Thursday, August 4, 2011

கடுக்கரை திரவியம் பிள்ளை

திரவியம் பிள்ளை என்ற K.B.பெருமாள்பிள்ளை

மிடுக்கான கம்பீரமான ராணுவ தளபதி போன்ற நடை. ஒரு தலைவருக்கே உரிய தோற்றம்.தவறு செய்தவர்களைக் கண்டிக்கும் வல்லமை . இவற்றுக்கெல்லாம் சொந்தக்காராரான ஒருவர் யாரென்று கேட்டால் 1940-50 களில் வாழ்ந்த கடுக்கரை சிறுவர்கள் கூடச் சொல்வார்கள் அதுக் கீழத்தெரு திரவியம் பிள்ளை என்று.

பிற்காலங்களில் அவரை வீட்டில் போய் பார்த்தால் எளிமையான ஒரு சிறந்த பக்திமானாகத்தான் பார்க்க முடியும்.அன்பின் உருவமாக இருக்கும் அவர் சின்ன பிள்ளைகளையும் அருமையாக வரவேற்பார்.

கடுக்கரை ஊரிலிருந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு இவர் ஒருவர்தான் போய் வந்த காலம் அது. சபரிமலையில் விஷமிகள் சிலரால் தீவைக்கப்பட்டு கோவில் சேதமுற்றபோது நெஞ்சு பொறுக்க முடியாமல் உடன் தானே சபரிமலைக்கு போய் அய்யப்பனை வணங்கி விட்டு வந்தவர் இவர். பஸ் வசதி இல்லாத நாளில் 41 நாட்கள் விரதம் இருந்து மிகவும் கடினமான யாத்திரை மேற்கொண்டவர்.இருமுடிக் கட்டு கட்டிப் போகும் போது ஊரே திரண்டு மேளதாளத்துடன் அவரை வழி அனுப்புவார்கள். கடுக்கரையில் அய்யப்பன் கோயில் கட்டவெண்டும் என்று அதற்காக பாடுபட்ட நிமிடக்கவி உடையார்பிள்ளைக்கு மிகவும் உறுதுணையாக நின்றவர்.

1939-1945 இரண்டாம் உலக மகாயுத்தம் நடந்த காலத்தில் நீல உடையில் அய்யப்பன் கோவிலிக்குப் போய் பின் மதுரை கோவிலுக்குப் போகும்போது இவரையும் இவருடன் போன மாணிப்போத்தியையும் ஜப்பான் உளவாளிகள் என தவறாகப் புரிந்து கொண்டு போலீஸ் கைது செய்து விட்டது.அதன் பிறகு நாகர்கோவில் பிரமுகர் சிவதாணு பிள்ளை தலையிட்டு அவர்களை அழைத்து வந்தார்.

கீழக்கோவில் (சிவன்கோவில்) அந்த நாட்களில் சிறப்புடன் நடப்பதற்கு காரணமாக இருந்த ஒரு சிலரில் இவர் முக்கியமானவர்.


திருவிதாங்கூர் சமஸ்தானத்தோடு கன்னியாகுமரி மாவட்டம் இணைந்திருந்த காலகட்டம்.
பஞசாயத்து போன்ற அமைப்பு இல்லாத காலமது .Village Uplift Committee என்ற ஒரு அமைப்பு உண்டு. அழகியபாண்டியபுரம் ,காட்டுப்புதூர், கடுக்கரை ஊர் வளர்ச்சிக்காக திருவிதாங்கூர் மகாராஜாவால் ஏற்படுத்தப்பட்டது..அந்த அமைப்பின் தலவராக இருந்தவர் இந்தப் பெரியவர் K.B. பெருமாள் பிள்ளை என்ற திரவியம் பிள்ளைதான். கடுக்கரையில் ஏற்றமும் இறக்கமும் இருக்கும் பகுதிகளில் படிகள் தான் இருந்தன. எல்லா படிகளையும் மாற்றி கருங்கற்களால் ஆன RAMP (சப்பாறு) -ஆக மாற்றிஅமைத்தது இவர் தான்.

கீரங்குளத்தில் ஒரு கிணறு வெட்டப்பட்டது இவருடைய முறச்சியால் தான்.

கடுக்கரைக்கு பஸ் வருவதற்கு அந்த சமயத்தில் ட்ரான்ஸ்போர்ட் கமிஷ்ணராக இருந்த தண்டம் வேலுப்பிள்ளை எனபவரைப் பார்த்து KSRTC பஸ் வர முயற்சி எடுத்து வெற்றி பெற்றவர். முதல் பஸ் ஊருக்கு வந்த போது அந்த ட்ரைவரையும் அதிகாரிகளையும் தன் வீட்டுக்கு அழைத்து போய் விருந்து அளித்து கவுரவித்தார்.

