Friday, October 14, 2016

கடுக்கரை பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

கும்பாபிஷேகம் கண்ணாரக் கண்டு களித்தேன்.
எம்பெருமான் எமக்களித்த வரமல்லவா
நம்மை வாழ்வித்த இறையல்லவா
அம்மா போல் அரவணைத்த ஆதியும்
அந்தமும் இல்லா பரம்பொருளல்லவா
எந்தன் மனம் துள்ளுது சொற்கள் வந்து விழுகிறது
கருடவாகனமுடைய  எம்பிரானே
ஊர் வாழ உங்கள் பிள்ளைகள் நாங்கள் வாழ்ந்திட
காத்தருளிய கடுகைப் பெருமாளே ..... வணங்குகிறேன்

தோன்றியது மனதில் எழுதுகிறேன் அதனால் ......
கசடறக் கற்ற மொழியின் வளத்தை தந்தருள்வாய் பெருமாளே....


திருவேங்கடப்பெருமாள் நம்மூரில் நமக்காக நம்மைக் காக்கவே
எழுந்தருளினார் ………..இன்றிருக்கும் எவரும் பிறக்கு முன்னே…….
இன்றிருப்போர் யாரும் அறிந்திலர் அவர் கடுகையுறைத் திருநாளை
ஊர்கூடித் தேர் இழுக்க  அவருக்கோர் தேர் இல்லை வீதியிலாக் காரணத்தால்
வானுக்கு எல்லை இல்லை …  வானுயர் கோபுரம் இரண்டினை
தைத்திருவிழா காணும் ஏழுமலையான் கண்டான் இத்”தை” ஏழாம் நாளிலே….
ஊர் கூடி உயர்த்தியதால் எல்லோர் மனமும் பாரினில் உயர்ந்ததே
கிட்டாத பாக்கியம் கிட்டியது போல் கோபுரம்கண்ட எல்லோர் மனமும்                  குளிர்ந்ததே.
மட்டிலா மகிழ்ச்சியால் துள்ளாத மனங்களெல்லாம் துள்ளியதே….

குறைந்த நாட்களில் செயற்கரியதோர் செயல்தனை நிறைவாய் முடித்த
பொறுப்பாளர் அனையோர் பெயர்களும் ஊர் உள்ளவரை எல்லோர்
உள்ளங்களிலும் நிறைந்திருக்கும்……..
எல்லாப் புகழும் நயினார் திருவேங்கடப்பெருமாளுக்கே

------------------------------------**********************************************************----------------------------------------
  இறைவா  எல்லோரும் இன்புற்றிருக்க அருள் புரிவாயே......
-------------------------------------___________________________________________------------------------------------ 

     கல்லூரியில் நண்பர் ஒருவர் நான் எழியப் பிவு ஒன்றினப் பைப் பித்ேன் என்றார் வாய் மொழியால்..... ன்றாக இரந்தாகும்ொன்னார் உடல் மொழியால்..... 

  என் விகள் புக்காக்கப்பேண்டும்  ோன்ிில்....ால்.... எனு பப் பிவுகில் இவ்விும் இடம் பெறட்டுமே........
எனை கருவாக உருவாக்கிய என் தாய் தந்தையில்லை என்ற குறையறியாமல் இன்றும் எனை வாழ்வித்துக் கொண்டிருக்கும் என் உயிர் அவள். அவள் இருக்கும் வரை நானும் அவளுக்கு ஒரு பிள்ளையே....அவள் இருக்கையில் நான் மறைய வேண்டும்... நான் அவள் இல்லாமல் வெறும் பூஜ்யம் என்பதை உள்மனம் சொல்லிக் கொண்டே இருக்கிறதே... உன்மை....உளறு மொழியல்ல.....இந்த வயதிலும் இதனைச் சொல்லாவிட்டால் இனிமேல் எந்த வயதிலும் சொல்ல முடியாதோ.....மனிதம் இல்லா மானுடன் என்ற கூற்றுக்கு ஆளாகிவிடுவேனோ.... இறைவா என் இல்லாளை இன்று போல் என்றும் காப்பாற்று என வேண்டுகிறேன்..... இன்று......நானும் அவளை வாழ்த்துகிறேன்.... இன்று அவள் பிறந்த நட்சத்திரம் “ தை கார்த்திகை “
_________________________________________________________________________________



வாழ்க்கை......வேடிக்கை.....ஒருவரின் வாழ்க்கை போல் இன்னொருவனின் வாழ்க்கை அமைவதில்லை.  தேடி உனையடைந்த வசந்தத்தை  வசமாக்கப் பழகிக்கொள்.  மானுடத்தை நெஞ்சினில் வைத்திரு.  பணிப்பெருமையை தலையில்   சுமையாய்  வைக்காதிரு. எந்த இடத்தினால் நிம்மதி கிடைக்குதோ அந்த இடத்தை நேசித்திரு. அடங்கிப் போவது அவமானமெனக் கருதாதிரு.. கண்ணியமாக இருப்பதும்  கட்டுப்பாடுடன் கடமையாற்றுவதும் சாலச் சிறந்தது என்பதை மறவாதிரு.  சமுதாயம் தந்த வாழ்வுக்கு நன்றிக் கடனாக திருப்பி ஏதாவது செய்யக் காத்திரு.. வாழ்வதும் தாழ்வதும் நம் கையில் இல்லை  என்பதனை உணர்ந்திரு . இருக்கின்ற நாளில் இனிமையாகப் பழகு எளியோரிடம்..... அவன் சிரிக்க நீ பேசு... இயன்றதைக் கொடு அவன் பசியாற... இறைவனை எங்கும் தேட வேண்டாம். அவன் சிந்தும் கண்ணீர் மறைந்து  சிரிப்பானே..... அந்தச் சிரிப்பில் இறைவனைக் காணலாம்....


