Saturday, September 13, 2014

ஒரு சொல் கேளீர்......செல் வேண்டாமே

இது ஒரு பனிக்காலம்.

இருக்கும் இடமோ ஓசூர். குளிர் கூடுதலாகவே இருக்கும் இடம். குளிர் நடைப்பயிற்சிக்கு காலையில் தடையாய் இருப்பதால் சற்று நேரம் கழிந்தபின் அதாவது காலையிளம் வெயில் வந்ததும் வெளியே செல்வேன். அந்த நேரம் தான் நான் ஊரில் இருந்தால் ,நண்பருடன் செல்போனில் பேசுகிற நேரம்.

காலையில் செய்தித்தாள் படிக்காமல் இருந்த, இருக்கும் நாட்கள் பல உண்டு.. செல்போணை பிடிக்காமல் ஒருநாள் கூட இருந்ததில்லை. காலையில் கண் விழி திறந்ததும் விழிகள் தேடுவது செல்லைத்தான்.

நாட்டு நடப்பை அறிந்து கொள்ள பயன்படுத்துவதும் என் செல்ல செல்பேசியில் தான். 

என்னூர் செய்திகளை என் நண்பர் மூலம் செல்லில் பேசி அறிந்து கொள்வேன்.

செல் இல்லாதவன் செல்லாக்காசாவான். இருந்தாலும் செல் எடுத்துச் செல்வதில் சிரமங்கள் பல உள்ளன.

ஊரில் அதிகாலையில் நடக்கச் செல்லும்போது செல்லை எடுத்துச் 
செல்வதில் ஏற்பட்ட சில அனுபவங்கள்
.
தனியே பேசிக்கொண்டே வருபவனைப் பார்த்தால் பயித்தியக்காரன் 
பேசுவது போல் இருக்கு.....அதிலும் காதில் ப்ளூடூத் கருவியை வைத்து 
தனியாக சிரிப்பதும் பேசுவதும் அசல் லூசு போலவே இருக்கு....என்று  
என் மனைவி கிண்டல் பண்ணுவதால்.......ஓசியில் பேச அலையும் 
சிலரிடம் இருந்து நம் அலைபேசியை காப்பாற்ற வேண்டி இருப்பதால்.......

நான் செல்லை எடுத்துச் செல்வதில்லை. 

நான் அதனை எடுத்துப்போகாமல் இருப்பதற்கு அந்தக் கிண்டல் 
மட்டுமே காரணம் அல்ல.

இன்னொரு காரணமும் உண்டு. நான் ஒரு கல்லூரி மைதானத்தில் 
நடந்து செல்லும் சமயம் செல் போனில் பேசிக்கொண்டே வந்தவர் 
படிகளில் இறங்கும்போது பேச்சுக் கவனம் அதிகமாகி பள்ளத்தில் 
இருக்கும் படிக் கவனம் சிதறிக் கால்கள் இடறி கீழே பரிதாபமாய் 
கீழே விழ...... கால்கட்டு அவிழ்க்கவே மாதங்கள் பல கடந்தன....
செல்லும் யாருக்கோ, அரசு அளிக்கும் விலையில்லா ஆடு போல் 
கிடைத்ததை யாரும் அறிந்திருக்கவில்லை......ஆஸ்பத்திரி வாசம்.......
செல் மூலம் Call பேசி, காலிழந்து வேறொரு செல்வாங்கிய 
பின்னர்தான் கால்வலி குறைய ஆரம்பித்தது........

ஓசூரில் ஒரு மணீக்கூருக்கும் அதிகமாகவே நடைப்பயிற்சிக்கு 
நேரம் ஆகும். வெளியூர் என்பதால் ......வயதும் அதிகம் என்பதால் 
செல்லை எடுத்துப் போகச் சொல்வாள் என் மனைவி. குறிப்பிட்ட 
நேரத்துக்குள் வீடு வந்து சேரவில்லையென்றால் என் கையில் 
இருக்கும் செல் சிணுங்க ஆரம்பிக்கும்.....

அன்றும் என் செல் போன் சிணுங்கியது.....மனைவிதான் பேசுகிறாள் 
என நான் நினைத்து எடுத்தேன். ஆனால் பேசியது என் நண்பர்......
வழக்கமாய் பேசும் நண்பர் தான்..........

”நீ எங்கிருக்கே....”

”ஓசூரில் இருக்கேன்....இப்பம் வாக்கிங் போயிட்டுருக்கேன்..... ஏதாவது 
விசேஷம் உண்டா..... கொஞ்ச முன்னால் தானே பேசினே......”

”உன்னிடம் நிச்சயமாய் இந்த விசயத்தச் சொல்லணும்னு தான் போன் பண்ணினேன்....
என் மருமகன் வைரம் பெருங்களத்தூர் ரெயில்வே ஸ்டேசன் பக்கம் 
ஒரு ஓரத்தில் நின்று போனில் பேசிக்கொண்டிருக்கும் போது, அந்த 
அழகான செல் போனை அவரிடம் இருந்து அபகரிக்க சற்று தூரத்தில் 
இருந்து பார்த்துக் கொண்டிருந்த சிறுவர்கள் சிலர் அவர் மீது பெரும்
கல்லை எடுத்து எறிய அது பலமாகத் தலையைத் தாக்கியது. கீழே 
விழுந்த அவர் தலையில் அதிக ரத்தம் பாய்ந்ததைக் கண்டு பயந்து 
போய் ஓடிவிட்டனர் சிறுவர்கள்.

அங்கிருந்த மருத்துவர்கள் காயம் பெரிதாய் இருக்கிறது என்று 
சொன்னதால் அவரது உறவினர்களிடம் போனில் தகவல் சொல்ல 
அவரது அக்கா.....டாக்டரான அக்கா அழைத்துச் சென்று சிகிச்சை 
செய்தாள்..... தலையில் 13 தைப்பு...... கேட்பதற்கே தலை சுற்றியது.....”

மேலும் அவன் சொன்னான்....” நீ இப்ப வச்சிருக்கும் போன் புதுசல்லவா....
நடக்க வரும்போது போன் எடுத்துட்டு வராதே.........”

