Sunday, July 31, 2011

மறக்கலாமா நல்லவைகளைச் செய்த பெரியவர்களை

கடுக்கரை ஆ.அணஞ்சபெருமாள்,கடுக்கரை .

இவர் திருவிதாங்கூர் தமிழ் நாடு காங்கிரஸ் இயக்கத்தில் ஈடுபட்டு மொழிப்போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைவாசம் அனுபவித்தவர்.
மணியங்கரம் ஒழிப்பு இயக்கத்தில் கலந்து பணியாற்றியுள்ளார்.

கடுக்கரை ஆரம்பப் பள்ளியை நடுநிலைப் பள்ளியாக்கவும் பக்கத்து ஊரான குறத்தியறை ஆரம்பப்பள்ளியை நடுநிலைப்பள்ளியாக ஆக்கியதுடன் பெரும் முயற்சி எடுத்து 1963-ல் அதை உயர் நிலைப்பள்ளியாக்கிய பெருமையும் இவருக்கு உண்டு.

நாகர்கோவிலில் பொன்னப்பநாடார் நகரில் நியூகவிமணி காலனி என்ற 51 மனைகள் கொண்ட குடியிருப்பை உருவாக்கியவர் மறைந்த அந்த பெரியவர். அவர் தம் பெயரால் ஒரு சாலைக்கு பெயரிடப்பட்டுள்ளது. தெற்கு வடக்காக செல்லும் அகலம் கூடிய அந்த சாலையின் பெயர் “அணஞ்சபெருமாள் சாலை”.

இவரது மூத்தபுலவர் திரு. ஆறுமுகம்பிள்ளை அவர்கள் ஓய்வு பெற்ற இந்துக்கல்லூரி ஆங்கிலப் பேராசிரியர்.

Friday, July 29, 2011

என் தந்தையார் பற்றி குமரி மாவட்ட சிறப்பு ஏடு

கடுக்கரை கே.எம்.ஆறுமுகப்பெருமாள் பிள்ளை

இவர் நாஞ்சில் நாட்டில் கடுக்கரை என்னும் ஊரில் ஒரு வசதிபடைத்த புராதீன குடும்பமான திரு. மெய்க்கும்பெருமாள் பிள்ளை திருமதி. ஈஸ்வரவடிவு தம்பதியருக்கு மூத்த புதல்வராக 8-1-1905ல் பிறந்தார். இவர் திருமதி.பகவதியம்மாள் அவர்களை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று புதல்வர்களும் இரண்டு புதல்விகளும் உள்ளனர்.பிள்ளை அவர்கள் சமயநெறி வழிபாடு சமூக அக்கரைகள், கல்வி வளர்ச்சியில் பங்காற்றல்,மனித நற்பண்பு போன்ற நற்குணங்களை உடையவராவர்.

கடுக்கரை கிராமம் அழகியபாண்டியபுரம் பஞ்சாயத்தின் கீழ் ஒரு வார்டாக அறிவிக்கப்பட்டது.1959-ம் ஆண்டு மயில் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றபின்
அழகியபாண்டியபுரம் பஞ்சாயத்து தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு ஐந்து ஆண்டு காலம் பணியாற்றி உள்ளார். அந்நாளில் கடுக்கரையையும், காட்டுப்புதூரையும் சாலை இருக்கவில்லை.இப்போது காண்கின்ற சாலையை உருவாக்கியவர் இவரே. இவரது இப்பணியினை இன்றும் அங்கு வாழும் மக்கள் நன்றியுடன் நினைவுகூர்கிறாரகள்

பொதுப்பணிகளில் இவர் மிகுந்த அக்கரை காட்டியுள்ளார். பொதுநலன்களை முன்னிட்டு நிதி திரட்டும் போது,பொருளுதவி செய்பவர்களில் எப்பொழுதும் முதல் நபராக முன்னிற்பவராவர்.

கடுக்கரையில் ஐயப்பன் கோவில்கட்டுவதற்கு சுமார் ஒரு ஏக்கர் நிலத்தை இவர் அன்பளிப்பாக கொடுத்துள்ளார்.

நாகர்கோவில் இந்துக்கல்லூரியை உருவாக்கியதில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு. கல்லூரி நிர்வாகக்குழுவின் உதவி தலைவராகவும் பொருளாளராகவும் பணியாற்றினார். எண்ணற்ற மாணவர்களுக்கு இக்கல்லூரியில் படிப்பதற்கான உதவிகள் பல புரிந்துள்ளார்.

இவரது ஈகை குணம் இவரது சந்ததியாரிடமும் தொடர்ந்திருப்பதற்கு சான்றாக இளையபுதல்வர் திரு, ஆ. பொன்னப்பன் (கணிதப்பேராசிரியர், இந்துக்கல்லூரி, நாகர்கோவில்) தன் தந்தைவழி நின்று தனது சொத்துக்களிலிருந்து 25 சென்ட் பூமியை அண்மையில் சர்வோதய இயக்கத்திற்கு அன்பளிப்பாக கொடுத்துள்ளார்.

இவரது மூத்த புதல்வர் திரு மெய்க்கும்பெருமாள் பிள்ளை அவர்கள் நெய்வேலியில் இஞ்சினீயராக பணியாற்றுகிறார். இரண்டாவது புதல்வர் திரு. சங்கரநாறாயணபிள்ளை அவர்கள் விவசாயத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். கடைசி புதல்வரான திரு. பொன்னப்பன் அவர்கள் நாகர்கோவில் இந்துக்கல்லூரியில் கணிதப்பேராசிரியராக பணியாற்றுகிறார்.

திரு. ஆறுமுகப்பெருமாள் பிள்ளை அவர்கள் 1981-ம் வருடம் டிசம்பர் மாதம் 25-ம் தேதி இறைவனடி சேர்ந்தார்.

குறிப்பு :-
26-1-1988 ல் வெளியான கன்னியாகுமரி மாவட்ட சிறப்பு ஏடு. By வி.எஸ். ஆபிரகாம், மனோரமா பப்ளிஸிட்டி, வீராணமங்கலம், தாழ்க்குடி அஞ்சல். கன்னியாகுமரி மாவட்டம் .

தினமலர் நிறுவனர் அமரர் டி.வி. இராமசுப்பையர் அவர்களின் ஞாபகர்த்த வெளியீடு “கன்னியாகுமரி மாவட்ட சிறப்பு ஏடு”

மகாத்மா காந்தி நூல் நிலையம் மறைந்தது....

இளைஞர்கள் ஒன்று கூடி அழகான நூலகம் அமைத்து ஜீவா வாலிபர்கள் சங்கம் என்ற பெயரிட்டு எல்லோரும் வந்து படிக்க வசதியாக ஒரு ஊர்க்கட்டிடத்தை தேர்ந்தெடுத்தார்கள். அது பின்னாட்களில் கால மாற்றத்தினால் ஏற்பட்ட சூழலில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு ஊர்வகை லைபறறியாக மாறியது.

அது தான் மகாத்மா காந்தி நூல் நிலையம் . அது இரண்டு அறைகள் கொண்டது. முன் அறை கிழக்கு மேக்காக ஒரு நீண்ட வராந்தா போல் இருக்கும். அந்த அறைக்கு அடுத்த அறை சதுர வடிவமானது. அதன் வடக்கு, மேற்கு சுவர்களை ஒட்டி பெரிய மர அலமரிகள். ஒரு மேஜை , செயர்.... லைபறறியன் ஒருவர் உண்டு. அவருக்கு சமுதாய ட்றஸ்டு சம்பளமாக ஒரு கோட்டை நெல் கொடுப்பார்கள். காலையிலும் மாலையிலும் திறந்து , கதை புக்கை சந்தாதாரர்களுக்கு எழுதிவைத்து விட்டு கொடுப்பதுதான் அவரது வேலை.

அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட கலைக்களஞ்சியங்களின் எல்லா தொகுதிகளும் உண்டு. வருடம் தோறும் அரசு மான்யமாக வழங்கும் தொகைக்கு புக்குகள் வாங்குவதுண்டு. நாஞ்சில் நாட்டில் அதிக புஸ்தகங்களைக் கொண்ட மூன்று லைபறறிகளில் கடுக்கரை மகாத்மா காந்தி நூல் நிலையமும் ஒன்று. குமுதம், ஆனந்தவிகடன்,கல்கி,கலைக்கதிர், தினமணி, தினமலர் பேப்பர் எல்லாம் உண்டு.

