Thursday, June 28, 2012

ஒரு நாள் பஸ்ஸில் போனபோது........


கடுக்கரைக்குப் போய் ராஜேந்திரனிடம் பேசி நாட்கள் பல ஆனதால் போய் வரலாமே என்ற எண்ணத்தில் நான் ஜெயராமிடம் ," புதன்கிழமை கடுக்கரைக்குப் போணும். நீ அன்று ஃப்றீயாகத்தானே இருக்கிறாய் ? வாயேன் போயிற்று வந்திரலாமே ......"
அவன் பதிலொன்றும் சொல்லாமல் சிரித்துக் கொண்டே இருந்தான்.
நான் ," என்ன ராமூ..... காலையில போனா சாயந்திரம் வரை சும்மாவே இருக்கணுமேன்னு பாக்குறியா" என்றேன்.
ஆமாம் சார் என்றான்.
அப்படீன்னா நீ வர வேண்டாம் நான் பஸ்ஸில போறேன் என்று கூறிவிட்டேன்.
புதனும் வந்தது. காலையில் 9 மணிக்கு வீட்டில் இருந்து கிளம்ப தயாரானேன். அந்த சமயம் என் பெயரன் பொன்னப்பன் என்னருகே வந்து ," தாத்தா...... எஙக போற..... எனக்கு ஸ்கூளுக்கு போணும்லா .....நீ தான் கொண்டு விடணும்....." சொன்னான். மூன்று வயதுப் பேரனவன். அவன் சொல்லை மீறும் மனம் ஏனோ என்னிடம் இல்லை.
நான் காத்திருந்து 9.30-க்கு அவனை அவன் ஸ்கூள் என்று சொல்லும் அடுத்த தெருவில் இருக்கும் ஒரு வீட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டு அவனிடம் டாட்டா.....பை..பை.. என்று சொல்லி விடைபெற்றேன்.
அங்கிருந்து தெற்கு நோக்கிச் செல்லும் குறுஞ்சாலை வழியாய் நடந்து கேம்ப் ரோடில் கிழக்கு நோக்கி நடக்க ஆரம்பித்தேன். பஸ் நிறுத்துமிடம் வந்தது. பத்து நிமிட காத்திருத்தலுக்குப் பின்பு கூட்டமில்லா பஸ் வந்ததால் அதில் ஏறினேன்.
நான் ஏறின பஸ் தாழக்குடி பஸ்....... மூன்று ருபாய் கொடுத்து பஸ் ஸ்டேண்ட்-க்கு டிக்கட் கேட்டேன். ஒரு ருபாய் கூடுதலாகக் கேட்ட கண்டக்டரிடம் நாலு ருபாய் டிக்கட்டை வாங்கி அதனை சுருட்டி என் கைவிரலில் மோதிரத்தில் சொருகி வைத்துக் கொண்டேன்.
பஸ் மீனாட்சிபுரம் வந்ததும் பஸ் நிற்பதற்கு முன்னால் அடிச்சுப் பிடுச்சு எல்லோரும் இறங்குவதைப் பார்த்துக் கொண்டிருந்த என்னை என் மனம் எச்சரித்தது.' உனக்கு வயசாய் விட்டது..... அவசரப்பட்டு இறங்கி எதையாம் வாங்கிப் புடிச்சிராதே....'.
கடுக்கரை பஸ் வந்தது........நான் ஏறவேண்டிய பஸ் காட்டுப்புதுர் பஸ் வரவில்லை. திடல் பஸ் நின்றது. அதில் ஏறலாமே என அதில் ஏறினேன்......அந்த பஸ்ஸில் இருந்த பழைய பள்ளித்தோழன் இது இப்ப தெள்ளாந்திக்குல்லா போகும்.....கடுகரைக்குப் போகாதே என்றான்.
என் பக்கத்தில் இருந்த ஒரு மாணவத் தோற்றத்தில் இருந்த ஒரு இளைஞன்," இல்ல..இல்ல.....இது திடலுக்குத்தான் போகும்"
முன்பக்கத்து போர்டில் 'திடல்' எனவும் பின்பக்கத்தில் 'தெள்ளாந்தி' எனவும் இருந்ததால் உள்ள குழப்பம்.
நான் பஸ்ஸில் இருந்து கொண்டே வெளியே பார்த்துக் கொண்டே இருந்தேன். அப்போது 4 G V காட்டுப்புதுர் வந்து கொண்டிருந்தது.
நான் உடனே பஸ்ஸை விட்டே இறங்கி காட்டுப்புதுர் பஸ்சில் ஏறுவதற்கு தயாராய் நின்றேன். போர்டைப் பார்த்தால் அதில் வழி பெருந்தலைக்காடு என்று இருந்தது....கடுக்கரை என அதில் போடாததால் பக்கத்தில் நின்ற ஓட்டுனரிடம் போய்க் கேட்டேன்," இது கடுக்கரைக்குப் போகுமா ?" போகாது என்றான்.
அப்படியே நடந்து போகும்போது ஒரு பஸ் யாருமே இல்லாமல் அனாதையாய் நின்று கொண்டிருந்தது. முன் பக்கமும் பின் பக்கமும் போய் அறிவிப்பு பலகையைப் பார்த்தேன். 'கடம்படிவிளாகம்' ..... நான் ஏறப் போனேன்...அதே சமயத்தில் அந்த பஸ் ட்ரைவர் வந்து அதில் ஏறினார்...... அவர் என்னைப் பார்த்து உங்களுக்கு எங்கே போகணும் எனக் கேட்டார். கடுக்கரை என்றதும் சரி ஏறுங்கோ என்றார்.

