Thursday, October 11, 2012

நான் பார்த்த வெள்ளைநிற கப்.

பெங்களூருக்கு பஸ்ஸில் தான் கொஞ்ச நாட்களாக போய் வந்து கொண்டிருந்தேன்.
எனக்கு பஸ்ஸில் போவதில் சில சிரமங்களை எதிர் கொள்ள வேண்டியதிருக்கும். இந்தத் தடவை நான் தனியாகப் போவதால் ரயிலில் பயணம் செய்யத் திட்டமிட்டேன்.
 ரயில் பயணம் சற்று சிரமம் கூடுதல். கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரம் வழியாக பெங்களூர் செல்லும் ரயில் பயண தூரமும் நேரமும் அதிகம். வாரத்திற்கு ஒரு ரயில் நாகர்கோவிலில் இருந்து ஓசூர் வழியாக பெங்களூர் ரயில் புறப்படும் நேரமும் வந்து சேரும் நேரமும் மனதுக்கு ஒத்துவராத நேரம்.

நாகர்கோவிலில் இருந்து மும்பை செல்லும் ரயில் கிருஷ்ணராஜபுரம் வழியாகவே செல்லும். அதனை அடுத்து பக்கத்தில் உள்ள பெங்களூர் வழியாகப் போவதில்லை. நான் போக வேண்டிய இடம் கஸ்தூரிநகர். கிருஷ்ணராஜபுரம் என்ற கேயார்புரம் பக்கம் உள்ள்து.

அதனால் நான் 10-10-12 அன்று காலை 6.30 மணிக்குப் புறப்படும் ரயிலில் பயணமானேன்.
நான் இருந்த ரயில் பெட்டி என்னை சுதந்திரம் கிடைக்காத காலத்துக்கு என் நினைவலைகளை அனுப்பியது. அந்தப் பெட்டி கலக்டர் ஆஷ் பயணம் செய்த ரயிலில் உள்ளதாக இருக்குமோ. பழமையும் புதுமையும் கலந்த கலவையாக இருந்தது கண்டேன். அபாயச் சங்கிலியை இழுத்தால் 250 ருபாய் அபராதம் அல்லது  மூன்று மாதம் சிறைத்தண்டனை என்று இருந்த காலத்தில் உருவானது.  இப்பொழுது 1000 ருபாய் அல்லது 12 மாதம். வள்ளியூர் செல்வதுவரை second AC A1-44 UB berth -உடன் நான் வெறுப்பாகவே இருந்தேன்.
 தலையணை, கம்ப்ளி தந்தான்.அழகாய் இருந்தது. வெள்ளைநிற போர்வையும் மனதுக்குப் பிடித்தாய் இருந்தது.

காப்பி வாங்கிக் குடித்தேன்.அந்தக் கப் மிக அழகாய் இருந்தது. வெளியில் 15 ருபாய் கொடுத்துக்  காப்பி குடிப்பவன் இந்த அஞ்சு ருபாய்க் காப்பியைக் குறைசொன்னால் அது மிக அநியாயம்.

 என்னை நசுக்கிக் கொண்டுபோய்க் குப்பைத்தொட்டியில் போடு என்ற எழுத்து அந்தக் கப்பை மீண்டும் பார்க்கத் தூண்டியது.ECO-FRIENDLY CUPS,    SERVICE WITH SMILE. இந்த வாசகம் ஆங்கிலத்தில் இருந்ததால் தமிழ் மாத்திரமே தெரிந்தவர்கள் என்ன செய்வார்கள். அவர்களுக்கு அறிவுரை தேவையில்லை.

கப்பின் மேல் விளும்பு வட்டத்தில் ஒன்பது நீல நட்சத்திரங்கள் இருந்தன.150 ml 1170 ml  வரை தான் அதன் கொள்ளளவு. வட்டத்திற்குள் இந்திய ரயிலின் படம் 9+1 நட்சத்திரத்துடனும் பாரத சின்னத்துடனும் ..... அந்த கப் பற்றிய ஆராய்ச்சி என்னை மெதுவாக என் வெறுப்புணர்வை மாற்றியது. திரு நெல்வேலி வரை  நான் மட்டுமே விகடன்,தினத்தந்தி  துணையுடன்  பயணம் செய்தேன்.

DTR வந்தார்..... அவர் பெயர்........ வேண்டாம் அவர் அனுமதி இல்லாமல் எழுதுவது நாகரீகமற்ற செயல். அவரிடம் பேசினேன். இந்த  COACH  ரொம்ப மோசமாக இருக்கே என்று நான் சொன்னேன். பத்து வருடம் முடிந்து காலாவதியானாலும் கூடுதல் பத்து வருடங்கள் ஒவ்வொரு பாகத்தையும் மாற்றி மாற்றி பயன்படுத்துவது தான் நம் நாட்டு வழக்கம்.

SERVICE TAX என்னிடம் வாங்கவில்லை. காரணம் ஒன்றாம் தேதிக்கும் முன்னமே நான் ரிசர்வ் செய்ததால். ஆனாலும் எனக்குத் தெரியணுமே. அவர் சொன்னார், “எங்களுக்கு அதற்கான அறிவுரைகள் தரப்படவில்லை” ஆனாலும் நூற்றுக்கு மூன்று ருபாய் வைத்து நான் வசூலிக்கிறேன்..