Sunday, January 3, 2016

2015 ...வான் மழை பொழிந்தது......மனிதம் மெய்ப்பட்டது.....மாநிலத் தலைநகரம் சென்னை கண்ட உணர்வுகள்...

நான்  முக நூலில் எழுதியதைப் பதிவு செய்யுமுன்  ஒரு சில எண்ணங்களை....... கூடுதலாக  பதிவு  செய்ய விரும்பினேன் . 
 நட்பும் உறவும் இன்று இக்கட்டான சூழ்நிலையில் உதவாது  என்று  நினைத்திருந்தேன் .  மரத்துப்போன மனமும்,  சுயநல.... மதிமயக்க.... மனமும்  கொழுந்து  விட்டெரியும் தார்மீகமறியா அரக்க மனம் வென்றிடுமோ ...... 
அன்புக்கும்  தாழிட்டு விடுமோ இந்த சமூகம், நம் பாரம்பரிய  கலாச்சாரத்தை அழித்தொழித்து விடுமோ ..... அஞ்சினேன். 
இல்லை ...அழியாது அது.... கவலைப் படாமல் இரு .... அறிவுறுத்தவே பொழிந்து தள்ளியது சென்னை மழை.....
 2015 இறு தியில்  வான் மழைப் பொழிவதிகமானதால்  சென்னை மாநகரம் தன் பொலிவையும் வலிமையயும் இழந்து நின்ற  போது ஜாதி,மதம் பாராத ஓர் புதிய ம(னி)தம் உதயமாகி ,புதுப்புனல் பாய்ந்தோடியதைக் கண்டோம்..... நானும் கண்டேன் ....
வான் செய்த பிழையால் மானுடம் வென்ற நிலை கண்டோம்
 இவ்வாண்டில் இளைஞர்கள் நம்பிக்கை நட்சத்திரமாக..... வாழும் காலங்களில் வளர்ந்து வரும் நம் நாட்டினைப் பாதுகாத்திட .... ஒரு பெரும் ஆக்க சக்தியாக உருவாகிக் கொண்டிருக்கிறார்கள்.
 சுய எண்ணம் கொண்ட இளைஞர்களை , தீரமும் விவேகத்துடன் கூடிய வீரமும் கொண்ட களப்பணியாற்றிய மனிதர்களைக் கண்டு அதிசயித்துப் போனேன்... விவேகானந்தர் விரும்பிய இளைஞர்கள் இவர்கள் தானே ........   
இனி அஞ்சத்தேவையில்லை ........  மானுடம்
வாழும்  இம்மனிதம் வாழும் நாள் வரை.....   
என் மார்க்கம்... என் வாழ்வுப்பாதை....என் தந்தை ,தாய் காட்டியபாதை.
 அது இந்துமதம் சார்ந்த கலாச்சாரம்... 
என்னை படிக்க ஆற்றுப்படுத்தியவர் ஒரு முஸ்லீம் பெருமகனார்... என்னை ஒருநாள் கூட அவர் மதத்தைப் புகழ்ந்து பேசி என் மார்க்கத்தை மாற்ற முயன்றிடவே இல்லை. இன்றும் அவர் என் தந்தையின் நண்பராக என் நெஞ்சில்புன்னகை புத்துக் கொண்டிருக்கிறார் . எந்த எதிர் பார்ப்பும் இல்லா அன்பு அது.
 மூன்றாண்டு பட்டப் படிப்பும் கிறிஸ்தவமதம் சார்ந்த பாளைச் சவேரியார் கல்லூரியில் தான்..  அங்கிருந்த பலர் அன்பாகவே இருந்தார்கள்..... யாரும் என்னை என் மார்க்கத்தை மாற்ற முயலவில்லை.... அச்சுறுத்தவும் இல்லை....
நான் ஒரு இந்துக்கல்லூரி ஆசிரியன். அங்கே படிப்பவர்கள்பல மார்க்கத்தை பின் பற்றுபவர்கள். வெவ்வேறு மதம்..... வெவ்வேறு இனம்... அனைவரும் எனக்கு , என் மனதுக்கு     மாணவர்கள் என்பது மட்டுமே....
நானும் யாரையும் கெஞ்சிப் பேசியோ,மிரட்டியோ என் மார்க்கத்தைதான் கடை பிடிக்க வேண்டும் என்று  வற்புறுத்திச் சொன்னதும் இல்லை; மனதால் கூட நினைத்ததும்  இல்லை.... 
தன்னம்பிக்கை உள்ளவன் தானே வாழ்வில் வெல்ல முடியும். தன்  மார்க்கத்தை தேர்ந்தெடுக்கும் உரிமையும் அந்தத்  தனி ஒருவனுக்குத் தானே...... மாற்ற முயல்வது பேதமை......
மதம் நல்லது தான் எல்லோருக்குமே......  மனிதனை மதம் பிடித்த யானையாக மாற்றாதவரை. ..        உண்மையில் எல்லாமே ஒன்றுதான்... ஓரு மதம்.... அவரவருக்கு ஒரு மதம்.... போதுமே ஒரு மதம் ... ஒரு தாய் போல. 
இயல்பாக செல்லும் நீரோடையை ..... அதன் அழகை ரசிக்க வேண்டும்.... மகிழ வேண்டும் .....அதன் பாதையை மற்றிப் பார்த்து ,கெடுக்க  முயலவே கூடாது.... முயன்றால் அழகு மறைந்துவிடும்....

அழகாகவே பாய்ந்து செல்லட்டும் நீரோடை.....மனமும் அழகாகட்டும்....