அந்த பஸ் புதியதாக விட்ட பஸ்......கடுக்கரை வழியாய் போகும் என்று தெரியாததால் அதில் கடுக்கரைக்குப் போகவெண்டிய யாருமே ஏற முற்படவில்லை.

அதில் வழி கடுக்கரை என போடாததால் பலருக்கும் குழப்பமே ஏற்பட்டது.

கடுக்கரை வந்தது. நான் அடுத்த ஸ்டாப்பில் தான் இறங்கணும்..... கண்டக்டர் ஏதாவது சொல்வாரோ...... சொன்னால் என்ன ஒரு டிக்கட் எடுக்கணும்.... என நினைத்துக் கொண்டிருக்கும்போதே நையினார் தோப்பு வந்தது. நான் அந்த இடத்தில் இறங்கினேன்.
நடந்து கீழக்கோவில் அருகே வந்தேன். அப்போது நான் முதலில் ஏறி இறங்கிய திடல் பஸ் வந்தது.

நான் பயணம் செய்த பஸ் ....... மிக ஏழ்மையான நிலையில் இருந்தது......தகர டப்பாக்களின் சப்தமே ஒரு கர்ண கொடூரமான இசையை இசைத்துக் கொண்டே இருந்தது.

நல்ல தரமான வண்டியே கிடையாதா.......

ராஜேந்திரன் வீட்டிற்கு வந்ததும் மணியைப் பார்த்தேன்.......மணி மதியம் 12.

Monday, June 25, 2012

துண்டுப் பிரசுரத்தில் படித்தது.

என் வீட்டில் யாரும் படிக்காமல் போன ஒரு சின்ன பிரசுரம் என் கண்ணில் பட்ட்து படித்தேன். பிடித்திருந்தது. அதனை அப்படியே எழுதுகிறேன்.
ஹிந்து மதம் என்று தற்காலத்தில் அழைக்கப்படும் ஸநாதன தர்மத்தில் ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்நாளில் ஆற்ற வேண்டிய கடமைகள் யாவை என்று ரிஷிகளும் முனிவர்களும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரேயே மந்திர ரூபமாக சொல்லியிருக்கிறார்கள்.
காலதேச வர்த்தமானத்தை ஒட்டியும் குல அறத்தை அனுசரித்தும் குறைந்தது நாற்பது ஸம்ஸ்காரங்கள் வரையறுக்கப்பட்டிருக்கின்றன நாம் செய்யும் கர்மாவினால் நமது உடல் புனிதப்பட்டு ஆத்ம ஞானத்திற்கு உரியதாக ஆகுமாயின் அந்த கர்மாவை ஸம்ஸ்காரம் என்று சொல்ல்லாம்.
 நாற்பது தெய்வீக கர்மாக்களில் விவாஹம் செய்து கொள்வது என்பது முக்கியமான ஒன்றாகும். வெறும் புலன் இன்பத்திற்கும், லௌகீக சௌக்கியங்களுக்கும் மட்டுமல்லாது மனிதராய்ப் பிறவியெடுத்த பயனை அடைவதற்காக நாம் ஆற்ற வேண்டிய கடமைகளாக கர்பதானம் ,சீமந்தம், குழந்தைக்கு பெய்ர் சூட்டுதல்,வித்யாரம்பம் போன்ற பல சம்ஸ்காரங்களுக்கும் திருமணம் தான் அடிப்படை என்பது சொல்லாமலேயே விளங்கும்.
வி-வாஹம் என்ற சொல்லிற்கு சிறப்பாக வளர்வது என்று பொருள். மனைவி என்பவள் புருஷனில் பாதி(அர்த்தநாரி) கணவனுடைய மிக நெருங்கிய சிநேகிதி.
தருமம்  செய்வது, பொருள் ஈட்டுவது, மகிழ்ச்சியாக இருப்பது ஆகியவற்றிற்கு அவளே ஆதாரம்.
பத்நியின் கர்ப்பத்தில் இருந்து பிறக்கும் குழந்தையைப் புத்ரன் அல்லது புத்ரி என்று சொல்கிறோம். ஆகவே அத்தகைய குழந்தையைப் பெற்றவளை தாயைப்போல் பாவிக்க வேண்டும்.
இந்த் துண்டு பிரசுரமான  இடம் ஒரு திருமண மண்டபம் 2010 மே மாதம் 23-ஆம் தேதி.