அதிக அநியாய நில வரியான மணியங்கரத்தை ரத்து செய்ய போராடத் துணிந்தவர்களுக்கு மிகவும் துணயாக நின்றார்.மணியங்கரம் கண்டன மாநாடு நடத்த தீர்மானித்து
கடுக்கரையிலேயே இவரைத்தலைவராகக் கொண்டு மணியங்கர கமிற்றி ஒன்று செயல்பட்டது. பெரும் அளவில் விவசாயிகளின் தங்கள் சொந்தப் பிரச்சனைக்காக கூடிய ஒருமகாநாடு கடுக்கரையில் நடந்தது.அதுதான் முதல் மாநாடு.1949 ஏப்ரல் மாதம் 3-ம் தேதி நடந்த இந்த மாநாட்டை திறந்து வைத்தவர் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை.

மாநாட்டில் தமிழக அமைச்சராய் இருந்த கோட்டாறு ஊரைச் சார்ந்த நாஞ்சில் கி. மனோகரன் மாணவராக இருந்த போது கலந்து கொண்டு சொற்பொழிவாற்றினார்

பூதை ஜீவாவும் திரவியம்பிள்ளையும் ஒரே பள்ளியில் படித்த தோழர்கள்

1956 ,நவம்பர் 1 -ல் நாஞ்சில் நாடு கேரளாவில் இருந்து பிரிந்து தமிழ் நாட்டோடு சேர்ந்தது.கடுக்கரையில் மின்சாரம் வந்த மூன்று வீடுகளில் ஒன்று இவரது வீடு.மின்சாரம் வருவதற்குமுன்னே இவரது வீட்டில் நடந்த ஒரு விழாவுக்காக மின்னொளியை சின்ன எஞ்சின் மூலம் கொண்டு வந்தார். அதிசயம் போல் அதைக் காணவே ஒரு பெரிய கூட்டம் அவர் வீட்டின் முன்னே நின்றது.

நாகர்கோவிலில் ஒரு கல்லூரி அமைக்கவேண்டும் என முயற்சி எடுத்தபோது கடுக்கரை ஊர்வகை ட்றஸ்டிகளயும், பக்கத்து ஊர்ப்பிரமுகர்களையும் சந்தித்து ஆதரவை பெற பெரு முயற்சி எடுத்தவர் இவர். அந்தக் கல்லூரிதான் தென் திருவிதாங்கூர் இந்துக்கல்லூரி.இன்று அந்தக் கல்லூரியின் தலைவர் இவரது மூன்றாம் மகன் கடுக்கரை ராசப்பன் என்ற பெ.ஆறுமுகம்பிள்ளை(2002-ல் இருந்து இதன் தலைவர்).மூத்தமகன் காந்தி என்ற மெய்க்கும்பெருமாள் பிள்ளை அந்தக்கல்லூரியின் ஒரு B-class share Holder

இவருடைய துணிவுக்கும் வீரத்திற்கும் சான்றாக அமைந்த சம்பவம்

கொள்ளைக்காரன் செம்புலிங்கம் என்ற பெயருடைய ஒருவன் வழிப்பறி செய்வதும் திருடுவதும் தொழிலாலாகக் கொண்டிருந்தான். அவனது பெயரைக் கேட்டாலே ஊர்மக்கள் பயந்து நடுங்குவார்கள்.தன் தோப்பில் செம்புலிங்கம் தேங்காய் திருடுவதை யாரோ வந்து சொல்ல உடனே கீழமலைக்கு பக்கத்தில் உள்ள பண்ணையாவிளைத்தோப்பிற்கு இவர் கிளம்பிப் போய்விட்டார். இவர் தோப்பை நெருங்கும் போது தென்னை மரத்தின் உச்சியில் இருந்தவன் இவர் வருவதைப் பார்த்தான்.தன்னைக் கண்டவுடனே பயந்து ஓடுபவர்களைத்தான் அவன் அதிகம் பார்த்திருக்கிறான். மிகவும் துணிச்சலோடு தோப்பை நோக்கி ஒரு ஆள் வருவதைப்பார்த்து அவனுக்கு ஆச்சரியம் .இன்னார்தான் வருகிறார் என கண்டு கொண்டவுடன் மரத்தில் இருந்து கீழே இறங்க ஆரம்பித்தான்.அவனுக்கு ஆச்சரியமாகவும் இருந்தது...அதே சமயத்தில் பயமாகவும் இருந்தது. அவன் கீழே இறங்கி தரையில் நிற்கவும் திரவியம் பிள்ளை அவனருகே வரவும் சரியாக இருந்தது.

