Monday, April 21, 2014

முன்னாள் மாணவர் Dr .கே.சிவன் நேசித்த என்னுடைய முத்தான வரிகள்

தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரியின் ஆண்டுவிழா அழைப்பிதழ் என்கையில் ..... தந்தவர் கல்லூரி முதல்வர் .... இடம் தலைவர் அலுவலகம் ...

நான் என்பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த முதல்வரிடம் உங்கள் முதல்வர் அறிக்கை வாசிக்கப்படும் முதல் விழா அல்லவா .... நான் நிச்சயமாக வருவேன் ....உங்கள் அறிக்கையை வாசித்து முடித்த  உடன் நான் போயிருவேன் .......என்று சொன்னேன்.

அடுத்தநாள் காலையில் பெங்களூர் செல்வதால் சில பொருட்கள் வாங்குவதற்காக அன்று கடைகளுக்கெல்லாம்   போகவேண்டியிருக்கு ......

முதல்வர் சொன்னார். "விழா முடிந்து எங்களோடு பிரதம விருந்தினராக வரும் நம் கல்லூரியின் முன்னாள் கணித மாணவர் உட்பட அனைவரும் கலந்து கொள்ளும் மதிய விருந்திலும் கலந்து கொள்ள வேண்டும்" .

 சிரித்துக்கொண்டே சரிஎன்ற பாவனையில் தலையசைத்தேன்.

சிறப்பு விருந்தினர்  Dr .K .சிவன் . திட்ட இயக்குநர் ,(Geosynchronous Satellite Launch Vehicle )GSLV ,VSSC ,திருவனந்தபுரம் .

ஏழு தடவை GSLV செய்த முயற்சியில் மூன்று முறை மட்டுமே வெற்றி கிட்டியது . வெற்றி கிட்டிய ஜனுவரிமாதம் ஐந்தாம் தேதி அன்புடன் GSLV -யை
நாட்டி பாய் என்று குறிப்பிட்டனர்
The GSLV hasn’t been behaving too well and of its previous seven flights only three were successful. So when the GSLV-D5, as today’s mission was labelled, functioned with immaculate precision, its proud Mission Director K. Sivan said, “The naughty boy has become obedient and meticulous.”


தமிழ் நாடு அப்துல்கலாமை தந்தது ,அவர் இந்திய ஜனாதிபதி . சிவதாணுபிள்ளை என் வகுப்புத்தோழர் ......
இதோ எனைமறவா என் மாணவர் சிவன் ..... இவர் நாளை நம் நாட்டை உலகளவில் முன்னிறுத்தும் விஞ்ஞானி. அப்துல்கலாமைப் போன்ற சிறந்த மனித நேயப்பண்பாளர் ......இம்மூவரும் இஸ்ரோ ஞானிகள் .

விழா நாள் 11-04-2014 வெள்ளிக்கிழமை .

நான் வெள்ளிக்கிழமை காலையில் வெளியே கடைகளுக்குப் போய் வாங்க வேண்டிய பொருள்களை வாங்கி விட்டு வீட்டுக்குவந்தேன். அப்போ மணி பத்தரை. நேரமானாலும் பரவாயில்லை......கல்லூரிக்குப் போனேன் .........

"நீராரும் கடலுடுத்த நிலமடந்தை   .....தமிழ்த்தாய் வாழ்த்து  எனை வரவேற்றது.அரங்கிகினுள் போனால் முன்  மூன்று வரிசைகளிலும் ஆளில்லா இருக்கைகள் இல்லை.   மாணவர்கள்      அமர்ந்திருந்த இருக்கைகளில் அவர்கள் எழுந்து இடம்தர  மூன்றாம் வரிசையில் பாதையோரம் முதல்  இருக்கையில் அமர்ந்து மேடையைப் பார்த்தேன்.....

முன்னாள் மாணவரின் முகம் பார்த்தேன் ...என் நினைவில் இல்லா முகம். 67 வயதான எனக்கு அது வேதனையைத்  தரவில்லை. ஆனாலும் மறக்கக் கூடாதல்லவா.....ஒருவேளை கல்லூரிக்கு நான் வேலையில் சேருவதற்கு முன்னால்  படித்திருப்பாரோ .....

சிறப்பு விருந்தினர் பேச அழைக்கப்பட்டதும் அரங்க மேடையில் அமைக்கப்பட்டிருந்த போடியம் பக்கம் வந்து பேச ஆரம்பித்தார்.

அவர் ," நான் இந்துக்கல்லுரியில்  1974 முதல் 77 வரை பிஎஸ்சி கணிதம் படித்தேன் "

.அவரது ஆசிரியர் பெயர்களை எல்லாம் சொன்னார். என்பெயரையும் சொன்னார்.நான் எடுத்த பாடம் பற்றிச் சொன்னார்.......

மூன்றாம் வருடத்தில் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களை  தொகுத்துச் சொல்லும் வேளையில் என் பெயரைச் சொன்னபோது சற்று காதுகளை கூர்மையாக்கி கேட்க முயன்றேன்.

