Sunday, May 20, 2012

வடக்கு வீட்டு குடும்பத்துக் கொடைவிழா


நான் அப்போது ஒரு சிறுவன். குறத்தியறைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். பள்ளியில் தமிழ் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர் திரு.R.சுப்பிரமணியபிள்ளை அவர்கள் மாணவர்களிடம் ஒரு வேண்டுகோள் வைத்தார். இங்கு படிக்கும் பணக்கார வீட்டுப் பிள்ளைகள் தங்களிடம் இருக்கும் பழைய சட்டை ,நிக்கர் ஏதாவது இருந்தால் கொண்டு வாருங்கள் என சொன்னார். நான் வீட்டுக்கு வந்த பின் என் அம்மையிடமும் அப்பாவிடமும் சொல்லி என் பழைய உடுப்புகளை கொடுக்க அனுமதி கேட்டேன். அனுமதி கிடைத்ததால் மறுநாளே என்னிடம் இருந்த பழைய ஆனால் கிழிசல் இல்லாதச் சட்டையைக் கொண்டு ஆசிரியரிடம் கொடுத்தேன். அவர் பகிரங்கமாக சொன்னது இன்னமும் என் காதினில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. சொன்ன வார்த்தைகள் என்னது தெரியுமா. " ஒரே ஒருவன் தான் நான் கேட்ட உடன் கொண்டு வந்து தந்திருக்கிறான்……எனக்குத் தெரியும். அவன் தான் கொண்டு வருவான். ஏனென்றால் அவன் வடக்கு வீட்டு வம்சத்தின் பிள்ளை…………….." எனக்கு ஒன்றுமே புரியவில்லை. என்ன சார் வடக்கு வீட்டுப் பிள்ளை…..தெக்கு வீட்டுப் பிள்ளை என்று கூறுகிறார்
எனது அம்மாவிடம் கேட்டேன்." நாம் எல்லாம் வடக்குவீட்டு வம்சத்தினரா ?" .
அம்மா சொன்னாள்." உங்க அப்பாவும் அவரது அப்பாவும் வடக்கு வீட்டுக் குடும்பம். அதனால் நீயும் அதேக் குடும்பம் தான். நான் இலங்கநேரிக் குடும்பம்.உன்னுடைய வாத்தியார் இருக்கும் இப்போதுள்ள வீடுதான் வடக்கு வீடு. அந்த வீட்டில் தான் உங்க அப்பா எல்லோரும் பிறந்தாங்க"
வாத்தியார் எனச் சொன்னது என்னுடைய ஆசிரியர் சுப்பிரமணியபிள்ளை அவர்களைத்தான்.
அந்தக் குடும்பத்திற்கென்று ஒரு கோவில் உண்டு. அது கடுக்கரையில் இருக்கும் தம்பிரான் கோவிலின் அருகில் உள்ள ஆயினூட்டு பூதத்தான் கோவில். 22 வருடத்திற்குப் பின் 2012-ஆம் ஆண்டு மே மாதம் 17,18,19 ஆகிய தேதிகளில் கொடை நடந்தது..உள்ளூர், வெளியூரில் வசித்து வரும் வடக்கு வீட்டுக் குடும்பத்தார் பெரும் திரளாக வந்து சாமியின் அருள் பெற்றுச் சென்றனர்.
ஆரம்ப காலங்களில் கொடை விழா எப்படி நடந்ததோ அது போலவே சம்பிரதாயங்கள் எதனையும் மீறாமல் இப்பொழுதும் எங்க வீட்டுக் கொடை நடந்து முடிந்தது.
பூதத்தான் கோவில் வளாகத்தில் கடுக்கரை ஊரில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் சாமி உண்டு. சிவனணைந்தபெருமாள்,பண்ணிமாடன்,புலமாடன்,காளமாடன்,………………………… சாமிகள் உண்டு.
பூதத்தான் சாமி ஆடுவது சிவராமன். சிவனணைந்த பெருமாள் சாமிக்கு வடக்குத்தெரு ராஜேந்திரன்,
பண்ணிமாடன் -----கடுக்கரை மங்களா வீட்டு குத்தாலம் பிள்ளையின் அக்காள் மகன் மாதேவன் பிள்ளை.
புலமாடன் ----------- தெங்கரி மற்றும் உடுக்கு தாணப்பன், மேலத்தெரு தம்பிரான்பிள்ளை, ஐயப்பன் ஆகியோரும் விரதம் இருந்து சாமி ஆடினார்கள்.
நய்யாண்டி மேளம் ,கணியான் கூத்து,வில்லுப்பாட்டு எனக் கிராமீயக் கலைகள் எல்லாமே இங்கே அரங்கேறின. முதல் நாள் ரோசினி நாட்டியாலயாவின் நடன நிகழ்ச்சியோடு விழா துவங்கியது.
கணியான் கூத்து மிகவும் ரசிக்கும்படியாக இருந்தது. அவர்களை ஆதரித்து அந்தக் கலை மென்மேலும் வளர்ந்து அந்தக் கலைஞர்களின் வாழ்வும் வளம் பெற வேண்டும்..
சாமி ஆடுபவர்களில் ராஜேந்திரன் ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியர். பண்ணிமாடன் சாமி ஆடியவர் கல்லூரியில் தமிழ்த் துறைத்தலைவராய் வேலை பார்ப்பவர். கொடை பார்க்க வந்தவர்கள் அனைவருக்கும் மூன்று நேர உணவு பரிமாறினார்கள். அனைத்து உறவினர்களுக்கும் தகவல் கொடுத்து மிகப் பிரமாண்டமான இந்தக் கொடையை நடத்தியவர் திரு. வடக்கு வீட்டு முருகன் என்ற அணஞ்சபெருமாள் பிள்ளை. இவர் ஓய்வு பெற்ற ஒரு ஆசிரியர். முதுகலைப் பட்டதாரி.கௌரவத்தலைவர்: 94 வயதான வடக்கு வீட்டில் வசித்து வரும் வாத்தியார் திரு. R.சுப்பிரமணிய பிள்ளை.
தலைவர்: திரு.தி.ஆறுமுகபெருமாள்பிள்ளை,நாவல்காடு, திரு.பெ.மெய்க்கும்பெருமாள்பிள்ளை,கீழத்தெரு,கடுக்கரை.
செயலாளர்கள்: திரு. பெ. ஆறுமுகம்பிள்ளை,கடுக்கரை, திரு.கி.பத்மநாபபிள்ளை, சென்னை.
பொருளாளர்: திரு.சி.நல்லகுற்றாலம்பிள்ளை,கடுக்கரை.
நான் பார்த்த மூன்று கொடைகளும் பிரம்மாண்டமாய் நடந்தன. என் மனதில் பசுமையாய் இருப்பதுவும் எல்லா நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு உறவினர்களோடும் நண்பர்களோடும் சேர்ந்திருந்து விடிய விடிய கண் விழித்துப் பார்த்து ரசித்ததும் இந்தக் கொடை விழா தான்.

