Wednesday, August 31, 2011

கடுக்கரையும் ட்யூசன் வாத்தியார்களும்

நான் சிறுவனாக இருந்தபோது கீழத்தெரு என் மாமா திரவியம்பிள்ளை வீட்டுக்குப் போனேன்.
ஆவ்லோடு விளையாடப்போன நான் ஒரு பள்ளிக்கூடமே நடந்தது கொண்டிருப்பதைப் பார்த்து அதிசயத்து நின்றேன்

அந்த வீட்டின் மங்களாவில் வட்ட மேசை. அதன் முன்னே உள்ள செயரில் ஒருவர் இருந்தார். அவர் சொல்லிக் கொடுக்க அவர் முன்னால் நின்ற இருந்த பலர் படித்துக் கொண்டும் எழுதிகொண்டும் இருந்தனர்.

அவர் தான் சேகரன் வாத்தியார். அவரது அப்பா சங்கர வைத்தியர்.சேகரன் சாருக்கு ஹோமியோவைத்தியமும் தெரியும் .அவர்கள் இருந்தது நாணுபிள்ளை என்பவரது வீட்டில். நாணுபிள்ளையின் மகன் தான் மலையாளி ராகவன் பிள்ளை.

இதுபோல் பலர் கடுக்கரையில் இருந்தார்கள். எனக்கு தெரிந்தவர்கள் சிலர்:....

வடக்குத்தெருவில் தேவர் வாத்தியார் ஒருவர் உண்டு. அவர் பெயர் தெரியவில்லை.

புதுகுணத்தான் என்று இரத்தின புரத்தில் இருந்து ஒருவர் ட்யூசன் எடுத்தார். அவர் பெயின்றில் அழகாக எழுதுவார். ஸ்கெயிலில் பெயரை எழுதித் தருவார். அதற்கு கட்டணம் வசூலித்து விடுவார்.

சுந்தரம் குரு என்று ஒருவர் உண்டு.அவர் மன்ணினால் பொம்மைகள் செய்வார்.நான் அவரிடம் சில நாட்கள் படித்திருக்கிறேன்.

அதன் பிறகு தனபாலன், சுவாமிதாஸ் என்று பலர் ட்யூசன் எடுத்தார்கள்

கடுக்கரையில் அந்தநாட்களில் நடந்த திருமணச் சடங்கு


கல்யாண மண்டபம் இல்லாத காலம் கடுக்கரையில் 1973 வரை திருமணச் சடங்குகள் அவரவர் வசதிக்கேற்ப ஊரிலேயெ நடந்தன.

மணமேடை ஒன்று நமது ஊர்வகை ட்ற்ஸ்டிடம் உண்டு. மரத்தால் ஆன மணமேடை அதை பிரித்தும் சேர்த்தும் வைக்கும்படியான அமைப்பில் இருக்கும்.குறைந்த வாடகை தான். மணமேடையை வீட்டின் முற்றத்தில் அல்லது வைப்பதற்கு வசதியான இடத்தில் கொண்டு போய் அதனை ஆசாரியை வைத்து ஒண்ணிப்பார்கள்(சேர்ப்பார்கள்).இட வசதி இல்லையென்றால் ஆக்குப்பெரையில் ஒரு இடத்தில் மணமேடையைப் பொருத்துவார்கள்.

ஆக்குப்பெரை என்பது தென்னை ஓலையால் வேயப்படுவதாகும்.அதில்தான் தான் சாப்பாடு பந்தி வைப்பார்கள். சாப்பாடு பொங்குவதற்கு தனியாக சமையல்காரரை நியமித்து அதற்கு என்று தனியாகப் பெரையும் போடுவார்கள்.

சமையலுக்குத் தேவையான பாத்திரங்கள் நம்து ஊரில் உண்டு. அதனை வாங்கி வைத்தவர்கள் வடக்குவாச்செல்லி அம்மன் கோயில் ட்ற்ஸ்டிகளாக இருந்த ஒட்டடுக்கு வீடு பிச்சைக்காரன்பிள்ளை என்ற திருச்சித்தம்பலம் பிள்ளையும் கீழத்தெரு திரவியம்பிள்ளையும் தான்.

திருமணநாளுக்கு முந்தின நாள் சாயந்திரம் 6 மணிக்கு மேல் அந்த பெரையில் காய்கறிகள் இருக்கும். காய்கறிகளை வெட்டுவதற்கு ஊர்மக்களை அழைப்பார்கள். எல்லா மக்களும் அங்கு குறிப்பிட்ட நேரத்தில் கூடி காய்களை வெட்டுவதற்கு தயாராக இருப்பார்கள். ஊர் முதலடி வந்து அவர் முதலில் ஒரு காயை எடுத்து வெட்டுவார். “சரி,... எல்லோரும் காய்கறி வெட்டுங்க...” என்று கூறியதும் காய்கறி வெட்டுவார்கள்.

எனக்குதெரிந்து முதலடியாக இருந்தவர் வடக்குதெரு ஆறுமுகம்பிள்ளை. அவர் காலமான பின் எனது அப்பா ஆறுமுகம் பிள்ளை.1974-ல் கல்யாண மண்டபம் வந்து விட்டது. எனது திருமண மறுவீடு எங்கள் வீட்டில் பெரை போட்டுதான் நடந்தது 1975-ல்

பல பெரியவர்களிடம் பேசியதில் 1947 க்கு முன்னால் பல்லக்கில் மாப்பிள்ளையை வைத்து ஊர்வலம் போவதுண்டு என்ற தகவலைக் கூறினார்கள்

திருமணம் முடிந்த மறுநாள் 7-ம் நீர்ச் சடங்கு நடைபெறும்.மஞ்சள் நீர் ஒரு பெரிய வார்ப்பில் தயாராக வைத்திருப்பார்கள்.அத்தான், மைத்துனர்கள்,மதனி, சம்மந்தி ஒருவருகொருவர் மீது விட்டு விளையாடுவார்கள்.இப்போது அந்த விளையாட்டெல்லாம் இல்லை.

கடுக்கரையும் ஊர்மக்களின் தேசப்பற்றும்

கடுக்கரை குமரி மாவட்டத்தின் ஒரு மூலையில் உள்ள ஒரு சிற்றூர்.திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்த ஒரு கிராமம்.இந்த சின்ன ஊரிலிருந்து பலர் இந்தியாவின் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றினார்கள் என்பது நமக்குப் பெருமையான ஒன்று.

வடக்குத்தெருவில் தாணுபிள்ளை,புதுகுளத்தெரு வன்னியன், மேலத்தெரு ராமைய்யாபிள்ளையின் மகன் மணி, அழகப்பன் ராணுவத்தில் சேர்ந்து பனியாற்றினார்கள்.

விமானப்படையில் பள்ளிக்கூடத்தெரு அனந்தராமன்பிள்ளை, வடக்குத்தெரு போஸ், கீழத்தெரு திரவியம்பிள்ளையின் மகன் கிருஷ்ணன் சேர்ந்தார்கள்.

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழிருந்தாலும் பாரதநாட்டின் மீதும் சுதந்திரம் கிடைக்க பாடுபட்ட தேசியத்தலைவர்கள் மீதும் அதிக மதிப்பு வைத்திருந்தனர்

 கடுக்கரை ஊர் மக்கள். சுபாஷ் சந்திர போஸ் வாசிப்பு சாலை என்ற நூலகம்,மகாத்மாகாந்தி நூல்நிலையம் ஊரில் இருந்தது. காந்தியடிகளின் சுதேசிப் பொருளை ஆதரிக்க பலர் கதராடைகளை அணிந்தனர்.