நான் கேட்டேன் அவரிடம். ‘நீங்கள் கணித மாணவரா ?”.
அவர் ஆமாம் என்றார் சற்று ஆச்சரியத்துடன்.

நான் ஒரு கணித ஆசிரியன் என்றேன். பேச்சு முடியவில்லை.அதற்குள் அவரதுப் பணிச்சுமை பேச்சினை தொடர விடவில்லை.

நான் எப்படி இப்படிப் பேசப் பழகிவிட்டேன். எல்லாம் கணினியின் செயல்.


ஒரு பயண ஆரம்பத்தின் முன்னே.....

காலையில் அஞ்சரை மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட்டுப் போகணும்னு நாலு மணிக்கே அலாரம் வைத்து எழுந்தாலும் ஆறரை மும்பை ரயிலைப் பிடிக்கப் போய் சேர்ந்த நேரம் ஆறு பத்து.

காலையில் வந்து சேர்ந்த ஏதோ ஒரு ரயில் காரணமாக  நாகர் கோயில் ரயில்நிலையம்வெளியே பரபரப்புடனும் எதிர்பார்ப்புடனும் வந்து கொண்டிருக்கும் கூட்டம் கலைந்து கரைந்துபோக சிறிது காலநேரம் கூட  அதனால் காரை நிறுத்த வேண்டிய நேரத்தில் நிறுத்தி ,நிறுத்தக் கூலி கொடுத்து முடிக்கவும் நேரம் அதிகமானது.

 பிளாட்பாரம் டிக்கட் எடுக்க நீண்டவரிசை.  ராமு  வரிசையில் போய் நின்றான். நகர்ந்து போன வரிசையின் இடையே நுழைய முற்பட்ட முகம் தெரியாத யாரையோ ஒருவன் திட்ட அவன் பரிதாபமாய்  வாரிசயின் வால் பக்கம் போய் நின்றான்.ராமு சுவர் அருகே நெருங்கிக் கிட்டே போனதும் சில்லறை இல்லையே என அதிர்ந்து ராமு பரக்க பரக்கப் பார்த்து விழியால் என்னைத் தேடினான்.

 நான் லக்கேஜை தனியே விட்டுப் போக மனமில்லாமல் சிறு தூண் போல் நின்றிருந்தேன்.  ஒருவழியாக பிளாட்பாரம் டிக்கட் எடுத்துவிட்டு வெளியேவந்தபோது மணி 6.20

“மூன்று புறப்படுப்பாதைகள்” உண்டுமே. நம்ம ரயிலில் எதில் இருந்து புறப்படும். அங்கையே டிக்கட் தந்தவரிடமே கேட்க முற்பட சுவரில் ஒட்டப்பட்டிருந்த தாள் தந்த அறிவிப்பால் அவரிடம் கேட்கவில்லை.அவரைக் கேட்டால் சொல்ல மாட்டார் என்பதனைப் புரிந்து கொண்டேன்.

கேட்டால் சொல்வதெற்கென்றே ஒருவர் இருக்கும் இடம் நோக்கிச் சென்றேன்.

 அவர் இரண்டாம் மேடையருகே  நிற்கிறது எனத் தகவல் சொன்னார்.

 படியேறி செல்லும் கடத்துப் பாதை வழியே அந்த ரயிலை அடந்து விடலாம்.ஆனால் மறுபடியும் அந்தத் திசை போகவிரும்பாமல் எதிர் திசையான தெற்கு நோக்கிச் சென்றோம்.  பரபரப்பும் படபடப்பும் மெல்ல என் உடலில் பரவ ஆரம்பித்தது.

இனிமேல் இப்படி வராமல் ஒரு மணிக்கூருக்கு முன்னால் வந்து விடணும். அது தான் safe.

 முதல் நடை மேடையின் அருகாமையில் நின்று கொண்டிருக்கும் ரயிலில்
ஏறி மறுபக்கம் இறங்கினால் நம் ரயில் தானே அங்கு நிற்கிறது.

அதில் ஏற நினக்கும் போது கூடவே பயமும்- ரயில் கிளம்பிவிட்டால் என்கிற பயம் வந்ததால் என் நடை தொடர்ந்தது. விரைவாக....இல்லை...மிக விரைவாக நடக்க என்னிடம்  ராமு சொன்னான்.”சார்! பயப்படாதீங்க சார். இந்த ரயில் ஒருநள் கூட சரியான நேரத்துக்குப் போனது கிடையாது......” ஆனாலும் என் நடையின் வேகம் குறையவில்லை.

பயந்தது போலவே கடக்க நினைத்த ரயில் மெல்ல முன்னோக்கி நகர ஆரம்பித்தது.

வால் பக்கத்துப் பெட்டியில் இருந்து மூன்றாம் பெட்டி தான் நான் ஏறவேண்டிய ரயில் பெட்டி. பெட்டியின் முகம் என் முகத்தைச் சுளிக்க வைத்தது.

வாசல்பக்கம் ஒட்டி இருந்தக் கணினித் தாள் என் இருக்கையை உறுதிப் படுத்தியது.

மணி மிகச் சரியாக 6.30. எனது ரயில் - இந்திய ரயில் உறுமிக் கொண்டே ஊர்ந்து செல்ல ஆரம்பித்தது. அது ராமுவை பார்த்துதான் உறுமியதோ .....

