Tuesday, August 26, 2014

அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ் .......

வியாழக்கிழமை மாலை நேரத்து பெங்களூர் ரயிலில் ஓசூர் வருவதற்காக தனியாக பயணம் செய்தேன். நாகர்கோவிலில் இருந்து புறப்படும் பொழுது வண்டியினுள் ஏறுவதற்கு முன்னால் ஒட்டியிருந்த சார்ட்டைப் பார்த்தேன். எப்பொழுதுமே என் பெயரை பார்க்கும்போது எனக்குள் பரவசம் ஏற்படுவதுண்டு...முன் ஜாக்கிரதையும் கூட. கோச் மாறி ஏறி சிரமப்படவும் கூடாதே..... 

சார்ட்டில் வெற்றிடம் கூடுதலாக இருக்கக் கண்டேன்..... என்ன....நாம் இண்டெர்நெட்டில் பார்க்கும்போது இடம் இல்லாதது போன்றல்லவா கண்டோம்......சந்தேகத்துக்கு விடையேதும் கிட்டவில்லை.... 

எனது சீட் 60. தர்ட் ஏசி,வாசல்பக்கம்.  நிம்மதியாய் தூங்கமுடியாத இடமல்லவா ! மாற்று இடம் கேட்டு வாங்கி 32-இல் இடம்பிடித்துக் கொண்டேன். அது பக்கவாட்டில் கீழ்த்தளப் படுக்கை.சரியாக 4.25க்கு  இரயில் புறப்பட்டுச் சென்றது...

ரயில் திருநெல்வேலியை அடையும்போது என் செல்போன் சிணுங்க நான் அதனுடன் உரையாட யாரென பார்த்தேன். அது லெக்‌ஷ்மணன்.... ”ட்ரெயின் எங்க வந்திட்டிருக்கு ? அஞ்சு நிமிஷம் நிக்கும்ல்லா ? நான் உங்களை பாக்க ஜங்க்‌ஷன் கிட்டக்க வந்துட்டேன்.”

“அய்யய்யோ.... ட்ரெயின் வந்தாச்சே.... இப்பம் கிளம்பீருமே......கிளம்பிடுச்சே...”

அல்வா,இரவுச் சாப்பிட சப்பாத்தியுடன் வந்த அவன் ஏமாற்றத்துடன் .....” ட்ரெயின் எங்காவது கிறாசிங்கில் நிக்குமா....நிக்குது போலத் தெரிகிறதே......”

நான் மனம் குழம்பிப் போய் ....அவன் என் மீது வைத்திருக்கும் அன்பையும் அவன் செயலையும் நினைத்துக் கொண்டே இருந்தேன். அவன் மிகவும் பிசியாக இருப்பவன் . இரண்டு தலைமை அலுவலகப் பொறுப்பாளராக இருப்பதால் சமயம் ஒத்துழைக்காது. ஆகவே வரவேண்டாம்.ஒரு நிமிட நிற்பில் நாம் என்ன பேசிட முடியும்..... என்று சொல்லியும் வந்து ஏமாந்துட்டானே.... சொன்னால் கேட்கவே மாட்டேங்குறானே.....இப்படி நினைத்துக் கொண்டே அவன் அன்பு முக நினைப்பில் திகழ்ந்திருந்தேன்.....

மறுபடியும் அவன் .....” கோவில்பட்டியில் இந்த ட்ரெயின் நிக்கும்ல்லா....”

”ஒரு நிமிடம் தான் நிக்கும்.... ஏன்... நீ அங்கு வரப்போறியா..... வேண்டாம்......”

” இல்லப்பா...... நீங்க வாசல திறந்து வச்சு நிண்ணுங்க....ப்ளீஸ்பா..... ஒருவர் வந்து உங்கள்ட்ட ஒரு பார்சல் தருவார்....”

”அவருக்கு என்னை எப்படித் தெரியும்... எனக்கும் அவர் யாருண்ணு தெரியாதே’’’”

”நீங்க என்ன கலர் உடுப்புப்பா போட்டிருக்கீங்க”

”நீல கோடு போட்ட உடுப்பு... எனது பிளாக்கில் உள்ள போட்டொ பாத்திருப்பியே...அதே உடுப்பு.....வெள்ளை லுங்கி....”

அங்கங்கே கிறாசிங்..... சும்மா நிற்கும் வண்டியைப் பாத்து கோபம் வந்தது....... சற்று காலதாமதமாய் கோவில்பட்டியை நெருங்கியது.....

