Friday, February 17, 2012

மாணவ சமுதாயம் பயன் பெற ஓடி ஓடி உழைக்கும் ஓய்வு பெற்ற ஆசிரியர்

கல்லூரிகளில் படிக்கும் போது பலதரப்பட்ட ஆசிரியர்களை ,அவர்களின் ஈடுபாட்டை கண்டு பிரமித்தது உண்டு .நான் கல்லூரியில் வேலை பார்க்கும் போதும் ஒரு சில மூத்த ஆசிரியர்கள் மாணவர் போற்றும் அளவுக்கு மதிப்புடன் விளங்கியதும் உண்டு  .

என்னைவிட வயது குறைந்த ஆசிரியர்கள் செய்யும் பணி மெச்சத்தகுந்ததாக இருந்தால் அவரைப் பற்றி மேலும் அறிய முற்படுவது என் இயல்பு .என்னைக் கவர்ந்த ஒருவர் ............... அவரைப் பற்றிய சில தகவல்கள் .......

ஒருநாள் என் வகுப்பின் வெளியே ஒரு பையன் ஓட அவன் பின்னால் அந்த ஆசிரியர் ஓடி அவனை சாலை வரை சென்று பிடித்து முதல்வர் முன்னால் கொண்டு போய் நிறுத்தி தண்டனை வாங்கிக் கொடுத்தார். என்ன காரணம்..? இவரது வகுப்பிற்கு வெளியே நின்று தொந்தரவு செய்து கொண்டிருந்தவனை அதுவும் வேறு வகுப்பு படிப்பவனைப் பிடித்துக் கொடுத்தார்......!

நானே அவரிடம் போய் கேட்டேன்.,” இதெல்லாம் தேவை தானா.......இப்படிக் கள்ளனை விரட்டும் போலீஸ் போல் நீங்களும் ஓடணுமா....?”.......

அவர்,” நம்ம க்ளாசில் படிக்கும் பையன்கள் நல்ல பையன்கள்... இவர்களில் ஒருவன் கூட இதுபோல் அந்தப் பயல் செய்வது போல் செய்து நாசமாகி விடக்கூடாதல்லவா .."..

கல்லூரியின் நன்மைக்காகவும்  General Discipline-க்காகவும் தான் அவனை விரட்டிப் பிடித்தேன்.......என்றும் சொன்னார் .

இது போல் பல தடவை நடந்ததுண்டு.....

அவரது வகுப்பில் படிக்கும் மாணவன் லெக்‌ஷ்மணனிடம் அவரைப் பற்றிக் கேட்டபோது
அவன் சொன்னது..." பாடம் மிகவும் தெளிவாகவும் ஆழமாகவும் சொல்லித்தருவார்......."

மேலும் பல.... அவரது பெருமைகளையெல்லாம் சொன்னான்

Laboratory-யில் சுற்றிச் சுற்றி வந்து எப்படி பரிசோதனை செய்யணும், தேவையில்லாமல் கெமிக்கல்ஸை வீணாக்கக் கூடாது...... தேவைக்கு அதிகமாக கெமிக்கல்ஸ் கேட்கக் கூடாது.....  இப்படியெல்லாம் மிகவும் நுட்பமாக கவனித்து கல்லூரிக்கு ஏற்படும் வீண்செலவைத் தவிர்த்து வந்தார்.......

அந்த ஆசிரியர் குறுகிய கால பயிற்சி ஒன்றுக்காக பூனா பல்கலைக்கழகத்துக்கு சென்றார்.அங்கு திறமையான ஆசிரியர்களின் நட்பு கிடைத்தது. அப்பொழுதே அவர்களின் திறமையை தான் பணி செய்யும் கல்லூரிக்கு பயன்படுத்த வேண்டும் என்ற திட்டத்தை மனதில் வைத்துக் கொண்டார்.

காலச் சக்கரம் உருண்டது. ஆசிரியப் பணியோடு ஓய்வு பெற வேண்டிய அவர் சூழ்நிலை காரணமாகத் துறைத்தலைவரானார்.

மாணவர்களுக்கும் தனது வேதியல்துறை ஆசிரியர்களுக்கும் பயன் படும் ஒரு செமினார் நடத்த வேண்டும் என திட்டமிட்டு, பூனா பல்கலைக் கழகப்
 பேராசிரியரோடு தொடர்பு கொண்டு பேசினார்.

பூனா பல்கலைகழக வேதியல்துறை ஆசிரியர்கள் தான் இந்தியாவிலேயே முதன் முதலாக வேதியல் பரிசோதனைக்கு ஆகும் அதிகச்  செலவினால் ஏற்படும் நிதிச்சுமையை மாற்றும் முயற்சியில் இறங்கினார்கள்.