 

Monday, October 1, 2012

அன்பு அறிவுடன் அமைதியும் சேர்ந்தால் வாழ்க்கை வளமாகுமே.

செப்டம்பர் மாதம் 25-ஆம் தேதி நானும் என் மனைவியும் பெங்களூருக்குப் போகணும்னு தீர்மானிச்சு டிக்கட் எடுக்க நினக்கும் போதுதான் அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி நான் நாகர்கோவிலில் இருந்தாக வேண்டிய அவசியம் நினைவுக்கு வந்தது. நான் இதைச் சொல்லி பெங்களூர் போகும் தேதியை தள்ளிப் போட்டால் என் மனைவியின் மனம் வாடும். நன்றி அறிவுப்புக் கூட்டம் நடக்கும் தேதியான ஒன்றாம் தேதியை மாற்றினாலும், என்னைப் போலவே இன்னொருவர் அந்தக் கூட்டத்திற்கு வந்து போவதில் சிரமம் ஏற்படும். மனதினில் குழப்பம்.

எனக்கு ஒரு ராசி உண்டு. ரயில் பிரயாணத்தின் போது லோயர் பெர்த்தில் ரிசர்வ் பண்ணி டிக்கட் எடுத்துப் போனாலும் அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்ததில்லை. காரணம் என்னை விட வயசான பெரியவர், குழந்தை யுடன் வரும் இளம்தாய் என எவராவது ஒருவர் வந்து விடுவர்.

நான் மட்டும் தனியாக செப்டம்பர் மாதம் 29-ஆம் தேதி அங்கிருந்து நாகர்கோவிலுக்கு வந்து விடலாம் . மறுபடியும் பிறிதொரு நாளில் பெங்களூர் போய் அவளையும் அழைத்துக் கொண்டு வந்துரலாம் எனத் திட்டமிட்டபடி டிக்கட் எடுத்தேன்.

29-ஆம் தேதி மத்தியானம் இரண்டு மணிக்குப் பிறகு தொலைக் காட்சி செய்தியைப் பார்த்த என் மனைவி ,“ பாருங்கோ ..... பஸ் ஒண்ணும் நாரூலுக்குப் போகாது....” எனச் சொல்ல நானும் பார்த்தேன்.

தமிழகத்திற்குத் கர்நாடகம் தண்ணீர் தர வேண்டும் என உச்சநீதிமன்ற தீர்ப்பின் அதிர்வின் காரணமாக  சத்தியமங்கலம், மாண்டியா  எனச் சில இடங்களில் தமிழகத்திற்குச் செல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டதாக செய்திவரிகள் ஒடிக் கொண்டிருந்தன.

தொலைகாட்சித்  திரும்பத்திரும்ப அதனையே ஒளிபரப்பித்  தொல்லை  தர  ஆரம்பித்தது .

பதட்டமடைந்த என் மகளும் என் மனைவியும் என்னைப் போகவேண்டாம் என்று சொல்லாமல் ஆனால் தங்கள் முகபாவ மொழியால் சொல்லிக் கொண்டே இருந்தனர்.

என் மனதுக்குள் ஒரே குழப்பம்..... என்ன செய்வது ?  வீட்டில் இருந்து கொண்டே  டிக்கட்டை கேன்சல் செய்திரலாமா ?  பொம்மனஹல்லி வரைப் போய் பஸ் இல்லையென்றால்,அதன் பிறகு பார்த்துக் கொள்ளலாமா?     எண்ண  ஒட்டம் ஓடிக்கொண்டே இருந்தது.

வீட்டில் இருந்து கிளம்பத் தயாரானேன்!. என் மனைவி என்னருகே வந்தாள்.

“போகாதே போகாதே என் கணவா... பொல்லாத சேதி என் மனதை கொல்லுதே.....” எனப் பாடுவாளா ?

அவள்,“ நானும் உங்க கூட வாறேன். பஸ் இருந்தா நீங்க போங்கோ !” என்றாள்.

 “நீ எப்படித் திரும்பி வருவே ? ”நான் கேட்டேன்.

 “வேலப்பனின் மகனையும் நான பொம்மனஹல்லிக்கு வரச் சொல்லுவேன்” என்றாள்.

அவளை சமாதானப்படுத்தி என் கைப்பையை மட்டுமே எடுத்து வெளியே வந்து சாலை வழியே நடக்க ஆரம்பித்தேன்.

ராமமூர்த்திநகர் சிக்னல் அருகே வந்த போது பஸ்கள், கார்கள் அனைத்தும் ட்ராபிக் சிக்கலில் மாட்டி நின்று கொண்டிருந்தன. பஸ்களில் ஆட்கள் அதிகம் இல்லை.  சற்று சிரமப் பட்டு சாலையின் மறுபக்கம் போய் நின்றுகொண்டேன். 500 டி பஸ் வந்தது .சில்க்போர்டு போகும் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டபின் அதில் ஏறி அமர்ந்தேன் .ருபாய் 20 கொடுத்து டிக்கட் கேட்டேன்.  இரண்டு டிக்கட்டுகள் தந்தார். ஒன்று 12 ருபாய் மற்றொன்று 4 ருபாய்.  மீதி தரவில்லை .டிக்கட்டின் பின்புறம் 4 என எழுதியிருந்தது. இறங்கும் போது தருவார்.

