Saturday, December 31, 2011

சீமந்த தங்கம் ,வெள்ளி வளைகாப்பு விலை 60 ருபாய் கிராமத்துக்கடைகளில்

ஐந்து நாட்களுக்கு முன் என் மனைவி என்னிடம் 31-12-11 சனிகிழமையன்று தெரிசனம்கோப்புக்கு சீமந்த வளைகாப்பு வீட்டுக்குப் போகணும்.அதனால் ஒரு செட் சூல் காப்பு வாங்கி வாருங்கள் என்று கூறினாள்.

சூல் காப்பு ஒரு செட் என்றால் ஒரு தங்க காப்பும் வெள்ளிக் காப்பும் இருக்கும்.

நான் மீனாக்ஷிபுரத்தில் எனக்குத் தெரிந்த தங்க ஆசாரி நண்பர் வீட்டுக்குப் போய் சூல்காப்பு கேட்டேன். அவர் உடனே எழுந்து என்னுடன் வருவதற்கு தயாரானார்.

ஏன், உங்களிடம் கிடையாதா வெளியில் கடையில் தான் போய் வாங்கணுமா ?

சூல் காப்பு நாஙகள் செய்வதென்றால் ஒண்ணேகால் கிராம் தங்கம் வேணும்.ஒரு கிராம் தங்கம் விலை 2724 ருபாய். ஒரு கிராம் வெள்ளி விலை 54 ருபாய். 3500 ருபாய் ஆகும். நாங்க செய்து வச்சா யாரு வாங்குவாஙக.

கடையில் கிடைக்கும் காப்பின் உண்மையான விலை 50 அல்லது 60 ருபாதான். 60 ருபாய்ணு சொன்னா உங்கள மாதிரிப்பட்ட ஆளுங்க வாங்க மாட்டீங்க. 100 அல்லது அதற்கு மேல சொன்னாதான் வாங்கீட்டுப் போவீங்க. ஒரு மில்லி தங்கம் கூட அதில் இருக்காது.கண்ணாடி வளையலப் போட்டால் போதுமே.

என் மனம் வாங்காதே என்று சொல்லவே காப்பு வாங்காமலேயே வீட்டுக்குப் போய்விட்டேன்.

நான் அவளிடம் , “ உன் வளைகாப்புக்கு வந்த காப்புகளை என்ன செய்தாய் ?” கேட்டேன்.

அவள், “ எனக்கு வந்த தங்க சூல்காப்புகளையெல்லாம் ஆசாரியிடம் கொடுத்து இரண்டு கல் காப்புகள் செய்தேன். வெள்ளிகாப்புகளைக் கொடுத்து ஒரு வெள்ளிச் சங்கு செய்தேன்.”என்றாள்.

நான் அவளிடம் சொன்னேன். “ இப்பம்லாம் வாங்குகிறகாப்பில் தங்கம்லா இருக்காது. அதனால் நாம் ருபாய் 200 அல்லது 300 ருபாய் கொடுத்துரலாம். அதுதான் பிரயோஜனமாக இருக்கும்”.

அவளும் நான் சொலவதை புரிந்து கொண்டாள்.

31-12-2011 இன்று நாங்கள் சீமந்த வீட்டுக்குப் போனோம். நாங்கள் நினைத்தது போலவே ருபாய் கொடுத்துவிட்டு வந்தோம்.

ஏமாறுகிறவர்கள் இருப்பதுவரை ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டுதான் இருப்பார்கள். அதிலும் படித்தவர்களும் ஏமாறத் தயாராய் இருப்பதுதான் மனசுக்கு வேதனையாக இருக்கிறது.

வரும் காலங்களில் மாற்றம் வருமா.....?

Thursday, December 29, 2011

மண்டல பூஜை நாளில்.....

கடுக்கரை நாகர்கோவிலில் இருந்து 18 கிலோ மீட்டர் தூரம் பாலமோர் சாலையில் பயணித்தால் சேர்ந்து விடும் ஒரு அழகான சிறிய கிராமம். மன்னர் ஆட்சியில் கடுக்கரை ஒரு முக்கியமான கிராமமாக இருந்தது. அரசியல் ரீதியாக பார்த்தால் ஜீவா,பிரட்டீஷ் அரசு அவரைக் கைது செய்ய போலீஸ் தேடிக் கொண்டிருந்த வேளையில் கடுக்கரையில் இருந்துகொண்டு அரசியல் நடத்தியவர். தி.மு.க தலைவர் பேராசிரியர் அன்பழகன் கடுக்கரையில் அவரது கட்சிக் கொடியை ஏற்றுவதற்காக வந்திருக்கிறார்.

கோட்டைச் சுவர் போல் வடக்கு கிழக்கு மேற்கு மலைகள். ஊரை வலம் வரும் ஆறு. ரம்மியமான பசுமையான வயல். இயற்கை அன்னை அள்ளிக் கொடுத்த அழகு. இது தான் கடுக்கரை.
இயற்கையாக அய்யப்பனின் ஆலயம் அமைந்த இடம் சபரிமலை.கடுக்கரையில் ஒரு உய்ர்ந்த பாறையில் சின்ன குன்றின் மீது அய்யப்பனின் கோவில் இருக்கிறது. 18 படிகள் பாறையிலேயே செதுக்கி எடுக்கப்பட்டு அமைந்திருக்கின்றன.

அய்யப்பன் சாமியைப் பார்க்க ஆயிரம் கோடி கண்கள் வேண்டும். அவ்வளவு அழகு.

30 வருடங்களுக்குப் பின் மண்டலபூஜை நாளில் நானும் என் மனைவியும் அய்யப்பன் சாமியை தரிசித்து விட்டு வந்தது மனசுக்கு சந்தோசமாக இருந்தது

Sunday, December 25, 2011

முப்பது வருடம் போனபின் நினைவஞ்சலி

25-12-1981 என் தந்தை மறைந்த நாள். இன்று 25-12-2011..
நினைவு நாள். முப்பது வருடம் முடிந்து விட்டது.
இப்பவும் இருப்பது போன்ற உணர்வுடன்
இன்றைய காலை இனிதாக விடிந்தது.

பாப்பாத்திதனைத் தனதாக்கி தங்கமெனைத் தனயனாக்கிய
என் அப்பாவை வணங்குவேன் தினமும்.

தள்ளாத வயதிலும் கள்ளம் இல்லா உள்ளம் கொண்ட
தன்னை அணுகியவனை அன்பாகவும் ஆதரவுடனும்
அரவணைக்கும் ஆறுமுகம் பிள்ளையின் பிள்ளையாய்
பிறந்தது நானடைந்த பாக்கியமே.

நோயுற்ற போது சேய் நான் என் தந்தையைத்
தாய் போல் பேணி பாது காத்ததும் எத்தனையோ
சேய்களிருந்தும் கடைசி வரைக் கூடவே இருந்துக் காத்த
கடைசிப் பிள்ளை நான் என்பதும் நானடைந்த பாக்கியம் தானே.

எங்கள் வீட்டுத் தங்கத்தின் புகழ் பாட விரும்பி தங்கம் நான்
அறிந்த சில உண்மைகளை பதிவு செய்கிறேன்.


இல்லம் இல்லா குப்பன் இல்லம் பெற்றதையும்
நிலமில்லா சுப்பன் நிலம் பெற்றதையும்
பலர் என்னிடம் கூறக் கேட்டு வியந்ததுண்டு

ஆடியிலும் கோடையிலும் பஞ்சம் வருவதுண்டு.
கொடிய நோயான வறுமை வாட்டும் போது சிலர்
வாடிய முகத்துடன் தேடிப் போகும் இடம்
கடுகையில் ஓரிடம் தான் உண்டு அப்போது.
அது நெல்லுக்கடை ஆறுமுகம் பிள்ளையின் வீடுதான்.

காசும் நெல்லும் பெற்றுச் செல்வர் சிலர்.
பசியாறிச் செல்வர் பலர்.

ஊருக்கு உறுப்பினராகி பின் பஞ்சாயத்துக்குத் தலைவராகி
ஏழூர்களின் முதலாம் மனிதராய்த் திகழ்ந்தார்.
அஞ்சுகிரி அய்யப்பனுக்கு கோவில் காண அஞ்சுகிரிப்
பொத்தையில் தன் சொத்தினைக் கொடுத்து மகிழ்ந்த
பெருமான் ஒரு மண்டல பூஜைநாளில் சிவனடி சேர்ந்தார்.

மார்கழிப் பனிவிழும் அதிகாலை நேரத்தில்
காலனவன் கவர்ந்து சென்றான் எந்தையின் உயிரை.அவர்
உறங்கியது போலவே இருந்தது உயிர் போன பின்னும்.
வாழ்ந்தால் இவர் போல் வாழவேண்டும்
மடிந்தாலும் இது போலவே மடிய வேண்டும்.

Wednesday, December 21, 2011

இரு தலைமுறையினரின் சதாபிஷேகவிழா

 
Posted by Picasa


 
Posted by Picasa


கடுக்கரையில் 1960 ஜனுவரி மாதம் 25-ஆம் தேதி (1135-ஆம் ஆண்டு தை மாதம் 12-ஆம் தேதி) திங்கள் கிழமை எங்க வீட்டில் அதாவது ஈஸ்வரிபவனத்தில் எங்க தாத்தா மெய்க்கும்பெருமாள் பிள்ளைக்கும் ஈஸ்வரவடிவுக்கும் சதாபிஷேக விழா நடந்தது. வீட்டுக் களத்தில் பெரிய பந்தலில் சாப்பாடு விருந்தும் நடந்தது.

மெய்க்கும்பெருமாள் பிள்ளையின் மகள் மீனாட்சி பெருமாள்பிள்ளையின் மகனான பேரனின் பெயர் மெய்க்கும்பெருமாள் பிள்ளை. அவரது மூத்த மகன் ஆறுமுகப்பெருமாள் -பகவதி அம்மாள் மகளான பேத்தியின் பெயர் ஈஸ்வரவடிவு. இவர்களது சதாபிஷேகம் 2011-11-30 புதன்கிழமை பெருமாள் கோவில் திருமணமண்டபத்தில் நடந்தது.

 
Posted by Picasa

Tuesday, December 20, 2011

விருந்தில் தொலைந்த மோதிரம்

நான் இன்று காலையில் இந்துக்கல்லூரிக்குச் சென்றேன்.கல்லூரியில் என்னுடன் வேலை பாத்த இப்பொழுதும் வேலை பார்க்கிற ஆசிரியர் வில்சனைக் கண்டு பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டோம்.

அவரைப் பார்த்து திரும்பி வீட்டுக்கு வரும்போது ஒரு விசயம் ஞாபகத்துக்கு வந்தது.

நான் கல்லூரியில் கணிதத்துறை தலைவராக பொறுப்பேற்றபின், ஈஸ்வரப்பிரசாத் கணிதத்துறையில் முதல் Ph.D பட்டம் பெற்றதற்காக விருந்து தர விரும்பினார்.
என்னிடம் வந்து சார் ஹோட்டலில் போய் நாம் சாப்பிடுவதைவிட ஒரு குக்கை ஏற்பாடுபண்ணி சமையல் செய்து விருந்து வைக்கலாமே என என்னிடம் கூறினார்.

நானும் 'அதுதான் மிக நல்லா இருக்கும்' என்று சொன்னேன்.

எங்கே வைப்பது என கேட்க அவர் என்வீட்டில் அனைவரையும் அழைக்கலாம் அது எல்லோருக்கும் வசதியாக இருக்கும் என்று பிரசாத்தே சொன்னார். நான் முழு மனதுடன் சம்மதித்தேன்.

இடம் என்னுடைய வீடு எனத் தீர்மானமானது. எல்லாம் முறைப்படி நினைத்தபடி ஒரு குறிப்பிட்ட தேதியில் விருந்து நடந்தது.

இரவு கணிதத்துறை ஆசிரியர்கள் தங்களுடைய குடும்பத்துடன் வந்தனர். என் வீட்டு மாடியில் தான் எல்லோரும் கூடி இருந்து விருந்து அருந்தினோம். விருந்து முடிந்த பின் எல்லோரும் விடைபெற்றுச் சென்றனர்.

எங்களுடன் வந்தவர்களில் கடைசியாக சாப்பிட்ட மகேஷ்வரன் கீழே வந்து என்னிடம் ஒரு தங்க மோதிரத்தைக் காண்பித்து ‘இது மாடியில் கிடந்தது. உங்கள் மோதிரமா ?’ எனக் கேட்டார்.

நான்,“இது என்னுடையது இல்லை. யாருக்கென்றும் தெரியவில்லை.நாளைக் காலையில் பாத்துக்கலாம்” என்று சொல்லி அவரிடம் அவர் மோதிரத்தைக் கண்டு எடுத்து என்னிடம் தந்ததற்கு நன்றி சொன்னேன்.

அவர் போனபின் நான் அந்த மோதிரத்தைப் பார்த்துக் கொண்டே இருந்ததில் ஒரு பெண் அணியும் மோதிரம் எனப் புரிந்து கொண்டேன். பின் சற்றுத் தீவிரமாக நானும் என் மனைவியும் மோதிர அமைப்பை பார்த்ததில் அது அணிபவர்கள் யாராக இருக்கும் என ஓரளவு கணித்தோம். அதன் படி வில்சன் சாரிடம் போன் பண்ணி விசயத்தைக் கூறினேன்.

வில்சன்,“ சார்.... என் மனைவியின் மோதிரம் தான் அது. வீட்டுக்கு வந்த உடனே அவள் மோதிரம் தொலைந்து போன விசயத்தினை என்னிடம் கூறினாள்....சாரிடம் எப்படிக் கேட்பது என்று தயங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் உங்கள் போன் வந்தது” என்றார்.

அடுத்தநாள் மோதிரத்தினை அவரிடம் கொடுத்தேன்.

அதன்பிறகு நாங்கள் சிவலோகத்திற்கு ஒரு நாள் காலையில் போய் மாலையில் வந்தோம். அங்கு எல்லோரும் வெகு நேரம் குளித்து விட்டு வெளியே வரும்போது எங்களில் ஒருவர் தன்னுடைய கை விரலில் மோதிரம் இல்லாதிருப்பதைக்கண்டார்.

அவர் வில்சன் சார்.

Sunday, December 18, 2011

அடுத்தவர் வீட்டு மனையில் பூமி பூஜை

சுசீந்திரம் ஆஞ்சநேயர் நகரில் ஒரு உறவினர் வீட்டுக்கு போயிருந்தோம். அது புதிதாக உருவான பஞ்சாயத்துக்கு உட்பட்ட வீட்டு மனைகள் உள்ள இடம். கிருஷ்ணன் கோவிலின் தெற்காக அமைந்த மனை,சுசீந்திரம் ஊரின் மேற்குப் பக்கம் உள்ள மனைகள். அங்கொன்றும் இங்கொன்றுமாக புதியதாக வீடுகள் கட்டப்பட்டு பல மனைகள் வீடு அமைவதற்காக காத்திருக்கின்றன.

நான் போய் இருந்த வீட்டின் பக்கத்தில் இரண்டு மனைகளில் வீடு கட்டும் பணி நடந்து கொண்டிருந்தது. 16 பில்லர்கள் போடுவதற்காக குழிகள் தோண்டப்பட்டிருந்தன.

என் அருகே இருந்தவரிடம் ,“ அங்கே கட்டும் வீடு பெரிதாக இருக்கிறதே. அது யாருக்கு... நமக்கு தெரிஞ்ச ஆளா?”

“அது ஒரு ஆளுடைய மனை இல்லை. ரெண்டு பேருடையது” என்றார்.

“ஓஹோ.... ரெண்டு பேரும் ஒண்ணு போலவே வீடு கெட்டுகிறார்களே....அண்ணன் தம்பிகளா....” நான் கேட்டேன்.

“அப்படி எல்லாம் இல்ல... ஒரு தமாஷ் நடந்து போச்சு” என்றார்

“என்னது.... தமாஷ் நடந்து போச்சா.. என்ன தமாஷ் நடந்துச்சு...” கேட்டேன்

“ரெண்டுமனைகளில் வடக்கு மனைக்கு சொந்தக்காரர் வீடு கட்ட வேண்டும் என நினைத்து அய்யரை எல்லாம் அழைத்து வந்து பெரிய பூஜையெல்லாம் போட்டு சொந்தக்காரர் புடை சூள வந்து கல் எல்லாம் போட்டு வேலையையும்ம் நல்ல நாள் பாத்து ஆரம்பித்து விட்டார்.வேலையும் நடந்து எட்டு குழிகள் தோண்டப்பட்டன. மழை வந்து விட்டதால் பணி நிறுத்தப்பட்டது. மழை வராமல் இருந்தால் எட்டு தூண்கள் எழும்பி இருக்கும்....நல்ல காலம் மழை வந்து அவரைக் காப்பாத்திற்று...”

“ என்ன சொல்றீங்க. மழை வந்து கெடுத்துற்றுனு சொல்லுங்கோ” என்றேன்.

“அவர் கல் போட்டதும் பூஜை செய்ததும் அவரது மனையில இல்ல. அடுத்த தெக்கு மனையில். அது அவரது மனையே இல்லை”

நான் மிகுந்த வியப்புடன் அந்த ரெண்டு மனைகளின் அருகே சென்றேன். என்னுடன் வந்தவரிடம் கேட்டேன். “ இப்படி வேலை நடந்திருப்பது தெற்கு மனையின் சொந்தக்காரருக்குத் தெரியுமா...?. விசயம் தெரிந்தால் சண்டை வருமே.”

‘அவர் தோண்டிய குழியை மண் போட்டு நிரப்பிக் கொடுத்துருவாரு’

அப்பொழுது ஒரு வயதான பெரியவருடன் ஒரு தம்பதியினர் மனை அருகே வந்து கொண்டிருந்தனர். சுத்தி சுத்தி பார்த்தார்கள் . அது அவர்களுடைய மனைதானா .அவர்களால் பாத்து உறுதியாக அந்த மனை தங்களுக்கு உரிமையானது என்று சொல்ல முடியவில்லை. நாளை லேய் அவுட்டைக் கொண்டு வந்து பாக்கணும் எனச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவர்களுடன் வந்த பெரியவர் என் கையைப் பிடித்து “ பொன்னப்பா இங்க நிக்க என்ன விசயம்” என்று கேட்டதும் தான் நான் அவரைப் பார்த்தேன்.

