுக்கரையில் உள்ள களத்துக்கு வயல் அறுவடைக்காக வருவார்.  வந்து சில நாட்கள் தங்குவார். அவருக்கு சொந்த ஊர் கடுக்கரை.  அப்பம் அவருக்கு எழுபது வயதிருக்கும்.... ஆள் நல்ல சிவப்பு.... வேட்டியை வயிற்றுக்கு சற்று மேலே இறுக்கமா கட்டி இருப்பார். தூய வெள்ளை உடுப்பு. தடிமனாகவும் சற்று உயரமாகவும் இருப்பார். கையில் நடப்பதற்கு ஊன்றுகோல் எதுவும் கிடையாது.”

அவர் நடந்து வந்த போது ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தைப் பார்த்தார்.சற்று அமைதியாய் நின்று என்னைப் பார்த்து, “  ஏய்! அந்தப் பாலத்துல நானும் அண்ணனும் இருந்து பேசிக்கிட்டிருப்போம் . ரெண்டு பேரும் நடந்து நொண்டிப்பாலம் வரை போவோம். நான் பீடி குடிப்பேன். அந்தக் காலத்துல சிக்கரெட்டுல்லாம் கிடையாது. நான் கொடுத்தா மட்டும் அண்ணன் பீடி குடிப்பார்.... அவருக்கு கடுக்கரையிலும் நல்ல மதிப்பு.. எல்லா ஊர்லேயும் மதிப்பு உண்டு. ... எனக்கு அதெல்லாம் ஒன்ணும் கிடையாது.”   அவரது பழைய நினைவுகள் - எனக்கு அப்போ 21 வயசு-. கேட்பதில் ஒரு சுவராஸ்யம் இருந்தது.”

நடந்து பள்ளிக்கூடம் அருகே வந்ததும் மேற்குத்தெருவில் இருந்து ஒரு பாட்டா தடிக்கம்பு ஊணி நடந்து வந்து கொண்டிருப்பதைப் பார்த்து நின்றார். அவர் அருகே வந்ததும் அந்தப் பாட்டாவின் வயிற்றுப்பக்கம் கட்டியிருக்கும் வேட்டியினுள் கையைவைத்துப் பிடித்து இளுக்க அந்தப் பாட்டா திடீரென்று ஏற்பட்ட அதிற்சி காரணமாக என்னவென்று அறியாமல் திணறிக் கொண்டிருந்தார்.

நம்ம தாத்தா ,“ என்னடே ..... என்ன உனக்குத் தெரியல்லையா?” என்றார்.

இவர் பேசிய சத்தம் கேட்டதும் பாட்டாவின் முகம் மலர்ந்து , “ ஏய்.... செல்லம்..... உன்னப் பாத்து எத்தனை நாள் ஆச்சுடே.... எப்படிடே இருக்க...
நல்லா இருக்கியாடே.....”

சேக்காளியைக் கண்ட பரவசம் அந்தப் பாட்டாவின் முகத்தில் தாண்டவம் ஆடியது.

“ என்னடா .... நீ.... கம்பு ஊணி நடந்து வாறே.... என்னப் பாத்தியா.... ஓன் வயசுதானெ எனக்கு... கம்பா வச்சிருக்கேன்.....” உற்சாக மிகுதியில் தாத்தா பேசினார்.

பதிலுக்கு பாட்டா,“ ஏய் ! செல்லம்.... நீ யாரு.... நான் யாரு... நீயும் நானும் ஒண்ணாடே...... நீ எப்படி இருக்கணுமோ அப்படி இருக்க.. நானும் உன்னமாரி இருக்க முடியுமாடே...... ஏண்டே என்ன பாக்க வரவே மாட்டேங்க.....”

உற்சாக மிகுதியால் அவரது முதுகில் ஒரு அடி கொடுத்துவிட்டு தாத்தா என்னுடன் நடந்து வந்தார்.  பள்ளிக்கூடத்தைக் கையால் காண்பித்து “ இந்தப் பள்ளிக்கூடத்திலதான்  நானும் அவனும் ஒண்ணாப் படிச்சோம். அப்பம் இது ஓலைக் கட்டிடம்....”

காலத்தின் கோலம் பின்னாள் எப்படி இருந்தது தெரியுமா?

கம்பு ஊணி நடந்துவந்தவர் அதிக நாள் வாழ்ந்தார். தாத்தா ஒரு மாதத்தில் நோய் வாய்ப்பட்டு படுக்கையில் பல வருடங்கள் சிரமப்பட்டார்.Sunday, October 14, 2012

குரு ஒருவர் தேவை என அறிவுறுத்திய பாபு

இந்தத் தடவை என்னுடைய இரயில் பயணம்- பகலில் வந்த இரயில் பயணம் மிகவும்  வித்தியாசமாக இருந்தது. நான் சந்தித்த இரயில் நண்பர்கள் என் மனதில் இன்றும் மகிழ்வைத் தந்து கொண்டிருக்கிறார்கள்.
முதலில் சந்தித்தது விவசாயத்துறையில் ஓய்வு பெற்ற அதிகாரி திரு.சுந்தரேசன். அவர் அப்பா மகாராஜ நகரில் கோவில் கட்டினவர். ஆனால் அவர் சின்னச் சின்ன கோவில்களுக்குப் போய் பூஜாரியின் முதுகைப் பார்ப்பதை விட வீட்டில் பூஜாரூமில் சாமி கும்பிடுவதைதான் விரும்புவாராம்
கல்லூரிக்கு நிதிஉதவி செய்த திருவாடுதுறை ஆதீனம் பற்றி அவர் சொன்னது புதுச் செய்தி. அது நாங்கள் எழுதும் வரலாற்று நூலில் சேர்க்கப்பட வேண்டுமா?
அடுத்தது வடநாட்டு நல்ல இளைஞனின் ஜோதிட மோகம்
நாடி ஜோதிடத்தினால் ஏற்படும் நன்மை ஒன்று உண்டு. அந்த ஜோதிடன் பணக்காரனாவது. தீங்கு அகப்படும் பாமரன் ஒருவன் தன் பணத்தை இழப்பதுவே. அநியாயமாய் ஒருவனின் ஆசை காரணமாக இன்னொருவன் பெருவசதிஅடைவதும் எத்தனை நாள் இந்த நாட்டில் நடக்குமோ.

மதுரையில் ஏறிய ஒருவர். வயது 47. மிகக் குறுகிய நேரத்தில் மலையாளமும் தமிழும் கலந்த பேச்சால் நண்பர்களாகி விட்டோம். என் இருக்கை எண் 44. அதன் படுக்கை மேலடுக்கில்.நான் TTE-இடம் 43-க்கேட்டு அதில் அமர்ந்து கொண்டேன். சேலம் செல்லும் அந்த இருக்கைக்கு வரவேண்டியவர் வரவில்லை.
மதுரையில் ஏறியவர் க்கு 43 ஆம் எண் இருக்கையை கொடுத்திருக்கிறார்.
அவர் அதற்கு உரிமை கொண்டாடுவதில் தவறேதும் இல்லை. ஆகவே அவரை இருக்கச் சொல்லி நான் எழுந்தேன்.அவர் பெயர் பாபு. பாபு என்னிடம்,’ நீங்க இருந்து கொள்ளுங்கள். நான் இங்கேயே இருந்து கொள்கிறேன். கேரளத்துக் காரர் ஒருவர் இவ்வாறு சொல்வது அதிசயம் தான்.

பாபு மிகவும் அனபாகவே பழகினார். அவர் என்னைப் பற்றி கேட்க நான் சொல்ல என் மீது கொண்ட மதிப்பு அவரிடம் கூடுவதைக் கண்டேன். அவர் தான் பாலக்காட்டுக்காரர் . மதுரையில் வேலை நிமித்தம் மதுரையில் தாமசிப்பதாகவும் சொன்னார்.தாய் பாலக்காட்டில்.
அவரது தாயின் படம், தாரத்தின் படம்,ஒரே மகளின் படம் இருந்த கைபேசியை எனக்குக் காட்டிக்கொண்டிருந்தார்.

அவர் ஒரு செயில்ஸ் மானேஜர். கார் சம்பந்தமான வேலை.