 

என் பேரனுக்குப் பிடித்த ஒரு சிற்றருவி
தாத்தா…… தாத்தா……. வாஞ்சையோடு என்னருகே வந்து எனை அழைத்த என் பேரன் என்னிடம் திற்பரப்புக்குப் போகணும்….Falls-இல் குளிக்கணும் என்றான்.
சற்று ஆச்சரியத்துடன் நான்கே வயதான  இவனுக்கு எப்படி திற்பரப்புப் பற்றித் தெரியும் ? என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.
அவனிடமே கேட்டேன். பதில் அவனது ஆச்சியிடம் இருந்து வந்தது. என் பேரன் ஆச்சியிடம் ,” நீ சொல்லாதே….  நாந்தான் சொல்வேன் “ என்று என்னிடம் சொல்ல ஆரம்பித்தான்.
”என்ன பெரியப்பா கூட்டிக்கிட்டுப் போனா……..எல்லாரும் குளிச்சா…….. நானும் குளிச்சேன் ………. நீ என்ன கூட்டிட்டுப் போ” என்றான்.
நாளைக்குப் போகலாம் என்று சொன்னேன். ஆனால் போக வில்லை. நாட்கள் தான் போய்க்கொண்டிருந்ததே தவிர திற்பரப்புக்குப் போய் குளிப்பது எனபது நடக்கவில்லை.

என்னை சற்றும் இருக்க விடாமல் என் பேரன் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தான். அவனது ஆச்சி… அதான் என் மனைவி என்னை நச்சரிக்க ஆரம்பித்து விட்டாள்.
ஒருவழியாக மேய் மாதம் 15-ஆம் தேதி செவ்வாய்கிழமை கூட்டம் அதிகம் இருக்காது என்ற எண்ணத்தில் அன்று காலையில் 7 மணியளவில் நான் என் பேரனுடன் புறப்பட்டுப் போனேன்.
நான் மாத்தூர் தொட்டிப் பாலத்தையும் பார்த்துவிட்டு வரலாமே…..அதனை எந்த ஆண்டில் யாரால் கல்போட்டுத் தொடங்கப்பட்டது என்ற தகவல்களையெல்லாம் அறிந்து கொள்ளலாமே என்ற ஆசையுடன் முதலில் மாத்தூர் தொட்டிப் பாலத்துக்குப் பயணமானோம்.
பேரனுக்காக இட்லியும் எலுமிச்சை பழச் சாதமும் தந்திருந்தாலும் நாங்கள்  காலையில் பூரி சாப்பிட ஆசைப்பட்டு ஹோட்டலில் போய் காலை உணவை முடித்துவிட்டுத் தான் போனோம்.
சாலையின் இரு பக்கங்களிலும் இயற்கை அன்னை அள்ளி வழங்கிய அழகான பசுமை நிறைந்த வாழை மரங்களும் தென்னை மரங்களும் நிறைந்து தொலை தூரத்து மலையும் மலையினை உரசிக்கொண்டு வேகமாகச் செல்லும் வெண்மேகங்களும் கருமேகங்களும் கண்களுக்குக் குழுமை தந்து கொண்டிருக்கும் காட்சியை ரசித்துக் கொண்டே போனோம். தொட்டிப்பாலம் வந்தது.
காலையிலும் கூட மூன்று வேன்களும் ஐந்து கார்களும் தான் எங்களை வரவேற்றது.
சாலையின் ஓரத்தில் அன்னாசிப் பழங்கள் வரிசையாக அடுக்கி