அவன் இவரிடம் ,“ வயறு பசிச்சது அதனால் தான் கருக்கு குடிச்சேன்” என்று கூறி
அவரை தன் இருகைகளாலும் கும்பிட்டு விட்டு தன் பாக்கெட்டில் இருந்த பணத்தை எடுத்து இவரிடம் கொடுத்தான்.

பணத்தை வாங்காமல்,“சரி.... உன் முகத்தைப் பார்க்கத்தான் வந்தேன்...” சொல்லி முடிப்பதற்குள் செம்புலிங்கம் மின்னல் போல எங்கேயோ ஓடிமறைந்து விட்டான்.

இவரது அன்புக்கு சான்றாக நடந்ததும் இழந்த நண்பனின் வேண்டுகோளை தன் ஆயுள் முழுவதும் நிறைவேற்றியதும்

நட்புக்கு இலக்கணமாக திரவியம் பிள்ளை

இவரது நணபர் ஒருவர் வீட்டுப் பிரச்சனை காரணமாக காணாமல் எங்கோ போய்விட்டார். ஓரிரு வாரங்கள் கழிந்து அவர் திருப்பரங்குன்றத்தில் பிளேடால் கழுத்தை அறுத்துத் தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல்கள் வந்தன. செய்தி கேட்டு ஒரு கணம் கூட தாமதிக்காமல் உடனே சென்று செய்ய வேண்டிய எல்லாவற்றையும் செய்து முடித்து விட்டு வந்தார். இறப்பதற்கு முன்னால் தன் மகனை நீதான் வளர்த்து ஆளாக்க வேண்டும் என்று எழுதிய ஒரு கடிதத்தின்படி அந்த சிறுவனை அழைத்து வந்து வளர்த்தார். தன் ஏழு பிள்ளைகளோடு எட்டாவதாக இந்தச் சிறுவனும் அந்த வீட்டில் சொந்த வீட்டுப் பிள்ளை போல் வளர்ந்தான்.

Monday, August 1, 2011

கடுக்கரை தந்த தன்னிகரில்லா அன்புத் தலைவர்

கைவிளக்கு( 15-8,9-1989) வரிகளும் ஊர் பெரியவர் ஒருவர் சொன்னதும்

மக்கள் தலைவர் மறைந்தார்.மறைந்த தலைவரின் இறுதி யாத்திரை 22-8-1989 செவ்வாய் கிழமை காலை 9.30 மணிக்கு அவரது இல்லத்திலிருந்து புறப்பட்டது. அன்று காலையில் ஊரிலுள்ள அனைத்து வியாபார நிறுவனங்களும், அனந்தபுரம் உயர்நிலைப்பள்ளியும் மூடப்பட்டிருந்தது. அந்த தன்னிகரில்லாத தலைவரின் இறுதி ஊர்வலத்தில் பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர். மாணவ மாணவியர் பள்ளிச் சீருடை அணிந்து, கறுப்பு கொடி அணிந்து இருபுறமும் அணி வகுத்து வந்தனர்.கடுக்கரை ஊர்முழுவதுமாக சுற்றி வலம் வந்த போது ஊர்மக்களின் கண்ணீர் அஞ்சலியும் , அத்தோடு பூ மழை பொழிய அந்தத் தலைவருக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.ஒவ்வொருவருமே தன்வீட்டில் நடந்த ஒரு துக்கமாகவே எண்ணி வடித்த கண்ணீரஞ்சலி காண்போர் கண்களை குளமாக்கியது. மக்கள் கடல் வெள்ளம் அலைமோதி சென்றது.

தலைவர் என்றாலே அது ம. வேலப்பன் என்ற தம்புரான் தோழ பிள்ளை தான். ஆம் அவர்தான் கடுக்கரை கிராமப்பஞ்சாயத்தின் முதல் தலைவர்.

இன்று காணும் குடிநீர்திட்டம்,ஆலடி வரை கான்க்ரீட் பாதை, புதிய பஞ்சாயத்து அலுவலகம் எல்லாமே இவருடைய காலத்தில் வந்தவை.புதிய பஞ்சாயத்து அலுவலகம் இருக்கும் இடம் மணியங்கர ஆபீஸ். அது திருவிதாங்கூர் காலத்தில் இயங்கிய அலுவலகம் . முறையாக முயற்சி செய்து பாஞ்சாயத்துக்கு வாங்கியது இவர்தான்.