ஆமாம்......இப்போதெல்லாம் காலையில் செல்லில்லாமல் சென்று கொண்டிருக்கிறேன்....

கழுத்தில் தங்கச் செயின், கைவிரல்களில் மோதிரம் என்னைப் 
பார்த்து சிரித்துக் கொண்டே இருக்கின்றன......


Tuesday, August 26, 2014

அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ் .......

வியாழக்கிழமை மாலை நேரத்து பெங்களூர் ரயிலில் ஓசூர் வருவதற்காக தனியாக பயணம் செய்தேன். நாகர்கோவிலில் இருந்து புறப்படும் பொழுது வண்டியினுள் ஏறுவதற்கு முன்னால் ஒட்டியிருந்த சார்ட்டைப் பார்த்தேன். எப்பொழுதுமே என் பெயரை பார்க்கும்போது எனக்குள் பரவசம் ஏற்படுவதுண்டு...முன் ஜாக்கிரதையும் கூட. கோச் மாறி ஏறி சிரமப்படவும் கூடாதே..... 

சார்ட்டில் வெற்றிடம் கூடுதலாக இருக்கக் கண்டேன்..... என்ன....நாம் இண்டெர்நெட்டில் பார்க்கும்போது இடம் இல்லாதது போன்றல்லவா கண்டோம்......சந்தேகத்துக்கு விடையேதும் கிட்டவில்லை.... 

எனது சீட் 60. தர்ட் ஏசி,வாசல்பக்கம்.  நிம்மதியாய் தூங்கமுடியாத இடமல்லவா ! மாற்று இடம் கேட்டு வாங்கி 32-இல் இடம்பிடித்துக் கொண்டேன். அது பக்கவாட்டில் கீழ்த்தளப் படுக்கை.சரியாக 4.25க்கு  இரயில் புறப்பட்டுச் சென்றது...

ரயில் திருநெல்வேலியை அடையும்போது என் செல்போன் சிணுங்க நான் அதனுடன் உரையாட யாரென பார்த்தேன். அது லெக்‌ஷ்மணன்.... ”ட்ரெயின் எங்க வந்திட்டிருக்கு ? அஞ்சு நிமிஷம் நிக்கும்ல்லா ? நான் உங்களை பாக்க ஜங்க்‌ஷன் கிட்டக்க வந்துட்டேன்.”

“அய்யய்யோ.... ட்ரெயின் வந்தாச்சே.... இப்பம் கிளம்பீருமே......கிளம்பிடுச்சே...”

அல்வா,இரவுச் சாப்பிட சப்பாத்தியுடன் வந்த அவன் ஏமாற்றத்துடன் .....” ட்ரெயின் எங்காவது கிறாசிங்கில் நிக்குமா....நிக்குது போலத் தெரிகிறதே......”

நான் மனம் குழம்பிப் போய் ....அவன் என் மீது வைத்திருக்கும் அன்பையும் அவன் செயலையும் நினைத்துக் கொண்டே இருந்தேன். அவன் மிகவும் பிசியாக இருப்பவன் . இரண்டு தலைமை அலுவலகப் பொறுப்பாளராக இருப்பதால் சமயம் ஒத்துழைக்காது. ஆகவே வரவேண்டாம்.ஒரு நிமிட நிற்பில் நாம் என்ன பேசிட முடியும்..... என்று சொல்லியும் வந்து ஏமாந்துட்டானே.... சொன்னால் கேட்கவே மாட்டேங்குறானே.....இப்படி நினைத்துக் கொண்டே அவன் அன்பு முக நினைப்பில் திகழ்ந்திருந்தேன்.....

மறுபடியும் அவன் .....” கோவில்பட்டியில் இந்த ட்ரெயின் நிக்கும்ல்லா....”

”ஒரு நிமிடம் தான் நிக்கும்.... ஏன்... நீ அங்கு வரப்போறியா..... வேண்டாம்......”

” இல்லப்பா...... நீங்க வாசல திறந்து வச்சு நிண்ணுங்க....ப்ளீஸ்பா..... ஒருவர் வந்து உங்கள்ட்ட ஒரு பார்சல் தருவார்....”

”அவருக்கு என்னை எப்படித் தெரியும்... எனக்கும் அவர் யாருண்ணு தெரியாதே’’’”

”நீங்க என்ன கலர் உடுப்புப்பா போட்டிருக்கீங்க”

”நீல கோடு போட்ட உடுப்பு... எனது பிளாக்கில் உள்ள போட்டொ பாத்திருப்பியே...அதே உடுப்பு.....வெள்ளை லுங்கி....”

அங்கங்கே கிறாசிங்..... சும்மா நிற்கும் வண்டியைப் பாத்து கோபம் வந்தது....... சற்று காலதாமதமாய் கோவில்பட்டியை நெருங்கியது.....

நான் கதவைத் திறக்கவும் ஒருவர் கையில் ஒரு பார்சலுடன் வந்து கொண்டே இருந்தார்...... அவர் அவருடைய சீருடையில் இருந்ததால் நம்மைத்தேடிவரும் அந்த ஆள் இவராகத்தான் இருக்கும்..... அந்த அவசரத்திலும் அவரைப் பார்த்து கையை அசைத்து “ கொண்டாங்க..... நான் தான் நீங்க தேடுற ஆள்....” என்று சொல்லவும் அவர் போணில் சார் கொடுத்திட்டேன்...நீங்க பேசுங்கோ என்ச் சொல்லி போனையும் என்னிடம் தர நான் லெக்‌ஷ்மணனுடன் கிடைத்த விவரத்தை சொல்லவும் வண்டி கிளம்ப போணை அவரிடம் கொடுத்து விட்டு என் இருக்கையில் போய் அமர்ந்தேன்.

இப்படியும் நடக்குமா ? இருக்கலாம்..... ஆனால் எனக்கு இந்தச் செயல் புதுசல்லவா? இப்படி அன்பு காண்பிப்பதற்கு.... நான் என்ன..... அதிகாரியா.....ஓய்வு பெற்ற ஒரு சாதாரணன் தானே.....


