Wednesday, September 26, 2012

எழுபதில் எழுதிய ஒரு கடிதம்

காலமெலாம் கரைக்காணாக் கடலிலே
கழித்திடும் மீனவன் தன் வாழ்விலுமோர்
களிப்புணர்ச்சி உண்டென்பது உண்மை
அந்தத் தொழில் செய்வோன் அடையும் ஆனந்தம் கூட
எந்தன் உள்ளத்தில் இல்லையே நண்பா !

வரும் வரும்  இன்னும் சில நாளிலே
தரவும் செய்யும் நல்லதொரு பலனை
என்றெண்ணியபடி அஞ்சலகம் சென்று
என்றும் நின்றிருப்பேன் ஓலைதனை எதிர்நோக்கி
இது நாள் வரை வந்திடவும் இல்லை
அது ஒரு நாளும் வாராதோ  என எண்ணியே
ஒதுங்கி ஓய்ந்தும் போய் விட்டேன் நண்பா

உன் கவித்துவ கடிதம் கண்டேன்
கவியெழுத ஒரு கண்ணதாசன்  தான் என்றிருந்த
புவிதனில் அந்நிலைமை தனை மாற்றிடவே  வந்துதித்த
பொன்னன் நானுட்பட ராம தனத்தோடு வேதா நீயும்
சேர்ந்ததை எண்ணித் தமிழ்த் தாய் மகிழ்கின்றாள்

சோதனை எனக்கு வேதனை அப்பாவுக்கு
எதனால்  மேலும் படிக்க முடியவில்லை
படித்திட துடித்தாலும் மனதிலேன்னவோ
மடியாய் இருக்கு பயமாவும் இருக்கு
பெற்ற வயிறும் பெற்றவன் முகமும்
வாடிடுவதால் படிப்பெனும் பெருஞ்சுமையை
மறுபடியும் சுமக்க இருக்கின்றேன்

வருத்தம் என் நெஞ்சில் ..... வருமா எனக்கு படித்தம்
வகுத்தவன் வழி காட்டுவான் .... வருவேன் அப்போது
விழித்திருப்பேன் ....மறுமுறை வீழ மாட்டேன்.....
உன் விழியும் என்னைக் காக்கும் என்பதால்
உன்னிடமே வருவேன் நான்.


இந்த வரிகள் என் நண்பன் ஆலப்புழையில் இருக்கும்போது  நான் எழுதிய கடித வரிகள். முதல் ஆண்டு தேர்வு எழுதாமல் ஆலப்புழையில் இருந்து ஊருக்கு வந்தபின்  அவனுக்கு எழுதிய கடிதம். அவன் பெயர்  வேதாசலம்  .வங்கியில் வேலை பார்த்தவன் .... மற்ற நண்பன்கள் ராமநாதன்,தனம் மருத்தவர்கள்.

Tuesday, September 11, 2012

நட்புக்கும் உறவுக்கும் இடையே இன்னோர் ‘ஒன்று’

நான்கு நாட்கள் நகர்ந்து விட்டன நண்பனவன் போய்.  என் மனதினை விட்டு அகலாமல் இன்றும் என்னோடு பேசிக் கொண்டிருக்கிறானே!.என் காதுகளில் அவன் குரல் ஒலித்துக் கொண்டிருக்கிறதே! அவனது புகழ் பற்றிப் பேசும்போதெல்லாம் நாக்கு தடுமாறுகின்றதே!

அவர் பிறப்பால் இந்து பிராமணன். அந்த நாளில்... இறுதி ஊர்வலத்தில்..... பார்த்தால்....அவரது உறவினர்கள் அதிகம் பேர் இல்லை. அத்தனை பேரும் நண்பர்களே. முஸ்லீம் நண்பர்கள் காலத்தால் செய்ய வேண்டிய உதவிகளை செய்து கொண்டிருந்தனர்.

யாருமே... மனைவியோ மக்களோ பக்கத்தில் இல்லாத நிலையில் மூன்று தினங்கள் அவருடைய உயிர் நீங்கிய உடலைப் பாதுகாக்க முயற்சிகள் செய்தது அவரது நண்பர்களே.