எப்படி நிதிச்சுமை குறையும்......? ஒரு சின்ன விளக்கம்:-

100 மில்லி கிராம் வேதிப் பொருள் எடுத்து அல்லது 20 சொட்டு திரவப் பொருள் எடுத்துதான்  பொதுவாக ஒரு பரிசோதனையை  செய்வார்கள்.

ஆனால் ஆராய்ச்சி செய்து பார்த்ததில்,அந்த அளவு வேதிபொருள் தேவையில்லை... 5 முதல் 10 மில்லிகிராம் பொருள் அல்லது ஒரு சொட்டு திரவம் தான் உண்மையிலேயே பரிசோதனைக்கு தேவை என்பதைக் கண்டு கொண்டனர்.

இந்த முறையில் பரிசோதனை செய்வதால் எந்த விதமான தவறும் இல்லை ,தரமும் குறைவதில்லை.

செலவு குறைவு என்பது ஒரு நன்மை தான் என்றாலும் இந்த முறையில் செய்யும் பரிசோதனையால் வேறு பல நன்மைகளும் உண்டு.

அதிக நச்சு வாயுக்கள் வெளியேறுவதில்லை...இதனால் சுற்றுச் சூழல் அதிக அளவில் மாசுபடுவது தவிர்க்கப்படுகிறது...பரிசோதனை செய்ய அதிக நேரம் ஆகாது ....மிக எளிதாக செய்து கிடைக்கும் முடிவின் தரமும் நிரந்தரம் என்பதால் இந்தப் பரிசோதனை முறையை தெ.தி.இந்துக்கல்லூரி  உட்பட தென் மாநில ஆசிரியர்களும் பயிற்சி பெறவேண்டும் என எண்ணினார்  துறைத்தலைவர்.

அவரது முயற்சிக்கு கல்லூரி நிர்வாகத் தலைவரும் முதல்வரும் துணையாக இருந்தனர்......

குறைவான செலவு,பரிசோதனை செய்யும் மாணவர்களின் உடல் நலம் பேணப்படும் என்பதனை குறிக்கோளாகக் கொண்டு 2011  பெப்ருவரி    மாதம் தேசிய அளவிலான நுண்ணிய அளவிலான  வேதியியல் பரிசோதனை செய்யும் பயிற்சிக்கான ஒரு முகாம் நடந்தது.

 3 நாட்கள் மிகவும் பயனுள்ள இந்த Work shop இந்துக்கல்லூரியில் வெற்றிகரமாக நடந்து முடிந்தன....

This National Level Workshop sponsored by University Grants  Commission  was organised by the Department of Chemistry,S.T.Hindu College in collabration with  the Department of Chemistry, University of Pune.

இது போன்ற ஒரு பயன்பெறத்தக்க பயிற்சி முகாம் இந்தத் துறையில் நடந்தது இதுதான் முதல் முறை.

இத்தகு பெருமையான பல காரியங்களைச் செய்து முடித்து ஓய்வு பெற்ற ஆசிரியரை......... பேராசிரியர் முருகன் சாரை அவரது வீட்டில் சென்று பார்த்து  அவரிடம் பேசிக்கொண்டிருந்தேன்.

கண்டிப்பும் கனிவும் கொண்ட அவர் ஓய்வு பெற்றதால் சோர்வாய் இருப்பாரோ என்று நினைத்தேன். ஆனால் அவர் மிகவும் மகிழ்ச்சியாய் காணப்பட்டார்.

"ஒய்வு பெற்றவர்களை ஏற்றுக் கொள்ளும் முதியோர் இல்லங்களாய் செயல் படும் பல கல்லூரிகள் நம் நாட்டில் உண்டுமே.  அதுபோல் நீங்களும் எங்காவது .....என்று கேட்க நினைத்ததைப் புரிந்து கொண்டு

 அவர்,” ஆண்டவன் கிருபையால் அதிக வருடங்கள் ஆசிரியராக பணி செய்து நான் ஓய்வு பெற்றது எனக்கு  மிகத் திருப்தியாய் இருக்கிறது ,

 பஞ்சபூத மருத்துவம் மூலம் சேவை செய்ய நினைத்துள்ளேன்.

    நம்ம காலேஜ்ல நடந்த ஒர்க் சாப் -ல் கிடைத்த அறிவை தமிழ் நாட்டில் உள்ள அனைத்துக் கல்லூரிகளுக்கும் பயன்படச் செய்யணும்.........” என்றார்.

அவர் நினைத்த பயன் தரும் பணியை இன்றும் செய்து கொண்டு வருகிறார்.

தென் இந்தியாவில் நுண்ணிய அளவிலான பரிசோதனை செய்வதைப் பிரபல        படுத்தியவர் பேராசிரியர் சு.முருகன் என்றால் அது மிகை அல்ல.அவர் தான் முன்னோடி .........

கேரளாவில் இருந்தும், கர்னாடகாவில் இருந்தும் பேராசிரியர்கள் இந்த வொர்க் ஷாப்பில் கலந்து கொண்டனர்.