அதிகக் கூட்டம் இல்லை. மக்கள் பந்த்-க்கு பயந்து வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கிறார்களோ ! இந்த பஸ் தொடர்ந்து போகுமா அல்லது இடையிலே நம்மை இறக்கிவிட்டு விடுவானோ... என் மனத்திரையில் இந்த வரி ஓடிக்கொண்டே இருந்தன.

நாம் அவசரத்தில் இறங்கும்போது கண்டக்டர் பாக்கி தரவேண்டியதைத் தருவானா ?   கேட்க மறந்து போகுமே !

கண்டக்டர் எல்லாம் மோசம்.... மீதிப் பைசாவெல்லாம் தர மாட்டான். எப்படியும் அவனிடம் மீதியை வாங்கீரணும். நான் ஒரு ருபாயைக் கொடுத்து அஞ்சு ருபா கேட்டேன். அவன் இல்லையென்றான். அய்யோ! தமிழ்ல பேசிட்டோமே எவனாவது நம்மைத் தாக்கீருவானோ பயம் .....
ஆனாலும் எப்படியும் பைசாவை விடப்ப்டாது..... அவரிடம் ஆறு ருபாய் சில்லறையாய்க் கொடுத்து பத்து ருபாயைக் கேட்டேன். சிரித்துக் கொண்டே பத்து ருபாயை தந்தார்.

சில்க்போர்டு வரவே செய்யாதா....ஒரு மணி நேரம் ஆச்சே.... ரூட்டு மாறி பஸ் வேறெங்கோ போகுதோ.... மீண்டும் பயம்.

 என்          பக்கத்தில் இருந்தவரிடம் மிகவும் துணிச்சலாகத் தமிழில் கேட்டேன்.  அவன் கன்னடத்தில் பதில் சொன்னான். ஒவ்வொரு நிறுத்தம் வரும்போதும் அவரிடம் இதுவா சில்க் போர்டு...எனக் கேட்டுகிட்டே இருந்தேன். மிகவும் அன்பாக பொறுமையாக கன்னடமும் அவர்தமிழும் கலந்த மொழியில், “ இந்த பஸ் பொம்மனஹல்லிக்குப் போகுது. ஒரு இடத்தில் சற்று இடப்புறம் திரும்பி நிற்கும். அதுதான் சில்க்போர்டு.”

“ என்ன... இந்த பஸ் பொம்மனஹல்லிக்குப் போகக்கூடிய பஸ்ஸா.... எனக்கு அங்கதானே போகணும்...”

கண்டக்டரிடம் நான் சொல்ல முற்பட என் அருகே இருந்தவர் விசயத்தை சொன்னார்.  இன்னோரு டிக்கட் எடுத்தால் போதும் என ஆறுதலாகச் சொல்லி விட்டு பஸ்சின் முன்னும் பின்னும் நடந்துகொண்டே இருந்தார்.

சில்க் போர்டு வந்தது. கண்டக்டரிடம் பத்து ருபாய்த் தாளைக் கொடுத்து பொம்மனஹல்லிக்கு டிக்கட் கேட்டேன்.

“நீங்க எங்கிருந்து ஏறினீங்க...” எனக் கேட்க நானும் சொல்ல அவர்  “டிக்கட் எடுக்க வேண்டாம் இதுவே போதும்” என்று சொல்லிச் சிரித்து விட்டு அவர் பணியைத் தொடர்ந்தார்.

இப்பொழுது எனக்கு கண்டக்டர் மிக அழகாகக் காட்சி அளித்தார். அறுப்பத்தஞ்சு வயசான பின்னும் அடைய வேண்டிய சில நுண்ணறிவு நமக்கு இல்லையே !

ஊர்ந்து சென்ற பஸ் ஒரு இடத்தில் நிற்க அதுதான் பொம்மனஹல்லி என தெரிந்து கொண்டு இறங்கினேன்.

நாம் செல்ல வெண்டிய இடம் கே.பி.என் பஸ் நிற்கும் இடமல்லவா !

எதிரே வருவோரிடம் கேட்டேன்.  சொல்ல வில்லை..... என்னெதிரே வந்த இருவரிடம் கேப்பியென் பஸ் எங்கே நிக்கும் என நான் கேட்க ஒருவன் தெரியாது எனச் சொல்ல இன்னொருவன் “கேப்பியன் ட்ராவல்ஸ்தானே கேக்கிறீங்க .... நேரே போங்கோ. என்றான்.

சரியாக ஆறுமணி.... கே.பி.யென் ட்ராவல்ஸ்-இல் இருந்தவனிடம் என் கணினிப் பதிவுத்தாளைக் காண்பித்தேன். எட்டு மணிக்கு பஸ் வரும் என்றான்.

அப்பாடா...... ஏதானாலும் பஸ் ஓடும் . இன்னும் இரண்டு மனிநேரம் காத்திருக்கணுமே.... அந்த 2 மணி நேரத்தில் தண்ணீர்ப் பிரச்சினை வலுவடைந்து விடக்கூடாதே ..... சாலையில் செல்லும் வெகுதூர பஸ்ஸெல்லாம் போய்க் கோண்டே இருந்ததால் நிம்மதி ஏற்பட்டது.