Friday, June 22, 2012

நான் கட்ட சைக்கிளில் ஓட்டிப் படித்த அந்த நாள்

சின்ன வயதில் என்னைத் தவிர என் சக தோழர்கள் எல்லோருக்குமே சைக்கிள் ஓட்டத்தெரியும்.எங்கள் ஊரில் இரண்டு சைக்கிள் கடைகள் உண்டு. ஒரு மணிக்கூருக்கு ஒரணா. இரவு முழுவதும் வண்டி வேண்டுமானாலும் எடுக்கலாம். அதற்கு வாடகை எட்டணா.அந்த சைக்கிள் கட்ட சைக்கிள். சிறுவர்களுக்கு என பிரத்தியேகமாக வடிவமைக்கப் பட்டிருக்கும்....

சைக்கிள் ஓட்ட படிக்கவும் அதனை எடுப்பதுண்டு.  சைக்கிள் ஓட்டப்படிப்பவன் இன்னொருவன் துணை கொண்டு சைக்கிள் படிப்பதைப் பார்த்திருக்கிறேன்... புதியதாய் ஓட்டும் போது சமநிலை தவறும். முதுகு இடமும் வடமும் வளைந்து வளைந்து வண்டி கீழே விழுவது போன்ற நிலையில் வண்டி உருண்டோடும்..... சைக்கிள் கீழே விழாமல் பிடித்துக் கொள்வான் பின்னால் ஓடி ஓடிச் செல்பவன்..... முதுகு வளைவதைப் பார்த்ததும் பின்னால் வருவானே ஒருவன்.....அவன் முதுகில் ஓங்கி அடிப்பான்.  விதியே என்று அடிபட்டவன் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருப்பான்...... சில சமயத்தில் அடி பலமானால் சண்டை மூழ்வதும் உண்டு.......

இறக்கத்தில் வண்டி வேக வேக மாய் உருண்டோடும்போது கைகள் பிரேக்கை பிடிக்காமலும் கால்கள் பெடல்மீது இல்லாமலும் தாறுமாறாய் ஓடி கீழே விழுந்து உடம்பில் பல இடங்களில் அடிபட்டு இரத்தக் காயங்களுடன் வீட்டிற்குப்போய் அவஸ்தைப் பட்ட தோழர்கள் பலர் உண்டு. சொன்னால் அடி கிடைக்கும் . காலுக்கு மருந்து போடும்போது அம்மையோ அப்பாவோ பார்த்து விட்டால் அவ்வளவுதான் . ஏற்கனவே உள்ள வேதனையுடன் அவர்கள் தரும் வேதனையும் கூடும். ...

எனக்கும் சைக்கிள் படிக்க ஆசை...... அம்மயிடம் பொய் சொல்லி ஒரணா வாங்கி சைக்கிள் கடையில் போய் ஒரு மணிக்கூருக்கு சைக்கிள் வாடகைக்கு கேட்டேன். அவன் தர மறுத்தான். தந்தால் எனது அப்பா அவனைத் திட்டி விடுவார் என்ற பயமே காரணம். சைக்கிள் படிக்கணுமே என்ன செய்ய......

இன்னொரு பையனிடம் அணாவைக் கொடுத்து சைக்கிள் வாங்கி வரச் சொல்லி அதில் நான் சைக்கிள் ஓட்டிப் படித்தேன். என் முதுகும் வளைந்தது....அடி விழுமோ என நான் நினைத்தேன்..... ஆனால் அடி விழவில்லை. அன்பாக சொல்லித்தந்தான்...... ஓரளவு படித்துவிட்டேன்.