 சேத்திரபாலன் ஒரு முடி திருத்தும் கலைஞர்.அவர் ஒரு தேச பக்தர். தன் வாழ்நாள் முழுவதும் கதராடையை மட்டுமே அணிந்து வந்தார்.அவரது மகனின் பெயர் சுபாஷ் சந்திர போஸ்.

என் அப்பா காந்தியின் தீண்டாமைக் கொள்கையில் பிடிப்பு கொண்டவர். நாங்கள் சேத்திரபாலனை அண்ணன் என்றும் பண்டாரம் என்பவரை தாத்தா என்றுதான் கூறுவோம்.

 1948-ம் ஆண்டு ஜனுவரி மாதம் பெருமாள் கோயில் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற செய்தி வருகிறது.அதைக் கேட்ட மக்கள் சோகத்தில் மூழ்கினதால் திருவிழா நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டன. மறுநாள் மாலையில் ஊர்மக்கள் ஒன்றுகூடி மௌன ஊர்வலமும் இரங்கல் கூட்டமும் நடத்தினார்கள் .  

Friday, August 26, 2011

கடுக்கரையும் இந்துக் கல்லூரியும்

கடுக்கரையில் பிறந்தவர்களைப் பற்றி எழுத வேண்டும் என நினைத்து இன்று காலையில் பெங்களூரில் எனது மருமகன் லேப்டாப்பில் பதிவு செய்து கொண்டிருந்த வேளையில் சரியாக 11 மணிக்கு எனக்கு நாகர்கோவிலில் இருந்து சதா போண் பண்ணிப் பேசினார். “இந்துக்கல்லூரிசங்க தேர்தலுக்கு கடுக்கரை ஆறுமுகம் பிள்ளை தலைமைக்கு போட்டி இல்லை”என்ற மகிழ்ச்சியான செய்தியை அவர் சொன்னார். உடனே நான் கடுக்கரைக்கும் இந்துக் கல்லூரிக்கும் உள்ள தொடர்பினை எழுத நினைத்தேன்..... எழுதுகிறேன்...

1952-ம் ஆண்டு இந்துக் கல்லூரி உதயமானது. உதயமான முதல் ஆண்டில் இன்றெர்மிடியேட் வகுப்பில் கடுக்கரையில் இருந்து படித்த மாணவர் பிள்ளையார்கோயில் தெரு கட்டியாபிள்ளையின் மகன் செல்லப்பன்.ஆரம்ப காலங்களில் படித்த மாணவர்களில் எனக்குத் தெரிந்தவர்கள் கீழத்தெரு ராசப்பன்(ஆறுமுகம் பிள்ளை) ,சொர்ணப்பன்(ஈஸ்வரபிள்ளை),தெக்குத்தெரு வேலாயுதம்பிள்ளை (குமரி),தாமோதரன்பிள்ளை(சுப்பிரமணியபிள்ளை),சுப்புக்குட்டியாபிள்ளையின் மகன் நாகேந்திரபிள்ளை(தம்புரான்).இவர்களில் இந்துக் கல்லூரியின் உயர்ந்த பதவிகளைப் பெற்றவர்ஆறுமுகம்பிள்ளை.கல்லூரி ஆட்சிக்குழுவின் செயலாளாராக திறம்பட பணியாற்றியபின் 2002-ல் இருந்து இன்று வரை கல்லூரியின் ஆட்சிக்குழுத் தலவராக இருக்கிறார்.1996-ல் இவர் இயக்குனராகத் தேர்ந்தெடுக்கபட்டார்.பொன்விழா ஆண்டின் போது தலைமையேற்று நடத்திய இவரது தலைமையில் தான் வைரவிழாவும் நடை பெறப்போகிறது என்பது பெருமையான விசயம்.

கடுக்கரையில் தெற்குத்தெரு பேச்சினாதபிள்ளை வேதியல்துறைத் தலைவராகவும் முதல்வராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

வட்க்குத்தெரு மாதேவன்பிள்ளை,ஆறுமுகம் பிள்ளை(ராஜேந்திரன்),நான் உட்பட இந்துக் கல்லூரியில் படித்தோம்.பின் அதே கல்லூரியில் வெவ்வேறுதுறைகளில் ஆசிரியராகப் பணியாற்றினோம்.நான் கணிதத்துறையில் தலைவராக பணியாற்றி ஓய்வு பெற்றேன். வடக்குத்தெரு தாணப்பன்(நீ.தா.கிருஷ்ணன்) ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றார்.
பெரியவீட்டு நாகேந்திரனும் சாஸ்தாங்குட்டியும் கல்லூரியில் உதவியாளர்களாகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்கள்..நான் ஓய்வு பெற்றபின் ஆட்சி மன்றக் குழுவில் இயக்குனராகப் பணியாற்றி வருகிறேன்..

நம் ஊரில் இருந்து பலர் படித்து பட்டம் பெற்று பல ஊர்களிலும்,நாடுகளிலும் பணியாற்றுகின்றனர். தெக்குத்தெரு ஈ.பி-ல் வேலை பார்த்த முருகனின் மகள் ஆறுமுகம் அம்மாள் M.Sc;Mathematics -ல் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திலேயே முதல் ரேங்க் பெற்றது கல்லூரிக்கும் கடுக்கரைக்கும் பெருமை சேர்த்தது.பெருமாள் கோவில் திருவிழாவில் கணிதத்துறைத் தலவர் தலைமையில் பாராட்டுக்கூட்டமும் நடந்தது.

இந்துகல்லூரி உதயமாக ஒத்துழைத்த பெரியவர்களுக்கு கடுக்கரை கீழத்தெரு திரவியம்பிள்ளை
( பெருமாள் பிள்ளை),எனது அப்பா ஆறுமுகம்பிள்ளை மற்றும் சிலர் முழு ஒத்துழைப்பு கொடுததார்கள்.நமது ஊரில் உள்ள பெருமாள் கோவில் ,வடக்குவாச்செல்லி அம்மன் கோயில் ட்றஸ்டும் சேர்ந்து 1952-ல் 5000/- ருபாய் கொடுத்து ‘ஏ-கிளாஸ்’ Share holder -ஐ பெற்றது,

திரவியம் பிள்ளையும்,ஆறுமுகம் பிள்ளையும் ‘பி-கிளாஸ்’ பங்குத் தொகையாக 1000/-அளித்து பெற்றனர்.மேலும் கே.எம்.மகாதேவன்பிள்ளை,கே.எம்.அணஞ்சபெருமாள் பிள்ளை,கே.பி.அனந்தபத்மனாப பிள்ளை,ம.மாதேவன் பிள்ளை,ம.வேலப்பன்,தி.மாதேவன் பிள்ளை பங்கு தாரர்கள்.எனது அப்பா ஆட்சிகுழுவில் உதவித்தலைவராகவும் பொருளாளராகவும் பணியாற்றினார்கள்.கே.எம்.மகாதேவன்பிள்ளை,ம.மாதேவன் பிள்ளை,ம.வேலப்பன் இயக்குனர்களாக இருந்தனர். இப்பொழுது ம.மாதேவன்பிள்ளையின் மகன் சதா (மகராஜ பிள்ளை) பொருளாளராக பணிபுரிந்து வருகிறார்.

கடுக்கரை ஊர் மாணவர்கள் மட்டுமல்ல....நாஞ்சில் நாட்டு மாணவர்களுக்கும் கல்வியைக் கொடுத்த இந்துக் கல்லூரி வைர விழாவினை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது.