நான் கதவைத் திறக்கவும் ஒருவர் கையில் ஒரு பார்சலுடன் வந்து கொண்டே இருந்தார்...... அவர் அவருடைய சீருடையில் இருந்ததால் நம்மைத்தேடிவரும் அந்த ஆள் இவராகத்தான் இருக்கும்..... அந்த அவசரத்திலும் அவரைப் பார்த்து கையை அசைத்து “ கொண்டாங்க..... நான் தான் நீங்க தேடுற ஆள்....” என்று சொல்லவும் அவர் போணில் சார் கொடுத்திட்டேன்...நீங்க பேசுங்கோ என்ச் சொல்லி போனையும் என்னிடம் தர நான் லெக்‌ஷ்மணனுடன் கிடைத்த விவரத்தை சொல்லவும் வண்டி கிளம்ப போணை அவரிடம் கொடுத்து விட்டு என் இருக்கையில் போய் அமர்ந்தேன்.

இப்படியும் நடக்குமா ? இருக்கலாம்..... ஆனால் எனக்கு இந்தச் செயல் புதுசல்லவா? இப்படி அன்பு காண்பிப்பதற்கு.... நான் என்ன..... அதிகாரியா.....ஓய்வு பெற்ற ஒரு சாதாரணன் தானே.....


அன்புக்கு அடைக்கும் தாள் இல்லை........

Monday, August 25, 2014

அவன் கதை

அவன் கதை மட்டுமல்ல. அவனோடு பயணம் செய்தவர்களின் கதையும்தான். இத்தனை நாட்களும் எழுத மனம் மறுத்த கதை. வாழ்க்கையில் மகிழ்வான வடுக்கள் ,சுவடுகள்..... இவைகளை மட்டுமே பதிவு செய்ய மனம் ஆசைப்பட்டது தான் மறுக்கக் காரணம்.

இது அவன் கதை......எழுதத் தெரியாமல் எழுதிய வரிகள்,

நாற்பது.....இல்லை அதற்கும் அதிகமான வருடங்களுக்கு முன்னால் அவன் கதையின் நடுப்பகுதி ஆரம்பம் ஆனது.... அவனுக்குத் தெரியாது குடும்பம் என்றால் என்ன என்று. வசதியான அப்பா.....அம்மா.... வரவே இல்லா வசந்த காலம்......தடுமாற்றம் இல்லா பயணம் நடுவே தடை வந்தது. ஆம்! அவன் தோற்றான் முதல் முறையாக.... கல்லூரி இறுதி ஆண்டில்...... அவன் முதல்முறையாக அப்பா அழுவதைப் பார்க்கிறான்.....அழுவது ஒன்றும் பெரிய விசயம் இல்லை. அழுதவர் அப்பாவாக இருக்கலாம். எதற்கும் கலங்காத நெஞ்சுறிதி கொண்ட ஒரு மாமனிதர் ஒரு மகன் தோற்றதற்காக அழுதது அவனை ஊரை விட்டு விரட்டியது.....அவருக்காக படித்தான்..... வெற்றியும் பெற்றான்.

அவன் வங்கியில் வேலையில் சேர ஆசைப்பட்டு பலரைப் பார்த்தான்.....பரிட்சைகள் எழுதினான்...... எல்லாமே தோல்வியில் முடிந்தன......அவனது கல்வியால் அவனுக்கு நினைத்தவேலை கிடைக்கவில்லை. விரும்பாத வேலை கிடைத்தது. வேலை கிடைத்தவனுக்கு அடுத்து என்ன நடக்கும். கல்யாணம் தான்.....

கல்யாணம் அவன் மனம் போலவே இனிதாய் நடந்து முடிந்தது.....
முதல் நாள்.....இல்லையில்லை..... இரவு......

அந்த வீட்டின் ஏதோ ஒரு பகுதியில்  இருந்து சினிமா பாடல் புறப்பட்டு மணமக்கள் இருந்த அந்த அறையினுள் நுழைந்து அவன் காதினுள்ளும் நுழைந்து என்னவோ செய்தது.

”இரவுக்கும் பகலுக்கும் இனியென்னவேலை, இதயத்தில் விழுந்தது திருமண மாலை,உறவுக்கும் உரிமைக்கும் பிறந்தது நேரம்,உலகம் நமக்கு இனி ஆனந்தக்கோலம்,இருவர் என்பதே இல்லை இனி நாம் ஒருவர் என்பதே உண்மை.......” எங்கள் தங்கராஜாப் படப் பாட்டு.....

அந்த இரவு வேளையில் அவர்கள் கேட்டு, ரசித்து மகிழ வேண்டிய பாடல்......