அவர் எனது ஆரம்பப் பள்ளிக்கூட ஞானத்து வாத்தியார். வேட்டியை மடித்துக் கட்டியிருந்த நான் மடிப்பை எடுத்து சரியாக்கி மிகவும் பௌயமாய் நின்று ,“ என் பேரைக் கூட இந்த வயதிலும் ஞாபகம் வச்சிருக்கீங்களே சார்...” என் கண்ணில் நீர் தழும்பியது.

“எப்படி பொன்னப்பா உன்ன மறக்க முடியும். நீ யாரு.கடுக்கரை ஆறும்பிள்ள அண்ணாச்சியின் மகன் லா.கடுக்கரையில் வேலை பாக்கும்போது தினமும் உங்க வீட்ல தான் நாங்க சைக்கிள வைப்போம்” என்றார்.

அந்த தெக்கு மனையின் சொந்தக்காரர் எனது ஆசிரியர் ஞானத்து சுப்பிரமணியபிள்ளை சாரின் மகன். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலை பார்க்கிறார்.

Saturday, December 17, 2011

இது வரை நான் போகாத பூதப்பாண்டி கோயில்


Posted by Picasa
கார்த்திகை கடைசித் திங்கள் சிவன்கோவிலுக்குப் போகவேண்டும் என்று என் மனைவி விரும்பினாள். இதுவரை ஊர்ப்பக்கத்தில் இருந்தாலும் போகாத பூதப்பாண்டியில் உள்ள பூதலிங்க சுவாமி கோவிலுக்குப் போகலாம் என முடிவெடுத்து நான்,என் மனைவி, ஆறுமுகப்பெருமாள் அவரது மனைவி எல்லோரும் அவரது காரில் கடுக்கரைக்குப் போய்
 திரும்பும் போது பூதப்பாண்டி கோவிலுக்குப் போனோம்.

கடுக்கரையில் சதாபிஷேக விழாவன்று அவர் வராததால் என் அத்தான் காந்தியின் வீட்டுக்குப் போக எண்ணி எங்களையும் அழைத்ததால் நாங்களும் போனோம்.

பூதப்பாண்டி கோவில் வாசல் வழி உள்ளே சென்றதும் பாறையின் மீதுள்ள சிவனும் சிவலிங்கமும் இருந்ததைப் பார்த்தேன். இடது பக்கமாக காங்க்ரீட் நடைபாதையில் நடந்து வந்தோம். தெற்கு வாசல் வழியே வெளியே போனால் தெப்பக்குளம். கிழக்குப் பக்கம் உள்ள கோவில் நுழைவாசல் வழியே கோவிலின் உள்ளே போகுமுன் காலை பைப் நீரில் கழுவி விட்டு வர வேண்டும் என சுவரில் ஒரு அறிவிப்பு எழுதப்பட்டிருந்தது.

பைப்பில் தண்ணீர் வரவில்லை. நாங்கள் உள்ளே நுழைந்த உடன் அங்கிருந்த ஒருவர் சட்டை போடக்கூடாது கழற்ற வேண்டும் என சொல்லவே நாங்கள் சட்டையைக் கழற்றினோம்.

சட்டையைக் கழற்றச் சொன்னவன் என்னையே உற்றுப் பார்த்து விட்டு உங்களுக்கு கடுக்கரைதானே என்றான். நான் ஆமாம் என்றேன். உனக்கு எந்த ஊர் என்று கேட்க ‘தெரிசனம்கோப்பு’ என்றான். அதனைக் கேட்ட என் மனைவி திரும்பிப் பாத்து அவனிடம் ‘ நீ கிருஷ்ணன் தானே’ எனக் கேட்டாள்.

ஆமாம் என்ற கிருஷ்ணன் அவளைப் பாத்து ‘நான் உங்க வீட்ல வளந்தவன்லா... சுந்தரத்தின் மகன் நான்’ என்றான். அதன்பிறகு  அவன் எங்கள் கூடவே வந்து ஒரு guide போல விளக்கமாக கோவிலைப் பற்றி சொன்னான்.

கோவில் கருவறை சிறிய குன்றுபோல் இருக்கும் பெரிய பாறையைக் குடைந்து எடுத்தது.அதில் பூதலிங்க சுவாமி சிவலிங்க வடிவில் காட்சி தருகிறார். கொடி மரம் இல்லையே எனக் கேட்டேன். புதிய கொடிமரம் வைக்கப்போகிறார்கள். அதோ அதுதான் புதிய கொடிமரம் என்று கான்பித்த இடத்தைப் பார்த்தோம்.கொடிமரம் தரையில் ஒரு நீண்ட தகர வளைவில் தரையில் மரப்பகுதி படாமல் வைக்கப்பட்டிருந்தது. துணி சுற்றப்பட்டிருந்தது. பக்தர்கள் அதன் மீது எண்ணெயை ஊற்றுகிறார்கள். எண்ணெயில் ஊறிக் கொண்டே இருக்கிறது கொடிமரம். சிவகாமி அம்மன் சன்னதிக்கும் மற்றும் சுற்றி உள்ள எல்லா சன்னதிக்கும் அழைத்துச் சென்று காண்பித்தான் கிருஷ்ணன்.

கோவிலை விட்டு வெளியே வந்த போது ஒருவர் என்னெதிரே வந்து,“  நீங்க இந்துக்கல்லூரியிலதானே வேலை பார்க்கிறீங்க” எனக் கேட்டார்.
“ வேலை பார்த்து இப்பம் ரிட்டயர்டாயிற்றேன்” என்றேன்.

“உங்க அப்பாவை எனக்கு நல்லா தெரியும். நான் H.R&C.E -ல் வேலை பாக்கும்போது இரவிபுதூர் அம்மன் கோவில் கணக்கு பாக்க வருவேன்.அந்தக் கோவிலுக்கு அப்பாதான் ட்ற்ஸ்டியாக இருந்தார். கணக்கு மிகவும் சரியாக இருக்கும். அவர் போல் நான் ஒரு ஆளை என் செர்வீசில் பாத்ததே இல்லை.”

அவர் பேசி விட்டு போகும்போது, சொன்ன வார்த்தைகள் நான் வீடு வந்து சேர்ந்தபின்னும் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தன.

“ உங்க அப்பா ஒரு பெரிய மனிதர். மதிக்கப்பட வேண்டியவர்.”

இந்த வயதிலும் இது வரை இந்தக் கோவிலுக்குள் நான் போகாமல் இருந்தது எனக்கே என்னவோ போல்தான் இருந்தது.திருவிழா, தேரோட்டம் என வந்த போதும் கோவிலின் உள்ளே போனதே இல்லை. நினைத்தால் வெட்கமாகவும் இருக்கிறது

Tuesday, December 13, 2011

வடக்குத்தெரு ராமன் பிள்ளை செய்த மோர்

கடுக்கரைக்கு போய் ராஜேந்திரன் வீட்டுக்குப் போனேன். அங்கு ராமன் பிள்ளையும் மற்றும் சிலரும் தமாஷாகப் பேசிக்கொண்டிருந்தனர். என்னைப் பாத்ததும் ராமன் பிள்ளைக்கு ஒரே சிரிப்பு ... நான் என்னா.. என்னப் பாத்ததும் சிரிக்கீங்க .... என்ன விசயம்...என்று கேட்டேன்.

ராஜேந்திரன்," ஒண்ணுமில்லே. அந்த மோரு செய்த கதையை உங்ககிட்ட சொல்லியாச்சா என்று மாமா கேட்கவும் நீ வரவும் சரியாக இருக்கிறது" என்றார்..

ராஜேந்திரன் சொல்ல ஆரம்பித்ததும் அதை நினச்சு நினச்சு சிரித்துக் கொண்டே இருந்தார்.

கலை இலக்கிய பெருமன்ற நண்பர்கள் அனவரும் கீரிப்பாறைக்கு சென்றனர்.பொன்னீலன் சார் தான் அனைத்து ஏற்பாடுகளைச் செய்தார். ராஜெந்திரனை அழைத்து சமையலுக்கு ஒரு ஆளை அழைத்து வரச்சொன்னார்.கீரிப்பாறையில் உள்ள Tourist Bunglow -ல் தான் எல்லோரும் அமர்ந்து கலந்துரையாடினார்கள்.சமையல் பெரையில் சமையல் காரர் ராமன் பிள்ளை தான் வாங்கி வந்த காய்கறிகள் , பாத்திரங்கள் அனைத்தையும் கொண்டு வந்து வைத்தார்.

பொன்னீலன் சார் ராமன்பிள்ளையிடம், “ ஐயா! மோரு வாங்கினீங்களா....வானமாமலை சாருக்கு மோர் கண்டிப்பா வேணும்...”

’அய்யோ... மறந்து போச்சே... மோரு வாங்கல்லியே...’ ராமன்பிள்ளை சொன்னார்.

பொன்னீலன் சாரின் முகம் வாடியதைக் கண்ட ராஜேந்திரன் ராமன் பிள்ளையிடம்,“என்ன மாமா இப்படி செய்திட்டீங்க....இப்பம் என்ன செய்ய....என்னை ஏன் இப்படி கஷ்டப் படுத்துறீங்க”....

“மருமகனே , ஏன் வருத்தப்படுகீங்க....மோர்தானே வேணும் ....செய்துட்டாப் போச்சு”

“என்னது... மோரை செய்வீங்களா....”

“நீங்க ரெண்டு பேரும் இப்பம் இந்த ரூமை விட்டுப் போங்கோ. சமையல் எல்லாம் முடிஞ்சு மோரு செய்த பின் உங்கள கூப்பிடுகேன். மோரை ருசி பாத்தபின் சொல்லுங்கோ எப்படீன்னு.”

சாப்பிடும் நேரம் நெருங்கியது. “சாப்பாடு ரெடியா..... மாமா என்ன ஆச்சு.. மோருக்கு என்ன செய்தீர். எங்கிட்ட மோர் எப்படி செய்வீர் எனச் சொல்லும். நானும் தெரிஞ்சிக்கேனே” ராஜேந்திரன் சொல்லவும் பொன்னீலன் சாரும் சமையல் பெரைக்குள் வந்து விட்டார்.

“ மருமகனே, நீங்க கொஞ்ச நேரம் உள்ளே போங்கோ.....தயவு செய்து நான் கூப்பிட்ட பின் வாங்கோ....”

நேரம் வந்ததும் ராமன்பிள்ளை அழைக்கவே ராஜேந்திரனும் பொன்னீலன் சாரும் போனார்கள்.

பொன்னீலன் சார் குடித்தார். அவர் முகத்தில் ஒரே மகிழ்ச்சி...ரொம்ப நல்லா இருக்கு .. மோரைப் போலவே ருசியாய் இருக்கிறதே என்றார்.

எல்லோரும் நன்றாக ருசித்துச் சாப்பிட்டார்கள். வானமாமலை சார் மட்டும், ‘ இது மோர் இல்லையே... வேறு என்னவோ போல் இருக்குதே’ என்றார்.

ராஜேந்திரன், “ ஏன்.. நல்லா இல்லையா?” கேட்டார்.

“மோரை விடவும் நன்றாக இருக்கு” சொன்னார்.

நான் ராமன் பிள்ளையிடம் ,“ எனக்கு நீங்க மோர் செய்து தரணுமே..... நாக்கில் நீர் ஊறுகிறதே.”

அது என்ன பெரிய காரியமா... செய்துட்டாப் போச்சு

Monday, December 12, 2011

வடக்குத்தெரு ராமன்பிள்ளையும் புதுக் கண்ணாடியும்





கடுக்கரை ஊரில் வடக்குத்தெருவின் முடிவில் ஒரு குளம்.அது தென் வடலாக நீண்ட குளம்.கிழக்குப்பக்கக் கரை காட்டுப்புதுர்ர் செல்லும் சாலை அந்தச்சாலை வழியே செல்லும் போது ஒரு பெரிய ஆலமரம். அதைச் சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் திட்டு திட்டாக இருக்கும் பாறை.எப்பொழுதும் அந்த இடம் நிழல்தரும் குழுமையாக இருக்கும்.வயலுக்குப் போவோர் வருவோர் அந்த இடத்தில் இளைப்பாறுவது வழக்கம். அதன் பக்கத்தில் உள்ள வயல்களில் அறுவடை செய்வோர் அந்தப் பாறையில் வைத்து சூடடிப்பது வழக்கம்.

நிழல் தரும் அந்தப் பாறையில் ஒருவர் சிந்தனை செய்யும் பாவனையில் வடக்கு மலையை பார்த்துக்கொண்டே இருக்கிறார்.

கண்ணாடி போட்டிருந்த அவர் மிகக் கூர்மையாக எதையோ பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்ட அந்த வழியே சென்ற பெண்கள்.“ சமையர்கார அண்ணெ, என்னத்த உத்துப் பாத்துக்கிட்டிருக்கீரு...அப்படி அங்க என்னதான் இருக்கு.” கேட்டார்கள்.

‘ஒண்ணுமில்ல. நேத்தைக்குத்தான் புதுசா கண்ணாடி போட்டேன். அது எப்படி இருக்குன்னு பாத்துக்கிட்டிருக்கேன்.’

மலைக்கு அப்புறம் உள்ள இடமும் தெரியுதாக்கும் என நக்கலாக கேட்கிறாள் ஒரு பெண்.

அவர் , “ ச்சேச்சே....அது தெரியாதுல்லா. அந்தப் பாறையில ஒரு சின்ன எறும்பு ஊர்ந்து போவது மாத்திரம் மிகத் தெளிவாய் தெரிகிறது....” சிரிக்காமலே சொன்னார்.

ஆமாம் உமக்கு இண்ணைக்கு வேற ஆள் கிடைக்கல்லியா.. நாங்கதான் கிடைச்சமாக்கும் எனச் சிரித்தபடியே ரசித்துக்கொண்டு போனார்கள் பெண்கள்.

இந்த விசயத்தை என்னிடம் சொன்னது ராஜேந்திரன்.அப்போ அந்த சமயல்கார ராமன்பிள்ளையும் எங்க கூட இருந்தார்.

ராமன் பிள்ளை ,“ மருமகனே, நம்ம மோரு கதையைச் சொல்லுங்கோ தங்கப்பன் கேக்கட்டும்” என்றார் ரஜேந்திரனைப் பாத்து.

வாய்விட்டுச் சிரித்தார்கள் ராஜெந்திரனும் ராமன்பிள்ளையும். நான் ஆவலாக கேட்க ஆயத்தமானபோது என்னுடைய போன் சிணுங்கியது.

அழைத்தது ராமு . நான்,“ இன்னொரு நாளைக்கு வாறேன். இப்பம் எனக்கு அவசரமாக ஒரு இடத்துக்கு போகணும். மோர்க்கதையை அப்பம் மறக்காமச் சொல்லு...”




Sunday, December 11, 2011

இரண்டு சூரியன் கடுக்கரைப் புதுக்குளத்தில்

 நேற்று பௌர்ணமி .சிவன்கோயிலில் அன்ன விருந்தும் கிரிவலமும் நடக்கும் .இதில் பங்கு கொள்ள நாங்கள் காலையில்  சிவன் கோயிலுக்குப் போனோம். சிவன் கோயிலை சுற்றி பச்சைக் கம்பளம் விரித்தால் போல நெற்பயிர். கோயிலின் அருகே ஒரு சின்ன குளம். தொலை தூரத்தில் மூன்று பக்கமும் நீல வண்ணத்தில் கோட்டை போல மலை.  இயற்கை அன்னை அன்பாக தராளமாக அள்ளி வீசிய காட்சியை ரசித்தபடியே நான் ராஜேந்திரன் வீட்டுக்குப் போனேன்.

blogspot-ல் எழுத சுவராஸ்யமான நம்மூர் செய்திகள் ஏதாவது உண்டுமா என நான் கேட்க சிந்தனையில் மூழ்கினார் ராஜேந்திரன் .

நான்,“ ரெட்டச் சூரியன் என்று பட்டப்பெயர் கொண்ட ஒரு ஆள் வடக்குத் தெருவிலேயே உண்டுல்லா. அவருக்கு ஏன் அந்தப் பட்டப்பெயர்? யாரு அவர்?

“யார் அவர் என்பதெல்லாம் வேண்டாம். எல்லாம் நம்ம சொந்தக்காரர் தான். அந்தக்காலத்துல பேப்பர் கிடையாது. சும்மா சாயந்திரம் எல்லோரும் வருவார்கள்.எதையாவது சொல்லி நேரத்தைப் போக்குவார்கள். கொஞ்ச தூரம்  காலாற நடப்பதும் உண்டு.”

ஒரு நாள் ஒருவர் வந்து எல்லோரும் இருக்கையில் நான் ரெண்டு சூரியனை இண்ணைக்கு காலைல பார்த்தேன் என்று கூறினார்.

எல்லோரும் மிக ஆவலாக எங்கே எனக் கேட்க நாளைக்கு காலைல  காணிக்கிறேன் எனச் சொல்லி அடுத்த நாள் காலையில் கிழக்குப் பக்கம் இருக்கும் இரத்தினபுரம் ஊருக்கு அழைத்துச் சென்றார்.

காலையில் சூரியன் கிழக்கு மலையில் இருந்து எழுந்து ஊரைக் காண வந்தது. வந்தவர்கள் இன்னொரு சூரியன் எங்கே ? என ஆவலாகக்கேட்க, அவர் அதோ அங்கே பாருங்கள் என் புது குளத்தைக் காட்டுகிறார். குளத்தில் சூரியனின் பிம்பம் மிகத் தெளிவாக தெரிந்தது.

இதனால் அவரை இரட்டச் சூரியனென்றே அழைக்க அதுவே அவரின் பட்டப்பெயராயிற்று.


Saturday, December 10, 2011

மகத்தான மனிதர் ஜீவா

கடுக்கரையில் கம்யூனிஸ் கட்சியில் பலர் உறுப்பினர்களாக இருந்தனர் 1940 களில்.அதில் முக்கியமானவர்கள் இன்று உயிரோடு இல்லை. தாணப்பன் என்ற பெரியவர் அவர்களில் முக்கியமானவர்.எனது மைத்துனனிடம் பெரியவர் சென்னை சென்று ஜீவாவுடன் இருந்த தன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டதாக என்னிடம் கூறினார். என் மைத்துனன் ராஜெந்திரன் சொன்னது என் நெஞ்சைத் தொட்டது.