வைக்கப்பட்டிருந்த விதம் என்னைக் கவர்ந்ததால் அவைகளை என் கேமராவில் வாங்கி வைத்துக் கொண்டேன்.
நுழையுமுன் ஒரு ஆளுக்கு இரண்டு ருபாய் கொடுத்து அனுமதிச் சீட்டு வாங்க வேண்டும். வாங்கிய பின் உள்ளே நுழைந்தோம்…. கேமராவுக்கு 5 ருபாய் டிக்கட்…..அதனையும் சற்று எரிச்சலுடன் கொடுத்தேன்….. எங்கள் பின்னால் வந்தவர்களில் ஒருவன் அவர்களுக்கிடையே பேசி கொண்டிருந்தது என் காதுகளில் விழுந்தது…… “ மொபைல் செல் போனுக்கு பைசா கிடையாது….. இப்பொழுதெல்லாம் எல்லா போனிலும் கேமரா வசதி இருக்கிறதே….”

தொட்டிப் பாலம்….. அது ஒரு அதிசயப் பாலம்…..ஆசியாவிலேயே உயரம் (104அடி)கூடிய பாலம்…. நீளமும் 1240 அடி. இரண்டு இடங்களை இணைக்கும் இந்தப் பாலத்தில் சானல் தண்ணீர் தெற்கு வடக்காக ஓடுகிறது. ஒரு இடத்தில் இருந்து மறு அற்றத்தில் இருக்கும் இடத்திற்குப் போவதற்காக நடை மேடையும் அமைக்கப் பட்டுள்ளது.

பாலத்தின் அடியில் பரளியாறு கிழக்கு மேற்காக பாய்ந்து செல்கிறது. விவசாயம் விருத்தி அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் 1963-1969-இல் கட்டப்பட்டுள்ள பாலம் அந்தப் பகுதி பஞ்சாயத்துக்கும் வருமானம் ஈட்டித் தந்துகொண்டிருக்கிறது. சுற்றுலா வரும் மக்களால் சிறு வியாபரிகளும் பலனடைந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
பாலத்தில் நின்று சுற்றிலும் நிற்கும் தென்னை மரங்களின் உச்சியையும் பார்க்க முடிந்தது. கீழ்பக்கம் உள்ள ஆற்றின் குறுக்காகவும் சாலை இருக்கிறது. அந்தச் சாலையில் மனிதர்கள் நடந்து செல்வதைப் பார்க்கும் போதும் பொம்மைகள் ஊர்ந்து செல்வது போன்று இருந்தது.
நான் ரசித்துக் கொண்டிருக்கும் வேளையில் என் பேரன் ஆசைப்பட்ட இடத்துக்கு வராமல் வேறொரு இடத்துக்கு வந்து நின்று கொண்டிருக்கிறோமே என்ற என் நினைப்பு அங்கிருந்து உடன் தானே கிளம்ப வைத்தது.
வெளியே செல்லும் வாசலின் அருகாமையில் இருக்கும் நிழற்கூடையில் காத்திருந்த எனது பேரன் சற்றும் சலிப்படையாமல் விளையாடிக் கொண்டிருந்தான். நானும் சற்று நேரம் அங்கிருக்க அனுமதித்தான். 


