Friday, December 26, 2014

Singapore----6 Singapore Flyer....(சிஙகப்பூர் பறக்கும் ராட்டினம்...)Add caption

18-11-2014 செவ்வாய்கிழமை காலை உணவின் போது பரிமாறிக்கொண்டே “இண்ணைக்கு எங்க போறீங்க” ....எனக்  கேட்டாள் அய்யம்ம மதினி.....


நீங்களும் வாருங்களேன்...நீங்க பாக்காத இடங்களுக்கு நாம எல்லாரும் போலாமே....திட்டம் தயாரானது. அவர்கள் மூன்று பேர் போகாத.... போகணும்னு  ஆசைப்பட்ட  இடங்களான Zoo, River safari -க்கு போக முடிவு செய்து மதிய உணவு தயாரித்து போகத் தயாரானோம்.... நல்ல மழை.... டாக்ஸியில் போனோம்.....சிங்கப்பூர் வெள்ளிகளை அள்ளித் தந்து கொண்டே இருந்தாள் மதினி.ZOO .பார்த்துவிட்டு நாங்கள் சிங்கப்பூர் ஃப்ளையெர்க்குப் போனோம் .இரண்டு டிக்கட்டுகள் 48 வெள்ளி கொடுத்து வாங்கினோம்.....அண்ணனும் மதினியும் வெளியே காத்திருக்க நாங்கள் அசுர ராட்டினம் இருக்கும் இடம் நோக்கிச் சென்றோம்.....காத்திருந்த வேளையில் என் மொபைல் போணின் உதவியால் சிங்கப்பூர் ஃப்ளையர் பற்றி அறிய துளாவிக் கொண்டிருந்தேன்.....

உலகில் மிக அதிகம் உயரம் கொண்ட Giant wheel (165 metre ) இது. லண்டனில் உள்ளதை விட 30 மீட்டர் அதிக உயரம்....இரண்டரை வருட உழைப்பில் உருவானது... 28 பேர்கள் கொள்ளளவு கொண்ட 28 கேபின்கள் உள்ளன,,,,ஒரே சமயத்தில் 784 பேர் கண்டு களிக்கலாம்...அதிக உயரத்தில் இருந்து கொண்டு சிங்கப்பூரைக் கண்டு மகிழலாம்....   பக்கத்துத் தீவான இந்தோனேசியாவையும் காணலாம்........

மிகவும் மெதுவாக நகரும்....எந்த அதிர்வும்  இருக்காது....துவக்க நாளில் ஒரு டிக்கட் 8888 சிங்கப்பூர் வெள்ளிக்கு விற்றது......
படிக்க படிக்க ஆர்வம் கூடியது.படித்துக் கொண்டிருக்கும் போது படித்தவரிகள்  திடீரென பயமுறுத்திற்று... பல்வேறு சமயங்களில் ஏற்பட்ட அசம்பாவிதங்கள்   விவரிக்கப்பட்டிருந்தது...ஆறுவருடங்களுக்கு முன்பு ராட்டினம் பழுதடைந்து நின்றது. காரணம் கண்ட்ரோல் ரூமில் ஏற்பட்ட சிறு தீ ...... நின்றதால் 173 பேர் அவதிக்குள்ளானார்கள்  உணவும் குடிக்க ட்ரிங்க்ஸும் கொடுத்தார்கள்... இருவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். ஒரு மாதம் கழிந்தபின்தான் ராட்டினம் சுழல ஆரம்பித்தது.                                            படித்துக்கொண்டிருக்கும் போதே நாங்கள் ராட்டினப் பெட்டகத்தில் ஏறினோம்.அது குளிரூட்டப்பட்ட சின்ன ரூம்...ராட்டினம் நகர்கிறதா.... நகர்வது கண்ணுக்குப் புலப்படவே இல்லை எந்த அதிர்வும் உணர்வும் இல்லை... நாம் நகரும் பூமியில் இருப்பது போல.... ரசித்துக் கொண்டிருந்த நேரம் 45 நிமிடம்  முடிவதற்குள் பயணம் இனிதாய் முடிந்தது...Wednesday, December 24, 2014

சிங்கப்பூர்-----5..... நீரிலும் நிலத்திலும் சென்ற வாகன வாத்துசிங்கப்பூரில் கண்டு களிக்க பல இடங்கள் உள்ளன.எல்லாவற்றையுமே ஏழு நாட்களில் பார்த்து விடவேண்டும் அதுவும் மழைக் காலமான நவம்பரில் என்றால் இயலாத காரியம் என்பதை உணர்ந்த நாங்கள் தேர்ந்தெடுத்துதான்  எங்கள் நிகழ்வுகளைத் தீர்மானித்தோம் அப்படி போனதில் எனக்கு மிகவும் பிடித்தது DUKW Tour...

தார்ச் சாலையிலும் தண்ணீரிலும்....
அதற்கு முன்பே நகர்வலம் போகலாம் என்று போய் வந்து அடுத்துள்ள டக்வாக் குக்கு வேண்டி காத்திருந்தோம்....இருந்த அந்த இடம்  சிங்கப்பூர் பறக்கும் ராட்டினம் மையம் (Singapore Flyer) நாங்கள்
நால்வரும் சிற்றி டூர்ஸ் - பச்சை நிற பஸ்ஸில் பயணம் செய்தோம்.மழைகாரணமாக எங்குமே இறங்காமல் பஸ் பயணம் தொடர்ந்தது...அதனால் ஒரு மணிக்கூரில் புறப்பட்ட இடத்துக்கே வந்து சேர்ந்து  அடுத்த ஆரஞ்ச் நிற பஸ் பயணம் தொடங்கியது மழை இல்லை... ஆனாலும் நாங்கள் எங்கும் இறங்கி இடங்கள் எதுவும் பார்க்கவில்லை...