நாத்திகம், முரசொலி ,இந்தியன் எக்ஸ்பிரஸ் களை யாராவது வாங்கிப் போடுவதுண்டு.
வயதில் பெரியவர்கள் உள் அறையில் இருந்து படிப்பார்கள். லைபறறியன் இருந்தால் வெளி அறையில் இருந்து படிக்கும் மாணவர்கள் அமைதியாக இருப்பார்கள். அவர் இல்லையென்றால்
மாணவர்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான்.பெரியவர்கள் சொன்னாலும் கேட்பதில்லை...அதில் சட்டம்பியான பெரிய ஆட்கள் இருந்தால் பயந்து போய் பேசாமல் இருப்பதுண்டு.

ஒவ்வொரு காலகட்டத்திலும் அந்தக்காலத்து இளைஞர்களால் தான் நூலகம் பெருமை பெற்றது.கடுக்கரை கிராமம் என்றாலே கமபர் ராமன் பிள்ளை , கவி உடையார்பிள்ளை, மணமேடை அய்யாவு இவர்களை பற்றித்தான் மற்றவர்கள் கேட்பார்கள்.

கம்பர் ராமன்பிள்ளைக்கு கம்பராமாயணம் முழுவதும் மனப்பாடமாக தெரியும். மாணவர்கள் தாங்கள் படித்த புக்கை கொண்டுவந்து அதில் உள்ள ராமாயணப் பாடலின் முதல் வரியை பார்த்துப் படித்தால் பெரியவர் அதனை முழுவதுமாக ராகத்தோடு பாடி அதன் பொருள் கூறி விளக்கமும் சொல்வார். அவர் வறுமையில் தான் வாழ்ந்து மறைந்தார்.

நூலகக் கட்டிடம் உருமாறி இருக்கிறது இப்போது . ஆனால் நூலகம் இல்லை.? அலமாரிகள் எங்கே..? மதிப்பு மிகுந்த நூல்கள் எங்கே..? பிரமிக்கும் படியான பல போட்டோக்கள் போன இடம் தெரியவில்லை....அந்தக் கட்டிடத்தில் இப்போ என்ன இருக்கிறது..? யாருக்கும் கவலையுமில்லை...அக்கறையுமில்லை.... காந்தி மகானை தேசமும் மறந்தது. கடுக்கரையும் மறந்தது....

Wednesday, July 27, 2011

மந்திரத்தை நம்பி மதி இழந்ததால் ஏற்பட்ட கொடுமை

கிச்சனும் கணபதியும் பள்ளியில் வகுப்புத் தோழர்கள்.

கிச்சனின் அப்பா வசதி படைத்த நல்ல மனம் படைத்தவர்.
கணபதிக்கு அப்பா கிடையாது.

அம்மை தினமும் மோர் விற்று அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்துதான் இருவரும் காலத்தை கழித்துக் கொண்டிருந்தாரகள்

கணபதி நன்றாகப் பாடுவான். ஒரளவு படிக்கவும் செய்வான். தினமும் காலையில் ஒரு பையை எடுத்துக்கொண்டு போய் பின்னங்கொட்டை பொறுக்கி அம்மாவிடம் கொடுப்பான். அதை காசாக்கி சேமித்து வைப்பாள். அறுவடை காலத்தில் அறுக்கும் வயலில் உதிர்ந்து கிடக்கும் கதிரை எடுத்தும் ,தேங்காய் வெட்டும் தோப்பில் தேங்காய் பொறுக்கிப் போட்டால் கிடைக்கும் தேங்காயையும் கொடுத்து அம்மாவின் சுமையை அவனும் சுமந்து வந்தான்.

கிச்சனுக்கும் கணபதிக்கும் படிப்பதில் போட்டி.தினமும் இருவரும் சேர்ந்தே பள்ளிக்கூடம் போவார்கள்.கணபதி பள்ளிக்கு வரவில்லையென்றால் கிச்சனுக்கு வகுப்பில் இருக்கவே பிடிக்காது. மாலையில் அவன் வீட்டில் போய் பார்த்து அவனுடன் பேசினால் தான் கிச்சன் நிம்மதியடைவான்.கிச்சனுக்கு குடிக்க மோர் கொடுப்பாள் கணபதியின் அம்மா.காசு கொடுத்தாலும் வாங்க மாட்டாள்

சிவாஜி, எம்.ஜி.ஆர் -ஐ தியேட்டரில் அவன் பார்த்ததே இல்லை. சுவரில் தான் பார்த்திருக்கிறான்.கிச்சன் கூப்பிட்டாலும் சினிமா பாக்க போக மாட்டான். கிச்சனுக்கும் கணபதியில்லாமல் சினிமா பார்ப்பது பிடிக்கவில்லை. நிறுத்தி விட்டான்.கிச்சனிடமும் எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. காரணம் கணபதி. அவன் வறுமையிலும் நேர்மையானவன்.

தன்மகன் நல்ல பண்புகளுடன் இருப்பதற்கு காரணமே கணபதியின் நட்புதான் என கிச்சனின் அப்பா அவனிடமே கூறுவார். புஸ்தகம் வாங்க காசு கொடுத்தாலும் கணபதி வாங்க மாட்டான்.
கணபதி கிச்சன் வீட்டுக்கோ, தோட்டத்துகோ போவான் ஆனால் வேலை செய்து காசு வாங்கவே மாட்டான்.கிச்சன் வீட்டில் கணபதிக்கு அதிக மதிப்புண்டு.

கீச்சானின் சப்தம் கேட்பதற்காக கீச்சானை வைத்து பள்ளி மாணவர்கள் களிப்பதுண்டு

கணபதிக்கு கீச்சான் பிடித்துக் கொடுத்தால் நாலணா ,எட்டணா கிடைக்கும்.

கணபதியின் அம்மா அவனிடம், “கீச்சான் பிடிக்க மரத்திலெல்லாம் ஏறாதே..விழுந்திருவ”

ஒரு மத்தியான வேளை. ஊரெல்லாம் ஒரே பேச்சு “கணபதியை பாம்பு கொத்திற்று.”

கிச்சன் காதிலும் விழுந்தது. ஒடினான். எங்கெல்லாமோ தேடி கடைசியில் அவன் இருந்த இடம் அறிந்து அங்கே போனான். அந்த வீட்டின் படிப்புரையில் மயங்கிய நிலையில் கிடந்தான்.
கிச்சனுக்கு அழுகையே வந்தது... திரும்ப வீட்டுக்கு ஓடிப் போய் அவன் அப்பாவிடம் விசயத்தைக் கூற அவரும் வந்து பார்த்து , “ கணபதியை ஒரு டாக்டரிடம் அல்லது நம்ம வைத்தியரிடமாவது காண்பிக்கலாம்......கடித்த இடத்தில் ஒரு கயறு வைத்து கட்டவாவது கூடாதா....” சத்தம் போட்டார்.

கணபதியின் அம்மா அழுது கொண்டே இருந்தாள்... அங்கிருந்த ஒரு ஆள், கணபதியின் சொந்தக்காரன்,“ அந்த வீட்டில் உள்ளவருக்கு மந்திரம் எல்லாம் தெரியும்...விசத்தை இறக்கீருவாரு....அவர்தான் கட்டியிருந்த கயிற்றையும் அவிழ்த்துட்டாரு...”

விசம் வேகமாக தலைக்குப் போயிற்று

கணபதியின் நிலமை மிக மோசமானது... யாரொ ஒருவர் உள்ளூர் வைத்தியரை அழைத்து வந்து அவர் கணபதியின் உயிர் பிரிந்தது என சொன்ன பிறகு தான் உண்மை தெரிந்தது.

மந்திரம் மகனைக் காப்பாற்றும் என நினைத்த தாய் கதறினாள்.... ஊர்க்காரர்கள் மந்திரவாதியை ஏசியும் அவர் வீட்டின் மீது மண்ணையும் கல்லையும் வீசினாரகள்.

கிச்சன் மாத்திரம் பயித்தியம் பிடித்தது போல் அழுது கொண்டே போனான்.

கிச்சனின் அப்பா, “ மந்திரத்தை நம்பி மதியையும் இழந்துட்டோமே. ஏன் , அந்த கயிற்றை அவிழ்த்தான்... இது கூட தெரியாத சண்டாளனா அந்த.........”