தமிழ் நாட்டில் உள்ள பல கல்லூரி ஆசிரியர்கள் அந்த வொர்க் ஷாப் -ல் கலந்து கொண்டதால் அதன் பயனை, பங்கு கொள்ளாத மற்ற கல்லூரி ஆசிரியர்களும் அறிந்து பேராசிரியர்  முருகனை அணுகி தங்கள் கல்லூரிக்கு வந்து விளக்கமாக பேசும்படி அழைத்தனர்.

ஓய்வு பெற்ற பின் அவ்வாறு பேச போன கல்லூரிகளின் எண்ணிக்கை 25 .

சென்னையில் லயோலா கல்லூரி,வைஷ்ணவா கல்லூரி ,ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி , திருச்சியில் பெரியார் ஈ .வே.ரா கல்லூரி , சீதாலக்‌ஷ்மி ராமசாமிக் கல்லூரி ,மதுரையில் பாத்திமா கல்லூரி ,மீனாட்சி கல்லூரி, பூண்டி புஷ்பம் கல்லூரி ,.........பல கல்லூரிகளுக்குச் சென்று உரையாற்றியும் பரிசோதனைகளை செய்தும் காட்டியதால் திருப்தி அடைந்த அந்தக் கல்லூரிகள் இப்பொழுது பின்பற்றி வருகின்றன .

 மேலும்  பல கல்லூரிகளுக்கும் போக தயாராய் இருக்கிறார்.

காந்திகிராம் ரூரல் பல்கலைகழகத்துக்கும் சென்று   உரையாற்றினார் .

மிகவும் தன்னடக்கம் உள்ள முருகன் சார் அவராகவே கடிதம் எழுதியும் பல கல்லூரிக்கு போய் உரையாற்றுகிறார்.

சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் முருகன் சாரை நாடினால் அவர் ஓடிப்போய் அந்தக் கல்லூரிக்கு பயன்தரும் அளவுக்கு நுண்ணிய அளவிலான பரிசோதனையை சொல்லிக் கொடுக்கிறார்.

இவராகவே கல்லூரியை தேடியும் போகிறார்..........

தென் இந்தியா முழுவதும் இந்த பரிசோதனையை பரப்பி மாணவ சமுதாயமும் ஆசிரியர்களும் பயன் பட வேண்டும் என்பது தான் இவரது கனவு.

அவரது நியாயமான இந்த கனவு நனவாகட்டும் ........ வாழ்த்துக்கள் .


For any clarification you may contact him. 
His Mobile no: 09443313526. land line no:04652260342.

e-mail: mgansthc@gmail.com


மாணவ சமுதாயம் பயன் பெற ஓடி ஓடி உழைக்கும் ஓய்வு பெற்ற ஆசிரியர் 
முருகன் அவர்களின் விலாசம் :- 124 (2F /25 ) , "வசந்தம் ", அணஞ்சபெருமாள் சாலை ,நியு கவிமணி காலனி ,பொன்னப்பநாடார் நகர், 
நாகர்கோவில் -629004.  





பேராசிரியர் முருகன் இன்று (19-02-2012) பூனாவுக்குப் புறப்பட்டுப் போகிறார். மேலும் நுண்ணிய பரிசோதனை ( for Physical Chemistry) -பூனா பல்கலைகழகம்  நடத்தும் இரண்டு நாள் -செயல் முறை வகுப்பில் கலந்து மேலும் அறிவு பெற 
தனது சொந்தச்செலவில் போகிறார். தென் மாநில கல்லூரிகளுக்கு இந்த சுற்று 

சூழல் பாதுகாப்பு தரும் பரிசோதனை முறையை பரப்ப வேண்டும் என்ற பரந்த மனப்பான்மையோடு ஒய்வு பெற்ற பின்னும் படித்துக் கொண்டே இருக்கிறார்.

Tuesday, February 14, 2012

மருந்தில்லா மருத்துவம் கண்ட முருகன்



எனது நண்பர் ஒருவர் தெ.தி .இந்துக் கல்லூரியில் வேதியல் துறைத் தலைவராக வேலை பார்த்து சமீபத்தில் ஓய்வு பெற்றார் . அவரின் பெயரை ஆசிரியரின் மறுபெயர் என்று சொல்லும் அளவுக்கு ஒரு சிறந்த மனித நேயம் கொண்ட ஆசிரியர்.
தனது பணிக்காலங்களில் வாடிய முகம் கொண்ட மாணவரைத் தேடிப் போய் உதவி செய்த நல்லவர் இவர்.ஆசிரியர் பதவிக்கே பெருமை சேர்த்த இவரை எப்படிப் புகழ்வது என்றே எனக்குத் தெரியவில்லை.
இவரது பணிக்காலம் 2010 ஜூன் மாதம் முடிவடைந்தது .சட்டப்படி அவர் 2011 மே மாதம் வரை வேலை பார்க்கலாம் .ஆனால் போதும் என்ற மனமே பொன்செய்யும் மருந்து என எண்ணி பதவி நீட்டிப்பு வேண்டாம் என முடிவெடுத்தார்.