அன்புக்கு அடைக்கும் தாள் இல்லை........

Monday, August 25, 2014

அவன் கதை

அவன் கதை மட்டுமல்ல. அவனோடு பயணம் செய்தவர்களின் கதையும்தான். இத்தனை நாட்களும் எழுத மனம் மறுத்த கதை. வாழ்க்கையில் மகிழ்வான வடுக்கள் ,சுவடுகள்..... இவைகளை மட்டுமே பதிவு செய்ய மனம் ஆசைப்பட்டது தான் மறுக்கக் காரணம்.

இது அவன் கதை......எழுதத் தெரியாமல் எழுதிய வரிகள்,

நாற்பது.....இல்லை அதற்கும் அதிகமான வருடங்களுக்கு முன்னால் அவன் கதையின் நடுப்பகுதி ஆரம்பம் ஆனது.... அவனுக்குத் தெரியாது குடும்பம் என்றால் என்ன என்று. வசதியான அப்பா.....அம்மா.... வரவே இல்லா வசந்த காலம்......தடுமாற்றம் இல்லா பயணம் நடுவே தடை வந்தது. ஆம்! அவன் தோற்றான் முதல் முறையாக.... கல்லூரி இறுதி ஆண்டில்...... அவன் முதல்முறையாக அப்பா அழுவதைப் பார்க்கிறான்.....அழுவது ஒன்றும் பெரிய விசயம் இல்லை. அழுதவர் அப்பாவாக இருக்கலாம். எதற்கும் கலங்காத நெஞ்சுறிதி கொண்ட ஒரு மாமனிதர் ஒரு மகன் தோற்றதற்காக அழுதது அவனை ஊரை விட்டு விரட்டியது.....அவருக்காக படித்தான்..... வெற்றியும் பெற்றான்.

அவன் வங்கியில் வேலையில் சேர ஆசைப்பட்டு பலரைப் பார்த்தான்.....பரிட்சைகள் எழுதினான்...... எல்லாமே தோல்வியில் முடிந்தன......அவனது கல்வியால் அவனுக்கு நினைத்தவேலை கிடைக்கவில்லை. விரும்பாத வேலை கிடைத்தது. வேலை கிடைத்தவனுக்கு அடுத்து என்ன நடக்கும். கல்யாணம் தான்.....

கல்யாணம் அவன் மனம் போலவே இனிதாய் நடந்து முடிந்தது.....
முதல் நாள்.....இல்லையில்லை..... இரவு......

அந்த வீட்டின் ஏதோ ஒரு பகுதியில்  இருந்து சினிமா பாடல் புறப்பட்டு மணமக்கள் இருந்த அந்த அறையினுள் நுழைந்து அவன் காதினுள்ளும் நுழைந்து என்னவோ செய்தது.

”இரவுக்கும் பகலுக்கும் இனியென்னவேலை, இதயத்தில் விழுந்தது திருமண மாலை,உறவுக்கும் உரிமைக்கும் பிறந்தது நேரம்,உலகம் நமக்கு இனி ஆனந்தக்கோலம்,இருவர் என்பதே இல்லை இனி நாம் ஒருவர் என்பதே உண்மை.......” எங்கள் தங்கராஜாப் படப் பாட்டு.....

அந்த இரவு வேளையில் அவர்கள் கேட்டு, ரசித்து மகிழ வேண்டிய பாடல்......

அது புறப்பட்டு வந்த இடம் மாடி அறை. அங்கு அவன் நண்பன்.....தனியாக தன் இளம் மனைவியை இழந்து .........பாடல்களைக் கேட்டுக் கொண்டே இருந்தான்

”இருவர் என்பதே இல்லை இனி நாம் ஒருவர் என்பதே உண்மை”- இந்த வரி அவன் நண்பனுக்குப் பொய்யாகிப் போன காலமது.....

அந்த நண்பனின் தங்கை அவனருகில் அவன் மனைவியாய் இருந்தாள்.....அவள் கண்களில் கண்ணீர்......அந்தப் பாடல் கேட்டு மகிழவும் முடியாமல் விம்மவும் முடியாமல் தவித்தாள்....அன்னியமில்லா அவள் கண்ணீர் கண்டு அவன் மனமும் கனக்கவே செய்தது....கலங்கிய கண்ணோடு அவள் இழந்த அண்ணி பற்றியே அதிகம் பேசினாள்.  நாதஷ்வர மங்கள வாத்திய இசையோடு ஊரே பொறாமைப் படும்படியாக நடந்த திருமணம்....... யார் கண்பட்டதோ தெரியவில்லை.சித்திரை மாதம் ஒருநாள், நித்திரை இழந்தான்.... அவன் நண்பன் மட்டுமல்ல.... எல்லொருமே.....

காலம் தானே துன்பத்துக்கு மருந்து.....

திருமணசாட்சியாய் அவன் நண்பனுக்கு  ஒரு மகள்....ஏதுமறியாத வயது.... அன்னையாய் அனைவரும் தாயில்லா அவள் மீது பாசம் கொண்டிருந்தார்கள்....அன்னையின் ஸ்பரிசம்  அறிந்திராத அல்லது மறந்த இளம் தளிர் அவள். 

அலுவலகவேலை முடிந்து வரும் வேளையில் வீட்டில் தந்தைக்காக காத்திருக்கும் அந்த மகளை உச்சிமோந்து அணைத்து அன்பைக் காட்டும் போது எத்தனையோ தடவை அவன் கண்களில் நீர் தளும்பியதுண்டு....

காலங்கள் வேகமாய்ப் போனது...... பலவித வசந்தங்கள் வந்த வண்ணம் அனைவரது வாழ்க்கையும் அமைதியாய் போய் கொண்டிருந்தது.....அவன் நண்பன் வாழ்விலும் மறுமணம்  தென்றல் காற்றாய் வீசியது.