நான் தேடிப் பார்த்தும் கிடைக்காத தகவல் பற்றி அறிந்திட ,அந்தப் பக்கம் நின்று கொண்டிருந்த ஒரு ஆளிடம் கேட்டேன் “ யாரால் இந்த் திட்டம் வந்தது? யார் கல் போட்டது? யார் திறந்து வைத்து? கல் எங்கு இருக்கிறது? காணவில்லையே !
ஊரில் உள்ளக் கோவில்களைக் கட்டியவன் யார்? யாருக்குமே தெரியாது. சொற்பச் செலவில் ஏதோ ஒன்றைச் செய்துவிட்டு பெயரைப் பெரிதாய்ப் போடுவது போன்றே இருந்தது அந்தத் தொட்டிப்பாலத்தில் உள்ள தகவல் கல்…. யாரிடம் போய் முறையிடுவது? முறையிட்டாலும் ஒன்றும் ஆகப்போவதும் இல்லை. காமராஜர் கொண்டு வந்த திட்டம் என்றெல்லாம் அங்கிருந்தவர் சொன்னார்…..ஆனால் அவர் பெயர் எங்கும் காணப்படவில்லை. நாட்டையே மீட்டுத் தந்த பொக்கைவாய் மனித தெய்வத்தை மறந்தவர்கள் தானே நாம்.   இனிமேல் எல்லாமே இப்படித்தான் இருக்கும்.
திற்பரப்புக்கு வந்தோம். கூட்டம் எதிர் பார்த்ததை விட அதிகமாக இருந்தது. காருக்கு 30 ருபாய்.  உள்ளே போவதற்கு 4 ருபாய். என் பேரனுக்கு வயது கேட்டான் 4 வயதென்றேன், அவனுக்கும் டிக்கட் வாங்கினேன். கேமராவுக்கு ருபாய் கேட்டான். கொடுக்கவில்லை. 12 வயதுக்கும் கீழே உள்ள சிறுவர்கள் குளிக்கும் நீச்சல்குளத்தில் குளிக்க கட்டணம் உண்டு.
பாயும் அருவியில் குளிக்க விரும்பிய என் பேரனும் நானும் ஜெயராமனும் அங்கே கொஞ்ச நேரம் குளித்தோம்.  தலையில் எண்ணெய் தேய்த்துக் கொண்டும் சோப்புப் போட்டுக் குளித்துக் கொண்டும் இருப்பதை பார்த்த எனக்கு எரிச்சலாக இருந்தது. தடை செய்ய வேண்டிய இந்தச் செயல்களை தடைச் செய்யலாமே. செல் போனில் பலர் நியாயமற்ற முறையில் படம் பிடித்துக் கொண்டிருந்தனர்.  ஆண்களும் பெண்களும் குளிக்குமிடத்தில் படம் எடுப்பதை அனுமதிக்கலாமா ?
வெளியே வந்தோம். சாலையின் அருகாமையில் இருந்த ஒரு அறிவிப்புப் பலகை எங்களைப் பார்த்துச் சிரித்தது. 
அதில் இருந்த வரிகள் இதோ:--
5 வயதுக்குக் குறைந்தவர்களுக்குக் கட்டணம் கிடையாது.
                     

Sunday, May 13, 2012

நான் அறி்ந்த கிராமத்து மாணவன்கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை படித்த பள்ளிக்கூடம் இன்று இல்லை. காரணம் கிராமத்தில் வாழும் குப்பனும் சுப்பனும் கூட தன் பிள்ளைகளை கிராமத்துப் பள்ளியில் சேர்க்காமல் வெகு தூரம் இருக்கும் ஆங்கில வகுப்பு நடத்தும் பள்ளிகளில் கொண்டு போய்ச் சேர்த்து விடுகிறார்கள். ஆனால் 1960 களில் கிராமத்துப் பள்ளியில் படித்துப் பட்டம் பெற்று வீட்டுக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்த்த பல பெரியவர்கள் நமது நாஞ்சில் நாட்டிலும் உண்டு.
பள்ளிக்கூடத்தில் 11 வருஷம் பயின்று தேறியபின் கல்லூரியில் புகுமுக வகுப்பில் சேர வரும் மாணவர்களுக்கு ஒரு வாரம்  BRIDGE COURSE  நடத்துவார்கள். பள்ளியில் தமிழில் படித்து வரும் மாணவர்களுக்காக ஆங்கில வகுப்புகள் நடைபெறும். அதன் பிறகு தான் அவர்களுக்கு புகுமுக வகுப்புகள் ஆரம்பமாகும்.
நாஞ்சில் நாட்டின் முகமே கிராமம் தான். அங்கே தெரிசனங்கோப்பு ஒரு சிறிய கிராமம். வயல்களும் தென்னைமரங்களும் அதிகம் அங்கே உண்டு. ஊரில் வடக்காறு, தெக்காறு என்று ஒரே ஆறினை இரண்டு பெயர் சொல்லிக் குறிப்பிடுவார்கள். நான்கு ரதவீதி உண்டு. கீழ ரத வீதியில் ராகேஸ்வரர்-உலகநாயகிஅம்மன் கோவில் இருக்கிறது. அது மிகப்பெரிய கோவில்.தெக்காற்றின் கரையோரம் சாஸ்தாங்கோவில்,அதன் பக்கம் ஸ்ரீதரநங்கை அம்மன் கோவில்.
  மூன்று அம்புகள் மூலம் தாடகையை வதம் செய்த ராமர் தான் செய்த பாவம் தீர சிவனை வணங்கியதால் அந்த சிவனுக்கு ராகவேஸ்வரர் என்ற பெயர் வந்ததாக ஒரு கதை உண்டு.
திரி என்றால்மூன்று.சரம் என்றால் அம்பு. திரிசரம் கோப்பு தான் நாளடைவில் மருவி தெரிசனம்கோப்பு என்று ஆனது எனச் சொல்வோரும் உண்டு.
கிழக்குப் பக்கமுள்ள மலை தாடகை வீழ்ந்து கிடப்பது போலவே பார்ப்பவர்களுக்குத் தோன்றும்.
அழகான இந்தக் கிராமத்தில் ஓய்வு பெற்ற Sanitary Inspector வாழ்ந்து வந்தார். இயல்பாகவே ஆங்கிலப் புலமை கொண்ட அவர் பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவர்களுக்கு TUTION எடுத்து வந்தார்.
அவரிடம் ஒரு மாணவன் படித்தான். நன்றாகப் படிக்கக் கூடிய அவனுக்கு தனியாக Tution  தேவை இல்லை. ஆனாலும் ஆங்கிலம் படிப்பதற்கு வேண்டியே அவரிடம் படித்தான்.
அவன் படித்த பள்ளிக்கூடம் மிக மிகச் சிறிய கிராமமான குறத்தியறையில் தான் இருந்தது, இன்றும் இருக்கிறது.
நன்றாகப் படித்துக் கொண்டிருந்த அவன் வாழ்க்கையில் விதி விளையாடியது. அவனது தந்தையார் திடீரென நோய்வாய்ப்பட்டு இப்பூவுலகை விட்டு மறைந்து விட்டார். தந்தையோடு கல்வி போகுமென்பார்கள். தாயோடு அன்பு போகும் என்பார்கள். அன்பும் போனது……ஆம் அவனது அம்மாவும் அவனையுமவன் கூடப் பிறந்த மூன்று சகோதரர்களையும் அனாதரவாக விட்டு விட்டு மறைந்தாள்.