2015 .....20.....டிசம்பர் ...... எண்ணிக் கொண்டிருக்கிறோம்....11 நாட்களே உள்ளன.....2016-க் காண.....எண்ணிப் பார்க்கிறேன் எண்களையல்ல.... நினைத்துப் பார்க்கிறேன் முன் நினைவுப் பதிவுகளை.....   வெகு  சில மனதை நோகடித்திருக்கிறது சில மனமுதிர்ச்சி அடையாதவர்களால்.....

 மிகப் பல என் மனதையும் நெஞ்சையும் மகிழவும் நெகிழவும் செய்திருக்கிறது....   பாழும் மனம் எதனை நினைத்து மகிழவேண்டுமோ அதனை தவிர்த்து...கழைய வேண்டியதையெல்லாம் கணக்கிலெடுத்துக் கொண்டு கலங்குகிறது....

அள்ளி அணைத்த கைகளை ஊனமாக்கி மகிழும் கிள்ளைகள் சிறகினை ஒடித்திட தளர்வறியாத் தந்தை-தாய் மனங்கொண்டஎவனுமே முனைவதில்லை.


தவமாய் தவமிருந்து கருவறை அளித்த என் அன்னையும் பிதாவும் எனக்கு இன்றும் தெய்வமாய் வழிகாட்டுகிறார்கள்.... நான் என் தந்தையை என்றும் நிந்தித்தது இல்லை....இந்நினைவு ஒன்றே போதும் எஞ்சிய நாட்களை நகர்த்திட.... தந்தை தாயைப் பேணுங்கள்.......

1967-ல் என்னுடன் படித்த கல்லூரிதோழன் மகராஜனை 48 வருடங்களுக்குப் பின்னால் சந்தித்தேன். அதே நாளில் என் ஆசிரியர் பெனடிக்ட் அவர்களை வீடு தேடி சென்று காலில் விழுந்து ஆசிபெற்று வந்தேன்.

சென்னையில் சங்கமமான இருமனம் இணைந்த திருமணநாளில் .......வயதில் முதியவன் எனை அன்போடு வரவேற்றார்கள்.... அன்பு மழையில் நனைந்தேன் ....மணமகன் பெற்றோர், அந்தப்பெற்றோரின் பெற்றோர்கள்....மணமகனின் சின்னம்மை, சித்தப்பா....என் தாயின் அன்புக்கு நிகரான எனது பெரிய மதினி,...அந்த வீட்டு லெட்சுமணண்ணன்..... இப்படியொரு வரவேற்பினை எங்கும் கண்டதில்லை..... வந்த அனைவருமே அன்பை நெஞ்சிலே சுமந்து சென்றார்கள்......

என் நண்பர் பத்மானபன் மிகவும் மகிழ்ந்து் , நெகிழ்ந்ததைக் கண்டேன்.... 51 வருடங்களுக்குப் பின், என்னொடு ஒரே பெஞ்சில்
அமர்ந்து இந்துக் கல்லூரியில் படித்த சென்னையில் இருக்கும் பழனியாபிள்ளையைக் கண்டேன்....

மிகவும் மகிழ்ச்சியாக.......... அன்புகளை பகிர்ந்து கொண்டோம்.....
அன்புத்தோட்டம்......பல நல்ல மணம் வீசும் மலர்களின் நறுமணம் இன்றும் என் மனதில் இருக்கிறது... வண்டுகள் ரீங்காரமிட்டு இசைபாடிக் கொண்டிருக்கின்றன.... என்னினிய உறவுகளின் உள்ளங்களும் அதே இசையையே ரசித்துக் கொண்டிருக்கின்றன. இதற்கெல்லாம் யாருக்கு நன்றி கூற வேண்டும்.....
இறைவனுக்கு நன்றி...
டாக்டர் ஈஸ்வரபிள்ளை, பொன்னம்மாள், அய்யாவு, பிச்சை , மீனாட்சிபாஸ்கரன்..... இவர்களுக்கு என் அன்பும் மதிப்பும் மரியாதையும் கலந்த நன்றி.... இறுதியான டிசம்பர் 2015 அன்பு மாதம்.........ஒரு இன்பச்சூழல் தந்த மாதம்.
இறைவா! நல்லபுத்தியை மட்டுமே என்றும் தந்திடுவாயே...
இனிவரும் வருடங்களிலும் இறையருளால் எல்லோருக்கும் நல்லதே நடக்க அருள் புரிவாயே
வருக ...... வருக புது வருடமே வருக.........புதுப்புனல் பாயட்டும்.. செல்வம் பெருகட்டும்...மகிழ்ச்சி பொங்கட்டும்....

Thankappan Arumugaperumal
Thankappan Arumugaperumal's photo.

Friday, November 6, 2015

எம் கல்லூரி தமிழ்த் துறைதம் கருத்தரங்க மூன்றாம் நாள்...நிறைவுநாளின் நிகழ்வாய் என்னுரையும் .........