எங்கள் எதிரே இருந்தவரின் நாடி ஜோதிட அனுபவத்தைக் கேட்டதில் அவரும் உண்டு. அவர் பூனாவில் உள்ள ஆச்சிரமத்தின் விலாசத்தைக் கொடுத்துப் பார்க்க முடியுமானால் பாருங்கள் என்று அந்தப் பையனிடம் சொன்னார்.

என்னிடம் பேசும்போது  அவர் இந்தியாவில் உள்ள அவரது கம்பெனி ஆட்களில் தான் தான் முதல் ஆள். குறிக்கொள் அதிகம் எட்டியவர். தான் அவ்வாறு பெருமை அடையக் காரணம் ஒரு குரு தான் எனச் சொன்னார்.
குரு இப்பொழுது உயிரோட் இல்லை.அவர் பெயர் சத்தியானந்த சரஸ்வதி.செங்கோட்டுக்கோணத்தில் ஆசிரமம் இருக்கிறது.
திருமணம் ஆனவுடன் முதன்முதலாகப் போன இடம் அந்த ஆஸ்ரமம்.அவர் உயிரோடு இருந்த காலம்.
அவர்களை அவர் ஆசீர்வதித்து விட்டுச் சொன்னாராம். “உன் மனைவி பிரசவ சமயத்தில் முதுகு வலியால் வேதனைப் படுவாள். அப்போது நீ இங்கு வா.நான் மருந்து தருகிறேன்.” வலி வந்தது. அவர் தந்த மருந்தால் குணமும் கிடத்தது. சுகமாகவும் பிரவசம் நடந்தது.

ஆஸ்ரமத்தில் யாரிடமும் யாசிப்பதில்லை. விளக்குக்கு எண்ணெய்  ஒரு நாள் இல்லாமல் இருந்த சமயம். கிணற்று நீரை மந்திரித்து விளக்கில் விட்டு தீபம் ஏற்றச் சொன்னாராம்.விளக்கு எரிந்தது.

மணி பத்தைக் கடந்தது.
அவர் முகத்தில் அசதி தெரிந்து நான் தூங்கும் படி சொன்னேன்.
.
நான் எத்தனையோ தடவை நான் எழுந்து இடம் கொடுத்துத் அவரைத் தூங்கச் சொன்னேன்.

தூங்கவே இல்லை.அந்தப் பெட்டியில் உள்ள அனைவருமே
தூங்கிக் கொண்டிருந்தனர். இவர் ஒருவர் தான் என்னிடம் பேசிக் கொண்டே இருந்தார்.
நான் இறங்கும் இடம் வந்தது. எனது பொருட்களை எடுத்துத் தந்து உதவினார்.
முதல் தடவையாக இரயில் நண்பரிடம் எனது போன் நம்பரைக் கொடுத்தேன்.

இனிமையான நாளாக இருந்தது இந்த நாள்.

 

ரயிலில் நாடி ஜோதிட அனுபவம் சொன்ன இளைஞன்.

அவன் சொல்ல ஆரம்பித்தான்.” எனக்கு சின்ன வயதில் இருந்தே தியானம்,யோகா,யோகாசனம் இவற்றில் நம்பிக்கையும் ஈடுபாடும் கூடுதல். பள்ளியில் படித்து முடித்ததும் வழக்கம்போல் எல்லாப் பெற்றோர்களும் என்ன செய்வார்களோ அதையே எனக்கும் செய்தார்கள்.அதிக மார்க்கும் எடுத்துக் கூட என்னை மெடிக்கல் சீட் டொனேஷன் கொடுத்து தான் சேர்த்தார்கள். ஒராண்டு படித்தேன். என் நாட்டம் படிப்பில் இல்லை.அதனால் படிப்பைத் தொடரவில்லை.

ஒரு நாடிஜோதிடரை ஹைதராபாத்தில் போய்ப் பார்த்தேன். ஒருவரைப் பற்றி அவர் பிறப்பதற்கு முன்பே எழுதி வைக்கப்பட்ட ஏடு தான் நாடிஜோதிடம்.
அவர் என் கைப்பெருவிரல் ரேகையைப் பதிவு செய்து விட்டு என்னிடம் கேள்விகள் கேட்டார்.  இரண்டு மாதம் கழிந்த பின் வரச்சொன்னார்.போனேன். என்னைபற்றிய என் முன் ஜன்ம வரலாறு, இன்றைய வரலாறு, நாளைய வரலாறு எல்லாமே நோட்டில் எழுதித் தந்தார்.”
நோட்டை நான் வாங்கிப் படித்துப் பார்த்தேன். எல்லாமே பாடல்களாகவே இருந்தன.
அந்த நோட்டில் 20000/-க்கான வங்கி ரெசீது ஒன்று இருந்தது. இவ்வளவு ருபாயா என்று கேட்டேன். இல்லைஇல்லை....இது பரிகாரம் செய்வதற்குண்டான செலவு.
பசுதானம்,ஆயிரத்தெட்டு லிங்கபூஜை,108 லிங்க பூஜை,பஞ்சலிங்க பூஜை என .......
சித்தர் ஒருவாரால் சபிக்கப் பட்டதால் சதுரகிரிவந்து பரிகாரம் செய்தாராம். வந்து போனதில் ஒரு லட்சம் ருபாய்க்கு மேல் செலவாயிருக்கும்.
நான் கேட்டேன் .” பெற்றோருக்கு இதில் நம்பிக்கை உண்டுமா ?”
அவன் சொன்னான்.”நம்பிக்கை உண்டு. என் பெற்றோர்கள் எனக்கு கிடைத்திருப்பது நான் செய்த பாக்கியம். என்னுடன் வந்திருப்பவர் ஒரு பண்டிட். அவருக்கு ஜோதிடம்.ரேக்கி இதெல்லாம் தெரியும். அவர் என்னுடைய தந்தையின் பால்ய நண்பர். இன்னொருவன் எனது காரோட்டி...”
தியானம் செய்வது பற்றி கேட்டேன். இரண்டு மணி நேரம் தியானத்தில் தினமும் இருப்பாராம். நிறைய புத்தகங்கள் படிப்பாராம்.
குரு உண்டுமா ?
இல்லை. பலரை நாடிப்போனதில் அவர்கள் பணத்தில் தான் குறியாய் இருக்கிறார்கள்.
நீங்கள் பாவங்களுக்கு இரக்கப்படுவதாக நாடி ஜோதிடத்தில் இருக்கிறதே. கோவில் கட்டி முடிப்பீர்கள் என்று இருக்குதே.
சிரித்தான்..... நான் சொன்னேன்.’நீங்கள் பிறக்கும் போதே தங்கக் கரண்டியோடு பிறந்திருக்கிறீர்கள். நீங்கள் சுயமாக சம்பாதித்து இதெல்லாம் செய்தால் தானே பெருமை”
அவன் வயது 27. வசதியான பையன். கர்வம் இல்லை. மருத்துவ தேவையான அறிவு. பணிவானப் பேச்சு. அமுல் பால் டின்னுக்கு விலை கூடுதலாகக் கேட்ட பையனை சிரித்துக் கொண்டே எச்சரிக்க அவன் உண்மையான விலையைச் சொன்னபின்பும் அவனிடம் முதலில் கேட்டதையேக் கொடுத்த மனசு.
அவனுடன் வந்திருந்தவர் அவனைப் பற்றிப் புகழ்ந்து தான் பேசினார். ஆனால் அவனது அப்பாவுக்கு நாடி ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லை என்றார்.
ஒரு சுவர் இடிந்து அவன் மேல் விழுந்து ஆறு மணிக்கூர் ஆனபின்பும் அவனுக்கு ஒன்றும் ஆகாமல் இருந்ததைச் சொன்னார்.
ஏமாறக் காத்திருக்கும் போது ஏமாற்றுபவர்களுக்கு கொண்டாட்டமே.
கோதானம் செய்தவனும் பெற்றவனும்  ஒரே குடும்பத்து ஆட்களாக இருக்குமோ என சந்தேகப்பட்டேன். அவனிடம் கேட்கவில்லை. அவன் சொன்னான் பசுவைப் பெற்றுக் கொண்டவள் ஒரு விதவை. நான் நினைத்ததை ........அவன் சொன்னது தற்செய்லாக நடந்ததா?
ஒன்றுமே புரியவில்லை.
நாடி ஜோதிடம் பயில திருச்சியில் ஆசிரியர்கள் இருக்கிறார்களாம்.....