ஒருவன் சொன்னான் .பௌர்ணமி இரவில் ஒருநாள் வாடகைக்கு எடுத்து படி....என்றான்.
அம்மையிடம் கேட்டேன். சம்மதிக்கவில்லை..... கீழ விழுந்து கைய கால முறிச்சிராதே என்று சொல்லி தடுத்தாள்...... கோபம் எனக்கும் வந்தது. நேரே என் அப்பாட்ட போய் எனக்கு சைக்கிள் படிக்கணும். சைக்கிள் வாடகைக்கு எடுக்க பைசா எட்டு அணா கேட்டேன்.
உனக்கு சைக்கிள் தானே வேணும்...... நான் உனக்கு சைக்கிள் சொல்லித்தர  ஒரு ஆளையும் ஏற்பாடு பண்ணுகிறேன் என்று சொன்னா.

இரவு சைக்கிள் எங்க வீட்டுக் களத்துக்கே வந்தது. சைக்கிள் ஓட்டிப் படித்தேன்....கண் துஞ்சாமல் பயிற்சி எடுத்தேன். வெளியே ஓட்டவில்லை. களத்தினுள்ளேயே ஓட்டினேன். நான் தூங்கப் போகும்போதுதான் எனது அப்பாவும் தூங்குவதற்காக உள்ளே சென்றார்.

எல்லா பையன்களும் சேர்ந்து தடிக்காரங்கோணம் சைக்கிளில் பயணம் செய்தது இன்றும் என் நினைவில் இருக்கிறது.

எனது சின்னப்பாவிடம் Humber சைக்கிள் ஒன்று உண்டு. அதனை யாரும் தொடக்கூடமுடியாது... ஆனால் என்னிடம் ஒட்டும்படி பலதடவை சைக்கிளை தந்தது உண்டு.

கல்லூரியில் வேலைகிடைத்த உடன் ரேலி சைக்கிள் வாங்கினேன்.
காமராஜர் மறைந்த நாளன்று நாகர்கோவிலில் இருந்து சைக்கிளிலேயே கடுக்கரைக்கு நானும் சாஸ்தாங்குட்டியும் போனோம். காரணம் அன்று பஸ் போவது நின்று விட்டது.