அனைவருக்கும் என் அன்பான மாலை நேரத்து வணக்கம். தனித்துவம் வாய்ந்த இந்தத் தமிழ் கருத்தரங்கத்தில் கழிந்த மூன்று நாட்களாக பழந்தமிழ் இலக்கியங்களில் உள்ள ஒருவர் அல்லது பலர் அரங்கமேடையில் நிகழ்த்தும் பொம்மலாட்டம், நாடகம், கூத்து, நடனம், வில்லுப்பாட்டு போன்ற நாட்டார் கலைகள் பற்றிய தகவல்கள் நிறைந்த கட்டுரைகளை பலரும் அழகு தமிழில் வாசிக்கக் கேட்டிருப்பீர்கள்.
      மனிதன் தனது துன்பச் சூழலில் இருந்து விடுபட, அதில் இருந்து மீள்வதற்கு கலைகளின் துணையை நாடுவது இயல்பாக இருந்த காரணத்தால் நிகழ்த்துக்கலை உருவாயின.
      கால மாற்றத்தால் நம் உணவு உடை மாறின. உழைப்பவர்கள் போற்றிய நிகழ்த்துக் கலைகளும் மாறிற்று. பகுத்தறிவின் பேரால் பல கலைகள் புறக்கணிக்கப்பட்டன. பல இன்றைய தொழில் நுட்ப யுகத்தின் வளர்ச்சிக்குப் பலியாயின.
      நமது குமரி மாவட்டத்தில் இருந்த அறுபத்தி முன்று வகையான நிகழ்த்துக் கலைகளில் பதினொரு கலைகள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன என்பதை நாட்டார் வழக்காற்றியல் அறிஞர் அ.கா.பெருமாள் அவர்கள் நூலில் இருந்து அறிந்து கொள்ளலாம்.
      நாடகத்தின் முதல்நிலை தெருக்கூத்து. கோவில் திருவிழாக்களில் தெருவில் முச்சந்தியை மேடையாக்கி கூத்து மூலம் ஆடியும் பள்ளியும் மக்களை மகிழ்வித்தார்கள். கூத்து என்பதன் வளர்ச்சியே நாடகம் என்று மாறியது. நாடகத்திற்கு பண்ணை என்ற ஒரு பெயரும் உண்டு.
       நாடு + அகம் என்பதே நாடகம். நாடு என்பது மக்கள். அகம் என்பது மக்களின் உள்ளங்கள். மக்களின் உள்ளத்தை மகிழ்விக்கும் ஒரு கலை வடிவமே நாடகம்.
      ஒரு நாட்டின் சென்ற காலம், நிகழ்காலம், வருங்காலம் – மூன்றையும் தன்னகத்தே காட்டுவது நாடகம். நாட்டு நடப்பை , நாட்டின் கலாச்சாரத்தினை, நாகரீகத்தை நாடகம் பார்த்து தான்  மக்களால் அறிய முடிந்தது. கூத்தைப் பின்னுக்குத் தள்ளிய நாடகமும் இன்று காணாமல் போய்க் கொண்டிருக்கிறது.
      பொம்மலாட்டத்தின் இன்னொரு பரிணாமம் என்று சொல்லப்படும் திரைப்படம் வந்ததால் கிராமங்களில் நாடகம் போடுவது குறைந்து போய் பின் அறவே நின்று போயிற்று.
      ஒன்றின் நீட்சி அதற்கு முந்தினதை பின் தள்ளிவிடுவதுதான் இயல்பாக இன்றும் இருந்து கொண்டிருக்கிறது.
      இலக்கியம், புராணம், காப்பியம் முதலியவற்றிலிருந்து கதைகளையும் கதைச் சூழல்களையும் கூத்துக்கள் பெற்றுக்கொண்டதுபோல் , பழைய நாடகங்களில் அல்லது கூத்துக்களில் இருந்து இன்றைய  இலக்கியம் பல கூறுகளை எடுத்துக் கொண்டதும் உண்டு. உதாரணமாக சிறிய காப்ப்பியமான பாரதியின் பாஞ்சாலி சபதம். இது 19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் அதன் பிறகும் பிரசித்தமாக இருந்த “திரௌபதி, வஸ்திராபரணம்” என்ற தெருக்கூத்தைப் பின்பற்றி எழுந்த காப்ப்பியமாகும்
      தமிழில் நாடக நூல் இல்லை என்கிற குறையும் பின்னாட்களில் மனோன்மணியத்தின் வரவால் நீங்கிற்று. ஆனாலும் இது ஒரு தழுவல் நாடகம் என்கிற குறையும் உண்டு.
      இவ்வாறு, கூத்து அல்லது நாடகம் என்ற நிகழ்த்துக்கலை, தமிழ் இலக்கியத்தோடு நெருக்கமாகவே உள்ளது……..
 என் உரையை முடிக்குமுன் நான் சமீபத்தில் படித்த ஒரு தகவல்….
      நீலகிரி மாவட்ட வனப்பிரதேசத்தில் வாழும் கோத்தர்களின் நடனங்கள் ஆதிகாலத்தவை. பக்தியை முன்னிறித்தி ஏராளமான வாய்மொழிப் பாடல்கள் இவர்களிடம் இருக்கின்றன.. நாதஸ்வர வடிவிலான கட்டைக் குழலான கொல் எனும் ஊது கருவி, கொப் எனும் இசைக்கருவி, தபக், பர், குணர்… போன்ற தோல் கருவிகள், மூலம் இசைத்துப் பாடுகிறார்கள். கொப் என்னும் இசைக்கருவி விலங்குகளின் கொம்புகளால் ஆனது. இப்போது செம்பால் செய்யப்படுகிறது. இவர்களில் ஆடும் ஆட்டத்தின் பெயர் கண்மு ஆட்டு. பெண்கள் ஆடுவது பெமு ஆட்டு. இன்றும் தினை விதைப்புத்திருவிழா, அறுவடைத்திருவிழா, மாடுகளுக்கு உப்பு புகட்டும் திருவிழா, கில்லிப் பண்டிகை என விழாக்கள் கொண்டாடி தங்களுடைய பாரம்பரிய கலைகளை அழியாமல் பாதுகாத்து வருகிறார்கள்.
 பொம்மலாட்டக் கலையை போற்றும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச்சு  மாதம் 21-ஆம் தேதி உலக பொம்மலாட்ட தினம் கொண்டாடப்படுகிறது.
      நமது பாரம்பரியக் கலைகள் அழியாமல் காத்திட, தமிழ்நாட்டு உயர்கல்வித்துறை பாடுபட்டுக் கொண்டிருக்கிறது.
      தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் நாடகத்துறை சேர்க்கப்பட்டுள்ளது. பளையாங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் நாட்டார் வழக்காற்றியல் பட்ட மேற்படிப்புத்துறை மிகச் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
      இதுபோல் அனைத்துக் கல்லூரிகளிலும் தமிழ்த்துறையில் கூத்து மற்றும் நாடகத்துறை, தமிழ்ப் பாடத்தின் பகுதியாக வரவேண்டும் . படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பும் இருக்க வேண்டும்.
இந்தக் கருத்தரங்கத்தின் கட்டுரைகள் அனைத்தும் நிகழ்த்துக்கலைகளுக்கும் தமிழுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று உளமாற விரும்புகிறேன்.
நாடகத்தமிழ் வளம் பெற தரம் வாய்ந்த படைப்புகளை உருவாக்கிட உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்..
நான் பேசிய தமிழில் தவறேதும் இருப்பின் பொறுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.
திறம்பட மிகச் சிறப்பாக கருத்தரங்கத்தை நடத்திய தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் டாக்டர் சாந்தாள், கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் டாக்டர் தே.வே. ஜெகதீசன் மற்றும் தமிழ்த் துறைப் பேராசிரியர்கள் அனைவரையும் பாராட்டி மகிழ்ந்து மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன்.
வாய்ப்பளித்தமைக்கு என் நன்றியைப் பதிவு செய்து விடைபெறுகிறேன்.

