Friday, November 30, 2012

காசியில்கடைத்தெருக்கள்

31-10-2012..... இந்த நாள் மிகவும் இனிமையான நாள். காலை நாலு மணிக்கு எழுந்து குளித்துவிட்டு கோயிலுக்குப் போனோம். அதிக கூட்டம் இல்லை. நெருக்கடி இல்லாமல் தரிசனம் முடிந்தது..... காசிக்கு வந்ததில் ஒரு பூரண    திருப்தி இருப்பதை உணர்ந்தோம்.

காசி என் பார்வையில் ஒரு குட்டி பாரதம். அனைத்து மொழி பேசுபவர்கள்... மாநில மக்கள்.... வந்து போகிற ஒரு இடம். ஆன்மீகத்துக்கு உகந்த இடம்.... அறிஞர்களும் சாதுக்களும் போற்றும் இடம் காசி. வறுமை வாட்டாத இடம்.

கடைகள் மிக அதிகம். அனைத்துக் கடைகளிலும் வியாபாரம் ..... எல்லா மக்களும் சுகமாகவே வாழ்கிறார்கள். தெருக்கள் குறுகலானது. இந்த அளவு கூட்டத்துக்கு தெருக்கள் போதுமானதாக இல்லை.
 மனம் விசாலமானவர்களின் கடைகளுக்குச் சென்றோம். ஒன்று ஸ்ரீராம் ஜவுளிக்கடை. மற்றொன்று ஸ்படிகம், ருத்திராட்சம்..... விற்பனை செய்யும் கடை.

சாரி எடுத்தவர்கள் மிகவும் சந்தோஷப்பட்டார்கள். மொழி தெரியாத இடம். ஏமாற்றுவதாக தெரியவில்லை. ஆனால் பேரம் பேசாமல் எதனையும் வாங்குதல் கூடாது. கட்டுப்படியானால் அவர் தருவார்.அதனை  வாங்க நம் மனது ஒத்துக் கொள்ளுமானால் வாங்கணும். ஆனாலும் நான் ராஜேந்திரனுடன் சென்று தான் சாரி எடுத்தேன். ராஜேந்திரனும் அந்தக் கடை முதலாளியும் நன்கு ஏற்கனவே அறிமுகம் ஆனவர்கள்.
சாரி வாங்கி வரும்போது பரிசுப் பொருள்கள் தந்தார் கடைக்காரர். அதோடு கூடுதாலாக சாமிப்படம் ஒன்றும் தந்தார். வாசல் வரை வந்து வழி அனுப்பி வைத்தார். வந்து போய்க் கொண்டிருக்கிற மக்கள்களில் ஒருவர் தானே நாம்.  இருப்பினும் நிரந்தர வாடிக்கையாளர் போலவே எங்களை நடத்தினார்.
அன்புக்கு பஞ்சமில்லாத ஊர்.

சர்மா என்பவர் அடுத்துள்ள ஸ்படிகமாலைக் கடைக்காரர். அவர்  M.A. படித்தவர்.அவர் கடையில் சில போட்டோக்கள் கண்டோம். தமிழக அரசியல்,சினிமாவைச் சேர்ந்தவர்கள் அந்தக் கடைச்சுவர்களை அலங்கரித்துக் கொண்டிருந்தார்கள்.நாங்கள் ஸ்படிக லிங்கம் ஊரில் உள்ள உறவினர் ஒருவருக்கு கொடுக்க வாங்க நினைத்து அவரிடம் கேட்டோம். பல அளவுகளில் வித்தியாசமான விலயில் எங்கள் முன் வைத்தார். அவருடைய ஆலோசனையும் கேட்டு வாங்கினோம். ஒரு பவள மாலை வாங்கினேன். நல்ல மாலைதானா! Original

மாலைதானா என்று கேட்டேன். உடனே அவர் இரண்டு பாசிகளை ஒன்றோடு ஒன்றினை வைத்து உரசினார். தீப்பொறி வந்தது. அது ஒரிஜினல் தான் என்ற நம்பிக்கையோடு வாங்கினோம்.எங்களுடன் வந்த ஒருவர் இரண்டு வயது பையனுக்கு போடுவதற்காக ருத்திராட்ச மாலை கேட்டார். அவர் தர மறுத்து விட்டார். அந்த வயதில் அதனை அணியக்கூடாது என்றும் சொன்னார்.

எல்லாம் வாங்கியாச்சு இனிமேல் ஒன்றும் வாங்க வேண்டியதில்லையே என்று நான் நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில் , தீர்த்தச் செம்பு வாங்கவில்லையே என்பது மனதில் வந்தது.  சத்திரத்திலும்  அது கிடைக்குமே...   அங்கே போய் வாங்கிக் கொள்ளலாம்.

சத்திரத்தில் அதையும் வாங்கினோம். ரூமில் போய் இருந்தோம்.
குமரேசன்  Banaras Hindu University பற்றி  கேட்டான்.


BHU is a public Central  University. It is a residential University.1916-இல் ஆரம்பிக்கப்பட்ட து .நிறுவியவர் பண்டிட் மதன் மோகன் மாளவியா. 1300 ஏக்கர் பரப்பளவு கொண்டது.20000 மாணவர்கள் படிக்கும் பல்கலைக்கழகம் இதுவாகும். உலகத்திலேயே இது தான் பெரியது என்று  சொல்கிறார்கள்.

 குமரேசன், “  Residential University என்றால் அது என்ன ?”
 என்று கேட்டான்.

நான் அவனிடம் , “ உனக்கு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம் பற்றித் தெரியுமா ?”

ஏண்ணே அது எனக்குத் தெரியாதா.! என் மகள் பி.காம் படிச்சு வாங்கிய டிக்ரி அந்த பல்கலைக் கழகம் தந்தது தானே.!அவள் படிச்சது நாரூல் இந்துக் கல்லூரில.

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் பற்றித் தெரியுமா ? நான் கேட்டேன்

’அது சிதம்பரம் காலேஜ் தானே.... நம்ம கோலண்ணன் அங்கதானே படிச்சது...” குமரேசன் சொன்னான்.

நான் “ பனாரஸ் இந்துப் பல்கலைக் கழகமும்  அண்ணாமலை பல்கலைக்கழகமும் Residential University ஆகும்.”  எனச் சொன்னேன்...

எல்லா வகுப்புகளும் ஒரே வளாகத்தில் இருப்பதுவும் வேறு எந்த இடங்களிலும் அதன் கீழ் கல்லூரி என்று எதுவும் இல்லாமல் இருப்பதும் தான் ரெசிடென்சியல் பல்கலைக்கழகம் .