ஆச்சி தாத்தா வீட்டில் கடுக்கரையில் வளர்கிறான். வசிக்கும் இடம் மாறினாலும் வாசிக்கும் இடம் அதாவது பள்ளிக்கூடம் மாறவில்லை.
1968-ல் S.S.L.C இல் பள்ளியில் முதல் மாணவனாகத் தேறுகிறான்.


அவன் புகு முக வகுப்பு தூய சவேரியார் கல்லூரியில் படிப்பதற்காகச் சேர்ந்தான். நகரத்து மாணவர்கள் எல்லோருமே  ENGLISH MEDIUM  படித்து வந்தவர்கள் தான்.  அவர்களின் எண்ணிக்கை தான் கூடுதல்.ஒரு வாரம் ஆங்கில வகுப்பு  bridge course நடத்தினார்கள்.
மாணவர்களின் திறமை பற்றி அறிந்திட Test  நடந்தது. அடுத்தநாள்  Leabue Auditorium –த்தில் புகுமுக வகுப்பு மாணவர்கள் முன்னிலையில் கல்லூரி முதல்வர்  Rev.Fr. ராஜநாயகம் நடந்து முடிந்த டெஸ்ட் பேப்பர்களை கையில் வைத்துக் கொண்டு பெயர்களை வாசிக்க ஆரம்பித்தார்.
எங்கோ ஒரு மூலையில் எந்தவிதமான சிரத்தையும் இல்லாமல் இருந்த நம் நாஞ்சில் நாட்டு மாணவன் பெயரை முதல்வர் வாசிக்க ,எழுந்து நின்றான் . சற்றும் எதிர்பார்க்கவில்லை அவன்.
கல்லூரி முதல்வர் கேட்கிறார், நீ எந்தப் பள்ளிக்கூடத்தில் இருந்து வந்திருக்கிறாய் ? என ஆங்கிலத்தில் கேட்க அந்த மாணவன் தமிழில் பதில் சொன்னான்.
“அரசினர் உயர்நிலைப் பள்ளி.,குறத்தியறை” என்று உரக்க நின்ற இடத்தில் இருந்தே சொன்னான்.
தமிழ் மீடியத்தில் படித்த மாணவன் தான் அதிக மதிப்பெண் எடுத்திருக்கிறான் என்று முதல்வர் மிகவும் மகிழ்ச்சியோடு அறிவிக்கிறார்.

அந்த மாணவன் 1996-ல் அதே கல்லூரிக்கு தன் மனைவியோடு போனார். அந்தக் கல்லூரியின் ஆண்டுவிழாவின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அவரது மனைவி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு கொடுத்தார்.

பிறந்த ஊருக்கும் வளர்ந்த ஊருக்கும் பெருமை சேர்த்த அந்த மாணவன் திரு.A.குளத்துரான் பிள்ளை. 
தன் தம்பிகளுக்கு அன்புத் தாயாகவும் தந்தையாகவும் இருக்கும் அவர் இன்று நாஞ்சில் நாட்டின் முக்கிய பிரமுகர்.  அவர் ஒரு பிரபலமான  Chartered Accountant.

என்னுடையத் தேடல்கள்   நாடு உனக்கு என்ன செய்தது என்று கேட்காதே….நீ நாட்டுக்கு என்ன செய்தாய் என்று கேள். இதையே சற்று மாற்றி என் மனசாட்சி என்னிடம் கேட்டது ,” ஓய்வுற்ற போதும் வாழ்வளித்துக் கொண்டிருக்கும் உன் கல்லூரிக்கு நீ என்ன செய்தாய் ?  சரி விடு….என்ன செய்யப் போகிறாய்..?”