நன்றி ...வணக்கம்......

Friday, October 23, 2015

அரங்கேற்ற விழா ....துவரங்காடு ராஜா மண்டபத்தில் ....எனது உரை (22-10-15)

இந்த அரங்கத்தில் அமர்ந்திருக்கும் அன்புக்கினிய பெரியோர்களே, பெற்றோர்களே, 
எல்லோருக்கும் என் இனிய மாலை வணக்கம்.

இசை அறிவும், நடன அறிவும் இல்லா என்னை ஒரு பொருட்டாக மதித்து அழைத்து இந்த மேடையில் உங்கள் முன் நிற்க வைத்த அன்பு உள்ளங்களுக்கு முதன் முதலாக நன்றி ..

இந்த விழா…… சலங்கைபூஜை……அரங்கேற்றம்…..

சிந்துசுப்பிரமணி அவர்களின் முன்னேற்றத்தை பறைசாற்றிக் கொண்டிருக்கும் ஐந்தாவது சலங்கை பூஜை அரங்கேற்ற விழா..

முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் எங்கள் ஊர்த் திருவிழாவில் நான் ரசித்துக் கேட்டு மகிழ்ந்த இசை வில்லிசை. அந்த வில்லிசையை இயக்கிய கலைஞர் காட்டுப்புதூர் திரு நாகேந்திரன்.

அவர் வழிகாட்டுதலில் அவர் மகள் இசைப் பயணம் மேற்கொண்டு நடனம் கற்று , இன்று நடன ஆசிரியராக ஐந்து ஆண்டுகளாக இந்த நடனப் பள்ளியை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறார்….

ஒரு சின்ன குக்கிராமத்தில் பிறந்த சிந்து இன்று ஒரு சிறந்த நடன ஆசிரியர்.
சொல்வதற்கே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

தத்தித் தத்தி நடந்து வருகிறது சிறுகுழந்தை….. நடந்துவரும் அழகைப் பார்த்து ரசிக்கிறாள் அன்னை.   அன்னைக்கு அதுவே நடனம்….
நடன அசைவுகளும், பதிவுகளும் குழந்தைகளது காதுகளையும் ,மனதையும் மகிழ்விக்கின்றன. 
தாள கதியில் இருக்கும் நடன அசைவுகள் உடல் உறுப்புகளின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவி புரிகின்றன.
பாடலின் அர்த்ததை விட ஒலியின் அழகை ரசிப்பவர்கள் குழந்தைகள்
கற்றுக்கொடுத்தால் அந்தக் குழந்தைகளால்  ஐந்து வயதிற்குள்ளாகவே நடனமாடவும் பாடவும் முடியும்.

அவ்வாறு கற்றுக் கொடுத்தால் அவர்களது கல்விக்காலம்  மிகச்சிறப்பாய் அமையும் .

குழந்தைகளது ஞாபகத்திறனை வளர்க்க, அவர்களது உடல் ஆரோக்கியத்தினைப் பாதுகாக்க நடனம் மிகவும் உதவியாய் இருக்கும்.

நடன மயில் பட்டம் பெற்ற அன்பு சிந்து சுப்பிரமனியம் அவர்கள் மேலும் பட்டங்கள் பல பெற்று, அவர் நடத்திவரும் கிருஷா நாட்டியாலயா நடனப் பள்ளி சிறந்த பள்ளியாக திகழ்ந்திட எல்லாம் வல்ல , நடனக்கலையைத் தோற்றுவித்த சிதம்பர நடராஜனை வணங்கி ,வாழ்த்து கூறி, வாய்ப்பு தந்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்.

வணக்கம்.


Sunday, September 27, 2015

1967-க்குப் பின் சந்தித்த வகுப்புத்தோழன் ஆறுமுகம்

வாழ்வின் பொருள் என்ன ?

தினமும் காலையில் தொடங்கி இரவில் முடங்கும் பொழுதழிப்பா...