ஒரு பெரியவரின் வாழ்வில் நடந்த சம்பவம்

அந்தி நேரம். களம்...அது ஒரு பரந்த இடம். கடுக்கரை ஊர்.....

ஒரு பெரியவர் வானத்தை உற்று நோக்கியபடி தன் கைகளை தன் நெஞ்சில் கும்பிடுவது போல் வைத்துக்கொண்டு நிற்கிறார். நெற்றி முழுவதும் உள்ள வெள்ளைத்திருனீறு நிறம் பார்ப்பவர்களை வசீகரிக்கும்.

அவர் வானில் தேடுவது வட்டமிடும் கிருஷ்ணப்பருந்துவை .ஒரு குறிப்பிட்ட சமயம் அந்தப் பெரியவரின் தலைக்கு நேர் மேலாக பறப்பதை பார்த்தபின் தான் அவர் அந்த இடத்தை விட்டு நகர்வார். அவருக்கு தினமும் அது கடவுளையே பார்ப்பது போல.

அன்று ஒருவன் அவர் முன்னே மிகவும் பணிவாய் நிற்பதை கருடபகவானைக் கண்டபின்தான் கவனித்தார்.

“ம்ம்ம்.. என்ன அப்பதே நிக்கியா ?”

“ஆமய்யா...”

“என்னா.. சொல்லு...”

“அந்த மேலப் பொத்தையில் எனக்கு நீங்க தந்தீங்கள்ளா ...அதுக்கு பக்கத்தில ஒரு 5 சென்று இடம் வேணும் தோட்டம் போடணும்”

“ அத அந்த சொள்ளயாண்டிக்கு கொடுத்திட்டேனே. ஓன் இடத்திலே சாமியெல்லாம் வச்சு பதிதான சொல்லிகிட்டிருக்க, அது போதும்”

“ அய்யா அவனுக்கு கொடுக்காதீங்கோ....” சொல்லி முடிக்கவில்லை.

“ வாக்கு கொடுத்தாச்சு. இனி அதெல்லாம் நடக்காது. நீ போயிரு இங்கிருந்து”

“ நீங்க அவனுக்கு கொடுத்தால் நான் விடமாட்டேன் அந்த இடத்தை...” மிக்க ஆக்ரோசத்துடன் கத்தினான்

பெரியவர் சற்றே கோபத்துடன் , “ மரியாதையா போயிரு....இல்லண்ணா என்னமாது வாங்கிட்டுதான் போக வேண்டியதிருக்கும். போ..போ..சொன்னாக்கேளு”

“ இப்பம் போறென்... நான் மந்திரவாதிண்ணு தெரியுமில்ல...இன்னும் இரண்டு நாள்ல உங்க கால முடக்கிப் போடுதேன் பாரும்..” சொல்லிவிட்டு போனான்

அன்று இரவு முழுவதும் பெரியவருக்கு ஒரே மனக் குழ்ப்பம். கடவுளை தினமும் கும்பிட்டாலும் மந்திரவாதியை கண்டு எல்லோரும் பயப்படுவார்கள். பெரியவரும் பயந்து கோண்டே தூங்கினார்.

இரண்டு நாட்கள் கழிந்தன. அன்று மாலை எப்போதும்போல் வானில் வடடமிடும் கருடபகவான் தன் கண்ணுக்கு எப்போது காட்சி தருவார் என்று மேலே பார்த்துக்கொண்டே நின்றார்.

“அய்யா?.. என்ன மன்னிச்சிருங்கய்யா ” என்று கூறியவாறே பெரியவரின் காலில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து கிடந்தான் மந்திரவாதி

“சரி..சரி.. எந்தி..”

அவன் எழுந்தான். அவனது முகத்தைப் பார்த்து , “ ஏண்டா... என்ன ஓன் முகத்துல”

“ நான் தப்பு பண்ணிற்றேன். நீங்க எனக்கு என்னமாம் சாபம் போட்டீங்களா கோபத்தில....மொகம் மாத்திரமில்ல...என் மேல் பூரா கொப்புளமா உருண்ட உருண்டையா இருக்கு....உங்களுக்கு நான் வச்சது ஒண்ணுமே பலிக்கல..அய்யா என்ன காப்பாத்துங்க...”

ஒன்றுமே புரியாமல் பரிதாபமாய் நின்ற பெரியவர் வருத்ததுடன், “ போ...போய் ஏதாவது டாக்டரைப் பார்.” கூறினார். அவன் போனதும் ,

வானத்தை அண்ணாந்து பார்த்தார் பெரியவர். கருடன் வட்டமடித்து விட்டு போனது.

மந்திரவாதி ஒரு வாரத்தில் சிகிச்சை பயனின்றி மறைந்தான்

கெடுவான் கேடு நினைப்பான்

Friday, July 22, 2011

நான் படுத்திய பாடு

எட்டாம் வகுப்பு முடிந்ததும் அடுத்து 9-ஆம் வகுப்புக்கு பூதப்பாண்டிக்கு நடந்துபோய் உயர் நிலைப் பள்ளியில் படிக்கணும் . காலையிலும் மாலையிலும் நடக்கணும்.

எனக்கு டி.சி வாங்கி அப்பா என்னை பூதப்பாண்டி ஹைஸ்கூளில் கொண்டு போய் சேத்தாங்க.

புது விதமான சந்தோசத்தில் இருந்த போது என் நண்பன் பப்பு, “ நான் திருவனந்தபுரத்தில் என் மாமாவின் வீட்டில் நிண்ணு படிக்கப் போறேன்...” மகிழ்ச்சியோடு கூறினான்... அய்யோ எனக்கும் ஒரு மாமாவோ யாருமே திருவனந்தபுரத்தில் இருக்கப்டாதா...பப்பு போவது வருத்தமாக இருந்தது

“தங்கப்பா...நானும் சந்திரனும் நாரூல்ல டி.வி.டி பள்ளியில் படிக்கப்போறோம் ..” சுரேந்திரன் கூறினான்.... ஓரு பேச்சுக்குக் கூட என்னை நீயும் வாயேன் எங்கக்கூட என்று சொல்லவில்லை.

“நீ எப்படிப் போவ... பஸ்ஸிலா...”

“இல்ல.. சின்னம்ம வீட்ல நிண்ணு படிக்கப்போறேன்”

“எனக்குண்ணு அப்படி யாருமே இல்லையே”...மிகவும் நொந்து போனேன்.

பள்ளிக்கூடம் திறந்து போக ஆரம்பித்தோம்... ஆனால் கொஞ்சம் கூட இஷ்டம் இல்லாமலே நான் போய் வந்து கொண்டிருந்தேன்.

எங்க அம்ம அப்பாட்ட ,“தங்கம் நாரூல்ல படிக்கணுங்கான் “.

“ போ ஒங்க மாமாவைக் கூட்டீற்றுப் போய் சேந்துக்கோ”.அப்பா என்னைப் பாத்து சொன்னார்

உடனே என் தாய் மாமாவைப் பார்த்துச் சொன்னேன்.DEO –டம் அனுமதி வாங்கி பூதப்பாண்டியில் இருந்து TC வாங்கி கார்மல் பள்ளிக்கூடத்தில் சேர்த்து Hostel-லும் சேர்த்து விட்டார்.

முதல் ரெண்டு நாள் ஊரில் இருந்து வந்தேன்.

அந்த சமயத்தில் ரவி பூதப்பாண்டியில் 11-ஆம் கிளாஸ் படித்துக் கொண்டிருந்தான்.

என்னைப் பார்த்து அவனும் கார்மலில் வந்து சேர்ந்தான்.

திங்கள் வந்தது. வகுப்புகள் முடிந்தன. ஹாஸ்டலில் தனியாக ரூமில் இருக்கணும் என்ற சிந்தனையில் போன எனக்கு முதல் அதிர்ச்சி படுக்க படிக்க எல்லாத்துக்குமே ஒரு பெரிய ஹால். என்னுடைய தட்டமும் கப்பும் படுக்கைக்குப் பக்கத்தில் இருந்தன.

விளையாட்டு மைதானத்திற்கு எல்லாரும் போனார்கள். நானும் போனேன்.
6 மணியானதும் பெல் அடித்தார்கள். படிக்க ஆரம்பித்தாரகள்.. 7.30க்கு மணி அடித்தது தட்டத்தை எடுத்துக் கொண்டு சாப்பிடப்போனோம்.