கண்ணீரோடு காணப்பட்ட பிரபலமான டாக்டர்....... இரண்டு கைகளையே இழந்துவிட்டதாய் புலம்பிய ,பூனாவில் இருந்து பறந்து வந்த கிறிஸ்தவ நண்பர் சுந்தர்,.....எழுதிக் கொண்டே போகலாம்.

காடுவரை யாரோ ? -இந்தக் கேள்விக்கு பதில் நண்பர்கள் என்றும் சேர்த்துக் கொள்ளலாம்.

சுடுகாட்டில் தகனத்திற்கு முன் நண்பர்களும் உடலின் மீது அரிசி போட அழைக்கப் பட்டனர். இதனை இதற்கும் முன் எங்கும் பார்த்ததில்லை. நாங்கள் சிலரும் அந்த மரியாதை செய்யும் வாய்ப்பை தவறவிடாமல் உள்ளே போய் சுற்றி வந்தோம்.

அங்கு அந்த இடத்தில் ஓரமாய் இருந்த ,சடங்கைச் செய்து கொண்டிருந்த பிராமண வாத்தியார் ஏதோ புரியும்படியான மந்திரம் சொல்வது போல் இருக்கிறதே.... காதில் விழுவது மந்திரமா.... “ வித்யா சாகர் நல்லவர்.... அவருக்கு ஜாதிமதமே கிடையாது. எல்லோருக்குமே உதவி செய்பவர்...இப்படி ஒரு ஆளைப் பார்க்கவே முடியாது......” தொடர்ந்து நிறுத்தாமல் மந்திரம் போல் சொல்லிக் கொண்டே இருந்தார்.

இவை எல்லாமே புதியதாகவே இருந்தன.


வைரவிழா இரண்டாம் நாள் இறுதி நிகழ்ச்சியில்  எனது கையில் கேமராவுடன், இருந்த இடத்தில் இருந்தே மேடையில் நடை பெற்றுக் கொண்டிருந்த நிகழ்வுகளை நான் கேமராவில் பதிவு செய்து கொண்டிருந்தேன். ஒரு குரல், “ பொன்னப்பா......” கேட்டு எனது இடது பக்கம் திரும்பிப் பார்த்தேன். ராமகிருஷ்ணன்,ஆறுமுகப்பெருமாள் இருவருக்கும் இடையே வித்யாசாகர்... சிரித்த முகத்துடன் வித்யாசாகர்.... அதனையும் பதிவு செய்து கொண்டேன்.  பிரிந்து போவாரென யார் அறிவார் ? அதுதான் அவரது இறுதிப் படம் ....  அந்தப் படம்தனை பதிவு செய்து எழுதிய பிளாகில் அழகான முகம் கண்டு என் கண்கள் இன்றும் பனிக்கிறதே!

எத்தனையோ பேர் எனை விட்டுப் போனவர்கள் உண்டு. அவர்கள் மறைவு பாதித்ததுவும் உண்டு. வருத்தியதுவும் உண்டு. ஆனால் வித்தியாசாகரின் மறைவு அப்படியல்ல....நண்பனவன் மரணச்செய்தி கேட்டு அவன் நண்பனும்  என் வீட்டுக்கு வந்து துக்கம் தந்த சுமையை இறக்கி வைக்க என்னிடம் அவன் புகழ் பாடிச் செல்வது புதியதே.

நட்புக்கும் உறவுக்கும் இடையே இன்னோர் ‘ ஒன்றும் ’இருக்கிறது. அதற்கு என்ன பெயர்......?

தாங்கும் மனது இன்றில்லை என்னிடம்.  அதனால் அவன் நினைவு எனை விட்டு அகன்றிட காலம் சற்று அதிகமாகும்....... இரயில் நட்பாய் இருந்திருக்கக் கூடாதா...?   வேண்டாம்..... நட்பு என்பது  அதுவல்ல.

என் நினைவில் தினமும் அவன் வந்து போகட்டும்.  கண்களில் இருக்கும்வரை; கன்னங்களில் வழியும் நீர் அவனுக்கு அஞ்சலியாக இருக்கட்டும்..... வற்றுவதற்கு அதென்ன பழையாறா ?