அது புறப்பட்டு வந்த இடம் மாடி அறை. அங்கு அவன் நண்பன்.....தனியாக தன் இளம் மனைவியை இழந்து .........பாடல்களைக் கேட்டுக் கொண்டே இருந்தான்

”இருவர் என்பதே இல்லை இனி நாம் ஒருவர் என்பதே உண்மை”- இந்த வரி அவன் நண்பனுக்குப் பொய்யாகிப் போன காலமது.....

அந்த நண்பனின் தங்கை அவனருகில் அவன் மனைவியாய் இருந்தாள்.....அவள் கண்களில் கண்ணீர்......அந்தப் பாடல் கேட்டு மகிழவும் முடியாமல் விம்மவும் முடியாமல் தவித்தாள்....அன்னியமில்லா அவள் கண்ணீர் கண்டு அவன் மனமும் கனக்கவே செய்தது....கலங்கிய கண்ணோடு அவள் இழந்த அண்ணி பற்றியே அதிகம் பேசினாள்.  நாதஷ்வர மங்கள வாத்திய இசையோடு ஊரே பொறாமைப் படும்படியாக நடந்த திருமணம்....... யார் கண்பட்டதோ தெரியவில்லை.சித்திரை மாதம் ஒருநாள், நித்திரை இழந்தான்.... அவன் நண்பன் மட்டுமல்ல.... எல்லொருமே.....

காலம் தானே துன்பத்துக்கு மருந்து.....

திருமணசாட்சியாய் அவன் நண்பனுக்கு  ஒரு மகள்....ஏதுமறியாத வயது.... அன்னையாய் அனைவரும் தாயில்லா அவள் மீது பாசம் கொண்டிருந்தார்கள்....அன்னையின் ஸ்பரிசம்  அறிந்திராத அல்லது மறந்த இளம் தளிர் அவள். 

அலுவலகவேலை முடிந்து வரும் வேளையில் வீட்டில் தந்தைக்காக காத்திருக்கும் அந்த மகளை உச்சிமோந்து அணைத்து அன்பைக் காட்டும் போது எத்தனையோ தடவை அவன் கண்களில் நீர் தளும்பியதுண்டு....

காலங்கள் வேகமாய்ப் போனது...... பலவித வசந்தங்கள் வந்த வண்ணம் அனைவரது வாழ்க்கையும் அமைதியாய் போய் கொண்டிருந்தது.....அவன் நண்பன் வாழ்விலும் மறுமணம்  தென்றல் காற்றாய் வீசியது.

அவன் வீட்டில் இடி விழுந்தது போன்ற சம்பவம்..... தங்கையின் கணவர் வேலை பார்க்கும் இடத்தில் இதயவலியால் இறந்த செய்திகேட்டு அவன் அடைந்த துன்பத்துக்கு அழவே இல்லை....தடைகள் பல தங்கையின் வாழ்க்கையில்.....தடைகளை தடங்களாக மாற்றி முள்களை அகற்றி மலர் விரித்து மறுமணம் செய்வித்து அவர்கள் வாழ்விலும் தென்றல் வீசியது கண்டு மகிழ்ந்தான்.....

அவன் தந்தை மறைந்தார்.... தலைவனில்லா ,நங்கூரமில்லா கப்பல் திசை மாறிப் பயணித்தது. துன்பமும் துயரமும் துரத்தியது அவனை. 
ஆனாலும் வாழ்க்கை பல அனுபவங்களைக் கொடுத்தது..... தனியாக எங்கோ தங்கினான்.... ஆனால் அவனை விதி விடவில்லை.... எங்கேயடா போகிறாய்... குடும்பம் என்றால் என்ன ....? வா....வா.... என்றழைத்தது.... 

ஆம்.....அவனது அண்ணனின் கப்பல் கவிழ்ந்தது.....அதனால் தவித்தவர்கள் அவன் கப்பலில்.....வந்த சுமையை சுகமாக அவன் ஏற்றுக் கொண்டான்....அவர்களது வாழ்விலும் தென்றல் வீச அணில் போல உதவி செய்து மகிழ்ந்தான்....

காலம் வேகமாகச் சுழன்று சுழன்று போய்க் கொண்டிருந்தது..... வெவ்வேறு கப்பல்களில் பயணம்..........எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே என்று எண்ணி அவன் பயணம் தொடர்ந்தது.