வெள்ளிவிழா,கோல்டன் ஜூப்லி சமயத்தில் நானும் பணியில் இருந்தேன் என்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

கடுக்கரையில் பிறந்து அரசுப் பள்ளியில் படித்து வெளியூரில் படித்துப் பட்டமும் பெற்று இந்துக்கல்லுரியின் தலைமைப் பீடத்தை அலங்கரித்த மறைந்த டாகடர் சொ.பேச்சிநாதபிள்ளையையும்,இன்றும் ஒரு சிறந்த நிர்வாகத்தலைவர் என்ற பெயருடன் ஆட்சி செய்து கொண்டிருக்கும் இஞ்சினியர் ஆறுமுகம் பிள்ளையையும் கடுக்கரை என்றும் நினைவில் வைத்திருக்கும் .கடுக்கரை உயர்கல்விக்கு அளித்த பங்கு மிகவும் மகத்தானது.

இன்று கல்லூரியில் கடுக்கரை ஊர் பங்கு தாரர்கள்;-

பெருமாள் கோயில் ,வடக்கு வாச்செல்லி அம்மன் கோயில் ட்றஸ்றிகள்

பெ.மெய்க்கும்பெருமாள் பிள்ளை(காந்தி)
பெ.ஆறுமுகம் பிள்ளை(ராசப்பன்)
ம.மகாரஜபிள்ளை(சதா)
ஆ.பொன்னப்ப பிள்ளை(தங்கப்பன்)
த.மகராஜபிள்ளை(ம.வேலப்பன்-ன் மகன், மோகன்)
மா.திருச்சித்தம்பலம் பிள்ளை.

கடுக்கரை சுடலையாண்டி வைத்தியர்

கடுக்கரையில் மருத்துவ வசதி இல்லாத நாட்கள்.1950-65 -ல் பெரிய மருத்துவ வசதி வேண்டுமானால் நாகர்கோவிலுக்கோ அல்லது பூதப்பாண்டிக்கோ செல்ல வேண்டும்.

நாடிபிடித்து பார்த்து அவசியப் பட்டால் நாகர்கோயிலுக்கு போய் டாக்டரிடம் பாருங்கள் என்று அறிவுரை கூறி அனுப்பி வைக்கும் ஒரு வைத்தியர் கடுக்கரை ஊருக்கே வைத்தியம் பார்த்தவர் உண்டு.அவர்தான் சுடலையாண்டி வைத்தியர்.அவருக்கு ஒரே மகன். பெயர் முருகன்.

காய்ச்சல் வந்தால் அவர் மருந்து தருவார்.விளையாடும்போது கீழெ விழுந்து காயம் பட்டவர்களுக்கு தைக்க வேண்டியிருந்தால் தைக்கவும் செய்து குணப்படுத்திவிடுவார்.

ஊருக்குள் அவருக்கு மதிப்பு கூடுதல்.அன்பாகப் பேசுவதும் ,மிகக் கோபப்பட்டு பேசுவதும் அடிக்கடி அவருடைய சிறிய மருத்துவமனைக்கு அருகில் போனால் கேட்கலாம்.மலைக்கு போய் மரம் வெட்டும் தொழிலாளர்கள்,விவசாயத் தொழிலாளர்கள்,கூலிவேலை பார்ப்பவர்கள்,எல்லோருக்குமே மிகவும் குறைந்த கட்டணம் தான்.

நான் எனக்கு சுகமில்லை யென்றால் முதல் மருத்துவம் அவரிடம்தான்.என் பையன்களுக்கும் அவர்தான்.

பெரிய டாக்டர்கள் இன்செக்ஸன் மருந்து தந்தால் அவரிடம் கொடுத்து இன்செக்ஸன் போடுவது உண்டு.

அவரது மகனை டிப்லொமா படிக்க வைத்தார்......

அவர் மறைந்த பின்னும் அவரை அடிக்கடி நினைத்த்ப் பார்க்கிறேன்.

கடுக்கரை பெருமாள் தேவர்

கடுக்கரையில் பல் வேறு இனத்தவர்கள் இருந்தாலும் மதம் என்னவோ ஒரே மதம், இந்து மதம் தான்.
எல்லா விழாக்களிலும் குடும்ப திருமண சடங்குகளிலும் எல்லோருமே கலந்து கொண்டு ஒரே
குடும்பமாக வாழ்ந்து வந்தார்கள்.

அப்போது காடுகளுக்கு சென்று வேட்டையாடும் பழக்கம் உண்டு.ஒரு சிலரிடம் நாட்டுத்துப்பாக்கி உண்டு. அதர்க்கான லைசன்ஸ் எல்லாம் அவர்களிடம் உண்டு.தேவர் ஒருவரும் துப்பாக்கி வைத்திருந்தார். அவர் தினமும் காட்டுக்கு போவார். சானல் பக்கம் மாடு மேயும்போது புலிகள் அவற்றைத் தாக்கி கொல்லும் நிகழ்ச்சிகள் எல்லாம் அவ்வப்போது நடக்கும்.

ஒருதடவை பெருமாள்த்தேவர் காட்டுக்குள் சென்றபோது ஒரு புலி இவரைதாக்க முற்பட்டபோது தன் துப்பாக்கியால் தன்னைக் காப்பாற்ற புலியினைச் சுட்டார். ஆச்சரியம்.... புலி செத்து விட்டது. உடனே ஊருக்கு கொண்டு வந்து ஒரு வாகனம் போல் அதனை ஊர் தெரு முழுவதும் சுற்றினார்கள்.எல்லோரும் பணம் பரிசாக கொடுத்தார்கள்.

புலி நகம் ,தோல் எல்லாம் விரும்பிய மக்கள் வாங்கிச் சென்றனர்.

நான் அவரைத் தனியாக அவர் வீட்டில் போய் பார்த்து ருபாய் கொடுத்தேன்.

என்னை வீட்டுக்குள் கூட்டிக் கொண்டுபோய் எனக்கு அழகான புலி நகம் இரண்டு தந்தார். என்ன செய்வது...? எனக்கு வேண்டாமே...!அவர், “ நீ இதை அப்பாட்ட கொண்டு கொடு”.

எனக்கு தேவரை மிகவும் புடிக்கும்.அவருக்கும் என்னைப் பிடிக்கும்....அவர் மிகவும் அன்பாகத்தந்தார்.

நான் அதனை என் அப்பாட்ட கொண்டு கொடுத்தேன்....அப்பா அதனை வாங்கி வைத்துக் கொண்டார்.

அய்யோ...! அவருக்கு ருபாய் கொடுக்கணுமே..மீண்டும் அவர் வீட்டுக்குப் போனேன்.

நான் கொடுத்ததை வாங்கவில்லை.அவர், “அப்பமே ருபாய் தந்தேல்லா...அதுவே கூடுதல் தான் .நானும் என் பிள்ளையும் பட்டினி கிடக்காமல் இருக்கிறோம் என்றால் அதற்கு காரணமே அப்பாவும் உங்க குடும்பம்தான். நான் உனக்கு தருவதற்காகத்தான் அதைத் தனியாக எடுத்து வைத்தேன்.ருபாய் வேண்டாம்போ....”

‘வறுமையிலும் கொடுப்பது’...ஒரு பெரிய விசயம். இருப்பவன் கொடுப்பது அதிசயம் இல்லை....தேவர் தந்ததுதான் அதுவும் வைத்திருந்து கேட்காமலே தந்ததை என்ன வார்த்தைகளால் பாராட்டுவது....அந்த நகங்கள் என் நெஞ்சினை அதிக வருடங்கள் வருடிக் கொண்டிருந்தன.....அதைப் பற்றிப் பேசும்போதெல்லாம் தேவர் என் நினவில் வந்து போகிறார்.

