Sunday, May 10, 2015

அம்மா........தெய்வம்

மே மாதம் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினம்.....

இருக்கின்ற நாளில் இமையாய் இருப்பவள்


இல்லாத நாளில் இறையாய் இருப்பவள்


உருவாகும் போதுத் தங்கிட தன்னையே தருபவள்


உதிரத்தை உணவாய் தருபவள்


ஆல்போல் தழைத்திட அருகாய் அணைப்பவள்


ஊண் உறக்கமின்றி உறங்க வைப்பவள்


எருவாய் இருந்து உருவாக்குபவள்


ஏணியாய் உயர்த்துபவள்


உருவாக்கித் தருவாக்க ஓடாய் உழைப்பவள்


அன்பும் அரவணைப்பும் தருபவள்


ஒருத்தியாய் மட்டுமே இருப்பவள்


அவள் மட்டுமே அம்மா…..


அவள் மட்டுமே அன்னை….


தந்தையாய் இருப்பவள் அவள்….


அவளில்லாமல் எவனுமில்லை..


அணுவைத் கருவாய்த் தாங்கி


ஊனாய் அகிலம் காண தன்னைத் தந்த

தாயிற் சிறந்த இறையும் இல்லை……. 

Tuesday, May 5, 2015

காத்திருக்கிறேன்...... ஒரு நாள் சந்திப்பேன்......

கல்லூரியின் ஆட்சிகுழுக் கூட்டம் நடைபெற்ற நாள். நான் வழக்கம் போல் கூட்டம் நடக்கும் அரங்குக்குள் எல்லோரும் போய் அமர்ந்தபின்னால் நான் போய் சம்பிரதாய வணக்கம் கூறி அமர்ந்தேன். என்னருகே இடது பக்கம் இருந்தவர் திரு. ராமசாமி. அவர் என் முன்னாள் மாணவர். அவரது தந்தையார் திரு. சதாசிவன்பிள்ளை. பழகுவதற்கு இனியவர். அவர் கல்லூரி ஆட்சிக் குழுவில் பொறுப்பான பதவியில் இருந்த வேளையில் நான் கல்லூரியில் வேலைக்கு சேர்ந்தேன்.கணித ஆசிரியப் பணி.

வேலைக்கு விண்னப்பம் போட்ட பின் எனது  தந்தையின் அறிவுரையின் காரணமாக எல்லா ஆட்சிக்குழு உறுப்பினர்களையும் சந்தித்து வந்தேன்.

அனைவரும் அன்பாகப் பேசி அறிவுரை கூறினார்கள். திரு. ராமசாமியின் தந்தையாரையும் சந்திக்கச் சென்ற அந்த நாள் இன்றும் என் நினைவில் பசுமையாக நினைவிருக்குது.

அவர் வீட்டுக்குச் சென்றேன்.

அவர் வா என வரவேற்றார். ”என்ன விசயமாய் வந்திருக்க..... என்ன வேண்டும்...”

நான் யாரென்று தெரியாமலேயே அவர் பேசுகிறார் என்பதை உணர்ந்து கொண்ட நான் ,என்னை அறிமுகப் படுத்தினேன்.

முகம் மிகவும் பிரகாசமானது..... “ நீ கடுக்கரை ஆறும்பிள்ளப்பாக்கு மகனா ?
ஒங்க அண்ணன் மெய்க்கமும் நானும் சேந்து சுசீந்திரத்தில் படித்தோம்..... ஒங்க கணேச சின்னப்பாவும் நானும் குமரி மாவட்ட விவசாய சங்கத்தில்  பொறுப்பாளர்களாக இருக்கோம்.......”  சொல்லிவிட்டு அவர் அருகே என்னை அமரச்சொன்னார்.

நான் வந்த விசயம் பற்றி  சொன்னேன். அப்பாச் சொன்னா....அதனாலே பாக்க வந்தேன்......

அவர் சிரித்துக் கொண்டே ,” என்னை நீ இதுக்கேல்லாம் பாக்கணுமா ......”

”நீ  என் தம்பி...... என் வாழ்த்துக்கள் என்றும் உனக்கு உண்டு.....”

அநேகமாக அந்த நாட்களில் வயது குறைந்த DIRECTOR அவர்தான். இந்நாளில் அவர் மகன் ராமசாமி எங்கள் குழுவில் இளையவர்.

ராமசாமி பணிவும் அன்பும் கொண்டவர். காணும்பொழுதெல்லாம் மாணவராகவே நடந்து கொள்வதும் பேசுவதும் எனக்கு சங்கோஜமாக இருக்கிறது....  எனினும் அவர் முகம் கோண நான் எதுவும் எதிர்மறையாகச் சொல்ல முயன்றதில்லை.