கொண்டு வந்திருந்த  உணவை அங்கு ஒரு இடத்தில் போய் தமிழர் ஒருவர் அனுமதி பெற்று அருந்தினோம்..... 2,30 க்கு அடுத்து பயணம் செய்யும் இடத்துக்கு போனோம் நாங்கள் இருவரும்..........எங்களுடன் வந்தஅண்ணனும் மதினியும்  ஏற்கனவே டக் டூர் போய் வந்ததால் எங்களுக்காக வெளியே காத்திருப்பதாகக் கூறினார்கள்   .

மூன்று மணிக்கு டக் வாக் ஆரம்பம் ஆனது......என்னுடைய வியப்பும் ஆரம்பம் ஆனது.... நான் நினத்தது ஏரியின் கரையோரம் நம்மை அழைத்துப் போய் அங்குள்ள போட்டில் நம்மையேற்றி அழைத்துச் செல்வார்கள் என  நினைத்தேன்.

நாங்கள் அழைத்துச் செல்லப்பட்ட இடத்தில் (சிங்கப்பூர் ஃப்ளையர்) ஒரு பஸ் நின்று கொண்டிருந்தது.ஒரு சின்ன ஏணி...அதைப் பயன்படுத்தி ஏறி உள்ளே பார்த்தால் போட் வடிவமைப்பில் இருக்கைகள் இருந்தன....ஆம் அது Two in One காரும் படகும் ஒன்றில்.......சாலையில் ஓடும் பஸ் நீரிலும் பாய்ந்தோடும்....

வசதியான இருக்கைகளில் அமர்ந்தோம்.சாலையில் அது பயணித்தது..... ஒரு கைடு அழகான அவர்தம் ஆங்கிலத்தில் வெளியே காண்பவைகள் பற்றி விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தார். அவர் பேச்சு நகைச்சுவை கொண்டதாக இருந்தது.....அவர் ஆங்கிலமும் நம் ஆங்கிலமும் இருவருக்குமே புரியாது......சிங்கப்பூர் இங்க்லீஷ்.....சிங்க்லீஷ் ......எனக்குப் புரிந்தது கொஞ்சம்......

மழைத்தூறல்  சலிப்பைத் தந்தது....நாங்கள் முக்கியமான இடத்தைக் கடந்து செல்லும்போது  காணும் கட்டிடங்கள் பற்றி வர்ணனையாளர் விவரித்துக் கொண்டே வருவார்....மேலே காணும் படம் சென்ற பாதையின் வரைபடம்...சிவப்பு  கோடு சாலை வழி சென்றதையும் நீலக்கோடு நீர்வழி சென்றதையும் காட்டுகிறது.....

நீர்ப்பரப்பை அடையும் போது பஸ் BOAT ஆக மாறி பாய்ந்தோடும்.அந்தச் சமயத்தில் வர்ணனையாளர் குதூகலப் பேச்சால் நம்மை ஆனந்தப் பரவசத்துக்கு அழைத்துச் செல்வார்....சில  முக்கியமான இடங்களில் போட்  நிதானமாகச் செல்லும் போது நாம் படம் எடுக்க வசதியாய் இருக்கும்....

வர்ணனையாளர் சொன்னதில் என் கவனத்தில் வந்தது சில....

யாராவது சிங்கப்பூரில் போலீசைப் பார்த்தீர்களா..? என்று  முப்பது பேருக்கும் குறைவாக இருந்த எங்களைப் பார்த்துக் கேட்டார்....

அவர் பக்கம் அமர்ந்திருந்த ஒருவர் மிகவும் ஆச்சரியம் அடைந்தவர் போல் தன்னைக் காட்டிவிட்டு சொன்னார்....Oh ! you are Lucky... Singapore is a low crime country in the world.  You can never see any police unless called for any problem...

அப்போதுதான் நானும் உணர்ந்தேன்... எங்கும் ....ட்ராபிக் உள்ள இடங்கள் எதிலும் மருந்துக்குக் கூட ஒரு போலீஸ் என் கண்ணில் படவில்லை.

சிஙக்ப்பூரின் வளர்ச்சிக்கு காரணமான முன்னாள் பிரதமர் பற்றிச் சொல்லும்போது  தற்போதைய சிங்கப்பூரின் பிரதமர் அவரது மகன் என்றும் சொன்னார்.
சிங்கப்பூர் என்றதும் நினவுக்கு வரும் MERLION பற்றி விவரித்தார்...மெர் என்றால் மீன் என்று சொன்னபோதுதான் அந்த வடிவம் என் மனதுக்குள்
வந்தது...சிங்க முகம் மீன் உடல்..... பயணம் இனிதாக முடிந்தது.....
Saturday, December 20, 2014

சிஙக்ப்பூர்--4 ஆலயங்கள்......ஊடகங்கள்......சுற்றுலா பஸ்கள்.....கோயில்
கோயில்
ஆலயம் தொழுவது சாலவும் நன்று.கோயில் இல்லாஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற நம் தமிழ் பாட்டி ஒளவையின் மொழிக்கு செவி சாய்த்த நாடு  இது. மொழியால் சீனம்,மலாய்,தமிழ் மக்கள் வேறு பட்டிருந்தது போலவே தங்கள் தெய்வங்களயும் வேறுபடுத்தியே தனித்தனி ஆலயங்கள் அமைத்து வழிபட்டுவருகிறார்கள். 
தர்கா
நாங்கள் தங்கிய இடத்தில் இருந்து அரைமணிநேரம் நடந்து போனால் விநாயகர் கோயில்,சர்ச்,தர்கா மற்றும் சீனர்களுக்கான கோயில்கள் அனைத்தையும் காணலாம்.
சிங்கப்பூர் செண்பகவிநாயகர் கோயில் இந்துக்களால் பேணிப்பாதுகாக்கப்படுகிறது.அங்கு தமிழ் வாழ.....சைவமும் தமிழும் தழைத்துக் கொண்டிருக்கின்றன என்றால் அதற்கு மிக உதவியாக இருப்பது இந்த ஆலய நிர்வாகம் என்று சொல்லலாம்...... ஆன்மீகம் ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது.


 நவம்பர் மாதமே போன சுற்றுலாத் தலங்கள் அனைத்திலுமே கிறிஸ்துமஸ் விழாவுக்கான ஆரம்பப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன.