கடுக்கரையில் நான் பார்த்த முதல் பச்சை ட்யூப் லைட்

கடுக்கரையில் அப்போது மின்வசதி இல்லை.பள்ளிக்கூடம் விட்டதும் வீட்டில் போய் பையை வைத்துவிட்டு விளையாடப் போவது வழக்கம்.விளையாட்டு, இருட்டு எங்களை விரட்டுவது வரை தொடரும்.

அன்றும் அது போல் ஒருநாள் இருள் கவ்வியதும் களிப்பதை நிறுத்தினோம். அந்த சமயத்தில் அந்தப் பக்கமாக வந்த வயது முதிர்ந்த முதியவர் எங்களை நோக்கி,“ மேலத்தெரு மங்களா வீட்டில் கரண்டு வந்து விளக்கு எரிகிறது....போய் பாருங்கோ”...

நம்ப முடியவில்லை... இருந்தாலும் நாங்கள் அங்கே போய் பார்க்க மிகவும் ஆவலாகப் போனோம்.எங்கள் கண்களையே எங்களால் நம்ப முடியவில்லை....ஆம் அங்கு குண்டு பல்பும் பச்சை நிற ட்யூப் லைட்டும் எரிந்து கொண்டிருந்தது...இது எப்படி...அந்த வயதில் ஒன்றுமே புரியவில்லை....

அந்த வீட்டில் உள்ள ஒருவர் எங்களை கூட்டிக்கொண்டு போனார்....அவரது வீட்டின் ஒரு பக்கத்தில் கிராமபோண் பெட்டிக்கு முன்னே ஒரு ஸ்டூலில் இருந்தவாறே ரெக்கார்டு (இசைத்தட்டு} போட்டுக் கொண்டிருந்தான்.சற்றுத் தள்ளி ஒரு பெட்ரோல் எஞ்சின் உறுமிக்கொண்டிருந்தது...அந்த எஞ்சின் தான் பல்ப் எரிவதர்க்கு காரணம்...

பெரியவர்களும் சிறியவர்களும் வந்து அதிசயமாகப் பார்த்துக் கொண்டு போனார்கள். நாங்கள் அந்த இடத்தை விட்டு எங்கும் நகரவே இல்லை....பெட்ரோல் தீர ஆரம்பித்ததும் உறுமல் சத்தம் குறையவே அங்கிருந்த ஆள் ஒடி பெட்ரோல் டின்னை எடுத்து வந்தான். பெட்ரோலை விடுவதற்கு முன்னரே எஞ்சின் சத்தம் நின்று விட்டது.உடனே அவன் தடித்த நூல்கயிற்றின் ஒரு முனையை எஞ்சினில் உள்ள ஒரு வட்ட வீலில் இறுக்கமாக வைத்துவிட்டு சுற்றினான்.பின் மறுமுனையைப் பிடித்து மிக வேகமாக பலமாக இழுத்தான். அந்த வீல் சுற்றியதும் எஞ்சின் மறுபடியும் உறும ஆரம்பித்தது .அணைந்த விழக்குகள் மீண்டும் எரிய ஆரம்பித்தன..... பிரிய மனமில்லாமல் அந்த இடத்தை விட்டுக் கிளம்பினோம்....

அந்த காலத்தில் நாகர்கோவிலில் இருந்துதான் ஸ்பீக்கர் செட் வரணும். இவர்களுக்கு வந்தது பாபுஜீ ரேடியோ சர்வீஸ்....

Saturday, August 20, 2011

கடுக்கரையில் என் பாட்டி

என் அன்னையின் குணங்களில் என்னைக் கவர்ந்ததும் இன்றும் நான் நினைத்து பெருமைப் படுவதும் ஒன்று உண்டென்றால் அது ,‘யாரைப் பற்றியும் குறை கூறாமல் இருப்பதுதான்’.

அவளுக்கு வேதம் தன் கணவரின் வாக்குதான்.கோயிலுக்கெல்லாம் செல்வதில்லை.வீடுதான் கோயில்.அழகாக ஆங்கிலத்தில் கையெழுத்திடுவாள் ‘பகவதி’ என.

அம்மாவைக்கேட்டேன்.,’ “ நீ எத்தனாங்கிளாஸ் வர படிச்சிருக்கம்மா”

“2-ஆம் கிளாஸ்”

“அப்பம் இப்படி இங்க்ளீஸ்ல அழவோல ஒப்பு போடுகியே எப்படிம்மா”

“ அது அப்பா தாளில் எழுதி அதைப் பார்த்து நான் பழகினது”

ஆம்.. என் அம்மைக்கு தெரிந்த இங்கிளீஸ் B A G A V A T H Y யில் உள்ள 7 எழுத்துகள் தான்.

அதில் B மிக அழகான style -ல் எழுதுவாள்.

நான் அதிகம் குறும்பும் தவறும் செய்தாலும் அம்மை என்னைக் கண்டிக்க உபயோகிப்பது ‘அப்பாட்ட சோல்லிருவேன்’ எனற ஒன்றுதான்.சொல்ல மாட்டாள் என தெரியும்.சொன்னதும் இல்லை. அடித்ததும் இல்லை...நாளாக நாளாக அவளது அன்பே எனை பண்படுத்தியது.

இப்படிப்பட்டவளைப் பெற்றவள் தான் பொன்னம்மாள்.தாயைப்போல பிள்ளை.ஆம் என் ஆச்சியைப் போல என் அம்மா. அவள்பிறந்த இடம் கேரளாவில் வைக்கம் என்ற ஊரில். அதனால் அவளை வைக்கத்தாச்சி என்றால் தான் தெரியும்.அவள் பெயர் தான் எனக்கு பொன்னப்பனானது.எனது மருமகன்(அக்காள் மகன்) பேரும் அவள் பெயர்தான்.

நாங்கள் அவள் வீட்டுக்கு தினமும் பொவோம். போனால் பைசா கிடைக்கும். போகும் வழியில் பட்டிகளின் உபத்திரவம் கூடுதல்.பட்டி எங்களை கடித்து விடுமே. அழகப்பன் எனபவருக்கு குருவி சுடும் துப்பாக்கி உண்டு. அவனிடம் கூறி பட்டிகளை சுட்டுக் கொல்ல அணா கொடுப்பாள்.அவன் பட்டியை வேறு விதமாக கொன்று மாத்தி விடுவான். நல்ல காலம் மே
னகா அப்போ இல்லை. நாங்கள் போகும்பாதையில் எந்தத் தெருப்பட்டியும் கிடையாது.மந்திரி வரும் போது சாலை இருக்குமே அது போல.

5 அணா என் ஆச்சியிடம் வாங்கி இரண்டு போஸ்டல் கவர் வாங்கி ஒன்றில் என் விலாசம் எழுதி அதை இன்னொரு எம்.ஜி.ஆர் விலாசம் எழுதி அவருடைய போட்டொ கேட்டு எழுதிய லெட்டரும் வைத்து அனுப்பினேன்.போட்டொ அவர் கைஎழுத்துடன் எனக்கு வந்தது.

இந்துக்காலேஜுலெ நான் பி.யூ.சி படித்துக் கொண்டிருந்த நேரம். ஹாஸ்டலில் இருந்த என்னை என் அப்பா வந்து “ஆச்சியைப் போய் பாத்துட்டு வா. சுகமில்லை”.