மணியங்கர ஒழிப்புக்கு மிகவும் பாடுபட்டார். மகாத்மா காந்தி நூல் நிலையத்தின் முதல் செயலாளர். அனந்தபுரம் கிருஷிக சங்கக் காரியதரிசி,குமரி மாவட்ட விவசாய சங்கத் தலைவர், கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர்.

1954-ம் ஆண்டு திரு- தமிழக விடுதலை போராட்டத்தில் தோவாளைத் தாலுகாவில் முதல் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார். ஒரு மாதம் சிறையில் இருந்தார்.போராட்டமே இவர் தலைமையில் தான் நடந்தது. 1981-ல் திரு-தமிழக விடுதலை தியாகிகள் விருதினைசென்னை கலைவாணர் அரங்கில் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் பெற்றார்.

1957-ல் பெருமாள் கோவில் டிறஸ்டி. 1984-ல் தெ.தி. இந்துக் கல்லூரியில் இயக்குனர்.

நாகர்கோவிலில் ரோஷினி நாட்டியாலயா நிறுவனர் பொன்னம்மாள் பெருமாள் அவர்களின் நாட்டிய அரங்கேற்றம் இவர் தலைமையில் நடந்தது.

இந்துக்கல்லூரியில் முதல்வராய் பணியாற்றிய கடுக்கரை திரு. பேச்சினாதன் அவர்கள் டாக்டர் பட்டம் பெற்றதை பாராட்டுவதற்காக கூட்டம் இவர் தலைமையில் கடுக்கரையில் முன்னாள் பஞ்சாயத்துத்தலைவர் ஆறுமுகம்பிள்ளையின் மகன் பொன்னப்பன் வீட்டு மாடியில் நடந்தது

9-4-75 முதல் 12-4-75 வரை நடந்த ஆயினூட்டு தம்புரான் கோயில் ஊட்டு விழாவின் மாலை முரசின் சிற்ப்பு மலரில் “அற்புத விழா” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினார்.

கடுக்கரையில் இருப்பது ஒரே ஒரு சிலை . அது இந்த அன்புத் தலைவரின் சிலை.

Thankappan Arumugaperumal

தினமலர் நிறுவனர் வாழ்க்கை வரலற்று நூலான கடல் தாமரையில் நமது ஊர்ப் பெரியவர்.

கடுக்கரை கே.எம்.மகாதேவன் பிள்ளை

கடல் தாமரை வரிகள்

கடுக்கரை கே.எம்.மகாதேவன் பிள்ளை நவ., 16, 1914ல் பிறந்தவர். விவசாயிகளின் உற்ற நண்பர்.

அப்போது அரசாங்கத்தின் நிலம், மகாராஜாவின் நிலம், மகாராஜா குடும்பத்தாரின் நிலம், பத்மநாப சுவாமிக்கான நிலம் எனப் பாகுபாடு செய்யப்பட்டு, அதற்குத் தனித்தனியான நில வரி கள் விதிக்கப்பட்டன. பண்டார வகை, ஸ்ரீ பண்டாரவகை, ஸ்ரீபாத வகை, கண்டு கிரிஷி இப்படி வரி களுக்குப் பெயர்.

நாஞ்சில் நாட்டின் பெரும் நிலங்கள் பத்மநாப சுவாமிக்கு என ஒதுக்கப்பட்டு அதற்கு, ‘மணியகரம்’ என்ற வரி மிக அதிகப்படி யாக வசூலிக்கப்பட்டது.

இதை எதிர்த்து ஏப்., 3, 1949ல், ‘மணியகரம் கண்டன மாநாடு’ ஒன்றை கடுக்கரையில், நீதிபதி சத்யநேசன் தலைமையில் நடத்தி, மாநாட்டைக் கவிமணி திறந்து வைத்தார். பெரும் அளவில் விவசாயிகள் தங்கள் சொந்தப் பிரச்னைக்காக கூடிய முதல் மாநாடு அது. மணியரகம் நிலவரியில் இருந்து குமரி மாவட்ட விவசாயிகளை விடுவிக்க 18 ஆண்டு போராடி வெற்றி கண்டவர்.

கடுக்கரை உயர் நிலைப்பாடசாலை உருவாகக் காரணமாக இருந்தவர். குமரி மாவட்ட விவசாயிகளுக்காகத் தொடர்ந்து குரல் எழுப்பியவர்.