போற்றுபவர்கள் போற்றும் போது அகம்மகிழ்ந்தான். தூற்றுபவர்கள் தூற்றியபோது மனம் உடைந்தான்.... ஆனால் அவன் பயணம்.........
சமீபத்தில் அவன், அவன் நண்பன், இன்னொருவருடன் மிக உற்சாகமாக ஓரிடம் சென்ற போது இடியாய் நண்பனின் காதில் விழுந்த செய்தி கேட்டு என்ன செய்வது..... எப்படி ஆறுதல் கூறுவது.... தெரியவில்லை .... இறுகிய மனத்துடன் அவன் பக்கத்தில் இருக்க.....அந்த அமைதியிலும் அவன் நண்பன் விட்ட பெருமூச்சு புயலாய் வீசியது..... நண்பனின் ஆசை மகளது கணவனுக்கு நெஞ்சுவலி. ... எல்லாம் முடிந்து விட்டது என்பதை நம்பவே முடியாதநிலை....

இதையெல்லாம் கேட்க நான் இன்னும் உயிரோடு இருக்கணுமா,,,,,விம்மல்.....நண்பனின் அழுகை அவனை மிக மிக வாட்டியது.....

தன் கண் முன்னால் குழந்தையாய், சிறுமியாய்,பெண்ணாய் வளர்ந்த அந்த நண்பனின் ஆசை மகள் இப்படியொரு சூழ்நிலையை எப்படி எதிர்கொள்ளப் போகிறாள். இப்போது அவளை அரவணைக்க அவள் மகள் கைகளும் இருக்கின்றன..... சுமையைத் தாங்க தோள்களும் பல உள்ளன........
வாய்விட்டு அழட்டும்.....அழுவதைத் தடுக்காதீர்.......... கண்ணீர் வற்றட்டும்.... அதுவே அரும் மருந்து.

அவன் போனான்......நண்பன் இருந்த அந்த ஆசை மகள் இல்லம் நோக்கி. நண்பன் மகள் முகம் காண வலுவிழந்தான்...
ஆறுதல் சொல்லப்போனவன் ஆறுதல் தேடி அழுதான்..........

காலனே ! வாடா என்னருகே..... அழைத்தானே முண்டாசுக்கவி பாரதி....அன்று பாரதி காலால் எட்டி உதைத்து அழித்திருக்க வேண்டாமா காலனை.....Friday, August 8, 2014

சில பயணங்களில் சில அனுபவங்கள
இரயில் பயண அனுபவங்கள் பல . எழுதுவதா ? எழுதாமல் இருப்பதா……இப்படி எண்ணியே நாட்கள் நகர்ந்து விட்டன. ஜுலை மாதம் ஒரு தினம் நாகர்கோவில்-பெங்களூர் ரயில் வண்டியில் பயணம் செய்யும் வாய்ப்பு கிட்டியது…. …. ரயில் போய்க் கொண்டிருந்தது.  இருவர் என்னைக் கடந்து சென்ற போது அவர்கள் கையில் பிளாஸ்டிக் குப்பி…..அது செவனப் அல்லது ஸ்ப்ரைட் குப்பி….ஒன்று இருக்கக் கண்டேன். அதினுள் இருந்தது நிறமற்றதாக இல்லாமல் வேறொரு நிறமாக இருந்தது கண்டு அது என்னவாக இருக்கும் என்ற யோசனையில் சிந்தித்துக் கொண்டிருந்தேன்.
கொஞ்ச நேரம் கழிந்தது. சற்று வெளியே போய் ஓடும் ரயிலில் நின்று புறக்காட்சிகளைப் பார்த்து இரசிக்கலாமே என நினைத்து வெளியே போனேன். அங்கே அந்த இருவரில் ஒருவர் சற்று வயதானவர் நின்று கொண்டிருந்தார்……  சற்று நேரத்தில் கழிப்பறை கதவைத் திறந்து உள்ளிருந்து வெளியே வந்தார். இப்போது அந்தக் குப்பியில் பாதி காலியாய் இருந்தது.  அதனை வயதான பெரியவர் பெற்றுக்கொண்டு அவர்களது ”பார்”-ல் நுழைந்து சிறிது நேரத்தில் வெளியே வந்தவர் காலிக் குப்பியை வெளியே வீசியெறிந்து விட்டு நன்றியோடு மற்றவனைப் பார்க்க அவன், ‘போதுமா…! இன்னும் கொஞ்சம் வேணுமா…” என்று கேட்க அவர், ‘போதும்டா……இதுக்குமேல அடிச்சால் குழப்பந்தான்-----” என்றார்.
அவர்கள் பேசிக்கொண்டதில் அறிந்தவை………. இரண்டு பேருமே படித்தவர்கள். ஒருவர் ஓய்வு பெற்றவர்.மற்றொருவர் பணியில் இருப்பவர்…. இருவருமே அனாவசியமாக எதுவுமே பேசவில்லை….மிக நாகரீகமாகவே நடந்து கொண்டார்கள். என்னை அவர்கள் கண்டு கொள்ளவே இல்லை. ஆனால் நான் அவர்களின் பேச்சை கேட்டுக் கொண்டே வெளியே நகரும் மரம்,கட்டிடங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன்……

இருவருமே தினமும் குடித்துவிட்டு தூங்கும் பழக்கம் உடையவர்கள்….. 