நவம்பரில் நாங்கள் போனநாட்கள் மழை நிறைந்த நாட்களாக அமைந்துவிட்ட காரணத்தால்  முக்கியமான இடங்களைப் போய் பார்க்கவும் மற்ற இடங்களைப் பார்க்கவேண்டாமே என்றும் முடிவெடுத்தநிலையில் மணியின்  வழிகாட்டல் படி பயணத்திட்டத்தை அமைத்துக் கொண்டோம்.
சுற்றுலாவுக்கு ஏற்ற “City Tours" ஒன்று இருக்கு. மூன்று பஸ்களை இயக்குகின்றன.
சர்ச்
 மூன்றுமே Singapore Flyer Tourist centre-ல் காலை 9 மணிக்குப் புறப்படும். பச்சை,ஆரஞ்ச்,சிவப்பு நிற பஸ்கள். மூன்று பஸ்களும் வெவ்வேறு தடங்களில் வெவ்வேறு இடங்களுக்குச் செல்லும். பச்சை பஸ்ஸில் நாம் ஏறினால் பொட்டானிக் கார்டன், சைனா டவுண்,மெர்லியான் பார்க் ....மற்றும் பல பார்க்கவேண்டிய முக்கிய இடம் வழி செல்லும். நாம் தேர்ந்தெடுத்துள்ள இடத்தில் இறங்கிச் சுற்றிப்பார்த்துவிட்டு அதே கலர் பஸ் வரும்போது அதில் ஏறிக்கொள்ளலாம்.....யாருடைய உதவியும் இல்லாமலே அனைத்து இடங்களையும் நாலைந்து நாட்களில் பார்த்துவிட இயலும்...... பஸ்களின் மேல்கூரையில் இருந்தும் ரசித்துப் பயணிக்கலாம்...கோயில்கள் சிலவற்றை நாங்கள் ஆரஞ்ச் கலர் பஸ்ஸில் மழை நேரத்தில் பயணம் செய்து பார்த்தோம்.

சிங்கப்பூரில் மதங்கள்
மதம்                                              விழுக்காடு
பௌத்தம்                                       33%
கிறுத்துவம்                                   18%
மதம் சாராதவர்கள்                    17%
இசுலாம்                                          15%
டாவோயிசம்                                11%
இந்து                                                 5.1%
மற்றவர்கள்                                   0.9%   நாட்டின் வளர்ச்சிக்கு அனைத்து மக்களின் இன, மத பேதமில்லா  ஒற்றுமையும் காரணமாகப் பேசப்படுகிறது.ஆங்கிலம்,
சீனம், மலாய், தமிழ் ஆகிய மொழிகளில் தொலைக்காட்சியும், வானொலியும், செய்தித்தாள்களும் உள்ளன.
தமிழர்களுக்குத் தனியாக வானொலி (ஒலி), தொலைக்காட்சி (வசந்தம்) ,பத்திரிகை(தமிழ்முரசு) உள்ளன. ஊடகங்களுக்கு சுதந்திரம் குறைவு...

தலைமை நீதிபதியான சுந்தரேஷ் நாயர் சிங்கப்பூரில் பிறந்தவர் .அவருடைய முன்னோர்கள் இந்தியர்கள்.

Wednesday, December 17, 2014

சிங்கப்பூர் --3 வீடு அதன் உள்புறம் வெளிப்புறம்......

மணியின் வீடு ஒரு ஹால்.  அந்தப் பெரிய அறையின் அற்றத்தில் கண்ணாடிச் சுவர்.நடுவே இழுத்து அடைக்கும் கதவு. அதனுள்ளேயுள்ள அறைதான் அடுக்களை.  அதன் ஒரு புறம் இரு பக்திகளாகப் பிரிக்கப்பட்டு குளிப்பதற்கு ஒன்று,டாய்லெட்டுக்கு ஒன்று  என அமைக்கப்பட்டிருந்தது.
ஹாலின் இடது பக்கம் இரண்டு அறைகள் உள்ளன. அதில் முதல் அறை விருந்தினர்களுக்கு அல்லது மணி அதனை அலுவலகமாக பயன்படுத்துவான். 
மணியின் வீட்டு வராந்தாவில் நின்று பார்த்தால் நேர் எதிர்புறம் உள்ள கட்டிடம் மூன்றோ அல்லது நான்கோ தளமுள்ள கட்டிடம் என்பதால்,அந்தத் தளத்தில் ஒரு சிலர் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தது தெரிந்தது......வேறு சிலர் யோகா போன்ற உடற்பயிற்சியில் மும்முரமாக இருந்தனர். அந்தத்தளத்தின் மறு அற்றம் கட்டிடம் உள்ளதாக அமைந்திருந்தது. அதில் ஒர் அறை சின்னஞ்சிறு சிறார்களுக்கான பள்ளிக்கூடம். காலை உணவையும் மதிய உணவையும் அருந்தி விட்டு எங்கே போவது என்று மனதில் நினைத்துக் கொண்டிருக்கும்போதே மணி சொன்னது மகிழ்ச்சியாய் இருந்தது. ஞாயிற்றுக்கிழமை மணிக்கு ஓய்வுநாள் என்பதால் மணி எங்களை வெளியே அழைத்துக் கொண்டு செல்வதாகக் கூறினான். சிங்கப்பூர் நேரப்படி மூன்று மணிக்குப் போகலாம்.....திட்டமிட்ட படியே அன்று பல இடங்களுக்குப் போனோம்....மறுநாள் நானும் ராசப்ப அத்தானும் தனியாகவே  யூனிவேர்சல் ஸ்டுடியோவுக்குப் போய் பார்த்து வந்தோம்...

எப்படி எழுதுவது.....முதல்நாள்.....இரண்டாம் நாள்......வரிசைப்படுத்தவா....

வேண்டாம் வேறுமாதிரி எழுதலாம் என்ற நினைப்பில்  தொடர்கிறேன்......

