Thursday, February 19, 2015

செப்பு மொழி பதினெட்டு உடைய பாரதமாதா சிந்தனையும் பதினெட்டுடையாள்

ஜாம்நகர்..... குஜராத்தில் ......இந்தியாவில் உள்ள ஒரு நகரம்.....ஜாம்நகர மாவட்டத் தலைநகர். மாநகராட்சி. இந்த நகருக்கு பழைய பெயர் ஒன்றுண்டு...நவநகர். இன்று இந்த நகரம் இந்தியாவின் எண்ணெய் நகரம்

குஜராத்தின் தலைநகரமான காந்திநகரில் இருந்து 340 கிலோ மீட் டர் தூரத்தில் இருக்கிறது. வடக்கே பாகிஸ்தான். மேற்கே அரபிக்கடல்.

ரிலையன்ஸ், எஸ்ஸார் எண்ணெய் நிறுவனங்கள் இங்குதான் உள்ளன.

ஜாம்நகர் வளர்ந்துவரும் ஒரு நகரம். இரு பெரும் எண்ணெய் நிறுவனங்கள் இருப்பதால் அப்பகுதி மிகவும் வளர்ந்து வருகிறது.மின்வெட்டு இல்லை


ஜாம்நகரில் பால் உற்பத்தி மிக மிக அதிகம். வெண்மைப்புரட்சி கண்ட குஜராத்தி ல் மக்கள் பசுக்களை,எருமை மாடுகளை அதிகமாய் வளர்த்து பால் வியாபாரம் செய்து மகிழ்வாய் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களை சந்திக்கும்போதெல்லாம் ‘ஜெய்கிருஷ்ணா’ என்று வணக்கம் சொல்வதற்குப் பதில் சொல்வார்கள்.
வெளியே சாலைகளில் மாடுகள் அங்கும் இயங்கும் தாறுமாறாக  அலைந்து திரிந்து கொண்டிருக்கும்….மாடுகளுக்கு தீவனமாய் புல் வாங்கிக் கொடுப்பது புண்ணியம் என்ற நம்பிக்கை அங்குள்ள மக்களுக்கு இருப்பதால் ஆங்காங்கே புல்கட்டுடன் வியாபாரிகள் இருப்பதையும் காணலாம்.

அவர்களுடைய உடை நம்மூர் வேட்டியல்ல…. பேண்ட்ஸ் என்றும் சொல்ல முடியாத வித்தியாசமான ஒண்ணு… தலைப்பாகை கட்டியிருப்பார்கள்….
உடை அநேகமாக வெள்ளைதான், லுங்கி அணிந்து யாரையும் காணவில்லை.

உணவும் வட இந்திய உணவு தான். ஹோட்டல்களில் தென் இந்திய உணவு கிடைக்கும்....  காசு சற்று கூடுதல். இங்கு எல்லா ஹோட்டல்களிலும் ருசியான மோர் கிடைக்கும். டீக்கடைகள் கூடுதலாக இருக்கு. ருசியான டீ ஐந்து ருபாய்க்கு கிடைக்கும். அளவு குறைவாகத் தான் இருக்கும்.( அடுப்பின் மீது கெட்டிலில் டீ இருக்கும். நம்மூர் போல உடனே போட்டுத் தருவதில்லை…)

நான் இருந்த இத்தனை நாட்களில் வெளியே செல்கையில் என்னைக் கவர்ந்த விசயம்.
எதிரே வருபவர்களில் பத்துக்கு எட்டுபேர் அதிக வயதுள்ளவர்களாகவே இருந்தனர்…. ஆங்காங்கே வயோதிகர்கள் மாலையில் நிழல் உள்ள இடங்களில் கூடியும், ஒரே வரிசையாகவும் அமர்ந்து மகிழ்வுடன் இருப்பதைக் கண்டேன்…..

சிறுவர் முதல் பெரியவர்கள் வரை பான் பராக் அல்லது பாக்கு மென்று துப்பிக் கொண்டே இருப்பார்கள்……யாரை பார்த்தாலும் கன்னம் உப்பியே இருக்கும்….வாயினுள் பாக்கு உந்திக்கொண்டே இருப்பதால்…..

சிகரெட்  கிடைக்கும். கடைகளில் இருக்கு. ஆனால் சாலையில் குடித்துக் கொண்டே வருவதைப் பார்க்கவே இல்லை. பலர் பீடி குடிக்கிறார்கள் .

காந்தி பிறந்த குஜராத் காந்தியின் மது மறுப்பு இங்குண்டு. இங்கு மட்டுமே உண்டு.அதிக விலை கொடுத்தால் கிடைக்கும்..... சனி ஞாயிறுகளில் தெற்கு பகுதியானப் பக்கத்து யூனியன் பிரதேசமான டையூ-க்குப் போய் மது அருந்துவதுண்டு…(நம்மூர் பாண்டிச்சேரி போல)

நாங்கள் வந்த ஜனுவரி பிற்பகுதியில் குளிர் அதிகம் குறைந்தது 8 செண்டி க்ரேட்… ஒருவாரம் ஆனது செட்டாக….