அவர்,” உங்கள் பக்கத்தில் இருப்பதுவும் உங்களோடு உரையாடுவதும் எனக்கு மகிழ்ச்சியாய் இருக்கு ...........” சொல்லிக் கொண்டே இருந்தவர்......
பல நினைவுகளை பகிர்ந்து கொண்ட போது நானும் என் மனதுடன் பின்னோக்கிச் சென்றேன்.

ராமசாமியிடம் சொன்ன து :-

1985-க்குப் பின்னால் .......1989--க்கும் முன்னால் .... ஒரு நாள்  கணித வகுப்பில் நான்..... பிஸிக்ஸ்-கெமிஸ்ட்ரி மாணவர்கள்.... சற்றும் எதிர்பாராத விதமாக கண்ட காட்சி என்னைக் கோபமூட்டியது.....ஒரு மாணவன் இன்னொரு மாணவன் மீது இங்கை தன் பேனாவை உதறிக் கொட்டியதால் அவன் அணிந்திருந்த சட்டை அலங்கோலமானது.....

அடிப்பது போல் அவனருகே சென்றேன்..... அறிவு அடிப்பதை தவிர்த்தது.... மிகக் கடினமான வார்த்தைகளால் அர்ச்சனை செய்து வெளியே அனுப்பி விட்டேன்.

இதனையறிந்த என் துறைத்தலைவர் என்னை அழைத்து விவரம் கேட்டார்.
 அவர்..” அந்தப் பையன் யார் தெரியுமா ?...”

நான்,” தெரியும் ......... ஒரு  மாவட்ட பிரமுகர்..........பையன் தானே.... நன்றாகப் படிப்பவன்.... ஆனாலும்  செய்த தவறைப் பார்த்துச் சும்மா இருக்க முடியாதே....வைர ஊசி என்பதற்காகக் கண்ணில் குத்தவா முடியும்...”

மறுநாளே அந்தப் பையன் வந்து செய்த தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டான்.
காலம் மாறியது.... அவன் வகுப்பில் முதல் தர மதிப்பெண் பெற்று கல்லூரியை விட்டு வெளியே போகும்போது மிகவும் நட்புடன் பேசி விடைபெற்றான்.....

அவனுக்கு வங்கியில் வேலைக்கான நேர்முக சந்திப்புக்கான அழைப்பு கிடைத்து....... என் வீட்டுக்கு வந்து  விவரம் சொல்லி மகிழ்ந்தான்.

அவன் ,” சார் ! எனக்கு ஒரு காண்டக்ட் செர்டிஃபிக்கெட் நீங்க தரணும்....”

”நான் வேறு யாரிடமாவது வாங்கித் தருகிறேன். நீ நாளைக்கு கல்லூரிக்கு வா ...என்னிடம் லெட்டெர் பேட் கிடையாது..... ரப்பர் ஸ்டாம்ப் கிடையாது....”

அவன் “ நீங்கள் தான் சார் எனக்குத் தரணும்..... என் வாழ்நாளில் உங்களை என்னால் மறக்க முடியாது.... அன்று நீங்கள் அடித்த அடி என்னைத் திருத்தியது........ நானே எங்கள் துறைத் தலைவரிடம் கூட செர்டிஃபிக்கெட் வாங்க முடியும்..............வேறு யாரிடமும் வாங்க விரும்பவில்லை.........”

இரண்டு நாள் கழித்து வரச் சொன்னேன். அவன் விரும்பின படியே .......... கொடுத்தேன்.

சில நாட்கள் கழித்து வந்தான்..... அவன் கையில் வங்கி வேலைக்கான உத்தரவு...... நன்றி சொல்லி விட்டுப் போனான்.

சரியாக ஒரு வருடம் கழிந்தது.....அவனுடைய நண்பன் ஒருவன்.....அவன் வகுப்புத்தோழன் வந்தான்.....நன்றாகப் படித்தவன்....வசதி அதிகம் உள்ள செல்வாக்குள்ள ஒருவரின் மகன்........

இவனும் செர்டிஃபிக்கெட் கேட்க....... நானும் கொடுத்தேன்....
வேலை கிடைத்தது.......நன்றி சொல்லி விட்டுப் போனான்...

 அதன் பிறகு இது வரை.......இன்று வரை  இருவரையும் சந்திக்கவே இல்லை...
 காத்திருக்கிறேன்...... என்றாவது அவர்கள் வருவார்கள்.... அப்போது அவர்கள் பெயர்களை பகிரங்கமாக உரக்கச் சொல்வேன்.......