என்னால் என்ன செய்ய முடியும்? காமதேனுவை வணங்கத்தான் முடியுமே தவிர வேறென்ன செய்ய இயலும்…..
என் சிந்தனை முழுவதும் இந்துக் கல்லூரியின் நினைவாகவே இருந்ததால் ஒரு எண்ணம் உருவானது.
 ”கல்லூரி வரலாறு ஒன்றை விரிவாக எழுதலாமே” என என் மனதில் தோன்றவே, கூடவே அது முடியுமா என்ற சந்தேகமும் என்னுள் தோன்றி சற்று பயமுறுத்தியது.
முயன்றுதான் பார்ப்போமே……..ஜனவரி 2012-ல் என் தேடல் தொடங்கியது. என்னிடம் இருக்கும் கல்லூரி ஆண்டுமலரைத் தேடினேன். சில கிடைத்தன.

நூலகத்தில் இருக்குமே…….1974 முதல் 2011 வரை உள்ள ஆண்டுமலர்கள் மாத்திரமே கிடைத்தன. இருப்பினும் நானும் கல்லூரி அலுவலர் திரு. காந்திநாதனும் நூலகத்துக்குப் போய்த் தேடலாம் என்று ஒருநாள் கல்லூரி நூலகத்துக்குப் போனோம். அங்கு போனதால் 1958,1960,1962,1970 ஆண்டுமலர்கள் கிடைத்தன .ஆனால் 1960 ஆண்டுமலர் மிகவும் கிழிந்த  நிலையில் இருந்தது.  கிடைத்ததை எடுத்துக் கொண்டு வந்தேன்.

கல்லூரித் தலைவர் திரு. P.ஆறுமுகம்பிள்ளையிடம் வரலாறு எழுதும் என் எண்ணத்தையும் ஆண்டுமலர்கள் முழுவதும் கிடைக்காததையும் மிகவும் வருத்தத்தோடுக் கூறினேன். அவர் ,’ கவலைப் படாதே. நம்ம கல்லூரியில் ஒருவர் M.Phil –க்காக கல்லூரி வரலாறு பற்றி thesis எழுதிய ஒரு book உண்டு. அதை வாங்கிப்பாரேன்.” என்று கூறினார்.
மிக்க மகிழ்சியுடன் வெளியே வந்து அதனைப் பெற முயன்றேன்.  ஆனால் அது எனக்குக் கிடைக்கவே இல்லை.
1952-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட கல்லூரியின் ஆரம்பகால ஆண்டுமலர்கள் எதுவும் இல்லாத நிலையில் என்னால் எதுவும் எழுத இயலவில்லை.
என்னுடன் புகுமுகவகுப்பில் படித்த என் நண்பன் திரு.A.வேதாசலம் என் முயற்சியை அறிந்து அவரிடம் இருந்த ஆண்டுமலர்களை கொடுத்தனுப்பினார்.
N.SP சாரை அவருடைய வீட்டில் போய் பார்த்து என்னுடைய முயற்சி பற்றிக் கூறினேன். அவரது நூலகம் வீட்டின் பின் பக்கம் சற்று தூரத்தில் இருந்தது. கால் வலியால் வீட்டினுள் கூட மிகவும் மெதுவாகவே நடக்கும் அவர், என் முயற்சியை ஊக்குவிப்பதற்காக மிகுந்த சிரமத்துடன் நடந்து மாடியில் உள்ள அறைக்கு என்னுடன் அவரே வந்து அவரிடம் இருந்த அனைத்து மலர்களையும் காண்பிக்க என்னிடம் இல்லாத ஆண்டுமலர்களை அவரிடம் இருந்து வாங்கி வந்தேன்.

