கடம்பூரில் இருந்து 8 மைல் தூரத்தில் கிழக்குத்திசையில் ஒரு சின்ன கிராமம்.அந்தக் கிராமத்தின் பெயர் பசுவந்தனை. அந்த கிராமத்தில்,ஒரு தாய் தான் பெற்றெடுத்த குழந்தையை தன் கணவருடனும் சொந்த பந்தங்களுடனும் கையில் எடுத்துக் கொண்டு குலதெய்வத்தைக் கும்பிட்டு வர ஒருத் தமிழ் மாத உத்திர நட்சத்திரத்தன்று கோவிலுக்குப் போனாள். அந்தக் கோவில் ஒரு அய்யனார் கோவில். கோவில் நடை திறந்ததும் அய்யன் தலையில் ஒரு நாகப்பாம்பு இருந்ததைக் கண்டாள். அதுவரை பெயர் எதுவும் சூட்டப்படாதிருந்த அந்த ஆண் குழந்தைக்குக் குடும்பத்துப் பெரியவர்கள் சொல்லியபடி "நாகபாலன்" என்றும் பெயரிட்டனர்.
அறிவிலும் அன்பிலும் உயர்ந்த நாகபாலனின் பத்தாவது வயதில் அவருடைய தந்தையார் இம் மண்ணைவிட்டு நீங்கி விண்ணையடைந்தார். 5 பெண்களுடனும், 4ஆண்களுடனும் தனியாய் விடப்பட்டாள். கேள்விக் குறியான நாகபாலனின் படிப்புப் பாதிக்கப் படாமல் அவரை அவரது மூத்த அண்ணன் உட்படஎல்லோரும் பார்த்துக் கொண்டார்கள். அண்ணன்களுக்குப் பெரிய வசதி எதுவும் இல்லை. இருப்பினும் நாகபாலனின் கல்விக்காக செலவு செய்தார்கள்.
நாகபாலனை எப்பாடுபட்டாவது பட்டதாரியாய்க் காண வேண்டும் எனத் திட்டமிட்டு, St.Xavier's கல்லூரியில் B.Sc படிக்கச் செய்தார்கள்.
நாகபாலன் தூத்துக்குடிக்குச் சென்ற போது அவருடைய உறவினரும் வ.உ.சிதம்பரனார் கல்லூரி நிறுவனருமான திரு.A.P.C. வீரபாகுவைச் சந்தித்தார். அவர் பாலனிடம்," நீ முதல் வகுப்பு பட்டதாரியானால் உனக்கு M.Sc Chemistry-க்கு இடம் தருவேன்" என்றார்.
B.Sc(Chemistry) பட்டதாரியும் ஆனார். அவரது Grade 'A'. மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு M.Sc க்கு விண்ணப்பம் அனுப்பி முதல் Choice –ஆக V.O.C College பெயரையும் குறிப்பிட்டிருந்தார். கல்லூரியில் முதுகலை வகுப்புகள் ஆரம்பம் ஆனது. ஆனால் பாலனுக்கு Admission Card வரவில்லை. மிகுந்த வருத்ததுடன் தூத்துக்குடிக்குப்போய் திரு.வீரபாகுஅவர்களிடம் முறையிட்டார்.
கல்லூரிக் கட்டணம் கட்டிப் படிப்பைத் தொடர்ந்தார். இரண்டு வருடங்கள் ஓடின. Result வந்து 2 மாதங்கள் கூட ஆகவில்லை. ஆயினும் அவர் அந்தக்கல்லூரியில் ஆசிரியராய் அமர்த்தப்படுகிறார். ஆறு வருடங்கள் வேலை பார்த்தபின் திருமணம் ஆனது. மனைவி நாகர்கோவிலில் உள்ள ஒரு மகளிர் கல்லூரியில் கணித ஆசிரியர்.
இப்போதும் உதவிக்கு வந்தவர் திரு வீரபாகு அவர்கள்தான். அவருடைய அன்பினால் அரவணைக்கப் பட்ட பாலனுக்கு நாகர்கோவில் Migration முறைப்படி தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரியில் ஆசிரியர் வேலை கிடைக்கவும் அவரால் இயன்ற உதவிகளைச் செய்தார்.