நமக்கு ஒரு அங்கீகாரம் தந்து அழகு பார்த்த இந்த சமூகத்துக்கு என்ன செய்யப் போகிறாய்! இப்படி ஒரு ஆச்சரியமான கேள்வி எழுந்தது ....என் மனதிலா......?

இல்லை...இல்லவே இல்லை.

ஆறுமுகம்.... பாளையாங்கோட்டையில் மகாராஜ நகரில் இருக்கிறார். அவர் தினமும் காலையில் அலுவலகம் செல்வது போல் ஒரு நோய் காண் மையத்துக்கு செல்கிறார். ஓய்வு பெற்றவர் அவர். வங்கிப் பணி முடிந்து பத்து ஆண்டுகள் ஆயிற்று. பொருளாளராக செயல் பட்டு வருகிறார்.

ஆச்சரியப்படுவதற்கு என்ன இருக்கு இதில்....... !

அந்த கிளினிக்கல் லேப்  தனிப்பட்ட ஒருவருக்கு உரியதல்ல. முன்னாள் மாணவர்கள் நடத்தும் லேப் அது.

 தூய சவேரியார் கல்லூரியின் முன்னாள் மாணவர்களால்  நடத்தப்படும் அந்த நிறுவனம் ஒரு முன்னாள் ஜட்ஜின் பெயரைக் கொண்டு மிகக் குறைந்த கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு  இயங்கி வருகிறது .

அதன் பெயர் ’ஜட்ஜ்  ஜோசப் நோய் காண்மையம்’.(Judge Joseph Clinical Lab )

அது இருக்கும் இடம் தூய சவேரியார் கல்லூரி வளாகம்.

மகாராஜன் மைந்தன் ஆறுமுகம் என் கல்லூரி வகுப்புத்தோழன்.

சொல்வதற்கே பெருமையாக இருக்கு.

இதெல்லாம் உனக்கு எப்படித் தெரிந்தது ?

எனது பெயரைத் தேடி ...... என் விலாசத்தை அறிந்து எனக்குக் கடிதம் எழுதி முன்னாள் கணித மாணவர்கள் சந்திக்கும் ஒரு நிகழ்வு ஜனுவரி 26-ம் தேதி நடைபெற இருப்பதாக எழுதி அழைத்திருந்தார்......

பல மாதங்களாகவே என் மனதினுள் உறங்கிக் கிடந்த ஓர் எண்ணம் என் ஆர்வத்தைத் தூண்டிற்று...... அதன் பலன்...நான்  இம்மாதம் 22 செவ்வாய் கிழமையன்று ஆறுமுகம் வீட்டில் அவருடன் 48 வருடங்களுக்கு முன்னால் காலச்சக்கரத்தை பின்னோக்கி நகர்த்தினோம்.... மலரும் நினைவுகள்....பல மலர்ந்தன....மகிழ்வும் சோகமும் மாறிமாறி வந்து போனது...... கொஞ்சம் செஸ் விளையாடத்தெரிந்த என்னை அதிகம் அறிய வைத்த செஸ் Problem சொல்லித்தந்த வகுப்புத்தோழன்....மானிட்டர்... பாலமோகன் மறைவுச் செய்தி என்னை பாதித்தது...... ஒலிம்பிக் வரை சென்று ஹாக்கி விளையாடிய வசந்து இன்றில்லை.

 ஆறுமுகம் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி . அவர் பாளை ஹைகிரவுண்ட் மகாராஜ நகரில் ஸ்டேட் வங்கி அதிகாரிகள் குடியிருப்பில் சிவானந்த சுந்தரி அப்பார்ட்மெண்டில்  வசித்து வருகிறார். அவருக்கு எனது இருப்பிடத் தகவல் தந்து மகிழ்ந்தவர் சென்னையில் வசிக்கும் எங்கள் வகுப்புத்தோழர் பொறியாளர்  ராய்.

நாகர்கோவில் வந்தபின்பும் தோழர் வீட்டு நிகழ்வுகள் என்னை வருடிக் கொண்டே இருந்தன..... என் உணர்வுகளை வார்த்தையால் சொற்களால் வர்ணிக்கவோ பதிவு செய்யவோ முடியாது... உணரமட்டுமே முடியும்.

நண்பர்களிடம் சொல்லி மகிழ்ந்தேன்..... அப்போது கூடுதல் தகவல் ஒன்று ஆனந்தமாய் செவியில் வந்து பாய்ந்தது.  ஜட்ஜ் ஜோசப் இந்துக்கல்லூரியின் கணித ஆசிரியர் வில்சனின் மாமா.......(வில்சனின் அத்தையின் கணவர் )....

1964 -67  கல்லூரிக் கல்விப் பயணம்...... 1967-க்குப் பின்.........48 வருடங்களுக்குப் பின்  வகுப்புத் தோழரை சந்தித்தது,  ரயில் நட்பு போல் ஆகிவிடவில்லை ....... என்பதால்...... என்றும் இந்த நினைவு ஆனந்தமே..... ஆனந்தமாக மட்டுமே இருக்கும்.....

சற்றும் கூட முகம் சுழிக்காமல் என் எண்ணத்தைப் புரிந்துகொண்ட என் மனைவி என்னுடன் வந்து நண்பர்கள் இருவர் சந்தித்து ஒன்றரை மணிநேரம் பேசியதை மிகவும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தாள்..... நெல்லையப்பர் தரிசனம் தடைபெற்றதையும் பொருட்டாகக் கருதவில்லை அவள்.