Saturday, October 13, 2012

ரயிலில்நான்சந்தித்தஇளைஞன்.

நாடி ஜோதிடம் பற்றிய செய்தி என்னை மிகவும் பாதித்தது. ஒவ்வொருவரும்  தங்கள் அனுபவங்களை மிகைப் படுத்திச் சொல்லும் போது கேட்கும் யாருக்கும் அங்கு போகவேண்டும் நாடிஜோதிடம் பார்க்க வேண்டும் எனத் தோன்றும். எனக்கு நம்பிக்கை கிடையாது. இருந்தாலும் சாதாரண ஜோதிடன் ஒருவர் தந்தையை இளந்த ஒரு பெண்ணின் ஜாதகத்தைப் பார்த்தவுடன் சொன்னது எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது..  எனது மாமனாரும் உறவு முறையில் மாமா இருவரும் அந்தப் பெண்ணின் ஜாதகத்தைக் காண்பித்து வருங்காலம் பற்றி ஒரு ஜோதிடரிடம் கேட்டார்கள்.
ஜாதகத்தைப் பார்த்த உடன் அவர் சொன்னது. “ இந்தப் பெண்ணின் தந்தை இப்போது இருக்க மாட்டார்.”.... இது போல் பல விசயங்கள் நம்புவதா? கூடாதா? என முடிவு எடுக்க முடியவில்லை. என்னைப் பற்றி ஜோதிடர் சொன்னது சரியாக இல்லாதது ஒரு காரணம்.

வைத்தீஸ்வரன் கோவில் -இந்த ஊரில் பல நாடி ஜோதிடர்கள் உண்டு. ஊரில் இறங்கிய உடன்  நம்மை நாடிவந்து  அழைத்துப் போக தரகர்கள் வந்து மொய்ப்பார்கள். நாகர்கோயிலிலும் , சுசீந்திரத்திலும் நாடி ஜோதிடர்கள் பலர் உள்ளனர். கோயில் இருக்குமிடமெல்லாம் இவர்களும் இருப்பார்களோ......

பெங்களூருக்கு வரும் போது நான் இருக்கும் ரயில் பெட்டியில் மதுரையில் மூவர் ஏறினர்.மூன்று பேருமே பூனாவைச் சேர்ந்தவர்கள். என்னை என் இருக்கையை தரும்படி வேண்டினார்கள்.. நான் சொன்னேன்...”தருவதில் பிரச்சினை ஒன்றும் இல்லை. இரவு 9.30 க்கு நான் கேயார்புரத்தில் இறங்கி விடுவேனே’ என்று சொன்னேன்.  அதனால் அவரவர் கிடைத்த இடத்தில் அமர்ந்து கொண்டனர்.

சினிமா நடிகனுக்கு வேண்டிய அழகுத் தோற்றம் கொண்ட அந்த இளைஞன் தன் தொடு திரை கை பேசியை வைத்துக் கொண்டு அவனது பொழுதைக் களித்துக் கொண்டிருந்தான். நான் அவனை நானாகவே Software Engineer-ஆக இருப்பான் என ஊகித்துக் கொண்டிருந்தேன். அவனுடன் வந்தவர்களில் ஒருவர் என்னைவிட வயதானவர். இன்னொருவன் இளைஞன்.

இந்தியில் பேச நான் தமிழில் பேச இருவருக்கும் ஏதோ கொஞ்சம் புரிந்தது.
அவன் ஆங்கிலத்தில் பேச பேச்சு சுவராஸ்யமாக மாறியது.
அவன் மதுரை மீனாட்சி அம்மன் கோயில்  ,திருவண்ணாமலை,கோடைக்கானல்,ஸ்ரீவில்லிபுத்தூர் பக்கம் உள்ள சதுரகிரியில் உள்ள சித்தர்  சத்தமுனி (சப்தமுனி)இருக்கும் இடம் என்னும் இடங்களுக்குப் போய்விட்டு ஊர் திரும்பிக் கொண்டிருக்கிறோம் என்று சொன்னான்(ர்)

இத்தனை இடங்களையும் பார்த்த 12 நாட்களும் அவர்கள் சென்றது வாடகைக்காரில்... அதற்கானச் செலவு ருபாய் 25000/-

இவ்வளவு இடங்களைப் பார்த்தவர்கள் ஏன் கன்னியாகுமரிக்கு போய் வரவில்லை என்று கேட்டேன். பதில் சொல்லாமல் சிரித்தான்.

நான் திரும்பவும் கேட்க அவன் சொன்னான்.” பரிகார பூஜை செய்வதற்காகத் தான் நான் சொன்ன இடங்களுக்கெல்லாம் சென்று வந்தேன்.” என்றான்

சற்று ஆச்சரியத்துடன் பூனாவில் இருந்து திருவண்ணாமலைக்கு வந்து பரிகார பூஜை செய்ய வந்தார்களா என சிந்தித்துக் கொண்டிருந்தேன்.

அவன் பெயர் சொன்னான்.அவனது பெற்றோர் இருவரும் புகழ் பெற்ற மருத்துவர்கள்.மூத்தவனாக இருக்கும் இவனது தம்பி,தங்கை,தங்கையின் கணவர் அனைவருமே டாக்டர்கள்.
இவனும் மெடிக்கல் காலேஜில் படித்துப் பாதியில் விட்டவன். இப்பொழுது ஆஸ்பத்திரியின் நிர்வாகத்தில்......

நான் கேட்டேன். ஏன் படிப்பைப் பாதியில் விட்டாய் எனக் கேட்க அவன் சொல்ல ஆரம்பித்தான்.

அடுத்த பகுதியில் எழுதுகிறேன்.

சில ரயில்பயணத்தில் சில அனுபவங்கள்


ரயிலின் பகல் பயணம் மிகவும் பிடிக்கும்.வெளியே பார்த்துக் கொண்டு  வரும் போது சில வித்தியாசமான அனுபவங்கள்.
சாலைகளில் செல்லும் கார்கள் சற்று தூரத்தில் வேகமாக இரு திசைகளிலும் விரைந்து சென்று கொண்டிருக்கும். ரயிலை விட வேகமாகப் போவது போலவே இருக்கும்.  இணைந்து கொஞ்ச தூரம் வருவதும் திடீரென சண்டைக்காரன் போல் விலகிச் செல்வதும் உண்டு.
இந்தியன் ரயில் செல்லும் தண்டவாளப் பாதையில் வேறெந்த ரயிலும் செல்வது இல்லை. சாலை- அதில் கார்,லாறி, மனிதன் என எதுவும், எவரும் செல்லலாம்.
தனியார் ரயில் கிடையாது. தனியார் பஸ் உண்டு. வான் வெளியில் கூட தனியார் விமானச் சேவை உண்டு.
ரயிலை எதிர்த்து எதுவும் வர  முடியாது.
நான் சென்ற ரயில் ஒரு SUPER FAST TRAIN. எல்லா  முக்கியமான ரயில் நிலையத்திலும் ஒரு நிமிடம் நிற்கும். ஆனால் எதிர் திசையில் வரும் வண்டிகளுக்கு வழிவிட்டு நிற்கும். அவ்வாறு அடுத்துள்ள ரயில் செல்லும் போது நாம் இருக்கும் ரயில் போவது போன்ற ஒரு  உணர்வு ஏற்படும்.பதவி இழந்த மன்னன் போல் பவ்யமாய் நிற்கும். கால தாமதத்தில் ஏற்படும் நேரக் குறவை விரைவாகச் சென்று சமன் செய்யும்.
திருநெல்வேலி கழிந்து போகும் போது ஜன்னல் வழி வெளியே பார்த்தால் கருங்கடல் போல் தெரியும். வானும் தரையும் தொடும் தூரத்து அழகு நம்மைக் கவரும்.
கருமை நிற மண்கொண்ட பரந்து விரிந்து கிடக்கும் நிலப்பரப்பு-கரிசல் காடு  எதற்கோ தயாராய் கொண்டிருக்கும். ஒற்றைப் பனை மரம் எஜமானன் போல் கம்பீரமாக நிற்கும். சில இடங்களில் ஒற்றுமையாய் பல பனைமரங்கள்.  பல மரங்கள் நெருக்கமே இல்லாமல் அதிக இடைவெளியோடு….
கல்லூரிப்பேராசிரியர் போல் உடை அணிந்து கொண்டு மிடுக்காக அதிகம் பேசாமல் நம் அருகில் வந்து டிக்கட் பரிசோதிப்பார் ஒருவர். கணினிப் பதிவுத் தாளை அவரிடம் காண்பித்து திரும்பி நம் கையில் கிடைப்பது வரை படபடப்பு நெஞ்சில். வயது சரியாக இருக்கணும். நமக்கே நம் முகம் தானா என்று சந்தேகம் தரும் அடையாள அட்டையை அவர் பார்த்து நம்மிடம் தருவது வரை மனதில் ஒரு பயம்.அவர் அதனைத் திரும்பி நம்மிடம் தரும் போது அவர் கையில் வைத்திருக்கும் தாளையும் நாம் கொடுத்த தாளையும் சரிபார்த்து அதில் டிக் அடித்து ,இதில் கையொப்பமும் இட்டு தருவார். அதன் பிறகு சினேக பாவத்துடன் சிரித்துக் கொண்டு செல்வது…..
கல்லூரி ஆசிரியர்கள் ஜீன்ஸ் போன்ற உடை அணிந்தும் கட்டம் போட்ட சட்டையும் தான் அணிகிறார்கள். என்று மாறுமோ இந்த அலங்கோலம்.ஹோட்டல் ஊளியர்களுக்கே சீருடை…. மாணவர்களுக்குச் சீருடை….. ஆனால் ஆசிரியர்களுக்கு….. அவர்கள் எப்படி வேண்டுமானாலும் வரலாம். இவர்கள் மாறவேண்டுமே…. மாறும் காலம் வரும்.