காலஓட்டத்தில் பாலன் தான் ஒய்வு பெறும் காலத்தினை நெருங்கும் போது தூத்துக்குடி வ.உ.சி கல்லூரிக்கு பலகலைத் தேர்வு சம்பந்தமாக போகும் வாய்ப்பு கிட்டியது. தாம் பயின்ற பணியாற்றிய கல்லூரியல்லவா .போனார்.
அங்கே ஒரு கட்டிடம் பழையதாய் இருந்தது. வைரவிழாவினை நெருங்கும் கல்லூரிப் புதுப் பொலிவு பெறுகிற இந்த நேரத்தில் அங்கே ஒரு சிறிய HALL பழமை மாறாமல் அப்படியே இருக்கிறது. அதன் மேற்கூரையை செப்பனிட வெண்டுமென்ற திரு வீரபாகுவின் ஆசை அவர் மறைந்தபோதும் கூட நிறைவேற்றப்படவில்லை என்பதனைத் தெரிந்து கொண்ட பாலன் 8-4-2011-இல் ஒரு லட்சம் ருபாயை நன்கொடையாகக் கொடுத்தார். அந்தப் பணமும் காணாது என உணர்ந்த பாலன் மறுபடியும் 19-4-2011-இல் ஒரு லட்சம் நன்கொடையாகக் கொடுத்தார். பாலன் அளித்த நன்கொடையைப் பெற்றுக்கொண்டக் கல்லூரிச் செயலர் பிரமித்துப் போய் ஒரு கடிதம்தனைக் கொடுத்தார்.அந்தக் கடிதம் இதோ
தனக்கு வாழ்வுதந்த ஒரு பெரியவரின் ஆசை நிராசையாய் போய்விடக்கூடாது என்பதற்காக இரண்டு லட்சம் ருபாய் கொடுத்த பாலன் ,மாணவர்களுக்கு பயன்படும் விதமாக MUTA, வ.உ.சி கல்லூரி யூனிட்டுக்கு இரண்டு லட்சம் ருபாய் நிதியையும் கொடுத்தார். கல்லூரி நிர்வாகம் பாலன் அவர்களை கௌரவிக்கும் விதமாக வைரவிழாக் கட்டிடத்தைத் திறக்கும் பணியை பாலன் அவர்களுக்கே அளித்தது.
20-4-2012-இல் திறப்பு விழா நடந்தது. விழாவில் கலந்து கொண்டுப் பிரமித்துப் போன ஜெயராமன், அவருக்கு கிடைத்த வரவேற்பையும் சிறந்த கூட்டத்தையும் அவரைப் புகழ்ந்து பேசிய திரு. சொக்கலிங்கத்தின் உரையையும் கூறியதைக் கேட்டு நான் ஆனந்தம் அடைந்தாலும் அதிசயித்துப் போனேன். அதிசயமே அதிசயப்படும்படியாக அவரது செயல்கள் அமைந்திருக்கின்றன.
தெ.தி.இந்துக் கல்லூரி MUTA UNIT-க்கும் 2 இலட்சம் ருபாய் மாணவர் பயன்படும்படியாக கொடுத்தார். இந்துக் கல்லூரி ஆசிரியர் மன்றத்துக்கும் 50,000/-ருபாய் கொடுத்தார்.
பாலன் …… நாகபாலன்…….இனியும் ஒரு பெயருண்டு.
ஆம்.......அவருக்கு இரு பெயருண்டு. முருகன் என்றொரு பெயருமுண்டு.
அவர்தான் இந்துக்கல்லூரியின் முன்னாள் வேதியல்துறைத் தலைவர், பேராசிரியர் S.முருகன். முருகன் என்றால் அழகன் என்ற பெயரும் உண்டல்லவா........
அழகன் செய்யும் செயல்கள் அனைத்தும் அழகாகவே இருக்கின்றன.