நான் உடனே போய் பார்த்தேன்.நினைவு தப்பும் சமயம் போனதால் என்னை ஆச்சியால் அடையாளம் காண முடியவில்லை.இரண்டு நாட்களில் எங்களை விட்டு பிரிந்தாள்.அப்போது அவள் வயது 88 .போகவேண்டிய வயசுதான். ஆனாலும் நான் தனிமைப்பட்டு போனது போல ஒரு பயம்.அவளது பரிவும் பாசமும் வரிகளால் விவரிக்கப் பட முடியாது.ஊரில் இருந்தால் பாட்டியை பாராமல் ஒரு தினம் கூட கழிந்தது இல்லை.இன்றும் தினமும் நான் வணங்கும் தெய்வங்களுள் பொன்னம்ம ஆச்சியும் உண்டு.

கடுக்கரை பிச்சை சார்

கதராடை,கண்ணில் கண்ணாடி,கையில் புகைந்து கொண்டிருக்கும் 5 பூ மார்க்கு பீடி இவையெல்லாம் ஒருவரின் அடையாளங்கள். கதர் ஆடைக்கே அழகு சேரும் இவர் அணிந்திருக்கும்போது.எத்தனையோ பேரின் கண்ணில் கண்ணாடி இருந்திருக்கும் .ஆனால் இவர் கண்ணில் கண்ணாடி இருக்கும்போது அந்தக் கண்ணாடிக்கே தனி அழகு.சிலர் சிகரெட்டைக் கூட பீடிபோல் குடிப்பார்கள்.இவர் பீடி குடிப்பதை பார்த்தால் சிகரெட் குடிப்பது போல் இருக்கும்.தான் அணிந்திருக்கும் ஜிப்பாவில் தங்க ஊக்கு மின்னும் ; பைலட் பென்னின் கேப் தங்க நிறத்தில் ஜொலிக்கும்.பென் மாத்திரமே வைக்ககூடிய அளவுள்ள தனி பாக்கட் உடுப்பின் இடது பக்கத்தில்....அதில் பைலட் பென்னின் கேப் தங்க நிறத்தில் ஜொலிக்கும் .ஆங்கிலம் சரளமாக பேசவும் தெரிந்த ஒரே ஆள் அன்று கடுக்கரையில் ஒருவர்தான் உண்டு.அந்த ஒருவர்தான் இவர்.

1953 -ல் பள்ளிக்கூடத்துக்கு செல்லும் எங்களுக்கு குரூகுலம் ஒன்று உண்டு.அதுதான் நாங்கள் இரண்டாவதாக அதிக நேரம் இருக்குமிடம்.அவர் ஊரில் இல்லாவிட்டாலும் கூட குரூகு.லம் திறந்திருக்கும்.அங்கு படித்த எவனுமே சோடை போகவில்லை.கையெழுத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால் அவரது மாணவர்களின் கையெழுத்தும் நேர்த்தியாக இருக்கும். அவரது மேசையில் ஒரு சின்ன பிளாஸ்டிக் டப்பி இருக்கும்.அந்த டப்பி கீழே சிறிய வட்ட வடிவமும் வாய்ப்பகுதி பெரிய வட்டமாகவும் இருக்கும்.அதில் தான் ஒரு கட்டு ஐந்து பூ மர்க்கு பீடி இருக்கும்.பார்ப்பதற்கே அழகாக இருக்கும்....

ஊரில் நடக்கும் எல்லா விழாக்களிலும் கலந்து கொண்டு சிறப்பாக நடத்த ஒத்துழைக்கும் இவரின் நையாண்டிப் பேச்சும் அனைவரையும் வசீகரிக்கும்.சிரிக்காமல் பேசி கேட்பவர்களை சிரிக்க வைக்கும் லாகவம் அவருக்கு மாத்திரமே உரித்தான ஒன்று.

இவர்தான் பிச்சை சார்....எங்களுக்கு சார். ஊருக்கு கண்ணாடி பிச்சை...காங்கிரஸ் கட்சிக்கு கடுக்கரை மகாதேவன் பிள்ளை.தோவாளைத்தாலுக்,மாவட்ட அளவிலும் இவர் ஒரு காங்கிரஸ் பிரமுகர்.கடுக்கரை ஊர் சொஸைட்டியில் தலைவராய் இருந்த இவர் மானில அளவில் நிலவள வங்கியில் டைரக்டராக இருந்தார்.டெல்லியில் சங்க பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொண்டு ஆங்கிலத்தில் சொற்பொழிவாற்றினார்.30 வருடத்திற்கும் அதிகமாக நிலவள வங்கியில் அங்கம் வகித்ததை பாராட்டி கலைவாணர் அரங்கில் அமைச்சர் கே.எ.கிருஸ்ணசாமி தலைமையில் நடந்தவிழாவில் கௌரவிக்கப்பட்டார்.

தெ.தி.இந்துக்கல்லூரியில் டைரக்டராக இருந்த மகாதேவன்பிள்ளை எல்.ஐ.சி ஏஜென்றாகவும் இருந்தார்.கடுக்கரை பஞ்சாயத்து வார்டு தேர்தலில் நின்ற போது இவரது சின்னம் “கை”.இரட்டைக் காளை சின்னம் மாறி கை சின்னம் பின்னாட்களில் காங்கிரஸின் சின்னமாகி விட்டது.

Sunday, August 7, 2011

நாஞ்சில் நாட்டில் 1948-ல் இருந்த கல்வி முறை

பறக்கை ஊர் கு.காந்தி சென்னை போர்ட் ட்றஸ்டில் செயலாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்ற,காந்திய நெறிப்படியே வாழ்ந்து வரும் 80 வயதினை கடந்த பெரியவர் . அவர் ஒரு கல்விமான். எப்பொழுதும் படிப்பதுதான் அவரது வேலை.இன்றய நாட்டு நடப்புகளையும் தினமும் பத்திரிகை படிப்பதன் மூலம் தெரிந்து வைத்திருப்பவர்.

சமச்சீர் கல்வி பற்றி நான் அவருடன் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அவருடைய பள்ளிக்கூட அனுபவத்தை என்னிடம் பகிர்ந்து கொண்டார்.எனக்கு அவர் சொல்வதை கேட்டு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

தெரிசனங்கோப்பு ஊரைச் சார்ந்த எனது ஆரம்பக் கல்லூரி ஆசிரியர் 80 வயதுக்கும் அதிகமான திரு. பகவதிப்பெருமாள் சார். அவர் வீட்டுக்குப் போய் இந்தக் கல்வி முறையைப் பற்றி அவரிடம் பேசினேன். இருவரும் சொன்னது ஏகதேசம் ஒன்றாகவே இருந்தது. அவர்கள் மூலம் அறிந்தவை தான்........

ஆரம்ப வகுப்புகள் அதாவது ப்ரைமரி ஸ்கூளில் 1 முதல் 4-ம் வகுப்பு வரை (தமிழ் அல்லது மலையாளம்)தான் உண்டு.கல்விக் கட்டணம் எதுவும் கிடையாது. 4-ம் கிளாஸ் ஜெயித்தபின் அதன் பிறகு படிக்க வேண்டிய வகுப்பை தமிழ் பள்ளிக்கூடத்தில் சேர்ந்து 5-ம் கிளாஸ் படிக்கணுமா அல்லது இங்க்ளீஸ் பள்ளிக்கூடத்தில் சேர்ந்து preparatory class படிக்கணுமா என தீர்மானிக்கணும்.

தமிழ் பள்ளிக்கூடத்தில் 5 முதல் 9 வரை படிக்கலாம். கல்விக்கட்டணம் மாதம் தோறும் திருவிதாங்கூர் நாட்டு நாணயம் 14 சக்கரம் (அரை ரூபாய்).
5 முதல் 7 வரை Lower primary school .8 & 9-Higher school
5 முதல் 7 வரை தமிழ் ஆசிரியர்கள் புலவர்கள் பட்டம் பெற்றவர்கள்.
7-ம் வகுப்புக்கு லோயர் பப்ளிக் எக்சாமினேஷன் நடைபெறும். 9-ம் வகுப்புக்கு Higher Public Examination. 8 and 9 க்கு தமிழ் ஆசிரியர்கள் பண்டிதர்கள்.