கன்னியாகுமரி மாவட்ட சிறப்பு ஏடு [ 26-1-1988] என்ற நூலில் உள்ள வரிகள்

திருவிதாங்கூர் நில உடமை சம்பந்தமாகவும் அதன் தன்மைகள் சம்பந்தமாகவும் ஆதாரபூர்வமாக கேள்வி கேட்டு PhD பட்டத்திற்காக ஆராய்ச்சி செய்தவர்கள் இவரைக் கண்டு பல தகவல்களைப் பெற்று பலனடைந்தார்கள்

இவர் கம்யூனிஸ்டு கட்சியில் பற்றுடையவராக , விவசாயிகளின் பிரச்சனையில் ஈடுபட்டு விவசாய சங்கம் காரியதரிசியாக பொறுப்பேற்று,அச்சங்கத்தில் தீவிரமாக செயல் பட்டார்

கடுக்கரையில் K.B. பெருமாள் பிள்ளை அவர்களை தலவராகக் கொண்டு கமிற்றியை ஆரம்பித்து அதன் செயலாளராகயிருந்து அதன் மூலம் விவசாயிகளின் மகாநாட்டைக் கூட்டினார். மணியங்கரம் ரத்து செய்யப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்த வரையில் ரூ.10லட்சம் வரை வரிப்பழு குறைந்தது.

Sunday, July 31, 2011

மறக்கலாமா நல்லவைகளைச் செய்த பெரியவர்களை

கடுக்கரை ஆ.அணஞ்சபெருமாள்,கடுக்கரை .

இவர் திருவிதாங்கூர் தமிழ் நாடு காங்கிரஸ் இயக்கத்தில் ஈடுபட்டு மொழிப்போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைவாசம் அனுபவித்தவர்.
மணியங்கரம் ஒழிப்பு இயக்கத்தில் கலந்து பணியாற்றியுள்ளார்.

கடுக்கரை ஆரம்பப் பள்ளியை நடுநிலைப் பள்ளியாக்கவும் பக்கத்து ஊரான குறத்தியறை ஆரம்பப்பள்ளியை நடுநிலைப்பள்ளியாக ஆக்கியதுடன் பெரும் முயற்சி எடுத்து 1963-ல் அதை உயர் நிலைப்பள்ளியாக்கிய பெருமையும் இவருக்கு உண்டு.

நாகர்கோவிலில் பொன்னப்பநாடார் நகரில் நியூகவிமணி காலனி என்ற 51 மனைகள் கொண்ட குடியிருப்பை உருவாக்கியவர் மறைந்த அந்த பெரியவர். அவர் தம் பெயரால் ஒரு சாலைக்கு பெயரிடப்பட்டுள்ளது. தெற்கு வடக்காக செல்லும் அகலம் கூடிய அந்த சாலையின் பெயர் “அணஞ்சபெருமாள் சாலை”.

இவரது மூத்தபுலவர் திரு. ஆறுமுகம்பிள்ளை அவர்கள் ஓய்வு பெற்ற இந்துக்கல்லூரி ஆங்கிலப் பேராசிரியர்.

Friday, July 29, 2011

என் தந்தையார் பற்றி குமரி மாவட்ட சிறப்பு ஏடு

கடுக்கரை கே.எம்.ஆறுமுகப்பெருமாள் பிள்ளை

இவர் நாஞ்சில் நாட்டில் கடுக்கரை என்னும் ஊரில் ஒரு வசதிபடைத்த புராதீன குடும்பமான திரு. மெய்க்கும்பெருமாள் பிள்ளை திருமதி. ஈஸ்வரவடிவு தம்பதியருக்கு மூத்த புதல்வராக 8-1-1905ல் பிறந்தார். இவர் திருமதி.பகவதியம்மாள் அவர்களை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று புதல்வர்களும் இரண்டு புதல்விகளும் உள்ளனர்.பிள்ளை அவர்கள் சமயநெறி வழிபாடு சமூக அக்கரைகள், கல்வி வளர்ச்சியில் பங்காற்றல்,மனித நற்பண்பு போன்ற நற்குணங்களை உடையவராவர்.