ஏப்ரல் மாதம் ஒருநாள் Dr.D.வேலப்பன சாரை அவரது வீட்டில் போய் பார்த்துக் கேட்டேன். 80 வயதான, கல்லூரியை மிகவும் நேசித்த அவர் மிக்க ஆர்வத்துடன் ஆண்டுமலர்களைத் தேடினார். மின்சாரம் இல்லாத அந்த நேரத்தில் Emergiency light ஒளியில் தேடினார். அலமாரியில் உள்ள கீழ்த் தட்டில் இருக்கிறதா என்று பார்ப்பதற்காக கஷ்டப்பட்டு தரையில் இருந்து தேடியதைப் பார்த்த எனக்கு வருத்தமாக இருந்தது……” சார், வேண்டாம்…. இவ்வளவு தூரம் கஷ்டப்பட வேண்டாம்…….உங்களுக்குத் தெரிந்த தகவல்களை மாத்திரம் என்னிடம் சொன்னால் போதும்……” என்று கூறினேன்.
பேசினோம். தேவையான பல தகவல்களும் சுவராஸ்யமான செய்திகளும் அவர் சொல்ல நான் தெரிந்து கொண்டேன். ஆனால் அவருக்குத் திருப்தி இல்லை.  எழுந்து உள்ளே போய் 1977-ஆம் ஆண்டில் வெளியான தினமலரை எடுத்துக் கொண்டு வந்தார். ஒன்றரைப் பக்கத்துக்கும் அதிகமான அளவிலான கல்லூரியின் வெள்ளிவிழா நிகழ்ச்சி நிரலும் இந்துக்கல்லூரி பற்றிய திரு L.C.தாணு சார் எழுதிய கட்டுரையும் மற்றும் சில கட்டுரைகளும் இடம் பெற்றிருந்த அந்த செய்தித் தாளை என்னிடம் தந்தார். மின்சார தட்டுப் பாடு இருந்ததால் அந்த ஊரில் செராக்ஸ் எடுக்க முடியாததால் என்னிடமே தந்து விட்டார், அந்தக் கட்டுரை எல்லாத் தகவல்களைக் கொண்டதாக இருந்தது.முக்கியமானப் பலத் தகவல்களைக் கொண்ட அந்தச் செய்தித் தாள் பத்துக்கும் மேலான ஆண்டுமலருக்கு சமமாக இருந்தது.
அது கிடைத்ததும் நான் உற்சாகமாக எழுதத் தொடங்கி விட்டேன். நான் எழுதத் தொடங்கும் முன்னமே வேலப்பன் சார் தந்த தினமலர் தாளைக் செராக்ஸ் காப்பி எடுத்தபின் ஒரு கவரில் மிகப் பாதுகாப்பாக வைத்து அவருக்கு அவரது பேரன் மூலம் கொடுத்தனுப்பி விட்டேன்.

என்னுடன் இயக்குனராக இருக்கும் திரு.R. ஆறுமுகத்திடம் என் தேடல் முயற்சியினைக் கூறினேன். அவர் சொன்னார்”மறைந்த முன்னாள் மலையாளப் பேராசிரியர் K.G.உண்ணிகிருஷ்ணன் நாயர் சார் எல்லா ஆண்டுமலர்களையும் வைத்திருந்தார்…..அவர் வீட்டில் இருந்து வாங்கி வரணும்……உங்களால் முடியுமா….? “.


அவர் அவரது நணபருக்குத் தகவல் கொடுத்து தேவையான ஆண்டுமலர்களை எடுத்து வைக்கும்படிச் செய்தார்.


கிழிந்து போன 1960 மலரில் இருந்து தெரிந்து கொண்ட,இந்துக் 
கல்லூரியின் சின்னத்தினை வடிவமைத்த திரு. முகம்மத் கானைக் காண நானும் N.S.P சாரும் திருவனந்தபுரம் போனபோது கிடைத்த ஆண்டு மலர்களை திரு.அஜீந்திரநாத் மூலம் வாங்கி வந்தேன். ஆகா....! எவ்வளவு நாள் முயற்சி பண்ணினேன்.....எல்லாம் கிடைத்து விட்டதே.....மனம் பரிபூரண திருப்தியை அடைந்தது.

வீட்டிற்கு வந்து ஆவலுடன் பார்த்தபோது 1973 ஆண்டு மலர் இல்லாததைக் கண்டேன்.  இதுவரை 59 ஆண்டுமலர்கள் தான் வெளிவந்திருக்கின்றன. 58 ஆண்டுமலர் என்னிடம் இருந்தாலும் இல்லாத அந்த ஒன்றை மட்டுமே நினைத்துக் கொண்டு திரு.காந்திநாதனிடம் விவரத்தைக் கூறினேன். மறுநாள் காலையில் காந்திநாதன் என்னிடம் அந்த ஆண்டுமலரையும் தந்தார்.

முயன்றால் முடியாதது எதுவும் இவ்வுலகில் இல்லை. ஆனால் தனி ஒருவனால் எளிதில் முடியக்கூடிய விஷயம் இதுவல்ல அல்லவா.
என் எண்ணம் நல்ல வண்ணம் செயல்பட உதவிய நல்லோர்கள் எல்லோரையும் ,ஒடி ஒடித் தேடிக் கிடைத்தபின் திரும்பிப் பார்க்கும்போது நினைத்துப் பார்க்கிறேன்.
அந்த நல்லோர் அனைவரும் இந்துக் கல்லூரியின் மாணவர்கள்.

கல்லூரியின் ஆண்டு மலர்கள் (தகவல்கள்) அனைத்தும் ,கல்லூரியில் ஒரு ஆவணக்காப்பகம் இருந்தால் இருந்திருக்குமோ……….!

Thursday, May 10, 2012

இப்படியும் நடக்குமா !.......