"எல்லா ஆசிரியர்களிடமும் ஆட்டோகிராப் வாங்கினேன்.அனைவருமே ஆங்கிலத்தில் எழுத பொன்னப்பன் சார்  மட்டுமே தமிழில் எழுதினார்.அவர் எழுதிய அந்த வரிகள் இன்றும் என் நினைவில் இருக்கிறது. தாயை வணங்கு ....நேசி ....நீ உயர்ந்திடுவாய்.. .. பேசிக் கொண்டே போனார்.

என் கண்கள் கனிந்தன...மனம் நெகிழ்ந்தது.

நான் அந்த அரங்கத்தில் இருந்ததை அவர் அறிந்திருக்கவில்லை.மேடையை அலங்கரித்துக் கொண்டிருந்த அனைவருமே கை நீட்டி நான் இருப்பதை சுட்டிக்காட்ட அவர் அங்கிருந்தே எனைப் பார்த்து சிரிக்க , பதிலுக்கு என் கையினை உயர்த்தி வணக்கம் சொன்னேன்.

அதன்பிறகு மாணவர்களுக்கு பயனுள்ள பல கருத்துக்களைப்  பேசினார். .  கூட்டம் முடிந்ததும்  அவரிடம் போய் என் அன்புகளைப் பகிர்ந்து கொண்டேன்.

அதன்பிறகு அவர் மனைவியை அழைத்து என்னை அறிமுகப்படுத்தினார்.

அவர் மனைவியும்  நான் எழுதிய என் வரிகளை தனக்கு மொழி தெரியாவிட்டாலும் அந்த ஆட்டோகிராபை தன்னிடம் காண்பித்து கணவர் பெருமையாகச் சொன்னதை என்னிடம் சொன்னபோது நான் அடைந்த குதூகல உணர்வு விவரிக்க முடியாத எல்லையை அடைந்தது .

இந்த நாள் எனக்கு ஓர் இனிய நாள்.

பத்மஸ்ரீ பட்டம்  கிடைத்தது போன்ற உணர்வு.

ஆயிரம் ஆசிரியர்கள் போதித்தாலும் ஒரு மாணவன் உயர்வு பெறுவது அவனது தனித் திறமையால் மட்டுமே என்பதை நான் நன்கு அறிவேன்.
அந்த ஆண்டுகளில் மிகவும் கட்டுப்பாட்டுடன் ஆசியர்கள் நடந்து கொள்ளவேண்டும் என்பது எனக்கு அறிவுரைக்கப்பட்டது. கண்டிப்பது  கணிதத் துறையின் ஆசிரியர்கள் மாணவர்கள் நன்கு பரிணமிக்க வேண்டும்  என்பதற்காக மட்டுமே. இன்றும் அதனால் மன மகிழ்வாய் வாழ்கிறேன்.

கிட்டத்தட்ட 37 ஆண்டுகள் கழித்து சாதனைகள் பல படைத்த ஒரு முன்னாள் மாணவர் அவர் படித்த கல்லூரியில் சிறப்பாக வரவேற்கப்பட்டு .சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டு தன் முன்னாள் ஆசிரியர்களை பெருமையாகப் பேசுவதும் அதனை செவிமடுத்துக் கேட்கும் பாக்கியம் ஆசிரியனாய் இருந்த, எனக்குக் கிடைத்த இந்த வாய்ப்பு ஒரு வரப்பிரசாதமே.

நான் இருப்பது அவருக்கு தெரியாமல் எனைப்பற்றிப் பேசியது ......ஒரு பெரிய அதிர்வு என் மனதினுள்ளே .....

ஒரு மாணவனால் பாராட்டப்பட்டு இன்று பலருடைய மனங்களில் என் பெயர் உயர்வாய் காட்சி அளிக்கிறது என்றால் அது சிவமயம் தான்.

அவர் வீட்டை அலங்கரிக்கும் அலங்காரக்  காட்சிப் பெட்டியில் மூன்று முக்கியமான பொருள்கள் அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன.

 ஒன்று. இந்துக் கல்லூரியில் அவருக்கு கிடைத்த பரிசு.

இரண்டாவது அவருக்கு இந்தக் கல்லூரி ஆண்டுவிழாவில் அளித்த நினைவுப்பரிசு.

மூன்றாவது "என்றோ  எழுதிய என்வரிகள்."

ஆண்டவன் இந்தக் கல்லூரியில் பணியாற்றிய எனக்கு எதுவுமே இனிமேல் தரவேண்டாம்.இனிய இந்த நினைவுடன் இனி வரும் நாட்களை இன்பமாய் கழித்திடுவேன்.

என் சிவனுக்கு வாழ்த்து கூறி முடிக்கிறேன்.

"பாரதம் உன் கையில் வரும் நாள் தொலைவில் இல்லை .தழைக்கட்டும் நமது நாடு ..."

தாய்மையை என்றும் வணங்குவோம் .....

உயர்ந்திடுவோம் ......

No comments:

Post a Comment