சென்னையில் ஜீவாவை அவருடைய வீட்டில் சந்திக்க தாணப்பன் போகிறார். ஜீவா பதட்டமான நிலையில் இருப்பதைப் புரிந்து கொண்ட பெரியவர் என்னவென்று தெரியாமல் அமைதியாய் அவரிடம் என்ன விசயம் என அறிந்து கொள்ளும் படியாக அவர் முகத்தைப் பார்த்தார்.

ஜீவா, “ தாணப்பா உன் பாக்கெட்டில் எத்தனை ருபாய் இருக்கு. அதைத் தா. என் மனைவிக்கு பிரசவ வேதனை ஆரம்பித்து விட்டது.ஹாஸ்பிட்டலில் அட்மிட் பண்ணணும்..”  கேட்பது யார் ? ஒரு பெரிய இயக்கத்தின் தலைவர். தன் பாக்கட்டில் இருந்த ருபாயை எடுத்துக் கொடுத்தார் தாணப்பன்.

ஹாஸ்பிட்டலில் தன் மனைவியை சேர்த்து விட்டு உடனே தோழர் ராமமூர்த்தியை வழிஅனுப்ப ரயில்வே நிலையத்துக்கு போகிறார். கூடவே கடுக்கரைப் பெரியவரும் போகிறார்.

ரயில் கிளம்பும் நேரம் நெருங்குகிறது. ராமமூர்த்திக்கு மாலை போட வேண்டிய ஜீவாவுக்காக எல்லோரும் காத்திருக்கின்றனர்.  ஜீவா ரயில் நிலயத்தின் அருகே நடந்து வந்து கொண்டிருக்கும் போது அவர் காலில் ஏதோ ஒன்று தட்டுப்படவே அதைக் குனிந்து எடுக்கிறார்.

அது ஒரு நீண்ட பெரிய மணிப்பேர்ஸ். கத்தை கத்தையாக பணம். உடனே அவர்,“ இந்த ரயிலில் போகும் யாரோ தான் பணத்தை தவற விட்டிருக்கின்றனர்.” என்க் கூறிய படியே Station Master  அறைக்குள் நுழைகிறார்.

ஜீவாவைக் கண்டதும் அதிகாரி எழுந்து நின்று வரவேற்கிறார்.

“ இந்த பணத்தை இந்த ரயிலில் போகும் யாரொ தான் தவற விட்டிருக்கின்றனர்.உடனே அனொவுண்ஸ் பண்ணி உரியவரிடம் பணத்தை சேர்த்து விடுங்கள்” என ஜீவா கூறிய உடன் அதிகாரி அவர் சொன்னது போலவே செய்தார்.

ஜீவா ராமமூர்த்தி நிற்கும் இடத்தை நெருங்கவே தொண்டர்களில் பதட்டத்தைக் கண்ட ஜீவா , “ ரயில் போக கொஞ்சநேரம் ஆகும்.... பயம் வேண்டாம் என சிரித்த படியே ராமமூர்த்திக்கு மாலை அணிவிக்கிறார்.

ரயிலும் கிளம்புகிறது. ஜீவா தாணப்பனைப்பார்த்து ,”ஊருக்குப் போக பணம் வேணும்லா. நாளைக்கு ஆபீஸுக்கு வா.” என்று சொல்லிவிட்டு அவர் தன் மனைவியைப் பார்க்க போனார்.

அடுத்த நாள் ஜீவாவைப் பார்க்க போகிறார். அங்கு அவர் தரையில் பேப்பரை விரித்து படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்.

சிறிது நேரம் கழித்து எழுந்த ஜீவா கடனை அடைத்தார்.

ஜீவா நினைத்திருந்தால் தேவையான சமயத்தில் கிடைத்த பணத்தை எடுத்திருக்கலாம். எவ்வளவு பெரிய இயக்கத்தின் தலவர். அன்றாட வாழ்க்கைக்கே அவர் மிகவும் கஷ்டப் பட்டிருக்கிறார்.

மனித நேயம் உள்ள மகத்தான மானுடன் ஜீவா........... இது மிகையல்ல.




கம்பர் ராமன்பிள்ளையும் கல்யாணச் சாப்பாடும்

கடுக்கரையில் தகரவீட்டில் 60 வருடங்களுக்கு முன் மாதேவன்பிள்ளை என்ற ஒரு பெரியவர் வாழ்ந்து வந்தார்.

தகரவீட்டு செல்லம்பிள்ளை(மாதேவன்பிள்ளை) மிக அழகாக ஆங்கிலத்தில் பேசும் திறமை உடையவர். அவர் சங்கீதம் இலக்கண சுத்தமாகப் பாடுவார். இராமாயணத்தை மிகவும் நேர்த்தியாக பொருள் கூறி விளக்குவார்.

தினமும் கம்பராமாயணத்தை தினமும் அவரது வீட்டில் அங்குள்ள மக்கள் எல்லோரும் சேர்ந்து கேட்க வருவார்கள்.ஒருவர் புத்தகத்தை பார்த்து ராகமாய் பாடுவார்.கூடவே சேர்ந்து பாடும் செல்லம்பிள்ளை அதை பொருள் கூறி விளக்குவார். இவருடன் சேர்ந்து பாட வந்தவர் ஊரில் உள்ள ராமன் பிள்ளை என்ற பெரியவர்.

அதிகமாக பள்ளிக்கூடம் போகவில்லை.எழுதவும் படிக்கவும் மாத்திரமே தெரியும்.அவர் நன்றாகப் பாடுவார். ஒருதடவை கேட்டால் மனதில் பதிந்துவிடும். ஞாபகசக்தி கூடுதல். அதன் பிறகு மறக்கவே மாட்டார்.

தினமும் கேட்டுக்கேட்டே கம்பராமாயணம் முழுவதும் மனப்பாடமாய் ஆயிற்று. வசதிகள் எதுவும் இல்லாத அவருக்கு கம்பராமாயணம் கை கொடுத்தது. ஊர்களில் நடக்கும் திருவிழாக்களுக்கு இராமாயண சொற்பொழிவுக்குப் போவார். அதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டும் விவசாய வேலை பார்த்தும் தன் வாழ்க்கையை நிம்மதியாய் கழித்து வந்தார் ராமன் பிள்ளை.

பெருமாள்கோயில் திருவிழாவில் இவருடைய சொற்பொழிவு நிச்சயமாய் இருக்கும். ராமன் பிள்ளைக்கு கர்நாடக சங்கீதத்திலும் நாட்டமும் ஞானமும் உண்டு. கடுக்கரை ஊர்த் திருவிழாவில் ஒரு நாதஸ்வரக் கச்சேரி நடந்து கொண்டிருந்தது.

அந்தக் காலத்தில் மக்கள் அதிகமாக கச்சேரி கேட்க வருவார்கள். முன் வரிசையில் ராமன் பிள்ளையும் கச்சேரியை ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தார்.ராமன்பிள்ளை  அன்று அணிந்திருந்த வேட்டியும் ஷாலும் கசங்கியும் அழுக்காகவும் இருந்தது.

நாதஸ்வரக் கலைஞர் முன் வரிசையில் இருந்த ராமன்பிள்ளையின் திறமையை அறிந்திருக்க வில்லை. ஒரு ராகத்தை பாடுகையில் அதனைத் தவறாகப் பாடுகிறார்.
 தவறைக் கண்டு பிடித்த ராமன் பிள்ளை எழுந்து கலைஞரைப் பார்த்து,       “ எப்பனே.... இப்பம் வாசிச்சயே அதை திரும்ப வாசி..... நீ வாசிச்சது சரியில்லை... ”என்று கூறுகிறார்.

அசந்து போய் ,“ இந்த சின்ன ஊரில் சங்கீதம் தெரிந்தவர்கள் இருப்பார்கள் என நான் நினைக்கவே இல்லை. ராமன் பிள்ளை சொன்னது சரிதான்” என ஒப்புக் கொண்டு அவரிடம் மன்னிப்பும் கேட்டார்.

ஊரில் ஒரு திருமண வீட்டுக்கு கசங்கிய அழுக்கு உடையுடன் போன ராமன் பிள்ளையை அவரை அறியாத ஒருவன் உள்ளே போக அனுமதிக்கவில்லை. மிகவும் சினம் கொண்ட அவர் வீட்டுக்குப் போய் நல்ல தூய ஆடை அணிந்து திருமணவீட்டுக்கு வந்தார். இப்போ யாரும் அவரைத் தடுக்க வில்லை.

பெரிய காமணம் தென்னை ஓலையால் அமைக்கப்பட்டது. பந்திப்பாய் அகலம் குறைந்து நீளம் கூடுதலாக இருக்கும். நான்கு வரிசையாக பந்திப்பாய் போடப்பட்டிருந்தது. அதில் போய் சிவந்து போன முகத்துடனும் கோபத்துடனும் உட்கார்ந்தார்.

முதலில் கறிகள் வரிசையாய் வந்தது.... அன்னம் பரிமாறி பருப்பும் ஊற்றினார்கள்....

திடீரென ஒரு குரல்....குரல் வந்த திசையைப் பார்த்தால் ராமன் பிள்ளை தன் அங்க வஸ்திரத்தை அந்தச் சோற்றின் மேல் போட்டு சப்தமாய் சொல்கிறார்.“  சாப்பாடு எனகில்லை. இந்த அங்க வஸ்திரத்துக்குத்தான்....” எனச் சொல்லி சாப்பாட்டுப் பந்தியில் இருந்து எழுந்து மன நிம்மதியோடு போகிறார் கம்பர் ராம்பிள்ளை.




Thursday, December 8, 2011

திப்புசுல்தான் பஸ்ஸும் தங்கச்செயினும்

நான் நேற்று என் மனைவியுடன் வடசேரி BUS STAND க்குப் போனேன்.என் பேரன் மகள் மருமகன் பெங்களூருக்கு போகும் போது அவர்களை வழி அனுப்ப போனோம்.

பல பஸ்கள் நிற்கையில் திப்பு சுல்தான் பஸ்ஸையும் பார்த்த பொழுது ஒரு விசயம் ஞாபகத்துக்கு வந்தது.

என்னுடைய மருமகன் மோகன் அரசுத்துறையில் வேலை பார்க்கும்போது நாகர்கோவிலில் இருந்து transfer  ஆகி சென்னையில் உள்ள அலுவலகத்தில்  வேலை பார்த்து வந்தார்.

ஒவ்வொரு வாரமும் வெள்ளிகிழமை மாலையில் சென்னயில் இருந்து புறப்பட்டு நாகர்கோவிலுக்கு வந்து இரண்டு நாள் தங்கிவிட்டு ஞாயிற்றுக்கிழமை மாலை நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு திங்கள் கிழமை காலையில் வேலை பார்க்க அலுவலகம் சென்று விடுவார்.

அவர் ஒரே பஸ் அதுவும் திப்பு சுல்தான் பஸ்ஸில் தான் வாரம்தொறும் பயணம் செய்வார். வெள்ளிகிழமை,ஞாயிற்றுக்கிழமை மாலைகளில்  இவர் வந்து பஸ்ஸில் ஏறியபின் தான் பஸ் கிளம்பிச் செல்லும். அவ்வாறு சென்றுவந்ததால் பஸ் ட்ரைவருக்கும் கண்டக்டருக்கும் இவர் நண்பராகி விட்டார்.

அதன் பிறகு நாகர்கோவிலுக்கு மாறுதல் கிடைத்தது. சென்னை செல்வதென்றால் திப்பு சுல்தான் பஸ்ஸில் தான் செல்வார்.

தனது சின்னப்பாவின் வீட்டு விழாவுக்கு ஒரு நாள் மாலையில் அதே பஸ்ஸில்  சென்னைக்கு கிழம்பிச் சென்றார். உழுந்தூர்ப்பேட்டையில் வண்டி நின்றது. ஹோட்டலில் சிற்றுண்டி அருந்தி விட்டு ரோட்டோரம் ஒண் பாத்ரூம் போய் விட்டு வண்டியில் ஏறி அமர்ந்தார்.  தூக்கம் .....நல்ல தூக்கம். சென்னை வந்ததும் மோகன் சின்னப்பா வீட்டுக்குப் போய் குளிக்க எண்ணெய் எடுத்து தலையில் தேய்க்க கண்ணாடியின் முன் நின்ற போது அதிற்சி அடைந்தார். கழுத்தில் எப்போதும் கிடக்கும் தங்கச் செயின் காணவில்லை. யாரிடம் எதுவும் சொல்லவில்லை.

விழாவில் கலந்து விட்டு அன்று மாலையே திப்பு சுல்தான் பஸ்ஸில் நாகர்கோவிலுக்குப் பயணமானார். அப்போது செயின் காணாமல் போன விசயத்தை மோகன் ட்ரைவரிடம் கூறினார்.

பஸ்ஸில் பயணம் செய்த போது செயின் கழுத்தில் கிடந்தது....சென்னை வந்த பிறகு தான் இல்லை..... ட்ரைவர் , உழுந்தூர்பேட்டையில் தான் நாம் ரெண்டு பேரும் சாப்பிட்டு ஒண் பாத் ரூம் போன விசயத்தைக் கூறி நாம் அதே இடத்தில் போய் தேடலாம் என்றார்.

உழுந்தூர்ப்பேட்டை வந்தது. இருள் நேரமாகையால் ஒரு டார்ச்சு லைட்டை கையில் கொண்டு போய் அந்தக் குறிப்பிட்ட இடத்தில் தேடிப் பார்த்தார்கள்
லைட் வெளிச்சத்தில் மணல்களுக்கு இடையே மின்னிக் கொண்டு செயின் கிடந்ததைக் கண்டார்கள்.

செயின் கிடைத்த மகிழ்ச்சியில்  அந்த விசயத்தை மோகன் எங்களிடம் கூறினார். திப்பு சுல்தான் பஸ் ட்ரைவரால் தான் தங்கச் செயின் கிடைத்தது.  சினிமா போல் இருந்தாலும் உண்மையான இந்த நிகழ்ச்சி மிகவும் ஆச்சரியத்தை தந்தது என்னவோ உண்மையே. 

Tuesday, December 6, 2011

ஜீவா என்ற சொரிமுத்து கடுக்கரையில் ஒருநாள்

1940 களில் பிரட்டீஸ் அரசினரால் தடை செய்யப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் தலவர்கள் தலைமறைவாய் இருந்துகொண்டு கட்சியின் தொண்டர்களுக்கு வழி காட்டிக் கொண்டிருந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டியில் பிறந்த தலைவர் ஜீவா தலைமறைவாக இருந்த இடம் திருவிதாங்கூர் மன்னர் ஆட்சிக்குட்பட்ட கடுக்கரை.அவர் அதிகமாக கடுக்கரை ம.வேலப்பன் வீட்டில் தான் தங்கி இருந்தார்.

 எனது மைத்துனன் ராஜேந்திரன் அவரது ஆச்சி அதாவது அப்பாவின் அம்மா சொன்னதாக ஒரு சுவாரஸ்யமான தகவலைக் கூறினார்.ராஜேந்திரனின் அப்பா ஜீவாவை தனது வீட்டுக்கு அழைத்து வந்தார்.

இரவு உணவு சாப்பிட தரையில் ஜீவா உட்பட எல்லோரும் அமருகிறார்கள். மின்சார வசதி இல்லாத காலம்.சாப்பிடும் இடத்தில் ஒரு அரைக்கேன் லைட். அது தரும் வெளிச்சத்தில் தான் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அபபொழுது உணவு பரிமாறிக் கொண்டிருந்த ஆச்சியை ஜீவா உற்றுப் பாத்துக் கொண்டே இருந்தார். ஆச்சிக்கோ தன்னை ஏன் பாத்துக் கொண்டே இருக்கிறார்....பெரிய தலைவர்லாஇவரு....என நினைத்துக் கொண்டே நடந்து செல்லும் போது ஜீவா கேட்கிறார் ,“ அம்மா.... உங்களுக்கு சொந்த ஊர் கடுக்கரையா?”

’இது  என் வீட்டுக்காரரின் வீடு. நான் பொறந்து வளந்ததெல்லாம் பூதப்பாண்டி’

“ அதானே பாத்தேன்.... என்னத் தெரியல்லியா.. நாம் ரெண்டு பேரும் சேர்ந்து பள்ளிக்கூடத்தில் படிச்சோம்லா... நான் பட்டம் பிள்ளையின் மகன் சொரிமுத்துல்லா....” ஜீவா சொன்னார்.

 “ இப்பம்தான் மொகத்த சரியா பாக்கேன்.....ஆமாம்.... நீ மூக்கன்லா.. அப்பம் நீ மூக்கு குத்திருந்தேல்லா.....ஒம்பேரு ஜீவாண்ணுல்லா எல்லாரும் சொல்றாங்க....பெரிய தலைவர்ணும் சொல்றாங்க..”

’இவங்கள்ளாம் அப்படி சொல்றாங்க...நான் அதே மூக்கந்தான்.....’

ஆச்சிக்குப் பெருமை.....ஒரே மகிழ்ச்சி....

ஆச்சி சொன்ன இந்த தகவல் பேரனுக்கும் தனது ஆச்சி ஒரு பெரிய தலைவருடன் பள்ளிக்கூடத்தில் படித்தவள் என்பதில் பெரும் மகிழ்ச்சி....

Sunday, December 4, 2011

காதலும் பொய்யாகுமா ?

காதல் அழிவதே இல்லை என்று நான் எழுதிய விசயத்தை விவரமாக எனது நண்பர் பெருமாளிடம் கூறினேன்.சிரித்துக்கொண்டே கேட்ட அவர் என்னிடம் அவரது நண்பருக்கு ஏற்பட்ட அனுபவத்தைக் கூறினார்.

அவர் ஒரு பொறியியல் பட்டதாரி. வேலை பார்த்த இடம் பஞ்சாப்.அவர் ஒரு பெண்ணை அதுவும் தமிழ் பெண்ணை கண்டார். காதல் மலர்ந்தது.மணமும் வீசியது திருமணம் செய்து கொண்டதால்.காதலுக்கு அடையாளமாக இருவருக்கும் குழந்தை பிறந்தது.

மனைவியின் மீது அன்பு கூடியது. தாஜ்மகால் கட்ட வில்லையென்றாலும் ஒரு அழகான வீட்டை தன் மனைவியின் பெயரிலேயே வாங்கினார்.அவருக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்தது. மனைவியோ போகவேண்டாம் எனத் தடுத்தாள்.