மே மாதம் ஆறாம் தேதி மாலையில் தக்கலையில் ஒரு வீட்டிற்குப் போனோம்.வீட்டின் பெயர் நிர்மல் பவன்.எங்களுடன் வந்த இந்துக் கல்லூரிப் பொருளாதாரத் துறைப் பேராசிரியர் ஜோசப்ராஜ் எங்களை அந்த வீட்டில் வசிக்கும் ஒருவரைச் சந்திக்க அழைத்துச் சென்றார். அவரது பெயர் கில்பெர்ட் ராஜ். அவரும் இந்துக் கல்லூரியின் முன்னாள் மாணவர் தான். நாங்கள் சந்திக்க வேண்டும் என விரும்பியதற்கு முக்கியமான காரணம் ஒன்றே ஒன்றுதான். 52 வருடங்களுக்கு முன் கல்லூரியில் நடந்த மாணவர்களுக்கான ஒரு போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் பரிசு பெற்ற அவரது பெயர் 1960 –ஆம் ஆண்டு மலரில் இருந்ததைப் பார்த்தபின் நாங்கள் அவரைச் சந்தித்துப் பேச வேண்டும் என ஆசைப் பட்டோம்.
அவர் எங்களை அன்போடு அதிக ஆர்ப்பாட்டமில்லாத சொல்லில் வாங்க வாங்க என உள்ளே அழைத்தார். இரண்டு நாற்காலிகள் தான் இருந்ததால் உள்ளே அவரே போய் நாற்காலியை எடுத்து வந்தார்.76 வயதான அவர் சற்று சோர்வுற்றிருந்தார். செயர் கொண்டு அவர் போடும்போதே போண் பண்ணிட்டு வந்திருக்கலாமே…….என்ற தனது ஆதங்கத்தை மென்மையாகச் சொன்னார்.
இந்துக் கல்லூரி 1960 ஆண்டு மலரை அவரிடம் காண்பித்தோம். அவருடைய பெயர் அதில் இருந்தது. அதனைக் கண்டு அவர் மிகவும் மகிழ்ந்தார்.இந்துக் கல்லூரியின் சின்னம் வடிவமைத்ததில் இரண்டாம் பரிசு பெற்றது அவரது நினவுக்கு வந்தது. முதல் பரிசு பெற்ற முகம்மத்கான் படத்தைப் பார்த்து." அவன் மிகவும் அழகாக இருப்பான் அந்த வயதில்" எனச் சொன்னார். சிறிது நேரம் பேசி விட்டு ,விடை பெற்றபின் அங்கிருந்து திரும்பினோம்.
நான் என்னுடன் வந்த N.S.P சாரிடம் ," சார், நான் அறிந்த மானுட மகோன்னதம்…….எனது Blog-ல் எழுதினதைப் படித்தீர்களா" என்று கேட்டேன்.
"படித்தேன். ஏற்கனவே எழுதுவதற்கு முன் என்னிடம் சொல்லித் தெரிந்த விசயம் ஆனதால் அது எனக்கு சுவராஸ்யமாக இல்லை…ஆனாலும் நன்றாக இருந்தது" என்றார். மேலும் அந்த blog –ல் வந்த பேராசிரியர் முருகனைப் பற்றி மிகவும் புகழ்ந்து பேசினார்.
நான் இப்போ ஒரு விசயம் சொல்கிறேன்……மிகவும் ஆச்சரியப்படுவீர்கள் எனக் கூறிவிட்டுச் சொல்ல ஆரம்பித்தேன்.
"சூசையம்மாள் ஒரு ஏழைப் பெண். வீட்டு வேலை செய்து தான் தன் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தாள். தனது 50 வயதில் ஒரு வீட்டில் வேலைக்குச் சேர்ந்தாள். 18 வருடம் வேலை பார்த்த அவள் வயோதிகம் காரணமாக அதன்பின் வேலைக்குச்செல்வதை நிறுத்தி விட்டாள்.
ஒரு மாதம் கடந்தது .சூசையம்மாள் வீடு தேடிப் போய் 500 ருபாய் கொடுக்கிறார் அந்த நல்ல மனதுக்குச் சொந்தக்காரர். இது எல்லா மாதமும் தொடர்கிறது.சூசையம்மாள் தன் வசிப்பிடத்தை வள்ளியூர் பக்கம் உள்ள தளபதிசமுத்திரம் (மேலூர்) என்ற ஊருக்கு மாற்றி விட்டாள். அதனால் மாதம் தோறும் கொடுக்கும் 500 ருபாய் கொடுப்பதில் சற்று சிரமம் ஏற்பட்டது.
வள்ளியூர் அருகே உள்ள அஞ்சல் அலுவலகத்தில் சூசையம்மாள் பெயருக்கும் அவரது சகோதரி பெருக்கும் ஒரு இலட்சம் ருபாயை 6 வருடத்திற்கு Deposit பண்ணி , Pass book –ஐ அவர்களிடமே கொடுத்தார்.
அதில் கிடைக்கும் மாதவட்டியை சூசையம்மாளே வாங்கி வாழ்ந்து வருகிறாள்."
'அந்த நல்ல மனம் கொண்ட மனிதன் முருகன் தானே…….' சார் கேட்டார்.
'ஆம் பேராசிரியர் முருகன் தான்'