கடுக்கரை கிராமம் அழகியபாண்டியபுரம் பஞ்சாயத்தின் கீழ் ஒரு வார்டாக அறிவிக்கப்பட்டது.1959-ம் ஆண்டு மயில் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றபின்
அழகியபாண்டியபுரம் பஞ்சாயத்து தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு ஐந்து ஆண்டு காலம் பணியாற்றி உள்ளார். அந்நாளில் கடுக்கரையையும், காட்டுப்புதூரையும் சாலை இருக்கவில்லை.இப்போது காண்கின்ற சாலையை உருவாக்கியவர் இவரே. இவரது இப்பணியினை இன்றும் அங்கு வாழும் மக்கள் நன்றியுடன் நினைவுகூர்கிறாரகள்

பொதுப்பணிகளில் இவர் மிகுந்த அக்கரை காட்டியுள்ளார். பொதுநலன்களை முன்னிட்டு நிதி திரட்டும் போது,பொருளுதவி செய்பவர்களில் எப்பொழுதும் முதல் நபராக முன்னிற்பவராவர்.

கடுக்கரையில் ஐயப்பன் கோவில்கட்டுவதற்கு சுமார் ஒரு ஏக்கர் நிலத்தை இவர் அன்பளிப்பாக கொடுத்துள்ளார்.

நாகர்கோவில் இந்துக்கல்லூரியை உருவாக்கியதில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு. கல்லூரி நிர்வாகக்குழுவின் உதவி தலைவராகவும் பொருளாளராகவும் பணியாற்றினார். எண்ணற்ற மாணவர்களுக்கு இக்கல்லூரியில் படிப்பதற்கான உதவிகள் பல புரிந்துள்ளார்.

இவரது ஈகை குணம் இவரது சந்ததியாரிடமும் தொடர்ந்திருப்பதற்கு சான்றாக இளையபுதல்வர் திரு, ஆ. பொன்னப்பன் (கணிதப்பேராசிரியர், இந்துக்கல்லூரி, நாகர்கோவில்) தன் தந்தைவழி நின்று தனது சொத்துக்களிலிருந்து 25 சென்ட் பூமியை அண்மையில் சர்வோதய இயக்கத்திற்கு அன்பளிப்பாக கொடுத்துள்ளார்.

இவரது மூத்த புதல்வர் திரு மெய்க்கும்பெருமாள் பிள்ளை அவர்கள் நெய்வேலியில் இஞ்சினீயராக பணியாற்றுகிறார். இரண்டாவது புதல்வர் திரு. சங்கரநாறாயணபிள்ளை அவர்கள் விவசாயத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். கடைசி புதல்வரான திரு. பொன்னப்பன் அவர்கள் நாகர்கோவில் இந்துக்கல்லூரியில் கணிதப்பேராசிரியராக பணியாற்றுகிறார்.

திரு. ஆறுமுகப்பெருமாள் பிள்ளை அவர்கள் 1981-ம் வருடம் டிசம்பர் மாதம் 25-ம் தேதி இறைவனடி சேர்ந்தார்.

குறிப்பு :-
26-1-1988 ல் வெளியான கன்னியாகுமரி மாவட்ட சிறப்பு ஏடு. By வி.எஸ். ஆபிரகாம், மனோரமா பப்ளிஸிட்டி, வீராணமங்கலம், தாழ்க்குடி அஞ்சல். கன்னியாகுமரி மாவட்டம் .

தினமலர் நிறுவனர் அமரர் டி.வி. இராமசுப்பையர் அவர்களின் ஞாபகர்த்த வெளியீடு “கன்னியாகுமரி மாவட்ட சிறப்பு ஏடு”

மகாத்மா காந்தி நூல் நிலையம் மறைந்தது....

இளைஞர்கள் ஒன்று கூடி அழகான நூலகம் அமைத்து ஜீவா வாலிபர்கள் சங்கம் என்ற பெயரிட்டு எல்லோரும் வந்து படிக்க வசதியாக ஒரு ஊர்க்கட்டிடத்தை தேர்ந்தெடுத்தார்கள். அது பின்னாட்களில் கால மாற்றத்தினால் ஏற்பட்ட சூழலில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு ஊர்வகை லைபறறியாக மாறியது.

அது தான் மகாத்மா காந்தி நூல் நிலையம் . அது இரண்டு அறைகள் கொண்டது. முன் அறை கிழக்கு மேக்காக ஒரு நீண்ட வராந்தா போல் இருக்கும். அந்த அறைக்கு அடுத்த அறை சதுர வடிவமானது. அதன் வடக்கு, மேற்கு சுவர்களை ஒட்டி பெரிய மர அலமரிகள். ஒரு மேஜை , செயர்.... லைபறறியன் ஒருவர் உண்டு. அவருக்கு சமுதாய ட்றஸ்டு சம்பளமாக ஒரு கோட்டை நெல் கொடுப்பார்கள். காலையிலும் மாலையிலும் திறந்து , கதை புக்கை சந்தாதாரர்களுக்கு எழுதிவைத்து விட்டு கொடுப்பதுதான் அவரது வேலை.

அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட கலைக்களஞ்சியங்களின் எல்லா தொகுதிகளும் உண்டு. வருடம் தோறும் அரசு மான்யமாக வழங்கும் தொகைக்கு புக்குகள் வாங்குவதுண்டு. நாஞ்சில் நாட்டில் அதிக புஸ்தகங்களைக் கொண்ட மூன்று லைபறறிகளில் கடுக்கரை மகாத்மா காந்தி நூல் நிலையமும் ஒன்று. குமுதம், ஆனந்தவிகடன்,கல்கி,கலைக்கதிர், தினமணி, தினமலர் பேப்பர் எல்லாம் உண்டு.

நாத்திகம், முரசொலி ,இந்தியன் எக்ஸ்பிரஸ் களை யாராவது வாங்கிப் போடுவதுண்டு.
வயதில் பெரியவர்கள் உள் அறையில் இருந்து படிப்பார்கள். லைபறறியன் இருந்தால் வெளி அறையில் இருந்து படிக்கும் மாணவர்கள் அமைதியாக இருப்பார்கள். அவர் இல்லையென்றால்
மாணவர்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான்.பெரியவர்கள் சொன்னாலும் கேட்பதில்லை...அதில் சட்டம்பியான பெரிய ஆட்கள் இருந்தால் பயந்து போய் பேசாமல் இருப்பதுண்டு.

ஒவ்வொரு காலகட்டத்திலும் அந்தக்காலத்து இளைஞர்களால் தான் நூலகம் பெருமை பெற்றது.கடுக்கரை கிராமம் என்றாலே கமபர் ராமன் பிள்ளை , கவி உடையார்பிள்ளை, மணமேடை அய்யாவு இவர்களை பற்றித்தான் மற்றவர்கள் கேட்பார்கள்.

கம்பர் ராமன்பிள்ளைக்கு கம்பராமாயணம் முழுவதும் மனப்பாடமாக தெரியும். மாணவர்கள் தாங்கள் படித்த புக்கை கொண்டுவந்து அதில் உள்ள ராமாயணப் பாடலின் முதல் வரியை பார்த்துப் படித்தால் பெரியவர் அதனை முழுவதுமாக ராகத்தோடு பாடி அதன் பொருள் கூறி விளக்கமும் சொல்வார். அவர் வறுமையில் தான் வாழ்ந்து மறைந்தார்.

நூலகக் கட்டிடம் உருமாறி இருக்கிறது இப்போது . ஆனால் நூலகம் இல்லை.? அலமாரிகள் எங்கே..? மதிப்பு மிகுந்த நூல்கள் எங்கே..? பிரமிக்கும் படியான பல போட்டோக்கள் போன இடம் தெரியவில்லை....அந்தக் கட்டிடத்தில் இப்போ என்ன இருக்கிறது..? யாருக்கும் கவலையுமில்லை...அக்கறையுமில்லை.... காந்தி மகானை தேசமும் மறந்தது. கடுக்கரையும் மறந்தது....

Wednesday, July 27, 2011

மந்திரத்தை நம்பி மதி இழந்ததால் ஏற்பட்ட கொடுமை

கிச்சனும் கணபதியும் பள்ளியில் வகுப்புத் தோழர்கள்.

கிச்சனின் அப்பா வசதி படைத்த நல்ல மனம் படைத்தவர்.
கணபதிக்கு அப்பா கிடையாது.

அம்மை தினமும் மோர் விற்று அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்துதான் இருவரும் காலத்தை கழித்துக் கொண்டிருந்தாரகள்

கணபதி நன்றாகப் பாடுவான். ஒரளவு படிக்கவும் செய்வான். தினமும் காலையில் ஒரு பையை எடுத்துக்கொண்டு போய் பின்னங்கொட்டை பொறுக்கி அம்மாவிடம் கொடுப்பான். அதை காசாக்கி சேமித்து வைப்பாள். அறுவடை காலத்தில் அறுக்கும் வயலில் உதிர்ந்து கிடக்கும் கதிரை எடுத்தும் ,தேங்காய் வெட்டும் தோப்பில் தேங்காய் பொறுக்கிப் போட்டால் கிடைக்கும் தேங்காயையும் கொடுத்து அம்மாவின் சுமையை அவனும் சுமந்து வந்தான்.