சிங்கப்பூர் ஒரு வளர்ந்த நாடு.50 வருடங்களுக்கு முன் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கி இருந்த நாடு. இன்று வளம் மிக்க நாடு, செல்வச் செழிப்பில் உலகில் மூன்றாம் தரவரிசையில் உள்ள நாடு....முதல் பிரதமர்  லீ குவான்யூ செய்த முயற்சியின் காரணமாகவும் கடுமையான உழைப்பாலுமே நாடு முன்னேறியது...
1959 முதலாக 31 வருடங்களில் வேலையில்லாப் பிரச்சினையை சமாளித்தார்.
தொடக்க காலத்தில் இருந்த வேலையில்லாதன்மை இன்றில்லை...இன்று இரண்டு சதவீத இளஞர்களே வேலையின்றி இருக்கிறார்கள். வாழ்க்கைத்தரம் உயர்ந்ததும் பெரும் அளவு  வீட்டுப்பிரச்சனை தீர்ந்திட பல வீட்டமைப்புத் திட்டங்கள் அமைக்கபட்டன.நாட்டின் பொருளாதார உள் கட்டமைப்புகள் வளர்ச்சியடைந்தன.
 அந்நிய நேரடி முதலீடு அந்நாட்டை புதியபொருளாதார நாடாக மாற்றியது. அந்த நாட்டுப் பொருளாதாரம் முதலீட்டாளர்களுக்கு உகந்ததாகவும் வணிகக் கட்டுப்பாடுகள் குறைந்ததாகவும் உள்ளதால் 7000-க்கும் அதிகமான பல நாடுகள் சிங்கப்பூரில் முதலீடு செய்தார்கள்.
இதன் காரணமாக சிங்கப்பூர் செல்வம் நிறைந்த நாடாக மாறியது. அனைத்துத் துறைகளிலும் வெளிநாட்டு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.. 

இன முரண்பாடுகள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டன; சிங்கப்பூரின் வெற்றிக்கு முக்கிய காரணமாக  சமய  இன நல்லுறவைக் கூறிகிறார்கள்.


சுற்றுலாத்துறை பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஆண்களுக்கான கட்டாய படைத்துறைச் சேவையே அடிப்படையாகக் கொண்ட ஒரு சுதந்திரமான தேசிய பாதுகாப்பு முறை உருவாக்கப்பட்டது

சிங்கப்பூர் நாணயம் வெள்ளி என்று சொல்வார்கள் நாம் ருபாய் என்று சொல்வது போல். ஆங்கிலத்தில் சிங்கப்பூர் டாலர்..... (SGD)

 100,50,20,10,5,2 பேப்பர் அல்லது ப்ளாஸ்டிக்
நோட்டுக்கள் புழக்கத்தில் உள்ளன....ஒரு டாலர் நோட்டு

உண்டுமா தெரியவில்லை........

கடலிலிருந்து நிலத்தை மீட்கும் திட்டம் காரணமாக 1960ல் 581.5 ச.கிமீ (224.5 சதுர மைல்) இருந்த நிலப்பரப்பு தற்போது் 704 ச.கிமீ (272 சதுர மைல்) ஆக உள்ளது. சில நிலமீட்பு திட்டங்களில் சிறிய தீவுகள் ஒன்றிணைக்கப்பட்டு பெரிய தீவு உருவாக்கப்படுகின்றன.

நகரமயமாக்கல் பெரும்பாலான முதன்மை மழைக்காடுகளை அழித்துவிட்டாலும் 5% நிலமானது இயற்கை காடுகளாகப் பாதுகாக்கப்படுகிறது .

சிங்கப்பூரில் ஆண்டு முழுவதும் மழை உண்டு.நவம்பரில் கூடுதலாக வும் ஃபெப்ருவரியில் குறைவாகவும் இருக்கும். பக்கத்தில் உள்ள இந்தோனேசியாவில் காடுகளை எரிப்பதால் சிங்கப்பூரில் வானம் மங்கலாக காணப்படும். அதனால் வரும் காற்றில் உள்ள மாசுவால் உடல் அரிப்பு ஏற்படுவதாகச் சொன்னார்கள்.
ஒரு நாட்டின் ஜனத்தொகையில் அதிக வெளிநாட்டினரைக் கொண்ட நாடுகளில் உலகளவில் 6ம் இடத்தை வகிக்கிறது. இவர்கள் தொழிலாளர்களாகக் காணப்படுகின்றனர்.
.
நிலப்பற்றாக்குறையால் அரசு நிதியுதவி பெற்ற, அடுக்கு மாடி வீட்டு மனைகளை வீட்டுவசதி வாரியத்தின் மூலம் மக்களுக்கு வழங்குகிறது.
குழந்தை பிறப்பு குறைவாக உள்ள நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று.
.

Sunday, December 14, 2014

சிங்கப்பூர்....2 அமரா ஹோட்டல் எதிர்புறம் tanjeng pagar plaza-----16-NOV-2014 (Sunday)

சிங்கப்பூர் முதல் நாள் 16-11-14
அதிகாலைப் பொழுது...... நாங்கள் இருவரும் முதன்முதலாக இறங்கிய இடம் டாஞ்செங்க் பகார்  ப்ளாஷா .அதன் எதிர்புறம் ஹோட்டல் அமரா.
அந்த இடம் ஒரு வணிகவளாகம். எல்லாமே அங்கு கிடைக்கும்.... பல அடுக்கு கட்டிடம்.....கட்டிடத்தினுள் நடந்து செல்கையில் “தமிழ் முரசு” பத்திரிகை விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. பத்திரிகை விலை 60 செண்ட் (28 ருபாய்)Home

பல கட்டிடம் உள்ள அந்த இடத்தில் 4ஆம் பகுதியில் போய் நின்றோம். எங்கள் முன்னே உள்ள லிஃப்ட் கதவு திறந்து வரவேற்றது....  எட்டாவது மாடியில் லிஃப்ட் நின்று அது வழி அனுப்பி வைத்தது.... வலது பக்க வராந்தாவில் பத்தாம் எண் வீட்டு வாசலில் போய் நின்றோம்.