யாரைக் குறை கூறுவது…..வீதி தோறும் கடையைத் திறந்து வைத்தவர்களையா ?தூங்குவதற்காகவே குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானவர்களையா…? சுதந்திரம்…..ஒருவன் கையை வீசி நடப்பது சுதந்திரம்….அது அடுத்தவன் முகத்தினை இடிக்காத வரை…….. அவர்கள் குடிப்பதுக்கு சுதந்திரம் கொடுத்தது நம் நாடுதானே……சக பயணிகளுக்கு துன்பம் தொந்தரவு தராதவரை.அவர்கள் தூக்கத்தை யாரும் கெடுக்கப்போவதில்லை……..

நடுநிசி இரவுவேளை…..இரயில் வெகுநேரமாய் பொதுவாக நிற்காத ஸ்டேசனில் நின்று கொண்டிருந்தது…..படுக்கயைவிட்டு எழுந்து வெளியே வந்து பார்த்தேன்..நாலைந்துபேர்கள் வெளியே நின்று கொண்டிருந்தனர். நான் வண்டி ஏன் நிற்கிறது என்று அறியும் பொருட்டு நடைமேடையில் இறங்கி நடந்தேன் நின்றிருந்தவர்களை நோக்கி….. அச்சமயம் அடுத்துள்ள நடைமேடையில் ஒரு மோட்டார் பைக்கு ஹெட்லைட் வெளிச்சம் மின்ன வேகமாக வந்து அலுவலக அறை முன்னே நின்றது. 

இறங்கியவர் காக்கிச்சட்டை அணிந்திருந்தார் அவருடன் வந்தவர் சத்தம் போட்டு என்னவோ சொல்ல உள்ளே இருந்தவர் வெளியே வந்தார். சத்தம் கூடியது….. என்ன…எது…என்று எதுவுமே புரியவில்லை….சற்று நேரத்தில் பைக்கு அங்கிருந்து வேகமாய் போய்விட்டது. அலுவலக அதிகாரி கோபத்தில் அதிக சப்தத்துடன் பேசிக்கொண்டிருந்தார். இதுவும் தெளிவாகவே காதுகளில் விழுந்தாலும் என்ன பேசுகிறார் என்று புரியவில்லை……அவர் பேசியது இந்தி மொழியில்…..

காதிருந்தும் செவிடனாய் இருந்த நான் அப்படியே நின்று கொண்டிருந்தேன்…..எங்கள் பக்கம் நின்ற ஒருவர் கீழே இறங்கி தண்டவாளத்தைக் கடந்து எதிர்பக்கம் போய் அந்த அதிகாரியிடம் என்ன விசயம் என்று கேட்டு திரும்பவும் அங்கிருந்து சாடி ஓடி வந்து ஏறினார்…. என்ன விசயம் என்று அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் அவரைச் சுற்றி  அவர் சொல்வதைக் கேட்க  ஆவல்மிகுதியாய் நின்றிருந்தோம். அவர் இந்தி அறிந்தவர்.
சற்று முன்னால் ஒரு காண்ஸ்டபிள் பிளாட்பாரத்தில் பைக்கில் வந்திருக்கிறார். ….இரவு வேளைகளில் பைக்கின் பின்புற சிவப்பு வெளிச்சத்தைக் காணும் இரயில் ஓட்டுனர்கள் திணறிப்போவார்கள்..அதற்காக அதனைத் தடுத்த அதிகாரியைத்தான் இவர்கள் திட்டிவிட்டுப் போனார்களாம். சற்றுப் போதையில் தான் இருந்தாராம். என்ன செய்வது …… 

பணியில் இருக்கும்போது போதையில் இருந்தது மட்டுமல்ல. கடமையை சரியாய் செய்த அதிகாரியைத் திட்டி அவரை மன உளச்சலுக்கும் ஆளாக்கிவிட்டாரே….மனம் வேதனையுடன் என் இருக்கையில் போய் அமர்ந்து கொண்டேன்.
டொரோண்டோ இரயில் போனபின்புதான் நம்ம இரயில் கிளம்பும்………. மூன்று மணி நேரம் கழிந்தபின் இரயில் ஓடியது……….


தனிமனித ஒழுக்கம் வேண்டும்…..இல்லையென்றால் எந்தச் சட்டமும் மதிப்பிழந்து போகும்………