கைவிளக்கு( 15-8,9-1989) வரிகளும் ஊர் பெரியவர் ஒருவர் சொன்னதும்
மக்கள் தலைவர் மறைந்தார்.மறைந்த தலைவரின் இறுதி யாத்திரை 22-8-1989 செவ்வாய் கிழமை காலை 9.30 மணிக்கு அவரது இல்லத்திலிருந்து புறப்பட்டது. அன்று காலையில் ஊரிலுள்ள அனைத்து வியாபார நிறுவனங்களும், அனந்தபுரம் உயர்நிலைப்பள்ளியும் மூடப்பட்டிருந்தது. அந்த தன்னிகரில்லாத தலைவரின் இறுதி ஊர்வலத்தில் பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர். மாணவ மாணவியர் பள்ளிச் சீருடை அணிந்து, கறுப்பு கொடி அணிந்து இருபுறமும் அணி வகுத்து வந்தனர்.கடுக்கரை ஊர்முழுவதுமாக சுற்றி வலம் வந்த போது ஊர்மக்களின் கண்ணீர் அஞ்சலியும் , அத்தோடு பூ மழை பொழிய அந்தத் தலைவருக்கு இறுதி மரியாதை செலுத்தினர்.ஒவ்வொருவருமே தன்வீட்டில் நடந்த ஒரு துக்கமாகவே எண்ணி வடித்த கண்ணீரஞ்சலி காண்போர் கண்களை குளமாக்கியது. மக்கள் கடல் வெள்ளம் அலைமோதி சென்றது.
தலைவர் என்றாலே அது ம. வேலப்பன் என்ற தம்புரான் தோழ பிள்ளை தான். ஆம் அவர்தான் கடுக்கரை கிராமப்பஞ்சாயத்தின் முதல் தலைவர்.
இன்று காணும் குடிநீர்திட்டம்,ஆலடி வரை கான்க்ரீட் பாதை, புதிய பஞ்சாயத்து அலுவலகம் எல்லாமே இவருடைய காலத்தில் வந்தவை.புதிய பஞ்சாயத்து அலுவலகம் இருக்கும் இடம் மணியங்கர ஆபீஸ். அது திருவிதாங்கூர் காலத்தில் இயங்கிய அலுவலகம் . முறையாக முயற்சி செய்து பாஞ்சாயத்துக்கு வாங்கியது இவர்தான்.
மணியங்கர ஒழிப்புக்கு மிகவும் பாடுபட்டார். மகாத்மா காந்தி நூல் நிலையத்தின் முதல் செயலாளர். அனந்தபுரம் கிருஷிக சங்கக் காரியதரிசி,குமரி மாவட்ட விவசாய சங்கத் தலைவர், கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர்.
1954-ம் ஆண்டு திரு- தமிழக விடுதலை போராட்டத்தில் தோவாளைத் தாலுகாவில் முதல் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார். ஒரு மாதம் சிறையில் இருந்தார்.போராட்டமே இவர் தலைமையில் தான் நடந்தது. 1981-ல் திரு-தமிழக விடுதலை தியாகிகள் விருதினைசென்னை கலைவாணர் அரங்கில் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் பெற்றார்.
1957-ல் பெருமாள் கோவில் டிறஸ்டி. 1984-ல் தெ.தி. இந்துக் கல்லூரியில் இயக்குனர்.
நாகர்கோவிலில் ரோஷினி நாட்டியாலயா நிறுவனர் பொன்னம்மாள் பெருமாள் அவர்களின் நாட்டிய அரங்கேற்றம் இவர் தலைமையில் நடந்தது.
இந்துக்கல்லூரியில் முதல்வராய் பணியாற்றிய கடுக்கரை திரு. பேச்சினாதன் அவர்கள் டாக்டர் பட்டம் பெற்றதை பாராட்டுவதற்காக கூட்டம் இவர் தலைமையில் கடுக்கரையில் முன்னாள் பஞ்சாயத்துத்தலைவர் ஆறுமுகம்பிள்ளையின் மகன் பொன்னப்பன் வீட்டு மாடியில் நடந்தது
9-4-75 முதல் 12-4-75 வரை நடந்த ஆயினூட்டு தம்புரான் கோயில் ஊட்டு விழாவின் மாலை முரசின் சிற்ப்பு மலரில் “அற்புத விழா” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினார்.
கடுக்கரையில் இருப்பது ஒரே ஒரு சிலை . அது இந்த அன்புத் தலைவரின் சிலை.
Thankappan Arumugaperumal
No comments:
Post a Comment