மனைவியிடம் நான் சம்பாதிப்பது யாருக்காக நம் பிள்ளை
யின் வருங்காலம் வளமாக இருக்க வேண்டாமா..... இப்படியெல்லாம் அவளிடம் கூறி அவன் வெளி நாட்டுக்குப் போய் வேலையில் சேர்ந்தான்.

நல்ல சம்பளம். மாதம் தோறும் செலவு போக மீதிப் பணத்தை மனைவிக்கே அனுப்பினான்.

வருடங்கள் 6 கழிந்தன.வெளிநாட்டில் வேலை செய்தது போதும் என நினைத்து தன் மனைவியிடம் விவரத்தைக் கூறி தான் வரும் விவரத்தைக் கூறினான்.

அவளோ நம் நாட்டில் நீங்க வாங்கும் சம்பளம் கிடைக்காதே.அதனால் இப்போ வரவெண்டாமே....2 வருடம் கழித்து வந்தால் போதுமே என்கிறாள்.ஆனால் அவன்  நாடு திரும்புகிறான்

மனைவியையும் குழந்தையையும் பார்த்து இனி நான் உங்க கூடத்தான் இருப்பேன். வெளிநாட்டுக்கெல்லாம் போக மாட்டேன் என்று உற்சாகமாக கூறுகிறான்.

தன் பிள்ளையிடம் பேசுகையில் அந்தப் பிள்ளை அடிக்கடி மாமா இங்க வருவாரே ஏன் இப்பம் காணல்ல மாமாவை பாக்கணும் என்று சொல்ல சந்தேகப் பொறி அவனது மனதில் தட்டியது.

யார் அந்த மாமா ?........தலை கிறு கிறுவென சுற்றியது.

அவள் இன்னொருவனுடன் மனைவி போல் வாழ்ந்தது தெரிய வந்தது.

தான் கொடுத்த வீட்டையும் கொஞ்சம் ருபாயையும் எடுத்துக் கொண்டு பிள்ளை தனக்கு வேண்டாம் என பிள்ளையை அவனிடமே விட்டுவிட்டுகள்ளத்தனமாக காதலித்தவனுடன் போகிறாள் .

தான் வஞ்சிக்கப்பட்டதை அறிந்து மனம் குமுறி விவாக ரத்துக்கு கோர்ட்டை அணுகுகிறான் . ஆனால் அவள் அதற்கு மறுக்கிறாள் .

போராடி விவாகரத்தினை பெறுகிறார் .தான் வெளிநாட்டில் இருந்து அனுப்பிய பணம் அனைத்தையும் கோர்ட்முலம் பெறுகிறார் .
இப்பொழுது னது பிள்ளைக்காக அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் .....
பணம் எதுவும் இல்லாததால் அவளைவிட்டு
விலகினான் கள்ளக்காதலன் ....அவள் எப்படி வாழ்கிறாள் ......தெரியாது.
காதலும்  பொய்யாகுமோ .....

Saturday, December 3, 2011

காதல் அழிவதே இல்லை

நானும் கடுக்கரை ராஜேந்திரனும் நவம்பர் மாதம் 30 ஆம் தேதி காலையில் காட்டுபுதூர் சாலையில் நடந்து போகும்போது காட்டுப்புதூர் பண்ணையார் பற்றிய ஒரு தகவலை என்னுடைய ப்ளாக்-ல் பதிவு செய்ததை சொன்னேன் . அதைக் கேட்ட ராஜேந்திரன் ," உனக்கு இது போல் எழுதும் பழக்கம் உண்டா?",எனக் கேட்டார் . ஆம் என்று சொன்னதும் அவர் தனக்கு தெரிந்த ஒரு விஷயத்தை என்னிடம் கூறினார்.

பறக்கையில் இருந்து ஒரு நந்தினி என்ற பெயருடைய பெண் நாகர்கோயில் இந்துக்கல்லூரியில் பட்டப் படிப்பு படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு இளைஞரும் படித்துக் கொண்டிருந்தார் .
அவர் அவளை மிகவும் நேசிக்க அவளோ அவரது நேசத்தை பொருட்படுத்தாமல் புறக்கணித்து வந்தார் .மேலும் அவரைப் பற்றித்தன்னுடைய ஆசிரியர்களிடம் குறை சொல்லி தன்னை மனதளவில் தொல்லை தருவதாகவும் சொன்னார் . மனம் வருந்திய இளைஞர் அவள் மேலுள்ள காதலை நெஞ்சினில் சுமந்த படி த்தனது படிப்பை முடித்து விட்டு வேலை தேடி போய்விட்டார் .
நந்தினியும் பக்கத்து ஊரில் ஒரு பள்ளிக்கூடத்தில் வேலை பாத்து வந்தார். அந்த சமயத்தில் ஒருவனை காதலித்து திருமணம் செய்து ஒரு பெண் குழந்தைக்கு தாயானாள் . அவளது வாழ்க்கை ரம்மியமாகப் போய் கொண்டிருக்கும்போது விதி விளையாடி காலன் அவளது கணவனை கவர்ந்து கொண்டான் .
காலம் நகர்ந்து கொண்டே இருந்தது .மகள் வளர்ந்து படிக்க ஆரம்பிக்கும் நேரம் நெருங்கிற்று .
கதவுகளில் ஒரு கதவு அடைத்தால் இன்னொரு கதவு திறக்குமே .நந்தினிக்கும் ஒரு கதவு திறந்து டெல்லிக்கு அவளை அழைத்தது . அங்கு ஒரு பள்ளியில் ஆசிரியை வேலை கிடைத்தது . மகளுடன் மகளுக்காக வாழ்ந்து வந்தா .
தன் வேலை முடிந்து மாலையில் நடந்து செல்லும் போது தன் பேரை சொல்லி அழைக்கும் குரல் கேட்டு திரும்பிப் பார்த்தா.
அவள் எதிரே ஒருவன் . "என்னைத் தெரியவில்லையா ......நீ நந்தினி தானே ..."
எனக் கேட்டான் .
 சற்று ஆச்சரியத்துடனும் சங்கடத்துடனும்  ஆம் என்று தலை அசைத்த வாறே நீ  ராமகிருஷ்ணன் தானே .....நீ  இங்க தான் இருக்கியா ? எனக்கேட்டாள் நந்தினி. நான் இங்க தான் வேலை பாக்கேன். நீ எப்படி இங்க வந்தே. மாப்பிள்ளைக்கு இங்க தான் வேலையா? என ராமகிருஷ்ணன் கேட்டார். நானும் என் 11 வயது மகளும் தான் இங்க இருக்கோம். நான் ஒரு பள்ளிக்கூடத்தில் வேலை பாக்கேன். நந்தினி சொன்னாள். “கணவர் எங்க வேலை பார்க்கிறார் எனக் கேட்க கணவர் இறந்த விசயத்தை அவள் சொல்கிறாள்” உங்களுக்கு கல்யாணம் ஆயிற்றா என அவள் கேட்க இல்லை யென தலயை அசைக்கிறார். நான் திருமணமே வேண்டாம் என இருந்துவிட்டேன் . நான் உன்னைதான் மணக்க வேண்டும் என்றிருந்தேன். நீ மறுத்து விட்டதால் நான் கல்யாணமே களிக்கல்ல. இருவரும் சிலநாட்கள் கழித்து மறுபடியும் சந்திக்கின்றனர். நந்தினியை மணக்க தான் தயாராக இருப்பதைக் கூறுகிறான். ’எனது மகளுக்கு 11 வயதாகிறது. நம் திருமணம் நடந்தால் அது அவளைப் பாதிக்கும். அதனால் வேண்டாம்’ என்கிறாள் நானே உன் மகளிடம் பேசுகிறேன் என கூறிய ராம்கிருஷ்ணன் மகளிடம் பேசி பூரண அனுமதி பெறுகிறார். இப்பொழுது இருவரும் திருமணமாகி ஓருயிராய் மகிழ்ச்சியாய் வாழ்கின்றனர். சினிமாவில் மாத்திரமே நடக்கும் இது போல். மிகவும் சந்தோசமாக இருந்தது கேட்பதற்கு. சாவி பத்திரிகை ஆசிரியரின் மகளின் திருமணமும் இது போன்றதுதான். அது சினிமாவாகவும் வந்தது. ராமகிருஷ்ணனும் நந்தினியும் ஆறுமுகம் பிள்ளை (ராஜேந்திரன்),வேணுகோபால் ஆகிய இருவர்களின் மாணவர்கள். ராமகிருஷ்ணன் வேலை பார்ப்பது ஒரு தனியார் தொலைக் காட்சியில்.

என்னிடம் சொன்ன ஆறுமுகம் பிள்ளையின் முகம் மிகவும்  பூரிப்புடன் காணப்பட்டது .தனது  மாணவர்கள் இருவரும் திருமணம் செய்து சந்தோசமாய் இருப்பதை அறிந்து கொண்டதால்.

Monday, November 28, 2011

காட்டுப்புதூர் பண்ணையாரும் ஊர்வகை அம்மன் கோயிலும்

காட்டுப்புதூர் ஒரு சிற்றூர்.கடுக்கரை வழியாகவும் போகலாம்.அழகியபாண்டியபுரம் வழியாகவும் போகலாம். நான் பலதடவைக் காட்டுப்புதூர் வழியாக உலக்கை அருவிக்குச் சென்றிருக்கிறேன். இப்பொழுது காட்டுப்புதூர் ஊரின் ஒரு அற்றத்தில் ஒரு புதிய அம்மன் கோயில் மிகவும் பிரசித்திபெற்று விழங்குகிறது.

அந்தக் கோயிலில் வெள்ளிக்கிழமையும் செவ்வாய்க்கிழமையும் மாலை பெண்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அந்தக் கோயிலில் உள்ள ஒரு அம்மா அன்றைய தினத்தில் பக்தர்களின் குறைகளைக் கேட்டு ஆறுதலையும் குறைகள் நீங்க பரிகாரங்களையும் கூறுவாள். வெளியூர் மக்கள் அதிகம் வரும் அந்தக் கோயிலுக்கு காட்டுப்புதூர் மக்கள் அதிகம் வருவதில்லை.

ஆனால் அந்தக் கோயில் ஒரு பெரிய கோயிலாக வளர்ந்து வருகிறது.

நானும் என் மனைவியும் போய் திருப்தியோடு திரும்பியிருக்கிறோம். அந்தக் கோயிலில் இன்னொருவரும் பக்தர்களின் குறைகளைக் கேட்பார்.அவருக்கு சாமி அருள் வரும் போது குறைகள் நீங்க அருள் வாக்கு கூறுவார்.சாமி அருள் குறிப்பிட்ட நேரம் வரை தான் இருக்கும். அந்த நேரம் முடிந்ததும் அருள் வாக்கை சொல்வதை நிறுத்தி விடுவார்.

அப்படி குறி சொல்பவர் என்னுடன் குறத்தியறை பள்ளிக்கூடத்தில் படித்தவர். எனக்கு இவற்றில் எல்லாம் அதிக நம்பிக்கை இல்லை என்றாலும் அதை விமர்சிக்கும் அளவுக்கு நான் அறிவாளி இல்லை. ஆனால் கவலையோடு வரும் மக்கள் ஆறுதலுடன் திரும்புவதையும் ஒவ்வொரு மக்களின் முகங்களில் காணும் பொலிவையும் பார்க்கும்போது ஒரு பிரமிப்பு இருக்கிறது.எனக்கு அந்தக் கோயிலுக்குச் சென்று அம்மனை வணங்குவது மட்டும் பிடிக்கும்.

காட்டுப்புதூர் ஊரைச் சேர்ந்த நாகேந்திரன் கடுக்கரையில் வசித்து வருகிறார். அவரும் அவரது தம்பியும் பூப்புப்புனித நீராட்டுவிழா அழைப்பிதழ் தர என்வீட்டுக்கு வந்தார்கள்.

தம்பி சுசீந்திரத்தில் வசித்து வருகிறார்.தம்பியின் வீட்டு விழா அது.

நான் ,“ லெட்டர்லாம் கொடுத்தாச்சா” கேட்டேன்.

“காலையில் இருந்தே கொடுத்துட்டு வாறோம். காட்டுப்புதூர் மாத்திரம் பாக்கி இருக்கிறது.”

“கடுக்கரை வரை போன நீங்கள் காட்டுப்புதூருக்கு ஏன் போகல்ல....பக்கம் தானே” நான் கேட்டேன்.

“நம்ம ஆட்கள் கொஞ்சம்பேர் தான் இருக்கிறார்கள்.என் தம்பியும் நானும் வெளியூரில் இருந்தாலும் எங்களுக்கும் வரி உண்டு. ஊரில் உள்ள அனைவருக்கும் அழைப்பிதழ் கொடுக்கணும். தம்பதிகளாக ஒவ்வொரு வீட்டுக்கும் போய் அழைப்பிதழ் கொடுத்து கூப்பிடணும்.அப்படிக் கூப்பிட்டால்தான் வருவார்கள். அழைப்பிதழ் கொடுக்கும் முன் அந்த ஊரில் பழமையான முத்தாரம்மன் கோயில் ட்றஸ்டியைப் பார்த்து ஒரு தாம்பாளத்தில் வெற்றிலை பாக்கு பழத்துடன் 105 ருபாயும் வைத்து அழைப்பிதழையும் வைத்துக் கொடுக்கணும்” நாகேந்திரன் சொன்னார்.

இப்படி ஒரு சம்பிரதாயம் இருப்பது இதுவரை எனக்குத் தெரியாதே......ஆச்சரியத்துடன் அவரைக் கேட்டேன், “ கோயிலுக்கு சொத்து எதுவும் உண்டா”

“ காட்டு்ப்புதூர் பண்ணையார் ஆறுமுகம் பிள்ளை ஒண்ணரை ஏக்கர் வயலை இந்தக் கோயிலுக்கு எழுதி வைத்தார்.இப்பொழுது அது 25 ஏக்கராக பெருகி இருக்கிறது.

அவர் மேலும் சுடுகாட்டுக்காக ஒரு ஏக்கர் கொடுத்திருக்கிறார்.”

ஏற்கனவே நான் சிறுவனாக இருக்கும்போதே அறிந்த பண்ணையாரைப் பற்றிய இந்தத் தகவல் அவரது மேலுள்ள மதிப்பை மேலும் கூட்டியது.

அது எப்படி 25 ஏக்கரானது.....சாதாரணமாக குறைஞ்சுல்லா போகும்.வயலை பாட்டத்துக்கு வைத்திருப்பவர்கள் தலை முறை தலைமுறையாக வைத்திருப்பார்களே. பாட்டநெல்லும் சரியா வராதே. நான் கேட்டேன்.

மூன்று வருடம் தான் ஒருவரிடம் அந்த வயல் இருக்கும்.அதன் பிறகு ஏலம் நடைபெறும். பாட்டத்துக்கு எடுப்பவர்கள் அந்த நெல் விலயை முன் பணமாக கட்ட வேண்டும். கொடை நடக்கும் போது வரி கொடுக்கணும். கார்த்திகை மாதம் 30 நாளும் தினமும் சிறப்பு பூஜை நடக்கும்.துண்டில் பெயர் எழுதிப்போட்டு எடுக்கும் துண்டில் இருக்கும் நபர்கள் நான்கு பேர் சேர்ந்து அந்த சிறப்பு பூஜையை நடத்த வேண்டும்.வெளியூரில் வரி உள்ளவர்கள் இருந்தாலும் கார்த்திகை மாதத்தில் அந்தப் பூஜையை நடத்த நேரில் போக முடியாவிட்டாலும் அதற்கான பணத்தைக் கொடுத்து விடுவது தான் இதுவரை வழக்கமாக இருக்கிறது.

பண்ணையாரின் புகளும் ஊர்க்காரர்களின் கட்டுப்பாடும் பிரமிப்பைத் தந்தன.

Saturday, November 19, 2011

பறக்கையில் பிறந்த ஒருவர் லண்டனில்

கல்லூரியில் படிப்பை முடித்து சும்மா இருந்த போது ஒரு நாள் கடுக்கரை தகரவீட்டில் இருக்கும் எனது அண்ணனைப்(பாஸ்கரன்) பார்க்கப் போனேன். அப்போ அந்த வீட்டின் முன்னால் ஒரு சிறு கூட்டம் வெளியே சிரித்துப் பேசிக்கொண்டிருந்தது. அண்ணனும் வடக்கு திசையைப் பாத்துக் கொண்டே பேசிக்கொண்டிருந்தார்.

அண்ணன் என்னிடம் ,“ லண்டனில் இருந்து நீலாப்பிள்ளையும் ராமசாமியும் வந்திருக்காங்க.. இப்ப இங்க வருவாங்க.அதான் நான் வெளிய நிக்கேன்” சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவர்கள் இருவரும் வந்தார்கள். அகமும் முகமும் மலர அவர்களை வீட்டுக்குள் கூட்டிச் சென்றார்.

கொஞ்சநேரம் பேசிவிட்டு அவர்கள் இருவரும் வேறொரு வீட்டில் நடக்கும் விருந்துக்குப் போனார்கள். அவர்களை வாசல் வரை சென்று வழி அனுப்பி விட்டு வந்த அண்னன் என்னிடம் ,“ எங்கிட்ட ராமசாமிக்கு ரொம்ப ப்ரியம்.சங்கீதம் ரொம்ப புடிக்கும் அவர் திருவனந்தபுரம் A.G's office ல வேலை பாத்துக்கிட்டு இருந்தப்போ லண்டனில் உள்ள இந்தியன் ஹை கமிஷனில் பதவி கிடைத்ததால் அங்கு குடும்பத்துடன் இருக்கிறார்....” எனச் சொன்னார்.

எனக்கு ஒரெ பிரமிப்பா இருந்தது.கனவில் கூட வெளிநாடு செல்வது நடக்காது அந்த காலத்தில். லண்டனில் குமரி மாவட்டத்தில் பிறந்த ஒருவர் வேலை பார்ப்பது என்பது ஒரு சாதாரணமான விசயமில்லை. எனக்குத் தெரிந்து அந்த காலத்தில் வேறு யாரும் வெளிநாட்டில் வேலை பார்த்ததாகவும் நினவில் இல்லை

அதன் பிறகு அவரை அவரது பெங்களூர் வீட்டில் பாத்து பேசியிருக்கேன்.