வாங்கோ..... வாங்கோ..... என்ற தேந்தமிழ் எங்களை வரவேற்றது.....தமிழர்களுக்குத் தனிநாடு இல்லையென்றாலும் தமிழர்கள் எல்லா நாட்டிலும் வாழ்கிறார்கள்.
எங்களை வரவேற்றவர் 84 வயதுப் பெரியவர்.....விவேகானந்தரை விரும்பிப் படிப்பவர்.....காந்தியை விரும்பியவர்.....வாழும் காந்தியாகவே வாழ்ந்து வருபவர்..... அவர் எங்களை அழைத்துச் சென்ற மணியின் தந்தை......எனக்கு என்னுடைய மதினியைத் திருமணம் செய்த முறையில் அண்ணன்.....ராசப்பத்தானின் தங்கைதான் மணியின் அம்மா.

அறுபத்தி ஏழாம் வள்ளுவரின் வரிகளுக்கு உதாரணமான ஒரு தந்தை,அறுபத்தி ஒன்பதாம் வரி சொல்லும் தாய்,எழுபதாம் குறள் காட்டும் மகன் ......இவர்கள்......

பெரியவர் பெயர் காந்தி.....அன்னையவள் அய்யம்மை..... இருவரும் அகமும் முகமும் மலர எங்களை வரவெற்றனர்.

விமானம் காலதாமதமின்றி வந்ததா......பிரயாணம் வசதியாக இருந்ததா... அக்கறையுடன் விசாரித்தார்...மைத்துனர் ராசப்பனிடம் ,” உனக்கு இது தானே முதல் விமானப்பயணம்.....அன்போடு கேட்டார்.

“விமானப் பயணம் என்றால்...... வெளிநாட்டு விமானப்பயணம் இது தான் முதல் வெளிநாட்டுப் பயணம்.....டெல்லிக்கு,சென்னைக்கு ஃப்ளைட்டில் பல தடவை போனதுண்டு.....” என்றார்.

என்னிடம் மதினி கேட்டா....சுப்பம்மையையும் கூட்டிட்டு வந்திருக்கலாம்லா....

அமைதியும் சிரிப்பும்தான் என் பதில்....... உள்மனம் சிரிக்கவில்லை.....

இரண்டு கதைப் புத்தகங்கள் கொண்டு போயிருந்தேன்......படிப்பதற்காக.

அண்ணனிடம் படிப்பதற்காகக் கொடுத்தேன்.

சிங்கப்பூர் எப்படி இருக்கு....? நான் கேட்டேன்.

அப்போ அவர் சொன்னதைதான் முதல் பகுதியில் குறிப்பிட்டிருந்தேன்... காந்தியின் கனவு....... நனவாக அமைந்த நாடு என.......

இங்கு எல்லாமே காஸ்ட்லி.... காப்பிக்கே அதிக விலை கொடுக்கணும்....

மணி சொன்னது “ சிங்கப்பூரில் வாங்கும் ஊதியத்திற்கு ஏற்றவிலைதான். இது...  வீட்டு வாடகை ஒன்றரை லட்ச ருபாய்.... இங்கே சிங்கப்பூரில் 3000 சிங்கப்பூர் டாலர்.. வீட்டில் வேலை செய்யும் நபருக்கு 500 டாலர்...

அவர்கள் தந்தையும் தனையனும் பேசிக் கொண்டிருந்த போது நான் அவர்கள் பேசுவதையும் அவர்கள் இருவரது முகபாவங்களையும் கேட்டுக்கொண்டும் கவனித்துக் கொண்டுமிருந்தேன்.....

மகன் மிகவும் பொறுமையாய் தந்தை கேட்கும் கேள்விகளுக்கு தெளிவாகச் சொல்லிக் கொண்டிருந்தான். ஆசிரியருக்கான தகுதிகள் மணியிடம் என்னைவிட அதிகம் இருப்பது கண்டு ரசித்தேன்.

எனக்கு எங்கோ  வீடியோ ஒன்றில் பார்த்த மீச்சிறு குறும்படம் நினைவுக்கு வந்தது........ ஒரு பூங்கா..... அதில் ஒரு நாற்காலியில் அதிக வயதான தந்தையும் மகனும் இருக்கிறார்கள். பேப்பர் படித்துக் கொண்டிருக்கிறார் மகன்.
பெரியவர் ஒரு வண்ணத்துப் பூச்சியைப் பார்க்கிறார்.... தமது கண்ணுக்கு சரியாகத் தெரியாததால் மகனிடம் கேட்கிறார் அது என்னவென்று....

மகனும் சொல்கிறார்.....

”அது எங்கே போகிறது ?” அப்பா கேட்கிறார்.

”ஒரு செடியை நோக்கிப் போகிறது.”.....மகன் சொல்கிறான்

”இன்னமும் பறந்துட்டே இருக்கா....” இது அப்பா

”இல்ல செடியின் மீது இருக்கு ”பேப்பரைப் படித்துக் கொண்டே  மகன் சொன்னான்.

இப்பவும் அது அங்கதான் இருக்கா.....அப்பா கேட்கிறார்.

பொறுமை இழந்த மகன் அப்பாவிடம், “ என்னப்பா  சும்ம எதாவது கேட்டுகிட்டே இருக்க.....” சற்று கோபத்துடன் கேட்டான்.

அவர் மகனிடம், “ மக்கா..... உனக்கு அப்போ சின்ன வயசு......என்னிடம் நான் இப்பம் ஓங்கிட்ட கேட்கிறேன்லா.....அப்போது நீ என்னிடம் கேட்டதையேத் திரும்பித்திரும்பி கேட்டுட்டே இருப்ப...... நான் ஒருநாள் கூட உன்னிடம் கோபப்பட்டதே இல்லை.....”

கேட்ட மகன் தந்தையைப் பார்க்கிறான்..... தந்தையின் கண்களில் கண்ணீர்,,,,

மன்னிப்பு கேட்கிறான் மகன்...... படம் முடிகிறது. நிழல் இது. ஆனால்.........

நிஜத்தில் தந்தையும் மகனும் பொறுமையில் சிகரங்கள்.....