Saturday, September 8, 2012

தன்னந்தனியே தவிக்கும் புது அனுபவம்

"ஆருடம் யாரும் சொல்லவில்லை
ஆருயிர் தோழனாய் என் தந்தைக்கு பலம் சேர்த்த  நீவீரும் நொடிப்பொழுதில்
அவ்விடம் செல்வீர் என்று.
யாரிடம் சொல்லி அழ ?

இந்த பிரபஞ்சத்தின் அணுத் துகள்களில்  உங்கள்  ஆன்ம சுடர் பிரகாசிக்கும்
என்ற நம்பிக்கையுடன் தேற்றிக் கொள்ள முயல்கிறோம்
கண்கள் பனிக்க அந்த சுடரைத் தேடித் தவிக்கிறோம் .

வயது வித்தியாசமின்றி சின்னஞ்சிறுவனுடனும்
வாஞ்சையோடு  பேசுகிற போது நீவீர் வித்தியாச சாகரம்  ;எங்கள்
மனதுள் இனி வித்தியா சாகாவரம் ........"

மறைந்துவிட்ட எங்கள் குடும்ப நண்பர் பற்றிய
இந்த வரிகள் என் மகன் முருகனின் முகநூலில் பதிவு செய்யப்பட்ட வரிகள். 

இந்த வரிகள் மூலம் விசயம் அறிந்து இதனை எனக்குச் சொன்னது அவனது அண்ணன் என் மூத்த மகன். அவன் வெளிநாட்டில் இருந்து கொண்டு  தழு தழுத்த குரலில் அதிர்ச்சியுடன் என்னிடம் பேசும் போது இந்த வரிகளையும் சொல்ல முயல , அதனை அவனால் முழுவதுமாய் சொல்ல முடியாமல் திணறி குரல் உடைந்து சிதறியதை உணர்ந்து நானும் உடைந்து விட்டேன்.

என் மகள் தொலைபேசியில் சொன்னது: “ என்னை பிரசவ வலி வந்த போது வித்யாசாகர் மாமா அவரது காரில் ஹாஸ்பிட்டலுக்கு என்னை  அழைத்துக் கொண்டு போனது உனக்கு நினவில் இருக்கிறதா ?”

என் மகள் திருமண விழா மாலை விருந்தே அவர் முன்னின்று நடத்தியது தானே!

எனக்கு நணபனவன். அவனிடம் என் பிள்ளைகளுக்கு இத்தனை பாசமா !

என் பிள்ளைகள் அனைவராலுமே அன்புடன் மாமா என்றழைக்கப் பட்டவர். எனது அம்மாவின் காலைத்தொட்டு வணங்கியதும் அந்த நாளில் நான் அதிசயித்துப் போனதும் என் நினைவுக்கு வருகிறது. அவரது வேண்டுகோளுக்காக மட்டுமே அதனை  ஏற்று பாரதிராஜாவின் சினிமாப் படப்பிடிப்புக்காக ,என் வீட்டுக் களத்தை பயன்படுத்திக் கொள்ள அனுமதி கொடுத்த என அப்பா .... என் நினைவில் வந்து போகிறார்.  .

உதவி...... அதற்கு பொருத்தமான மனிதன் அவனே. இளகிய மனம் உண்டு. அப்படி ஒரு மனம் இனி இல்லை  என்பதால் இவரது இழப்பு பலரையும் அழவைக்கும்..... ஆம் இது உண்மை.

ராமச்சந்திரன் சார் அவரது ஆராய்ச்சிக்கு வழிகாட்டியவர்.... அழுது கொண்டே சாலை வழி போகிறார் மாணவர் மறைந்த செய்தி கேட்டு.....
என் வயது அறுபத்தைந்து ஆண்டுகள் நான்கு மாதங்கள். அவருக்கு 64 வயது. நானும் அவரும் ஒரே கல்லூரியின் ஆசிரிய நண்பர்கள்.

அவர் கே. வித்யாசாகர். இயற்பியல் ஆசிரியராகத் தன் பணிதனைத் தொடங்கி  வரலாற்றுதுறையில் பணிதனை முடித்தவர்.