சமீபத்தில் 14-11-2011ல் துவரங்காடு ராஜா மண்டபத்தில் சந்தித்தேன்.எனக்குத் தெரிந்து முதல் முதலாக லண்டன் சென்று வேலை பாத்த இவரைப் பற்றி ஒரு Blog எழுதலாமே என்ற எண்ணம் என் மனதில் தோன்றியது.அவரிடம் இதுபற்றிக் கூறினேன்.அவரும் அவருடைய அனுபவங்களை என்னிடம் பகிர்ந்து கொண்டார் .

சொன்னதில் எனக்கு பிடித்தது

Queen Elizabeth II ஒவ்வொரு ஆண்டும் தன் பிறந்த தேதி எது எனத்தெரியாததால் பிறந்த மாதமான ஜூன் மாதமுழுவதும் தினமும் கொண்டாடுவாராம். ஒவ்வொரு நாள் விருந்திலும் முக்கிய பிரமுகர்களை கௌரவிக்கும் பொருட்டு அவர்களை அழைத்து அவர்களுடன் ராணியும் குடும்பத்தினரும் கலந்து கொள்வார்கள். Buckingham அரண்மனையில் அப்படி நடக்கும் ஒரு விருந்தில் ராமசாமிப் பிள்ளையும் அவரது மனைவியும் அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள்.

தன்னுடைய பணிக்காலம் முடிந்து இந்தியா திரும்பிய ராமசாமிப் பிள்ளை இந்திய அரசால்
I.A.A.S பணிக்கு உயர்த்தப்பட்டார். His last posting was Financial Advisor to Government of Karnataka which was ruled by H.D.Deva Gowda.

ராமசாமிப் பிள்ளை பிறந்த ஊர் பறக்கை. அவரது மனைவியின் ஊர் கடுக்கரை.

Tuesday, November 15, 2011

கடுக்கரையில் 80 வயதில் ஒரு சாமிகொண்டாடி

13-11-2011 ஞாயிற்றுக்கிழமை ஆண்டித்தோப்பில் உள்ள ராஜலட்சுமி திருமண மண்டபத்தில் எனது மனைவியின் அண்ணனின் மகளது திருமணம் நடந்தது. அன்று மாலையில் திரும்பவும் வரணுமே ,கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்க கடுக்கரையில் என் மச்சினன் ராஜேந்திரன் வீட்டுக்குப் போகலாமே என நான் அங்கு போனேன்.

நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் போது ஊரில் உள்ள சுடுகாட்டு சொள்ள மாடன் கோயில் கொடை பற்றிப் பேச்சு வந்தது.‘மூன்று வருடத்துக்கு ஒரு தடவை நடக்கும் இந்தக் கொடைக்கு வரி எழுதுவது யார் தெரியுமா’ என்று கேட்டு விட்டு அவனே பதில் சொன்னான்.

‘மாமா இருக்கும் வரை மாமா தான் எழுதுவா’

‘எங்க அப்பாவா எழுதுவா... எனக்கு இதுவரை தெரியாதே...’என வியந்தேன்.

‘70 வருடத்துக்கு முன்னே நடந்த விசயத்தைச் சொல்லட்டுமா.... ’ சொன்னான்.

“அப்பம் மகராஜபிள்ளை என்பவர் தான் சொள்ளமாடன் கோயில் சாமி கொண்டாடி. அவர் தான் பூ எடுப்பார்.அவர் மறைவுக்குப் பின் யார் பூ எடுப்பது என்றப் பிரச்சனை வந்தது. சட்டம்பி வேலாயுதன் பிள்ளையும் அவரது அத்தானும் தாங்கள் தான் அந்தப் பொறுப்பை எடுக்க வேண்டும் என மிகவும் தீவிரமாக இருந்தார்கள்...கொடை நடக்கும் நாள் நெருங்கியது.

வரி எழுத பெரியவர் என் அப்பா வந்தார்.கூடி இருந்த பெரியவர்கள் ஆவலோடு அடுத்து சாமி ஆடப்போவது வேலாயுதம் பிள்ளை தான் என எதிர் பாத்துக் கொண்டிருந்தனர்.

என் அப்பா,“ சரி, பூ எடுக்கப் போவது யாரு ...”

“ நான் தான் என ஒரு குரல் கூட்டத்தில் இருந்து வந்தது”.

குரல் வந்த திசையைப் பாத்து உமக்கு இங்கு என்ன உரிமை இருக்கு. முன்னால சாமி ஆடிய மாராச பிள்ளைக்கு பிள்ளைகள் இருக்குல்லா. மூத்தவனைக் கூட்டிட்டு வா... உடனே திருவாழி என்ற ஒருவர் எழுந்து போனார்.

மகராஜபிள்ளை வீட்டுக்குப் போய் அவரது மூத்தமகனை வரி எழுதும் இடத்துக்கு அனுப்பச் சொல்லி அவனது அம்மையைக் கேட்டார்.

அந்த தாய் , “ யாரு வேணுமானாலும் சாமி ஆடட்டும். என் மகனுக்கு 11 வயதுதானே ஆகிறது...எம்மகன விட்டுருங்கோ”

“கூட்டிட்டு வரச் சொன்னது யாரு தெரியுமா. ஆறும்பிள்ளை அத்தானாங்கும்....”

“நான் என்னத்த சொல்ல இனி. அவன் அந்த ரூம்ல தான் கிடக்கான் போய்ப் பாரு”

அந்த தாய் கண்ணிர் மல்க பூட்டிய அந்தக் கதவைத் திறந்தாள். அங்கு சிறுவன் வீரமணி ஒட்டிய வயறுடன் உடம்பில் ஒட்டுத்துணி கூட இல்லாமல் அம்மணமாய் நின்றிருந்தான். இதனைப் பார்த்து அதிர்ந்து போனவர் தன் தோளில் கிடந்த துவர்த்தை எடுத்து அவனது இடுப்பைச் சுற்றிக் கட்டினார். அந்தத் துவர்த்து அவ்வளவு கட்டியானதாக இல்லாததால் அவனது நிர்வாணம் முற்றிலும் மறைக்கப்படவில்லை.

பையன் கோயிலுக்கு அழைத்து செல்லப்பட்டு அந்தக் கூட்டத்தின் முன் நிறுத்தப்பட்டான்.

பையனின் நிலமையைப் புரிந்து கொண்ட எனது அப்பா,சொள்ளமாட சாமியின் முன்னால் படைக்கப் பட்டிருந்த 4 முழ வேட்டியை (கச்ச முறி )எடுத்து தன் கையாலயே அவனது இடுப்பில் கட்டி அவனது கண்ணீரையும் அன்பாகத் துடைத்து விட்டார்.

சிறுவன் வீரமணி தான் இனி ‘சாமி கொண்டாடி’என அந்தக் கூட்டத்தில் என் அப்பா அறிவித்தார் . நியாயமான இந்த முடிவைக் கேட்டு எல்லோருமே முழுமனதுடன் ஏற்றுக் கொண்டனர்.

அன்றிலிருந்து இன்றுவரை அதே வீரமணிதான் சாமி கொண்டாடியாக இருந்து வருகிறார். இப்பொ அவரது வயது 80.

இன்னொரு விசயம் தெரியுமா என என்னைக் கேட்டான் ராஜெந்திரன்.

ஆவலாக அவன் முகத்தை நான் பார்க்க அவன் சொன்னான்.“ கடுக்கரையில் எந்த சமுதாயத்தினர் கொடை விழா நடத்தினாலும் வரி எழுதுவது மாமா தான் (எங்க அப்பாதான்)”

நான் இதுவரை கேள்விப்படாத ஒரு விசயம்.... கேட்க மிகவும் சந்தோசமாகவே இருந்தது

Sunday, November 6, 2011

كويت ல் نوفمبر ( ١ ٢ ٣ ٤ ٥ ٦ ٧ ٨ ٩) ٢٠١١

٢٠١١ 6th November


٦ ٢٠١١ نوفمبر


இன்று நான் தூங்கப் போகும் இரவு குவைத்தில் கடைசி இரவு. செப்டம்பர் ٩-ம் தேதி யில் இருந்து இன்றோடு ٥٩ இரவுகள். ٦٠ பகல்கள் .

சலாம் மாலிக்கும்.

எல்லோருக்கும் சுக்ரான் கூறி விடைபெறுகிறேன்.

மா சலாம்
*****-----*****-----*****-----*****-----*****-----*****-----*****-----*****-----*****
உயரம் என நினைப்பதெல்லாம் உண்மையில் உயரம் தானா

கடுக்கரை அய்யப்பன் கோயில் பக்கம் ஒரு பெரிய பாறை ஒன்று உண்டு.அதன் பெயர் ஆனைக்கல் பாறை. அதன் உச்சியில் யாராலேயும் ஏறவே முடியாது என்ற எண்ணம் சின்ன வயதில் எங்கள் எல்லோருக்குமே உண்டு. முருகன் என்னை விட 2 வயது மூத்தவன். அவனது வயது 13. அவனும் நானும் அந்த சமயத்தில் தி.மு.க.

கட்சிக்கொடிகளை அந்த ஆனைக்கல் பாறையின் பக்கத்தில் உள்ள சின்னச் சின்ன பாறைகளின் உச்சியில் வைத்து யார் கூடுதல் உயரமான பாறையில் வைக்கிறார்கள் என்று போட்டி நடக்கும். காங்கிரஸ் கொடியை சற்று உயரம் கூடுதலான பாறையில் ஒரு பையன் வைத்துவிட்டான்.அதை விட உயரம் கூடுதலான பாறையாக மிச்சம் இருந்தது அந்த ஆனைக்கல் பாறைதான். நானும் முருகனும் செய்வதறியாது திகைத்து ‘அய்யோ... தோத்துட்டோமே’ என்று பரிதாபமாய் நின்றோம்.

முருகன், “தங்கப்பா....ஏணி ஒண்ணு அப்பாக்குத் தெரியாமத் தருவியா”

ஏணியை எடுத்துக் கொண்டு போன முருகன் மறுநாள் என்னை அழைத்தான். ரோட்டில் போய் கொண்டே ஒரு இடம் வந்ததும் ஆனைக்கல் பாறை இருக்கும் இடம் நோக்கி கையை நீட்டினான். அங்கே தி.மு.க கொடி பறந்து கொண்டிருந்தது. எனக்கு ஒரே ஆச்சரியம். ஏணி வைத்தாலும் ஏற முடியாதே எப்படி ஏறிட்டான்.....எப்படி இறங்கினான்....இன்றுவரை எப்படி போய் கொடியை வைத்தான் என எனக்குத் தெரியாது.

அடுத்த நாள் நாங்கள் வெற்றிக் களிப்பில் இனி இந்த உயரத்தை எவனும் எட்டிவிட முடியாது என்று நெஞ்சினை நிமிர்த்தி நடந்ததெல்லாம் நினவுக்கு வருகிறது.என் அப்பா காங்கிரஸ். இன்று நினைக்கும்போது அந்த உயரம் ஏனொ என் நெஞ்சைக் குத்துகிறது.

உயரம் கூடுதல் என்றாலே .....தனிச் சிறப்புதான்....

மாடி வீட்டில் வாழ்பவனுக்கு அதிக மரியாதை உண்டு. அது ஒரு காலம் .
இப்போ 7-ஆவது மாடி 8-ஆவது மாடி எனவும் மனிதன் உயரமான இடத்தில் வாழ்கிறான்.முதல் தளத்தின் வாழ்பவனும் உச்சியில் வாழ்பவனும் நிலையில் ஒன்று போல் இல்லை. உயரத்தை வைத்து மனிதனின் நிலையை நிர்ணயிக்கும் காலம் இன்று இல்லை...

உயரமாக பறப்பவர் பிரதமர் அல்லது ஜனாதிபதி மட்டுமே அன்று.இன்று நானும் பறந்தேன் எனப் பெருமைப்பட்டுக் கொள்ள முடியுமா..?

வெளிநாட்டுக்கு போனவர்கள் தான் என் வீட்டுத்தெருவில் கூடுதல்.என் வீட்டு வரிசையில் உள்ள வீடுகளில் வெளிநாட்டுக்குப் போனவர்களே அதிகம். போகாத வீடே இல்லை எனச் சொல்லலாம்.

இன்றைய நிலையில் குவைத்துக்குப் பறந்து வந்ததோ செல்வதோ பெருமை இல்லை. எனக்குப் பெருமை என்பது என் மகனை நேசித்த அத்தனை உள்ளங்களும் என்னையும் ஒரு பொருட்டாகக் கருதி அன்பு பாராட்டியது தான்.அதனை எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நான் மறக்கக்கூடாது.உயர்ந்த இந்த நினைவுகள் எந்தன் மனதில் நீங்காமல் இருக்கும்.

முற்றிலும் புதுமையான இந்த அனுபவத்தை ,சுகம் தரும் நினவுகளை சுமந்து செல்கிறேன்.


வட்டப் பாதையில் தானே செல்கிறோம்.....இன்னொரு புள்ளியில் சந்திப்போம். போய் வருகிறேன்.

இன்ஸா அல்லா.

Thursday, November 3, 2011

விடை பெறுகிறோம்

நான் இந்தியாவில் இருந்து வந்தது என் பொன்னு பேரனைக் காண.
நாள் நெருங்குகிறது இந்நாட்டை விட்டுப் போக. இன்னமும் நாலு
நாளே உள்ளன...வெகு வேகமாக சுற்றுதோ பூமி.
நாளும் அதனால் வேகமாய் போனது.திருவோண தினத்தில் வந்த
நான் பேரன் பிறந்தநாள் விருந்துண்டு பேருவகை அடந்தேன்.தீபாவளித் திரு
நாள் வந்த புதனில் புத்தாடை உடுத்து மக்களுடன் இருந்தேன்.ஏளாம்
நாள் நவம்பர் மாதத் திங்கள் மாலை வரை குவைத்தில்.மறு
நாள் செவ்வாய் காலையில் இந்தியாவினில் என் வீட்டில்

நான் சுமந்து செல்வது நல்ல உள்ளங்களின் அன்பை
என் மனதினில் உள்ள பசுமையான நினைவுகளில்
வானுயர் கட்டிடங்களோ ஊசிக்கோபுரமோ இல்லை;இங்குளோர்
அன்பை குழைத்து எம்மீது பூசிய அழகை சுமந்து செல்கிறோம்.
தாயிடம் தந்தையிடம் அண்ணனிடம் தோழனிடம்
அன்பைப் பொழிவது போல் அதுக்கு எள்ளளவும் குறையாமல்
எங்களையும் வீட்டுக்கழைத்து விருந்தளித்த பாங்கினை
வானில் பறக்கும் போதும் வீட்டினில் உறங்கும் போதும்
நினைவில் கொள்வோம்.போய் வருகிறோம்....

இந்து திருநாளாம் திருவோண நாளில் இந்தியாவில் இருந்து புறப்பட்டோம்.
இஸ்லாம் திருநாளாம் பக்ரீத்பெருநாளில் இங்கிருந்து இந்தியாவுக்கு புறப்படுகிறோம்

Wednesday, November 2, 2011

இறைவா இது உன் லீலை தானே

கருவறையில் உயிர்த்த நான் பிரிந்தேன் தாய் முகம் காண
பள்ளிப்பருவம் முடித்தவன் ஊரைப் பிரிந்தேன் கல்லூரி காண
மாவட்டம் மாறினேன் இளங்கலை கணிதம் பயில
மாநிலம்தனை பிரிந்தேன் முதுகலைக்காக...

தாய் வீட்டைப் பிரிந்தேன் சேய் நான் செய்த வீட்டில் வாழ
காலம் ஓடியது இளமை போய் முதுமையில் இப்போ
நாட்டை பிரிந்து வந்திருக்கேன் என் மக்களைக் காண
வியந்து நிற்கிறேன் இறைவா இதுவும் உன் லீலை தானே.

இளமையில் உறவுக்காக வியர்க்க வியர்க்க ஒடிய இவன்
இனியாகிலும் இளைப்பாறட்டும் என நினைத்தாயா இறைவா
இன்னும் எத்தனை நாளோ நானறியேன் உன் கருணை
என்றும் எனக்கும் எந்நாட்டுக்கும் வேணுமே.

Tuesday, November 1, 2011

குவைத்தில் வேஷ்டி கட்ட ஆசைப்பட்ட நான்

குவைத்தில் மங்காஃபில் நாலாம் பிளாக்கு ஒருவருக்கு மட்டுமே 11 கட்டிடம் இருக்கு.ஒவ்வொரு கட்டிடத்திலும் 36 வீடுகள். இவைகளை சரியாகக் கவனித்து வாடகையை வாங்குவதற்கும் பராமரிப்பு செய்யவும் ஒரு குவைத்தி மானேஜர் இருக்கிறார். ஒவ்வொரு கட்டிடத்துக்கும் ஒரு Watch man உண்டு.அவர்களை இங்குள்ள மொழியில் ஹாரிஷ் என அழைக்கிறார்கள்.வீட்டின் குப்பைகளை எடுத்துப்போடவேண்டும் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட தறை தளத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.11 பேரில் 4 மலையாளிகள்,7 பேர் எகிப்து நாட்டினர்.

நாங்கள் இருக்கும் கட்டிடத்தில் 13 மலையாளிகளும் 3 தமிழர்களும் வசிக்கிறார்கள். நைஜீரியா, பிலிப்பைன்ஸ்,ஸ்ரீலங்கா,எகிப்து நாட்டினர்களும் உண்டு.எல்லா வீடுகளிலும் AirCondition வசதி செய்யப்பட்டுள்ளது. வாடகைக்கு கொடுப்பதற்காகவே கட்டப்பட்ட வீடு.சுவர்கள் என்ற பெயரில் இருப்பவை நன்றாக இல்லை.கதவு,ஜன்னல் ஏதோ இருக்கு...

லிஃப்ட் வசதி உண்டு.கழிவு நீர் அனைத்தும் பூமிக்கடியில் குழாய் மூலம் போகிறது.ரோடு முழுவதும் இரு ஓரங்களிலும் பல விதமான கார்கள் அணிவகுத்து நிற்பதை காண அழகாக இருக்கும்.தூசி படிந்த இந்தக் கார்களை தண்ணீர் விட்டு கழுவுவதால் அந்த நீர் ரோட்டின் அருகே அங்கங்கே தேங்கி நிற்கும்.இது நடந்து செல்பவர்களுக்கு கொஞ்சம் இடஞ்சலா இருக்கும். தண்ணீர் போக ஓடை என எதுவும் இல்லை.