 8.45க்கு வந்த பஸ் என்னையும் அழைத்துக் கொண்டு சென்றது.

பஸ்ஸில் ஏறி அமர்ந்ததும்  நான் என் மகளது போனில் என் மனைவியிடம் பேசினேன்.

அவள்,“ நாங்கள் கே.பி.என் ட்ராவல்ஸ்-க்கே போனில் பேசிக் கேட்டுத் தெரிந்து கொண்டோம் ” என்றாள்.

அவள்..... ஆம்....அவளேதான். அவள் தான் நாகர்கோவில் K.P.N. அலுவலகத்தில் இருக்கும் மகன் முருகனுக்கு தெரிந்த ஒருவரிடமும் கேட்டு அறிந்து கொண்டாள்.

அன்பும் பயமும் அவசியமும் அவளை அனுபவசாலி ஆக்கிற்று. அது எனக்குப் பிரமிப்பாகவும் இருக்கிறது. மகிழ்வாகவும் இருக்கு. அன்பில் என்னிலும் மேலானவள் அவள்.   அறிவும் ஆணவமும் சேரும்போது   ஏற்படுவது  வெற்றிடம்... இல்லாமை... சூன்யம்.   சிலவேளைகளில் இந்த வெற்றிடம் என்னில் ஏற்படுவது கண்டு வெட்கப்படுவதுண்டு.அன்பும் அமைதியும் அறிவுடன் சேரும்போது ஏற்படுவது இயல்பான இயக்கம். என்னில் இல்லாதது. அவளிடம் உள்ளது. அதனால் இடரில்லா இயக்கம் தொடர்கிறது.

 தூங்கும் வசதி உண்டு. காலையில் 8.45-க்கு நாகர்கோவிலில் இறங்கி வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.

அக்டோபர் ஒன்றாம் தேதி நன்றி அறிவிப்புக் கூட்டம். நானும் கலந்து கொள்வேன் அதில்.நாங்கள் ஐந்து பேர் தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரிச் சங்கத்தேர்தலில் இயக்குனர்களாக ஒருமனதாகத்  தேர்ந்தெடுக்கப் பட்டோம். அதற்காக நாங்கள் அனைவரும்  பங்குதாரர்கள் அனைவரையும் அழைத்து அவர்களுக்கு நன்றி கூறிட நடைபெறும் கூட்டம் அது.

நன்றி மறப்பது நன்றல்ல....... எனக்குப் பிடித்தது இந்த வரியே.

அதனால் நான் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதுதானே மரியாதை.




Wednesday, September 26, 2012

எழுபதில் எழுதிய ஒரு கடிதம்

காலமெலாம் கரைக்காணாக் கடலிலே
கழித்திடும் மீனவன் தன் வாழ்விலுமோர்
களிப்புணர்ச்சி உண்டென்பது உண்மை
அந்தத் தொழில் செய்வோன் அடையும் ஆனந்தம் கூட
எந்தன் உள்ளத்தில் இல்லையே நண்பா !

வரும் வரும்  இன்னும் சில நாளிலே
தரவும் செய்யும் நல்லதொரு பலனை
என்றெண்ணியபடி அஞ்சலகம் சென்று
என்றும் நின்றிருப்பேன் ஓலைதனை எதிர்நோக்கி
இது நாள் வரை வந்திடவும் இல்லை
அது ஒரு நாளும் வாராதோ  என எண்ணியே
ஒதுங்கி ஓய்ந்தும் போய் விட்டேன் நண்பா

உன் கவித்துவ கடிதம் கண்டேன்
கவியெழுத ஒரு கண்ணதாசன்  தான் என்றிருந்த
புவிதனில் அந்நிலைமை தனை மாற்றிடவே  வந்துதித்த
பொன்னன் நானுட்பட ராம தனத்தோடு வேதா நீயும்
சேர்ந்ததை எண்ணித் தமிழ்த் தாய் மகிழ்கின்றாள்

சோதனை எனக்கு வேதனை அப்பாவுக்கு
எதனால்  மேலும் படிக்க முடியவில்லை
படித்திட துடித்தாலும் மனதிலேன்னவோ
மடியாய் இருக்கு பயமாவும் இருக்கு
பெற்ற வயிறும் பெற்றவன் முகமும்
வாடிடுவதால் படிப்பெனும் பெருஞ்சுமையை
மறுபடியும் சுமக்க இருக்கின்றேன்

வருத்தம் என் நெஞ்சில் ..... வருமா எனக்கு படித்தம்
வகுத்தவன் வழி காட்டுவான் .... வருவேன் அப்போது
விழித்திருப்பேன் ....மறுமுறை வீழ மாட்டேன்.....
உன் விழியும் என்னைக் காக்கும் என்பதால்
உன்னிடமே வருவேன் நான்.


இந்த வரிகள் என் நண்பன் ஆலப்புழையில் இருக்கும்போது  நான் எழுதிய கடித வரிகள். முதல் ஆண்டு தேர்வு எழுதாமல் ஆலப்புழையில் இருந்து ஊருக்கு வந்தபின்  அவனுக்கு எழுதிய கடிதம். அவன் பெயர்  வேதாசலம்  .வங்கியில் வேலை பார்த்தவன் .... மற்ற நண்பன்கள் ராமநாதன்,தனம் மருத்தவர்கள்.