மறுபடியும் மணி அடிக்க படிக்க ஆரம்பித்தோம்....ஒரு குறிப்பிட்ட நேரம் முடிந்ததும் தூங்கப் போகணும். இவை எதிலுமே என் மனம் ஒன்றவில்லை.

மறுநாள் காலை எனக்கு காய்ச்சல். ஒரு லீடர் உண்டு. தவ்று செய்தால் பெயர் எழுதிக் கொடுக்கும் ஒரு பவர்புள் அதிகாரம் அவனுக்கு உண்டு. எல்லோரும் அவனுக்கு பயப்படணும். எனது லீடர் வள்ளிநாயகம் (அழகியபாண்டியபுரம்).

“என்னா பொன்னப்பா எப்படி இருக்கே... முகமே ஒரு மாதிரில்லா இருக்கு... காச்சலா... புடிக்கல்லியா.... வீட்டுக்கு போணுமோ” கேட்டான் வள்ளி.

நான் ஒண்ணுமே சொல்லல்ல.... முதல் வாரமானதால் வெள்ளியன்று கடுக்கரையில் இருந்து என்னைகூட்டிகொண்டு போக பிச்சக்கண்ணு பிள்ளை வந்தார்.

அவருடன் போகும்போது அவர் என்னைக் கேட்டது. “ ஹாஸ்டெல்லாம் புடிச்சிருக்கா”

திங்கள் காலை அம்மையிடம், “ நான் படிக்க மாட்டேன்... படிக்கணும்னா வீட்டில் இருந்து

தினமும் பஸ்ஸில போறேன்”

“ இப்பம் அப்பா வருவா... சொல்லு நல்லா அடிபடப்போற..”

நான் என் ஆச்சி இருந்த அறையில் போய் இருந்து கொண்டேன். அந்த ஒரு ரூமுக்கு அப்பா வரமாட்டார்.

ஆச்சி ,”போ மக்கா உன்ன நம்பில்லா ராசத்துக்கு மகனும் அங்க வந்து சேந்திருக்கான். இந்த ஒரு வருசமும் படி போ...”

அப்பா அம்மையிடம் சொன்னது எனக்கு கேட்டது. “பஸ்ஸில போய்தான் படிக்கணும்னா

அவன் படிக்கவே வேண்டாம்.... நாளையிலிருந்து மாட்டை மேய்க்கச்சொல்..”

நான் மிகவும் அடம் பிடித்து ஆச்சியின் ரூமை விட்டு வெளியே வரவில்லை.....
சாப்பிடவும் இல்லை

நாட்கள் கழிந்தன.....அப்பாவின் மனம் மாறியது....அப்போதைய டி.இ.ஓ அப்பாவுக்கு மிகவும் தெரிந்தவர்.அவர்,பையன் நல்ல பள்ளிக்கூடத்திலதானெ படிக்கான்.படிக்கட்டும்..பையனை சப்பட்டையாக்கீராதீங்கோ.... என்ன செய்வதன்றே தெரியாமல் மனம் வருந்தி வீட்டுக்கு வந்தார்.

மாமா தான் எப்படியோ அனுமதி வாங்கி மறுபடியும் பழைய குருடி கதவைத்திறடி என்பது போல பூதப்பாண்டிக்கே வந்து சேர்ந்தேன்.

நான் என் தந்தைக்கு பலவிதத்தில் மன வேதனையையும் உளச்சலையையும் கொடுத்ததை

இன்று நினைத்தாலும் என்னையே எனக்கு பிடிக்காமல் போய்விடுகிறது.

Wednesday, July 20, 2011

தாழாக்குடியில் வாழும் ஒரு பெரியவர்

2003 November தினமணியில் வந்த செய்தி.......ராமன்பிள்ளை
______________________________________________________________

ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின் ஊதியமின்றி நூலகத்தை பராமரிப்பதோடு அப்பகுதியை சேர்ந்த பள்ளி,கல்லூரி மாணவ மாணவிகள் படிப்பதற்கு வழிகாட்டியாகவும் இருந்து வருகிறார் தாழாக்குடியை சேர்ந்த பி.ராமன்பிள்ளை.

1992-ல் ஓய்வு பெற்றபின் சமுதாயசேவை செய்ய விரும்பினார்.சேதமுற்ற நூல்களைத் தன் சொந்த முயற்சியில் சீர் செய்தார். சுமார் 3000 நூல்களைக் கொண்ட நூலகத்தை அழகுபடுத்தி அனைவரது பாராட்டையும் இவர் பெற்றார். ஊர் சார்பில் வழங்கப்பட்டு வரும் நெல்லை விற்று அதனை நூலக பராமரிப்புக்காக செலவு செய்து வருகிறார்.

இப்பகுதியில் படித்து வரும் பள்ளி மாணவ மாணவிகழுக்கு இலவசமாகவே கல்வி கற்றுத் தருகிறார். நூலகத்தை மையமாகக் கொண்டு கிராம வளர்ச்சி மன்றம் செயல்பட்டு வருகிறது.இந்த மன்றத்தின் சார்பில் மகளிர் சுய உதவி குளுக்களும் ஆடவர் குழுக்களும் உள்ளன.இந்த குழுக்களின் வரவு செலவு கணக்குகளையும் இவரே பராமரித்து வருகிறார்.

நூலகப்பணிகழுக்கிடையே ஆசிரியர் ஸ்ரீ மெய்கண்டான் எழுதிய ‘சிவஞான போதம்’ என்ற நூலுக்கு 350 பக்கங்களை விளக்கவுரையையும் எளிய நடையில் இவர் எழுதி முடித்துள்ளார்

கடுக்கரை ஆறுமுகம்பிள்ளையும் இடலாக்குடி ரஹீம்சாகிப்பும்

தந்தையின் நட்பை மதித்த மகன்

என் தந்தையின் உயிர் நண்பர்.அவர் பஸ் முதலாளியாக இருந்தவர்.அவரிடம் வேலைபார்த்தவர்களே பின்னால் பிரபல பஸ் முதலாளியானார்கள்.

அவருடைய புன்சிரிப்புதான் அவருக்கு அழகு. எப்பொழுதும் உண்மையே பேசுவதால் அவர் முகமும் அழகாகவே இருக்கும். தனக்காக ரயில்பிரயாணத்தின் போது ஒருவரை தன் மகன் அடித்து அது பிரச்சனையாகி போலீஸ் வந்து விசாரிக்கும்போது சாட்சி சொல்ல யாருமே முன்வராத நிலயில் அடித்தான் என்று சாட்சி சொன்னவர்.

வயதான காலத்தில் தனியாக இருக்க விரும்பி மணக்குடிக் கடற்கரையில் ஒரு இடம் வாங்கி ஒரு குடில் அமைத்தார்.அது அவருடைய பிள்ளைகளே அப்பாவுக்காக கட்டிக்கொடுத்தது.அங்கு தான் தங்கினார்.ஆன்மீகப் பயணத்தை தவிர அவர் எங்கும் எதற்கும் போவதில்லை.

அந்த ஊரில் கூட தண்ணீருக்காக கிணறு தோண்டினால் அது உப்பு நீராகவே இருக்கும். ஆனால் குடிலுக்கும் கடலுக்கும் இடையில் இவர் தோண்டிய இடத்தில் சுவையான நீர் கிடைத்ததை அவர் ஆண்டவன் கருணை என்றே கூறி வந்தார்.

வீட்டு வாசலில் அவர் அங்கு இல்லையென்றால் ஒரு அட்டை தொங்கும் அதில் இருக்கும் வாசகம் , “ வெளியூர் சென்றிருக்கிறேன்.திரும்பி வருவது ஆண்டவன் கையில்”.

என்னை அவரது பிள்ளை போலவே பாசம் காட்டுவார். நாகர்கோவில் வந்தால் மணிமேடைப் பக்கம் உள்ள ஒரு மாடியில் இருக்கும் அவரைப் பார்க்காமல் நானோ எனது அப்பாவோ
போனதே கிடையாது. என்னை பாளையங்கோட்டையில் St.Xaviours Hostel-ல் சேர்த்தவர் அவர். காலங்கள் கரைந்தோடின. கடற்கரையில் இருக்கும் அவரைக் காணச் சென்றேன்..அன்போடு உபசரித்தார்.

