Saturday, September 13, 2014

ஒரு சொல் கேளீர்......செல் வேண்டாமே

இது ஒரு பனிக்காலம்.

இருக்கும் இடமோ ஓசூர். குளிர் கூடுதலாகவே இருக்கும் இடம். குளிர் நடைப்பயிற்சிக்கு காலையில் தடையாய் இருப்பதால் சற்று நேரம் கழிந்தபின் அதாவது காலையிளம் வெயில் வந்ததும் வெளியே செல்வேன். அந்த நேரம் தான் நான் ஊரில் இருந்தால் ,நண்பருடன் செல்போனில் பேசுகிற நேரம்.

காலையில் செய்தித்தாள் படிக்காமல் இருந்த, இருக்கும் நாட்கள் பல உண்டு.. செல்போணை பிடிக்காமல் ஒருநாள் கூட இருந்ததில்லை. காலையில் கண் விழி திறந்ததும் விழிகள் தேடுவது செல்லைத்தான்.

நாட்டு நடப்பை அறிந்து கொள்ள பயன்படுத்துவதும் என் செல்ல செல்பேசியில் தான். 

என்னூர் செய்திகளை என் நண்பர் மூலம் செல்லில் பேசி அறிந்து கொள்வேன்.

செல் இல்லாதவன் செல்லாக்காசாவான். இருந்தாலும் செல் எடுத்துச் செல்வதில் சிரமங்கள் பல உள்ளன.

ஊரில் அதிகாலையில் நடக்கச் செல்லும்போது செல்லை எடுத்துச் 
செல்வதில் ஏற்பட்ட சில அனுபவங்கள்
.
தனியே பேசிக்கொண்டே வருபவனைப் பார்த்தால் பயித்தியக்காரன் 
பேசுவது போல் இருக்கு.....அதிலும் காதில் ப்ளூடூத் கருவியை வைத்து 
தனியாக சிரிப்பதும் பேசுவதும் அசல் லூசு போலவே இருக்கு....என்று  
என் மனைவி கிண்டல் பண்ணுவதால்.......ஓசியில் பேச அலையும் 
சிலரிடம் இருந்து நம் அலைபேசியை காப்பாற்ற வேண்டி இருப்பதால்.......

நான் செல்லை எடுத்துச் செல்வதில்லை. 

நான் அதனை எடுத்துப்போகாமல் இருப்பதற்கு அந்தக் கிண்டல் 
மட்டுமே காரணம் அல்ல.

இன்னொரு காரணமும் உண்டு. நான் ஒரு கல்லூரி மைதானத்தில் 
நடந்து செல்லும் சமயம் செல் போனில் பேசிக்கொண்டே வந்தவர் 
படிகளில் இறங்கும்போது பேச்சுக் கவனம் அதிகமாகி பள்ளத்தில் 
இருக்கும் படிக் கவனம் சிதறிக் கால்கள் இடறி கீழே பரிதாபமாய் 
கீழே விழ...... கால்கட்டு அவிழ்க்கவே மாதங்கள் பல கடந்தன....
செல்லும் யாருக்கோ, அரசு அளிக்கும் விலையில்லா ஆடு போல் 
கிடைத்ததை யாரும் அறிந்திருக்கவில்லை......ஆஸ்பத்திரி வாசம்.......
செல் மூலம் Call பேசி, காலிழந்து வேறொரு செல்வாங்கிய 
பின்னர்தான் கால்வலி குறைய ஆரம்பித்தது........

ஓசூரில் ஒரு மணீக்கூருக்கும் அதிகமாகவே நடைப்பயிற்சிக்கு 
நேரம் ஆகும். வெளியூர் என்பதால் ......வயதும் அதிகம் என்பதால் 
செல்லை எடுத்துப் போகச் சொல்வாள் என் மனைவி. குறிப்பிட்ட 
நேரத்துக்குள் வீடு வந்து சேரவில்லையென்றால் என் கையில் 
இருக்கும் செல் சிணுங்க ஆரம்பிக்கும்.....

அன்றும் என் செல் போன் சிணுங்கியது.....மனைவிதான் பேசுகிறாள் 
என நான் நினைத்து எடுத்தேன். ஆனால் பேசியது என் நண்பர்......
வழக்கமாய் பேசும் நண்பர் தான்..........

”நீ எங்கிருக்கே....”

”ஓசூரில் இருக்கேன்....இப்பம் வாக்கிங் போயிட்டுருக்கேன்..... ஏதாவது 
விசேஷம் உண்டா..... கொஞ்ச முன்னால் தானே பேசினே......”

”உன்னிடம் நிச்சயமாய் இந்த விசயத்தச் சொல்லணும்னு தான் போன் பண்ணினேன்....
என் மருமகன் வைரம் பெருங்களத்தூர் ரெயில்வே ஸ்டேசன் பக்கம் 
ஒரு ஓரத்தில் நின்று போனில் பேசிக்கொண்டிருக்கும் போது, அந்த 
அழகான செல் போனை அவரிடம் இருந்து அபகரிக்க சற்று தூரத்தில் 
இருந்து பார்த்துக் கொண்டிருந்த சிறுவர்கள் சிலர் அவர் மீது பெரும்
கல்லை எடுத்து எறிய அது பலமாகத் தலையைத் தாக்கியது. கீழே 
விழுந்த அவர் தலையில் அதிக ரத்தம் பாய்ந்ததைக் கண்டு பயந்து 
போய் ஓடிவிட்டனர் சிறுவர்கள்.

அங்கிருந்த மருத்துவர்கள் காயம் பெரிதாய் இருக்கிறது என்று 
சொன்னதால் அவரது உறவினர்களிடம் போனில் தகவல் சொல்ல 
அவரது அக்கா.....டாக்டரான அக்கா அழைத்துச் சென்று சிகிச்சை 
செய்தாள்..... தலையில் 13 தைப்பு...... கேட்பதற்கே தலை சுற்றியது.....”

மேலும் அவன் சொன்னான்....” நீ இப்ப வச்சிருக்கும் போன் புதுசல்லவா....
நடக்க வரும்போது போன் எடுத்துட்டு வராதே.........”

ஆமாம்......இப்போதெல்லாம் காலையில் செல்லில்லாமல் சென்று கொண்டிருக்கிறேன்....

கழுத்தில் தங்கச் செயின், கைவிரல்களில் மோதிரம் என்னைப் 
பார்த்து சிரித்துக் கொண்டே இருக்கின்றன......


No comments:

Post a Comment