ஈரோடு சந்திப்பில் நான் இருந்த இடத்தில் அடுத்துள்ள அறையில் ஒரே கூச்சல்…. ஒரு பெண்ணுடன் புதியதாய் வந்தவன் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறான். அவள் இருக்கை தனது இருக்கை யென உரிமை கேட்டுச் சண்டை. அவள் பக்கம் நியாயம் இருந்ததால் அவள் அசையவில்லை அந்த இடத்தைவிட்டு. இவன் குரல் ஓங்க ,நல்ல வேளை பரமாத்மா போல் TTE அங்கே வர  டிக்கெட் கேட்டார். அவனிடம் டிக்கட் இல்லை. அவன் தன் மொபைல் போனில் உள்ள செய்தியை அவன் காண்பிக்கிறான். அந்தச் சமயம் பார்த்து அவளது கணவர் வர சண்டையும் வலுவாக ,இருவரின் சண்டித்தனம் முகம் சுழிக்க வைத்தது. TTE, Squad இருவரும் அவரை சமாதானப் படுத்தி வெளியே கூட்டிக் கொண்டு வந்து அந்த செய்தியை பார்த்ததில், அவர் ஏற வேண்டியதும் மும்பை ரயில் தான். ஆனால் அது இரவு 8 மணி வண்டி எனக் கூற அசடு வழிந்து போனான்.
தாளில் …. வேண்டாம்  ஒரு சின்னத் துண்டுத் தாளில் PNR தகவலை எழுதி வைக்கலாமே… படிக்க வாங்கும் செய்திதாளில் குறித்து வைக்கலாமே…..
முன்போல் ரயில் நிலையத்தில் நின்று பயணம் முடிந்து செல்பவர்களிடத்தில் காலாவதியான டிக்கட்டை கேட்க ஆள் யாரும் நிற்பதில்லை…..ரயிலில் கூட்டம் அதிகம். ஊளியர்கள் குறைவு.
நஷ்டத்தில் போகுதாம் ரயில்வேத் துறை......Friday, October 12, 2012

எனது அத்தானின் நண்பர் சுந்தரேசனை சந்தித்தபோது....

நான் திருநெல்வேலி ரயில் நிலையத்தில் ரயில் நின்று கொண்டிருந்த வேளை. கண்ணாடி ஜன்னல் வழியே, வெளியே தெரிவதை என் விழிகளால் படம் பிடித்துக் கொண்டிருந்தேன்.

வயதான பெண் ஒருத்தி உருளும் இரு சக்கர நாற்காலியில் அம்ர்ந்திருக்க  சுமைதூக்கி பின்னால் இருந்து உருட்டிக் கொண்டே வந்து கொண்டிருந்தான். எப்படி இவளால் ரயில்பெட்டியினுள் ஏறமுடியும்....?  வாசல் அருகே வந்தாச்சு....இன்னும் இறங்க வில்லை..... காத்திருக்கிறாள்.... ஒரு இளைஞன் அவள் பக்கம் வந்தான்..... அவளது மகனாகத் தான் இருப்பான்....அவன் தாயை அவன் ஒருவனால் பிடித்துத் தூகக முடியாதே.... என்ன செய்யப் போகிறார்களோ..... அவள் இறங்க முயற்சித்துக் கொண்டிருந்தாள்....அவன் மகன் சும்மாவே நின்று கொண்டிருந்தான்.  என்னடா இது....அம்மைக்கு உதவி செய்யாமல் சும்மாவே நிற்கிறானே....

அவள் யாருடைய உதவியும் இல்லாமல் இறங்கினாள்.....மகன் பின்பக்கம் நிற்க பெட்டியினுள் ஏறினாள்.  அவள் தான் முதலில் வந்து அவள் இருக்கையில் அமர்ந்தாள். மகன் ஒரு பெட்டியை உள்ளே கொண்டு வைத்து விட்டு இறங்கினான். பின்னர் சற்று வயதான திடகாத்திரமான ஒருவர் வந்தார். பழகிய முகம் போல் இருக்கு. ஆனால் யாருண்ணுதான் தெரியவில்லை.... அவரும் என்னைக் கண்டுகொள்ளவில்லை.

ரயில் விசில் சத்தத்தைத் தொடர்ந்து  நகர ஆரம்பித்து பின்னர் வேகமாக ஓடியது. கோவில்பட்டியில் வைத்து அவரை சந்தித்து அவரிடம் பேசினதில் அவர் என்னுடைய அத்தானுடன் நெருங்கிய பழக்கம் உள்ளவர் எனத் தெரிந்து கொண்டேன்.
என் பைபேசியை கையில் எடுத்து என் அத்தானின் பெயரைத் தொடர்பு வரிசையில் பார்த்து தொடர்பு கொண்டு பேசி அவர் பெயரைச் சொல்லாமல் அவரிடம் கொடுத்து அத்தானிடம் பேசச் சொன்னேன். பேசியதும் அவர் பெயரை அத்தான் சொல்ல அவருக்கு ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி... அதை அவர் முகம் காண்பித்தது.
இந்துக் கல்லூரிசங்க பங்குதாரர் ஒருவர் பெயரை ச்சொல்லி தமது மகளின் கணவர் என்றும் சொன்னார். தெரியுமெனச் சொன்னேன்.
அவர், “ அவருடைய மருமகனின் அப்பா கல்லூரியின் தொடக்க காலத்தில் இயக்குனராக இருந்தவர் என்றும் திருவாடுதுறை ஆதீனம் கல்லூரிக்கு மிகவும் நிதியுதவி கேட்டு மருமகனின் தந்தையும் அவரது தந்தையாரும் போய் வந்ததைச் சொன்னார்.” அவரது தந்தை  பேஷ்காரராய் ஆதீனத்தில் முன்னாளில் பணியாற்றியவராம்.

ஒரு புதுச் செய்தி கேட்டு ஆச்சரியம் அடைந்தேன்.