ஆங்கில பள்ளிகூடத்தில் Preparatory class ,Ist form to IIIrd form வரை மாதம்தோறும் இரண்டே கால் ருபாய் ஃபீஸ் கொடுத்து Middle school-லும் IVth,Vth,VIth form வரை High school-லும் படிக்கலாம். IVth முதல் VIth வரை எல்லாப்பாடங்களும் English medium. மாதம் Fees 5/-. பெண்களுக்கு மூணே முக்கால் ருபாய்தான் கட்டணம்.

VIth form மாணவர்களுக்கு Selaection Examination உண்டு. அவர்கள் அதில் ஜெயித்தால் தான் ஆண்டு இறுதியில்தேர்வு எழுத முடியும். அதன் பிறகு ENGLISH SCHOOL LEAVING CERTICATE ஒன்று புத்தக வடிவில் கொடுப்பார்கள்.E.S.L.C book-ல் IVth form mark & Vth form mark, School Average, State Average இருக்கும் .VIth form mark-டன் State Average mark-ம் இருக்கும்.மாணவனின் அங்க அடையாளம் குறிப்பிடப்பட்டிருக்கும்.ஈ.எஸ்.எல்.சி தேறியவுடன் கல்லூரியில் சேர்ந்து Intermediate,two year B.A course,two year M.A course படிக்கலாம்

தமிழ் பள்ளியில் படித்தவர்கள் 9-ம் வகுப்பு தேறியவர்கள் மேற்கொண்டு படிக்க வேண்டுமானால் தனியாக தமிழ் அறிஞர்கள் மூலம் கல்வி கற்று மதுரை தமிழ் சங்கம் நடத்தும் தேர்வு எழுதி புலவர், பண்டிதர் பட்டம் பெறலாம். இவர்கள் பள்ளியில் ஆசிரியராக பணிபுரியலாம். பி.ஓ.எல் தமிழ்நாட்டில் மதுரையிலோ, அண்ணாமலை பல்கலைகழகத்திலோ
படிக்கலாம். பின் அவர்கள் கல்லூரியில் ஆசிரியர்களாகப் பணிபுரியலாம்.

தமிழ் பள்ளியில் படித்தவர்கள் ஆங்கிலப் பள்ளியில் படிக்க விரும்பினால் 9-ம் வகுப்பு தேறியவர்கள் ஆங்கிலப் பள்ளியில் IVth form-ல் சேர்ந்து தொடர்ந்து படிக்க வேண்டும்.
1948 வரைதான் இந்தக் கல்விதொடர்ந்ததாக சொன்னார்கள்.ஆனாலும் சரியா? தெரியவில்லை,

அந்த சமயத்தில் பள்ளிக்கட்டணம் கட்ட முடியாமல் பலர் பள்ளிக்கு செல்வதில்லை. யாருக்கும் ஜாதி அடிப்படையிலோ, வேறு எந்த வகையிலும் Fees Concession கிடையாது.தமிழ் பள்ளியில் படித்தவர்கள் தமிழை அதிகம் படித்தார்கள். மிகவும் கடினமான sylubbus.

தென் திருவிதாங்கூரில் முதல் ஆங்கிலப் பள்ளி RINGLE TAUBE Hr.Sec. School, Mylaudy.
It had been established in the year 1809.

Thursday, August 4, 2011

கடுக்கரை திரவியம் பிள்ளை

திரவியம் பிள்ளை என்ற K.B.பெருமாள்பிள்ளை

மிடுக்கான கம்பீரமான ராணுவ தளபதி போன்ற நடை. ஒரு தலைவருக்கே உரிய தோற்றம்.தவறு செய்தவர்களைக் கண்டிக்கும் வல்லமை . இவற்றுக்கெல்லாம் சொந்தக்காராரான ஒருவர் யாரென்று கேட்டால் 1940-50 களில் வாழ்ந்த கடுக்கரை சிறுவர்கள் கூடச் சொல்வார்கள் அதுக் கீழத்தெரு திரவியம் பிள்ளை என்று.

பிற்காலங்களில் அவரை வீட்டில் போய் பார்த்தால் எளிமையான ஒரு சிறந்த பக்திமானாகத்தான் பார்க்க முடியும்.அன்பின் உருவமாக இருக்கும் அவர் சின்ன பிள்ளைகளையும் அருமையாக வரவேற்பார்.

கடுக்கரை ஊரிலிருந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு இவர் ஒருவர்தான் போய் வந்த காலம் அது. சபரிமலையில் விஷமிகள் சிலரால் தீவைக்கப்பட்டு கோவில் சேதமுற்றபோது நெஞ்சு பொறுக்க முடியாமல் உடன் தானே சபரிமலைக்கு போய் அய்யப்பனை வணங்கி விட்டு வந்தவர் இவர். பஸ் வசதி இல்லாத நாளில் 41 நாட்கள் விரதம் இருந்து மிகவும் கடினமான யாத்திரை மேற்கொண்டவர்.இருமுடிக் கட்டு கட்டிப் போகும் போது ஊரே திரண்டு மேளதாளத்துடன் அவரை வழி அனுப்புவார்கள். கடுக்கரையில் அய்யப்பன் கோயில் கட்டவெண்டும் என்று அதற்காக பாடுபட்ட நிமிடக்கவி உடையார்பிள்ளைக்கு மிகவும் உறுதுணையாக நின்றவர்.

1939-1945 இரண்டாம் உலக மகாயுத்தம் நடந்த காலத்தில் நீல உடையில் அய்யப்பன் கோவிலிக்குப் போய் பின் மதுரை கோவிலுக்குப் போகும்போது இவரையும் இவருடன் போன மாணிப்போத்தியையும் ஜப்பான் உளவாளிகள் என தவறாகப் புரிந்து கொண்டு போலீஸ் கைது செய்து விட்டது.அதன் பிறகு நாகர்கோவில் பிரமுகர் சிவதாணு பிள்ளை தலையிட்டு அவர்களை அழைத்து வந்தார்.

கீழக்கோவில் (சிவன்கோவில்) அந்த நாட்களில் சிறப்புடன் நடப்பதற்கு காரணமாக இருந்த ஒரு சிலரில் இவர் முக்கியமானவர்.


திருவிதாங்கூர் சமஸ்தானத்தோடு கன்னியாகுமரி மாவட்டம் இணைந்திருந்த காலகட்டம்.
பஞசாயத்து போன்ற அமைப்பு இல்லாத காலமது .Village Uplift Committee என்ற ஒரு அமைப்பு உண்டு. அழகியபாண்டியபுரம் ,காட்டுப்புதூர், கடுக்கரை ஊர் வளர்ச்சிக்காக திருவிதாங்கூர் மகாராஜாவால் ஏற்படுத்தப்பட்டது..அந்த அமைப்பின் தலவராக இருந்தவர் இந்தப் பெரியவர் K.B. பெருமாள் பிள்ளை என்ற திரவியம் பிள்ளைதான். கடுக்கரையில் ஏற்றமும் இறக்கமும் இருக்கும் பகுதிகளில் படிகள் தான் இருந்தன. எல்லா படிகளையும் மாற்றி கருங்கற்களால் ஆன RAMP (சப்பாறு) -ஆக மாற்றிஅமைத்தது இவர் தான்.