இவரது சேவை ,கல்லூரிக்குத் தேவை என உணர்ந்து அவரை நியமப்படி தொடர்ந்து வேலை பார்க்கசொன்னார்கள் . இப்படி கல்லூரி நிர்வாகம் ஒருவரைக் கேட்டது இது தான் முதல் தடவை .........

இப்படிப்பட்ட ஒரு மனிதருக்கு அவரது வாழ்க்கையில் ஒரு துன்பம் வந்தது. ஒருநாள்(15- 5-2005)  அவருக்கு முகத்தில் paralysis  வந்தது ,ஆங்கில மருத்துவம் பார்த்து சிறிது குணம் அடைந்தார் .இருப்பினும் முகம் முதலில் இருந்தது போல் இல்லாததால் மன உளைச்சலுக்கு ஆளானார்.

அவரது உறவினர்களில் ஒருவரின் ஆலோசனைப்படி பஞ்சபூத மருத்துவர் இருந்த சேலத்துக்குப் போய் அவரிடம் சிகிச்சை பெற்றார் . அந்த மருத்துவர்  இவருக்கு எந்தவிதமான மாத்திரையோ மருந்தோ எதுவும் கொடுக்காமல் ACU PRESSURE  சிகிச்சை மூலம் மருத்துவம் பார்த்தார். ஏற்கனவே வாயில் இருந்த புண்  ,அதனால் உண்டான தொந்தரவு எல்லாமே மறைந்தன . மூன்று பல்களை பிடுங்க வேண்டிய நிலையில் இருந்த பல்லும் சரியாகி விட்டது.

வீடு திரும்பிய அவர் மனதில் படித்த நாமே மருந்து சாப்பிட்டு பக்க விளைவுகளுக்கு ஆளாகிறோமே..........மருந்தில்லா மருத்துவத்தை நாம் படித்தால் என்ன .......... சிந்திக்க ஆரம்பித்தார்.........

யார் இவருக்கு மருத்துவம் பார்த்தாரோ அவரையே குருவாக எண்ணி அவரிடமே படித்து பஞ்ச பூத மருத்துவரானார். இன்று அவர் ஒரு சிறந்த மருத்துவர். கட்டணம் வாங்காத மருத்துவர். தான் பெற்ற சுகத்தை இவ்வையகம்
பெறட்டும் என்று மனிதன் பால் அக்கறை கொண்டு மாத்திரமே இதனை இரண்டு
இலட்சம் ரூபாய் செலவு செய்து படித்து முடித்தார்.

அவர்தான் பொன்னப்ப நாடார் காலனியில் இருக்கும் பேராசிரியர் முருகன் இவர்தான் மருந்தில்லா மருத்துவம் கண்ட முருகன்.


you may visit the blog of Prof.Dr.S.Murugan.:-http://www.muruganshealthtips.blogspot.in/

Monday, February 13, 2012

ஊர் மக்களால் போற்றப்பட்ட அன்னை

Posted by Picasa
    மருங்கூர் பெரியவர் தாணுமாலயப்பெருமாளின்  மனைவியின் திரு உருவப்படத்தை பஞ்சாயத்து அலுவலகத்தில் திறந்து வைத்த நிகழ்ச்சியை மகன் தாணப்பன் அவர்களுக்கு அறிவிக்க பஞ்சாயத்து நிர்வாகம் எழுதிய கடிதம்.

குமரி மாவட்டத்தில் உள்ள நூல் நிலையங்களில் பெருமை வாய்ந்த நூல்நிலையம் மருங்கூர் நூல்நிலையம். அதிலும் அன்னை பாக்கியம்அம்மாளின் படம் திறந்து வைக்கப்பட்டது.,  
திறந்து வைத்தவர் தேரூர் டாக்டர் முத்துக்கருப்பபிள்ளை



Saturday, February 11, 2012

1925-..........மறக்கப்பட்ட ஒரு நல்ல மனிதரின் கதை

மருங்கூர் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு அழகான கிராமம். கிராமத்தைச் சுற்றிலும் நான்கு திசைகளிலும் தென்னை மரத் தோப்புகள். அங்கு உயரமான ஒரு குன்றில் முருகன் கோவில் இருக்கிறது. அந்தக் குன்றின் மீது நின்று பார்த்தால்  பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

நாங்கள் ,உறவினர் சிலருடன் கோவிலுக்குப் போய் சாமி தரிசனம் முடித்து விட்டு மருகமள் வினுசுபாஷின் வீட்டுக்குப் போனோம்.

