Thursday, May 19, 2011

எந்தன் கண்ணில் கட்டி ஒன்று வந்ததே

 
Posted by Picasa


கண்ணில் என்ன வீக்கம்...கக்கட்டியா? ஒரு ஓட்டுத்
துண்டை உரைத்துப்போடு சரியாயிடும். போட்டேன்.
ஒட்டுத்துண்டுதான் கரைந்து காணாமல் போனது.

சிறு செங்கல் துண்டு ஒன்றை கண்ணில் சுற்றிக்
கிணற்றில் போடச்சொன்னார்கள். அந்தத் துண்டு
கரைவது போல் கட்டிக் கரைந்துவிடும். .செங்கல்துண்டு
கிடைத்தது. கிணறு.....கஷ்டப்பட்டு கொண்டு போட்டேன்.
கிணற்றில் போட்ட கல் கரைந்ததா....தெரியாது. ஆனால்
கண்னில் உள்ள கட்டி கரையவே இல்லை.
முன்னதை விடப் பெரியதாய் மாறி இருந்தது. +

வலது கை விரலை இடது உள்ளங்கையில் வைத்து
தேய்த்து சூடானதும் விரலில் கட்டியின் மேல்
வைத்தால் கட்டி போய்விடும்.....காலையில்
துப்பினியை தேய்த்தால் தேய்ந்து விடும்....

நாட்டு மருத்துவர் எண்ணெய் தந்து தலையில்
தேய்த்து குளிக்கச் சொன்னார். எண்ணைய் தீர்ந்தது
ஆனால் கட்டி ஆணவத்துடன் அப்படியே இருந்தது.

எனக்கு இப்போது கட்டியை பிடித்துப்போயிற்று...
Extra fitting ஒன்று இருந்து விட்டுப் போகட்டுமே
என்ற மன நிலை... நாட்கள் நகர்ந்தன்.....

கண்ணில் கண்ணாடி போடுவதற்காக என் மகன்,ஏப்ரில் 12
செவ்வாயன்று கண்மருத்துவ மனைக்குப் போகும் போது
காரில் எல்லோரும் போனோம். பெயரைப் பதிவு செய்யும்போது
என்னைக் கேட்காமலே என் பெயரையும் 50/-ருபாய் கொடுத்து
பதிவு செய்து அட்டையை என்னிடம் தந்தான் என் மகன்.
ஒரு வித எரிச்சலுடன் இருந்த என்னை அழைத்துப் போனாள் வெண்ணிற ஆடை
தரித்த பணிப்பெண்....Vision test , Pressure test, blood test எல்லா சோதனைகளும் முடிந்தன. வெறும் கட்டிதான். கீறி எடுத்து விடலாம் என்றார்கள்.
மருத்துவரைச் சந்திக்கு முன் என் முன்னால் சுவரில் கண்ணில்
இருக்கும் கட்டியின் படம் கேன்சர் கட்டி என்ற பெயருடன்
என்னை பயமுறுத்திக்கொண்டே இருந்தது.

என் மனம் அதற்கு ஒப்பாமல் கட்டியுடனே திரும்பினேன்.....
ஒரு மாத காலத்தில் எனக்கு கிடைத்த இலவச ஆலோசனைகள்
என் மனதை மிகவும் நோகடித்தது. என் பேரனுக்கும் அது
விளையாட்டுப் பொருளானது. மனதை திடப்படுத்தினேன்.
நாள் குறித்தேன். மே மாதம் 16 2011. திங்கள் காலையில்
ராமு கார் ஓட்ட நெல்லை பயணம் 10.30 மணிக்கு..போகும்
முன் என் அன்னை தந்தை படத்தை வண்ங்கினேன்.....

“என்னா பயம் பயப்படுகிறீர்கள்.... நான் இரண்டு தடவை
ஆப்பிரேசன் பண்னியிருக்கிறேன்......” என் மனைவி

“ உனக்கு பண்ணும்போது நான் பயந்தது எனக்கு மாத்திரம்
தானே தெரியும்” நினைத்துக்கொண்டேன்....மணி

12.15க்கு கட்ட வேண்டிய பணத்தை கட்டினேன்.இரண்டரை
மணிக்கு வரச்சொன்னார்கள்.ஒரு ஹோட்டலுக்குப் போனோம்
அங்கே எங்களை வரவேற்றது முதல் அமைச்சர் பதவிப் பிரம்மாணம் எடுக்கும் குரல்.

சரியாக 3.45 என் கண்ணில் ஒரு திரவத்தை சொட்டு சொட்டாக
விட்டார்கள்.மேசையில் ஏறிப் படுத்தேன். என் பக்கத்தில் மிகவும்
அதிக பிரகாசமுள்ள ஒளி என் கண்ணில் படும்படி ஒரு லைட் ஸ்டேண்ட் வைக்கப்பட்டது. மருத்துவர் அருகில் வந்தாள்...
“இப்போ ஒரு ஊசிபோடுவேன். லைட்டா வலி இருக்கும்...
அதன் பிறகு வலி ஒன்றும் இருக்காது.சரியா?.....”
’ம்ம் ‘ என்றேன்

ஊசி போடும் போது இல்லாத வலி, எடுக்கும்போது
இருந்தது .கண்இமையில் இருந்த கட்டிக்கு காரணமாய்
இருந்த பகுதியை அகற்றியதை உணர்ந்தேன். வலி இல்லை.
“ எல்லாத்தையும் எடுத்தாச்சு....சரியா ?”
நான் THANKS என்றேன். கக்கட்டி இருந்த இடது கண்ணை
மூடி கட்டுப் போட்டு விட்டதால் சற்று தடுமாறி வெளியே
வந்தேன். ஒற்றைக் கண்ணுடன் வீடு வந்து சேர்ந்தேன்...

காலையில் மருத்துவமனையில் சென்று எல்லாம் முடிந்து
வெளியே வரும்வரை பணியில் இருந்த பெண்கள் மிகவும்
அன்பாய் செய்த உதவி, செய்யும் தொழிலில் உள்ள ஆர்வம்,
நேர்மை போற்றுதர்க்குரியது. மிகவும் பாதுகாப்பாக இருந்ததையும் உணர்ந்தேன்.
நான் போனது அரவிந்த் கண் மருத்துவமனை

No comments:

Post a Comment