Wednesday, June 20, 2012

குப்பையில் வீழ்ந்தபின் எழுந்து வளர்ந்த சிசு




இந்துக் கல்லூரி வரலாறு எழுதுவதற்கு நான் முற்பட்டபோதே பல முன்னாள் ஆசிரியர்கள் , கல்லூரியின் பால் ஈடுபாடு கொண்ட ஒரு சிலரை சந்திக்க ஆசைப்பட்டு சந்தித்துக் கொண்டிருந்த வேளையில் ஒரு முக்கியமான பெரியவரை சந்திக்கும் வாய்ப்பு அண்மையில் கிடைத்தது. அந்த நேரத்தில் என் கட்டுரை
எழுத்துப் பணி முடிவடைந்து ஒரு கட்டுரைவடிவாக்க முயற்சி நடந்து கொண்டிருந்தது. ஆனாலும் அவரை சந்திக்க ஒரு நாள் மாலை நேரத்து 8 மணிக்கு ஒரு நண்பருடன் சென்றேன். நான் யாரை சந்திக்கப் போனேன் ..? ஒரு சுவராஸ்யம் கருதி இந்த வரிகளின் கடைசி வரியாய் அந்தப் பெயர் இருக்கட்டுமே என நான் நினைத்தேன். அதனால் அந்தப் பெரியவரின் பெயரை உடன்தானே  தொடர்ந்து  எழுதவில்லை.
நேரடியாகவே அவரிடம் கேட்டேன். பல கேள்விகள் கேட்டேன். சற்று விளக்கமாகவும் தெளிவாகவும் பதில் கிடைத்தது. ஏற்கனவே பல விசயங்கள் எனக்குத் தெரிந்திருந்தது. ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டதில் திருப்தியும் அடைந்தேன்.
அந்தப் பெரியவர் ,” என் அப்பாவினது பிறப்பு பற்றி ஏதாவது கேள்விப் பட்டிருக்கிறாயா?......” எனக் கேட்டார். இல்லையென்றேன். அது ஒரு அதிசயமான செய்தி……,இதுவரை கதையிலும் படித்ததில்லை…….கேள்விப்பட்டதும் இல்லை……
அவர் சொன்ன செய்தி:
எனது அப்பா பிறந்த கதை ………என் அப்பாவைப் பெற்ற ஆச்சி பிரசவ நேரம் நெருங்கும் வேளையில் மிகக் கொடிய நோயினால் பாதிக்கப்பட்டாள். நோய் அவளை வாட்டியது. அதிக மருத்துவ நுட்பம் இல்லாத காலம். நோயின் வலியிலும் பிரசவவலியிலும் துடித்த அவள் அமைதியானாள். சப்தம் இல்லை. சிசுவும் பிறக்கிறது. சிசுவிடமும் ஒரு சின்ன சப்தமும் இல்லை. கூடியிருந்தவர்கள் தாமாகவே ஒரு முடிவுக்கு வருகிறார்கள். தாயும் பிள்ளையும் செத்துப் போனதாக நினைத்து பிறந்த சிசுவை வீட்டின் பின்புறக் குண்டினில் கொண்டு போட்டு விட்டு வந்தார்கள்.
அப்பொழுது மருத்துவம் பார்க்கும் பெண் வீட்டுக்கு வந்து குழந்தை பெற்றவளைத் தொட்டுப் பார்த்து உயிர் இப்போதான் போச்சு என்றாள். சிசுவை எங்கே என்று கேட்க அவர்கள் சொன்னதைக் கேட்டு அதிற்சியடைந்து அவளே ஓடிப் போய் குப்பையில் கிடந்த குழந்தையை எடுத்து வந்தாள்.
அந்தக் குழந்தை சிறிது நேரத்தில் அழ ஆரம்பித்தது……….. தாய் ஓய்வில்….. சேய் அழுததை பார்த்தவர்கள் அழவா….. சிரிக்கவா……….. இதுவும் விதியோ.
அந்த சிசு யார்? 
என்னிடம் பேசிக்கொண்டிருந்தவர் திரு.B.வள்ளிநாயகம் பிள்ளை.
அவரது தந்தை வடிவீஸ்வரம் புத்தன் வீட்டு செல்லையாபிள்ளை பாட்டா. இந்துக் கல்லூரி உருவாக, அரும்பாடுபட்ட பூதலிங்கம்பிள்ளை….. பூப்போன்ற மனம் கொண்ட அவர் அன்று சருகாய் போகாமல் இருந்தது இந்துக் கல்லூரி உருவாவதற்கே…….