அங்கு சுபாஷின் அப்பாவின் பெயர்ப் பலகையில் தா. தாணப்பன் என இருந்ததைப் பார்த்து தா. தா என்று பேத்திமார்கள் அழைத்தால் தாத்தா என்று அழைத்தது போலவே இருக்குமே என்றேன் .

சுபாஷின் அப்பா அப்பொழுது நாங்கள் இருக்கும் பக்கம் வந்து ," என் அப்பா இறந்த நாளில் நான் என் அம்மாவின் வயிற்றில் இருந்தேன் . நான் அதன் பிறகு 
பிறந்ததால் எனக்கும் அப்பாவின் பெயரையே வைத்து விட்டார்கள் .  அரசு ஹாஸ்பிடலில் பிறந்த அன்றே எனக்கு நர்சு "காந்தி "  பிறந்திருக்கான் என 
சொன்னதால் என் பெயர் காந்தி என்றும் உண்டு ."

ஏன், அவள் அந்த பெயரை சொன்னாள் என நான் கேட்க , அவர் " நான் பிறந்த நாள் அக்டோபர் மாதம் 2 -ம் தேதி.........மகாத்மா காந்தி பிறந்த நாளல்லவா" என்றார் .

       இந்த  போட்டோவை நான் பார்த்துக் கொண்டே நேரு இருப்பதுபோல் தெரிகிறதே என்றேன் .

நேருவுக்கம் இந்திரா காந்திக்கும் நடுவே நிற்பது தான் காந்தி அவர்களின் தந்தை தாணு மாலையப்பெருமாள் .அவர் 1933க்கு முனனால் காங்கிரஸ் கொள்கைப் பரப்பு செயலாளராக இருந்திருக்கிறார்
  
1926 -ல் சுசீந்திரம் கோவிலை சுற்றியுள்ள தெருக்களில் ஹரி ஜனங்கள்செல்ல ஒரு சத்தியாகிரகம் நடந்தது .அதில் முழு மூச்சுடன் கலந்து கொண்டார் .
தனது மனைவி பாக்கியம் அம்மாளுடன் வைக்கம் போராட்டத்தில் பெரியாருடன் கலந்து சமுதாய பணிகளில் மிக தீவிரமாக கலந்து கொண்டார் .
தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தில் சேர்ந்து பல தலைவர்களுடன் தோளோடு 
தோள் நின்று உழைத்திருக்கிறார் . ஆன்மீகத்திலும் சமரச சன்மார்க்க சங்க செயலாளராக இருந்திருக்கிறார் .அதன் மாநில தலைவராக மறைமலை

அடிகளார் இருந்தார்.

அவரது மறைவுக்குப் பின்னும் காந்தி அவர்களின் தாயார் திருமதி பாக்கியம் அம்மாள் அந்தப் பகுதி


           மக்களின்                                         நலனுக்காகப்         பாடுபட்டார் . 
         ***

கலைஞர் அவர்கள் நேரில் 
பாக்கியம் அம்மாளை  சந்தித்து ஆசி  பெற்றார்.

      ***** 


                                                    1960-ல்                                    வெளி வந்த          தினத்தந்தி பேப்பர் துண்டினை காந்தி( தாணப்பன் ) அவர்கள் எங்களிடம் காண்பித்தார் .அதில் அவரது அம்மாவின் பெயர் சங்கர வடிவு என இருந்தது.

இத்தகு பெருமை பெற்ற பாக்கியம் அம்மாளின் திரு உருவப் படத்தை ஊர் பஞ்சாயத்து அலுவலகத்தில் திறந்து வைத்திருக்கிறார்கள் . 

அவரது தாயார் இவ்வுலகை விட்டு மறைந்த நாள் மே மாதம் 27 -ம் தேதி. நேரு மறைந்த நாள் .

சேவை மனப்பான்மை கொண்ட இருவரின் மகன் காந்தி என்ற தாணப்பன் திராவிட முன்னேற்ற கழகத்தில் ஒரு உறுப்பினராக இருந்து மக்களுக்குக்கு உதவி செய்து கொண்டிருக்கிறார் . கழிந்த பல வருடங்களாக இரண்டு வகுப்பில் அதாவது பத்தாம் வகுப்பிலும் பிளஸ் டூ வகுப்பிலும் வெற்றி பெறும் முதல் மாணவனுக்கு தங்க மெடல் செய்து பரிசாக கொடுத்து வருகிறார் .

இன்றுவரை காந்தி கதராடை தான் அணிகிறார் . மிகவும் எளிமையை விரும்புபவர் .