மிகவும் பொறுமையாய்த் தந்தையைப் பேணுவதில் மணியிடம் இருந்து பாடம் கற்றேன். அடுக்களை வேலைகளை முன்னின்று வயதான தாய்க்கு உதவும் பொருட்டு அவள் பணியைச் செய்யும் பாங்கினைக் கண்டேன்.

ஊருக்கு ராஜா ஆனாலும் உனக்குப் பிள்ளைதானே என்று ஒவ்வொரு முறையும் செயலால் காண்பித்துக் கொண்டிருந்த மணி எங்களையும் உபசரித்த விதம்...... எழுதிக் கொண்டே போகலாம்.  எத்தனை வரிகள் வேண்டுமானாலும் எழுதலாம் ........

விமானப்பயணமும் களைப்பைத் தரும்..... சற்று அசதி.....கண் மன்றாடியது..

கொஞ்ச நேரம் ஓய்வுதேவை........ தூங்கிவிட்டேன்.
Friday, December 12, 2014

சிங்கப்பூர்.....1

மாலைப்பொழுதில் ஒரு சனிக்கிழமையன்று நானும் எனது அத்தையின் மகனும் என் அத்தானுமான இந்துக்கல்லூரித் தலைவர் திரு.பெ. ஆறுமுகம்பிள்ளை அவர்களும் நடக்கவேண்டும் என்பதற்காக நடந்து போய்க்கொண்டிருந்தோம்......பேசிக்கொண்டும் போனோம்....
சிங்கப்பூருக்கு நாம் இருவரும் போலாமா ? எனக் கேட்டார்.

அங்கெல்லாம் போகணும்னா பாஸ்போர்ட் வேணுமே. உங்களிடம் இருக்கா ?

அது  உன் அக்கா இருக்கும்போதே எங்க இருவருக்கும் தட்கல் முறையில் பாஸ்போர்ட் எடுத்தோம்லா என்று சொல்லி முடிக்குமுன்னமே நான் ஆமாம்....தெரியுமே....மறந்துபோச்சு.....என்றேன்.

என்னிலும் பத்து வயது அதிகமான அவர் கேட்கும்போது என் மனநிலை மாறுபட்டு இருந்தாலும் சிங்கப்பூர் போய்வர என் சம்மதத்தை தெரிவித்தேன்.

அதற்கான வேலைகள் தங்கு தடையின்றி தொடர்ந்தது.....விசாவும் வந்தது.ஒரு நபருக்கு விசாவுக்கான கட்டணம் 50 சிங்கப்பூர் டாலர். ஒரு சிங்கப்பூர் டாலரின் இந்திய ருபாய் 47.7. ஆனால் ஒரு ட்ராவல்ஸ் மூலம் எல்லா செலவும் உட்பட 2400 ருபாய். கொடுத்து  விசா வாங்கினோம்....போக வர டிக்கட் 31300/- சிங்கப்பூர் செல்ல திருவனந்தபுரத்தில் இருந்து எங்கும் இறங்காமல் போகும் விமானம் ஒன்றே ஒன்று தான் உண்டு. அது சில்க் ஏர்(SILK AIR). மற்றபடி இலங்கை வழி பயணம் செய்தால் இரண்டு விமானங்களில் பயணம் செய்யணும்... இரண்டாவது பயணம் இலங்கையில் இருந்து வேறோர் விமானத்தில் பயணிக்கணும்...நேர விரயம் கூடுதலாகும்..... நாங்கள் நாலரை மணி நேரப் பயணத்தை விரும்பியதால் ....நினைத்த  உடனே
சிங்கப்பூர் செல்ல விரும்பியதால்.....கூடுதல் கட்டணம் கட்ட வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானோம்.

திருவனந்தபுரம் வெளிநாட்டு விமானதளத்திற்கு (TERMINAL II )நவம்பர் 15-ஆம் தேதி சனிக்கிழமை இரவு 7 மணிக்குவந்து சேர்ந்தோம்.  காரில் ஜெயராம் ஓட்ட,...எங்கள் பயணம் நாகர்கோவிலில் மாலை 4 .30 மணியளவில் தொடங்கியது......வழியனுப்ப நெய்வேலியில் வேலைபார்த்த மைத்துனர் கிருஷ்ணன் எங்களுடன் வந்தார்,,,,

Check in அறிவிப்பைக் கண்டு நாங்கள் உள்ளே போனோம்......
கூட்டமே  இல்லாதது கண்டு சற்று வியந்தேன்.......இதற்கு முன் வேறொரு வெளிநாட்டுப் பயணத்தின் அனுபவம் வேறு மாதிரியாக இருந்ததால் அந்த வித்தியாசம் என்னை வியப்படையச் செய்தது....

முன்பயணப் பணிகள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக நடந்தது.......

எங்கள் பொருள்கள் நகரும் ஒரு மேடையில் வைக்கப்பட்டு அது ஒரு சின்னஞ்சிறு குடிலுனுள் நுழைந்து மறுபக்கம் வந்தது..சோதனை செய்யப்பட்ட எங்களது சுமைகள் மறுபடியுமெங்கள் கையில்......

சிங்கப்பூர் விமானப் பணிபெண்கள்(Ground Staff) எங்களை அழைத்து அடுத்துச்  செய்து முடிக்க வேண்டிச் செல்ல வேண்டியஇடத்தைச் சுட்டிக் காண்பிக்க நாங்கள் அந்த இடம் சென்றோம்... எங்கள் பொருள்களின் மொத்த எடை ஒரு  ஆள் கொண்டு செல்ல அனுமதிக்கும் 30 கிலோவை விட குறைவு....அதனால் எங்களிடம் விசயத்தைக் கூறி ஒரே பெயரில் டேக் போட்டு கட்டி நகரும் மேடையில் வைத்தார்கள்.... அது எங்கோ நகர்ந்து போனது போல் இருந்தது.
Boarding Pass தந்தார்கள். அதன் பின் மாடியில் மறு நாட்டுத்தங்கல் அனுமதிச் சான்று ( IMIGRATION STAMBING ) பெற போனோம். பாஸ்போர்ட்டில் சீல் அடித்து தந்தார்கள்......அதன்பிறகு என்ன செய்யலாம்........ யோசிக்க ஆரம்பித்த உடனே ஜெயராம் போன் பண்ணினான்.