Tuesday, September 11, 2012

நட்புக்கும் உறவுக்கும் இடையே இன்னோர் ‘ஒன்று’

நான்கு நாட்கள் நகர்ந்து விட்டன நண்பனவன் போய்.  என் மனதினை விட்டு அகலாமல் இன்றும் என்னோடு பேசிக் கொண்டிருக்கிறானே!.என் காதுகளில் அவன் குரல் ஒலித்துக் கொண்டிருக்கிறதே! அவனது புகழ் பற்றிப் பேசும்போதெல்லாம் நாக்கு தடுமாறுகின்றதே!

அவர் பிறப்பால் இந்து பிராமணன். அந்த நாளில்... இறுதி ஊர்வலத்தில்..... பார்த்தால்....அவரது உறவினர்கள் அதிகம் பேர் இல்லை. அத்தனை பேரும் நண்பர்களே. முஸ்லீம் நண்பர்கள் காலத்தால் செய்ய வேண்டிய உதவிகளை செய்து கொண்டிருந்தனர்.

யாருமே... மனைவியோ மக்களோ பக்கத்தில் இல்லாத நிலையில் மூன்று தினங்கள் அவருடைய உயிர் நீங்கிய உடலைப் பாதுகாக்க முயற்சிகள் செய்தது அவரது நண்பர்களே.

கண்ணீரோடு காணப்பட்ட பிரபலமான டாக்டர்....... இரண்டு கைகளையே இழந்துவிட்டதாய் புலம்பிய ,பூனாவில் இருந்து பறந்து வந்த கிறிஸ்தவ நண்பர் சுந்தர்,.....எழுதிக் கொண்டே போகலாம்.

காடுவரை யாரோ ? -இந்தக் கேள்விக்கு பதில் நண்பர்கள் என்றும் சேர்த்துக் கொள்ளலாம்.

சுடுகாட்டில் தகனத்திற்கு முன் நண்பர்களும் உடலின் மீது அரிசி போட அழைக்கப் பட்டனர். இதனை இதற்கும் முன் எங்கும் பார்த்ததில்லை. நாங்கள் சிலரும் அந்த மரியாதை செய்யும் வாய்ப்பை தவறவிடாமல் உள்ளே போய் சுற்றி வந்தோம்.

அங்கு அந்த இடத்தில் ஓரமாய் இருந்த ,சடங்கைச் செய்து கொண்டிருந்த பிராமண வாத்தியார் ஏதோ புரியும்படியான மந்திரம் சொல்வது போல் இருக்கிறதே.... காதில் விழுவது மந்திரமா.... “ வித்யா சாகர் நல்லவர்.... அவருக்கு ஜாதிமதமே கிடையாது. எல்லோருக்குமே உதவி செய்பவர்...இப்படி ஒரு ஆளைப் பார்க்கவே முடியாது......” தொடர்ந்து நிறுத்தாமல் மந்திரம் போல் சொல்லிக் கொண்டே இருந்தார்.

இவை எல்லாமே புதியதாகவே இருந்தன.


வைரவிழா இரண்டாம் நாள் இறுதி நிகழ்ச்சியில்  எனது கையில் கேமராவுடன், இருந்த இடத்தில் இருந்தே மேடையில் நடை பெற்றுக் கொண்டிருந்த நிகழ்வுகளை நான் கேமராவில் பதிவு செய்து கொண்டிருந்தேன். ஒரு குரல், “ பொன்னப்பா......” கேட்டு எனது இடது பக்கம் திரும்பிப் பார்த்தேன். ராமகிருஷ்ணன்,ஆறுமுகப்பெருமாள் இருவருக்கும் இடையே வித்யாசாகர்... சிரித்த முகத்துடன் வித்யாசாகர்.... அதனையும் பதிவு செய்து கொண்டேன்.  பிரிந்து போவாரென யார் அறிவார் ? அதுதான் அவரது இறுதிப் படம் ....  அந்தப் படம்தனை பதிவு செய்து எழுதிய பிளாகில் அழகான முகம் கண்டு என் கண்கள் இன்றும் பனிக்கிறதே!

எத்தனையோ பேர் எனை விட்டுப் போனவர்கள் உண்டு. அவர்கள் மறைவு பாதித்ததுவும் உண்டு. வருத்தியதுவும் உண்டு. ஆனால் வித்தியாசாகரின் மறைவு அப்படியல்ல....நண்பனவன் மரணச்செய்தி கேட்டு அவன் நண்பனும்  என் வீட்டுக்கு வந்து துக்கம் தந்த சுமையை இறக்கி வைக்க என்னிடம் அவன் புகழ் பாடிச் செல்வது புதியதே.

நட்புக்கும் உறவுக்கும் இடையே இன்னோர் ‘ ஒன்றும் ’இருக்கிறது. அதற்கு என்ன பெயர்......?

தாங்கும் மனது இன்றில்லை என்னிடம்.  அதனால் அவன் நினைவு எனை விட்டு அகன்றிட காலம் சற்று அதிகமாகும்....... இரயில் நட்பாய் இருந்திருக்கக் கூடாதா...?   வேண்டாம்..... நட்பு என்பது  அதுவல்ல.