நான், “ மார்ச் 28-ஆம் தேதி எனக்கு கல்யாணம். கண்டிப்பா வரணும்”

அதற்கும் பதில் ஒரு புன்சிரிப்பு தான். அவரைப்பார்த்த பின் அவரது மகனையும் அவர் வீட்டில் போய் அழைத்தேன்.அவர், “ நாங்கள் எல்லோரும் கண்டிப்பாக வருவோம் ஆனா அப்பா வரவே மாட்டார்.இது வரை எங்கும் போனதில்லை அதனால நீ தப்பா நினச்சுராதே”

என் திருமணத்திற்கு அவரது மனைவி உட்பட எல்லோரும் வந்தார்கள்.பெரியவரை அவர்களுடன் காண வில்லை.

திருமணச் சடங்கு, சாப்பாடு எல்லாம் முடிந்து நான் ஒரு அறையில் இருக்கும்போது ஆஜானுபாகுவான பெரியவர் அவருக்கே உரித்தான அழகு தரும் அந்தக் காந்தக் கவர்ச்சிப் புன்னகையோடு வந்தார். நான் பட பட வென்று எழுந்து நின்று வரவேற்றேன்.

“பொண்ணக்கூப்பிடு... திருநீறு எடு”

நாஙகள் அவரது காலில் விழுந்து வணங்கி அந்த மகானின் ஆசி பெற்றோம் .

“ என்ன.. அப்படிப் பாக்குற..ஓங்கல்யாணத்திற்கு என்னால வராம இருக்க

முடியமா?.ஆறும்பிள்ளை ஏசிப்புடுவார்ல்லா ?” புன்சிரிப்போடு சொன்னார்....

நட்புக்கு அவர் கொடுத்த மதிப்பு கண்டு நான் மலைத்து விட்டேன். என் மேல் உள்ள

அன்பையும் நான் புரிந்து கொண்டேன்.என்அப்பா அடைந்த அதிக

மகிழ்ச்சியையும் கண்டேன்.

1979 என்று நினைக்கிறேன் வருடம் சரியா ஞாபகம் இல்ல. ஒரு நாள் ஒரு மத்தியான நேரம்

“தங்கம்... தங்கம்...” அழைத்தார் அப்பா. பதட்டத்தோடு காணப்பட்ட அப்பா என்னிடம்

“ நம்ம ரஹீம் இறந்துட்டாரு...எனக்கு நடக்க முடியாதுல்லா..நீ போவியா...”. அப்பாவின்

கண்களில் கண்ணீர் ..

இடலாக்குடி... அரிப்புத்தெரு.. அவர் வீட்டுக்குப் போனேன். பெரும் கூட்டம்

அவரது மகன் அன்சாரி என்னைக் கண்டதும் , “ தங்கம்.. இங்க வா”

என்னை அந்தப் பெரியவரின் உடல் இருந்த கட்டிலின் அருகே கூட்டிக்கொண்டு போனார்.

பெரியவரின் மேல் உள்ள போர்வையை முகத்தை பார்ப்பதற்காக சற்று அகற்ற முற்படும்போது

அன்சாரியிடம்,“ இனிமேல் துணியை நீக்கி முகத்தை காட்டக்கூடாது ” ஒரு பெரியவர்

சொன்னது என் காதிலும் விழுந்தது.

“ இது யாரு தெரியுமா ? கடுக்கரை ஆறுமுகம்பிள்ளையின் மகன். வாப்பா மதிக்கும் ஒரு

பெரியவரின் மகன்...இவன், முகத்தைப் பார்த்தால் தான் என் மனம் சந்தோசப்படும் என

உறுதியான குரலில் கூறவே, முகத்தினை மூடியிருந்த போர்வை முகம் மாத்திரம்

தெரியும்படி அகற்றப்பட்டது . அழகான அதேப் புன்சிரிப்பு....அவர் முகம் கண்ட நான் என்

முகம் பொத்தி வாய் விட்டு அழுதே விட்டேன்.

கனத்த மனதோடு வீடு வந்து சேர்ந்து என் தந்தையிடம் விவரம் கூறினேன்

நெகிழ்ந்து போன அப்பாவின் கண்களில் கண்ணீர் கரைபுரண்டு கன்னத்தில் வழிந்தோடியது.

நண்பனின் மறைவுக்காக என் அப்பா வருந்தியதை கண்டு நானும் கலங்கினேன்

நட்புக்கு வயோதிகமும் இல்லை மரணமும் இல்லை.

தந்தையின் நட்புக்கு மதிப்பளித்த

மகனின் செயல் இன்றும் என்நெஞ்சை வருடிக் கொண்டிருக்கிறதே.

மதம் கூட நட்புக்கு குறுக்கே வரவில்லையே...

Sunday, July 17, 2011

அனுமதி தராத விடுதி வார்டன்

நான் P.U.C இந்துக்காலேஜுல படிச்சேன்.

கடுக்கரையில் இருந்து எல்லோரும் பஸ்சில் வந்து படித்தார்கள்.எனக்கும் அதான் ஆசை.

எங்க அப்பா என்னை ஹாஸ்டலில் சேர்ந்துதான் படிக்கணும்ணு கண்டிப்பாக சொன்னதால் நான் கல்லூரியின் ஸ்ரீ சித்ரா விடுதியில் சேர்ந்தேன்

எனது ரூம் நம்பர் 2.என்னுடன் பள்ளியில் படித்தவனும் நான் காலேஜுக்கு சேந்த நாளில் வேலைக்குச் சேந்தான். அவனும் கடுக்கரைக்காரன் தான்.என்னுடன் அவனைப் பாத்த ஹாஸ்டல் வார்டன் கணிதப் பேராசிரியர் , “ நீ போ இனிமேல் இங்கேல்லாம் வரக்கூடாது.”

என் அறை நண்பர்கள் ஜவஹர், சிவபாலன்.

ஹாஸ்டல் வார்டன் மாறி பாட்டனி பேராசிரியர் வார்டனாக வந்தார். மிகவும் கண்டிப்பானவர்.

காலையில் ட்யூசனுக்கு வெளியே போகணும். அனுமதி தந்தார். இங்க்லீஸ் ட்யூசன் ப்ரின்சிபால் Prof. ஸ்ரீதரமேனோன் வீட்டில்.கணக்குக்கு HOD prof. சிதம்பரதாணுபிள்ளை.

சனிக்கிழமை சினிமா பாக்க அனுமதி தந்தார்.

இரண்டு வாரத்துக்கு ஒருமுறை வீட்டுக்குப் போகணும்னா அதற்கும் அனுமதி தந்தார்.

ஆண்டு இறுதியில் Study leave வந்தது. முதலாம் டிக்ரி மாணவர்களுக்கு தேர்வு கிடையாததால் அவர்கள் அனைவரும் வீட்டுக்கு போய்விட்டனர். எனக்கும் வீட்டுக்கு போகணும் போல் இருந்ததால் நான் சாரிடம் போய் அனுமதி கேட்டேன்.அனுமதி மறுக்கப்பட்டது.

“என்னா வீட்டு புளிக்காறி ஞாபகம் வந்துற்றா”.

“நான் வீட்டில் போய் படித்து பரீட்சை எழுதப்பபோறேன்”

“ அப்பாட்ட கேட்டாச்சா”

“ஆமா”

“ நீ ஒங்க அப்பாட்டப் போய்ச்சொல்.... நான் விடல்லேண்ணு”

அப்பாவிடம் போய் சொன்னேன். “ இன்னும் ஒரு மாசம் தானே படி மக்கா....பஸ்சில போய் அலையாண்டாம்”

சார் என் ரூமுக்கே வந்து, “ உனக்கு என்ன வேணும்டே. உனக்கு என்ன குறை இங்க”

வேண்டாவெறுப்புடன் தரமாட்டார் என நினைத்து , “ எனக்கு Single room வேணும்”.

அவர் “ இவ்வளவுதானா ... சரி..”

எனக்கும் கேட்டவர்களுக்கும் கேட்டது கிடைத்தது.

படித்தேன் . கணிதத்தில் நான் எடுத்த Grade D.physical Science A+

சாரைப் பாத்து என் க்ரேடைக் காணித்தேன்.

அவர் சொன்னது “புளிக்காறிக்கு வேண்டிப்போயிருந்தா இந்த மார்க்கு கிடைக்குமா”

அசட்டுச் சிரிப்புடன் நானும் சந்தோசத்துடன் விடை பெற்றேன்.

என் அப்பா அனுமதித்தும் அனுமதி தராத அந்த வார்டன் திரு. பறவைக்கரசு பிள்ளை.