மத்திய அரசு அங்கீகாரம் பெற்ற வைகள் தான்.

பேசிகொண்டிருக்கும்போதே, ஹாலில் சாமி பேசிக் கொண்டிருக்கிறார் என்ற செய்தி கிடைத்தது.  நானும் கீழே போனேன். பல கேள்விகள் சாமி கேட்க பதில் சொன்னவர்களின் பெயரைக் குறித்து வைத்து அதிக மதிப்பு பெற்றவர்களுக்கு பரிசு கொடுத்தார்.

இரவு 10.30 மணிக்கு வார்ணாசி ரயில் நிலையத்துக்குப் புறப்பட்டுப் போனோம்.
1 மணிக்கு ரயில் ஏறினோம். ரயிலும் கிளம்பிச் சென்றது. வியாழன் விடிந்தது ரயிலடியில்...... காலையில் பார்க்கலாம்.

Wednesday, November 28, 2012

நாங்கள் சென்ற இரண்டாவது காசி யாத்திரை...6....

அக்டோபர் 30 செவ்வாய்கிழமைக் காலையில் எழுந்ததும் இன்றுள்ள Programme  என்ன என்று அறிய சிவதாணுபிள்ளை அண்ணாச்சியிடம் கேட்டேன்.அவர் சொன்னார். அவரிடம் பேசிக் கொண்டிருக்கும்போதே என் கைபேசி பாட ஆரம்பித்தது. அதை எடுத்து பேசுவது யார் எனப் பார்த்தேன். பேசுபரின் பெயர் இருந்தது. அது என் கணித மாணவர்.


“ சார்! எப்போ காசிக்கு வந்தீங்க.... நான் உங்க மாணவி.... எங்க வீட்டுக்கு எப்போ வருவீங்க.....”

“ நான் உன்னைப் பார்க்க கண்டிப்பா வருவேன். ஆனால் ஒரு குழுவுடன் செல்வதால் இன்று வரமுடியுமா என எனக்குத் தெரியவில்லை.நாளைக்கு புதன்கிழமை நான் வருகிறேன்..”

“ சார்!... நீங்கள்  இன்று வருவதாக நினைத்து School-க்கு லீவ் போட்டுவிட்டேன்.கண்டிப்பா இண்ணைக்கு காலையில் டிபன் சாப்பிடவாவது வாருங்களேன்....”

“அரை மணிநேரத்தில் உனக்கு நான் வருவதைப் பற்றி சொல்கிறேன்.”

ராஜேந்திரனிடம் கேட்டேன் “ அந்த student ரொம்ப வற்புறுத்துகாளே என்ன செய்ய.....” நாங்கள் இருவரும் முருகதாஸ் சாமியிடம் போய் எங்கள் திட்டம் பற்றி சொன்னோம்.  அவர் சொன்னார் “ நீங்க போகவேண்டிய இடம் Banaras Hindu University Quarters தானே. அங்கு போகும் திட்டம் உண்டு, அங்கு தான் பிர்லா மந்திர் இருக்கு .அங்கு தான் அனைவரும் காலை டிபன் சாப்பிடவேண்டும் . நீங்கள் அந்த மாணவியின் வீட்டுக்குப் போய் வாருங்கள். அங்கிருந்து புறப்பட்ட உடன் போன் பண்ணுங்கள்.நாங்கள் நிற்கும் இடத்தை உங்களுக்குச் சொல்கிறோம். வந்திருங்க்கோ”

ஆஹா! எவ்வளவு ஈசியாப் போச்சு.

அவளுக்குப் போண் பண்ணி விசயத்தைச் சொன்னேன்.

காலையில் ஒவ்வொரு சுமோ வண்டியிலும் பதினொரு பேராக ஏறினார்கள். நாங்கள் ஒன்பது பேர். எங்களுடன் ஒருவரும் சாமியும் வந்தார்.
சாரநாத் புத்தர்


காலபைரவர் கோவில், சாரநாத்,காசிராஜா அரண்மனை போன்ற இடங்களுக்குப் போய் அதன்பின் காசிப் பல்கலைக்கழக வளாகம் போனோம். நாங்கள் வந்த வண்டியில் போகலாம் அந்த மாணவர் வீட்டுக்குஎன நினைத்து அவனிடம் கேட்க அவன் முடியாது எனச் சொல்ல நாங்கள் ஒரு ஆட்டோவில் போனோம். வீடு அடுத்த சாலையில். அவன் எங்களிடம் வாங்கிய வாடகை ருபாய் 100/-
வீட்டு வாசலில் நின்று  எங்களை வரவேற்று மிகவும் அன்புடன் பெருமையாக சொல்லிக் கொண்டே இருந்தாள்.

”நான் பள்ளிக் கூடத்தில் ஆசிரியர் பணியில் இருக்கிறேன். நீங்கள் தான் எனக்கு Inspiration. ஒவ்வோரு வருட ஆரம்பத்திலும் உங்களை நினைத்துக் கொள்வேன். ....” இதுபோல் மேலும் சொல்ல என் கண்களில் மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டோட ஆரம்பித்தது.

காலை உணவுக்குப் பின் நாங்கள் கிளம்ப தயாரானோம். என் மனைவியும் என்னுடன் வந்தாள். என் மனைவிக்கு  அந்த ஊர் சம்பிரதாயப் படி ஒரு சாரியும் ஜம்பர் துணியும் கொடுத்தாள். எங்களை ஆசிர்வதிக்கும்படி சொல்ல , திருனீரை அவள் நெற்றியில் பூசிவாழ்த்தியபின் விடை பெற்றொம். அவர்களே எங்களை எங்கள் குழுவினருடன் கொண்டு சேர்த்தார்கள்.

அப்புறம் துளசி மானஸ மந்திர் சென்று  வேறு சில கோவில்களுக்கும் சென்று விட்டு சத்திரம் போய் சேர்ந்தோம்.

காசிக் கோவிலுக்கு பூஜா சாமான் தினமும் இந்த சத்திரத்தில் இருந்து தான் செல்கிறது.

நாங்கள் சென்ற இரண்டாவது காசி யாத்திரை....5....

குமரேசன் எங்களுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தான்.

அவன் ,” காசியில் பசுமாடுகள் மிக அதிகம். பசுவுக்கு பக்தர்கள் உணவு கொடுப்பதுண்டு. மிரண்டு போகும் பசுவோ, முட்டும் பசுக்களோ கிடையாது.
நாய்கூட அந்த இடத்தில் குரைக்காது.”