Sunday, June 17, 2012

திருமணச் சடங்கு


ஜனுவரி மாதம் 8-ஆம் தேதி யன்று காலையில் திருநெல்வேலிக்கு ராமகிருஷ்ணனுடன் போவதற்காக அவரது வீட்டுக்கு ஜெயராமன் கார் ஓட்ட நான் போனேன். அன்று ம.சு.பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா. டாக்டர் பட்டம் பெறுவதற்காக ராமகிருஷ்ணனும் அதனைக் காண்பதற்காக நானும் போனோம். மகனை வழி அனுப்புவதற்காக அவர் அம்மையும் அப்பாவும் வெளியே வந்தார்கள். எனது பள்ளி ஆசிரியரவர்.
நான் எனது ஆசிரியரிடம்,” நீங்க இருவரும் வரலாமே…..” கேட்டேன்.
“எனக்கு கண் சரியாகத் தெரியாது…. நடப்பதற்கும் சற்று சிரமம்…..” என்றார். அவர் சொல்லி முடிப்பதற்குள் அருகில் நின்ற ராமகிருஷ்ணனின் அம்மை, ”நீங்க போறீங்கள்ளா……. அது நாங்க போறது மாதிரிதான்…” இந்த சொல் என்ன மந்திரச் சொல்லா…… அது என்னை என்னவோ செய்தது…உடம்பினுள்ளேயே ஒரு இரசாயன மாற்றம் ஏற்படுவது போன்ற உணர்வு.
”திருமணச் சடங்கு சம்பந்தமாக எனக்கு சில தகவல்கள் தேவைப்படுகிறது. அதனை அறிய ஒருநாள் நான் வருவேன் “ என்று ஆசிரியரிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினோம்………..
சொன்னபடி பல தடவை போக முயன்றும் தடங்கல்கள் ஏற்பட்டுக் கொண்டே இருந்தது. 15-06-2012 வருவேன் என்று சொல்லிவிட்டுதான் போனேன். ஆனால் ராமகிருஷ்ணன் வீட்டில் இல்லை. எனக்கு வீட்டிற்குள் போய் சாரைப் பாக்கவா அல்லது திரும்பவா என யோசித்துக் கொண்டிருக்கும்போதே சார் என்னை உள்ளே அழைத்து விட்டார்.
என் சந்தேகங்களைக் கேட்க ஆரம்பித்தேன்.
இப்பொழுது பெண்ணைப் பெற்றவர்கள் வரன் தேடி அலைகிறார்கள். முன்காலங்களில் அப்படி இல்லை. பையனின் பெற்றோர்கள் தான் பெண் பார்க்க பெண் வீட்டுக்குப் போய் தன் மகன்களுக்கு பெண் கேட்பார்கள்.
பையன்கள் வீட்டிலும் திருமணம் நடப்பதுண்டு…… பையன் வீட்டார் பொன்னாபரணங்கள் செய்து பெண்ணுக்கு கொடுப்பதுண்டு.
திருமண தினத்தன்று மாப்பிள்ளை பெண் கையில் மஞ்சள் கயிறு கட்டுகிறார்களே……அது ஏன்? மாப்பிள்ளை யார்? பொண்ணு யார் என அடையாளம் காட்டுவதற்காகவா…?
அவ்வாறு கட்டுவதை காப்புக் கட்டு என்பார்கள்….. காப்பு என்பது பாதுகாப்பு…… துர் ஆவிகளும் எந்த விதமான ஏவல்களும் புதுமணத்தம்பதிகளை தாக்காமல் பாதுகாக்க, பாதுகாப்புக்கு அவர்கள் கையில் காப்பு கட்டுவார்கள். அது இன்றும் நடைமுறையில் இருக்கிறதே…….
நாலாம் நீர்ச் சடங்கு பற்றி கேட்டேன்.  ஏழு நாட்கள் திருமண விழா முந்நாட்களில் நடக்கும் .நான்காம் நாள் நடக்கும் ஒரு சிறிய சடங்கு தான். சுத்தமாக இருக்கவே குளிக்கும் சடங்கு அது. பின் நலுங்கு விளையாட்டு……
பப்படம் பொடித்து தலையில் போடுவது திருஷ்டி போக என்கிறார்கள்.
காலில் தண்டை போடுவது பற்றியும் சொன்னார்.
தண்டை என்பது தடை என்ற சொல்லில் இருந்து வந்தது…. பூண்டு…. பூடு ஆனது போல..
பெண்ணுக்கு வெளியே போகத்தடை….. நடந்துவரும் பெண்ணின் காலில் தண்டை இருந்தால் எதிரே ஆண்கள் வரத் தடை …….ஒதுங்கி நிற்க வேண்டும்……
ஏழாம் நீர்ச் சடங்கு என்றால் என்ன..? சரியாக தகவல் இல்லை. ஏழு நாட்கள் திருமணம் நடக்கும் அல்லவா ! அந்த ஏழாம் நாள் திருமணநாளில் கயிற்றில் கட்டிய பொன் தாலியை தங்கச் செயினில் கொருப்பார்கள். மஞ்சள் நீர் விளையாட்டு என ஒன்று உண்டு. அத்தான் மைத்துனன் மீதும் கொழுந்தி மீதும் மஞ்சள் நீரை விரட்டி விரட்டி கொட்டுவார்கள். அதெல்லாம் இப்போ இல்லை
 அதன் பிறகு வந்திருந்த விருந்தினர்கள் தத்தமது வீட்டுக்கு கிளம்புவார்களாம்.

Friday, June 15, 2012

கவிமணியின் கடைசிக் கவிதை

இன்று மாலையில் திரு குமாரசாமி அவர்களை சந்திக்கும்போது அவர் கையில் கிழிந்தும் நைந்தும் போன மஞ்சள் நிற பேப்பர் ஒன்று கையில் இருந்ததைக் கண்டேன் .
இது என்னது என நான் கேட்கும் முன்னமே காந்திநாதன் இது ஒரு பத்திரிகை ....பழைய பத்திரிகை என்று கூறவே அதனை நான் வாங்கிப் படிக்க ஆரம்பித்தேன் .
அந்த பத்திரிகை ஆரம்பித்த ஆண்டு 1874 என்று அறிந்து கொண்டேன் .
இந்தியாவில் வெளியான ஆறாவது தமிழ் பத்திரிகை .
ஆசிரியர் : D .C .ஜோசப் .
திருவிதாங்கூர் கொச்சி யில் வெளியான முதல் தமிழ் தினசரி .
நாகர்கோவிலில் இருந்து வெளியான பத்திரிகை .

பத்திரிகையின் பெயர் தியாக நாடு. முதல் பக்கத்தில் பத்திரிகையின் பெயரான
தியாக நாடு வின் இரு பக்கத்திலும் தாமரை மலர் இடம் பெற்றிருந்தது .