இன்று பாத்தாலும் அதே நன்றியுணர்வோடு அவரிடம் மிக மரியாதையோடுதான் பேசுவேன்

என்னை அடித்த என் ஆசிரியர்

10-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போது ஃபெப்ருவரி மாதம் பொதுத்தேர்தல் நடந்து முடிந்து காங்கிரஸ் கன்னியாகுமரிதொகுதியில் வெற்றிபெற்ற நேரம்.எனது சின்னப்பா தோவாளை வட்டார காங்கிரஸ் தலைவர்.அவர் வெற்றிவிழா ஊர்வலத்துக்காக ஒரு பஸ் நிறைய ஆட்களை ஏற்றிக்கொண்டு போனார்.அதில் நானும் ஒருவன்.அன்று கிளாஸுக்குப் போகவில்லை.

அடுத்த நாள் வகுப்புக்குப் போனோம்.காலை வகுப்பு எந்தவித தொந்தரவும் இல்லாமல் கழிந்தது.
மத்தியான நேரம் என்னை சயன்ஸ் வாத்தியார் ,“ஏய்...! பொன்னப்பா இங்க வா....நேத்து ஏன் வரல்ல...” பொய் சொல்லக்கூடாது என நினைத்து உண்மையைச் சொன்னேன்.
அவரது முகமே மாறிவிட்டது. “அப்பாவுக்குத் தெரியுமா ?”.......“ தெரியாது”.....

மத்தியானம் முதல் பீரியடு சயன்ஸ் லேபில் வைத்து கிளாஸ்...பயத்துடன் வரிசையில் போய் என் இருக்கையில் போய் இருந்தேன்.

“நேற்று வராதவங்க எந்திரீங்க”

நானும் நிண்ணேன்...

“டெஸ்ட் பேப்பரில் 75 மார்க்குக்கு குறைவா எடுத்தவர்கள் எல்லாம் நில்லுங்க”

எனக்கு 95 மார்க்கு. ஆகவே நான் இருந்து விட்டேன்.

எந்த முக சலனும் இல்லாமல் அடுத்த டெஸ்டில் கூடுதலா எடுக்க வேண்டும் எனக் கூறி
அவர்களை இருக்கச் சொல்லி விட்டார்.

“90 மார்க்குக்கு கூடுதல் எடுத்தவங்க நில்லுங்க”

நானும் எழுந்து நிண்ணேன்

“நேத்து வராதவங்க மாத்திரம் நில்லுங்க”

நான் மாத்திரம் மரம் போல் நிண்ணேன்.

என்கையை நீட்டச்சொன்னார். பிரம்பால் அடித்தார். கூனிக்குறுகிப் போனேன்.

நான் மன இறுக்கத்தில் தினமும் கிளாஸுக்குப்போனேன். வாத்தியாரை எங்கே எப்பம் பார்த்தாலும் அவரை நான் பார்க்காமல்தான் இருப்பேன். நாட்கள் நகர்ந்தன.

ஒருநாள் அவர் ,“ பொன்னப்பா இங்க வாடே....கோபமா? நீல்லாம் படிக்கற பையன்லா.. உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்.இந்த வயசுல அரசியல்லாம் நமக்கெதுக்கு... நல்ல படி... போ” என்றார்

இப்போ என் மனசு லேசாயிற்று. அனேகமாக அவர் ஒருவரிடம் தான் அடி வாங்கிருக்கேன்.

இப்பவும் நான் நினைத்துப் பார்க்கிறேன்.....இது போன்ற வாத்தியாரகள் இன்று உண்டா?

Saturday, July 16, 2011

நண்பன் முருகனும் கடவுள் முருகனும்

1958-ல் புதிய பள்ளிகூடம். புதிய ஊர். 6-ஆம் வகுப்பில் சேர்ந்த எனக்கு புதிய நண்பர்கள் வெவ்வேறு ஊரிலிருந்தும் கிடைத்தார்கள். என்னை விட கூடுதல் படித்தவர்களுடனும் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அப்படி ஒருவர் தான் கருணாகரன். கதை எழுதும் திறமை உண்டு. ஒரு நாடகம் எழுதி கடுக்கரையில் நாடகம் போட்டதும் உண்டு. நடித்து வீட்டில் அப்பாவின் கோபத்துக்கு ஆளான கதையெல்லாம் நடந்தது.

முருகன் அவன் எம்.ஜி.ஆர் ரசிகன்..சுமாராகத்தான் படிப்பான்... நன்றாகப் படிக்கும் நாங்கள் கொஞ்சம் பேர் சிவாஜி ரசிகர்கள்....வெளியூருக்கு சினிமா பாக்கப் போணுண்ணா அவன் கூடத்தான் போகணும்...அவன் கூடப் போய் எம்.ஜி.ஆர் படம் பார்த்து நானும் காட்சியும் கட்சியும் மாறுவது போல் முருகனோடு சேர்ந்து மாறிவிட்டேன்....அவன் ஒரு தி.மு.க. கடவுள் இல்லையென்று சொன்னான் .ஒரு நாள் தனது நாக்கில் வேலைக் குத்தி காலையில் குறத்தியறைக்கு பள்ளிக்கூடம் போகும் போது வந்து விட்டான். நாக்கில் ஒரே சிவப்பு நிறம்...
பள்ளிக்கூடம் நெருங்கியதும் வேலை எடுத்து விட்டான்.... ஒரே ஆச்சரியம்... வகுப்புக்கு போய் பின் மதிய உணவு சாப்பிடும் போது நான் கேட்டேன். “உனக்கு வலிக்கவே இல்லையா ?
எப்படி சாப்புடுவே ?”. என்னைத் தனியே கூட்டிக்கொண்டு போய் அந்த வேலை என்னிடம் மட்டுமே காட்டினான். நாக்கில் வைப்பதற்கு வசதியாய் நடுப்புறம் ஒரு வளைசல் இருந்தது. என் நாக்கிலும் வைத்துக் காண்பித்தான். இப்படித்தான் பலர் ஏமாற்றுகிறார்கள்.. ரகசியம் காப்பாற்றப்பட்டது. போகும் வழியில் உள்ள சாமிகளை எல்லாம் கிண்டல் பண்ணி அதன் மீது ஏறி தன் வீர பிரதாபங்களைக் காட்டினான். சின்ன வயசல்லவா எனக்கு. முருகனைப் பிடித்துப்போய் கடவுள் முருகனை ஏச ஆரம்பித்தேன். திருநீறு பூசாமல் இருந்தேன்....இவை எதுவும் எங்க அப்பாவுக்குத்தெரியாது.

எம்.ஜி.ஆரிடம் இருந்து எனக்கு அவருடைய போட்டோ ஒன்று வரவழைத்துத் தந்தான்..

இப்படியாக காலம் கட்ந்து 7-ஆம் வகுப்பில் படிக்கும்போது எனக்கு டைபாய்டு காய்ச்சல் வந்தது.
‘காச்சல் வந்ததே அந்த முருகனால் தான். அவன் உன்னை சாமி கும்பிட விடாமல் ஆக்கி விட்டான்’ இது சிவாஜி ரசிகர்கள் என்னிடம் மாத்திரம் இல்லாமல் என் வீட்டிலும் சொன்னது.

புத்தேரி ஆஸ்பத்திரியில் போய் சுகமாய் வீட்டிற்கு வந்தேன்... தினமும் என் அப்பா எனக்கு திருனீறு பூசுவார் நெற்றியில். எனக்காகவே நான் குணம் அடைவதற்காக முருகன் கோவிலில் புஸ்பாபிசேகம் நடத்தியது என் அப்பா. நான் அமைதியாய் ஏற்றுக்கொண்டேன்.

நான் மெள்ள மெள்ள நணபன் முருகனின் கொள்கையை விட்டு விலக ஆரம்பித்தேன்.

எனது அம்மாவின் அம்மை பொன்னம்மை, “சாமி யெல்லாம் கும்பிடணும் தங்கம்.சாமி இல்லெண்ணு சொல்லக்கூடிய பயக்க கூடெல்லாம் சேரக்கூடாது”

அம்மா எதுவுமே என்னிடம் சொன்னது இல்லை. என் மனக் குழப்பத்தை புரிந்து கொண்டாள்.
“எப்பவும் போல் பள்ளிகூடத்துக்கு அந்த முருகன் கூடவே போ...”