கீரங்குளத்தில் ஒரு கிணறு வெட்டப்பட்டது இவருடைய முறச்சியால் தான்.

கடுக்கரைக்கு பஸ் வருவதற்கு அந்த சமயத்தில் ட்ரான்ஸ்போர்ட் கமிஷ்ணராக இருந்த தண்டம் வேலுப்பிள்ளை எனபவரைப் பார்த்து KSRTC பஸ் வர முயற்சி எடுத்து வெற்றி பெற்றவர். முதல் பஸ் ஊருக்கு வந்த போது அந்த ட்ரைவரையும் அதிகாரிகளையும் தன் வீட்டுக்கு அழைத்து போய் விருந்து அளித்து கவுரவித்தார்.

அதிக அநியாய நில வரியான மணியங்கரத்தை ரத்து செய்ய போராடத் துணிந்தவர்களுக்கு மிகவும் துணயாக நின்றார்.மணியங்கரம் கண்டன மாநாடு நடத்த தீர்மானித்து
கடுக்கரையிலேயே இவரைத்தலைவராகக் கொண்டு மணியங்கர கமிற்றி ஒன்று செயல்பட்டது. பெரும் அளவில் விவசாயிகளின் தங்கள் சொந்தப் பிரச்சனைக்காக கூடிய ஒருமகாநாடு கடுக்கரையில் நடந்தது.அதுதான் முதல் மாநாடு.1949 ஏப்ரல் மாதம் 3-ம் தேதி நடந்த இந்த மாநாட்டை திறந்து வைத்தவர் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை.

மாநாட்டில் தமிழக அமைச்சராய் இருந்த கோட்டாறு ஊரைச் சார்ந்த நாஞ்சில் கி. மனோகரன் மாணவராக இருந்த போது கலந்து கொண்டு சொற்பொழிவாற்றினார்

பூதை ஜீவாவும் திரவியம்பிள்ளையும் ஒரே பள்ளியில் படித்த தோழர்கள்

1956 ,நவம்பர் 1 -ல் நாஞ்சில் நாடு கேரளாவில் இருந்து பிரிந்து தமிழ் நாட்டோடு சேர்ந்தது.கடுக்கரையில் மின்சாரம் வந்த மூன்று வீடுகளில் ஒன்று இவரது வீடு.மின்சாரம் வருவதற்குமுன்னே இவரது வீட்டில் நடந்த ஒரு விழாவுக்காக மின்னொளியை சின்ன எஞ்சின் மூலம் கொண்டு வந்தார். அதிசயம் போல் அதைக் காணவே ஒரு பெரிய கூட்டம் அவர் வீட்டின் முன்னே நின்றது.

நாகர்கோவிலில் ஒரு கல்லூரி அமைக்கவேண்டும் என முயற்சி எடுத்தபோது கடுக்கரை ஊர்வகை ட்றஸ்டிகளயும், பக்கத்து ஊர்ப்பிரமுகர்களையும் சந்தித்து ஆதரவை பெற பெரு முயற்சி எடுத்தவர் இவர். அந்தக் கல்லூரிதான் தென் திருவிதாங்கூர் இந்துக்கல்லூரி.இன்று அந்தக் கல்லூரியின் தலைவர் இவரது மூன்றாம் மகன் கடுக்கரை ராசப்பன் என்ற பெ.ஆறுமுகம்பிள்ளை(2002-ல் இருந்து இதன் தலைவர்).மூத்தமகன் காந்தி என்ற மெய்க்கும்பெருமாள் பிள்ளை அந்தக்கல்லூரியின் ஒரு B-class share Holder

இவருடைய துணிவுக்கும் வீரத்திற்கும் சான்றாக அமைந்த சம்பவம்

கொள்ளைக்காரன் செம்புலிங்கம் என்ற பெயருடைய ஒருவன் வழிப்பறி செய்வதும் திருடுவதும் தொழிலாலாகக் கொண்டிருந்தான். அவனது பெயரைக் கேட்டாலே ஊர்மக்கள் பயந்து நடுங்குவார்கள்.தன் தோப்பில் செம்புலிங்கம் தேங்காய் திருடுவதை யாரோ வந்து சொல்ல உடனே கீழமலைக்கு பக்கத்தில் உள்ள பண்ணையாவிளைத்தோப்பிற்கு இவர் கிளம்பிப் போய்விட்டார். இவர் தோப்பை நெருங்கும் போது தென்னை மரத்தின் உச்சியில் இருந்தவன் இவர் வருவதைப் பார்த்தான்.தன்னைக் கண்டவுடனே பயந்து ஓடுபவர்களைத்தான் அவன் அதிகம் பார்த்திருக்கிறான். மிகவும் துணிச்சலோடு தோப்பை நோக்கி ஒரு ஆள் வருவதைப்பார்த்து அவனுக்கு ஆச்சரியம் .இன்னார்தான் வருகிறார் என கண்டு கொண்டவுடன் மரத்தில் இருந்து கீழே இறங்க ஆரம்பித்தான்.அவனுக்கு ஆச்சரியமாகவும் இருந்தது...அதே சமயத்தில் பயமாகவும் இருந்தது. அவன் கீழே இறங்கி தரையில் நிற்கவும் திரவியம் பிள்ளை அவனருகே வரவும் சரியாக இருந்தது.

அவன் இவரிடம் ,“ வயறு பசிச்சது அதனால் தான் கருக்கு குடிச்சேன்” என்று கூறி
அவரை தன் இருகைகளாலும் கும்பிட்டு விட்டு தன் பாக்கெட்டில் இருந்த பணத்தை எடுத்து இவரிடம் கொடுத்தான்.

பணத்தை வாங்காமல்,“சரி.... உன் முகத்தைப் பார்க்கத்தான் வந்தேன்...” சொல்லி முடிப்பதற்குள் செம்புலிங்கம் மின்னல் போல எங்கேயோ ஓடிமறைந்து விட்டான்.

இவரது அன்புக்கு சான்றாக நடந்ததும் இழந்த நண்பனின் வேண்டுகோளை தன் ஆயுள் முழுவதும் நிறைவேற்றியதும்

நட்புக்கு இலக்கணமாக திரவியம் பிள்ளை

இவரது நணபர் ஒருவர் வீட்டுப் பிரச்சனை காரணமாக காணாமல் எங்கோ போய்விட்டார். ஓரிரு வாரங்கள் கழிந்து அவர் திருப்பரங்குன்றத்தில் பிளேடால் கழுத்தை அறுத்துத் தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல்கள் வந்தன. செய்தி கேட்டு ஒரு கணம் கூட தாமதிக்காமல் உடனே சென்று செய்ய வேண்டிய எல்லாவற்றையும் செய்து முடித்து விட்டு வந்தார். இறப்பதற்கு முன்னால் தன் மகனை நீதான் வளர்த்து ஆளாக்க வேண்டும் என்று எழுதிய ஒரு கடிதத்தின்படி அந்த சிறுவனை அழைத்து வந்து வளர்த்தார். தன் ஏழு பிள்ளைகளோடு எட்டாவதாக இந்தச் சிறுவனும் அந்த வீட்டில் சொந்த வீட்டுப் பிள்ளை போல் வளர்ந்தான்.