மிகச் சிறந்த மேடைப் பேச்சாளர். ரோட்டரி மாவட்டச் செயலர்.என்.சி.சி மேஜர் . ஓய்வுக்குப் பின்னும் அவர் மேஜர்.

அவர்  புதனன்று இரவு ரோட்டரி கூட்டத்திற்கு போவதற்காக கல்லூரி நிர்வாக அலுவலகத்தின் மாடிப் படிக்கட்டு வழியே இறங்கிப் போய்க்கொண்டிருந்தார். அந்தச் சமயத்தில்  என்னிடம் ,“ பொன்னப்பா நான் போறேன்....” என சொல்லிவிட்டுப் போனார். அது தான் அவர் பேசியக் கடைசிப் பேச்சு.

அடுத்த நாள் அவர் இல்லை இந்த உலகில்.  கேள்விப்பட்ட உடன் அடைந்த மனவேதனை..... அந்த இடத்தின் அனைவரின் அமைதி.....

ஒரு நாளா....இரண்டு நாளா---- 39 ஆண்டுகள் பழகிய நட்பல்லவா அவரது நட்பு.  நட்புக்கு மரணமில்லை. நட்புக்கே இலக்கணம் படைத்த அவன் புகழுக்கேது மரணம் ?

வாஞ்சையோடு பழகும் குணம் கொண்ட; உதவி செய்வதைத் தன் மிக முக்கியமான குணமாகக் கொண்ட வித்தியாசமான மனிதர் அவர்.

தன் ஆணித்தரமான விவாதத்தில் தனியாளானாலும் துணிந்து சொல்வதில் அவருக்கு நிகர் அவரே. 

இந்துக் கல்லூரியை மிகவும் நேசித்தவர்;வரலாற்றுத் துறைக்கு தமது நூல்கள் அனைத்தையும் அளித்தவர். பத்து வருடங்களுக்கும் மேலாக கல்லூரி நிர்வாகத்தில் ஆசிரியர் என்ற முறையிலும் இயக்குனர் என்ற முறையிலும் பங்காற்றியவர்.

‘சாவே ! உனக்கு சாவே வராதா........ ”  (கண்ணதாசன் சொன்னது.)

அறிவுக் கடல், அன்புக்கடல் ......அதனால் அவர் பெயரில் சாகரம்.

இன்று அவர் பால் மிக மதிப்பும் அன்பும் கொண்ட என் மகன் முருகன் பதித்த வரிகளை என் மகன் தினேஷ் தொலைபேசியில் வாசித்து எனக்குச் சொன்னபோது, நேற்றும் இன்றும் தேங்கி நின்ற ,அடக்கி வைத்திருந்த கண்ணீர் விம்மலோடு பொட்டித்திறந்து சிதறியபோது நான் தனிமையில் எனது அறையில்.......
அந்த துளிகளே நண்பனுக்கு என் அஞ்சலி.
Posted by Picasa

சாவே ! நீ வீழ்வது எப்போது ?


என் வயது அறுபத்தைந்து ஆண்டுகள் நான்கு மாதங்கள். அவருக்கு 64 வயது. நானும் அவரும் ஒரே கல்லூரியின் ஆசிரிய நண்பர்கள்.

அவர் கே. வித்யாசாகர். இயற்பியல் ஆசிரியராகத் தன் பணிதனைத் தொடங்கி  வரலாற்றுதுறையில் பணிதனை முடித்தவர்.

அவர்  புதனன்று இரவு ரோட்டரி கூட்டத்திற்கு போவதற்காக கல்லூரி நிர்வாக அலுவலகத்தின் மாடிப் படிக்கட்டு வழியே இறங்கிப் போய்க்கொண்டிருந்தார். அந்தச் சமயத்தில்  என்னிடம் ,“ பொன்னப்பா நான் போறேன்....” என சொல்லிவிட்டுப் போனார். அது தான் அவர் பேசியக் கடைசிப் பேச்சு.

அடுத்த நாள் அவர் இல்லை இந்த உலகில்.  கேள்விப்பட்ட உடன் அடைந்த மனவேதனை..... அந்த இடத்தின் அனைவரின் அமைதி.....

ஒரு நாளா....இரண்டு நாளா---- 39 ஆண்டுகள் பழகிய நட்பல்லவா அவரது நட்பு.  நட்புக்கு மரணமில்லை.