சாலையில் பகல் நேரம் நடந்து செல்வதே கஷ்டம். இதனிடையில் இரு சக்கர வாகனங்கள் ஊர்ந்து செல்லும். சைக்கிள் ரிக்‌ஷாவில் எஜமானன் போல் இருப்பார்கள். அவை பல இடங்களில் சற்று வேகமாகச் செல்வதையும் பார்க்கலாம். அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறா வண்ணம் அனைவரும் நகர்ந்து செல்வதால் நேரம் அதிகமாகும் கோவிலை அடைவதற்கு.

சாலையில் சென்றால் இடது புறம் காசி விஸ்வநாதர் கோவில் இருக்கிறது என்பதை தோரணவாயில் அடையாளம் காட்டும். அந்த வழி சிறிய மிகவும் குறுகலான சந்து. இருபக்கமும் கடைகள். நம்மை கையைப் பிடித்து கடையினுள் இழுத்து விடுவதுபோல் அருகில் வந்து கடைக்கு வந்து சாமான் வாங்கும்படி அழைப்பு விடுப்பார்கள்.

ஒரு குறிப்பிட்ட இடம் வந்ததும் நம்மை மெட்டல் டிடெக்டர் மூலம் தலை முதல் உள்ளங்கால் வரைத் தடவி பார்த்து சோதனை செய்து அனுப்புவர். இது போல் இரண்டு மூன்று இடங்களில் சோதித்தபின் நாம் சன்னதியை (கர்ப்பக்ருஹம் வரை) அடையலாம். தரைத்தளத்தில் சதுரவடிவ பள்ளத்தில் சிவ லிங்க வடிவில் விஸ்வாநாதர் வீற்றிருப்பார். நாம் சிவலிங்கத்தைத் தொட்டு, புண்ணிய நீர் விட்டு நாமே அபிஷேகம் செய்யலாம். கூட்டம் அதிகம் இருந்தால், அதிக நேரம் நிற்க விடாமல் வெளியே அனுப்பி விடுவார்கள்.

கோவிலில் உள்ள கதவுகள் தங்கம் போல்  மின்னும்  தகடுகளால் பொதியப் பட்டிருந்தது. அது காசி நாட்டுக்கோட்டை நகரத்தார் செலவில் செய்யப்பட்டது.

அன்னபூர்ணேஸ்வரி கோவிலும் பக்கத்தில்தான் உள்ளது.விக்ரகம் மிகவும் ஐஸ்வர்யமுடையதாக இருக்கிறது.எங்களுக்கு பிரசாதமாக அரிசி கிடைத்தது.இங்கு வருபவர்கள் யாரும் பசியுடனோ, இரவுநேரம் சாப்பிடாமலோ  இருக்கக்கூடாதுஎன்பதால் இரவு கோவில் நடை அடைப்பதற்கு முன்பு கோவில் சேவகர்கள் இதனை உறுதி செய்து கொள்வர். கோவிலில் அனைவருக்கும் இரவு உணவு வசதி உண்டு.

 இங்கு அன்னபூரணி சின்ன விக்ரகம் வாங்கி வீடுகளில் உள்ள பூஜை அறையில் வைத்து வழிபட்டால் அனைத்து நன்மைகளும் கிட்டும் என்பது நம்பிக்கை.காசித்தீர்த்தம் ஒரு சிறிய செப்புக் குடத்தில் வைத்து விற்பார்கள் தேவைப் பட்டவர்கள் சிறிய பெரிய அளவில் வாங்கலாம்.

ஊருக்குப் போய் உறவினர்களுக்கு கொடுக்கவும் பலர் வாங்கினார்கள்.
உத்திராட்ச மாலை வாங்கலாம். ஸ்படிகமாலை வாங்கலாம். பலர் வாங்கினார்கள்.ஸ்படிகமாலையைக் கயில் வைத்துப்பார்த்தால் குழுமையாக இருக்கும். நல்லதா என்று பார்க்க இரண்டு ஸ்படிக பாசிகளை ஒன்றோடொன்றை வைத்து வேகமாக உரச வேண்டும். தீப்பொறி வந்தால் அது நல்ல ஸ்படிகம்.

காசி நகரம் அழுக்கான நகரம் போலவே இருக்கு. காரணம் பக்தர்களின் அதிக கூட்டமும் பசுக்களின் நடமாட்டமும் தான்.  கங்கை அகலம் கூடுதல், ஆற்று நீர் கடல் போல் காட்சி அளிக்கிறது. கங்கை நீர் புனிதநீர். ஆனால் அது மாசுபட்டு, அம்மாசுவை எங்கேயோ கொண்டுபோக ஒடுகிறது. பார்த்துக் கொண்டே இருக்கலாம். காசியின் ஒரு புறம் கடல் போல் காட்சி தரும் ஆறு. இன்னொருபுறம் சாலையில் மக்கள் வெள்ளம்.

500 வெளிநாட்டு யாத்திரீகர்கள் மிகவும் ஒழுங்காக அனைவரையும் கவரும்படி பக்தி கானங்கள் பாடிச் சென்றனர்.  நாம் ஏனோ சுய ஒழுக்கத்தை அதிகம் விரும்பாமலேயே பொது இடங்களில் நடந்து கொள்கிறோம். நம்முடன் வரும் இளைஞர்களும் நம்மைப் பார்த்து நடந்து கொள்வதால் வருங்கால சமுதாயம் நல்ல முறையில் மாற்றம் காணும் என்பது வெறும் கனவே.
கங்கா ஆரத்தி பார்ப்பதற்கும் பாடும் பாடல்களைக் கேட்பதற்கும் நன்றாக இருக்கும்.அது தினமும் மாலை 6 மணிக்கு நடக்கும்.

நாட்டுக் கோட்டை நகரத்தார் சத்திரம் பற்றி அறிய ஆசைப் பட்டு ராஜேந்திரனிடம் கேட்டேன். அவர் சொல்ல ஆரம்பித்தார்.

Tuesday, November 27, 2012

நாங்கள் சென்ற இரண்டாவது காசி யாத்திரை....4....

இரவு விடை பெற்றுப் போனது. 28-ஆம் தேதி பகல் வரவேற்றது.
 நான் என் செல் போனை எடுத்துப் பார்த்தேன். பகீரென்றது. சார்ஜ் தீர்ந்து போகும் என எச்சரிக்கை குறியீட்டுக் கோடு பயமுறுத்தியது.