எழுத்துக்களும் என் மனதினுள்ளே உள்ள நன்றியும்


  முகநூல் என்னை மாற்றியது. ஒரு எழுத்தாளனாக மாற்றியது.
   என் எழுத்துக்கள் என் மன அமைதிக்காகவும், ஆறு போல் சுறுசுறுப்புடன் இருக்கவும் எஞ்சி இருக்கும் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கும் நாட்களில் மூளைக்கும் மற்ற உறுப்புகளுக்கும் வேலை கொடுப்பதற்காகவும் எழுதினேன்.
  என் மூத்த மகன் பாராட்டினான்.என் எழுத்துப்பணி முகநூலில் பரந்தது. பலரது நட்பு கிடைத்தது. கோவை ஜீவானந்தத்தின் நட்பு என்னை இன்னொரு தளத்திற்கு அழைத்துச் சென்றது. அதுதான்  BLOG.          
         அதில் நான் எழுத என் மகனின் நணபர்கள் எனைப் பாராட்டினர். எழுத்து       என்னை மாற்றியது.

  ஆசை என்னை வரலாற்று ஆசிரியனாக மாற்றிற்று. தமிழ் எனக்கும் உதவிற்று. வரலாறு எழுதலானேன்............
  மாணவன் நானும் மாற்றத்தைச் சந்தித்துக் கொண்டே …..ஆம் நான் அதே கல்லூரியில் ஆசிரியராய் - கணித ஆசிரியனாய்……மாறினேன். . மாற்றம் என்னை மறுபடியும் வழக்கம்போல் தழுவியது. இந்த மாற்றம் ஓய்வுற்ற போதும் என்னை வளாகம் வரவேற்றதால் கண்ட மாற்றம். நானும் மாறித்தான் போனேன். இன்று இயக்குனர் - இந்துக் கல்லூரிச் சங்க இயக்குனர். இது எனக்கு கல்லூரி தந்த புது முகவரி.
  மாற்றம் என்னை மெருகூட்டிற்று. மனிதனாக்கியது. என் மனதில்  ஒன்றுக்கு - கல்லூரிபால் கொண்ட காதலில் மாற்றம் இல்லை…இல்லவே இல்லை….. ”மாற்றம்” மாறாதது போல் என் தாய் – கல்லூரிபால் கொண்டபாசமும் நேசமும் மாறாதது. அது என்னில் என்றும் நிரந்தரமே...... கல்லூரி வரலாறு எழுதும் காலமும் கனிந்தது.
  வரலாறும் பூவாய், காயாய் , கனியாகும் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.
  கால மாற்றத்தால் ஏற்படும் மாறுதல்களை ஒவ்வொரு ஜீவராசிகளும் ஏற்றுக் கொண்டு தம் வாழ்க்கைப் பாதையை அமைத்துக் கொள்கின்றன. அவ்வாறு ஏற்காத ஜீவன்கள் அருகிப் போவதற்குக் காரணம் எது எனத் தெரியாமல் நாமே ஒரு புதுக் காரணத்தைச் சொல்லிப் பழக்கப்பட்டு விட்டோம். மாற்றத்தை ஏற்றுக் கொண்டு ,தடைகள் வந்தாலும் தளராத மனம் கொண்ட பல மன உறுதி கொண்ட மனிதர்கள் இந்துக்கல்லூரிக்குத் தலைவர்களாகவும், முதல்வர்களாகவும்  வந்ததால் தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரி பல மாற்றங்களை சந்தித்து இன்று ஒரு மிகப்பெரிய கல்லூரியாகத் திகழ்கிறது.
  அறுபது ஆண்டுகள் உருண்டோடி விட்டன…….. எத்தனை எத்தனை மாற்றங்கள்….. ஆட்சி மாற்றம்……..அதனால் தலைவர்கள் மாற்றம்…… காலத்தின் கட்டாயத்தால் ஏற்பட்ட கல்லூரி முதல்வர்கள் மாற்றம்...... ஆசிரியர்கள் மாற்றம்..... இந்துக் கல்லூரியின் ஆரம்பத்தோற்றம் இன்று இல்லை. அதுவும் மாறித்தான் போயிற்று. அது ரம்மியமான தோற்றப் பொலிவை தந்து கொண்டிருக்கிறது. 
  விநாயகருக்கோர் ஆலயம், சுய நிதி வகுப்புகளை சரியான சமயத்தில் ஆரம்பித்தது,M.C.A, M.Sc எனவும் வானுயர் கட்டிடங்கள், எனவும் கல்லூரி கண்ட மாற்றம் பொலிவாகவே இருந்தது.
   இவ்வாறு வளர்ந்த வரலாறு நேற்றும் இன்றும் நாளையும் பயின்ற, பயில்கிற, பயிலப்போகின்ற மாணவர்கள், அறிய வேண்டும். 
  என்னைச் செதுக்கிய உருவாக்கிய உதிரம் கொடுத்த இந்த உயரத்தினில் வைத்து அழகு பார்த்த கல்லூரிக்கு - இந்தப் பெரும் கல்லூரிக்கு நன்றியாக ஒன்று செய்ய வேண்டும் – அச்செயல் நாளும் பேசப்படல் வேண்டும் – அது நாளையும் தொடர் செயலாக இருத்தல் வேண்டும். அதனால் என் சிந்தனையில் வந்ததன் பலனே இம்முயற்சி.
  தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரிக்கு ஒரு வரலாறு நூல் தேவை. இதனை உணர்ந்த நான் அதனை எழுத முடிவெடுத்தேன். தேவைக்கு அதிகமாகவே கவல்கள் சேகரித்த பின் என் தமிழில் எழுத முற்பட்டேன்.  அறிவு என்னை எச்சரித்தது. என் தமிழ் அறிவு உதவுமா ? எழுதினேன். நணபர்கள் சிலர் நான் வடித்த தமிழுக்கு மெருகூட்டினர்.  அவர்களுக்கு நன்றி கூறுவதென்பது எனக்கு நானே நன்றி சொல்வது போல்தான் இருக்கும்.
   வரலாறு எழுத முற்பட்டபோது அதனை வரவேற்று ஊக்கப்படுத்தியும் பல முக்கியமான தகவல்களைத் தந்தும்  பெரும் ஆதரவு தந்தவர் எங்கள் கல்லூரித் தலைவர் திரு. ஆறுமுகம்பிள்ளை.
  திருப்பணிக்கு உதவியவர்கள் சிலர். அவர்களில் நிறுவனச் செயலர் மகன் திரு.பி.வள்ளிநாயகம் பிள்ளை, முன்னாள் முதல்வர் திரு தே.வேலப்பன், முன்னாள் துணை முதல்வர் டாக்டர் எஸ்.சுப்பிரமணியம். தொடக்க கால ஆண்டுமலர்கள்,கையேடுகள் பல தந்து உதவிய முன்னாள் மலையாளத்துறைத் தலைவர் திரு உண்ணிகிருஷ்ணன் நாயரின் குடும்பத்தினர் முக்கியமானவர்கள். கல்லூரி முதல்வர், பணியாளர்கள் சிலர்,என் ஆசிரிய நண்பர்கள். அத்தனை பேருக்கும் என் வாழ்த்துக்கள் நன்றியுடன்.
  ஆறு மாத கால உழைப்பு என்னை பெருமிதம் கொள்ளச் செய்கிறது.
  ஒருவன் ஒரு முறைதான் நீரோடும் ஆற்றைக் கடக்க முடியுமாம். கிரேக்க ஞானி சொன்னதாக பேராசிரியர் ஒருவர் சொன்னார்.
  என்னால் ஆற்றை ஒரு முறைதானே கடக்க - வரலாற்றை  எழுத- முடியும்….. தினமும் மாறும் வரலாற்றை இன்னொருவர் தான் எழுத முற்படல் வேண்டும்….. வரலாறு படைக்க வேண்டும்.  இதுவே என் பிரார்த்தனை
  மாற்றம் ஒன்றுதானே மாறாதது. மாற்றம் நிகழட்டும். “மாற்றம்” இயக்கம் இருந்தால் மட்டுமே நிலைபெறும்.... இயக்கம் தொடரட்டும்.....மாற்றம் அழகு. அது ஒன்றே அழகு. நமது கல்லூரியிலும்….. கங்கை கரையோரம் ஒரு காசி சர்வகலாசாலை இருப்பதுபோல் கன்னியாகுமரிக் கடற்கரையாம் நாகர்கோவிலிலும் ஒரு பல்கலைக் கழகமாய் நம் இந்துக் கல்லூரியும் மாறட்டுமே……….. மாறும் தேசிக விநாயகனின் அருளால். எல்லோரும் பிரார்த்திப்போம், முயல்வோம்……..முயற்சி திருவினையாக்கும்……..