என் நினைவில் தினமும் அவன் வந்து போகட்டும்.  கண்களில் இருக்கும்வரை; கன்னங்களில் வழியும் நீர் அவனுக்கு அஞ்சலியாக இருக்கட்டும்..... வற்றுவதற்கு அதென்ன பழையாறா ?

Saturday, September 8, 2012

தன்னந்தனியே தவிக்கும் புது அனுபவம்

"ஆருடம் யாரும் சொல்லவில்லை
ஆருயிர் தோழனாய் என் தந்தைக்கு பலம் சேர்த்த  நீவீரும் நொடிப்பொழுதில்
அவ்விடம் செல்வீர் என்று.
யாரிடம் சொல்லி அழ ?

இந்த பிரபஞ்சத்தின் அணுத் துகள்களில்  உங்கள்  ஆன்ம சுடர் பிரகாசிக்கும்
என்ற நம்பிக்கையுடன் தேற்றிக் கொள்ள முயல்கிறோம்
கண்கள் பனிக்க அந்த சுடரைத் தேடித் தவிக்கிறோம் .

வயது வித்தியாசமின்றி சின்னஞ்சிறுவனுடனும்
வாஞ்சையோடு  பேசுகிற போது நீவீர் வித்தியாச சாகரம்  ;எங்கள்
மனதுள் இனி வித்தியா சாகாவரம் ........"

மறைந்துவிட்ட எங்கள் குடும்ப நண்பர் பற்றிய
இந்த வரிகள் என் மகன் முருகனின் முகநூலில் பதிவு செய்யப்பட்ட வரிகள். 

இந்த வரிகள் மூலம் விசயம் அறிந்து இதனை எனக்குச் சொன்னது அவனது அண்ணன் என் மூத்த மகன். அவன் வெளிநாட்டில் இருந்து கொண்டு  தழு தழுத்த குரலில் அதிர்ச்சியுடன் என்னிடம் பேசும் போது இந்த வரிகளையும் சொல்ல முயல , அதனை அவனால் முழுவதுமாய் சொல்ல முடியாமல் திணறி குரல் உடைந்து சிதறியதை உணர்ந்து நானும் உடைந்து விட்டேன்.

என் மகள் தொலைபேசியில் சொன்னது: “ என்னை பிரசவ வலி வந்த போது வித்யாசாகர் மாமா அவரது காரில் ஹாஸ்பிட்டலுக்கு என்னை  அழைத்துக் கொண்டு போனது உனக்கு நினவில் இருக்கிறதா ?”

என் மகள் திருமண விழா மாலை விருந்தே அவர் முன்னின்று நடத்தியது தானே!

எனக்கு நணபனவன். அவனிடம் என் பிள்ளைகளுக்கு இத்தனை பாசமா !

என் பிள்ளைகள் அனைவராலுமே அன்புடன் மாமா என்றழைக்கப் பட்டவர். எனது அம்மாவின் காலைத்தொட்டு வணங்கியதும் அந்த நாளில் நான் அதிசயித்துப் போனதும் என் நினைவுக்கு வருகிறது. அவரது வேண்டுகோளுக்காக மட்டுமே அதனை  ஏற்று பாரதிராஜாவின் சினிமாப் படப்பிடிப்புக்காக ,என் வீட்டுக் களத்தை பயன்படுத்திக் கொள்ள அனுமதி கொடுத்த என அப்பா .... என் நினைவில் வந்து போகிறார்.  .

உதவி...... அதற்கு பொருத்தமான மனிதன் அவனே. இளகிய மனம் உண்டு. அப்படி ஒரு மனம் இனி இல்லை  என்பதால் இவரது இழப்பு பலரையும் அழவைக்கும்..... ஆம் இது உண்மை.

ராமச்சந்திரன் சார் அவரது ஆராய்ச்சிக்கு வழிகாட்டியவர்.... அழுது கொண்டே சாலை வழி போகிறார் மாணவர் மறைந்த செய்தி கேட்டு.....
என் வயது அறுபத்தைந்து ஆண்டுகள் நான்கு மாதங்கள். அவருக்கு 64 வயது. நானும் அவரும் ஒரே கல்லூரியின் ஆசிரிய நண்பர்கள்.

அவர் கே. வித்யாசாகர். இயற்பியல் ஆசிரியராகத் தன் பணிதனைத் தொடங்கி  வரலாற்றுதுறையில் பணிதனை முடித்தவர்.

மிகச் சிறந்த மேடைப் பேச்சாளர். ரோட்டரி மாவட்டச் செயலர்.என்.சி.சி மேஜர் . ஓய்வுக்குப் பின்னும் அவர் மேஜர்.

அவர்  புதனன்று இரவு ரோட்டரி கூட்டத்திற்கு போவதற்காக கல்லூரி நிர்வாக அலுவலகத்தின் மாடிப் படிக்கட்டு வழியே இறங்கிப் போய்க்கொண்டிருந்தார். அந்தச் சமயத்தில்  என்னிடம் ,“ பொன்னப்பா நான் போறேன்....” என சொல்லிவிட்டுப் போனார். அது தான் அவர் பேசியக் கடைசிப் பேச்சு.

அடுத்த நாள் அவர் இல்லை இந்த உலகில்.  கேள்விப்பட்ட உடன் அடைந்த மனவேதனை..... அந்த இடத்தின் அனைவரின் அமைதி.....

