Monday, April 2, 2012

வீடு தேடிப் போய் நன்றி சொன்ன மாணவர்......

எனக்கு எந்த விருதுகளும் கிடைக்க வேண்டும் என விரும்பிய தில்லை.ஆனால் விருதை விட மகிழ்ச்சி தரும் விமர்சனங்கள் ரொம்பவே சந்தோசத்தைத் தந்தது. நம்மை நம்பி கல்லூரியில் சேர்க்கும் மாணவர்களின் பெற்றோரை ஏமாற்றக் கூடாது என்பது தான் என் எண்ணமாய் இருந்தது.
சக ஆசிரியர்கள் என்னை விமர்சிப்பது உண்டு.நான் அதைப் பொருட்படுத்தியதே இல்லை.
எனது ஆசிரியர் ஒருவர் R.S.P. அவர் பிஸிக்ஸ் ஆசிரியர்.அவரது விமர்சனம் எனக்கு பிடித்திருந்தது.....

என்னை ஊக்குவித்த ஆசிரியர்களில் இவரும் ஒருவர்.

நான் கல்லூரியில் வேலைக்கு சேர்ந்த புதிதில் கடுக்கரைக்கு வந்த R.S.P சார் எனது அப்பாவிடம் பேசிக்கொண்டிருக்கும்போது என்னைப் பற்றி சொன்னது.......“ பொன்னப்பனை எல்லோரும் பெருமையாய் சொல்கிறார்கள்...... ஆனால் பொன்னப்பன் எப்பவும் குமுதம்,ஆனந்தவிகடனோடுதான் காலேஜுக்கு வாறான்.......உங்க அப்பாட்ட ஒருநாள் நிச்சயமாக சொல்லிருவேன்னு சொன்னேன்...... சொல்லியாச்சு......” 
 அப்பா சிரிச்சுகிட்டெ இருந்தா..... நானும் சிரித்துக்கொண்டே இருந்தேன்.........
 நான் நாகர்கோவிலுக்கு தாமசத்துக்கு வந்த போது வீடு பாத்து தந்தவர் பிரபாகரன் சார்தான்.....
அவரது அடுத்த வீட்டில் தான் நாங்கள் முதன் முதலாக நாகர்கோவிலுக்கு தாமசத்துக்கு வந்தபோது இருந்தோம்.ஒருவருடம் இருந்த கால கட்டத்தில் நான் அவரைப் பற்றி அதிகமாகத் தெரிந்து கொண்டேன்........
அவர் பலருக்கு உதவி செய்ததை அறிந்து கொண்டேன்.....சத்தம் போட்டு தான் பேசுவார்.....கேட்பதற்கு சற்று கரடு முரடான மனிதரின் பேச்சு போல் இருந்தாலும் இரக்ககுணம் உள்ள மனிதர்.....
நெய்வேலியில் இவரால் படித்து வேலை பார்த்த ஒருவரை தற்செயலாகப் பார்த்தபோது இவர் பலருக்கு உதவி செய்தது தெரியவந்தது.
அவர் ஓய்வு பெற்று போனபின் சந்திப்பது குறைந்து போனது.


மிக ஆச்சரியமாக இருந்தது.....மார்ச்சு மாதம் (2012)
ஒருநாள் நான் கல்லூரியில் வேலை பார்க்கும் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்த போது ஒருவர் வந்தார். வந்தவர் அவரது உறவினர்.
“பிரபா,கொஞ்சம் வெளியே வாயே”னென்று அவரை அழைத்துப் போனார். நான் வீட்டுக்கு வந்து விட்டேன்.
பிரபா என்றால் பெண்ணின் பெயர் போலல்லவா இருக்கிறது.....அவரது ஆச்சியின் பெயர் பிரபாவதியாய் இருக்குமோ.....என் பெயர் தங்கம்.... எனது பெரியம்மாவின் பெயர் தங்கம்மாள்.....  
எங்க ஊரில் என்னை என் அப்பா,அம்மா உட்பட அனைவரும் தங்கம் என்று தானே கூப்பிடுவார்கள்.அது போலதான் இவருக்கும் இருக்கும் என நினைத்த நான்
அடுத்த நாள் அவரிடமே கேட்டேன்.....பிரபாங்கது யாரு ? 
”வீட்டில் என் பெயர் பிரபாகரன் என்று சொன்னவர் மேலும் சொன்ன தகவல்...”எங்க அப்பா இந்துக் கல்லூரியில் B.Sc Chemistry 1969-72-ல் படிக்கும்போது Fees கட்ட முடியாமல் கல்லூரிக்கு போக முடியாத ஒருநிலை ஏற்பட்டது.  Physics பாடத்தில் கூடுதல் மார்க்கு எடுத்த அப்பாவை பாராட்டிட அந்த ஆசிரியர் தேடுகிறார்.....அப்பா கல்லூரிக்கு வராத காரணத்தை அறிந்ததும், அப்பாவை வரச்சொல்லி பணம் கொடுத்து படிப்பை தொடரச் செய்தார்......அன்று பணம் கட்டியதால் தான் அப்பா படிப்பைத் தொடர்ந்து பட்டமும் பெற்றார். 
நன்றி மறப்பது நன்றன்று .....அந்த ஆசிரியரின் பெயர் தான் எனக்கு.....
அந்த ஆசிரியர் R.S.பிரபாகரன்.....எங்க அப்பா அந்த ஆசிரியரை பார்க்கணும்னு சொல்லிக்கொண்டே இருக்கிறார்....”
என் மனதை ஈரமாக்கிய அந்தப் பேச்சு என்னை அந்த ஆசிரியரிடம் உடன்தானே பேசவேண்டும் என்று தூண்டிற்று. பேசினேன்.... ஓய்வான சமயத்தில் இதுபோன்ற இதம்தரும் என் வார்த்தைகள் அவரது காதுகளில் தொலைபேசி மூலம் தேனாய்ப் பாய்ந்தது.
பிரபாவின் அப்பாவின் ஆசையைச் சொன்னதும் அந்த ஆசிரியர் எப்பம்
வேண்டுமானாலும் வரச்சொல் என மகிழ்ச்சியோடு சொன்னார். நான் பிரபாவிடம் சாரின் போன் நம்பரைக் கொடுத்து சார் வீட்டில் இருக்கிறாரா இல்லையா எனத் தெரிந்து கொண்டு போகும்படி கேட்டுக்கொண்டேன்.                     
ஒருநாள் மாலையில் வேலப்பன் என்ற அந்த மாணவர்,தன் மனைவியுடனும் மகன் பிரபாவுடனும் பிரபாகரன் சார் வீட்டுக்குப் போய் பொன்னாடை போர்த்தி மலரும் நினைவுகளில் நனைய வைத்து அவரது ஆசியையும் பெற்று மன நிறைவுடன் திரும்புகிறார்கள்.....
அந்தப் பிரபா யார் ?
அவர் தான் இந்துக்கல்லூரியில் பணியாற்றும் காந்திநாதன்...
எத்தனையோ பிரபா எங்கோ வாழ்ந்து கொண்டிருப்பார்கள்..... காரணம் பிரபாகரன் சாரின் அன்பையும் ஆசியையும் பெற்றவர்களின் எண்ணிக்கை மிக அதிகம்...அவரது வலது கை கொடுப்பது அவரது மற்றொரு கைக்கே தெரியாது......இது மிகை அல்ல.....

No comments:

Post a Comment