பெண்கள் தங்க ஆபரணங்கள் அணிந்து பார்க்கவில்லை….. அரசு பஸ் உண்டு .இரயில் நிலையம் உண்டு.
டீக்கடைகள் எதிலும் செய்தித் தாள் இல்லை…. சாலையோரக் கடைகளில் தினசரி இல்லை. பேப்பர் வேண்டுமெனில் பிளாட்பாரத்தில் காலையில் ஒரு குறிப்பிட்ட சமயத்தில் போய் வாங்கலாம். வீட்டிற்கு கொண்டு போடுவதுண்டு…..

அடுக்கு மாடிக் கட்டிடங்கள் வந்தவண்ணமாய் இருக்கின்றன.
எண்ணெய் நிறவனங்கள் வருகையால் ஆட்டோ, வீட்டு வாடகை மிக அதிகமாகி விட்டது.

ரெலையன்ஸ் கம்பெனியின் ஊழியர்களில் 2500 ஊழியர்கள் தங்க டவுண்ஷிப் உள்ளது. இந்தக் கம்பெனியின் உரிமையான நிலம்  மொத்தம் 7500 ஏக்கர். இப்பகுதி லண்டனின் மூன்றில் ஒரு பகுதி….
ரிஃபைனரியில் உபயோகத்தில் உள்ள அனைத்துக் குழாய்களை ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கி வைத்தால் ஒருமுனை இந்தியாவின் தென்முனையிலும் மறுமுனை வடமுனையிலும் இருக்குமாம்
80 சதவீத மக்கள் கல்வியறிவு உடையவர்கள்….ஆனாலும் ஆங்கிலத்தில் பேசுவதைக் காணமுடியவில்லை. இந்தியோ குஜராத்தியோ…….பேசும் மொழி.
ஒரு ஹோட்டலில் வித்தியாசமான அனுபவம் ஒன்று கண்டேன். இதுவரை எங்கும் காணாத அனுபவம். ஹோட்டலில் முதலில் ருபாய் கொடுத்து ஆயிரம் ருபாய் அல்லது ஐநூறு,….. கொடுத்து ஒரு கார்டு வாங்கணும். நாங்கள் வாங்கிய ஆயிரம் ருபாய் கார்டு…. அதனைக் கொண்டு போய் எந்த உணவு வேண்டுமோ....... தோசை எனில் அதற்கான கவுண்டரில்……சப்பாத்தி எனில் சப்பாத்திக் கவுண்டர்…. ஒவ்வொன்றிலும் போய் ஆர்டர் பண்ணணும்….அதற்கு கம்ப்யூட்டர் பில் தருவார்கள்…. எல்லா பில்களையும் கொடுத்து மீதிப் பணம் வாங்கணும்……. கூட்டம் அதிகம் இல்லாவிட்டால் நாம் தான் பிளேட்டை மேசைக்குக் கொண்டு போகணும்….

பாரதம்….. பல மாநிலங்கள்….கலாச்சார வேறுபாடு……..மொழி வேறுபாடு…..பல வேறுபாடுகள்…
செப்பு மொழி பதினெட்டு உடைய பாரதமாதா சிந்தனையும் பதினெட்டுடையாளாகவே இருக்கிறாள். ஒரே ஒரு சிந்தனை மட்டும் எல்லோர் உள்ளத்திலும் உள்ளது.  அது சட்டத்தை மீறுவது……
போக்குவரத்து விதிகள் மதிக்கப்படுவது குறைவே……

குஜராத்தை முஸ்லீம் மன்னர்கள் ஆண்டு வந்த காலம் 1411ல்.
1818ல் ப்ரட்டீஷ் கிழக்கு இந்தயக் கம்பெனி சூரத்தில் நுழைந்து ஆட்சி செய்தது.

1947-ல் சுதந்திர இந்தியாவில், சௌராஷ்ட்ரா, கச்சு பகுதி நீங்கலாக குஜராத்தின் அனைத்துப் பகுதியும் பம்பாய் மாநிலத்தின் பகுதியாக 1960 மே மாதம் ஒன்றாம் தேதி வரை இருந்தது.அதன்பிறகு பம்பாய் மகாராஷ்ட்ராவோடு இணந்தது. குஜராத் அஹமதாபாத்தை தலைநகரமாய் கொண்டு தனி மாநிலமானது. 1970 இல் தலைநகர் மாறியது.  புதிய தலைநகரம் காந்திநகர் ... இன்றும் அதுவே.....

தேர்தல் நடந்தபோது ஆர்ப்பாட்டம் எதுவுமே இல்லாமல் தேர்தல் நடந்ததாக அறிந்தேன் . ஜாம்நகர் பாராளுமன்ற தொகுதி  பா.ஜ.க விடம்….

இந்தியாவை ஒருங்கிணைத்த  இரும்புமனிதர் வல்லபாய் பட்டேல்  குஜராத்தில் பிறந்தவர்....

நமது இன்றையப் பிரதமர் குஜராத்தில் மூன்றுமுறை முதல் அமைச்சராக இருந்தவர்....

முக்கியமான ஒன்று.... மின்வெட்டு இல்லை......ஆச்சரியம்.....ஆனால் அதுவே உண்மை......  இதுவரை இலவசமாய் மக்கள் எதனையும் அரசிடம் இருந்து பெறவில்லை.

No comments:

Post a Comment