நாங்கள் இருந்த ரயில் பெட்டியில் சார்ஜ் செய்யும் வசதி உண்டு. அதற்கு  நீண்ட காத்திருத்தல் கண்டு, சார்ஜ் பண்ண வாய்ப்பு கிடைக்கும்னு தோணாததால்,என் போனை அணைத்து என் பையில் போட்டு வைத்தேன்.

காலைக் கடன் செய்யும் பணி முடிந்தது. எங்களுக்கு முருகன் தேனீர் வாங்கித் தந்தார். காலையின் விடியல் பொழுது மெல்ல மெல்ல வெளிச்சத்தை  கொணர்ந்தது. ஞாயிறு காலை நேரம். எல்லோருக்கும் தேயிலை அல்லது காப்பி குடிக்கணும் போல் இருந்தது. காப்பிக் கொண்டு வருபவனுக்காக காத்திருந்தோம். ஒருவன் வந்தான் .ஆனால் அவன் வைத்திருப்பது தேயிலை.
சரி எதையாவது சூடாக் குடிப்போம் என்று குடித்தோம்.

காலையில் இட்லி தந்தார்கள். காலை உணவுப் பிரச்சினை எதுவுமின்றி முடிந்தது,பகல் பொழுது பேசிக் கொண்டிருந்தோம்.

முருகதாஸ் சுவாமி எல்லோரிடமும் போய் நலம் விசாரித்துவிட்டு எங்கள் பக்கமும் வந்து நலம் விசாரித்தார். நான் அவரிடம் எதையோ கேட்க நினப்பதாகப் புரிந்த அவர் என்னிடம்,” சார் ! என்ன வேண்டும்”
சுரதவனம் முருகதாஸ்
சத்திரம்
 என வாஞ்சையுடன் கேட்டார்.

நாளை நாம் எத்தனை மணிக்கு காசிக்குப் போவோம்?

திங்கள் காலை 7 மணிக்கு நாம் காசியில் இருப்போம் என்றார்.

எங்கே தங்கப் போகிறோம் ?

கோவில் பக்கத்தில் உள்ள சத்திரத்தில்  தான் . தனி அறை வேண்டுவோருக்கு ஒரு நாளைக்கு 300 ருபாய் கொடுத்து தங்கலாம்.
நான் எனக்கு ரூம் வேண்டும் எனச் சொன்னேன். சிறிது நேரம் பேசி விட்டுப் போனார்.
 நான் ராஜேந்திரனிடம் பேச ஆரம்பித்தேன். நேரம் பொகணுமே!.

”நாளை என்ன Programme.? உனக்குத் தெரிந்தால் சொல்லலாமே”

காலையில் டிபன் சாப்பிட்டுவிட்டு ,கங்கையில் போய் குளிக்கலாம். மொட்டை போடுபவர்கள் மொட்டை போடலாம். குளித்து விட்டு திரும்பலாம்.
தர்ப்பணம் செய்ய விரும்புவோர் காசி கோவில் பக்கம் உள்ள ஆற்றின் படித்துறையில் அந்த காரியங்களைச் செய்யலாம். அதன்பிறகு நேரம் இருந்தால் கோவிலுக்குப் போகலாம். பேசிப் பொழுதைப் போக்கினோம். அடுத்த நாள் காலையில் மிகவும் சரியான சமயத்தில் காசியில் ரயில் வந்து சேர்ந்தது. எல்லோரையும் வாடகைகாரில் அனுப்பி விட்டு கடைசி ஆளாக அவர் எங்களுடன் வந்தார். நாங்கள் சத்திரத்தை வந்தடைந்தோம். நான் நினைத்ததை விட சத்திரம் சுத்தமாகவும் நேர்த்தியாகவும் இருந்தது.

காலை உணவு அங்கேயே கிடைத்தது. சாப்பிட்டு முடித்ததும் எங்களுக்கு அறைச்சாவியை முருகதாஸ் சாமியே வந்து தந்து ரூமையும் பார்த்துவிட்டு திருப்தியோடு போனார்.

எல்லோரையும் கோயிலின்  பக்கத்தில் உள்ள மணிகர்ணிகா படித்துறைக்கு அழைத்துச் சென்றார். இரண்டு படகுகளில் ஏறி கங்கை யாற்றின் எதிர்புறம் உள்ள கரைக்குச் சென்றோம். அங்கு ஆசை தீரக் குளித்தோம்.
மொட்டை போட்டவர்கள் அந்த இடத்தில் குளித்து முடிந்ததும்  கரைக்கு வந்தோம். தர்ப்பணம் செய்ய விரும்பியவர்கள் அனைவரும் ஒரு இடத்தில் அமர்ந்து மந்திரங்களும் பாடல்களும் ஒரு பண்டிதர் சொல்ல சொல்ல இவர்களும் சொன்னார்கள். கொஞ்ச நேரம் இருந்து விட்டு நானும் சிலரும் சத்திரம் நோக்கி நடந்தோம்.
மதிய உணவு சாப்பிடும் நேரம் நெருங்கியதும் சத்திரத்தில் டோக்கன் பெற்று சாப்பிட்டோம்.

மாலை நேரம் நெருங்கியதும் எல்லோரும் கோயிலுக்குப் போய் சாமி கும்பிட்டோம். சத்திரத்துக்குப் போனோம்.

எங்களுடன் வந்தவர்கள் தங்கியது ஒரு பெரிய ஹால். நம் பொருட்களை வைத்திட லாக்கர் வசதியும் உண்டு.

அந்தஹாலில் சத்சங்கம் நடந்து கொண்டிருந்தது. (திங்கள் இரவு).யோகிராம் சுரத்குமார் பற்றி பேசிக்கொண்டிருந்தார்.

அவர் பேசியது நன்றாக இருந்தது. பேசி முடிந்ததும் அவர் சில தெய்வப்பாடல்களைப் பாடினார். குருவுக்கு நன்றி செலுத்தும் விதமாக தீபாராதனை நடந்தது.
 இரவு உணவுடன் அன்றைய நாள் இனிதாய் நிறைவுற்றது.

நாங்கள் சென்ற இரண்டாவது காசி யாத்திரை....3....

ரயில் விரைவாகக் காசியை நோக்கி சென்று கொண்டிருந்தது.

நாங்கள் எங்களது லக்கேஜுகளை இருக்கையின் அடியில் உள்ள இடத்தில் ,  இருப்பதற்கும் தேவைப்படின் படுப்பதற்கும் வதியாக வைத்தோம்.