அவன் வீட்டில் இடி விழுந்தது போன்ற சம்பவம்..... தங்கையின் கணவர் வேலை பார்க்கும் இடத்தில் இதயவலியால் இறந்த செய்திகேட்டு அவன் அடைந்த துன்பத்துக்கு அழவே இல்லை....தடைகள் பல தங்கையின் வாழ்க்கையில்.....தடைகளை தடங்களாக மாற்றி முள்களை அகற்றி மலர் விரித்து மறுமணம் செய்வித்து அவர்கள் வாழ்விலும் தென்றல் வீசியது கண்டு மகிழ்ந்தான்.....

அவன் தந்தை மறைந்தார்.... தலைவனில்லா ,நங்கூரமில்லா கப்பல் திசை மாறிப் பயணித்தது. துன்பமும் துயரமும் துரத்தியது அவனை. 
ஆனாலும் வாழ்க்கை பல அனுபவங்களைக் கொடுத்தது..... தனியாக எங்கோ தங்கினான்.... ஆனால் அவனை விதி விடவில்லை.... எங்கேயடா போகிறாய்... குடும்பம் என்றால் என்ன ....? வா....வா.... என்றழைத்தது.... 

ஆம்.....அவனது அண்ணனின் கப்பல் கவிழ்ந்தது.....அதனால் தவித்தவர்கள் அவன் கப்பலில்.....வந்த சுமையை சுகமாக அவன் ஏற்றுக் கொண்டான்....அவர்களது வாழ்விலும் தென்றல் வீச அணில் போல உதவி செய்து மகிழ்ந்தான்....

காலம் வேகமாகச் சுழன்று சுழன்று போய்க் கொண்டிருந்தது..... வெவ்வேறு கப்பல்களில் பயணம்..........எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே என்று எண்ணி அவன் பயணம் தொடர்ந்தது.

போற்றுபவர்கள் போற்றும் போது அகம்மகிழ்ந்தான். தூற்றுபவர்கள் தூற்றியபோது மனம் உடைந்தான்.... ஆனால் அவன் பயணம்.........
சமீபத்தில் அவன், அவன் நண்பன், இன்னொருவருடன் மிக உற்சாகமாக ஓரிடம் சென்ற போது இடியாய் நண்பனின் காதில் விழுந்த செய்தி கேட்டு என்ன செய்வது..... எப்படி ஆறுதல் கூறுவது.... தெரியவில்லை .... இறுகிய மனத்துடன் அவன் பக்கத்தில் இருக்க.....அந்த அமைதியிலும் அவன் நண்பன் விட்ட பெருமூச்சு புயலாய் வீசியது..... நண்பனின் ஆசை மகளது கணவனுக்கு நெஞ்சுவலி. ... எல்லாம் முடிந்து விட்டது என்பதை நம்பவே முடியாதநிலை....

இதையெல்லாம் கேட்க நான் இன்னும் உயிரோடு இருக்கணுமா,,,,,விம்மல்.....நண்பனின் அழுகை அவனை மிக மிக வாட்டியது.....

தன் கண் முன்னால் குழந்தையாய், சிறுமியாய்,பெண்ணாய் வளர்ந்த அந்த நண்பனின் ஆசை மகள் இப்படியொரு சூழ்நிலையை எப்படி எதிர்கொள்ளப் போகிறாள். இப்போது அவளை அரவணைக்க அவள் மகள் கைகளும் இருக்கின்றன..... சுமையைத் தாங்க தோள்களும் பல உள்ளன........
வாய்விட்டு அழட்டும்.....அழுவதைத் தடுக்காதீர்.......... கண்ணீர் வற்றட்டும்.... அதுவே அரும் மருந்து.

அவன் போனான்......நண்பன் இருந்த அந்த ஆசை மகள் இல்லம் நோக்கி. நண்பன் மகள் முகம் காண வலுவிழந்தான்...
ஆறுதல் சொல்லப்போனவன் ஆறுதல் தேடி அழுதான்..........

காலனே ! வாடா என்னருகே..... அழைத்தானே முண்டாசுக்கவி பாரதி....அன்று பாரதி காலால் எட்டி உதைத்து அழித்திருக்க வேண்டாமா காலனை.....



Friday, August 8, 2014

சில பயணங்களில் சில அனுபவங்கள




இரயில் பயண அனுபவங்கள் பல . எழுதுவதா ? எழுதாமல் இருப்பதா……இப்படி எண்ணியே நாட்கள் நகர்ந்து விட்டன. ஜுலை மாதம் ஒரு தினம் நாகர்கோவில்-பெங்களூர் ரயில் வண்டியில் பயணம் செய்யும் வாய்ப்பு கிட்டியது…. …. ரயில் போய்க் கொண்டிருந்தது.  இருவர் என்னைக் கடந்து சென்ற போது அவர்கள் கையில் பிளாஸ்டிக் குப்பி…..அது செவனப் அல்லது ஸ்ப்ரைட் குப்பி….ஒன்று இருக்கக் கண்டேன். அதினுள் இருந்தது நிறமற்றதாக இல்லாமல் வேறொரு நிறமாக இருந்தது கண்டு அது என்னவாக இருக்கும் என்ற யோசனையில் சிந்தித்துக் கொண்டிருந்தேன்.
கொஞ்ச நேரம் கழிந்தது. சற்று வெளியே போய் ஓடும் ரயிலில் நின்று புறக்காட்சிகளைப் பார்த்து இரசிக்கலாமே என நினைத்து வெளியே போனேன். அங்கே அந்த இருவரில் ஒருவர் சற்று வயதானவர் நின்று கொண்டிருந்தார்……  சற்று நேரத்தில் கழிப்பறை கதவைத் திறந்து உள்ளிருந்து வெளியே வந்தார். இப்போது அந்தக் குப்பியில் பாதி காலியாய் இருந்தது.  அதனை வயதான பெரியவர் பெற்றுக்கொண்டு அவர்களது ”பார்”-ல் நுழைந்து சிறிது நேரத்தில் வெளியே வந்தவர் காலிக் குப்பியை வெளியே வீசியெறிந்து விட்டு நன்றியோடு மற்றவனைப் பார்க்க அவன், ‘போதுமா…! இன்னும் கொஞ்சம் வேணுமா…” என்று கேட்க அவர், ‘போதும்டா……இதுக்குமேல அடிச்சால் குழப்பந்தான்-----” என்றார்.
அவர்கள் பேசிக்கொண்டதில் அறிந்தவை………. இரண்டு பேருமே படித்தவர்கள். ஒருவர் ஓய்வு பெற்றவர்.மற்றொருவர் பணியில் இருப்பவர்…. இருவருமே அனாவசியமாக எதுவுமே பேசவில்லை….மிக நாகரீகமாகவே நடந்து கொண்டார்கள். என்னை அவர்கள் கண்டு கொள்ளவே இல்லை. ஆனால் நான் அவர்களின் பேச்சை கேட்டுக் கொண்டே வெளியே நகரும் மரம்,கட்டிடங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன்……

இருவருமே தினமும் குடித்துவிட்டு தூங்கும் பழக்கம் உடையவர்கள்….. 