ஒரு நாளா....இரண்டு நாளா---- 39 ஆண்டுகள் பழகிய நட்பல்லவா அவரது நட்பு.  நட்புக்கு மரணமில்லை. நட்புக்கே இலக்கணம் படைத்த அவன் புகழுக்கேது மரணம் ?

வாஞ்சையோடு பழகும் குணம் கொண்ட; உதவி செய்வதைத் தன் மிக முக்கியமான குணமாகக் கொண்ட வித்தியாசமான மனிதர் அவர்.

தன் ஆணித்தரமான விவாதத்தில் தனியாளானாலும் துணிந்து சொல்வதில் அவருக்கு நிகர் அவரே. 

இந்துக் கல்லூரியை மிகவும் நேசித்தவர்;வரலாற்றுத் துறைக்கு தமது நூல்கள் அனைத்தையும் அளித்தவர். பத்து வருடங்களுக்கும் மேலாக கல்லூரி நிர்வாகத்தில் ஆசிரியர் என்ற முறையிலும் இயக்குனர் என்ற முறையிலும் பங்காற்றியவர்.

‘சாவே ! உனக்கு சாவே வராதா........ ”  (கண்ணதாசன் சொன்னது.)

அறிவுக் கடல், அன்புக்கடல் ......அதனால் அவர் பெயரில் சாகரம்.

இன்று அவர் பால் மிக மதிப்பும் அன்பும் கொண்ட என் மகன் முருகன் பதித்த வரிகளை என் மகன் தினேஷ் தொலைபேசியில் வாசித்து எனக்குச் சொன்னபோது, நேற்றும் இன்றும் தேங்கி நின்ற ,அடக்கி வைத்திருந்த கண்ணீர் விம்மலோடு பொட்டித்திறந்து சிதறியபோது நான் தனிமையில் எனது அறையில்.......
அந்த துளிகளே நண்பனுக்கு என் அஞ்சலி.
Posted by Picasa

சாவே ! நீ வீழ்வது எப்போது ?


என் வயது அறுபத்தைந்து ஆண்டுகள் நான்கு மாதங்கள். அவருக்கு 64 வயது. நானும் அவரும் ஒரே கல்லூரியின் ஆசிரிய நண்பர்கள்.

அவர் கே. வித்யாசாகர். இயற்பியல் ஆசிரியராகத் தன் பணிதனைத் தொடங்கி  வரலாற்றுதுறையில் பணிதனை முடித்தவர்.

அவர்  புதனன்று இரவு ரோட்டரி கூட்டத்திற்கு போவதற்காக கல்லூரி நிர்வாக அலுவலகத்தின் மாடிப் படிக்கட்டு வழியே இறங்கிப் போய்க்கொண்டிருந்தார். அந்தச் சமயத்தில்  என்னிடம் ,“ பொன்னப்பா நான் போறேன்....” என சொல்லிவிட்டுப் போனார். அது தான் அவர் பேசியக் கடைசிப் பேச்சு.

அடுத்த நாள் அவர் இல்லை இந்த உலகில்.  கேள்விப்பட்ட உடன் அடைந்த மனவேதனை..... அந்த இடத்தின் அனைவரின் அமைதி.....

ஒரு நாளா....இரண்டு நாளா---- 39 ஆண்டுகள் பழகிய நட்பல்லவா அவரது நட்பு.  நட்புக்கு மரணமில்லை.

வாஞ்சையோடு பழகும் குணம் கொண்ட; உதவி செய்வதைத் தன் மிக முக்கியமான குணமாகக் கொண்ட வித்தியாசமான மனிதர் அவர்.

தன் ஆணித்தரமான விவாதத்தில் தனியாளானாலும் துணிந்து சொல்வதில் அவருக்கு நிகர் அவரே. 

மிகச் சிறந்த மேடைப் பேச்சாளர். ரோட்டரி மாட்டச் செயலர்.என்.சி.சி மேஜர் . ஓய்வுக்குப் பின்னும் அவர் மேஜர்.

இந்துக் கல்லூரியை மிகவும் நேசித்த அவர் ,வரலாற்றுத் துறைக்கு தமது நூல்கள் அனைத்தையும் அளித்தவர். பத்து வருடங்களுக்கும் மேலாக கல்லூரி நிர்வாகத்தில் ஆசிரியர் என்ற முறையிலும் இயக்குனர் என்ற முறையிலும் பங்காற்றியவர்.

‘சாவே ! உனக்கு சாவே வராதா........ ” கண்ணதாசன் சொன்னது .

அறிவுக் கடல், அன்புக்கடல் ......அதனால் அவர் பெயரில் சாகரம். ,இன்று அவர் பால் மிக மதிப்பும் அன்பும் கொண்ட என் மகன் முருகன் பதித்த வரிகளை என் மகன் தினேஷ் தொலைபேசியில் வாசித்து எனக்குச் சொன்னபோது, நேற்றும் இன்றும் தேங்கி நின்ற ,அடக்கி வைத்திருந்த கண்ணீர் விம்மலோடு பொட்டித்திறந்து சிதறியபோது நான் தனிமையில் எனது அறையில்.......அந்த துளிகளே நண்பனுக்கு என் அஞ்சலி.