Monday, March 17, 2014

கர்நாடகப் பயணம் - இரயில் பயணம் செய்த நாங்கள்----

மார்ச் மாதம் ஒன்றாம் தேதி காலையில் கண்மலர்ந்த போதே நாலாம் தேதி மங்களூர் போவது பற்றிய சிந்தனை வந்து ஒட்டி விட்டது. முன் பதிவு செய்த காத்திருப்போர் வரிசைப் பட்டியல் என்னவானது.... அவர்களுக்கு இருக்கை-படுக்கை வசதி கிடைக்கவில்லையென்றால் என்ன செய்வது?

அது எப்படியும் கன்பர்ம் ஆயிரும் கவலை வேண்டாம்.... ஆர் எ சி கிடைத்தால் போரும் அட்ஜஸ்ட் பண்ணிக்கிடலாம்..... டிக்கட் நெட்டில் எடுத்து வெயிட்டிங்க் லிஸ்டில் இருந்தால் கான்சலாயிரும்.... ஆனா இந்த டிக்கட் கவுண்டர்லதானே டிக்கட் எடுத்திருக்காங்க... ஆதலால் அதை வைத்து பயணம் செய்யலாம்.... இல்லை ரிஸ்க் எடுக்கக்கூடாது.... தட்கல் டிக்கட் எடுத்திரலாம்.... இப்படி ஆளாளுக்கு தெரிந்தோ தெரியாமலோ சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

பியென்னார் தெரிந்தால் நாம் நெட்டில் பாத்துரலாமே என்ற எண்ணம் என்னை சாமியிடம் அதனைக் கேட்கத் தூண்டியது....கேட்டேன்.... மிகக் குறுகிய நேரத்தில் எவ்வித மறுப்போ சலிப்போ இல்லாமல் அது டிக்கட்டின் நகலாய் என்னிடம் வந்தது....

பார்த்தேன்..கணினியின் வாயிலாக.... பகீர் என்றது பார்த்ததும்.... சாலையில் அசையாமல் நிற்கும் கனரக வாகனம் தரும் அதிர்ச்சி போல் இருந்தது எனக்கு. அந்த டிக்கட்டின் வரிசை எண் அன்றும் காத்திருக்கவே சொல்லிக் கொண்டிருந்தது.... ஈக்யூ மூலம் முயற்சிக்கலாம்....ஒரு நண்பரிடம் சொல்லலாம்... ஆனால் இரண்டு வாரத்துக்கு முன்னால் மூன்று பேருக்கு அவர் முயற்சியில் தான் குஜராத் செல்ல வழி பிறந்தது....இப்போ நான் சொன்னால் இந்த ஆளுக்கு வேறே ந்துவேலையே இல்லையா.... என்று சொன்னால் கூட பரவாயில்ல.... ஒன்றுமே செய்யாம இருந்தா என்ன செய்வது..... சரி இன்னொரு நண்பரிடம் சொல்வோம் என நினைத்தால் அதுவும் நடக்காது.... என் பேரன் குஜராத் செல்ல உதவியது அவரல்லவா ! நான் சொன்னால் செவிடன் காதில் ஊதிய சங்கொலியாகிவிடும்.... என்ன செய்ய.....நாந்தானே அவர்களிடம் கேட்கக்கூடாது....மனம் மிக வேகமாய் செயல் பட்டது.... எனது அத்தானிடம் விசயத்தைச் சொன்னேன்.... அவர் மூலம் தகவல் சொல்லி முயற்சி செய்ததில் பலன் கிடைத்தது.... மூன்றாம் தேதி கணினி இன்னொரு கோச்சில் இரண்டு பெர்த் கிடைத்தது பற்றிய தகவல் தந்தது....

தகவல் சாமிக்குப் போனது.... அவர் என்னிடம் சொன்னார்...“ அவர்கள் உங்கள் பக்கமே இருந்தும் தூங்கியும் வரட்டும்.... அந்த இரண்டு பெர்த்திலும் ஆல்வாயில் இருந்து வரும் சசியும் அவரது மனைவியும் இருந்து கொள்வார்கள்.....”

ஒருவழியாய் இறையருளால் பயணம் செய்பவர்கள் மனது போல் இனிமையாய் இடம் கிடைத்தது...பயணம் தொடங்கும் நாள் மார்ச்சு மாதம் நான்காம் தேதி,செவ்வாய்கிழமை.......

(அடுத்த பிளாக்.....பார்க்கலாமே....)

Sunday, March 16, 2014

கர்நாடகப் பயணம்............