பேரனுக்கு மொட்டை போட ஒரு பார்பர்ஷாப்புக்குப் போனோம்.அதன் முதலாளி மலையாளி.உதயம் மெஸ், கீர்த்தி மெஸ்,அண்ணாமலை மெஸ், பாண்டியன் மெஸ் எல்லாமே தமிழர்களால் நடத்தப்படுகிறது.

15 நிமிட நடை தூரத்தில் கடற்கரை. அரை மணி நேரமாகும் நடைபாதையின் ஒரு முனையில் இருந்து புறப்பட்டு எதிர் முனைக்குப் போய் சேர. இரவும் நடக்கலாம். கடற்கரைக்கு போவதற்கு முன் இருவழிசாலையை கடந்து செல்ல வேண்டும். வேகமாக அதி வேகமாக வரும் கார்கள் சிவப்பு விளக்கு signal-க்கு நின்றாலும் நாம் கவனமாகச் செல்ல வேண்டும். நாங்கள் இருந்த இடத்தின் அருகாமையில் பள்ளிக்கூடம் இருக்கிறது. காலயில் 8 மணிக்கு துவங்கி 12.30 க்கு முடியும்.ஆசிரியரகள் சம்பளம் காணாது என strike பண்ணுவதாக பத்திரிகையில் படித்தேன்.ஆச்சரியமாக இருந்தது.

சின்னக்குழந்தைகள் சிரித்து விளையாடுவதை நான் பார்த்துக் கொண்டே இருப்பேன்.அந்தப் பிள்ளைகளுடன் அவர்கள் பெற்றோர்களும் பாதுகாப்புக்காகவும் கம்பனி கொடுப்பதற்காகவும் நிற்பார்கள்.எல்லோர் முகத்திலும் ஒரு இறுக்கம் தான் தெரிந்தது. நண்பர்களுடன் பேசிக் கொள்ளும்போது இறுக்கம் தளர்ந்து முகங்கள் மலர்கின்றன. பேசி முடித்து போனபின் பழையபடி serious ஆகி விடுகிறார்கள்.பாசிகள் படர்ந்த குளத்தில் கையை வைத்தால் பாசிகள் அகன்று ,கையை எடுத்தால் முன்போல் சேருமே அது போல.

பெரம்பலூரில் இருந்து ஒரு அம்மாவைப் பாத்தோம். எங்களைப் போல வந்தவர்கள். பேசுவதற்கு ஆள் கிடைத்ததும் அவள் அடைந்த மகிழ்ச்சியை அவள் முகத்தில் கண்டேன்.நாங்கள் இந்தியாவுக்குப் போகும் நாள் நெருங்குவது அவளுக்கு வருத்தமாக இருக்கிறதாம்.

என் பேரனை ட்ராலியில் வைத்து தள்ளிக் கொண்டு போகும் போது ஒரு வயதான பெண் அவளது இடுப்பில் குழந்தையை வைத்துக் கொண்டு என் பேரனைக்காட்டி சோறு ஊட்டிக் கொண்டிருந்தாள். அவளருகே நான் சென்றதும் என்னைப் பாத்து ‘தமிழா’ எனக் கேட்டாள்.

“பேத்தியா பேரனா மகள் பிள்ளையா மகன் பிள்ளையா” என நான் கேட்க அவள் சொன்ன பதில் ஆச்சரியமாகவே இருந்தது.

“நான் 9 மணிக்கு வந்து இந்தக் குழந்தையின் அப்பா அம்மா வேலைமுடிஞ்சு 3 மணிக்கு வரும் வரை ஆயாவாக இருக்கேன். 90 K.D சம்பளம்.
எனக்கு ஆந்திரா தமிழ்நாடு பார்டர்...இன்னும் 3 வீடுகளுக்கு பொங்கி கொடுக்க போவேன் அதில 75 K.D கிடைக்கும்.நானும் அக்காவும் ஃபாஹீல்ல இருக்கோம்”

நிறைய பூனைகள் அங்கும் இங்கும் திரிவதைப் பார்த்த நான், ஒரு பூனை வயதான Watch man பின்னால் போவதைப் பார்த்தேன்.அந்தப் பூனை ஒரு அறையின் உள்ளே போனதும் இவர் பின்னால் ஓடிவந்து மறைவான இடத்தில் நின்று பூனை உள்ளே போகிறதா என பாத்துக் கொண்டிருக்க திரும்பிப் பாத்த பூனை இவரைக் கண்டு மறுபடியும் அவரை நோக்கி வந்தது.அவர் அந்தப் பூனையிடம் சைகையால் ஏதோ சொல்ல அது ரூமுக்குள் போய் படுத்துக் கொண்டது.தெரு நாயே இல்லாத இடத்தில் நாய் போல பூனை ஒன்று இருப்பதைப் பாத்து அவரிடம் நான் கேட்டேன் நீங்க வளக்கிறீங்களா என. அது தானாக வந்து என்னிடம் ஒட்டிக் கொண்டது என்றார்.

ஒரு மாதமே ஆன நிலையில் திடீரென வீடைக் காலி செய்து கொண்டு போன ஒரு இந்தியப் பெண்ணிடம் போகும் காரணம் கேட்டேன்.

”நான் ஒரு டெய்லர்...இங்கு வைத்து தைக்கக் கூடாது எனச் சொல்கிறார்கள்...பக்கத்து கடைகாரன் எனது ஊர்க்காரன் .... அவன் நான் தைத்தால் அவனுக்கு தொழில் பாதிக்கும் என்று பராதி சொல்லி இருக்கான். எனக்கு என்ற கர்த்தர் வேறொரு வழிகாட்டி.. அதுகொண்டு ஞான் இவிடே இருந்து போகுகையாணூ...”

மலையாளிகளின் ஒற்றுமையாய் இருப்பார்களே ......ஒரே நாடு....ஒரே ஊரு....ஒரே மதம்... இப்படியும் மனிதர்கள்.....பிதாவே இவர்களை மன்னித்தருள்வீர்.

கடைகளிலும் பல இடங்களிலும் காணும் மனிதர்களை அவர்களின் உடையை வைத்தே முஸ்லீம் எனவும் இந்த நாட்டை சேர்ந்தவர் எனவும் தெரிந்து கொள்ளலாம். எனக்கும் வேட்டி அணிந்து தமிழ்நாட்டுக்காரன் எனக் காட்ட வேண்டும் என்ற ஆசை இருந்தது.

எனது பேரனின் Birth day party-க்கு வேட்டி அணிந்து வந்து தமிழனாய் குவைத்தில் என்னை நானே பாக்கவெண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டேன்.ஆனால் என் மனைவிக்கு விருப்பமில்லை.பேன்ட் போடல்லண்ணா பாஸ்போட்ட எங்க வப்பீங்க என கேட்டு பய முறுத்தி விட்டாள்....

வேட்டி அணிந்து சென்றேன்....என் மன திருப்திக்காக ..அன்பாக எங்களை அழைத்த ஆஸ்ராமம் மாதேவன் வீட்டுக்கு.

மீனா.......கத்திரிக்காயா......

முட்டை ஆம்ப்ளேட்டை சிறியதாக தோசை போல் வட்ட வடிவமாக்கி வார்த்து அதனை சற்றுச் சூடாக்கிய இரண்டு Bread piece-க்கும் இடையில் வைத்து சாப்பிட்டது முதல் தடவை என்பதால் மிகவும் ரசித்து சாப்பிட்டேன். தட்டத்தில் இருந்த அமைப்பின் அழகை பார்த்து என்னவெல்லாம் முட்டையிலும் சேர்ந்திருக்கிறது என்பதனைக் கேட்டு அறிந்து கொள்ள என் மனைவியிடம் சொன்னேன். அவளோ உங்களுக்கு கொழுப்பு இருப்பதால் முட்டை திங்கக் கூடாதுல்லா என்றாள்.

அப்படியா....சரி . Vegetable sandwich ஐ பன்னில் வைத்து சாப்பிடிருக்கேன்.bread -ல் வைத்து இங்க வீட்லதான் சாப்பிட்டிருக்கேன்.என்னென்ன காய்கறிகள் சேர்ந்திருக்கிறது என மருமகளிடம் கேட்டு தெரிந்து கொண்டாள் என் மனைவி.

சாப்பாட்டு மேசையில் சாப்பிடுவதற்கு தேவையான சமையல் செய்தவைகள் எல்லாம் இருந்தன.ஒரு தட்டத்தில் மீன்பொரித்து அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.ஒவ்வொரு துண்டும் சப்பையாய் மீன் வடிவத்தில் இருந்தது. சிறிது நேரம் கழிந்து சாப்பிடலாம்னு நினைச்சுட்டிருந்த எனக்கு நாக்கில் எச்சில் ஊறியது. நானே தட்டத்தினை எடுத்து சோறெல்லாம் போட்டு அந்த மீன் துண்டுகளையும் எடுத்து வைத்துக் கொண்டேன். மிக ஆசையாய் முதலில் மீனை தின்போம் என எடுத்துப் பாத்தேன். ரெம்பவும் மெதுவாக இருந்தது....முள் எதுவுமே இல்லயே....என்னடா இது....என யோசித்துக் கொண்டே என் மருமகளிடம் கேட்டேன்....மீன் மாதிரி தெரியல்லியே என்றேன்...அது மீன் இல்ல மாமா....கத்தரிக்கா.... NET ல பாத்து தான் செய்தேன்.

அய்யய்யே நல்ல ஏமாந்திட்டேனே....ஆஹா... பேஷ் பேஷ் ...மிகவும் ஆனந்தமாய் இருந்தது. இதுபோல பல சுவையான விசயங்களை எழுதலாம் இன்னும் இரண்டு மாதம் குவைத்தில் இருந்தால்.....

Monday, October 31, 2011

சபரிமலை யாத்திரை

கழிந்த வருடம் நான் தனியே சும்மா இருந்து என் மனம் போன போக்கிலே மனதை ஓடவிட்டுக் கொண்டிருந்தேன். ஓய்வு பெற்ற பின் எனக்கு வந்த ஒரே கடிதம் ஞாபகத்துக்கு வந்தது.அதை எழுதியது சென்னையில் இருந்து ஓய்வு பெற்ற காந்தியண்ணன்.என்னை பாராட்டியும் நான் கல்லூரி முதல்வர் ஆகவில்லையே என்ற தன் ஆதங்கத்தையும் எழுதிவிட்டு ஓய்வு பெற்றபின் எப்படி வாழ வேண்டும் என்பதனையும் எழுதியிருந்தார்.INDIAN EXPRESS க்கு Letters to the Editor க்கு எழுத அறிவுரையாக வேண்டியிருந்தார். 80 கடிதங்களுக்கும் அதிகமாக எழுதிய எனக்கு ஏனோ அதில் ஈடுபாடு வரவில்லை.

அடுத்து மனைவியை அவள் விரும்பிய வெளியூர் கோயிலுக்கெல்லாம் அழைத்துப் போக எழுதியிருந்தார். இதனை சரியாக செய்தேனா ....பல இடங்களுக்கு நாங்கள் இருவரும் போய் வந்திருக்கிறோம்.

என் தனிமையைக் கலைத்தாள் என் மனைவி. அவளிடம், “நீ போணூம்னு நினச்ச கோயிலுக்கெல்லாம் போயாச்சுல்லா.புதுசா ஒண்ணும் சக்திவிகடன்ல பாக்கல்லியா...” கேட்டேன்.

“அய்யப்பன் கோயிலுக்குப் போணும்.நான் சாகதுக்குள்ள ஒரு தடவை எப்படியாவது கூட்டிற்றுப் போயிருங்கோ”

“சபரிமலைக்கு என்னால நடந்து வர முடியும்னு தோணல்ல.உனக்கு முடியுமா ? முடியும்னா நீ காரில் துணைக்கு யாரையாவது கூட்டிட்டுப் போ.”

“போனா உங்களோடுதான் போவேன்.உங்களுக்கு மலையெல்லாம் ஏற முடியும்...வாங்க எனக்கு வேண்டி... இந்த ஒரு தடவை தானே”. கேட்டதும் எனக்கு இரக்கமாய் இருந்தது அவள் முகத்தைப் பாக்க.

கார்த்திகை மாசம் போனாலும் மகரவிளக்குக்கு போனாலும் கூட்டமா இருக்கும். ஃபெப்ருவரி மாதம் அவ்வளவு கூட்டம் இருக்காது.

புதன்கிழமை அல்லது சனிக்கிழமை சாமியை கும்பிடணும். மாசிமாதம் நடைதிறப்பு எந்தத் தேதியில் எனப் பாத்து 12-ம் தேதி போகலாம் என முடிவு பன்ணினோம். உடனே நான் என் மாணவர் ராஜேஸ்வரனிடம் பேசி ரூமுக்கு arrange பண்ணச் சொன்னேன்.அவர் ஒரு கடிதம் தந்தார்.இப்பம் மாதம் கார்த்திகை இன்னும் 3 மாதம் இருக்கிறது.லெக்‌ஷ்மணனும் கூட வருவதாக் கூறினான்.ஆனால் அவன் முதல்தடவை போவதால் 41 நாள் விரதம் இருந்து கார்த்திகை மாதம் தான் போகணும் என்பதால் வரல்லன்னு சொல்லிட்டான்.

எங்கள் காரில் போவதென முடிவு செய்து விட்டோம்.ராமு கார் ஓட்டுவான்.அவனும் நம்முடன் கோயிலுக்கு வருவான்.

தை மாதம் விரதம் இருக்க ஆரம்பித்தாள் என் மனைவி. என் மனைவி, “சிவகோல மதினியும் நம்முடன் அய்யப்பன் கோயிலுக்கு வாறாளாம்.” என்றாள்.

“அவளுக்கு முட்டு வலி இருக்குல்லா...மலை ஏறி நடந்து வர முடியுமா....”

“அவ ரொம்ப ஆசப்படுகா....நாம் கூட்டிற்று போலாமே”

“சரி...வரட்டும் ...மெதுவாப் போனா போயிரலாம்” என்றேன்.

ஃபெப்ருவரி 11-ம் தேதி Armed Reserve Police Camp-ல் உள்ள பிள்ளையார் கோயிலுக்குப் போய் நானும் என் மனைவியும் மாலை போட்டோம்.
அன்று இரவு எங்க வீட்டில் வைத்து இருமுடி கட்டினோம்.குருசாமி அய்யப்பன். நெய் அடைக்கும் போது எங்களுடன் சேர்ந்து சரணம் சொல்லிப் பாடி பாபு,மீனா,அய்யம்ம மதினி,புஷ்கலை எல்லோரும் உதவி செய்தனர்

காலை 5.45 மணிக்கு நடேஷின் காரில் போனோம். போகும்போது திருவனந்தபரத்தில் குமாரியின் வீட்டுக்குப் போய் ரூமுக்கு லெட்டர் வாங்கிற்றுப் போனோம்1.30 மணிக்கு பம்பையில் போய் சேர்ந்தோம். நடேஷின் காரில் வந்ததால் மிகவும் வசதியாய் இருந்தது. கொண்டு போன சாப்பாட்டை சாப்பிட்டோம்.சரியாக 2.15க்கு மலை ஏற ஆரம்பித்தோம்....

இரண்டு பேர் எங்கள் பின்னாலேயே வந்து, “சாரே....வெயில்ல மலை ஏறுவதற்கு உங்களால முடியாது. டோலியில் போலாம்...” என தலையாளத்தில் பேசிக் கொண்டே வந்தான்.

நான் அவனிடம் என்ன ரேட்டு எனக் கேட்க , “ மேல ஏறுவதற்கு 750 ருபாய். ஏறுவதற்கும் இறங்குவதற்கும் 1300/-” என்றான்.

அம்ம ரெண்டு பேருக்கும் ஏற முடியாது என்று கூற என் தங்கை,“ எது வரை ஏற முடியுமோ அது வரை போவோம்.ஏற முடியல்லண்ணா திரும்பீருவோம்.” எரிச்சலுடன் கூறினாள்.

கொஞ்ச தூரம் மேலே போனதும் நாங்கள் அவர்களது சுமையை வாங்கினோம். ஒரு பெரிய ஏற்றம் வந்தது.கொஞ்சம் இளைப்பாறிவிட்டு மேலே ஏறலாம்.....பைனாப்பிள் துண்டுகள் வாங்கிச் சாப்பிட்டோம். எம்மா....டோலி வேணுமா என்ற சத்தத்தை கேட்டு என் தங்கச்சிக்கு கோபம் வந்து அவனை கடும் சொற்களால் திட்டினாள்.....

ஏற ஆயத்தம் ஆனதும் சார் ஒரு பத்து ருபா தாங்கோ...அவன் ஏச்சுப் பட்டவன்....அதனால் நான் ருபா கொடுத்தேன்.மிகவும் நிதானமாக ஏற்றங்களில் ஏறி சன்னிதானத்தை அடையும் போது மணி 5.15.

3 பேரிடம் இருந்து ரூமுக்காக கடிதம் வாங்கிக் கொண்டு போனோம். லெட்சுமணன் தந்த கடிதத்தால் அழகான ரூம் கிடைத்தது....18 படிகள் ஏறி சாமிதரிசனம் முடிந்து காலையில் நெய் அபிசேகத்துக்கும் ஏற்பாடு செய்து விட்டு கடைகளுக்கு பொருள் வாங்க கிளம்பினோம்.திரும்பவும் பக்கவாட்டுப் படிவழியாக போய் நீண்ட வரிசையில் நின்று சாமி கும்பிட்டோம்.கீ செயின்,பாசி எல்லாம் வாங்கிவிட்டு ரூமில் படுத்து உறங்கினோம்

அதிகாலையில் அபிஷேகம் பண்ணியபின் சாமி கும்பிட்டு விட்டு மிகவும் திருப்தியுடன் கடையில் போய் காப்பி,தோசை சாப்பிட்டொம்.

ரூமுக்குப் போனோம்.....நிம்மதிப் பெருமூச்சு விட்டேன். கிட்டத்தட்ட 18 தடவை சபரிமலைக்கு வந்திருக்கிறேன் .ஆனால் இது போல் வசதியாக வந்ததே இல்லை.

நான் என் மனைவியிடம், “ என்ன திருப்தி தானா ! சிவகோலம் தான் சிரமம் இல்லாமல் மலை ஏறினா..எனக்கு கொஞ்சம் தெவங்கிச்சு...நீ கஷ்டப்படிவியோன்ணு நினச்சேன்...பரவாஇல்ல...அதிகம் கஷ்டப்படல்ல....திருப்தி தானா” ...