   வரலாறு எழுத்துப்பணியில் எனை ஊக்குவித்த ஒருவர் பாராட்டப்படல் வேண்டும் என்பது என் ஆசை. நடு நிசியில் கூட எழுந்து தேநீர் அல்லது காப்பி சூடாய் தந்து உதபுபவர். நான் படித்துக் காட்ட,  என் வரிகளில் தவறிருந்தால் சுட்டிக் காட்டியதும் உண்டு. அவர் என் மனைவியே தான். அவருக்கும் நன்றி கூறுவதுதானே முறையானது. 
   

Thursday, October 11, 2012

நான் பார்த்த வெள்ளைநிற கப்.

பெங்களூருக்கு பஸ்ஸில் தான் கொஞ்ச நாட்களாக போய் வந்து கொண்டிருந்தேன்.
எனக்கு பஸ்ஸில் போவதில் சில சிரமங்களை எதிர் கொள்ள வேண்டியதிருக்கும். இந்தத் தடவை நான் தனியாகப் போவதால் ரயிலில் பயணம் செய்யத் திட்டமிட்டேன்.
 ரயில் பயணம் சற்று சிரமம் கூடுதல். கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரம் வழியாக பெங்களூர் செல்லும் ரயில் பயண தூரமும் நேரமும் அதிகம். வாரத்திற்கு ஒரு ரயில் நாகர்கோவிலில் இருந்து ஓசூர் வழியாக பெங்களூர் ரயில் புறப்படும் நேரமும் வந்து சேரும் நேரமும் மனதுக்கு ஒத்துவராத நேரம்.

நாகர்கோவிலில் இருந்து மும்பை செல்லும் ரயில் கிருஷ்ணராஜபுரம் வழியாகவே செல்லும். அதனை அடுத்து பக்கத்தில் உள்ள பெங்களூர் வழியாகப் போவதில்லை. நான் போக வேண்டிய இடம் கஸ்தூரிநகர். கிருஷ்ணராஜபுரம் என்ற கேயார்புரம் பக்கம் உள்ள்து.

அதனால் நான் 10-10-12 அன்று காலை 6.30 மணிக்குப் புறப்படும் ரயிலில் பயணமானேன்.
நான் இருந்த ரயில் பெட்டி என்னை சுதந்திரம் கிடைக்காத காலத்துக்கு என் நினைவலைகளை அனுப்பியது. அந்தப் பெட்டி கலக்டர் ஆஷ் பயணம் செய்த ரயிலில் உள்ளதாக இருக்குமோ. பழமையும் புதுமையும் கலந்த கலவையாக இருந்தது கண்டேன். அபாயச் சங்கிலியை இழுத்தால் 250 ருபாய் அபராதம் அல்லது  மூன்று மாதம் சிறைத்தண்டனை என்று இருந்த காலத்தில் உருவானது.  இப்பொழுது 1000 ருபாய் அல்லது 12 மாதம். வள்ளியூர் செல்வதுவரை second AC A1-44 UB berth -உடன் நான் வெறுப்பாகவே இருந்தேன்.
 தலையணை, கம்ப்ளி தந்தான்.அழகாய் இருந்தது. வெள்ளைநிற போர்வையும் மனதுக்குப் பிடித்தாய் இருந்தது.

காப்பி வாங்கிக் குடித்தேன்.அந்தக் கப் மிக அழகாய் இருந்தது. வெளியில் 15 ருபாய் கொடுத்துக்  காப்பி குடிப்பவன் இந்த அஞ்சு ருபாய்க் காப்பியைக் குறைசொன்னால் அது மிக அநியாயம்.

 என்னை நசுக்கிக் கொண்டுபோய்க் குப்பைத்தொட்டியில் போடு என்ற எழுத்து அந்தக் கப்பை மீண்டும் பார்க்கத் தூண்டியது.ECO-FRIENDLY CUPS,    SERVICE WITH SMILE. இந்த வாசகம் ஆங்கிலத்தில் இருந்ததால் தமிழ் மாத்திரமே தெரிந்தவர்கள் என்ன செய்வார்கள். அவர்களுக்கு அறிவுரை தேவையில்லை.

கப்பின் மேல் விளும்பு வட்டத்தில் ஒன்பது நீல நட்சத்திரங்கள் இருந்தன.150 ml 1170 ml  வரை தான் அதன் கொள்ளளவு. வட்டத்திற்குள் இந்திய ரயிலின் படம் 9+1 நட்சத்திரத்துடனும் பாரத சின்னத்துடனும் ..... அந்த கப் பற்றிய ஆராய்ச்சி என்னை மெதுவாக என் வெறுப்புணர்வை மாற்றியது. திரு நெல்வேலி வரை  நான் மட்டுமே விகடன்,தினத்தந்தி  துணையுடன்  பயணம் செய்தேன்.

DTR வந்தார்..... அவர் பெயர்........ வேண்டாம் அவர் அனுமதி இல்லாமல் எழுதுவது நாகரீகமற்ற செயல். அவரிடம் பேசினேன். இந்த  COACH  ரொம்ப மோசமாக இருக்கே என்று நான் சொன்னேன். பத்து வருடம் முடிந்து காலாவதியானாலும் கூடுதல் பத்து வருடங்கள் ஒவ்வொரு பாகத்தையும் மாற்றி மாற்றி பயன்படுத்துவது தான் நம் நாட்டு வழக்கம்.

SERVICE TAX என்னிடம் வாங்கவில்லை. காரணம் ஒன்றாம் தேதிக்கும் முன்னமே நான் ரிசர்வ் செய்ததால். ஆனாலும் எனக்குத் தெரியணுமே. அவர் சொன்னார், “எங்களுக்கு அதற்கான அறிவுரைகள் தரப்படவில்லை” ஆனாலும் நூற்றுக்கு மூன்று ருபாய் வைத்து நான் வசூலிக்கிறேன்..

நான் கேட்டேன் அவரிடம். ‘நீங்கள் கணித மாணவரா ?”.
அவர் ஆமாம் என்றார் சற்று ஆச்சரியத்துடன்.

நான் ஒரு கணித ஆசிரியன் என்றேன். பேச்சு முடியவில்லை.அதற்குள் அவரதுப் பணிச்சுமை பேச்சினை தொடர விடவில்லை.

நான் எப்படி இப்படிப் பேசப் பழகிவிட்டேன். எல்லாம் கணினியின் செயல்.


ஒரு பயண ஆரம்பத்தின் முன்னே.....

காலையில் அஞ்சரை மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட்டுப் போகணும்னு நாலு மணிக்கே அலாரம் வைத்து எழுந்தாலும் ஆறரை மும்பை ரயிலைப் பிடிக்கப் போய் சேர்ந்த நேரம் ஆறு பத்து.

காலையில் வந்து சேர்ந்த ஏதோ ஒரு ரயில் காரணமாக  நாகர் கோயில் ரயில்நிலையம்வெளியே பரபரப்புடனும் எதிர்பார்ப்புடனும் வந்து கொண்டிருக்கும் கூட்டம் கலைந்து கரைந்துபோக சிறிது காலநேரம் கூட  அதனால் காரை நிறுத்த வேண்டிய நேரத்தில் நிறுத்தி ,நிறுத்தக் கூலி கொடுத்து முடிக்கவும் நேரம் அதிகமானது.

 பிளாட்பாரம் டிக்கட் எடுக்க நீண்டவரிசை.  ராமு  வரிசையில் போய் நின்றான். நகர்ந்து போன வரிசையின் இடையே நுழைய முற்பட்ட முகம் தெரியாத யாரையோ ஒருவன் திட்ட அவன் பரிதாபமாய்  வாரிசயின் வால் பக்கம் போய் நின்றான்.ராமு சுவர் அருகே நெருங்கிக் கிட்டே போனதும் சில்லறை இல்லையே என அதிர்ந்து ராமு பரக்க பரக்கப் பார்த்து விழியால் என்னைத் தேடினான்.