நவம்பர் மாதம் நானும் குவைத் சாமியும் பேசிக்கொண்டிருக்கும்போது கர்நாடகத்தில் உள்ள கோவில்கள் ,அங்குள்ள சிறப்புக்கள் , உடுப்பி கோவிலுக்கு போய் வந்தது பற்றி நான் குறிப்பிட்டேன். அப்போ அவர், “ நீங்கள் தர்மசாலா வுக்குப் போயிருக்கிறீர்களா என்று கேட்டார்.

திருப்பதியில் மகா அன்னதானத்தைப் பற்றிதான் கேட்கிறார் என மனதில் நினைத்துக் கொண்டு நானும், ஆமாம் போயிருக்கேனே.... நான் சாப்பிட்டிருக்கேன்.....திருப்பதி கோவிலில் சாமி கும்பிட்டு வெளியே வரும் போது டோக்கன் தந்தார்கள்.........என்றெல்லாம் கூறும்போதே அவர் என்னிடம், “ நான் சொன்னது கர்நாடகாவில் உள்ள தர்மஸ்தலம்...” என்றார்.

போனதில்லை என்று சொன்னேன்.

“மார்ச் மாதம் போலாமா, வாருங்கோ உடுப்பி, மூகாம்பிகை, எல்லாம் போய் வரலாம் என்றார். எத்தனை பேர் வேண்டுமானாலும் வாருங்கோ....நாலாம் தேதி போணும் . ஒம்பதாம் தேதி வந்துரலாம்”

போனவருடம் 2013-ல் அவர் மகன் திருமணத்துக்கு எங்களை அழைத்துச் சென்றார். எல்லா முக்கிய இடங்களுக்கும் போய் வந்தோம். திரும்பவும் போகவா என்ற மனக் குழப்பம் என் மனதில் தோன்றியதால் ஒன்றும் பேசாமல் அமைதியாய் இருந்து விட்டேன்.

நாட்கள் சில கடந்தன.... சாமி வந்து, “ வருபவர்களின் பெயரும் அவர்களது வயதையும் எழுதித் தரும்படி” கேட்டார்.

என் உறவினர்கள் வருவார்கள். நான் கேட்டு சொல்கிறேன். ஆனால் நாங்கள் வரவில்லை என்றேன்.

அதற்கு அவர் சம்மதிக்கவில்லை. கண்டிப்பாய் வந்தே ஆக வேண்டும் என்று வற்புறுத்தினார்.

நாங்கள் எட்டு பேர் வருவதாகச் சொல்லி பெயர் கொடுத்தேன். டிசம்பரில் முன் பதிவு செய்தார். நாட்கள் கடந்தன.... பெப்ருவரி மாதம் பதினேழாம் தேதி என் மனைவி என்னிடம், “ நம்ம கூட வருவதற்கு இரண்டு பேர் ஆசைப் படுகிறாங்க... டிக்கட் அவர்களே எடுத்துக் கொள்வார்கள்.... சாமிட்ட கேட்டுப் பாருங்களேன்...”

சாமியின் மகனிடம் இந்த விசயத்தைக் கூறினேன். பிரச்சினை ஒன்றும் இல்லை. மங்களூரில் இருந்து பஸ்ஸில் அல்லது வேனில்தான் போகணும். அதில் இடம் இருக்காண்ணு  கேட்கணும் என்று சொல்ல........ நான் சொன்னேன், “ நாம் பஸ்ல அட்ஜஸ்ட் பண்ணி இருந்துக்கலாம்...”.....

சாமிக்கு ஈ-மெயில் அனுப்பினேன். அனுப்பி பத்து நிமிடம் கூட ஆயிருக்காது...
சாமி அவரது மகனுக்கு போனில் தகவல் கொடுத்து செய்ய வேண்டியதைச் செய்யும்படி சொல்லவே..... எல்லாம் முறைப்படி நடந்தது.... ருபாய் வாங்கவில்லை..... இரயில் டிக்கட் வெயிட்டிங் லிஸ்டில் முன் பதிவு செய்யப்பட்டது...... இப்போ நாங்கள் பத்து பேர்....... சாமியின் குடும்பத்தில் நால்வர், அவர் டிரைவர் சுதாகர், ஹோட்டல் ஊழியர் நாராயணன், குவைத்தில் பணியாற்றிய ஒருவரும் அவர் மனைவி மற்றும் அவரது இரண்டு நண்பர்கள் குடும்பம்( நால்வர்)...... மொத்தம் இருபத்து இரண்டு பேர்....

மார்ச் மாதம் நான்காம் தேதி காந்திதாம் எக்ஸ்பிரஸ்ஸில் பயணம் ஆனோம்.