யாரைக் குறை கூறுவது…..வீதி தோறும் கடையைத் திறந்து வைத்தவர்களையா ?தூங்குவதற்காகவே குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானவர்களையா…? சுதந்திரம்…..ஒருவன் கையை வீசி நடப்பது சுதந்திரம்….அது அடுத்தவன் முகத்தினை இடிக்காத வரை…….. அவர்கள் குடிப்பதுக்கு சுதந்திரம் கொடுத்தது நம் நாடுதானே……சக பயணிகளுக்கு துன்பம் தொந்தரவு தராதவரை.அவர்கள் தூக்கத்தை யாரும் கெடுக்கப்போவதில்லை……..

நடுநிசி இரவுவேளை…..இரயில் வெகுநேரமாய் பொதுவாக நிற்காத ஸ்டேசனில் நின்று கொண்டிருந்தது…..படுக்கயைவிட்டு எழுந்து வெளியே வந்து பார்த்தேன்..நாலைந்துபேர்கள் வெளியே நின்று கொண்டிருந்தனர். நான் வண்டி ஏன் நிற்கிறது என்று அறியும் பொருட்டு நடைமேடையில் இறங்கி நடந்தேன் நின்றிருந்தவர்களை நோக்கி….. அச்சமயம் அடுத்துள்ள நடைமேடையில் ஒரு மோட்டார் பைக்கு ஹெட்லைட் வெளிச்சம் மின்ன வேகமாக வந்து அலுவலக அறை முன்னே நின்றது. 

இறங்கியவர் காக்கிச்சட்டை அணிந்திருந்தார் அவருடன் வந்தவர் சத்தம் போட்டு என்னவோ சொல்ல உள்ளே இருந்தவர் வெளியே வந்தார். சத்தம் கூடியது….. என்ன…எது…என்று எதுவுமே புரியவில்லை….சற்று நேரத்தில் பைக்கு அங்கிருந்து வேகமாய் போய்விட்டது. அலுவலக அதிகாரி கோபத்தில் அதிக சப்தத்துடன் பேசிக்கொண்டிருந்தார். இதுவும் தெளிவாகவே காதுகளில் விழுந்தாலும் என்ன பேசுகிறார் என்று புரியவில்லை……அவர் பேசியது இந்தி மொழியில்…..

காதிருந்தும் செவிடனாய் இருந்த நான் அப்படியே நின்று கொண்டிருந்தேன்…..எங்கள் பக்கம் நின்ற ஒருவர் கீழே இறங்கி தண்டவாளத்தைக் கடந்து எதிர்பக்கம் போய் அந்த அதிகாரியிடம் என்ன விசயம் என்று கேட்டு திரும்பவும் அங்கிருந்து சாடி ஓடி வந்து ஏறினார்…. என்ன விசயம் என்று அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் அவரைச் சுற்றி  அவர் சொல்வதைக் கேட்க  ஆவல்மிகுதியாய் நின்றிருந்தோம். அவர் இந்தி அறிந்தவர்.
சற்று முன்னால் ஒரு காண்ஸ்டபிள் பிளாட்பாரத்தில் பைக்கில் வந்திருக்கிறார். ….இரவு வேளைகளில் பைக்கின் பின்புற சிவப்பு வெளிச்சத்தைக் காணும் இரயில் ஓட்டுனர்கள் திணறிப்போவார்கள்..அதற்காக அதனைத் தடுத்த அதிகாரியைத்தான் இவர்கள் திட்டிவிட்டுப் போனார்களாம். சற்றுப் போதையில் தான் இருந்தாராம். என்ன செய்வது …… 

பணியில் இருக்கும்போது போதையில் இருந்தது மட்டுமல்ல. கடமையை சரியாய் செய்த அதிகாரியைத் திட்டி அவரை மன உளச்சலுக்கும் ஆளாக்கிவிட்டாரே….மனம் வேதனையுடன் என் இருக்கையில் போய் அமர்ந்து கொண்டேன்.
டொரோண்டோ இரயில் போனபின்புதான் நம்ம இரயில் கிளம்பும்………. மூன்று மணி நேரம் கழிந்தபின் இரயில் ஓடியது……….


தனிமனித ஒழுக்கம் வேண்டும்…..இல்லையென்றால் எந்தச் சட்டமும் மதிப்பிழந்து போகும்………

Monday, April 21, 2014

முன்னாள் மாணவர் Dr .கே.சிவன் நேசித்த என்னுடைய முத்தான வரிகள்

தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரியின் ஆண்டுவிழா அழைப்பிதழ் என்கையில் ..... தந்தவர் கல்லூரி முதல்வர் .... இடம் தலைவர் அலுவலகம் ...

நான் என்பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த முதல்வரிடம் உங்கள் முதல்வர் அறிக்கை வாசிக்கப்படும் முதல் விழா அல்லவா .... நான் நிச்சயமாக வருவேன் ....உங்கள் அறிக்கையை வாசித்து முடித்த  உடன் நான் போயிருவேன் .......என்று சொன்னேன்.

அடுத்தநாள் காலையில் பெங்களூர் செல்வதால் சில பொருட்கள் வாங்குவதற்காக அன்று கடைகளுக்கெல்லாம்   போகவேண்டியிருக்கு ......