வாஞ்சையோடு பழகும் குணம் கொண்ட; உதவி செய்வதைத் தன் மிக முக்கியமான குணமாகக் கொண்ட வித்தியாசமான மனிதர் அவர்.

தன் ஆணித்தரமான விவாதத்தில் தனியாளானாலும் துணிந்து சொல்வதில் அவருக்கு நிகர் அவரே. 

மிகச் சிறந்த மேடைப் பேச்சாளர். ரோட்டரி மாட்டச் செயலர்.என்.சி.சி மேஜர் . ஓய்வுக்குப் பின்னும் அவர் மேஜர்.

இந்துக் கல்லூரியை மிகவும் நேசித்த அவர் ,வரலாற்றுத் துறைக்கு தமது நூல்கள் அனைத்தையும் அளித்தவர். பத்து வருடங்களுக்கும் மேலாக கல்லூரி நிர்வாகத்தில் ஆசிரியர் என்ற முறையிலும் இயக்குனர் என்ற முறையிலும் பங்காற்றியவர்.

‘சாவே ! உனக்கு சாவே வராதா........ ” கண்ணதாசன் சொன்னது .

அறிவுக் கடல், அன்புக்கடல் ......அதனால் அவர் பெயரில் சாகரம். ,இன்று அவர் பால் மிக மதிப்பும் அன்பும் கொண்ட என் மகன் முருகன் பதித்த வரிகளை என் மகன் தினேஷ் தொலைபேசியில் வாசித்து எனக்குச் சொன்னபோது, நேற்றும் இன்றும் தேங்கி நின்ற ,அடக்கி வைத்திருந்த கண்ணீர் விம்மலோடு பொட்டித்திறந்து சிதறியபோது நான் தனிமையில் எனது அறையில்.......அந்த துளிகளே நண்பனுக்கு என் அஞ்சலி.

Wednesday, September 5, 2012

இந்துக் கல்லூரியின் இனிய வைர விழா

மாதங்கள் சில மழை இல்லாத மாதங்களாக இருந்தால் மனிதன் அவதிப் படுவதும்  அதனை பற்றி அங்கலாய்ப்பதுவும்  பருவகால மாற்றத்தை அனுபவிக்கும் போதெல்லாம் நடக்கும் விஷயம். ஒரே வார்த்தைப் பிரயோகம்  தான். ஒவ்வொருதடவை வெயில்கொடுமையை உணரும் போதும்  அனைவரும் பேசுவது  " சேச்ச என்னா வெயில் .இந்த வருஷம் வெயில் கொஞ்சம் கூடுதல் தான் " ........

ஆனால் உண்மையிலேயே இந்த வருடம் வெயிலும் சற்று அதிகம் தான். மழை இல்லாமல் இருந்ததும் எங்கள் பகுதியில் உள்ளவர்களின் மனதையும் வாட்டி வதைத்தது . மழை  வேண்டும் என கடுக்கரைத் தம்பிரான் கோவிலில் பாயசம் வைப்பு எனும் பூஜையும் நடந்தது.  ஏனோ ! வருண பகவான்  கண்ணா மூச்சி  விளையாடிக்கொண்டே இருந்தார். வானத்தினை தினமும் ஏக்கத்துடன் பார்ப்பது அன்றாட வழக்கமாகி விட்டது

இந்த நிலையில் இந்துக்கல்லூரியில்  ஆகஸ்டு  மாதக் கடைசியில் 30,31 -ஆம் தேதிகளில்  வைர  விழா    நடத்தவேண்டும் என திட்டமிட்டு அதற்கான ஆரம்பக்கட்ட பணி தொடங்கியது. விழாவில் கலந்து கொள்ள பிரமுகர்களை அழைக்கும் பொருட்டு சென்னை சென்று திரும்பியவர்கள் தேதி மாற்றத்தோடு வந்தார்கள். செப்டம்பர் மாதம் ஒன்று, இரண்டு தேதிகளில் அதாவது சனி ஞாயிற்றுக் கிழமைகளில்   விழா   நடத்துவதென   தீர்மானிக்கப்பட்டது .