எளிமையான மனிதர்


Thursday, February 9, 2012

32 வருடங்களுக்குப் பின் நான் தேடிய மாணவன்

நானும் என் மனைவியும் கன்னியாகுமரிக்கு 22-1-12 ஞாயிறு மாலை சென்றோம். கன்னியாகுமரி நெருங்கியதும் வழக்கம்போல் சன்னதித் தெருவில் காரை நிறுத்த அனுமதிக்க வில்லை. கூட்டம் அன்று கூடுதலாக இருந்தது தான் காரணம்..ராமு காரை Sea வியூ லாட்ஜின் முன் சாலையோரத்தில் நிறுத்தினான். காரை விட்டு இறங்கியதும் பழைய ஞாபகங்கள் மனதில் தோன்றி மறைந்தன. 33 வருடங்கள் என் மனரதம் பினோக்கிச் சென்றது....

கடுக்கரையில் என் அப்பா அம்மாவுடன் வாழ்ந்த காலமது. என் மகள் அப்போது பிறக்கவில்லை. கன்னியாகுமரிக்கு போய் இரண்டு நாள் தங்கி வர எண்ணினோம். அப்பாவின் அனுமதியுடனும் ஆசியுடனும் இரண்டு நாட்களுக்குத் தேவையான அரிசி, வெஞ்சண சாமானத்துடன் கடுக்கரையில் இருந்து பஸ்ஸில் புறப்பட்டுப் போனோம்.  மூன்று மணி நேரம் கடந்து கன்னியாகுமரிக்கு வந்து சேர்ந்தோம். சத்திரத்தில் இடம் காலியில்லை.தேவஸ்வம் நடத்தும் லாட்ஜிலும் அறைகள் காலி இல்லை.

அப்பொழுது மணி இரவு 8 மணி இருக்கும். வேறு வழி ஒன்றும் தோன்றாததால் பஸ் ஏறி ஊருக்கேப் போய்விடலாம் என பஸ்ஸுக்கு காத்து நின்றோம். ஒரே எரிச்சல்.....பஸ் வரவே இல்லை....நேரம் கடந்து கொண்டே இருக்கிறது..... நாகர்கோவில் போய் அங்கிருந்து கடுக்கரைக்கு பஸ்ஸில் போகணுமே......அந்த பஸ் நாகர்கோவிலை அடைவதற்கு முன்னால் புறப்பட்டுப் போனால் என்ன செய்ய.....அதுதானே லாஸ்ட் பஸ்.

 என் மகன் தினேஸும் முருகனும் மற்றும் சிவா அவனது அம்மை எல்லோரும் காத்திருந்தோம்.

சிவாவின் அம்மாவின் உறவினர் ஒருவர் கன்னியாகுமரியில் இருப்பதாகவும் ஆனால் வீடு எங்கே இருக்குன்ணு தெரியாது எனவும் அவள் என் மனைவியுடன் சொன்னதைக்கேட்டேன்.

யாரிடமாவது கேட்கலாம் என்றால் அந்த இரவு நேரத்தில் அங்கு நின்றவர்கள் அந்த ஊர் ஆட்களா வெளியூர் ஆட்களா எனத் தெரியாது.

அப்போது என்னை நோக்கி ஒரு பையன் வந்து கொண்டிருந்தான். கிட்டே வந்ததும் தான் பாத்தேன். அவன் என் மாணவன். பெயர்.........

“சார்,....என்ன விசயம்...பஸ்ஸுக்காக நிக்கிறீங்களா.......”  நான் அவனிடம் விசயத்தைக் கூறினேன்.

பிள்ளையெல்லாம் வச்சுகிட்டு இந்த ராத்திரி நேரத்தில் போகாண்டாம் சார். நீங்க இப்பம் ஏங்கூடவாங்க....... எங்களை அழைத்துக் கொண்டு ஒரு இடத்திற்குப் போனான்.

ஒரு வீடு மாதிரி தோற்றத்தில் உள்ள லாட்ஜின் முன் பக்கம் இருந்த காளிங் பெல்லை அழுத்த வயதான பெரியவர் ஒருவர் எங்களை மாடிக்கு அழைத்துச் சென்றார்.

அது ஒரு பெரிய ஹால்.

அனறையதினம்  யாரும் வாடகைக்குகேட்காததால்   அதனை நாங்கள் மட்டுமே பயன் படுத்தினோம்.

அது Cape Lands Lodge.

 அதனை லீஸுக்கு எடுத்து நடத்துகிறார். அவர் பெயர்..........

 அவர் அன்றைய குமரி மாவட்ட நெடுமாறன் காங்கிரஸ் தலைவர். மிகவும் அன்பாக எங்களை உபசரித்தார்.

  அவர் ஒரு கிறிஸ்தவ வெள்ளாளர் என அவரே சொன்னார் .

அன்று ஒருநாள்  நாங்கள் தங்கினோம். மறுநாள் காலையில் எங்கள் கல்லூரியில் வேலை பார்த்த ராமசாமிப் பிள்ளையின் அத்தானின் வீட்டுக்கு அழைத்துப் போனான் என் மாணவன்.

அவரது எதிர் வீட்டுச் சாவியை தந்து எங்களை அங்கே இரண்டு நாள் தங்கிப் போகும்படி சொன்னார்கள்.