முதல்வர் சொன்னார். "விழா முடிந்து எங்களோடு பிரதம விருந்தினராக வரும் நம் கல்லூரியின் முன்னாள் கணித மாணவர் உட்பட அனைவரும் கலந்து கொள்ளும் மதிய விருந்திலும் கலந்து கொள்ள வேண்டும்" .

 சிரித்துக்கொண்டே சரிஎன்ற பாவனையில் தலையசைத்தேன்.

சிறப்பு விருந்தினர்  Dr .K .சிவன் . திட்ட இயக்குநர் ,(Geosynchronous Satellite Launch Vehicle )GSLV ,VSSC ,திருவனந்தபுரம் .

ஏழு தடவை GSLV செய்த முயற்சியில் மூன்று முறை மட்டுமே வெற்றி கிட்டியது . வெற்றி கிட்டிய ஜனுவரிமாதம் ஐந்தாம் தேதி அன்புடன் GSLV -யை
நாட்டி பாய் என்று குறிப்பிட்டனர்
The GSLV hasn’t been behaving too well and of its previous seven flights only three were successful. So when the GSLV-D5, as today’s mission was labelled, functioned with immaculate precision, its proud Mission Director K. Sivan said, “The naughty boy has become obedient and meticulous.”


தமிழ் நாடு அப்துல்கலாமை தந்தது ,அவர் இந்திய ஜனாதிபதி . சிவதாணுபிள்ளை என் வகுப்புத்தோழர் ......
இதோ எனைமறவா என் மாணவர் சிவன் ..... இவர் நாளை நம் நாட்டை உலகளவில் முன்னிறுத்தும் விஞ்ஞானி. அப்துல்கலாமைப் போன்ற சிறந்த மனித நேயப்பண்பாளர் ......இம்மூவரும் இஸ்ரோ ஞானிகள் .

விழா நாள் 11-04-2014 வெள்ளிக்கிழமை .

நான் வெள்ளிக்கிழமை காலையில் வெளியே கடைகளுக்குப் போய் வாங்க வேண்டிய பொருள்களை வாங்கி விட்டு வீட்டுக்குவந்தேன். அப்போ மணி பத்தரை. நேரமானாலும் பரவாயில்லை......கல்லூரிக்குப் போனேன் .........

"நீராரும் கடலுடுத்த நிலமடந்தை   .....தமிழ்த்தாய் வாழ்த்து  எனை வரவேற்றது.அரங்கிகினுள் போனால் முன்  மூன்று வரிசைகளிலும் ஆளில்லா இருக்கைகள் இல்லை.   மாணவர்கள்      அமர்ந்திருந்த இருக்கைகளில் அவர்கள் எழுந்து இடம்தர  மூன்றாம் வரிசையில் பாதையோரம் முதல்  இருக்கையில் அமர்ந்து மேடையைப் பார்த்தேன்.....

முன்னாள் மாணவரின் முகம் பார்த்தேன் ...என் நினைவில் இல்லா முகம். 67 வயதான எனக்கு அது வேதனையைத்  தரவில்லை. ஆனாலும் மறக்கக் கூடாதல்லவா.....ஒருவேளை கல்லூரிக்கு நான் வேலையில் சேருவதற்கு முன்னால்  படித்திருப்பாரோ .....

சிறப்பு விருந்தினர் பேச அழைக்கப்பட்டதும் அரங்க மேடையில் அமைக்கப்பட்டிருந்த போடியம் பக்கம் வந்து பேச ஆரம்பித்தார்.

அவர் ," நான் இந்துக்கல்லுரியில்  1974 முதல் 77 வரை பிஎஸ்சி கணிதம் படித்தேன் "

.அவரது ஆசிரியர் பெயர்களை எல்லாம் சொன்னார். என்பெயரையும் சொன்னார்.நான் எடுத்த பாடம் பற்றிச் சொன்னார்.......

மூன்றாம் வருடத்தில் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களை  தொகுத்துச் சொல்லும் வேளையில் என் பெயரைச் சொன்னபோது சற்று காதுகளை கூர்மையாக்கி கேட்க முயன்றேன்.

"எல்லா ஆசிரியர்களிடமும் ஆட்டோகிராப் வாங்கினேன்.அனைவருமே ஆங்கிலத்தில் எழுத பொன்னப்பன் சார்  மட்டுமே தமிழில் எழுதினார்.அவர் எழுதிய அந்த வரிகள் இன்றும் என் நினைவில் இருக்கிறது. தாயை வணங்கு ....நேசி ....நீ உயர்ந்திடுவாய்.. .. பேசிக் கொண்டே போனார்.

என் கண்கள் கனிந்தன...மனம் நெகிழ்ந்தது.

நான் அந்த அரங்கத்தில் இருந்ததை அவர் அறிந்திருக்கவில்லை.மேடையை அலங்கரித்துக் கொண்டிருந்த அனைவருமே கை நீட்டி நான் இருப்பதை சுட்டிக்காட்ட அவர் அங்கிருந்தே எனைப் பார்த்து சிரிக்க , பதிலுக்கு என் கையினை உயர்த்தி வணக்கம் சொன்னேன்.

அதன்பிறகு மாணவர்களுக்கு பயனுள்ள பல கருத்துக்களைப்  பேசினார். .  கூட்டம் முடிந்ததும்  அவரிடம் போய் என் அன்புகளைப் பகிர்ந்து கொண்டேன்.

அதன்பிறகு அவர் மனைவியை அழைத்து என்னை அறிமுகப்படுத்தினார்.

அவர் மனைவியும்  நான் எழுதிய என் வரிகளை தனக்கு மொழி தெரியாவிட்டாலும் அந்த ஆட்டோகிராபை தன்னிடம் காண்பித்து கணவர் பெருமையாகச் சொன்னதை என்னிடம் சொன்னபோது நான் அடைந்த குதூகல உணர்வு விவரிக்க முடியாத எல்லையை அடைந்தது .

இந்த நாள் எனக்கு ஓர் இனிய நாள்.