 நான் லக்கேஜை தனியே விட்டுப் போக மனமில்லாமல் சிறு தூண் போல் நின்றிருந்தேன்.  ஒருவழியாக பிளாட்பாரம் டிக்கட் எடுத்துவிட்டு வெளியேவந்தபோது மணி 6.20

“மூன்று புறப்படுப்பாதைகள்” உண்டுமே. நம்ம ரயிலில் எதில் இருந்து புறப்படும். அங்கையே டிக்கட் தந்தவரிடமே கேட்க முற்பட சுவரில் ஒட்டப்பட்டிருந்த தாள் தந்த அறிவிப்பால் அவரிடம் கேட்கவில்லை.அவரைக் கேட்டால் சொல்ல மாட்டார் என்பதனைப் புரிந்து கொண்டேன்.

கேட்டால் சொல்வதெற்கென்றே ஒருவர் இருக்கும் இடம் நோக்கிச் சென்றேன்.

 அவர் இரண்டாம் மேடையருகே  நிற்கிறது எனத் தகவல் சொன்னார்.

 படியேறி செல்லும் கடத்துப் பாதை வழியே அந்த ரயிலை அடந்து விடலாம்.ஆனால் மறுபடியும் அந்தத் திசை போகவிரும்பாமல் எதிர் திசையான தெற்கு நோக்கிச் சென்றோம்.  பரபரப்பும் படபடப்பும் மெல்ல என் உடலில் பரவ ஆரம்பித்தது.

இனிமேல் இப்படி வராமல் ஒரு மணிக்கூருக்கு முன்னால் வந்து விடணும். அது தான் safe.

 முதல் நடை மேடையின் அருகாமையில் நின்று கொண்டிருக்கும் ரயிலில்
ஏறி மறுபக்கம் இறங்கினால் நம் ரயில் தானே அங்கு நிற்கிறது.

அதில் ஏற நினக்கும் போது கூடவே பயமும்- ரயில் கிளம்பிவிட்டால் என்கிற பயம் வந்ததால் என் நடை தொடர்ந்தது. விரைவாக....இல்லை...மிக விரைவாக நடக்க என்னிடம்  ராமு சொன்னான்.”சார்! பயப்படாதீங்க சார். இந்த ரயில் ஒருநள் கூட சரியான நேரத்துக்குப் போனது கிடையாது......” ஆனாலும் என் நடையின் வேகம் குறையவில்லை.

பயந்தது போலவே கடக்க நினைத்த ரயில் மெல்ல முன்னோக்கி நகர ஆரம்பித்தது.

வால் பக்கத்துப் பெட்டியில் இருந்து மூன்றாம் பெட்டி தான் நான் ஏறவேண்டிய ரயில் பெட்டி. பெட்டியின் முகம் என் முகத்தைச் சுளிக்க வைத்தது.

வாசல்பக்கம் ஒட்டி இருந்தக் கணினித் தாள் என் இருக்கையை உறுதிப் படுத்தியது.

மணி மிகச் சரியாக 6.30. எனது ரயில் - இந்திய ரயில் உறுமிக் கொண்டே ஊர்ந்து செல்ல ஆரம்பித்தது. அது ராமுவை பார்த்துதான் உறுமியதோ .....

 

Monday, October 1, 2012

அன்பு அறிவுடன் அமைதியும் சேர்ந்தால் வாழ்க்கை வளமாகுமே.

செப்டம்பர் மாதம் 25-ஆம் தேதி நானும் என் மனைவியும் பெங்களூருக்குப் போகணும்னு தீர்மானிச்சு டிக்கட் எடுக்க நினக்கும் போதுதான் அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி நான் நாகர்கோவிலில் இருந்தாக வேண்டிய அவசியம் நினைவுக்கு வந்தது. நான் இதைச் சொல்லி பெங்களூர் போகும் தேதியை தள்ளிப் போட்டால் என் மனைவியின் மனம் வாடும். நன்றி அறிவுப்புக் கூட்டம் நடக்கும் தேதியான ஒன்றாம் தேதியை மாற்றினாலும், என்னைப் போலவே இன்னொருவர் அந்தக் கூட்டத்திற்கு வந்து போவதில் சிரமம் ஏற்படும். மனதினில் குழப்பம்.

எனக்கு ஒரு ராசி உண்டு. ரயில் பிரயாணத்தின் போது லோயர் பெர்த்தில் ரிசர்வ் பண்ணி டிக்கட் எடுத்துப் போனாலும் அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்ததில்லை. காரணம் என்னை விட வயசான பெரியவர், குழந்தை யுடன் வரும் இளம்தாய் என எவராவது ஒருவர் வந்து விடுவர்.

நான் மட்டும் தனியாக செப்டம்பர் மாதம் 29-ஆம் தேதி அங்கிருந்து நாகர்கோவிலுக்கு வந்து விடலாம் . மறுபடியும் பிறிதொரு நாளில் பெங்களூர் போய் அவளையும் அழைத்துக் கொண்டு வந்துரலாம் எனத் திட்டமிட்டபடி டிக்கட் எடுத்தேன்.

29-ஆம் தேதி மத்தியானம் இரண்டு மணிக்குப் பிறகு தொலைக் காட்சி செய்தியைப் பார்த்த என் மனைவி ,“ பாருங்கோ ..... பஸ் ஒண்ணும் நாரூலுக்குப் போகாது....” எனச் சொல்ல நானும் பார்த்தேன்.

தமிழகத்திற்குத் கர்நாடகம் தண்ணீர் தர வேண்டும் என உச்சநீதிமன்ற தீர்ப்பின் அதிர்வின் காரணமாக  சத்தியமங்கலம், மாண்டியா  எனச் சில இடங்களில் தமிழகத்திற்குச் செல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டதாக செய்திவரிகள் ஒடிக் கொண்டிருந்தன.

தொலைகாட்சித்  திரும்பத்திரும்ப அதனையே ஒளிபரப்பித்  தொல்லை  தர  ஆரம்பித்தது .

பதட்டமடைந்த என் மகளும் என் மனைவியும் என்னைப் போகவேண்டாம் என்று சொல்லாமல் ஆனால் தங்கள் முகபாவ மொழியால் சொல்லிக் கொண்டே இருந்தனர்.

என் மனதுக்குள் ஒரே குழப்பம்..... என்ன செய்வது ?  வீட்டில் இருந்து கொண்டே  டிக்கட்டை கேன்சல் செய்திரலாமா ?  பொம்மனஹல்லி வரைப் போய் பஸ் இல்லையென்றால்,அதன் பிறகு பார்த்துக் கொள்ளலாமா?     எண்ண  ஒட்டம் ஓடிக்கொண்டே இருந்தது.

வீட்டில் இருந்து கிளம்பத் தயாரானேன்!. என் மனைவி என்னருகே வந்தாள்.

“போகாதே போகாதே என் கணவா... பொல்லாத சேதி என் மனதை கொல்லுதே.....” எனப் பாடுவாளா ?

அவள்,“ நானும் உங்க கூட வாறேன். பஸ் இருந்தா நீங்க போங்கோ !” என்றாள்.

 “நீ எப்படித் திரும்பி வருவே ? ”நான் கேட்டேன்.

 “வேலப்பனின் மகனையும் நான பொம்மனஹல்லிக்கு வரச் சொல்லுவேன்” என்றாள்.

அவளை சமாதானப்படுத்தி என் கைப்பையை மட்டுமே எடுத்து வெளியே வந்து சாலை வழியே நடக்க ஆரம்பித்தேன்.