என் மனோரதம் புறப்பட்ட காலத்திற்கே வந்து நின்றது . நான் இரண்டு நாள் தங்கிப் போன அந்த வீட்டைத் தேடிப்பார்த்தேன் . வீடு இருந்த இடம் மறைந்து போய் புதிய கட்டிடமாக சாகர் லாட்ஜாக மாறி இருப்பதாக பிறர் சொல்லக் கேட்டேன் .

அழகான தெருக்களைக் காண முடியவில்லை .விவேகானந்தர் மண்டபம்  இல்லா விவேகானந்தர் பாறையை மனத்திரையில் பார்த்தேன்.........

அந்த நாட்களில் இருக்க இடம் தந்த பெரியவரின் பெயர் என்ன?  அந்த இடத்துக்கு அழைத்து சென்ற  மாணவனின் பெயர் என்ன?..........நாடு காந்தியை மறந்தது போல் நானும் இக்கட்டான அந்த ஒருநாளில் உதவி செய்தவர்களின் 
பெயர்களை மறந்து விட்டேனோ !

மனம் அதையே நினைத்துக் கொண்டிருந்தது.

கோவிலுக்குப் போய்திரும்பினோம் .......என் மனைவியிடம் இது பற்றி கூறி அந்த  பெரியவரின் பெயர் தெரியுமா ? எனக் கேட்டேன் .

"உங்களுக்கே தெரியவில்லை ? எனக்கு எப்படி ஞாபகம் இருக்கும்?....."

சுவாமிநாதனாக இருக்குமோ !.......ஒரே சிந்தனை ......அன்று இரவு எங்கிருந்தோ சினிமா பாட்டுக் கேட்டுக்கொண்டே இருந்தது .

"தர்மம் தலை காக்கும் ,தக்க சமயத்தில் உயிர் காக்கும் ......எம்ஜிஆர் பாட்டுக் கேட்டது ...."........அவர் பெயர் தர்மநாதனாக ...... ஆம் தர்மநாதனே தான்.

இப்போ அவர் உயிரோடு இல்லை என்பதனை அறிந்து மனம் வருந்தியது .அவரது மகன்கள் கன்னியாகுமரியில் இருப்பதாக அறிந்தேன் .

அந்த மாணவன் எங்கிருக்கிறான் ? பெயர் ....? எதுவும் தெரியவில்லையே ....தெரிந்தால் ப்ளாக் எழுதலாம் ......

6 -2 -12  திங்கள் கிழமை காலையில் பெருமாள் திரு மண்டபத்தில் நண்பரின் மகனது திருமணவிழாவுக்குப் போய்விட்டு திரும்பும் வேளையில் ,எனது கார் நிற்கும் இடத்திற்குப் போனோம். எங்களுடன் வந்த என் மகன்  முருகனிடம் பேசிக்கொண்டிருக்கும் போது,என் கண் பார்வை படும் படியாக இருவர் பேசிக்கொண்டிருந்தனர்.  அவர்களில் ஒருவர் குறுந்தாடியுடன் சற்று வயதான தோற்றத்தில் இருந்தார் . அவர் என்னையே பார்த்தபடி என் எதிரே வந்து நின்றார்

"சார்....! நீங்க பொன்னப்ப பிள்ளை தானே . ஹிந்து காலேஜ்ல நான் B .Sc  Maths  படிச்சேன் ........."

"அப்படியா ..... ரொம்ப சந்தோசம் .......நீங்க இப்பம் என்ன செய்யறீங்க ......."

"நான் திருவனந்தபுரத்தில் சென்ட்ரல் Telegraph ஆபீஸ் -ல் வேலை பாக்கிறேன் "

 'இப்பம் எங்க தாமசம் ...... திருவனந்தபுரத்திலா இருக்கிறீங்க ' என நான் கேட்டேன் ...

இல்ல சார்.....தினமும் கன்னியாகுமரியில் இருந்து train -ல் போய் வருகிறேன்   என்று சொன்னதும் என் பொறியில் ஏதோ ஒன்று தட்டியது .

நான் அவரிடம் எனது அந்த அனுபவத்தை சொன்னதும் , அவர் அதனை ஞாபகம்  இருப்பதாக கூறினார் . அவர் தான் தர்மநாதன் இப்போ உயிரோடு இல்லை  என்று சொன்னார் .

உடனே நான் என் மனைவியை அழைத்து அவரிடம் அறிமுகப்படுத்தினேன்.

என் மனைவி," கழிந்த நாலைந்து நாளாக உங்க பெயர் தெரியாம தவித்துக் கொண்டிருந்தாங்க . உங்க பெயரென்ன ?"... கேட்டாள்.

"முருகேசன் "   என சொன்னார் .