கிச்சனுக்கும் கணபதிக்கும் படிப்பதில் போட்டி.தினமும் இருவரும் சேர்ந்தே பள்ளிக்கூடம் போவார்கள்.கணபதி பள்ளிக்கு வரவில்லையென்றால் கிச்சனுக்கு வகுப்பில் இருக்கவே பிடிக்காது. மாலையில் அவன் வீட்டில் போய் பார்த்து அவனுடன் பேசினால் தான் கிச்சன் நிம்மதியடைவான்.கிச்சனுக்கு குடிக்க மோர் கொடுப்பாள் கணபதியின் அம்மா.காசு கொடுத்தாலும் வாங்க மாட்டாள்

சிவாஜி, எம்.ஜி.ஆர் -ஐ தியேட்டரில் அவன் பார்த்ததே இல்லை. சுவரில் தான் பார்த்திருக்கிறான்.கிச்சன் கூப்பிட்டாலும் சினிமா பாக்க போக மாட்டான். கிச்சனுக்கும் கணபதியில்லாமல் சினிமா பார்ப்பது பிடிக்கவில்லை. நிறுத்தி விட்டான்.கிச்சனிடமும் எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. காரணம் கணபதி. அவன் வறுமையிலும் நேர்மையானவன்.

தன்மகன் நல்ல பண்புகளுடன் இருப்பதற்கு காரணமே கணபதியின் நட்புதான் என கிச்சனின் அப்பா அவனிடமே கூறுவார். புஸ்தகம் வாங்க காசு கொடுத்தாலும் கணபதி வாங்க மாட்டான்.
கணபதி கிச்சன் வீட்டுக்கோ, தோட்டத்துகோ போவான் ஆனால் வேலை செய்து காசு வாங்கவே மாட்டான்.கிச்சன் வீட்டில் கணபதிக்கு அதிக மதிப்புண்டு.

கீச்சானின் சப்தம் கேட்பதற்காக கீச்சானை வைத்து பள்ளி மாணவர்கள் களிப்பதுண்டு

கணபதிக்கு கீச்சான் பிடித்துக் கொடுத்தால் நாலணா ,எட்டணா கிடைக்கும்.

கணபதியின் அம்மா அவனிடம், “கீச்சான் பிடிக்க மரத்திலெல்லாம் ஏறாதே..விழுந்திருவ”

ஒரு மத்தியான வேளை. ஊரெல்லாம் ஒரே பேச்சு “கணபதியை பாம்பு கொத்திற்று.”

கிச்சன் காதிலும் விழுந்தது. ஒடினான். எங்கெல்லாமோ தேடி கடைசியில் அவன் இருந்த இடம் அறிந்து அங்கே போனான். அந்த வீட்டின் படிப்புரையில் மயங்கிய நிலையில் கிடந்தான்.
கிச்சனுக்கு அழுகையே வந்தது... திரும்ப வீட்டுக்கு ஓடிப் போய் அவன் அப்பாவிடம் விசயத்தைக் கூற அவரும் வந்து பார்த்து , “ கணபதியை ஒரு டாக்டரிடம் அல்லது நம்ம வைத்தியரிடமாவது காண்பிக்கலாம்......கடித்த இடத்தில் ஒரு கயறு வைத்து கட்டவாவது கூடாதா....” சத்தம் போட்டார்.

கணபதியின் அம்மா அழுது கொண்டே இருந்தாள்... அங்கிருந்த ஒரு ஆள், கணபதியின் சொந்தக்காரன்,“ அந்த வீட்டில் உள்ளவருக்கு மந்திரம் எல்லாம் தெரியும்...விசத்தை இறக்கீருவாரு....அவர்தான் கட்டியிருந்த கயிற்றையும் அவிழ்த்துட்டாரு...”

விசம் வேகமாக தலைக்குப் போயிற்று

கணபதியின் நிலமை மிக மோசமானது... யாரொ ஒருவர் உள்ளூர் வைத்தியரை அழைத்து வந்து அவர் கணபதியின் உயிர் பிரிந்தது என சொன்ன பிறகு தான் உண்மை தெரிந்தது.

மந்திரம் மகனைக் காப்பாற்றும் என நினைத்த தாய் கதறினாள்.... ஊர்க்காரர்கள் மந்திரவாதியை ஏசியும் அவர் வீட்டின் மீது மண்ணையும் கல்லையும் வீசினாரகள்.

கிச்சன் மாத்திரம் பயித்தியம் பிடித்தது போல் அழுது கொண்டே போனான்.

கிச்சனின் அப்பா, “ மந்திரத்தை நம்பி மதியையும் இழந்துட்டோமே. ஏன் , அந்த கயிற்றை அவிழ்த்தான்... இது கூட தெரியாத சண்டாளனா அந்த.........”