பத்மஸ்ரீ பட்டம்  கிடைத்தது போன்ற உணர்வு.

ஆயிரம் ஆசிரியர்கள் போதித்தாலும் ஒரு மாணவன் உயர்வு பெறுவது அவனது தனித் திறமையால் மட்டுமே என்பதை நான் நன்கு அறிவேன்.
அந்த ஆண்டுகளில் மிகவும் கட்டுப்பாட்டுடன் ஆசியர்கள் நடந்து கொள்ளவேண்டும் என்பது எனக்கு அறிவுரைக்கப்பட்டது. கண்டிப்பது  கணிதத் துறையின் ஆசிரியர்கள் மாணவர்கள் நன்கு பரிணமிக்க வேண்டும்  என்பதற்காக மட்டுமே. இன்றும் அதனால் மன மகிழ்வாய் வாழ்கிறேன்.

கிட்டத்தட்ட 37 ஆண்டுகள் கழித்து சாதனைகள் பல படைத்த ஒரு முன்னாள் மாணவர் அவர் படித்த கல்லூரியில் சிறப்பாக வரவேற்கப்பட்டு .சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டு தன் முன்னாள் ஆசிரியர்களை பெருமையாகப் பேசுவதும் அதனை செவிமடுத்துக் கேட்கும் பாக்கியம் ஆசிரியனாய் இருந்த, எனக்குக் கிடைத்த இந்த வாய்ப்பு ஒரு வரப்பிரசாதமே.

நான் இருப்பது அவருக்கு தெரியாமல் எனைப்பற்றிப் பேசியது ......ஒரு பெரிய அதிர்வு என் மனதினுள்ளே .....

ஒரு மாணவனால் பாராட்டப்பட்டு இன்று பலருடைய மனங்களில் என் பெயர் உயர்வாய் காட்சி அளிக்கிறது என்றால் அது சிவமயம் தான்.

அவர் வீட்டை அலங்கரிக்கும் அலங்காரக்  காட்சிப் பெட்டியில் மூன்று முக்கியமான பொருள்கள் அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன.

 ஒன்று. இந்துக் கல்லூரியில் அவருக்கு கிடைத்த பரிசு.

இரண்டாவது அவருக்கு இந்தக் கல்லூரி ஆண்டுவிழாவில் அளித்த நினைவுப்பரிசு.

மூன்றாவது "என்றோ  எழுதிய என்வரிகள்."

ஆண்டவன் இந்தக் கல்லூரியில் பணியாற்றிய எனக்கு எதுவுமே இனிமேல் தரவேண்டாம்.இனிய இந்த நினைவுடன் இனி வரும் நாட்களை இன்பமாய் கழித்திடுவேன்.

என் சிவனுக்கு வாழ்த்து கூறி முடிக்கிறேன்.

"பாரதம் உன் கையில் வரும் நாள் தொலைவில் இல்லை .தழைக்கட்டும் நமது நாடு ..."

தாய்மையை என்றும் வணங்குவோம் .....

உயர்ந்திடுவோம் ......

Monday, March 17, 2014

கர்நாடகப் பயணம் - இரயில் பயணம் செய்த நாங்கள்----

மார்ச் மாதம் ஒன்றாம் தேதி காலையில் கண்மலர்ந்த போதே நாலாம் தேதி மங்களூர் போவது பற்றிய சிந்தனை வந்து ஒட்டி விட்டது. முன் பதிவு செய்த காத்திருப்போர் வரிசைப் பட்டியல் என்னவானது.... அவர்களுக்கு இருக்கை-படுக்கை வசதி கிடைக்கவில்லையென்றால் என்ன செய்வது?

அது எப்படியும் கன்பர்ம் ஆயிரும் கவலை வேண்டாம்.... ஆர் எ சி கிடைத்தால் போரும் அட்ஜஸ்ட் பண்ணிக்கிடலாம்..... டிக்கட் நெட்டில் எடுத்து வெயிட்டிங்க் லிஸ்டில் இருந்தால் கான்சலாயிரும்.... ஆனா இந்த டிக்கட் கவுண்டர்லதானே டிக்கட் எடுத்திருக்காங்க... ஆதலால் அதை வைத்து பயணம் செய்யலாம்.... இல்லை ரிஸ்க் எடுக்கக்கூடாது.... தட்கல் டிக்கட் எடுத்திரலாம்.... இப்படி ஆளாளுக்கு தெரிந்தோ தெரியாமலோ சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

பியென்னார் தெரிந்தால் நாம் நெட்டில் பாத்துரலாமே என்ற எண்ணம் என்னை சாமியிடம் அதனைக் கேட்கத் தூண்டியது....கேட்டேன்.... மிகக் குறுகிய நேரத்தில் எவ்வித மறுப்போ சலிப்போ இல்லாமல் அது டிக்கட்டின் நகலாய் என்னிடம் வந்தது....

பார்த்தேன்..கணினியின் வாயிலாக.... பகீர் என்றது பார்த்ததும்.... சாலையில் அசையாமல் நிற்கும் கனரக வாகனம் தரும் அதிர்ச்சி போல் இருந்தது எனக்கு. அந்த டிக்கட்டின் வரிசை எண் அன்றும் காத்திருக்கவே சொல்லிக் கொண்டிருந்தது.... ஈக்யூ மூலம் முயற்சிக்கலாம்....ஒரு நண்பரிடம் சொல்லலாம்... ஆனால் இரண்டு வாரத்துக்கு முன்னால் மூன்று பேருக்கு அவர் முயற்சியில் தான் குஜராத் செல்ல வழி பிறந்தது....இப்போ நான் சொன்னால் இந்த ஆளுக்கு வேறே ந்துவேலையே இல்லையா.... என்று சொன்னால் கூட பரவாயில்ல.... ஒன்றுமே செய்யாம இருந்தா என்ன செய்வது..... சரி இன்னொரு நண்பரிடம் சொல்வோம் என நினைத்தால் அதுவும் நடக்காது.... என் பேரன் குஜராத் செல்ல உதவியது அவரல்லவா ! நான் சொன்னால் செவிடன் காதில் ஊதிய சங்கொலியாகிவிடும்.... என்ன செய்ய.....நாந்தானே அவர்களிடம் கேட்கக்கூடாது....மனம் மிக வேகமாய் செயல் பட்டது.... எனது அத்தானிடம் விசயத்தைச் சொன்னேன்.... அவர் மூலம் தகவல் சொல்லி முயற்சி செய்ததில் பலன் கிடைத்தது.... மூன்றாம் தேதி கணினி இன்னொரு கோச்சில் இரண்டு பெர்த் கிடைத்தது பற்றிய தகவல் தந்தது....