இந்த ரயிலின் பெயர் கங்கா-காவேரி எக்ஸ்பிரஸ். கங்கை காசியில் உள்ளது. காவேரி தமிழ்நாட்டில் உள்ளது தானே. காவேரித் தண்ணிர் தான் வரவில்லை. சென்னையில் இருந்து காசிவழியாகச் செல்லும் இந்த ரயில் கடைசியாய் நிற்கும் இடம் சாப்ரா.அதனால் அதற்கு சென்னை-சாப்ரா எக்ஸ்பிரஸ் என்ற பெயரும் உண்டு. அனேகமாக காசியில் அனைவரும் இறங்கி விடுவார்கள். சந்திரசேகர் பிரதம மந்திரியாக இருந்தபோது சாப்ராவுக்கு காசி வரை வந்த ரயில் நீட்டிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. சாப்ரா அவரது தொகுதியில் உள்ளதால்.... இருக்கலாம்.

தமிழ்நாட்டில் இருந்து செல்லும் இந்த ரயில் ஆந்திரா,மகாராஷ்ட்டிரா,மத்தியப் பிரதேஷ் எனமூன்று மாநிலங்களையும் கடந்து சென்று உத்தர்பிரதேஷில் உள்ள காசியை அடையும்.சனிக்கிழமை இரவு முழுவதும் ரயிலில் இருக்கவேண்டும்.  ஞாயிறு பகல் இரவும் ரயிலில் தான் பயணம். திங்கள் காலை 7 மணியளவில் காசியில் போய் சேரும்.

நாங்கள் 9 பேரும் ஒரு ஆளுக்கு ருபாய் 250 வீதம் வசூல் செய்து மொத்தப் பணத்தையும் முருகனிடம் கொடுத்து வைத்தோம். ரயிலில் எதனை வாங்கினாலும்  9 பேருக்கும் சேர்த்து வாங்குவது தான் வழக்கம். தேயிலையானாலும் சரி, ஆரஞ்சுப் பழமானாலும் சரி.....

காசின்னு சொல்லும் இந்த ஊரை வாரணாசி என்றும் சொல்கிறார்களே ! என்று எங்களில் குமரேசன் கேட்க, தெரிந்த ஒருவர் சொன்னார்.

2000 முதல் 3000 வருடங்களுக்கு முன்னமே உள்ள பழமையான இடம் இது. வேறு பெயர்களாலும் இந்த ஊர் அழைக்கப்பட்டது. பனாரஸ்,ஆனந்த வனம், மகா மயானம்,அவிமுக்தம் எனவும் பெயர்கள் உண்டு.
காசி என்பது தான் ஊரின் பெயராக அதிக மக்களால் சொல்லப்பட்டது.
மாவட்டம் வாரணாசி .
காசியில் விஸ்வநாதர் திருக்கோயில் உள்ளது. அம்மன் விசாலாட்சி .

காசி என்றால் என்ன ?

காசி என்றால் ஒளிநகரம். 12 ஜோதிர்லிங்கம் உள்ள கோவில்களில் காசி தான் முதன்மையானது.

 காசன் என்னும் அரசன் இப்பகுதியை ஆண்டதால் காசி என்னும் பெயர் இதற்கு உண்டாயிற்று என்றும் சொல்கிறார்கள்.பனாரன் என்னும் அரசன் இந்நகரத்தை பிற்காலத்தில் புதுப்பித்ததால் பனாரஸ் என்னும் பெயர் இதற்கு வழங்கப்படுகிறது.

வாரணாசி என்று அழைப்பதற்கும் ஒரு காரணம் இருக்குமே!

வாரணா,ஹசி என்ற இருநதிகளுக்கும் இடையில் அமைந்துள்ளதால் இவ்வூருக்கு வார்ணாசி என்று பெயர் வந்ததாகச் சொல்கிறார்கள்.

இந்தக் கோவிலைக் கட்டியது யார் ?

அக்பர் கட்டியதாகச்சொல்கிறார்கள். ஆதார பூர்வமான தகவல் எதுவுமில்லை.

1669-இல் அவுரங்கசீப் ,விசுவநாதர் கோவிலில் உள்ள சிருங்கர் மண்டபத்தின் சுவரை ஆதாரமாகக் கொண்டு மசூதி கட்டப்பட்டுள்ளதை இப்போதும் காணலாம். காசி ஒரு புண்ணிய ஸ்தலம் மட்டுமல்லாது மத ஒற்றுமையை வலியுறுத்திய சின்னமாகவும் இருக்கிறது.

காசிக்கு வருவதற்கு ஏன் ஆசைப்படுகிறார்கள்.?

காசி விஸ்வநாதரைத் தரிசித்தால் உயிர் புனிதம் அடைகிறது. கங்கையில் நீராடினால் நமது தேகம் புனிதம் அடைகிறது. காசிக்கயிறு என்னும் கறுப்புக் கயிறு கட்டினால்,தீயசக்திகள் எதுவும் அண்டாது. தனது ஆயுட்காலத்தில் ஒருமுறையாவது காசிக்கு வரவேண்டும் என்று சொல்வார்கள்.

பொதுவாக வயதானவர்களே காசிக்குப் போய் வரவேண்டும் என்ற எண்னம் உள்ளது. இளைஞர்களும் போய்வரலாம்.

காசியின் சிறப்பு என்ன ?
காசியில் 64 தீர்த்த கட்டங்களில்  ஹரிச்சந்திரா காட், மணிகர்ணிகா காட் முக்கியமானவை. (காட் என்றால் ஆற்றின் அருகே அமைந்திருக்கும் படிக்கட்டுகள் என்றும் எடுத்துக் கொள்ளலாம்).இது பிணத்தை எரியூட்டும் இடம். மன்னராய் இருந்த ஹரிசந்திரன் விதிப்பயனால் இந்தச் சுடுகாட்டை காவல்காத்ததால் அதற்கு இந்தப் பெயர். இறந்து போனவ்ர்களை கங்கையில் குளிப்பாட்டி அந்த சுடுகாட்டில் வைத்து எரிப்பதால் நித்திய சாந்தி உண்டாகும்.
காசியில் உள்ள இந்த இரு இடங்களிலும் “ பிணம் மணக்கும், பூ மணக்காது.” என்னும் பழமொழி இன்றும் அனுபவமாக பூர்வமாக உணரப்படுகிறது.
காசியில் மரணம் அடைந்தால் முக்தி கிடைக்கும் என்பதால் இறக்கும் தருவாயில் முதியவர்களை அவர்களது வாரிசுகள் காசியில் தங்க வைத்துக் கொள்வார்கள்.அவ்வாறு தங்குவதற்கென்று விடுதிகள் காசியில் உள்ளன.