பலருக்கும் இந்த மாற்றம் சலிப்பையே ஏற்படுத்தியது.  காரணம்   அந்த இரண்டு நாள்களும் விடுமுறை நாட்கள் என்பதுவே

ஆகஸ்டு மாதம் விழாப்  பந்தல் --மிக அழகான  பிரமாண்டமான பந்தல் நிர்மாணிக்கப்பட்டது.  கலையரங்கில் நின்று பார்த்தால் கல்லூரி மைதானம் மிகப் பெரியதாக இருந்ததால் அந்தப் பெரிய பந்தல் சிறியதாக ஆனால் மிக அழகாக கண்களுக்குத் தெரிந்தது.

விழா நாள் நெருங்கிற்று . மழையும் சிணுங்க ஆரம்பித்தது .சின்னதாக ஆரம்பித்த மழை விழாவுக்கு முந்தின நாள் கொட்டித் தீர்த்தது. முன்னிரவிலும் மழை ஓயவில்லை. இது என்ன விளையாட்டுக்  கடவுளே என்று எல்லோருமே நொந்து போயினர். வர வேண்டும் மழை என ஏங்கிய மனம், மழையே போ...போ எனக் கதறியது . விடிந்தால் விழா ...... மைதானமே நீர்க்காடாகி விடுமே !  பதறிய மனத்தோடு அந்த இரவு போய் காலை மலர்ந்ததும் வீட்டின் வெளியே வந்து வானத்தை அண்ணாந்து பார்த்தேன். என் முகமும் மலர்ந்தது. நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான்   ஆனால் ஒருபோதும் கைவிட மாட்டான்  என்கிற சினிமா வசனம் ரீங்காரமிட்டு ஒலித்தது . சூரியன் சந்திரன் போல் குளுமையைத் தந்து கொண்டிருந்தான் . மழையை, சற்றே தள்ளி இரும் பிள்ளாய் ..... என்பிள்ளைகளை மன வேதனைப் படுத்தாதே ..... என்று சொன்னது யாராய் இருக்க முடியும் எங்கள் கல்லூரிப் பிள்ளையாரைத்தவிர .....

இரண்டு நாள் விழா மிக சிறப்பாய் முடிந்தது.

என்னைக் கவர்ந்தது  எது ? என்னையே கேட்டேன் ..... என்னைக் கவராதது எதுவுமே இல்லை. இது உண்மை.  நான் புகழ்ந்துரைத்தால்   அதற்கு வேறு அர்த்தம் கற்பிக்கப்படும்... அதனால் மற்றவர்கள் என்னிடம் கூறியதையும் பதிவு செய்வது நல்லது என நினைக்கிறேன்.

காலையில் கல்லூரிக்குள் நான் வந்ததும் ,என்னை அறியாமல் விநாயகர் கோவில் சென்று வணங்கி பின் விழா நடக்கும் மேடையழகை ரசித்து மேடையில் நின்ற வாறே  ஆளில்லா அரங்கத்தின் அழகை ரசித்து படமும் பிடித்து மகிழ்ந்தேன். வைரவிழாக் கட்டிடத்தில் பூஜை நடந்த விவரம் அறிந்து அங்கும் போய் ,அந்த உயரமான கட்டிடத்தில் நின்று கொண்டு மைதானத்தினை அரங்கத்தோடு இணைத்து படம் பிடித்தேன்.

சிங்கார் மேளம் முழங்கிக் கொண்டே இருந்தது. அமைச்சரும் அதிகாரியும் , தலைவர் ,முதல்வர் மற்றும் அனைவராலும் வரவேற்கப்பட்டனர். மேடைக்கு நேராகச் சென்றனர்.