நன்றி மறப்பது நன்றன்று என்பதால் எனக்கு மூன்றாம் வருடம் பட்டப் படிப்பின் தொடக்கத்தில் கல்லூரி விடுதியில் இடம் தர மறுத்த முதல்வரிடம் எனக்காக பரிந்துரை செய்த ஆசிரியர் ஒருவரின் வீடு தேடிச் சென்று அவர் முகம் பார்த்து பழங்கதை பேசி மகிழ்ந்து  அவர் ஆசிப்பெற்று திரும்பினேன்....

அவர் சவேரியார் கல்லூரியில் பணியில் இருந்த காலத்து மாணவர்கள் அவரை தெரியாமல்  இருக்கவே முடியாது.... ஓய்வுக்குப் பின்னும் மாவட்ட நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க வருடந்தோறும் ஹாக்கி விளையாட்டுப்போட்டி பல முன்னாள் மாணவர்கள் உதவிகொண்டு வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.....

அவர் பெயர் மேஜர் பெனெடிக்ட்.... உடற்பயிற்சி கல்வி ஆசிரியர்.....

அவர் சேவை அவரது ஓய்வுக்குப்பின்னும் கல்லூரியில் தொடர்ந்தது......

 விடை பெறும்போது அவர் சொன்னது..,” உங்களைப் போல பல மாணவர்கள் என்னை சந்திக்கும் போது என் வயது கூடுகிறது... ஒவ்வொரு வருடமும் நீ வா..... இன்னும் ஐந்து வருடங்கள் வாழ்வேன் ‘

நல்லவெயில்.... அவர் வெளியே வந்து வழியனுப்பிய பாங்கு ... இருகரம் கூப்பி வணங்கிக்கொண்டே நல் வாழ்த்துக்கள் கூறி வழி அனுப்பி வைத்தது ...... என்னை மிகவும் கவர்ந்தன....

இப்போது அவருக்கு வயது 86.



Friday, August 14, 2015

இதோ ஒரு இளைஞர்.....அப்துல்கலாம் அவர்களின் அருள் கிட்டிய இளைஞர்.....


இரண்டு மாதங்களுக்கு முன்னால்  இக்னோ அலுவலகத்தில் ஒரு கட்டிடத் தொழிலாளி தன் தம்பியுடன் நின்று கொண்டே நெறியாளரிடம் எந்த வகுப்பில் சேர்ந்து படிக்கலாம் என்று பரஸ்பரம் பேசி ஆலோசனை செய்து கொண்டிருந்தனர்.

அங்கிருந்த நான், அவரை செயரில் அமர்ந்து பேசலாமே என்று சொன்னதை சிரித்துக் கொண்டே கேட்டாரே தவிர தொடர்ந்து நின்று கொண்டுதான் பேசிக் கொண்டிருந்தார்.

நான் வேறு ஏதோ ஒரு வேலையை செய்து கொண்டிருந்தாலும் என் காதுகளை அவரது சில அறிவு பூர்வமான பேச்சுக்கள் ஈர்த்தன. அது ஒரு கட்டிடத் தொழிலாளியின் பேச்சாக இருப்பது கண்டு மனதளவில் வியந்து கொண்டிருந்தேன். அவரது ஆலோசனைகள்….. பேச்சுக்கள் எல்லாமே முடிவது வரை காத்திருந்தேன்….

அவரிடம் நீங்கள் பேசும் பேச்சு படித்தவர் பேச்சு போல் இருக்கிறதே ? என்று நான் கேட்கவே, அவர் சிரித்துக் கொண்டே M.A எக்னாமிக்ஸ் படித்திருக்கிறேன் என்றார்,

வெளிநாட்டில் வேலை செய்து இப்போ இந்தியாவில் இருக்க வேண்டிய சூழ்நிலை.  கம்பெனியில் அலுவலக வேலை பார்த்தபோது அந்த நிறுவனம் செய்யும் தொழிலையே தானும் கற்றுப்பின் செய்ய முற்பட்டு ,தற்பொழுது நம்ம ஊரில் கட்டிட உட்பகுதியழகினை மெருகூட்டும் பணிதனை செய்து கொண்டிருக்கிறேன்….. என்னாலும் அனைத்து வேலகளையும் செய்ய முடியும்…. நான் முதலாளியாக இருந்தாலும் நானும் ஒருஆள் செய்யும் வேலையைச் செய்வேன்….. அதனால் நான் எடுக்கும் பணியில் நஷ்டம் வராமல் பார்த்துக் கொள்வேன்……. பேசி விட்டு சென்று விட்டார்…….

நாட்கள் நகர்ந்தன. இன்று (13 ஆகஸ்டு 2015) நான் கேட்டுக்கொண்டதால் என் வீட்டுக்கு ஒரு சிறிய பணிதனை செய்திட அவர் வந்தார். வந்தபோது என் வீட்டின் முன் அறையில் முகம் பார்க்கும் கண்ணாடியில் அப்துல் கலாம் அவர்களின் படம் இருக்கக் கண்டார்….

அவர் ,’ என் வீட்டில் ஃப்ளெக்ஸில் அவர் படம் வைத்திருக்கிறேன் “ என்றார்…

நான்,” உங்களுக்கு அவரை ரெம்ப பிடிக்குமா” கேட்டேன்.

”ஆம்…..நான் செய்யும் பணிக்கு அடித்தளமிட்டவரே அவர் தான்…..எப்படி அவரை என்னால் மறக்க முடியும்….. அவர் உடலை ராமேஸ்வரத்தில் விதைத்தபோது  நான் அங்கு தான் இருந்தேன்……”
சொல்லிக் கொண்டே இருந்தார்…..வியப்போடு நானும் கேட்டுக் கொண்டே இருந்தேன்…

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையில்…..அப்துல்கலாம் ஆலோசனைப்படி பத்து திருக்குறட்பாக்கள் GRANITE கற்களில் பொறிக்கப்பட்டு பதிக்கப் பட்டுள்ளதல்லவா…. அதனை ….அப்பெருமை மிகு பணிதனை செய்து முடிக்கும் பாக்கியம் தனக்கு கிடைத்தது என்றார் அவர்.