Thursday, March 13, 2014

நாங்கள் இருபது பேர் ஐந்து நாட்கள் கர்நாடகக் கோவிகளுக்குச் சென்று வந்தோம்.....

ஒரு நாள் காலை பத்து மணியளவில் என் வீட்டுத் தொலை பேசி சிணுங்கிக் கொண்டே இருந்தது. பொதுவாக அதனை அதிகம் பயன்படுத்துவது என் வீட்டுத் தலைவிதான்.அதனால் நான் அதன் பக்கமே போவதில்லை.
நேரம் போனது... மணியோசை நின்று விட்டது.... அப்போதுதான் எனக்கு ஞாபகம் வந்தது வீட்டில் அந்த சமயத்தில் இருப்பது நான் மட்டுமே என்பது.
அய்யய்யோ ...... நான் பேசாமல் இருந்து விட்டேனே.... வெளியே சென்ற அவள் கூட எதற்காகவோ அழைத்திருப்பாளோ !.......

மறுபடியும் மணியோசை கேட்க நான் ரிசீவரை எடுத்து காதருகே கொண்டு போனேன்......
ஹலோ.....என்று நான் சொல்லவும் என் காதில் கேட்டகுரலை வைத்தே மறுமுனையில் பேசுவது என் நண்பர் ஒருவர் என்பதை அறிந்து கொண்டேன்.
“என்னடே ! இரண்டு மூன்று தினங்களாக உன்னைத்தொடர்பு கொள்ள முயற்சித்தேன்.... என்ன ஆச்சு உனக்கு.... மொபைல் இருக்கா உன்னிடம்..?”

நான் மங்களூர் போயிருந்தேன்......சொல்லி முடிக்கவில்லை.

அதற்குள் ,“ பெங்களூர் மகள் வீட்டுக்கா...”

நான், “ இல்லயில்ல.... மங்களூருக்குப் போய் உடுப்பி, மூகாம்பிகை, தர்மஸ்தலம், நந்திகூர் கோவில்......போய் நேற்று இரவு தான் வந்தோம்.” என்றேன்.

எப்படி போனீங்க .... பஸ்ஸிலா... ரயிலா... எத்தனை பேர்......

“நாங்கள் இருபதுபேர் இரயிலில் போனோம் இரயிலில் வந்தோம். இந்தமாசம் நாலாம் தேதி செவ்வாய் கிழமை மத்தியானம் கோட்டார் ரயில்வே நிலையத்தில் இருந்து இரண்டு மணியளவில் காந்திதாம் (குஜராத்) எக்ஸ்பிரஸ்ல புறப்பட்டுப் போனோம். காலையில் சூரத்கல்லில் இறங்கினோம். அங்கிருந்து ஒரு வேனில் முல்கி என்ற இடத்தில் லாட்ஜில் தங்கினோம். மறுநாள் காலையில் உடுப்பி கிருஷ்ணன் கோவில், மூகாம்பிகை கோவில்..... வியாழன் காலையில் குக்கீ சுப்ரமணிய கோவிலுக்கும், தர்மஸ்தலம்,கட்டீல் துர்கா பரமேஷ்வரி அம்மன் கோவில்......வெள்ளிகிழமை காலையில் நந்திகூர் துர்காபரமேஷ்வரிஅம்மன் கோவில்,மூடிபத்ரி,.....சனிக்கிழமை காலையில் நந்திகூர் கோவிலிலில் திருவிழா முதல் நாள் , மாலையில் சங்கரன் நம்பூதரியின் வாய்ப்பாட்டுக் கச்சேரி..... ஞாயிறு காலையில் மூகாம்பிகையில் இருந்து ஹாப்பா எக்ஸ்ப்ரஸ்ஸில் நாகர்கோவிலுக்கு புறப்பட்டு வந்தோம்... (இந்த ரயில் நாகர்கோவில் ட்வுண் (பள்ளிவிழை) ஸ்டேசன் வழியாக திருநெல்வேலி செல்லும்)”

ஒரு ஆளுக்கு எத்தனை ருபா ஆச்சு ?

எங்களுக்கு ஒரு செலவும் இல்லை. எங்களை அழைத்துச் சென்றது வடசேரி உடுப்பி ஹோட்டல் நிறுவனர் திரு வெங்கட்ராமன் போற்றி.

மிகவும் வித்தியாசமான ஒர் அனுபவம்.... மறக்க முடியாத ஆன்மீக ,புன்ணிய யாத்திரை......

எல்லாம் இறையருளே.......



Thursday, February 13, 2014

வலியைத் தந்தது சுமை......வலிமையைத் தந்தது பாசம்....