“ ரொம்ப சந்தோசமா இருக்கு... நீங்க லெட்சுமணனுக்குப் போண் பண்ணி thanks சொல்லுங்கோ..... அடுத்த வருசமும் இதே மாதிரி ரூமுக்கு ஏற்பாடு பண்ணணும்னூம் சொல்லி வச்சிருங்கோ”....

சிரித்துக் கொண்டே கீழே இறங்க ஆரம்பித்தோம். கடுக்கரைக்கு வந்து தங்கச்சியை அவள் வீட்டருகில் இறக்கி விட்ட பின் பொன்னப்பர் காலனிக்கு சாயந்திரம் 4 மணிக்கு வந்து சேர்ந்தோம். காரை மிகவும் பாதுகாப்பாக ஒட்டிய ராமுக்கு நன்றி சொல்ல காரை நடேஷின் வீட்டில் கொண்டு விட்டுப் போனான்.

நாங்கள் கொண்டுபோன சாப்பாடு மிக அதிகம்.அடுத்த நாளுக்குள்ளதை யாரிடமோ கொடுத்தோம். 10 ருபாய்க்கு நல்ல காப்பி கிடைத்தது.இட்லி,தோசை,சப்பாத்தி என எல்லாமே கிடைத்தது.ருசியாகவும் இருந்தது.

நாங்கள் மகரவிளக்கு முடிந்த உடன் போனதால்.கூட்டம் சற்று அதிகமாகவே இருந்தது.இனிமேல் போவதாய் இருந்தால் ,சாமியின் கருணையும் அருளும் இருந்தால் மார்ச்சு மாதம் அதாவது பங்குனி மாதம் சபரிமலைக்கு நானும் அவளும் போகணும்.


சாமியே சரணம் அய்யப்பா.

Sunday, October 30, 2011

அய்யப்பன் கோயில் விரதம்

1973 ல் கல்லூரியில் வேலைக்கு சேர்ந்த சமயம். நவம்பர் மாதம் சபரிமலைக்கு மாலை போட்டு 9 நாள் விரதம் இருந்து ஒரு பஸ் வாடகைக்குப் பிடித்து போவதற்காக plan போட்டபோது என்னையும் அழைத்தார்கள். எனக்கு ஒரே ஆச்சரியம்.41 நாள் விரதம் இருந்தல்லவா போகணும்.அதிலும் முதல் தடவை போகும் கன்னி ஐயப்பன் மார்கள் 41 நாள் விரதம் இருக்காமல் போகலாமா ?.ஒரே குழப்பமாய் இருந்தது.

கடுக்கரையில் குருசாமிகள் பலர் உண்டு.நாகருபிள்ளைகுருசாமியிடம் போய் விசயத்தைக் கூறி போகலாமா எனக் கேட்க அவர்,கன்னி ஐயப்பன் மாரெல்லாம் விரதம் இருந்து நடந்து தான் தை மாதம் விளக்குக்குதான் போகணும் என்றார். தாமுஅண்ணனிடம் கேட்டதில், சும்ம போப்போ அந்தக் காலத்துல சொன்னாங்க அப்பம் சாலை வசதி கிடையாது.இப்பம்லா பம்பை வரைக்கும் பஸ்ல போகலாம்.நடை துறந்த அண்ணைக்கே கூட்டம் வந்திரும்.எல்லாத்துக்குமே மனசுதான் காரணம்.சாமி ஒண்ணும் செய்ய மாட்டாரு.

அப்பா என்னிடம், “ஒருத்தருட்டயும் ஒண்ணும் கேக்காண்டாம்.பிரின்சிபால், பறவைக்கரசு, வேலப்பன் லாம் வாறாங்கள்ளா. போயிற்று வா.கார்த்திகை ஒண்ணாம் தேதி மாலை போடு...”

கடுக்கரையில் ஐய்யப்பன் கோயிலுக்கு காலையில் நான் என் அம்மையுடன் போய் மாலையை சாமி சன்னதியில் வைத்து வணங்கினேன். அம்மைதான் அந்த மாலையை என் கழுத்தில் போட்டாள்.நான் அம்மையின் காலைத் தொட்டு வணங்கினேன்.குருசாமி என்று யாரையும் மாலை போடுவதற்கு நான் தேடிப் போகவில்லை.

கல்லூரிக்கு போய் சாயந்திரம் வீட்டுக்கு வந்தேன். அடுக்களையில் அம்மையை தேடினேன்.அம்மா அங்கு இல்லை.வீட்டுக்குப்பின் வடக்குத் தாவாரத்தில் ஒரு புதிய அடுக்களை உருவாகி சூட்டடுப்பில் இட்லி அவித்துக் கொண்டிருந்தாள் அம்மா....

‘ என்னம்மா இதெல்லாம் உன்ன கஷ்டபடுத்தவா நான் மாலை போட்டிருக்கேன்.’ நான் சத்தமாகவே கேட்டேன்.

‘அப்பாதான் சொன்னா....இன்னும் ஒரு வாரம்தானே...விரதம் இருக்கணும்னா சும்மையா.

‘எல்லாம் சுத்தமா இருக்கணும். நானும் உனக்கு வேண்டி காலையில் குளித்து விட்டுதான் இந்த இடத்தை சாணி வைத்து மெழுகி அதன் பிறகு தான் அடுப்பை பத்தவைப்பேன்...’

‘ஒரு வீட்டுக்கும் போயிராதே. போனால் என்னமாம் தந்தால் திண்ணுராதே. கண்ட கண்ட ஹோட்டல்ல சாப்பிடாதே...’

நான் ஒருவன் மாலைப் போடப்போய் எனக்கு முன்னாலயே அம்மையும் அப்பாவும் குளித்து நான் சாப்பிட்ட பின் அவர்கள் சாப்பிட....என் மனதில் இனம் புரியாத நெருடல். இதாவது பரவாய் இல்லை. என்னை விட 25 வயது கூடுதலான Lab attendar என்னை சாமி எனவும் நீங்க வாங்க போங்க...எனப் பெரிய மரியாதையுடன் பேசியது எனக்கு கூச்சமாக இருந்தது.

குறிப்பிட்ட நாளில் பயணமானோம். நடு இரவில் எங்கேயோ வண்டி நின்றது. அடைத்துக் கிடந்த கடையின் முன்னால் சிமென்ட் தரையில் படுத்து உறங்கி காலையில் பக்கத்தில் உள்ள ஆற்றில் காலைக் கடன்களை முடித்து விட்டு பயணமாய் பம்பை போய் சேர்ந்தோம். அங்கு குளித்தொம். காலையில் ஏதாவது சாப்பிடணுமே....நிறைய ஹோட்டல்கள் ....நாங்கள் சாப்பிட்டொம்.எங்களுடன் வந்த குருசாமியும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். நாங்கள் சாப்பிட்டது ப்ரோட்டா....சாப்பிடலாமா....சாப்பிடலாம் ,இருமுடிப்பையில் உள்ள நெய்த்தேங்காயில் நெய் அடைச்சா விரதம் எல்லாம் முடிஞ்சு...இப்படி ஒரு விளக்கம் சொன்னார்கள்....என் மனம் ஒத்துக்கவே இல்லை...எனக்காக வீட்ல அம்மா அவ்வளவு கஷ்டப்பட்டுருக்கணுமா.கடுக்கரையில் அய்யப்பன் கோயிலுக்கு போகும்போது விரதம் இருந்தா போகிறோம்.சபரிமலைக்கு பழைய காலத்தில் பஸ் வசதி கிடையாது.நடந்து செல்லும் போது சரியான சாப்பாடு கிடைக்காது,குளிர் காலம்,....இது போன்ற சிரமங்களை தாங்கிக் கொள்வதற்காக ஒரு பயிற்சியாய் செய்தவைகளை இப்போதும் தேவையே இல்லாமல் கடைபிடிக்கிறோம்.

நான் மனதளவில் சுத்தமாகவும் என்னுடன் குறைந்தது ஒருவரையாவது எனது செலவில் அய்யப்பன் கோயிலுக்குப் போகும் போது கூட்டிக் கொண்டு போவேன். என்னைப் பொறுத்தளவில் இது ஒரு ஆன்மீக சுற்றுப் பயணம்.

கோயிலுக்கு 18 படிவழியாக ஏறி சாமி தரிசனம் முடிந்து சுகமாய் வீடு வந்து சேர்ந்தோம்.
பாரம் குறைந்த இருமுடிப்பைக்கு சூடம் கொழுத்தி மாலையை கழற்றினேன்.

நான்கைந்து தடவை இது போல் போனேன். யாரையும் அதிகம் கஷ்டப்படுத்தாமல் முறைப்படி
விரதம் இருந்து தான் போனேன். மாலை போட்டபின் எல்லோர் வீட்டுக்கும் போவேன். பேசிக்கொண்டிருப்போம். ஆனால் நான் கேட்டாலும் குடிக்கக்கூட தன்ணிர் தர மாட்டாங்க....அய்யய்யோ மாலை போட்டிருக்க வீட்ல போய் குடி....சில காரணங்களால் வீடு சுத்தமாயில்ல என்று சொல்லி வீட்டுக்கு வரக்கூடாதும்பாங்க.....

நம்மைத் தேவையே இல்லாமல் கஷ்டப்படுத்தி இருமுடிப்பையை தூக்க முடியாத அளவிற்கு நிரப்பி தலையில் வைத்து நடக்க முடியாமல் நடந்து போகிறோம்.நாம் கொண்டுபோன எதையுமே அய்யப்பன் சன்னதிக்குள் கொண்டு போக முடியாது.

மலையாள மக்கள் ஒரெ ஒரு நெய் தேங்காய் மட்டுமே கொண்டு வந்து சாமி கும்பிட்டு போகிறார்கள்.

1981-டிசம்பர் 25-ல் என் தந்தை இறைவனடி சேர்ந்த நாளில் இறுதிச் சடங்குக்கு பலர் வந்தார்கள். விளாங்காட்டில் இருந்து குமரேசனும் வந்திருந்தார்....குமரேசன் அய்யப்பன் கோயிலுக்கு போக மாலை போட்டிருந்தார்.அவரிடம்,“ நீங்க தாடியெல்லாம் வச்சுகிட்டு... மாலை போட்டிருக்கீங்க....ஏன் வந்தீங்க....”

அவர் சொன்னது,“ உங்க அப்பா போய் சேந்துட்டா.கடுக்கரையில் ஐயப்பன் கோயில் கட்டுவதற்கு இடம் கொடுத்தது அப்பா தானே.அவர் புகழ் சாகவே சாகாது.... இண்ணைக்கு வரல்லன்ணா நான் மனுசனே இல்ல. வந்ததை பெரும் பாக்கியமாகவே நினைக்கிறேன் விளக்குக்கு சபரி மலைக்குப் போகப் போறேன்....உங்க கோலப்பத்தானும் நானும் எப்படின்னு தெரியுமா.எப்படி சார் நான் வராம இருக்க முடியும்....”

குமரேசனின் குரல் அடிக்கடி என் காதினில் ஒலித்துக் கொண்டே இருக்கும்.....மண்டல பூஜையன்று தான் என் தந்தை மறைந்தார்....

அறிந்தும் அறியாமலும் செய்த சகல குற்றங்களை மன்னித்தருள்வாய் சுவாமியே அய்யப்பா.

சுவாமியே சரணம் அய்யப்பா

Saturday, October 29, 2011

Mathematics Association meeting and myself

MATHEMATICS ASSOCIATION க்கு ஒரு தடவை துணைத் தலைவராக என்னை இருக்கும்படி மிகவும் எங்கள் HOD வற்புறுத்தியதால் சம்மதித்தேன். சாதாரணமாக students secretary தான் வருடத்துக்கு ஒரு தடவை நடக்கும் கூட்டத்துக்கு வெளிக் College ல் வேலை பாக்கும் maths lecturer or HOD ஐ பேசுவதற்கு அழைத்து வருவான்.அதுக்காக ஒரிரண்டு நாள் வகுப்புக்கு வராமல் தன்னுடன் 2 அல்லது 3 பேரைக் கூட்டிக் கொண்டு போயிருவான்.

நான் பொறுப்பேற்றபின் மாணவச் செயலாளரை அழைத்தேன். அவன் நல்ல படிக்கக் கூடிய மாணவன்தான். “ என்ன திட்டம் வைத்திருக்கிறாய்.Chief Guest யார் ?” எனக்கேட்டேன்.

‘சார், நீங்களே சொல்லுங்கோ.....உங்களுக்குத் தெரிந்த Lecturer யாராவது இருந்தால் நீங்களே fix பண்ணீரலாம். ’ என்று சொன்னான்.

“இங்க நாங்க நாள் பூராவும் கணக்குப் பாடம் தானே சொல்லித் தருகிறோம்.ஒரு மாற்றத்துக்காக Bankல இருந்து யாரையாவது கூப்பிடலாமா....உங்களுக்கு கொஞ்ச நேரம் பயன்படும் படியாக பேசினால் நல்லா இருக்கும்லா” என்றேன்.

அவன் போய்விட்டான் அடுத்தநாள் பதில் சொல்வதாகக் கூறிவிட்டு.

அவன் வந்து சரி சார்...நீங்க சொன்னபடியே செய்திருவோம் என்றான்.

எனக்குத் தெரிந்த ஒரு வங்கி மேலாளரை சந்தித்து பேசி தேதி, நேரம் எல்லாம் குறித்து விட்டு அந்த மாணவனிடம் ஒரு மரியாதைக்காக கல்லூரி விட்டபின் சாயந்திரம் அவரை சந்தித்துப் பேசச் சொன்னேன்.

எல்லாம் முடிந்த உடன் துறைத்தலவரிடம் கூட்டம் பற்றி மாணவச்செயலாளர் சொன்னதும்
“சரி, எப்பம் போய் சொன்னீங்க...class -கட் அடிச்சுட்டு போனீங்களா. என் வகுப்பில் ஆப்சன்டே இல்லையே...”

“AP சாரே பாத்துப் பேசி முடிச்சுட்டாரு. 4 மணிக்கு மேல் போய் மேலாளரை நாங்க கொஞ்சம் பேர் பாத்துட்டு வந்தோம்.”

சொன்ன நாளில் கூட்டம் நடந்தது. வந்தவர் கணித மாணவர்களுக்கு இருக்கக் கூடிய வாய்ப்பை விவரித்தார். மாணவர்களின் பேச்சு திறனை(Communication skill) வளர்க்க வேண்டும்.கிராமத்து மாணவர்களுக்கு ஒரு பிர்ச்சினை ஏற்படும்.கல்லூரியில் படிச்சிருக்கானே இவனுக்கு எல்லாமே தெரியும் என்று மணி ஆர்டர் ஃபாம்,வங்கியில் பணம் கட்ட ,வாங்க என்ன செய்யணும் என்றெல்லாம் கேட்பார்கள். சின்னப் பிள்ளைகள் பள்ளிக்கூடத்தில் கணக்குப் பாடங்களில்,ஆங்கிலப் பாடத்தில் எதையாவது தெரியாது எனக் கேட்டு வருபவர்களுக்கு சொல்லிக் கொடுக்க தெரிந்திருக்கணும்.....

‘P.G படித்த பையன் ஒருவன் பணம் அனுப்ப வங்கிக்கு வந்தான்.ஒரு செல்லான் எடுத்து எம்டி என எழுதி அனுப்பவேண்டிய ஆளின் பெயர்,அவரது வங்கி எண் பூர்த்தி செய்து கொண்டு வாருங்க....அவன் செல்லானில் M.T என எழுதுவதற்குப் பதில் empty என எழுதிக் கொண்டு வந்தான்.....’

தினமும் பத்திரிகை படிக்கணும் , general knowledge ஐ வளர்த்துக் கொள்ள வேண்டும். இப்படியெல்லாம் பேசி தன் பேச்சினை முடித்தார்....

அடுத்த வருடமும் இதே சுமை மறுபடியும் என் தலையில் விழுந்தது. இப்பொ வந்து பேசியது Auditor A.குளத்தூரான் பிள்ளை...அவர் பேசியது கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. இந்தியாவில் வேலை செய்பவர்களுக்கு பணிப் பாதுகாப்பு உண்டு. நன்றாக வேலை செய்யா விட்டாலும் ஒருவனை வேலையில் இருந்து நீக்கவே முடியாது....ஆனால் அமெரிக்கா போன்ற நாடுகளில் அப்படி இல்லை.வேலையை சரியாகச் செய்யாவிட்டாலும் செய்யத்தெரியவில்லை என்றாலும் வேலை போய்விடும்....

இங்கு ஒழுங்காக வரி செலுத்துபவர்கள் மாதம் தோறும் சம்பளம் வாங்கும் ஆசிரியர்கள்,அலுவலர்கள் .....ஆசிரியர்கள் சரியாக வேலை செய்கிறார்களா என்பதின் அளவுகோல் வெற்றி பெற்ற மாணவர்களின் என்ணிக்கைதான்.ஆகவே நன்றாக படித்து வெற்றிபெற வாழ்த்திவிட்டு பேச்சினை முடித்தார்.

நான் HOD ஆன பின்னும் கூட்டம் நடத்தப்பட்டது என்றாலும் எனக்கு முழுமையான திருப்தி இல்லை. ஒரு தடவை என்னையும் திடீரென பேச அழைக்க நான் பேசினேன்.அப்துல் கலாமின் ‘அக்னிச் சிறகுகள்’படித்து முடித்த நேரமது.அப்போ அவர் இந்தியாவின் ஜனாதிபதியாகவில்லை.அவரது அனுபவங்கள், அவரால் இந்தியாவுக்கு ஏற்பட்ட பெருமை,தந்தை,தாய்,ஆசிரியர்,அவரது ஊர் மீதெல்லாம் கொண்ட அவரது பிடிப்பு.... எல்லாவற்றையும் கூறி மாணவர்கள் அனைவரும் அப்துல் கலாமை படிங்க என பேசினேன்...

நான் ஒய்வு பெற்றபின் M.Sc Mathsல் 100 மார்க்கு எடுத்த மாணவர்களுக்கு ராஜையன் சார் ஒரு கிராமின் விலையை செக்காக என்னைக் கொண்டு கொடுக்க வைத்தார்.நான் வெறும் கையுடன்
போகக் கூடாது என நினைத்து 3 அக்னிச் சிறகுகள் புக்,3 பென் வாங்கிக் கொண்டு போய் கொடுத்தேன்.

