Thursday, August 4, 2011

கடுக்கரை திரவியம் பிள்ளை

திரவியம் பிள்ளை என்ற K.B.பெருமாள்பிள்ளை

மிடுக்கான கம்பீரமான ராணுவ தளபதி போன்ற நடை. ஒரு தலைவருக்கே உரிய தோற்றம்.தவறு செய்தவர்களைக் கண்டிக்கும் வல்லமை . இவற்றுக்கெல்லாம் சொந்தக்காராரான ஒருவர் யாரென்று கேட்டால் 1940-50 களில் வாழ்ந்த கடுக்கரை சிறுவர்கள் கூடச் சொல்வார்கள் அதுக் கீழத்தெரு திரவியம் பிள்ளை என்று.

பிற்காலங்களில் அவரை வீட்டில் போய் பார்த்தால் எளிமையான ஒரு சிறந்த பக்திமானாகத்தான் பார்க்க முடியும்.அன்பின் உருவமாக இருக்கும் அவர் சின்ன பிள்ளைகளையும் அருமையாக வரவேற்பார்.

கடுக்கரை ஊரிலிருந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு இவர் ஒருவர்தான் போய் வந்த காலம் அது. சபரிமலையில் விஷமிகள் சிலரால் தீவைக்கப்பட்டு கோவில் சேதமுற்றபோது நெஞ்சு பொறுக்க முடியாமல் உடன் தானே சபரிமலைக்கு போய் அய்யப்பனை வணங்கி விட்டு வந்தவர் இவர். பஸ் வசதி இல்லாத நாளில் 41 நாட்கள் விரதம் இருந்து மிகவும் கடினமான யாத்திரை மேற்கொண்டவர்.இருமுடிக் கட்டு கட்டிப் போகும் போது ஊரே திரண்டு மேளதாளத்துடன் அவரை வழி அனுப்புவார்கள். கடுக்கரையில் அய்யப்பன் கோயில் கட்டவெண்டும் என்று அதற்காக பாடுபட்ட நிமிடக்கவி உடையார்பிள்ளைக்கு மிகவும் உறுதுணையாக நின்றவர்.

1939-1945 இரண்டாம் உலக மகாயுத்தம் நடந்த காலத்தில் நீல உடையில் அய்யப்பன் கோவிலிக்குப் போய் பின் மதுரை கோவிலுக்குப் போகும்போது இவரையும் இவருடன் போன மாணிப்போத்தியையும் ஜப்பான் உளவாளிகள் என தவறாகப் புரிந்து கொண்டு போலீஸ் கைது செய்து விட்டது.அதன் பிறகு நாகர்கோவில் பிரமுகர் சிவதாணு பிள்ளை தலையிட்டு அவர்களை அழைத்து வந்தார்.

கீழக்கோவில் (சிவன்கோவில்) அந்த நாட்களில் சிறப்புடன் நடப்பதற்கு காரணமாக இருந்த ஒரு சிலரில் இவர் முக்கியமானவர்.


திருவிதாங்கூர் சமஸ்தானத்தோடு கன்னியாகுமரி மாவட்டம் இணைந்திருந்த காலகட்டம்.
பஞசாயத்து போன்ற அமைப்பு இல்லாத காலமது .Village Uplift Committee என்ற ஒரு அமைப்பு உண்டு. அழகியபாண்டியபுரம் ,காட்டுப்புதூர், கடுக்கரை ஊர் வளர்ச்சிக்காக திருவிதாங்கூர் மகாராஜாவால் ஏற்படுத்தப்பட்டது..அந்த அமைப்பின் தலவராக இருந்தவர் இந்தப் பெரியவர் K.B. பெருமாள் பிள்ளை என்ற திரவியம் பிள்ளைதான். கடுக்கரையில் ஏற்றமும் இறக்கமும் இருக்கும் பகுதிகளில் படிகள் தான் இருந்தன. எல்லா படிகளையும் மாற்றி கருங்கற்களால் ஆன RAMP (சப்பாறு) -ஆக மாற்றிஅமைத்தது இவர் தான்.

கீரங்குளத்தில் ஒரு கிணறு வெட்டப்பட்டது இவருடைய முறச்சியால் தான்.

கடுக்கரைக்கு பஸ் வருவதற்கு அந்த சமயத்தில் ட்ரான்ஸ்போர்ட் கமிஷ்ணராக இருந்த தண்டம் வேலுப்பிள்ளை எனபவரைப் பார்த்து KSRTC பஸ் வர முயற்சி எடுத்து வெற்றி பெற்றவர். முதல் பஸ் ஊருக்கு வந்த போது அந்த ட்ரைவரையும் அதிகாரிகளையும் தன் வீட்டுக்கு அழைத்து போய் விருந்து அளித்து கவுரவித்தார்.

அதிக அநியாய நில வரியான மணியங்கரத்தை ரத்து செய்ய போராடத் துணிந்தவர்களுக்கு மிகவும் துணயாக நின்றார்.மணியங்கரம் கண்டன மாநாடு நடத்த தீர்மானித்து
கடுக்கரையிலேயே இவரைத்தலைவராகக் கொண்டு மணியங்கர கமிற்றி ஒன்று செயல்பட்டது. பெரும் அளவில் விவசாயிகளின் தங்கள் சொந்தப் பிரச்சனைக்காக கூடிய ஒருமகாநாடு கடுக்கரையில் நடந்தது.அதுதான் முதல் மாநாடு.1949 ஏப்ரல் மாதம் 3-ம் தேதி நடந்த இந்த மாநாட்டை திறந்து வைத்தவர் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை.