ராமமூர்த்திநகர் சிக்னல் அருகே வந்த போது பஸ்கள், கார்கள் அனைத்தும் ட்ராபிக் சிக்கலில் மாட்டி நின்று கொண்டிருந்தன. பஸ்களில் ஆட்கள் அதிகம் இல்லை.  சற்று சிரமப் பட்டு சாலையின் மறுபக்கம் போய் நின்றுகொண்டேன். 500 டி பஸ் வந்தது .சில்க்போர்டு போகும் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டபின் அதில் ஏறி அமர்ந்தேன் .ருபாய் 20 கொடுத்து டிக்கட் கேட்டேன்.  இரண்டு டிக்கட்டுகள் தந்தார். ஒன்று 12 ருபாய் மற்றொன்று 4 ருபாய்.  மீதி தரவில்லை .டிக்கட்டின் பின்புறம் 4 என எழுதியிருந்தது. இறங்கும் போது தருவார்.

அதிகக் கூட்டம் இல்லை. மக்கள் பந்த்-க்கு பயந்து வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கிறார்களோ ! இந்த பஸ் தொடர்ந்து போகுமா அல்லது இடையிலே நம்மை இறக்கிவிட்டு விடுவானோ... என் மனத்திரையில் இந்த வரி ஓடிக்கொண்டே இருந்தன.

நாம் அவசரத்தில் இறங்கும்போது கண்டக்டர் பாக்கி தரவேண்டியதைத் தருவானா ?   கேட்க மறந்து போகுமே !

கண்டக்டர் எல்லாம் மோசம்.... மீதிப் பைசாவெல்லாம் தர மாட்டான். எப்படியும் அவனிடம் மீதியை வாங்கீரணும். நான் ஒரு ருபாயைக் கொடுத்து அஞ்சு ருபா கேட்டேன். அவன் இல்லையென்றான். அய்யோ! தமிழ்ல பேசிட்டோமே எவனாவது நம்மைத் தாக்கீருவானோ பயம் .....
ஆனாலும் எப்படியும் பைசாவை விடப்ப்டாது..... அவரிடம் ஆறு ருபாய் சில்லறையாய்க் கொடுத்து பத்து ருபாயைக் கேட்டேன். சிரித்துக் கொண்டே பத்து ருபாயை தந்தார்.

சில்க்போர்டு வரவே செய்யாதா....ஒரு மணி நேரம் ஆச்சே.... ரூட்டு மாறி பஸ் வேறெங்கோ போகுதோ.... மீண்டும் பயம்.

 என்          பக்கத்தில் இருந்தவரிடம் மிகவும் துணிச்சலாகத் தமிழில் கேட்டேன்.  அவன் கன்னடத்தில் பதில் சொன்னான். ஒவ்வொரு நிறுத்தம் வரும்போதும் அவரிடம் இதுவா சில்க் போர்டு...எனக் கேட்டுகிட்டே இருந்தேன். மிகவும் அன்பாக பொறுமையாக கன்னடமும் அவர்தமிழும் கலந்த மொழியில், “ இந்த பஸ் பொம்மனஹல்லிக்குப் போகுது. ஒரு இடத்தில் சற்று இடப்புறம் திரும்பி நிற்கும். அதுதான் சில்க்போர்டு.”

“ என்ன... இந்த பஸ் பொம்மனஹல்லிக்குப் போகக்கூடிய பஸ்ஸா.... எனக்கு அங்கதானே போகணும்...”

கண்டக்டரிடம் நான் சொல்ல முற்பட என் அருகே இருந்தவர் விசயத்தை சொன்னார்.  இன்னோரு டிக்கட் எடுத்தால் போதும் என ஆறுதலாகச் சொல்லி விட்டு பஸ்சின் முன்னும் பின்னும் நடந்துகொண்டே இருந்தார்.

சில்க் போர்டு வந்தது. கண்டக்டரிடம் பத்து ருபாய்த் தாளைக் கொடுத்து பொம்மனஹல்லிக்கு டிக்கட் கேட்டேன்.

“நீங்க எங்கிருந்து ஏறினீங்க...” எனக் கேட்க நானும் சொல்ல அவர்  “டிக்கட் எடுக்க வேண்டாம் இதுவே போதும்” என்று சொல்லிச் சிரித்து விட்டு அவர் பணியைத் தொடர்ந்தார்.

இப்பொழுது எனக்கு கண்டக்டர் மிக அழகாகக் காட்சி அளித்தார். அறுப்பத்தஞ்சு வயசான பின்னும் அடைய வேண்டிய சில நுண்ணறிவு நமக்கு இல்லையே !

ஊர்ந்து சென்ற பஸ் ஒரு இடத்தில் நிற்க அதுதான் பொம்மனஹல்லி என தெரிந்து கொண்டு இறங்கினேன்.

நாம் செல்ல வெண்டிய இடம் கே.பி.என் பஸ் நிற்கும் இடமல்லவா !

எதிரே வருவோரிடம் கேட்டேன்.  சொல்ல வில்லை..... என்னெதிரே வந்த இருவரிடம் கேப்பியென் பஸ் எங்கே நிக்கும் என நான் கேட்க ஒருவன் தெரியாது எனச் சொல்ல இன்னொருவன் “கேப்பியன் ட்ராவல்ஸ்தானே கேக்கிறீங்க .... நேரே போங்கோ. என்றான்.

சரியாக ஆறுமணி.... கே.பி.யென் ட்ராவல்ஸ்-இல் இருந்தவனிடம் என் கணினிப் பதிவுத்தாளைக் காண்பித்தேன். எட்டு மணிக்கு பஸ் வரும் என்றான்.

அப்பாடா...... ஏதானாலும் பஸ் ஓடும் . இன்னும் இரண்டு மனிநேரம் காத்திருக்கணுமே.... அந்த 2 மணி நேரத்தில் தண்ணீர்ப் பிரச்சினை வலுவடைந்து விடக்கூடாதே ..... சாலையில் செல்லும் வெகுதூர பஸ்ஸெல்லாம் போய்க் கோண்டே இருந்ததால் நிம்மதி ஏற்பட்டது.

 8.45க்கு வந்த பஸ் என்னையும் அழைத்துக் கொண்டு சென்றது.

பஸ்ஸில் ஏறி அமர்ந்ததும்  நான் என் மகளது போனில் என் மனைவியிடம் பேசினேன்.

அவள்,“ நாங்கள் கே.பி.என் ட்ராவல்ஸ்-க்கே போனில் பேசிக் கேட்டுத் தெரிந்து கொண்டோம் ” என்றாள்.

அவள்..... ஆம்....அவளேதான். அவள் தான் நாகர்கோவில் K.P.N. அலுவலகத்தில் இருக்கும் மகன் முருகனுக்கு தெரிந்த ஒருவரிடமும் கேட்டு அறிந்து கொண்டாள்.

அன்பும் பயமும் அவசியமும் அவளை அனுபவசாலி ஆக்கிற்று. அது எனக்குப் பிரமிப்பாகவும் இருக்கிறது. மகிழ்வாகவும் இருக்கு. அன்பில் என்னிலும் மேலானவள் அவள்.   அறிவும் ஆணவமும் சேரும்போது   ஏற்படுவது  வெற்றிடம்... இல்லாமை... சூன்யம்.   சிலவேளைகளில் இந்த வெற்றிடம் என்னில் ஏற்படுவது கண்டு வெட்கப்படுவதுண்டு.அன்பும் அமைதியும் அறிவுடன் சேரும்போது ஏற்படுவது இயல்பான இயக்கம். என்னில் இல்லாதது. அவளிடம் உள்ளது. அதனால் இடரில்லா இயக்கம் தொடர்கிறது.

 தூங்கும் வசதி உண்டு. காலையில் 8.45-க்கு நாகர்கோவிலில் இறங்கி வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.

அக்டோபர் ஒன்றாம் தேதி நன்றி அறிவிப்புக் கூட்டம். நானும் கலந்து கொள்வேன் அதில்.நாங்கள் ஐந்து பேர் தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரிச் சங்கத்தேர்தலில் இயக்குனர்களாக ஒருமனதாகத்  தேர்ந்தெடுக்கப் பட்டோம். அதற்காக நாங்கள் அனைவரும்  பங்குதாரர்கள் அனைவரையும் அழைத்து அவர்களுக்கு நன்றி கூறிட நடைபெறும் கூட்டம் அது.

நன்றி மறப்பது நன்றல்ல....... எனக்குப் பிடித்தது இந்த வரியே.

அதனால் நான் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதுதானே மரியாதை.