பள்ளிக்கூடம் போக ஆரம்பித்தேன். ஒரு வாரம் நான் வில்லு வண்டியில் பள்ளிக்கூடம் போனேன். மதிய உணவு வீட்டில் இருந்தே வந்தது . நணபர்கள் யாரும் வண்டியில் என்னுடன் வர வில்லை. எனக்கு என்னவோ போல் இருந்தது

ஒரு வாரம் கழிந்தது. நடந்து போக வேண்டும்.... யாருடன் போவது ? சிவாஜி ரசிகர்களுடனா ? முருகனுடனா..?

காலையில் நான் புறப்பட்டு வெளியே வந்தேன்.... அங்கே முருகன் மட்டும் எனக்காக காத்திருந்தான்....அப்பாவும் அம்மையும் முருகனிடம் என்னை பாத்துக்கோ என்று கூற நான் அவனுடன் பள்ளிக்குப் போனேன்.

“முருகா, ஆனாலும் நீ என்னைப் பாக்க வரவே இல்லையே?”

“ உங்க அப்பாவோ அம்மையோ என்னை ஏசுவாங்களோண்ணு நினைச்சேன்.அதான் வரல்ல. இப்பம் உங்க அப்பாதான் வீட்டு நடையில் எனக்காகக் காத்திருந்து என்னை நிக்கச் சொன்னார்கள்.அதான் உனக்காக காத்திருந்தேன்.”

இப்போ எனக்கு இரண்டு முருகனையும் பிடித்தது. இதையெல்லாம் விட என் அப்பா அம்மையும் மிக அதிகமாக பிடித்திருந்தது.

முருகன் சொன்னான், “ உனக்கு எது மனசுக்கு பிடிச்சிருக்கோ அப்படியே இரு”

முருகனும் நானும் நல்ல நண்பர்கள் .அதன் பிறகு சிவாஜி ரசிகர்களும் நாங்களும் ஒன்றாகவே போவோம் வருவோம் விளையாடுவோம்.

நட்புக்கு இடையே கொள்கைகள் குறுக்கே வரவில்லை.

அதனால் தான் இன்றும் எல்லோரையும் அனுசரித்துப் போகும் பழக்கம் உள்ளவனாகவே வாழ்ந்து வருகிறேன்.

ஆறாங்கிளாஸ் ...முதல் நாள் மூத்திரக்குளத்தில்....

கடுக்கரையில் ஐந்தாம் கிளாஸ் வரைதான் இருந்த காலம் அது. அடுத்த ஊரான குறத்தியறை பள்ளிக்கூடத்திற்குப் போய்தான் அடுத்த கிளாஸ் படிக்க வேண்டும். அதுவும் நடந்து போய் வர வேண்டும்.என்னையும் மற்ற என் உறவினர்களையும் அங்கே சேத்துட்டாங்க.

முதல் நாள் குறத்தியறைக்கு நடந்து போகும் போது நாங்கள் அடைந்த சந்தோசத்திற்கு அளவே இல்லை. எங்களுக்கு ‘பி’ டிவிசன். ஒரே டிவிசனில் எல்லோருக்கும் இடம் கிடைத்து விட்டதில் பரம திருப்தி. ஒரு பீரீயடு முடிந்ததும் பெல் அடித்தது. அதுவே மிகுந்த ஆச்சரியம்.ஒவ்வொரு பாடத்திற்கும் தனித் தனி வாத்தியார்....எல்லாமே வித்தியாசமாக இருந்தது. ஒரு ஆசிரியர் வந்தார். அவர் எங்கள் ஊர்க்கார சுப்பிரமணிய பிள்ளை சார். அவரைக் கண்டதும் பேய் அறைந்தது மாரிஆகிப்போனோம்.அடி வெழுத்து விடுவார். அவர், “ இண்ணைக்கு இவ்வளவுதான். எல்லாரும் வீட்டுக்குப்போலாம். நாளைக்கு நோட்டு புக்கெல்லாம் என்ன வேணும்னு சொல்லுவேன். போங்க.. பொங்க... சத்தம் கீச்சுண்ணு கேக்கப்டாது...கேட்டா தொலச்சுருவேன்”.

 
Posted by Picasa


முதன் முறையாக பள்ளிக்கூடத்துக்குப் போய் கிளாஸ் இல்லாமல் இருந்ததை கண்டு சந்தோசப்பட்ட அனுபவம் புதுவிதமாக இருந்தது.

ஒரே கொண்டாட்டம். போகும் வழியில் கீரங்குளத்துக்கு முன்னால் ஒரு மூத்திரக்குளம்.சின்ன குளம். தண்ணீர் பளிங்கு போல் தெளிவாக இருந்தது. எவனுக்கோ குளிக்கணும் போல் இருந்தது. அவ்வளவு தான். எல்லோரும் உடுப்பு, நிக்கரெல்லாம் கழற்றி விட்டு ஒரே சாட்டம்.
ஒரு மணி நேரம் கடந்தது.....அந்த வழியே நடந்து ஊருக்கு வந்து கொண்டிருந்த சுப்பிரமணியபிள்ளை சார் பார்த்து விட்டார்....அவரைக்கண்டதும் பெட்டிப் பாம்பாய் மாறி கரையேறினோம்....அய்யோ என்ன செய்வாரோ....முறைத்துப் பார்த்தார்...ஒருவனின் செவியை முறுக்கி ஒரு நுள்ளும் கொடுத்தார். நாங்கள் தப்பித்தோம்.


வீட்டுக்குப் போன என்னைப் பார்த்த அப்பா, “ ஏண்டா...சட்டுணு வந்திட்டே... கண்ணெல்லாம் செவந்திருக்கு...” கேட்டார்

நான் பயந்து போய் குளித்த விசயத்தை முழுங்கி முழுங்கிச் சொல்லிவிட்டேன்.

சிரித்துக்கொண்டே , “ துட்டிக்காடா போய்ற்று வாற..பள்ளிக்கூடத்துக்குல்லாடா போன..”

ஆ..ஆ... அப்பாவின் ஏச்சுப்பேச்சிலிருந்து தப்பி விட்டதில் பெருமூச்சு விட்டேன்.

அடுத்த நாள் அந்த சார் எல்லாருக்கும் கையில் பிரம்படி தந்தார்....

மாதா பிதா குரு இம்மூவரும் இல்லையெனில் மனிதன் மிருகம்தான்.என்னை உருவாக்கியதில்
அந்தக்குருவுக்கும் என்னை நெறிமுறைப் படுத்தியதில் பெரும் பங்கு உண்டு.

Friday, July 15, 2011

என் கேள்வியையும் மகளின் பதிலையும் ஆங்கில பேப்பரில் கண்டு மகிழ்ந்த ஒரு தந்தையின்கடிதம்

நான் மஞ்சக்காமாலை நோய்க்கு ஒரு மருந்து தேவையா என ஆசிரியர் கடித்தில் எழுதினேன்.
அது இதோ....
 
Posted by Picasa

தேவைதான் என மதுரையில் இருந்து டாக்டர் மீனா எழுதிய கடிதம் பிரசுரமானது.
 
Posted by Picasa

இரண்டு கடிதங்களையும் படித்த மீனாவின் அப்பா எனக்கு எழுதிய அஞ்சல் அட்டை இதோ.
 
Posted by Picasa
 
Posted by Picasa

கடுக்கரையில் பாழாய்ப்போன ஒரு நினைவு நிலையம்

ஒருநாள் காலை 11 மணி இருக்கும். என் பள்ளித் தோழனும் அடுத்தவீட்டுக்காரருமான கணபதி சர்வோதயசங்கத் தலைவர் சிவன்பிள்ளையுடன் என் வீட்டுக்கு வந்தார்.எனது அப்பா மறைந்து ஒரு சில மாதங்களே ஆன சமயம் அது. கடுக்கரையில் சர்வோதய சங்கத்துக்கு கட்டிடம் கட்ட 5 சென்று மனை தருவதாக வாக்களித்திருந்தேன் கணபதியிடம்.அதற்கு நன்றி சொல்வதற்காகத்தான் வந்திருக்கிறார்கள் என எண்ணிக்கொண்டிருந்த என்னிடம் , “நீங்க இன்னும் கூடுதலாக தரவேண்டும். சோப் உற்பத்தி நிலையம் கட்ட உத்தேசித்துள்ளோம்”கூறினார். நான் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தேன்.அவ்ர், “ உங்க அப்பா பெயரை நாங்க கட்டும் கட்டிடத்துக்கு வைக்கப்போகிறோம்.25 சென்ற் தாருங்கள்”.
நான் எந்தவித ம்றுப்பும் சொல்லாமல் , “சரி” என்று சொன்னேன்.