மாநாட்டில் தமிழக அமைச்சராய் இருந்த கோட்டாறு ஊரைச் சார்ந்த நாஞ்சில் கி. மனோகரன் மாணவராக இருந்த போது கலந்து கொண்டு சொற்பொழிவாற்றினார்

பூதை ஜீவாவும் திரவியம்பிள்ளையும் ஒரே பள்ளியில் படித்த தோழர்கள்

1956 ,நவம்பர் 1 -ல் நாஞ்சில் நாடு கேரளாவில் இருந்து பிரிந்து தமிழ் நாட்டோடு சேர்ந்தது.கடுக்கரையில் மின்சாரம் வந்த மூன்று வீடுகளில் ஒன்று இவரது வீடு.மின்சாரம் வருவதற்குமுன்னே இவரது வீட்டில் நடந்த ஒரு விழாவுக்காக மின்னொளியை சின்ன எஞ்சின் மூலம் கொண்டு வந்தார். அதிசயம் போல் அதைக் காணவே ஒரு பெரிய கூட்டம் அவர் வீட்டின் முன்னே நின்றது.

நாகர்கோவிலில் ஒரு கல்லூரி அமைக்கவேண்டும் என முயற்சி எடுத்தபோது கடுக்கரை ஊர்வகை ட்றஸ்டிகளயும், பக்கத்து ஊர்ப்பிரமுகர்களையும் சந்தித்து ஆதரவை பெற பெரு முயற்சி எடுத்தவர் இவர். அந்தக் கல்லூரிதான் தென் திருவிதாங்கூர் இந்துக்கல்லூரி.இன்று அந்தக் கல்லூரியின் தலைவர் இவரது மூன்றாம் மகன் கடுக்கரை ராசப்பன் என்ற பெ.ஆறுமுகம்பிள்ளை(2002-ல் இருந்து இதன் தலைவர்).மூத்தமகன் காந்தி என்ற மெய்க்கும்பெருமாள் பிள்ளை அந்தக்கல்லூரியின் ஒரு B-class share Holder

இவருடைய துணிவுக்கும் வீரத்திற்கும் சான்றாக அமைந்த சம்பவம்

கொள்ளைக்காரன் செம்புலிங்கம் என்ற பெயருடைய ஒருவன் வழிப்பறி செய்வதும் திருடுவதும் தொழிலாலாகக் கொண்டிருந்தான். அவனது பெயரைக் கேட்டாலே ஊர்மக்கள் பயந்து நடுங்குவார்கள்.தன் தோப்பில் செம்புலிங்கம் தேங்காய் திருடுவதை யாரோ வந்து சொல்ல உடனே கீழமலைக்கு பக்கத்தில் உள்ள பண்ணையாவிளைத்தோப்பிற்கு இவர் கிளம்பிப் போய்விட்டார். இவர் தோப்பை நெருங்கும் போது தென்னை மரத்தின் உச்சியில் இருந்தவன் இவர் வருவதைப் பார்த்தான்.தன்னைக் கண்டவுடனே பயந்து ஓடுபவர்களைத்தான் அவன் அதிகம் பார்த்திருக்கிறான். மிகவும் துணிச்சலோடு தோப்பை நோக்கி ஒரு ஆள் வருவதைப்பார்த்து அவனுக்கு ஆச்சரியம் .இன்னார்தான் வருகிறார் என கண்டு கொண்டவுடன் மரத்தில் இருந்து கீழே இறங்க ஆரம்பித்தான்.அவனுக்கு ஆச்சரியமாகவும் இருந்தது...அதே சமயத்தில் பயமாகவும் இருந்தது. அவன் கீழே இறங்கி தரையில் நிற்கவும் திரவியம் பிள்ளை அவனருகே வரவும் சரியாக இருந்தது.

அவன் இவரிடம் ,“ வயறு பசிச்சது அதனால் தான் கருக்கு குடிச்சேன்” என்று கூறி
அவரை தன் இருகைகளாலும் கும்பிட்டு விட்டு தன் பாக்கெட்டில் இருந்த பணத்தை எடுத்து இவரிடம் கொடுத்தான்.

பணத்தை வாங்காமல்,“சரி.... உன் முகத்தைப் பார்க்கத்தான் வந்தேன்...” சொல்லி முடிப்பதற்குள் செம்புலிங்கம் மின்னல் போல எங்கேயோ ஓடிமறைந்து விட்டான்.

இவரது அன்புக்கு சான்றாக நடந்ததும் இழந்த நண்பனின் வேண்டுகோளை தன் ஆயுள் முழுவதும் நிறைவேற்றியதும்

நட்புக்கு இலக்கணமாக திரவியம் பிள்ளை

இவரது நணபர் ஒருவர் வீட்டுப் பிரச்சனை காரணமாக காணாமல் எங்கோ போய்விட்டார். ஓரிரு வாரங்கள் கழிந்து அவர் திருப்பரங்குன்றத்தில் பிளேடால் கழுத்தை அறுத்துத் தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல்கள் வந்தன. செய்தி கேட்டு ஒரு கணம் கூட தாமதிக்காமல் உடனே சென்று செய்ய வேண்டிய எல்லாவற்றையும் செய்து முடித்து விட்டு வந்தார். இறப்பதற்கு முன்னால் தன் மகனை நீதான் வளர்த்து ஆளாக்க வேண்டும் என்று எழுதிய ஒரு கடிதத்தின்படி அந்த சிறுவனை அழைத்து வந்து வளர்த்தார். தன் ஏழு பிள்ளைகளோடு எட்டாவதாக இந்தச் சிறுவனும் அந்த வீட்டில் சொந்த வீட்டுப் பிள்ளை போல் வளர்ந்தான்.

No comments:

Post a Comment