“ நீங்கள் ஏறிப்போன மாடியில் இருந்து திரும்பி வந்த திசையைப் பாருங்கள்”..

பார்த்தோம்...... கிருஷ்ணனும் அவனும் கைகளை அசைத்துக் கொண்டு நின்றது எங்களுக்கு தெரிந்தது....

காத்திருக்கும் மண்டபம் நுழையுமுன் மறுபடியும் அனைத்துப்பொருள்களும் சோதனை செய்யப்பட்டு எங்களிடமே வந்தன....
உள்ளே போனோம்..... எல்லாமும் அங்கே கிடைக்கும் படி கடைகள் பல இருந்தன... நகர பஸ்நிலையத்தில் அல்லது ரயில் நிலையங்களில் இவை இருந்தால் பிளாட்பாரத்துக்கடை என்போம்.....இவற்றை என்ன பேர் சொல்லி அடையாளம் காட்ட......எல்லா நாட்டு நாணயங்களையும்  மாற்றிக் கொள்ளும் வசதி கொண்ட இடம்..... படிக்க, பசிதீர,உடுக்க,ருசிக்க என அனைத்தும் கிடைக்கும் காமதேனு..... விலை சற்று அதிகம்.....இரண்டு காப்பி 96 ருபாய்.....

திருவனந்தபுரம்விமானநிலயம்
9 மணியளவில் ஒரு வாசல் வழி அழைத்துச் செல்லப்பட்டு விமானத்தினுள்ளே நடந்தே சென்றோம்.... படியேறிச் செல்ல வேண்டியிருக்குமோ என நான் நினைத்தேன்.எவ்வளவு சுமையிருந்தாலும் நாமே கொண்டு செல்ல வசதியாக பாதை இருந்தது...
விமான எண். MI-491
Economy class. Seat No: 17 A and 17 B.....  நான் மூன்று செயர்கள் உள்ள வரிசையில் நடுவில் அமர்ந்தேன்.....நான் இருந்த இருக்கையின் முன் பகுதியில் பாதையோரமுள்ள யாருமில்லா இருக்கையில் வசதியாகப் போய் அமர்ந்து கொண்டேன்.
இருபது நிமிடநேர தாமதத்துடன் விமானம் பயணிக்க ஆரம்பித்தது.

.குளிர்பானம் வந்தது......குறுஞ்சாப்பாடும் வந்தது.....

என் நெஞ்சம் கொஞ்ச நேரம் கலங்கியது.......என் மனம் சற்று படபடத்தது.......
இவை எதுவும் பயத்தினால் அல்ல...
.என் முதல் பயணம் என் மனைவியோடு....அனைத்து விமானப்பயணமும் அவளுடன் தான்....ஆனால் இந்த  அழகான  அருமையான சந்தர்ப்பத்தில் ஒரு சுயநலவாதியாய் நான் மட்டுமே போகிறேனே .....இந்த ஆதங்கம் என்னை மெல்ல தின்று கொண்டே இருந்தது. இனி இது போன்றதொரு வாய்ப்பு கிட்டுவதென்பது மிகவும் அரிதான ஒன்று.....அவள் எங்களுடன் அழைத்துச் சென்றிருக்கப்பட வேண்டும்... தவறிவிட்டேன்......நான் அவள் விரும்பி இருந்தாலும் இல்லா விட்டாலும் அவளை வரும்படி அழைத்திருந்தால் அவள் என்னுடன் வந்திருப்பாள்....
நான் விரும்பவில்லையோ என நினைத்து விட்டாள்.....

குற்றமுள்ள நெஞ்சல்லவா ......தவித்துக்கொண்டிருந்தேன் 

தவறிழைத்ததால்....அப்படியே தூங்கிவிட்டேன்..... கண் மலர்ந்தது.....சாங்கி விமான நிலையத்தில் விமானம் தரை இறங்கியது. என் கைக் கடிகாரம் 3.15 எனக் காட்டியது. சிங்கப்பூர் மணியோ 5.45 எனக் காட்டியது.....
சிங்கப்பூர்வந்தடைந்தவர் செல்லவேண்டிய திசை.
இரண்டரை மணி நேர வித்தியாசம்...
எங்கள் பைகளை  எடுக்குமுன் பாஸ்போர்ட்டில் சீல் வைக்க வேண்டும்.... நாங்கள் அதற்குமுன் ஒரு DISEMBARKATION/EMBARKATION form-ஐ  வாங்கி பூர்த்தி செய்தோம்....
அந்த பார்மில் உள்ள வாசகம் : WARNING
                                     DEATH FOR DRUG TRAFFICKERS UNDER SINGAPORE LAW ....சிவப்பு எழுத்துக்கள்.....
20,000 சிங்கப்பூர் டாலருக்கு அதிகமாக கையில் வைத்திருந்தால் ஒரு ஃபார்மில் எழுதிக் கொடுக்க வேண்டும்...இந்த இரண்டு தகவலடங்கிய பகுதியை கிழித்து எம்மிடமே தந்து விட்டார்கள்...அதனைப் பாதுகாப்பாக வைத்து நம் நாடு திரும்புகின்ற பொழுதில் அதனைக் காண்பிக்க வேண்டும்...

பைகளை வாங்கி வாசலுக்கு வந்தோம்,,,அங்கே எங்களுக்காக காத்திருந்தார் மணி.(குமாரசுவாமி).அதன் பிறகு விரைவாக நகர்ந்து சென்று கொண்டிருந்த மக்கள் வரிசையில் நாங்களும்
சேர்ந்து நகர்ந்தோம்.....