சொன்னபடியே பூதப்பாண்டிக்குப் போய் எழுதியும் கொடுத்து விட்டேன். அந்தப் பத்திரத்தை தலைவரிட்ம் கன்னியாகுமரியில் நடந்த சர்வோதய விழாவில் கொடுத்தது என் மகன் ஆறுமுகப்பெருமாள்.


Posted by Picasa


இன்று எந்த வித உபயோகமும் இல்லாமல் பாழடைந்த மண்டபமாக காட்சி அளிப்பதைக் கண்டு மனம் வெம்புகிறது.

Thursday, July 14, 2011

கோபக்கார அப்பாவா....அன்பான அப்பாவா..

அப்பாவைக் கண்டால் மிகவும் பயம். அளவு கடந்த பயம்.ராத்திரி வீட்டில் அரைக்கேன் லைட்
வெளிச்சத்தில் விளக்குவைத்தவுடன் படிக்க இருக்க வேண்டும்.இல்லை யென்றால் அப்பாவின் கோபத்திற்கு ஆளாக வேண்டும்.அம்மை அவசரப் படுத்துவாள் படி படி என. குளித்துவிட்டு சாமி கும்பிட்டுக் கொண்டிருக்கும் போது அப்பாவின் காதுகளில் எந்த சத்தமும் கேக்ககூடாது...வீட்டில் அந்த சமயத்தில் அம்மி கூட அமைதியாய் இருக்கும்.உலக்கைக்கு அந்த நேரத்தில் ஓய்வு.ஆட்டொரல் அசையாது...சின்னவயதில் நான் , ‘ எம்மா எங்கிருந்தம்மா இந்த அப்பாவைக் கண்டுபிடிச்சே’ கேட்டேன். எங்கம்மைக்கு ஒரே சிரிப்பு...அப்பாவிடம் சொல்லிட்டா.
அடி கிடைக்கும் என்று நினைத்த எனக்கு ஒரே ஆச்சரியம். அப்பா தன் சக நண்பர்களிடம் இதைச் சொல்லிச் சொல்லி சிரித்துக் கொண்டிருந்தார்கள். நான் இப்படிக் கூறிய்து சொந்தக்காரர்களுக்கு எல்லாம் தெரிந்து அவர்கள் மத்தியில் மிகப் பிரபல சீமை ஆயிட்டேன்.

12 வயதான நான் டைபாய்டு நோயால் பாதிக்கப்பட்டு வீட்டில் எந்த வித உணர்வுமின்றி கட்டிலில் கிடந்தேன்....உள்ளூர் வைத்தியரின் மருந்தால் எந்தப் பலனும் இல்லாததால் C.B.H புத்தேரிக்கு என்னைக் கூட்டிக்கொண்டு போனார்கள்...டாக்டர் நோபிள் தங்கச் சொல்லி விட்டார்...அதே சம்யத்தில் அம்மைக்கும் சொகமில்லை... நான் ஒரு கட்டிலில்.என் அம்மா இன்னொரு கட்டிலில்... இரண்டுக்கும் உள்ள இடைவெளியில் தரையில் தான் எங்க அப்பா
இரவு படுத்திருப்பார்.இரவு நேரத்தில் அம்மைக்கு ஏதாவது கொடுத்துவிட்டு படுப்பார்அப்பா. ‘அப்பா’ என்ற என் முனகலுக்கு திரும்பவும் எழுந்து எனக்கு உதவி செய்வார்....இரவு தூக்கமே தொலைந்து போனது அப்பாவுக்கு....

ஊரே போற்றும் பெரியவர்.....மிகவும் கோபககாரர்....மகனுக்கும் மனைவிக்கும் வேண்டி தரையில்...முதன் முதலாக அப்பாவை அப்போதுதான் புரிந்து கொண்டேன்...

27 நாட்கள் கண்ணை இமை காப்பது போல் கவனித்த என் அப்பா தான் நடத்திய புஸ்பாபிசேகத்திற்குக்கூட கடுக்கரை சிவன் கோயிலுக்கு போகாமல் எங்கள் அருகில் தான் இருந்தார்.

நோய் குணமானதும் வீட்டுக்கு வந்து சேந்தோம்.

இன்று நான் நினைத்துப் பார்க்கிறேன். எனக்கு கேட்கவேண்டும் என்று தோன்றுகிறது.

‘எம்மா, இப்படிப்பட்ட அன்பான அப்பாவை எப்படிம்மா கண்டுபிடிச்ச ’.

Tuesday, July 5, 2011

இந்துக்கல்லூரியில் இப்படியும் நடந்த இனிய விழா

நான் பணியில் இருந்தபோது பணிஓய்வு பெற்ற நல்லவர்களான சிறந்த ஆசிரியர்களை மதித்து நடத்திய விழாவின் போது மலர்ந்த நூல்
 
Posted by Picasa


நாகர்கோவில் ,தென் திருவிதாங்கூர் இந்துக்கல்லூரியில் பணிபுரிந்த தமிழ்துறைத் தலைவர் திரு நீ.சுப்ரமணியம் ,பொருளாதாரத் துறைத் தலைவர் திருமதி நாகம் சுப்ரமணியம், கணிதத்துறை ஆசிரியர் திரு அ.திரவியம் பிள்ளை ஆகிய மூவரின் பணி ஓய்வில் மலர்ந்த அன்பு மலர் இது.
 
Posted by Picasa


என் பெற்றோர் நினைவில் மிக்க அன்புடன் தந்தவன் தங்கம் நான்

கல்லூரி வழிபாட்டு மண்டபத்தில் முன்னாள் கல்லூரித்தலைவர் திரு. திரவியம் தலைமையில் இந்நாள் தலைவர் திரு.ஆறுமுகம்பிள்ளை,கல்லூரி முதல்வர், ஒரு வங்கியின் மேலாளர் பாராட்டுரை வழங்கிய வழியனுப்புவிழா மிக சிறப்பாக நடந்தது. இது போன்றதொரு விழா வேறு யாருக்கும் நானறிந்தவரை இன்று வரை நடந்தது இல்லை.

Monday, July 4, 2011

இயற்கையன்னை காட்சிதரும் கடுகையிலே.....

இன்றும் முருகன் கோயில் சுவரை அலங்கரிக்கும் வரிகள்

1981-ல் நான் கன்னியாகுமரியில் தேவஸ்வம் விடுதியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த
இந்துக் கல்லூரியில் படித்த முன்னாள் மாணவன் தாணப்பனை தற்செயலாகக் கண்டேன். மிகவும் அன்பாக பேசிக்கொண்டிருந்தான்.அவன் தாவர இயல் மாணவன்.தமிழ் ஆர்வம் உள்ள அவன் கவிதை எழுதும் திறமை படைத்தவன் என்பது ஞாபகத்துக்கு வந்தது.

நான் அவனிடம் , “உன்னால் 5 நிமிடத்திற்குள் பாட்டு எழுத முடியுமா?”

‘சொல்லுங்கள் சார்... முயற்சிக்கிறேன்’

நான் எங்கள் ஊர் சிவன்கோவில் பற்றியும் ஊரைப்பற்றியும் குறிப்புகள் சில கொடுத்தேன்.மேலும் நான் அவனிடம் , “ 5 நிமிடத்திற்குள் நீ எழுதி விட்டால் நான் அதை நாங்கள் எங்கள் பக்தர்கள் சங்க வெளியீடுகளில் பிரசுரிப்போம்” என்றேன்

5 நிமிடம் கூட ஆகவில்லை........அவன் எழுதிய பாட்டு இதோ அச்சு வடிவில்:-

 
Posted by Picasa


இந்த வரிகள் கோவில் சுவரை இன்றும் அலங்கரித்துக் கொண்டிருப்பதைக் கண்டேன். நான் அடைந்த ஆனந்தத்துக்கு அளவே இல்லை.
பாட்டை எழுதியவர் தமிழக அரசின் உயர் அதிகாரியாக இன்று சென்னையில் பணிபுரிகிறார்.அவரது தந்தையார் திரு. தினத்தந்தி குமாரசுவாமி, வடிவீஸ்வரம், நாகர்கோவில்.