நான் பார்த்த பத்திரிகை வெளியான தேதி 15-8-1953.
சுதந்திர தினத்தன்று வெளியான பத்திரிகையில் " சுதந்திரம் " என்ற தலைப்பில்
கவிதை ஒன்று இருந்தது.

                                                          வெண்பா  

நாடும் நகரும் நகர்ப்புறமும் நன்றாக
வீடும் குடியும் விளக்குமுறப்- பாடுபட்டுப்
பெற்ற சுதந்திரத்தைப் பேணி வளர்ப்பதுவே
கற்ற பெரியோர் கடன் ....
                                                         வேறு   


ஆக்கம்  வேண்டுமெனில் - நன்மை 
       அடைய வேண்டுமெனில் 
ஊக்கம் வேண்டுமப்பா -ஓயா
  துழைக்க வேண்டுமப்பா  .


நெற்றியின் வியர்வை -நிதமும் 
    நிலத்தில் வீழ்ந்திடிலே 
வற்றி வாடாமல் -சுதந்திரம் 
  வளர்ந்து வருமப்பா . 


இதனை எழுதியது யார் தெரியுமா? கவிமணி தேசிக விநாயகன் என அச்சாயிருந்தது .  ஆம் கவிமணி தேசிகவினாயகம் பிள்ளைப் பாட்டா தான் .
இதுதான் அவர் எழுதிய கடைசிக் கவிதை என அந்தப் பத்திரிகையை 
வைத்திருந்த குமாரசுவாமி அவர்கள் சொன்னார். மேலும் அவர் சொன்னார்,:" படுக்கையில் இருந்த கவிமணி சொல்ல குமாரசாமி  எழுதினாராம். 
இந்தத் தகவலைத் தந்த தினத்தந்தி குமாரசாமிக்கு என் அன்பு கலந்த நன்றி.
கவிமணி ஆண்டு:1876-1954.
பிறந்த நாள் :27-7-1876
மணி ஒலி நின்ற நாள்:26-9-1954  



Tuesday, June 12, 2012

தெ.தி.இந்து கல்வியல் கல்லூரியை நிறுவியவர்





கொஞ்ச நாட்களாக ஒன்றுமே எழுதுவதில்லையே ஏன்…? என் மகன் என்னை வாஞ்சையோடு அழைத்துக் கேட்டான்…. எழுத வேண்டும் என்று ஆசைதான்….. என்ன எழுத…….எழுதுவதற்கு எதுவும் இல்லையே…? அனுபவங்களை யல்லவா எழுத வேண்டும்……? 


வீட்டில் அடைந்து கிடந்தால் எப்படி அனுபவம் கிடைக்கும். எனக்கே சற்று மனம் வருந்துகிறதோ எனத் தோன்றியது…….இல்லை…இல்லவே இல்லை…….


வீட்டில் கூடுதல் நேரம் இருந்தேன். ஆனால் எழுதிக் கொண்டே இருந்தேன். ஆம் சத்தியமாய் எழுதிக் கொண்டுதான் இருந்தேன். என்னை ஆளாக்கிய என் தாய்..... கல்லூரி.... இந்துக் கல்லூரி....அதன் வரலாறு எழுத முற்பட்டேன். அதனால் சற்று இடைவெளி.......


 நான் என் அன்னையை தந்தையைப் பற்றியெல்லாம் எழுதி விட்டேன். என்னை இன்று ஒரு மனிதனாய் உலவ வைக்கக் காரணமான என் தாய் போன்ற கல்லூரியைப் பற்றி உருப்படியான வரலாறு எழுத வேண்டாமா.


அதன் அறுபது ஆண்டுகால வளர்ச்சியான வரலாறை எழுத நினைத்து எழுத ஆரம்பித்தேன். முதலில் கல்லூரியின் எல்லா ஆண்டுமலர்களும் வேண்டும். அனைத்தும் கிடைத்தன. நான் இக்கல்லூரியின் மாணவன்…ஆசிரியன்….. ஆனாலும் என்னிடம் எதுவும் இல்லை.ஆனால் மற்றவர்களிடம், நண்பர்களிடம் இருக்கும் என எதிர்பார்த்தேன். 


ஆனால் அனைவரும் என்னைப் போலவே இருந்ததில் எனக்கும்
மகிழ்ச்சிதான்…..