வெளியே  டாக்சி வர வர ஏறிச் சென்று கொண்டிருந்தார்கள்....எங்களுக்கும் அதுபோன்று டாக்சி வந்தது..... அதில் ஏறிப்பயணித்தோம்.....இருள் பிரியும் நேரம் நெருங்க நெருங்க சிங்கப்பூர் நகரம்  சிங்காரமாய் காட்சி அளிக்கத் தொடங்கியது..... பட்டிக்காட்டான் பார்வையாய் என் பார்வை இருந்தது என்று சொன்னால் அதுதான் உண்மை....
சாலையில் பயணித்த கார் பூமிக்கடியில் உள்ள சாலையிலும்  பயணம் செய்தபோது மணி சொன்னது மிகவும் வியப்பாக இருந்தது....அது கடலோரச் சுவர் என்றும் அதன் மறுபக்கம் கடல் என்றும் அறிந்து கொண்டோம்.............
டாக்சி ஹோட்டல் அமரா எதிர்புறம் உள்ள tanjong pagar plaza அருகில் நிற்க நாங்கள் மணியுடன் நடந்து சென்றோம். எட்டாம் தளத்தில் பத்தாவது வீடு.......

Thursday, December 11, 2014

சிங்கப்பூர் போவதற்கு முன் ........

மகாத்மாகாந்தி கனவு கண்ட தேசம் அவர் வாழ்ந்து மறைந்த நம் நாடு இல்லை. ஆனால் அவர் வாழ்ந்த ஆசியாவின் தென்கிழக்குப் பகுதியில் நான்கு பக்கமும் நீரால் சூழப்பட்ட சிங்கார நகர நாடு ஒன்று காந்தி விரும்பிய தேசமாய் திகழ்கிறது…… அங்கே நடுஇரவில் கூட  ஒரு பெண் தன்னந்தனியாய் சாலைகளில் எங்கு வேண்டுமானாலும் போய்வரலாம். மன உளச்சலின்றி, எந்த விதமான பயமுமின்றி வெளியே செல்லலாம்…
முதியவர்களையும்  மதிக்கும் மக்கள் வாழும் ஒரு தேசம். தேசத்தை நேசிக்கும் மக்கள்……
போகுமுன் அந்தநாட்டைப்பற்றிய தகவல்களை பல தொடர்புகளால் அறிந்து கொள்ள முன்றேன்…. அறிந்ததனால்
மகாத்மா காந்தி என் மனத்திரையில் பொக்கைவாயால் சிரித்துக் கொண்டிருந்தார்….
.
எதற்கு இந்தப் பீடிகை…..  ஆசை….வெளிநாடு ஒன்று காணவேண்டும்………. வெளிநாட்டுவிமானத்தில் பயணம் செய்ய வேண்டும்……….இதுபோன்ற எண்ணம் இருந்தால்…….இயன்றால் போய் காணவேண்டிய நாடுகளில் முதன்மையானது சிங்கப்பூர் என்பது தான் அதற்கு காரணம்..

சிங்கப்பூர் நாடா?   நகரமா?...... நகரம் என்றும் சொல்லலாம். நாடு என்றும் சொல்லலாம். ஆம் அது ஒரு நகர நாடு. நகரமயம் ஆன நாடு.சிங்கப்பூர் குடியரசு (The Republic of Singapore)

திருவந்தபுரத்தில் இருந்து நாலரை மணி வான்வழிப் பயணநேர தூரத்தில் உள்ளது  ஒரு தீவு . அதுதான் சிங்கப்பூர் .

மலேசியாவின் தென்பக்கமுள்ள இந்த தீவை அதனிடம் இருந்து பிரிப்பது நீர்ப்பரப்பு (ஜொகூர் நீர்ச்சந்தி)…….சிங்கப்பூரை அடுத்துள்ள தீவு இந்தோனேசியா……..
1945-ல் சிங்கப்பூர் ஆங்கிலேயர்களின் கீழ் இருந்து.1963-ல் மலேசியாவுடன் இணைந்து இருந்து……. 1965ல் மலேசியாவில் இருந்து பிரிந்து தனிநாடானது……இன்று அந்த நாட்டின் மக்கள் தொகை 54 லட்சம்.சார்க் நாடுகளில் ஒன்றான சிங்கப்பூரின் ஆட்சி மொழிகளில் தமிழும் ஒன்று..மிகச்சிறியநாடாக இருந்தாலும் தனி நபர் வருமானத்தில் சிறந்ததாக உலகத்தில் மூன்றாம் தர நாடாக உள்ளது..... முதல் பிரதமர்  லீ குவான் யூ.....இன்றைய சிங்கப்பூர் செல்வோர் வியக்கும் வண்ணம் இருக்கக் காரணமாய் இருந்தவர்....இன்று அவரது மகன் பிரதமராக இருக்கிறார்.
சுத்தம் என்றால் நினைவுக்கு வருவது அந்த நாட்டு சாலைகள்......சோலையாக ......பசுமையாக..... சுத்தமாக  விளங்கும் ஒரு உன்னத நாடு.. குறைந்த குற்றமே(LOW CRIME) கொண்டநாடு.... இவற்றுக்கெல்லாம் காரணம் சட்டங்களும் தண்டனைகளும் மிக மிகக் கடுமையானவை….கொற்றவன் மகன் குற்றம் செய்தாலும் அது குற்றமே.. தண்டனையிலிருந்து தப்புவதென்பது நடைமுறையில் இதுவரை இல்லாத ஒன்று.

சுய ஒழுக்கம் உடைய மக்கள் அந்நாட்டு மக்கள்….

நானும் என் உறவினர் திரு ராசப்பன் அவர்களுடன் சிங்கப்பூர் சென்று வந்தேன்……டிசம்பர் மாதம் 15ஆம் தேதி தொடங்கி 23-ல் முடிந்த ஒரு அருமையான வெளிநாட்டுப் பயணம்..... வாழும்நாட்களில் அதனையே அசைபோட்டுக் கொண்டே பொழுதினைப் போக்கலாம்…..

நான் பார்த்தது…….வியந்தது……உணர்ந்தது……பதிவு செய்யப்படவேண்டியவைகள் என்பதால் தொடர்ந்து எழுதுவேன்………