  32  வருடங்களுக்குப் பின் நான் தேடிய மாணவன் ஒருவனை நான் நினைத்த சில நாட்களிலேயே சந்தித்தது மிக மிக அதிசய நிகழ்வாகவே எனக்குத் தோன்றுகிறது .


Friday, February 3, 2012

செல்லி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

கடுக்கரையில் மூன்று நாட்கள் என் வாழ்வில் மறக்க முடியாத நாட்களாகி விட்டன.கும்பாபிசேக விழாவிற்கு வந்த பலரை, நான் பல வருடங்களுக்குப் பின் பார்த்துப் பேசியது அதிக மகிழ்ச்சியைத் தந்தது.


வேர்களை மறவா கடுக்கரை ஊர் அன்பர்கள் பலரைப் பார்த்தேன். கும்பாபிசேகம் காண்பதற்கென்றே வந்தவர்கள் சிலரையும் பார்த்தேன்.என்னைத் தெரியுமா என நான் கேட்க ,ஒரு இளைஞர் உங்கள் முகத்தினை ஃபேஸ்புக்கில் பாத்திருக்கேன் எனச்சொன்னது சற்று வித்தியாசமானதாகவும் சந்தோசமாகவும் இருந்தது.


கும்பாபிஷேகம் காண வந்த பலர்,கோவில் திருப்பணிக்கு மனமுவந்து நிதிதனை கொடுத்ததைக் கண்டேன்..


கோவிலின் தெற்குப் பக்கம் உள்ள தெருக்களில் வண்ணமிகு கோலங்கள் ஒவ்வொரு வீட்டின் முன்னே காணப்பட்டன.இரு வாசல்களில் வாழைமரங்கள், உலத்தி இலை, கட்டப்பட்டும் மின் ஒளி பார்ப்பதற்கு மிகவும் பரவசமாக இருந்தது.


முதல் நாள் யாகசாலை பூஜை ஆரம்பமானது.கும்பாபிஷெகத்தை நடத்தி வைக்க திருநெல்வேலியில் இருந்து திரு.கே.ராஜகோபால தீட்சிதர் அவருடைய குழுவினருடன் வந்தார்.முதல் நாள் மதியம் ஆயினூட்டு தம்பிரான்கோவில் பாயசம் வைப்பு அடியந்திரம் நல்லபடியாக நடந்தது. மாலை 5.30 க்கு மேல் கோவில்குளத்தில் இருந்து யானை மீது புனித நீர் எடுத்து ஊர் சுற்றி கோவிலுக்கு வந்தனர். யானையின் மீது திருப்பணிக்குழு தலைவர் திரு. காந்தியும் ஒரு தீட்சிதருடன் அமர்ந்திருந்தார். நான் ஒவ்வொரு இடத்திலும் முன்னதாகப் போய் வீடியோ படம் எடுத்தேன்.பின் முத்தாரம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இரண்டாம் நாள் மருந்து சாத்தும் பணி நடந்தது. ஊர்மக்கள்  அனைவரும் அதில் பங்கெடுத்தனர். மருந்தை  உலக்கையால் இடிக்க பெருங்கூட்டமாக வரிசையாக நின்றார்கள்.புதிய சிலைகள் நிறுவப்பட்டன. மூன்றாம் நாள் மகா கும்பாபிஷேகம் மிக அழகாக நடந்து முடிந்தது. 10.30 மணியளவில் அன்ன விருந்து நடந்தது. மிகப் பிரம்மாதமாக ஐந்து கூட்டுகளுடன் பருப்பு,சாம்பார்,ரசம்,மோர் (கட்டியான மோர்) சாப்பாடு மிகவும் ருசியாக இருந்தது.அதை விளம்பியவர்கள் மிக அருமையாகவும் பொறுமையாகவும் விளம்பினார்கள். அன்ன விருந்து உபயதாரர் ஆட்டோ மாராசனின் அக்காளைப் பார்த்து மனதாரப் பாராட்டினேன்.மிக நல்ல முறையில் எல்லாமே இனிதாக முடிந்தது.
இது போன்றதொரு விழா என்னறிவில் இது தான் முதல் தடவை

Thursday, February 2, 2012

முன்னால் இருந்ததும் இந்நாளில் இருப்பதுவும்

23-4-2011 -ல் திருப்பணி நாளில் உள்ள கோயில் கும்பாபிஷேகம் நடக்க தயாரான பின் வித்தியாசமான, அழகான வடிவில் காட்சி தந்தது.கோபுரம் இல்லாதக் கோவிலில் கோபுரம். ஒட்டுப் பணி மாற்றப் பட்டு காங்க்ரீட் கட்டிடமாக கம்பீரமான வடக்கு வாசல் கல்தூணுடன் காட்சி அளிக்கிறது.

Posted by Picasa

கோவில் முன்னாட்களில்.......


Posted by Picasa


2012 ஜனுவரிக்குப் பின் செல்லிஅம்மன் கோவில்


Posted by Picasa


Posted by Picasa