  கங்கை ஆற்றின் அருகே தான்  உள்ள மயானத்தில் எப்பொழுதும் பிணங்கள் எரிந்து கொண்டே இருக்கும்.

காசியில் செய்ய வேணியது என்ன?

பித்ரு தர்ப்பணம், முண்டனம்,தானதர்மங்கள் போன்ற புண்ணிய காரியங்கள் செய்யலாம்.

காசியில் எப்பொழுது கோயில் தரிசனம் பண்ணலாம் ?

 காலை 2.30 முதல் இரவு 11 மணி வரை.

காசியில் என்னென்ன வாங்கலாம் ?

காசிக்கயிறு, தீர்த்தச் செம்பு, அன்னபூர்ணா விக்ரஹம்,ஸ்படிகமாலை, ஸ்படிக லிங்கம்,ருத்ராட்சம் போன்ற பூஜைப் பொருள்கள் வாங்கலாம். பட்டுப்புடவைகள் வாங்கலாம்.

தங்குவதற்கு வசதிகள் உண்டுமா?

நிறைய உண்டு. லாட்ஜுகள் உள்ளன. சத்திரங்கள் உள்ளன. நாங்கள் தங்கும் இடம் காசி நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரம்.

இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும்போதே ,இரவு உணவு எங்கள் இருப்பிடத்திற்கே வந்தது. சாப்பிட்டோம்.  பின் சற்று நேரம்  பேசிக் கொண்டிருந்தோம்.9.30 மணியானதும் தூங்க ஆரம்பித்தோம்.

ரயில் சரியான சமயத்தில் எல்லா ரயில் நிலையங்களையும் கடந்து செல்வதாக அறிந்து கொண்டோம். அசைந்து அசைந்து செல்லும் ரயில் தொட்டில் போல் தூங்குவதற்கு சுகமாக இருந்தது. 27 ஆம் தேதி இரவு எங்களிடம் இருந்து விடைபெற தயாராக விழித்துக் கொண்டே இருந்தது.

.

Sunday, November 25, 2012

நாங்கள் சென்ற இரண்டாவது காசி யாத்திரை....2....

26-10-2012 மாலை கன்னியாகுமரி சென்னை விரைவு ரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கும்போதே அடுத்த நாள் பகல் பொழுதை எப்படிக் கழிப்பது ! வாரணாசி ரயில் Central Station -இல் இருந்து மாலை 5.30 க்குதான் புறப்படும்.
எங்களுடன் வந்தவர்களில் நான்கு பேர் தாம்பரத்தில் இறங்கிவிடுவதாகச் சொன்னார்கள். அண்ணா நகர் அண்ணனின் வீட்டுக்கு நாங்கள் போகலாம் என திட்டமிட்டோம்.

27-ஆம் தேதி காலை ரயில் தாம்பரத்தில்  நின்றது. நால்வர் இறங்கினர்.நாங்கள் மூன்று பேர் எக்மோரில் இறங்கும் போது  எங்களை அழைத்துக் கொண்டு போக எனது அண்ணனின் மகன் வந்து நின்றதைப் பார்த்தேன்.நாங்கள் அவருடன் அவர்கள் வீட்டுக்குச் சென்றோம். செல்வதற்கு முன்னால் சொல்லவேண்டிய நபரிடம் தகவல் சொன்னோம். மாலை நான்கு  மணிக்குள் மைய ரயில் நிலையத்துக்கு வந்து சேரும்படி சொன்னார்.

அண்ணா நகர் வீடு வந்து சேர்ந்தோம். குளியல் , உட்பட எல்லாமே முடிந்தது.
அண்ணன் வந்து எங்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.

82 வயதான அவர் எங்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.

“உங்கள் எல்லோரையும் யார் அழைத்துக்கொண்டு போகிறார் ?”

எங்களை அழைத்துச் செல்பவர் ஒரு இளம் துறவி. அவர் பெயர் முருகதாஸ். (சுரதவனம் முருகதாஸ்). அவரை எல்லோரும் சுவாமி என்றே அழைப்பதைக் கண்டேன். நானும் அவரை அவ்வாற அழைக்க முற்பட்டேன். அப்போ அவர் சொன்னார்.“ சார், உங்களுக்கு எப்போதுமே நான் முருகதாஸ் தான். நீங்கோ முருகதாஸ் என்றே கூப்பிடுங்கோ.”

முருகதாஸ் தெ.தி. இந்துக் கல்லூரி மாணவர். படித்துக் கொண்டிருக்கும் போதே ஆன்மீக நாட்டம் காரணமாகவும் தமிழ் போதித்த ஆசிரியர் இந்து சாமியார்களை வசைபாடி வகுப்பில் பேசியதைத் தாங்க முடியாமல் மனம் நொந்ததன் காரணமாகவும் படிப்பதை நிறித்தி விட்டார். அந்த ஆசிரியருக்கும் இதனைத் தெளிவாக எழுதி கடிதம் ஒன்றையும் அனுப்பினார்.

கடிதத்தைப் பார்த்த அந்த தமிழ் ஆசிரியர் அவர் இருக்கும் இடம் போய், தான் தவறு செய்ததற்கு வருந்துகிறேன் என்றும் கல்லூரிக்கு வரும் படியும் வேண்டினார்.ஆனால் அதன் பிறகு படிக்க கல்லூரிக்குப் போகவில்லை. ஆனால் இன்று அவர் ஆன்மீகம் பற்றி அதிகம் அறிந்து வைத்திருக்கிறார். சம்ஸ்கிருதம் படித்திருக்கிறார்.தெய்வப் பாடல்களைப் பாடுவதும் கேட்பவர்களை பாட வைக்கவும் செய்கிறார். அவர்  குருவாக வணங்குவது திருவண்ணாமலை யோகிராம் சுரத்குமார் சுவாமி.

 பகவத் கீதை வகுப்பு நடத்துகிறார். அந்த வகுப்பில் தமிழ் ஆசிரியர்கள், ஆங்கிலப் பேராசிரியர் மாணவர் போல் அமர்ந்து கேட்கிறார்கள்.
ஆறுமாதத்திற்கும் அதிகமாக காசியில் தங்கி இருந்து தம்மை சுய பரிட்சை
செய்து பார்த்து இன்று ஒரு துறவியாக வாழ்ந்து வருகிறார்.