முன்னாள் பேராசிரியர்… ஒரு மலையாள ஆசிரியர்…..அவர் இன்று உயிரோடில்லை….ஆனால் பொக்கிசமாக போற்றி வைத்திருந்த ஆரம்பகால ஆண்டுமலர்கள் அனைனத்தினையும் என் வேண்டுகோளை யேற்று டாக்டர் ராமகிருஷ்ணகுரூப் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்கி பேராசிரியரின் மனைவி திரும்பத் தந்துவிட வேண்டும் என்ற நிபந்தனையுடன் தந்து 
உதவினார்கள். எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை.
அந்தப் பேராசிரியர் திரு. உன்னிகிருஷ்ணன் அவர்கள். அவர் குடும்பம் திருவனந்தபுரத்தில் ..........
சுருக்கமான வரலாறு ஒன்றினை இன்று எழுதி முடித்தேன்……தகவல்கள் கிடைத்தாலும் கணினிதானே…. எந்த இடத்தில் நுழைக்க முடியுமோ அந்த இடத்தில் சேர்த்து விடலாம்…..
கல்லூரியில் இடம் இல்லை என்ற சொல்லுக்கே இனி இடம் இல்லை என்பது போல் இந்துக் கல்லூரி உதயமான ஆண்டு 1952. இன்று 2012.

வயதான ஒருவர் தனது தோட்டத்தில் தென்னங்கன்று ஒன்றை நட்டுக் கொண்டிருந்தார். அவரது பேரன் அவரது அருகில் சென்று, “தாத்தா….தாத்தா… இந்த கடும் வெயிலில் ஏந்தாத்தா கஷ்டப் பட்டு இதனை நடுகிறாய்……உனக்கு அதனால் என்ன பயன் கிடைத்து விடப் போகிறது…… வா..வா…. எழுந்திரு “ எனக் கூறி அழைத்தான்.
பெரியவர் வேலையை முடித்துவிட்டு பேரனிடம் பேசினார்.
“ அதோ தென்னை மரங்கள் காய்களை தந்து கொண்டிருக்கிறதே……… அது யார் வைத்தது தெரியுமா….? என் தாத்தா வைத்தது…….அன்று நானும் இதே மாதிரி சொல்லி அவரும் கன்றுகளை நடவாமல் இருந்தால்……… யோசித்துப் பார்…….. “
இலங்கத்து வேலாயுதம் பிள்ளையும், வடிவீஸ்வரம் செல்லையா பிள்ளை பாட்டாவும் கவிமணிப் பாட்டாவின் ஆசியுடன் அந்த வயதான பருவ காலத்தில் நடந்தும், காளை,குதிரை வண்டியிலும், காரிலும் வெயிலில் அலைந்து திரிந்து கஷ்டப் பட்டு உழைத்து உருவாக்கிய கல்லூரியால் எத்தனை எத்தனை பேரன்கள் உள் நாட்டிலும், வெளிநாட்டிலும் நிம்மதியாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நினைப்பதற்கே இனிப்பாக இருக்கிறது.
மாணவனாய் பார்த்த கல்லூரி……..ஆசிரியனாய் வாழ்வித்த கல்லூரி…… ஓய்வுற்றபோதும் இதம் தந்த கல்லூரி……..இயக்குநர் குழு உறுப்பினரான பெருமையைத் தந்த கல்லூரி…..எல்லாமே பிரமிப்பாய் இருக்கிறது. அன்று மரங்களின் எண்ணிக்கை கூடுதலாக இருந்தது. இன்று கட்டிட அறைகளின் எண்ணிக்கை கூடுதலாக இருக்கிறது.  தேசிக விநாயகர் படைத்த அன்னை பூமி…… அந்த பூமித்தாய்க்கு இந்துக் கல்லூரி என்றொரு சேய். 2008-ல் கல்வியல் கல்லூரி என இன்னோரு சேயும் பூமிதாய்க்கு கிடைத்தது…….. ஒரே வளாகத்தில் இரு கல்லூரிகள். காலம் காலமாய் மாணவர்களுக்கு ஒளி விளக்காய் வழி காட்டிக் கொண்டிருக்கும் கல்லூரி அமைத்தவர்களை என்றும் நினைவு கொள்வோம்.

இந்துக் கல்லூரியை நிறுவிய தலைவர் திரு வேலாயுதன் பிள்ளை…. இன்று புதியதாகப் பிறந்த கல்லூரியை நிறுவிய தலைவர் கடுக்கரை ராசப்பன் என்ற பொ.ஆறுமுகம்பிள்ளை.
கல்லூரி ……..எனது தாய்……….தினமும் போற்றி வணங்குவேன்……வைரவிழா ஆண்டு 2012-13.