இன்றும் சோர்வு ஏற்படும் போதெல்லாம் நான் படிக்க எடுக்கும் நூல் அக்னிச் சிறகுகள்.

புட்டும் .....முட்டையும்-------- 1

காலையில் நான் என் மருமகளிடம் , “இண்ணைக்கு என்ன டிஃபன்” கேட்டேன்.புட்டு என்றாள்.
புட்டு மாவு குவைத்தில் கிடைக்கும்....தேங்காயும் கிடைக்கும். விலைதான் கொஞ்சம் கூடுதலா இருக்கும்.

புட்டு ரெடியானதும் தட்டத்தில் வைத்து தந்தாள்.சம்பா அரிசிப் புட்டு புட்டுக்குழலில் வைத்து நீராவியால் வெந்தப்புட்டு.வெள்ளையாய் தேங்காய் தூவலுடன் மஞ்சள் நிறத்தில் ஏதோ ஒன்று தெரிகிறதே அது என்ன என கேட்டேன். அது ஏத்தம்பழம் என்றாள்.

நான் இதுவரை இப்படி செய்து பாத்ததே இல்லையே....உனக்கு இந்த idea எப்படி வந்தது...?

கடுக்கரை பெரியம்மாதான் ஊர்ல எங்கூட இருக்கும்போது செய்தா....சாதாரணமா புட்டுடன் பழத்தைச் சேர்த்து விரகி சேர்த்து தின்பதுதான் வழக்கம்....நான் முதன் முதலாக இப்பதான் பழத்தையும் புட்டுடன் சேர்த்து அவித்து சாப்பிடுகிறேன்...நன்றாக இருந்தது.

சக்கா பழத்தையும் சிறு சிறு துண்டாக்கி புட்டு மாவுடன் சேர்த்து அவித்தாலும் நன்றாக இருக்கும் என்றாள்.

முட்டை ஆம்ப்ளேட் புடிக்குமா ? சாப்பிடலாமா ?மருமகள் என்னிடம் கேட்டாள். Cholestrol இருப்பதால் சாப்பிடக்கூடாது...ஆனால் எனக்கு அதுதான் ரொம்ப புடிக்கும் என்றேன். “ஒருநாள் சாப்பிட்டா என்னா .... ஒன்ணும் செய்யாது...மாமாவுக்கு கொடு..”.இது மனைவி.

ஆம்ப்ளேட் வந்தது.. மிகவும் கனமாக ஊத்தப்பம் போன்று இருந்தது. அதில் உள்ளி,மிளகுடன் தக்காளித்துண்டுகளும் இருந்தன. சாப்பிட்டேன். வித்தியாசமான ருசியாய் நல்லா இருக்கே.... வேறு ஏதாவது இதில் சேர்ந்திருக்கா எனக் கேட்டேன். பாலும் கொஞ்சம் சேத்திருக்கேன் என்றாள்.

இதெல்லாம் எப்படி உனக்கு தெரிஞ்சு ? ...

நான் NET ல பாத்து செய்தேன்...என்றாள்.

சினை இட்லி தெரியுமா எனக் கேட்க தெரியும் என்றாள்....

குவைத்துக்கு வரும்போது டாக்டர் சொன்னது உடம்பைக் குறைத்து எடையும் குறைக்கணும் என. எல்லாம் ஊரில போய் சாப்பட்ட குறைச்சுக்கலாம்...தினம் தினம் வித்தியாசமாக நாக்குக்கு ருசியாகவும் மனசுக்கு இதமாகவும் உணவு கிடைக்கிறது....குவைத்தை விட்டுப் போகவே அதுவும் நாள் நெருங்கும் இந்த வேளையில் மனசுக்கு என்னவோ போல் இருக்கு.பேரன் ஆச்சியுடன் கொஞ்சும் அழகை நான் ரசிக்க....தாத்தா என என்னிடமே ஒட்டிக் கொண்டு இருப்பதை அவள் பெருமிதத்துடன் பார்த்து ரசிக்க...ஊருக்குப் போய்த்தான் தீரணுமா?

தினேஷும் நானும் வெளியே போய் வீட்டினுள் வரும்போது சர்ணேஷ் வேகமாக ஊர்ந்து எங்களை நோக்கி வருவான்....மகனை எடுக்க தினேஷ் குனிந்து கை நீட்டுவான்.ஆனால் பேரனோ அப்பாட்ட போகாமல் வந்து என்னை எடுக்கச் சொல்வான்.அப்பம் நீ தாத்தா ஆச்சிக் கூட ஊருக்குப் போ எனச் செள்ளக் கோபத்தில் சொல்லி மகிழ்வான் தினேஷ்.

நான் என் பிள்ளைகளை எடுத்துக் கொஞ்சினதை விட என் பேரன்களிடம் கொஞ்சியதுதான் கூடுதல். ரத்னேஷ், புவனேஷ், சர்னேஷ்......இவர்கள் ஒவ்வொரு இடத்தில் இருப்பதால் எங்கள் ஓய்வு காலம் பிரயாணத்திலும் அவர்களுடன் கொஞ்சுவதிலும் கழிகிறது. ஆண்டவன் இதை விட வேறென்ன தரவேண்டும்..... நிம்மதி எங்கும் கிடைக்கும் பேரன்கள் இருந்தால்.

Friday, October 28, 2011

திருவையும் ஆட்டுரலும்

கல்லூரிக்குத் தினமும் காலையில் எத்தன மணிக்கு புறப்பட்டுவருவ....என பலர் கேட்பதுண்டு.

நாரூல்ல வந்து தங்கு. அப்பந்தான் பிள்ளைகள நல்ல பள்ளிக் கூடத்தில் சேக்கலாம்....உனக்கும் வசதியாயிருக்கும். இப்படி பலர் சொல்வதை கேட்பேன்.ஆனால் அம்மையை விட்டுட்டு எப்படிப் போகமுடியும்.

நீ ஒரு வீட்டப் பாரு நானும் ஓங்கூட வந்து ஒரு மாசம் இருக்கேன் என அம்மா சொன்னாள்.

நான் ராமன்பிள்ளைத்தெருவில் கொஞ்ச நாளும் பின் நல்லபெருமாள் காலனியில் கொஞ்ச நாளும் இருந்து விட்டு புதிய வீடு ஒன்றினை பொன்னப்ப நாடார் காலனியில் கட்டி அங்கே தங்கினோம்

புதுவீடு பால் காய்ச்சி வருமுன் என் மனைவி என்னிடம், “புது வீட்டுக்குப் போகதுக்கு முன்னால் உரல்,உலக்கை,திருவை,அம்மி,ஆட்டுரல் எல்லாம் மயிலாடியில் சொல்லிச் செய்து வாங்கணுமே.” சொன்னாள்.

நான் சிரித்துக் கொண்டே உலக்கை வைத்து உனக்கு இடிக்கத் தெரியுமா....grinder -ஐக் கொடுத்திருவோம்....mixieல்லாம் வேண்டாமா எனக் கேட்டேன்.

அம்மை ‘ வீடுன்னா இதெல்லாம் இருக்கணும்’ என வெடுக்கென சொன்னாள். என் மனைவி சிரித்துக் கொண்டே சொன்னதெக் கேளுங்களேன் என்று பார்வையால் சொன்னாள்.மயிலாடியில் இந்தியன் வங்கியில் வேலை பாத்த ஒருவரிடம் நான் இதைச் சொல்ல அவர் சுப்பையாத்தேவர் என்ற பெயருள்ள ஒரு ஆளை அனுப்பினார்.

அவரிடம் தேவையான அனைத்துக்கும் முன்பணம் கொடுத்தேன்.சிவப்பு நிறக் கல்லில் தமிழில் வீட்டின் பெயரை வெட்டிக் கொண்டுவரச் சொன்னேன்.

இப்பொழுது திருவை புது மெருகு மாறாமல் ,ஆட்டுரல் எல்லாம் அப்படியே பின் பக்கம் கேட்பாரற்று பரிதாபமாய் கிடக்கிறது

எங்க வீட்டுக்கு போண் வந்த கதை

1979 அல்லது 80-ம் வருடம்.கடுக்கரையில் தொலைபேசி ஒரு வீட்டில் கூட கிடையாது. பெருமாள் கோயில் பக்கம் உள்ள ரைஸ்மில்லில் மாத்திரம் உண்டு.ஓணர் இருக்கும் போது மட்டுமே வெளியாட்கள் காசு கொடுத்துப் பேசலாம். பூதப்பாண்டி Exchange. Dial phone. நாகர்கோவிலுக்கு Trunk call book பண்ணி தான் பேசணும்.பக்கத்து ஊரான நயினார் தோப்பில் ஒரு வீட்டில் தொலைபேசி இருந்தது.

போண் இருந்தும் இல்லா நிலைமை. நான் அங்கு போய் போணில் பேச விரும்புவதில்லை. ஒரு நாள் எனது HOD க்கு இரவு பேசவேண்டிய அவசியம் ஏற்பட்டது. நானே தான் பேச வேண்டும் என்பதால் ரைஸ்மில்லுக்குப் போனேன். ஓணர் இருந்தார். ஓணர் எனக்கு சொந்தம் தான். அத்தான் மைத்துன உறவு.

போண் வேணுமே. நாரூலுக்குப் பேசணுமே....என நான் கேட்க அவரோ நம்பர சொல்லு மாப்பிள என்றார். போண இப்படி கொஞ்சம் எங்கிட்ட தாருங்கோ நானே பேசுகேனே என்றேன்.

போணைத் தரவே இல்லை. எனக்கு போண் பண்ணாமலேயே போயிரலாமா எனத் தோணியது.
வேறெங்க போய் பேச....வழி இல்லை...பேசிவிட்டு காசையும் கொடுத்துவிட்டு கடுப்புடன் வீட்டுக்கு வந்தேன்.

அப்பாவிடம் போய் போண் வீட்டில் வைக்க சம்மதம் கேட்டேன். அப்பாவுக்கு இஷ்டம் இல்லை.

எனக்கு மன உறுத்தல். போண நம்மிடம் தந்தா என்னா....தேஞ்சா போயிரும்....

ஊரில் ஒரு போஸ்ட் ஆபீஸ் உண்டு. திருமலையாண்டி தான் அதன் பொறுப்பாளர்.அவரிடம் போய்,“ நம்ம ஆபீஸ்ல போண் வைக்க என்ன செய்யணும்....யாரைப் போய் பாக்கணும்...”
எல்லா விவரங்களையும் கேட்டேன்.

நாகர்கோவில் அதிகாரிக்கு விளக்கமாக வின்ணப்பம் அனுப்பி விட்டு நேரடியாகவும் போய் பாத்தேன். பிரச்சனை ஒண்ணுமே இல்லை....போண் வச்சுரலாம்.... ஆனா இப்பம் Instrument stockil இல்லை என்றார்கள்.

திருநெல்வேலியில் இருந்து தான் instrument வரணும். அந்த செக்ஸனில் இருப்பவர் ஒழுகினசேரியில் இருந்து கணபதியாபிள்ளை எனவும் தெரிந்து கொண்டேன்.

யார் இந்த கணபதியா பிள்ளை ? கடுக்கரை வடக்குத்தெரு பப்புவின் தங்கச்சியின் மாப்பிள்ளைதான் இவர்....அவருக்கு ஒரு கடிதம் நானே எழுதினேன். ஒரு வாரத்தில் கடுக்கரை போஸ்டாபீஸ்ல போண் வந்தது.....

போஸ்டாபீஸ் அலுவலக நேரம் மத்தியானத்தோடு முடிஞ்சுரும்.... அந்த நேரத்துக்கு அப்புறம்
பழைய குருடி கதவைத் திறடி கதை தான்....

MINI CLUB -ல் போண் வச்சுரலாம் எனப் plan போட்டேன். கிருஷ்ணன் , “ அது வேண்டாண்ணெ .... நீ தான் பணம் கட்டணும்..அதுக்கு உங்க வீட்லயே வச்சுரலாமே”

அப்பா சம்மதிக்க மாட்டாங்களே ......

அப்பம் என் தங்கச்சிக்கு குழந்தை பிறந்து வீட்ல இருந்தா.சிசேரியன் மூலம் தான் பிரசவம்.
வீட்ல அப்பா இல்ல...நானும் இல்லை.....தங்கச்சிக்கு strich போட்ட இடத்தில் வயிற்றில் ரத்தக் கசிவு இருந்தது...குளிக்கும்போது பாத்து பயந்துட்டா...

அம்மையும் என் மனைவியும் ஒரு Taxi பிடிக்க படாது பாடு பட்டார்கள்.....ஒரு போண் இருந்தால் இந்தப் பிரச்சினை உண்டா.......ஒருவழியாக அப்பாவின் அனுமதி கிடைத்தது.

வீட்டில் போண் வைக்க வின்ணப்பித்தேன். பூதப்பாண்டி exchange-இருந்து வந்து பாத்தாங்க. அந்தச் சமயத்திலல்லாம் எந்த ரூம்ல வைக்கணும் என் முன்கூட்டியே சொல்லணும்.

அப்பாவின் ரூமில தான் வைக்கணும்னு சொன்னேன்.

அதன் படியே போண் வந்தது. போண் உள்ள முதல் வீடு எங்க வீடு.
எங்களுக்கு மட்டும் அல்ல ......எல்லோருக்குமே பயன்பட்டது....

எனது Telephone number: 63

Thursday, October 27, 2011

சுத்தம் சோறு போடுமா....

புத்தேரி பிள்ளை தந்த நாஞ்சில்நாடன் எழுதிய ‘நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை’ படித்துக் கொண்டிருந்தேன்.நாவல் என எண்ணிப் படிக்க ஆரம்பித்தேன். ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்ற தலைப்பில் ஓவியர் ஜீவா எழுதிய முன்னுரை இது நாவல் இல்லை கட்டுரை என அறிவித்தது.படித்த பல முன்னுரைகளில் இது எனக்குப் பிடித்தது. “ நீண்ட பயணங்களின் போது மூத்திரம் பெய்ய பெண்கள் படும் கஷ்டத்தை எந்தப் பெண்ணியவாதியாவது வெளிப்படுத்தியிருக்கிறாரா தெரியவில்லை.பெரும் பயணியான நாஞ்சிலுக்குத்தான் ‘கொட்டிக் கிழங்கோ கிழங்கு’ எனக் கூவத் தோன்றியுள்ளது.” இது ஜீவாவின் வரிகள்

பெண்கள் வேலைக்குப் போகும் இடங்களில் இடையில் ஒருமுறையேனும் மூத்திரம் பெய்ய வசதியில்லை.நிறையப் பெண்கள் வெளியே போய் மீண்டும் வீடுவந்து சேரும் வரை மூத்திரம் பெய்வதில்லை.....துர்நாற்றமற்ற கக்கூஸ் இல்லாததும் காரணமாக இருக்கலாம்.
கோடிக்கணக்கில் வியாபாரமாகும் நிறுவனங்களில் இருக்கும் கழிப்பறைகளை எட்டிப் பார்த்தால் உண்ட உணவும் குடலும் கூட வெளிச்சாடிவிடும். ஆசிரியரின் ஆதங்கம் இது......

சுத்தம் பார்த்தால் சோறு கிடைக்காதே.

குவைத்தில் உள்ள எல்லாக் கடைகளிலும் கழிப்பறைகள் மிக மிக அழகாக இருக்கும்.கைகளைத் துடைக்க tissue பேப்பர் அல்லது ஈரமான கைகள் உலர heater வசதி
இருக்கிறது.சில கீர்த்தி வாய்ந்த கடைகளில் உள்ள toilet-ல் தானாகவே இயங்கி தண்ணீர் பாய்ந்து சுத்தம் செய்து விடுகிறது. heater-ன் அருகே ஈரமான கைகளைக் கொண்டு போன உடன் வெப்பக்காற்று தானாகவே வந்து கைகளை உலர வைக்கிறது.

காலையிலும் மாலையிலும் நடைப்பயிற்சிக்காக நீண்ட நெடும் நடை பாதை FAHAHEEL கடற்கரையில் உள்ளது. அங்கே ஒரு இடத்தில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் தனித் தனி வெவ்வேறு கட்டிடத்தில் toilet உள்ளன.அதனை சுத்தமாகவே வைத்திருக்கிறார்கள்.

சினிமா தியேட்டர்களில் toilet நம்மால் கற்பனை செய்யக்கூட முடியாத அளவுக்கு சுத்தமாக இருக்கிறது.

கிராமங்களில் கக்கூஸ் வசதியே கிடையாது....இருட்டானதும் பெண்கள் ஒதுங்கும் இடத்துக்கு அதாவது சாலை ஓரங்களில் அவர்கள் இருப்பதால் அந்தச் சாலை வழியாக ஆண்கள் போக மாட்டார்கள்.போகவும் கூடாது என்பது எழுதப்படாத சட்டம்.வசதி உள்ளவர்கள் சிமெண்டில் பீங்கான் போல செய்து கக்கூஸ் அமைத்திருப்பார்கள்....இலவசமாக அரசு பீங்கான் கொடுத்தது.....யாரும் அதிகமாக பயன்படுத்தியதாகத் தெரியவில்லை

காலங்கள் மாற மாற வசதிகள் பெருகினாலும் நவீன கழிப்பறைகள் எல்லார் வீட்டிலும் இல்லாத நிலைதான்.

எங்க வீட்டில் களத்தில் தென் கிழக்கு மூலையில் கக்கூஸ் இருந்தது.அதன் கிழக்குப் பக்கம் ரோடும் ஆறும்... ராத்திரியானால் அங்கு போக பயமாய் இருக்கும்...
என்னுடைய ரூம் மாடி. அது களத்தில் வீட்டின் பக்கத்தில் மேற்குப் பக்கம் இருந்தது.அதில் கக்கூஸ் கட்ட அப்பா சம்மதிக்கவில்லை....எனக்கு வேலை கிடைத்து வேலைக்குப் போகும் நான் படும் அவதியைப் பாத்த அப்பா கக்கூஸ் மாடியிலேயே கட்டித் தந்தார்.எங்க ஊரில் உள்ள முதல் toilet attached room என்னுடையதே.

இந்த நவீன உலகில் இன்றும் எடுப்பு கக்கூஸ் இருக்கும் வீடுகள் உள்ள ஊர் ஒன்று இருக்கிறது........திருநெல்வேலி.