முருகதாஸ் ரயிலில் வரும்பொழுது தனிதனியாக ஒவ்வொருவரிடமும் போய் அவர்கள் நலம் விசாரித்து ,“  தேவைப்பட்டால் என்னைத் தொடர்பு கொள்ள, என்னுடைய mobile  எண் இதோ இந்தக் கார்டில் இருக்கிறது”, என்று சொல்லி கழுத்தில் மாலையாய் அணிந்து கொள்ள ஒரு அடையாள அட்டையைத் தந்தார். செந்நிறம் கொண்ட அந்த (ribbon) மாலை அழகாக இருந்தது.
ரயிலில் இரவு உணவு கிடைத்ததா .... நன்றாக இருந்ததா.... என்றெல்லாம் கேட்டதும்    ரயில் சாப்பாடு திருப்தியாக இருக்கும் என எப்போழுதும் எதிர்பார்க்க முடியாது.... எனச்  சொன்னது ..... என் மனதுக்குப் பிடித்தது.
அண்ணனிடம் சொல்லி முடித்தேன்.
அவர் ,” “ Banaras Hindu University -க்குப் போவீங்களா என்று கேட்டார்.
 மூன்று நாட்களில் ஒரு நாள் காசியைச் சுற்றியுள்ள இடத்திற்கு அதாவது பிர்லா மந்திர்,பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம்,காசிராஜா அரண்மனை, காலபைரவர் கோவில்,சாரநாத்....போவோம் என்றேன்.

எங்கே தங்குவீங்க !

காசி விஸ்வநாதர் கோவிலின் பக்கத்தில் உள்ள நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரத்தில் தங்குவோம். அங்கேயே உணவும் கிடைக்கும்.

மாலைமணி  மூன்று . சென்னை செல்லும் போதெல்லாம் நான் வழக்கமாகச் செல்லும் கேசவனின் கார் வந்தது. அதில் நாங்கள் மூணு பேரும் central station-க்குப் போனோம்.

காலையில் பிரிந்து சென்ற அனைவரும் மாலையில் செண்ட்ரல்-இல் கூடினோம்.எங்களுடன் வந்த முருகனின் அண்ணன் கோலப்பன், குமரேசனின் தம்பி மகன் பாரதி,சிவதாணுபிள்ளை அண்ணாச்சியின் மைத்துனர் வழி அனுப்ப வந்தார்கள். எங்கள் Luggage களை அவர்களே தூக்கிக் கொண்டு வந்து பத்துக்கும் அதிகமாக தண்ணீர் பாட்டிலும் வாங்கித் தந்தார்கள். தேநீரும் அவர்கள் வங்கித் தந்து குடித்தோம். நல்ல தண்ணியும் சாப்பாடும் இனி அடுத்த வெள்ளிக்கிழமைதான் கிடைக்கும் என்று எங்களில் ஒருவர் சொன்னது காதில் விழுந்தது. அவ்வாறு அவர்கள் வந்தது இன்றும் இதனை எழுதி கொண்டிருக்கும் இந்த நேரத்திலும் மகிழ்ச்சியைத் தருகிறது.

ரயில் வந்தது. எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கை,படுக்கை களில்  அமர்ந்து கொண்டோம். மிகச் சரியான நேரத்தில் ரயில் நகர்ந்தது. ரயில் நகர  நகர நடைமேடையில் நின்று கையசைத்தவர்கள்  கொஞ்ச தூரம் எங்கள் திசையிலேயே நகர்ந்து வந்ததும் கண்ணுக்குத் தெரிந்தது.

காசியை நோக்கிப் பயண ரயில் அதனுடைய சத்தத்தை சங்கீதம் போல் இசைத்துக் கொண்டே சென்றது.



Saturday, November 24, 2012

நாங்கள் சென்ற இரண்டாவது காசி யாத்திரை....1....

அக்டோபர் மாதக் கடைசியில் புனித காசிக்கு ஒரு புண்ணிய யாத்திரை பற்றிய அறிவிப்புத் தகவல் தாள் என் கையில் கிடைத்தது. அது அழகுற வடிவமைத்திருப்பது கண்டு ரசித்தேன். படித்தேன்.

அச்சில் பார்த்துப் படித்துப் பார்க்கும்போதே மனம் மலர்ந்தது.இரண்டாவது தடவை செல்லும் காசி யாத்திரை சுகமான யாத்திரையாகத்தான்  நிச்சயம் இருக்கும் என்ற நம்பிக்கை மனதில் பதிந்து விட்டது.

யாத்திரை நாள் 26 அக்டோபர் முதல் நவம்பர் 3 வரை(2012). யாத்திரையில் கலந்து கொள்பவர்கள் நலம் கருதி அக்டோபர் மாதம் 21-ஆம் தேதி பகல் 3,30 மணி முதல் 6 மணி வரை கஞ்சிமடம் ஸ்ரீ தர்மசாஸ்தா ஆலயத்தில் வைத்து மகா ம்ருத்யுஞ்ஜய ஹோமமும் யாத்திரை விளக்கக் கூட்டமும் நடைபெறும். யாத்திரிகர்கள் இதில் அவசியம் கலந்து கொள்ளக் கடமைப் பட்டிருக்கிறார்கள்

பசுமையான வரிகள் மனதை ரம்மியமாக்கியது. நாங்களும் கலந்து கொண்டோம். மிகச் சிறப்பாக சொன்னபடியே அனைத்தும் நடந்தது. சுய அறிமுகம் என்று அனைவரும் தன் பெயரை சப்தமாக அனைவர் காதில் விழும்படியாக சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

நானும் என்முறை வரும்போது சொல்ல வேண்டும். சொல்வதில் தயக்கம் ஒன்றும் இல்லை. ஆனால் திரு. ஆறுமுகம்பிள்ளை கூட்டத்தில் பேசும்போது என்னைப் பற்றி அனைவரும் அறியும்படி சொன்ன பிறகு நானும் சொல்ல வேண்டுமா !.பெண்கள் அதிகமாக இருந்தார்கள். அவர்களுடன் என் மனைவியும் இருந்தாள். அவள் தன் பெயரை சொன்னாள். என்ன சொல்ல என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே என் பக்கத்தில் உள்ளவர் அவர் பெயரைச் சொன்னார். அவர் சொல்லி முடித்ததும் நான் எழுந்து நின்று சொன்னேன். “ அதோ அங்கே இருக்கும் சுப்பம்மையின் மாப்பிள்ளைதான் நான்” என்றேன். அனைவரும் ரசித்தார்கள் அதனால் சிரித்தார்கள் என நான் எடுத்துக் கொண்டேன் .