தகவல் சாமிக்குப் போனது.... அவர் என்னிடம் சொன்னார்...“ அவர்கள் உங்கள் பக்கமே இருந்தும் தூங்கியும் வரட்டும்.... அந்த இரண்டு பெர்த்திலும் ஆல்வாயில் இருந்து வரும் சசியும் அவரது மனைவியும் இருந்து கொள்வார்கள்.....”

ஒருவழியாய் இறையருளால் பயணம் செய்பவர்கள் மனது போல் இனிமையாய் இடம் கிடைத்தது...பயணம் தொடங்கும் நாள் மார்ச்சு மாதம் நான்காம் தேதி,செவ்வாய்கிழமை.......

(அடுத்த பிளாக்.....பார்க்கலாமே....)

Sunday, March 16, 2014

கர்நாடகப் பயணம்............

நவம்பர் மாதம் நானும் குவைத் சாமியும் பேசிக்கொண்டிருக்கும்போது கர்நாடகத்தில் உள்ள கோவில்கள் ,அங்குள்ள சிறப்புக்கள் , உடுப்பி கோவிலுக்கு போய் வந்தது பற்றி நான் குறிப்பிட்டேன். அப்போ அவர், “ நீங்கள் தர்மசாலா வுக்குப் போயிருக்கிறீர்களா என்று கேட்டார்.

திருப்பதியில் மகா அன்னதானத்தைப் பற்றிதான் கேட்கிறார் என மனதில் நினைத்துக் கொண்டு நானும், ஆமாம் போயிருக்கேனே.... நான் சாப்பிட்டிருக்கேன்.....திருப்பதி கோவிலில் சாமி கும்பிட்டு வெளியே வரும் போது டோக்கன் தந்தார்கள்.........என்றெல்லாம் கூறும்போதே அவர் என்னிடம், “ நான் சொன்னது கர்நாடகாவில் உள்ள தர்மஸ்தலம்...” என்றார்.

போனதில்லை என்று சொன்னேன்.

“மார்ச் மாதம் போலாமா, வாருங்கோ உடுப்பி, மூகாம்பிகை, எல்லாம் போய் வரலாம் என்றார். எத்தனை பேர் வேண்டுமானாலும் வாருங்கோ....நாலாம் தேதி போணும் . ஒம்பதாம் தேதி வந்துரலாம்”

போனவருடம் 2013-ல் அவர் மகன் திருமணத்துக்கு எங்களை அழைத்துச் சென்றார். எல்லா முக்கிய இடங்களுக்கும் போய் வந்தோம். திரும்பவும் போகவா என்ற மனக் குழப்பம் என் மனதில் தோன்றியதால் ஒன்றும் பேசாமல் அமைதியாய் இருந்து விட்டேன்.

நாட்கள் சில கடந்தன.... சாமி வந்து, “ வருபவர்களின் பெயரும் அவர்களது வயதையும் எழுதித் தரும்படி” கேட்டார்.

என் உறவினர்கள் வருவார்கள். நான் கேட்டு சொல்கிறேன். ஆனால் நாங்கள் வரவில்லை என்றேன்.

அதற்கு அவர் சம்மதிக்கவில்லை. கண்டிப்பாய் வந்தே ஆக வேண்டும் என்று வற்புறுத்தினார்.

நாங்கள் எட்டு பேர் வருவதாகச் சொல்லி பெயர் கொடுத்தேன். டிசம்பரில் முன் பதிவு செய்தார். நாட்கள் கடந்தன.... பெப்ருவரி மாதம் பதினேழாம் தேதி என் மனைவி என்னிடம், “ நம்ம கூட வருவதற்கு இரண்டு பேர் ஆசைப் படுகிறாங்க... டிக்கட் அவர்களே எடுத்துக் கொள்வார்கள்.... சாமிட்ட கேட்டுப் பாருங்களேன்...”

சாமியின் மகனிடம் இந்த விசயத்தைக் கூறினேன். பிரச்சினை ஒன்றும் இல்லை. மங்களூரில் இருந்து பஸ்ஸில் அல்லது வேனில்தான் போகணும். அதில் இடம் இருக்காண்ணு  கேட்கணும் என்று சொல்ல........ நான் சொன்னேன், “ நாம் பஸ்ல அட்ஜஸ்ட் பண்ணி இருந்துக்கலாம்...”.....

சாமிக்கு ஈ-மெயில் அனுப்பினேன். அனுப்பி பத்து நிமிடம் கூட ஆயிருக்காது...
சாமி அவரது மகனுக்கு போனில் தகவல் கொடுத்து செய்ய வேண்டியதைச் செய்யும்படி சொல்லவே..... எல்லாம் முறைப்படி நடந்தது.... ருபாய் வாங்கவில்லை..... இரயில் டிக்கட் வெயிட்டிங் லிஸ்டில் முன் பதிவு செய்யப்பட்டது...... இப்போ நாங்கள் பத்து பேர்....... சாமியின் குடும்பத்தில் நால்வர், அவர் டிரைவர் சுதாகர், ஹோட்டல் ஊழியர் நாராயணன், குவைத்தில் பணியாற்றிய ஒருவரும் அவர் மனைவி மற்றும் அவரது இரண்டு நண்பர்கள் குடும்பம்( நால்வர்)...... மொத்தம் இருபத்து இரண்டு பேர்....

மார்ச் மாதம் நான்காம் தேதி காந்திதாம் எக்ஸ்பிரஸ்ஸில் பயணம் ஆனோம்.