கூட்டம் எங்கள் துணைத்தலைவர் திரு. கோபாலன் பாடிய தமிழ் வாழ்த்துடன் ஆரமபம் ஆனது.  முதல்வரின்  வரவேற்புரையும், பேராசிரியர் ஹரிஹரனின் விருந்தினர் அறிமுகப் பேச்சும் தெளிவாக இருந்தது..தலைவர் விளக்கமான தலைமையுரை ஆற்றினார். வைரவிழாக்கட்டிடம் அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது. உயர் கல்வித்துறைச் செயலாளர் தமது உரையில் அமைதி காக்கும் மாணவர் பற்றிக் குறிப்பிட்டு ஒரு குடும்ப விழாவில் தான் பங்கேற்பது போன்ற உணர்வுடன் இருப்பதாகக் குறிப்பிட்டார். சட்ட மன்ற உறுப்பினரின் உரை சற்று வித்தியாசமாக இருந்தாலும் ரசிக்கும்படியாகவே இருந்தது. செயலர் நன்றி கூற கூட்டம் முடிந்து விருந்து ஆரம்பம் ஆனது.

விருந்திற்குப் பின் கலை நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றது.


மாணவர் நலனும் நாம் பிறந்து வளர்ந்த நாடும்   நன்றாக இருக்கவேண்டும் என்ற  சிந்தனை கொண்ட ,கல்லூரி மீது  அதிக பற்று கொண்ட ஒரு  பொருளாதாரப்    பேராசிரியர்  சொன்னதை என் வரிகளில் எழுதுகிறேன் ...

இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் வைரவிழா கதாநாயகன்  இப்பொழுது தலைமையுரையாற்றுவார் என்று கூற, தலைவர்  தமது பேச்சினை  ஆரம்பிக்கும்போது ," கதாநாயகன்   மட்டுமே சோபித்தால் படம் சொதப்பிவிடும் . இங்கு எல்லோருமே கதாநாயகர்களே " என தெளிவாகச் சொன்னது மிகவும் ரசிக்கும் படியாக இருந்தது.

வருண பகவானுக்கு நன்றி என்று ஆரம்பித்து அத்தனை பேருக்கும் நன்றி கூறியதும் நன்றாக  இருந்தது. 

ஓய்வு  பெற்ற ஆசிரியர்களைக்  கௌரவிக்கும்  விதமாக  தலைவரே  தமது வயதினையும் பொருட்படுத்தாமல் மேடையில் இருந்து கீழே இறங்கி வந்து  நினைவுப்   பரிசைக் கொடுத்தது தம்மை மட்டுமல்ல  வந்திருந்த அனைவரையும்  மிக அதிகமாகவே நெகிழச் செய்து விட்டது.

மாணவர்களின் ஒழுக்கம் ,அவர்களின்  கலை நிகழ்ச்சிகள் , தேவராட்டம் அனைத்துமே தம்மை மகிழ்விக்க செய்ததாகவும் கூறினார். கல்லூரி   முதல்வரின் திறமையைப் பற்றியும் புகழ்ந்துரைத்தார் .

விருந்து உண்ண வந்தவர்களை அன்பாக உபசரித்தும் உணவு பருமாறியவர்களை வழிப்படுத்தலையும் செய்து கொண்டிருந்த கல்லூரிச் சங்க இயக்குனர்  திரு ஆறுமுகத்தின் சுறு சுறுப்பான அணுகுமுறையும்  வந்தவர்களின்   வயிறும் மனதும் நிரம்புவதாக இருந்தது.

இந்த விமர்சனங்களை எல்லாம் நான் எங்கள் கல்லூரித் தலைவர் திரு. ஆறுமுகம்பிள்ளையிடம்  சொன்னேன்.

அவர் சொன்னார். " நாம் வைரவிழா நடத்திட திட்டமிட்ட தேதியை ,அன்றே மாற்றியதும் கடவுள் தானே .......... "

அவன் அறியாததா... மழைவரும் தேதியினை அறிந்து , மாற்ற வைத்ததும்   தினமும்  காக்கும் விநாயகன்தானே .

இந்துக் கல்லூரியின் இனிய வைர விழா இறையருளால் இனிதாக முடிந்தது.

முதல்வர், ஆசிரியர்கள் , ஒடி ஓடி உழைத்த எங்கள் கல்லூரியின் பணியாளர்கள், மாணவர்கள்  என அனைவரின் பணிகளும் மிகவும் உயர்வாக இருந்தது .  இறையருள் அவர்கள் அனைவருக்கும் கிடைக்கவே
எனது வாழ்த்துக்கள் . இன்று ஆசிரியர் தினமல்லவா ........ அதனால் இந்த வாழ்த்து அவர்களுக்கு .