Monday, August 1, 2011

கடுக்கரை தந்த தன்னிகரில்லா அன்புத் தலைவர்

கைவிளக்கு( 15-8,9-1989) வரிகளும் ஊர் பெரியவர் ஒருவர் சொன்னதும்

மக்கள் தலைவர் மறைந்தார்.மறைந்த தலைவரின் இறுதி யாத்திரை 22-8-1989 செவ்வாய் கிழமை காலை 9.30 மணிக்கு அவரது இல்லத்திலிருந்து புறப்பட்டது. அன்று காலையில் ஊரிலுள்ள அனைத்து வியாபார நிறுவனங்களும், அனந்தபுரம் உயர்நிலைப்பள்ளியும் மூடப்பட்டிருந்தது. அந்த தன்னிகரில்லாத தலைவரின் இறுதி ஊர்வலத்தில் பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர். மாணவ மாணவியர் பள்ளிச் சீருடை அணிந்து, கறுப்பு கொடி அணிந்து இருபுறமும் அணி வகுத்து வந்தனர்.கடுக்கரை ஊர்முழுவதுமாக சுற்றி வலம் வந்த போது ஊர்மக்களின் கண்ணீர் அஞ்சலியும் , அத்தோடு பூ மழை பொழிய அந்தத் தலைவருக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.ஒவ்வொருவருமே தன்வீட்டில் நடந்த ஒரு துக்கமாகவே எண்ணி வடித்த கண்ணீரஞ்சலி காண்போர் கண்களை குளமாக்கியது. மக்கள் கடல் வெள்ளம் அலைமோதி சென்றது.

தலைவர் என்றாலே அது ம. வேலப்பன் என்ற தம்புரான் தோழ பிள்ளை தான். ஆம் அவர்தான் கடுக்கரை கிராமப்பஞ்சாயத்தின் முதல் தலைவர்.

இன்று காணும் குடிநீர்திட்டம்,ஆலடி வரை கான்க்ரீட் பாதை, புதிய பஞ்சாயத்து அலுவலகம் எல்லாமே இவருடைய காலத்தில் வந்தவை.புதிய பஞ்சாயத்து அலுவலகம் இருக்கும் இடம் மணியங்கர ஆபீஸ். அது திருவிதாங்கூர் காலத்தில் இயங்கிய அலுவலகம் . முறையாக முயற்சி செய்து பாஞ்சாயத்துக்கு வாங்கியது இவர்தான்.

மணியங்கர ஒழிப்புக்கு மிகவும் பாடுபட்டார். மகாத்மா காந்தி நூல் நிலையத்தின் முதல் செயலாளர். அனந்தபுரம் கிருஷிக சங்கக் காரியதரிசி,குமரி மாவட்ட விவசாய சங்கத் தலைவர், கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர்.

1954-ம் ஆண்டு திரு- தமிழக விடுதலை போராட்டத்தில் தோவாளைத் தாலுகாவில் முதல் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார். ஒரு மாதம் சிறையில் இருந்தார்.போராட்டமே இவர் தலைமையில் தான் நடந்தது. 1981-ல் திரு-தமிழக விடுதலை தியாகிகள் விருதினைசென்னை கலைவாணர் அரங்கில் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் பெற்றார்.

1957-ல் பெருமாள் கோவில் டிறஸ்டி. 1984-ல் தெ.தி. இந்துக் கல்லூரியில் இயக்குனர்.

நாகர்கோவிலில் ரோஷினி நாட்டியாலயா நிறுவனர் பொன்னம்மாள் பெருமாள் அவர்களின் நாட்டிய அரங்கேற்றம் இவர் தலைமையில் நடந்தது.

இந்துக்கல்லூரியில் முதல்வராய் பணியாற்றிய கடுக்கரை திரு. பேச்சினாதன் அவர்கள் டாக்டர் பட்டம் பெற்றதை பாராட்டுவதற்காக கூட்டம் இவர் தலைமையில் கடுக்கரையில் முன்னாள் பஞ்சாயத்துத்தலைவர் ஆறுமுகம்பிள்ளையின் மகன் பொன்னப்பன் வீட்டு மாடியில் நடந்தது

9-4-75 முதல் 12-4-75 வரை நடந்த ஆயினூட்டு தம்புரான் கோயில் ஊட்டு விழாவின் மாலை முரசின் சிற்ப்பு மலரில் “அற்புத விழா” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினார்.

கடுக்கரையில் இருப்பது ஒரே ஒரு சிலை . அது இந்த அன்புத் தலைவரின் சிலை.

Thankappan Arumugaperumal

தினமலர் நிறுவனர் வாழ்க்கை வரலற்று நூலான கடல் தாமரையில் நமது ஊர்ப் பெரியவர்.

கடுக்கரை கே.எம்.மகாதேவன் பிள்ளை

கடல் தாமரை வரிகள்

கடுக்கரை கே.எம்.மகாதேவன் பிள்ளை நவ., 16, 1914ல் பிறந்தவர். விவசாயிகளின் உற்ற நண்பர்.

அப்போது அரசாங்கத்தின் நிலம், மகாராஜாவின் நிலம், மகாராஜா குடும்பத்தாரின் நிலம், பத்மநாப சுவாமிக்கான நிலம் எனப் பாகுபாடு செய்யப்பட்டு, அதற்குத் தனித்தனியான நில வரி கள் விதிக்கப்பட்டன. பண்டார வகை, ஸ்ரீ பண்டாரவகை, ஸ்ரீபாத வகை, கண்டு கிரிஷி இப்படி வரி களுக்குப் பெயர்.

நாஞ்சில் நாட்டின் பெரும் நிலங்கள் பத்மநாப சுவாமிக்கு என ஒதுக்கப்பட்டு அதற்கு, ‘மணியகரம்’ என்ற வரி மிக அதிகப்படி யாக வசூலிக்கப்பட்டது.

இதை எதிர்த்து ஏப்., 3, 1949ல், ‘மணியகரம் கண்டன மாநாடு’ ஒன்றை கடுக்கரையில், நீதிபதி சத்யநேசன் தலைமையில் நடத்தி, மாநாட்டைக் கவிமணி திறந்து வைத்தார். பெரும் அளவில் விவசாயிகள் தங்கள் சொந்தப் பிரச்னைக்காக கூடிய முதல் மாநாடு அது. மணியரகம் நிலவரியில் இருந்து குமரி மாவட்ட விவசாயிகளை விடுவிக்க 18 ஆண்டு போராடி வெற்றி கண்டவர்.

கடுக்கரை உயர் நிலைப்பாடசாலை உருவாகக் காரணமாக இருந்தவர். குமரி மாவட்ட விவசாயிகளுக்காகத் தொடர்ந்து குரல் எழுப்பியவர்.

கன்னியாகுமரி மாவட்ட சிறப்பு ஏடு [ 26-1-1988] என்ற நூலில் உள்ள வரிகள்

திருவிதாங்கூர் நில உடமை சம்பந்தமாகவும் அதன் தன்மைகள் சம்பந்தமாகவும் ஆதாரபூர்வமாக கேள்வி கேட்டு PhD பட்டத்திற்காக ஆராய்ச்சி செய்தவர்கள் இவரைக் கண்டு பல தகவல்களைப் பெற்று பலனடைந்தார்கள்

இவர் கம்யூனிஸ்டு கட்சியில் பற்றுடையவராக , விவசாயிகளின் பிரச்சனையில் ஈடுபட்டு விவசாய சங்கம் காரியதரிசியாக பொறுப்பேற்று,அச்சங்கத்தில் தீவிரமாக செயல் பட்டார்

கடுக்கரையில் K.B. பெருமாள் பிள்ளை அவர்களை தலவராகக் கொண்டு கமிற்றியை ஆரம்பித்து அதன் செயலாளராகயிருந்து அதன் மூலம் விவசாயிகளின் மகாநாட்டைக் கூட்டினார். மணியங்கரம் ரத்து செய்யப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்த வரையில் ரூ.10லட்சம் வரை வரிப்பழு குறைந்தது.