Friday, October 23, 2015

அரங்கேற்ற விழா ....துவரங்காடு ராஜா மண்டபத்தில் ....எனது உரை (22-10-15)

இந்த அரங்கத்தில் அமர்ந்திருக்கும் அன்புக்கினிய பெரியோர்களே, பெற்றோர்களே, 
எல்லோருக்கும் என் இனிய மாலை வணக்கம்.

இசை அறிவும், நடன அறிவும் இல்லா என்னை ஒரு பொருட்டாக மதித்து அழைத்து இந்த மேடையில் உங்கள் முன் நிற்க வைத்த அன்பு உள்ளங்களுக்கு முதன் முதலாக நன்றி ..

இந்த விழா…… சலங்கைபூஜை……அரங்கேற்றம்…..

சிந்துசுப்பிரமணி அவர்களின் முன்னேற்றத்தை பறைசாற்றிக் கொண்டிருக்கும் ஐந்தாவது சலங்கை பூஜை அரங்கேற்ற விழா..

முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் எங்கள் ஊர்த் திருவிழாவில் நான் ரசித்துக் கேட்டு மகிழ்ந்த இசை வில்லிசை. அந்த வில்லிசையை இயக்கிய கலைஞர் காட்டுப்புதூர் திரு நாகேந்திரன்.

அவர் வழிகாட்டுதலில் அவர் மகள் இசைப் பயணம் மேற்கொண்டு நடனம் கற்று , இன்று நடன ஆசிரியராக ஐந்து ஆண்டுகளாக இந்த நடனப் பள்ளியை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறார்….

ஒரு சின்ன குக்கிராமத்தில் பிறந்த சிந்து இன்று ஒரு சிறந்த நடன ஆசிரியர்.
சொல்வதற்கே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

தத்தித் தத்தி நடந்து வருகிறது சிறுகுழந்தை….. நடந்துவரும் அழகைப் பார்த்து ரசிக்கிறாள் அன்னை.   அன்னைக்கு அதுவே நடனம்….
நடன அசைவுகளும், பதிவுகளும் குழந்தைகளது காதுகளையும் ,மனதையும் மகிழ்விக்கின்றன. 
தாள கதியில் இருக்கும் நடன அசைவுகள் உடல் உறுப்புகளின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவி புரிகின்றன.
பாடலின் அர்த்ததை விட ஒலியின் அழகை ரசிப்பவர்கள் குழந்தைகள்
கற்றுக்கொடுத்தால் அந்தக் குழந்தைகளால்  ஐந்து வயதிற்குள்ளாகவே நடனமாடவும் பாடவும் முடியும்.

அவ்வாறு கற்றுக் கொடுத்தால் அவர்களது கல்விக்காலம்  மிகச்சிறப்பாய் அமையும் .

குழந்தைகளது ஞாபகத்திறனை வளர்க்க, அவர்களது உடல் ஆரோக்கியத்தினைப் பாதுகாக்க நடனம் மிகவும் உதவியாய் இருக்கும்.

நடன மயில் பட்டம் பெற்ற அன்பு சிந்து சுப்பிரமனியம் அவர்கள் மேலும் பட்டங்கள் பல பெற்று, அவர் நடத்திவரும் கிருஷா நாட்டியாலயா நடனப் பள்ளி சிறந்த பள்ளியாக திகழ்ந்திட எல்லாம் வல்ல , நடனக்கலையைத் தோற்றுவித்த சிதம்பர நடராஜனை வணங்கி ,வாழ்த்து கூறி, வாய்ப்பு தந்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்.

வணக்கம்.