அதற்காக அண்ணா பல்கலைக் கழகத்திற்குச் சென்று முன்னாள் ஜனாதிபதியாக இருந்த மாமனிதரிடம் ஆலோசனகள் பெற்று பணிதனை மிகச் சிறப்பாக செய்து முடித்திருக்கிறார்…….அவரது கையெழுத்தை வெள்ளைத்தாளில் பெற்று வந்ததை …. தன்னை நம்பித்……தந்ததை தான் பெற்ற பெரும் பேறாகக் கருதுகிறார்…..கலாமின் படமும் அக்கல்வெட்டில் உள்ளது….

 அக்கல்லில் பணிதனை முடித்தவர் பெயரையும் போடச் சொன்னதோடு அலைபேசி எண்ணையும் போடச்சொன்னாராம் அப்துல்கலாம்……..
அந்த பெயர் altonestnes@gmail.com  cell no: 9442450574


 ஒரு மாமனிதரின் அருள்பார்வை கிட்டிய அந்த நிறுவனத்தின் உரிமையாளர் திரு.அருள். எங்கள் இந்துக் கல்லூரி வைரவிழா கட்டிட உள் அரங்க அழகூட்டும் பணிதனை செய்தவர்......

Friday, August 7, 2015

தொண்டுள்ளம் கொண்ட ஓய்வறியா பேராசிரியர் முருகன்

தொண்டுள்ளம் கொண்ட ஓய்வறியா பேராசிரியர்
என் கடன் பணி செய்து கிடப்பதே….. கடமையைச் செய் பலனை எதிர்பாராதே….என்ற வரிகளுக்கு உரிமை கொள்ளும் ஒரு உத்தமரை…வாழும் ஒருவரை மாணவர்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்…. மறைந்த மாமனிதர் அப்துல் கலாம் வாழ்நாளில் இளைஞர்களைச் சந்தித்துக் கொண்டே இருந்தார்….. அதுபோலவே செயலாற்றிக் கொண்டிருக்கும் ஆசிரியரை  வெளியுலகும் அறிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவே இந்தப் பதிவு……
நான்கு புத்தகங்கள் எழுதிய இந்தத் தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரியில் பணியாற்றி 2011-இல் ஓய்வு பெற்ற CHEMISTRY பேராசிரியர் திரு.S.முருகன் , நுண்ணிய அளவிலான வேதியல் பரிசோதனைகள் சம்பந்தமாக ,கல்லூரிப் பரிசோதனைக்கூடங்களில் அதிகப் பொருட்செலவைக் குறைக்க  microscale technique –ஐப் பயன்படுத்தவும் ,அதனால்  சுற்றுப்புறச் சூழ்நிலை பாதுகாக்கப் படுவதையும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் விளக்க முனைந்து இன்றைய தேதி வரை 95 கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் சென்று நற்பணியாற்றிக் கொண்டே இருக்கிறார்….. வெளி மாநிலங்களான கேரளா (28) , கர்நாடகா(3), மஹாராஷ்ட்ரா (2) கல்லூரிகளுக்கும் போய் சிறப்புரையாற்றியும் செய்முறைப் பயிற்சிகளை செய்துகாட்டியும் மைக்ரோ தொழில் நுட்பத்தை ஆசிரியர்கள் மத்தியில் விளக்கிக் கொண்டிருக்கிறார். சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் ஆகஸ்ட் 24-இல் நடைபெறும் தமது நூறாவது கருத்தரங்கத்திற்கு ,இவரது சேவையைப் பாராட்டும் விதமாக அவரது குருவான பேராசிரியர் Dr.S.L.KELKAR பூனேயில் இருந்து வர இருக்கிறார்..
இத்தொழில்நுட்பம் பற்றிய இவரது கட்டுரை 2013-இல் வலைதளத்தில் வேதியல் சம்பந்தப் பட்ட (The journal of Applicable Chemistry ) இதழில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பஞ்சபூத மருத்துவரான இந்தப் பேராசிரியர் மருந்தில்லா மருத்துவம் பற்றி நாகர்கோவில் வானொலி நிலையத்தில் பேசியது 2009-இல் ஒலிபரப்பானது.

இலவசமாகவே தம்மை நாடிவருபவர்களுக்கு மருத்துவம் பார்க்கிறார்.
இதை மட்டுமா இவர் செய்திருக்கிறார். மூக்கில் விரலை வைத்து ஆச்சரியப்படும்படியான வகையில் அவரது செய்கை பல உண்டு.

அது அவர் பயின்ற, பயிற்றுவித்த தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி வளர்ச்சிக்காக ஐந்து லட்சம் ருபாய் கொடுத்ததைப் பதிவு செய்வதா! 

ஆசிரியர் இயக்கத்திற்கு இரண்டு லட்சம் கொடுத்ததைச் சொல்வதா! தன் வீட்டில் பணிபுரிந்து ஓய்வுற்ற வயதான பெண்கள் இருவருக்கும் தலா ஒரு லட்சம் கொடுத்ததைச் சொல்வதா !  எதைச் சொல்வது…... 

ஓசையின்றி கொடுத்துக் கொண்டே இருக்கும் ஒப்புயர்வு பெற்ற இதயம் கொண்டவரை எப்படிப் பாராட்டுவதென்றே தெரியவில்லை……
நல்ல மனம் வாழ்க……