அந்தக் கணமே எங்களை அழைத்துச் செல்பவரின் நிர்வாகத்திறமையை, அவர் அறிவை, இதயத்தில் இருந்து மட்டுமே வெளிப்படும் அன்பை எங்களால் உணர முடிந்தது.
 அக்டோபர் மாதம் 26-ஆம் தேதி கன்னியாகுமரி விரைவு ரயிலில் எங்கள் பயணம் தொடங்கியது. நாங்கள் 9 பேர் ஒரு குழுவாக இருந்ததால் எங்கள் அனைவருக்கும் அருகருகே இருக்கும்படியாக இருக்கைகளே ஒதுக்கப் பட்டதில் மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தது. வசதியாகவும் இருந்தது.

அன்று இரவுக்கான உணவை நாங்கள் கொண்டு போயிருந்தோம்.அதை  சாப்பிட்டு விட்டு இரவு தூங்கினோம்.

காலை 7 மணியளவில் எழும்பூருக்கு ரயில் வந்து சேர்ந்தது. எங்களை ஒரு வீட்டிற்கு அழைத்துப் போக வந்திருந்த நபரைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தோம்.







Friday, November 23, 2012

புனிதகாசிக்கு ஒரு புண்ணிய யாத்திரை

வழக்கம் போல்  கடுக்கரைக்கு போய் ராஜேந்திரன் வீட்டில் நான் அவரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது ஒருவர் கையில் ஒரு தோல் பையுடன் அங்கு வந்தார்.  பார்த்தால் சீட்டுப் பணம் வசூல் செய்பவரைப் போல் தோற்ற     மளித்தார்.அவரை அதற்கு முன் எங்கும் பார்த்ததில்லை.

அவர் தோவாளை ஊரைச் சேர்ந்தவர் என்றும் பலரை காசிக்கு அழைத்துச் செல்பவர் எனவும் அறிந்து கொண்டேன்.
 அவர் மே மாதம் காசி செல்ல விரும்புபவர்கள் பெயரையும் அதற்குண்டான கட்டணத்தையும் வாங்குவதற்காக வந்திருந்தார். மூன்று மாதங்களுக்கு முன்னரே இரயிலில் பயணச் சீட்டு முன்பதிவு செய்யும் வசதி உள்ளதால் ஜனுவரி மாதம் முன்பதிவு செய்யவேண்டும்.அதுக்குப் பணம் வேணுமே. பணம் வாங்குவதற்காக அங்கு வந்தார்.

எத்தனை பேரைக் கூட்டிக்கொண்டு போகிறார் என்ற என் கேள்விக்கு 80-க்கும் அதிகம் என்ற பதில் கிடைத்தது. கடுக்கரையில் இருந்துதான் கூடுதல் ஆட்கள் என்றும் சொல்லப்பட்டது. அழைத்துக் கொண்டு செல்பவரைப் பற்றி மிகவும் புகழ்ந்தும் சொல்லப்பட்டது.
அவரது பெயரென்ன?

 “காசி முருகன்”.

காசி சிவனைத் தரிசிக்க வருடம்தோறும் ஆட்களை அழைத்துச் செல்வது ஒன்றே இவரது பிரதானப் பணியாய் இருப்பதால் இவர் பெயரோடு காசியும் ஒட்டிக் கொண்டது.

காசி முருகன் என்னிடம் பேச ஆரம்பித்தார்.

“நீங்க காசிக்குப் போயிருக்கிறீர்களா ?”

“ஆமாம் 2009 -இல் போயிருக்கேன்.”

இந்த சந்திப்பு  நடந்த மாதம் ஜனுவரி 2012. அந்த நாளில் என் மனைவியும் கடுக்கரைக்கு என்னுடன் வந்தாள். காசி முருகனிடம் பேசிக்கொண்டிருக்கும் போது அவள் என் அருகில் இருந்தாள். அவளுக்கு காசிக்குப் போகணும் என்ற ஆசை அரும்பியது. மெல்ல என்னிடம் , காசிக்கு நாமும் போலாமா? என்று கேட்டாள்.
“நீ வேண்டுமானால் போயிற்று வா. நான் வரவில்லை ”என்றேன்.

நான் சொன்னதை நிராகரிக்கும் மன நிலையிலேயே இருந்த அவள் வேண்டாம் என்று சொல்லிவிட்டாள்.

அவளை சமாதானப்படுத்தும் விதமாக ,“ இப்பந்தானே போயிட்டு வந்திருக்கோம். கொஞ்சம் பொறுத்துக்கோ. விமானத்தில் இருவருமே அடுத்த வருஷம் போலாம். போனதடவைப் போகும் போது எவ்வளவு கஷ்டப்பட்டோம்.”

காசிமுருகன் விடை பெற்றுப் போனபின், அக்டோபர் மாதம் காசிக்குப் போனால் சீதோஷ்ணநிலை நன்றாக இருக்கும் என்று ஒருவர் சொன்னார்.

நான் சொன்னேன்.  “அதிக எண்ணிக்கையுடன் அவர் அழைத்துக்கொண்டு செல்வதால்  பல சிரமங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் கூடுதல். மனதளவில் எனக்கு இஷ்டம் இல்லாமல் இருந்ததால் இது போன்ற பயணம் வேண்டாம்.”

”நீ அக்டோபர் மாதம் எங்களுடன் காசி யாத்திரைக்கு வா.நானும் அந்த டூரில் உண்டு. ஜுன் மாதம் பேரு கொடுத்தாப் போரும் . கண்டிப்பா வாருங்க.  நிச்சயம்  இந்த தடவை உங்களுக்குப் பிடிக்கும்” என்றார் ராஜேந்திரன்.

”அதெல்லாம் சரி! யார் நம்மை காசிக்கு அழைத்துக் கொண்டு போகிறார் ? முதல்ல அதைச் சொல்” என்றேன்.

பெயர் சொன்னான்.

பெயரைக் கேட்டதும் நிச்சயம் நாங்கள் வருவோம் என்று சொன்னேன்.

ஜுலை மாதம் எங்கள் பெயர்களையும் போட்டோவுடன் இணைத்து அவரிடம் கொடுத்தோம் . ஒரு ஆளுக்கு 3800 /- Senior citizen என்றால் 3500/- ருபாயும் கொடுத்தேன். பயண  நாள் அக்டோபர் மாதம் 26-ஆம் தேதி.

புண்ணிய யாத்திரை ஆரம்பம் ஆனது.