நான் ஓசூரில் இருந்து திங்கள்கிழமை மத்தியானம் இரண்டரை மணிக்குப் புறப்படத் தீர்மானித்து என் மகனிடம் ஹனீபாவின் ஆட்டோவினைக் கொண்டு வரச் சொன்னேன். நான் சொல்லும்போது டாக்சியில் சென்று கொண்டிருந்தேன்...

“ நீங்க நாகர்கோவிலில் இருந்து பயணம் செய்திருக்கீங்க
களைப்பாக இருக்கும்லா...வாடகைக் காரில் போகலாம்.”...என்று சொன்னான் என் மகன் முருகன்.
“எத்தனை ருபாய் ஆகும்” .... நான் கேட்டேன்.

“நான் கொடுக்கேன்பா”

“யார் கொடுத்தாலென்னா..... எத்தனை ருபா ஆகும்னு சொல்லு...”

 “1200 ருபாய் கேட்பான்”.....

“இல்ல சார் 1000 தான் ஆகும் மனசாவடிக்கு (கஸ்தூரி நகர்)......” .சொன்னது காரை ஓட்டி வந்தவர்.

எனக்கு அவன் சொன்ன ஊரின் பெயர் ........ சற்று குழப்பமாய் இருந்தது. இரண்டும் ஒன்றுதான் என பின்னால் அறிந்து கொண்டேன்.

ஓசூர் ரயில் நிலையத்தில் இருந்து வீட்டிற்கு வர 250 ருபாய் வாங்கினான். அரை மணிக்கூர் காத்து நின்றதற்கும் சேர்த்துதான் அந்த ருபாய்....

அதிகமாய் வாங்கியது போன்ற உணர்வில் நான் இருந்தேன்.....

என் மகன் நாங்க வந்த காரின் ஓட்டுனரிடம் சொன்னான். “அப்பாவிடம் கேட்டு போன் பண்ணுகேன்....”

வீட்டுக்குள் போனதும் அவன் என்னிடம், “ எத்தனை மணிக்கு காரை வரச் சொல்லணும்.....”

“கார் வேண்டாம்போ...”

அவன் என் பதில் கேட்டு ஒன்றும் சொல்லாமலே என் அருகில் இருந்து போனான்.

எனது பேரனைப் பள்ளிக்கூடத்திற்கு அழைத்துச் செல்ல ஆட்டோஹனீபா வந்தான்....

அவனிடம் இரண்டரை மணிக்கு ஆட்டோவைக் கொண்டு வரச் சொன்னாள் என் மருமகள்.....

என் மகன் அவன் மனைவியிடம் சொன்னது கேட்டது. “ அப்பாவை பஸ்ல பெங்களூருக்கு அனுப்பீராதேன்னு அம்ம போன் பண்ணி சொன்னா.... அப்பா கேக்க மாட்டாங்களே....”

ஆட்டோ சொன்ன சமயத்தில் வந்தது..... ஓசூர் பஸ்நிலையத்துக்கு போக 70 ருபாய் என் மகன் கொடுத்தான்....

பஸ்நிலையம் வந்து இறங்கினேன். நான் சுமைகளை தூக்கித் தோளில் போட்டு நடந்தேன். நடக்க நடக்க என் சுமை அதிகம் போல் தெரிந்தது... நான் கொண்டு வந்தது....தேங்காய்.... முறுக்கு..... முந்த்ரிக்கொத்து....பல இனிப்பு.... நான் போகும் இடம் என் மகள் வீடு.

தனியாய் என் மகள் வீட்டுக்கு போவது இதுவே முதல்முறை.... எப்பொழுதும் என் மனைவியுடன் தான் செல்வது வழக்கம்....

பஸ்ஸில் ஏறினேன்.... எங்கு இறங்க வேண்டும் என்று கேட்க நானும் சொல்லி 35 ருபாய் டிக்கட் வாங்கினேன். இறங்க வேண்டிய இடம் என தவறுதலாய் ஒரு இடத்துல இறங்கி நின்று பார்த்தால் ....... அதிர்ச்சி.....

அடுத்த பஸ் நிற்கும் இடம் கொஞ்சம் தூரம்தான் என்பதைப் புரிந்து கொண்டேன்.நடக்க ஆரம்பித்தேன்.....

சுமை எனக்கு வலியைத் தந்தது....பாசம் வலிமையைத் தந்தது.

 ஆனாலும் கைப்பையின் வார் அறுந்து தோளில் இருந்து விழுந்தது  எனது பை......விழுந்த இடம் சில்க்ப்போர்டு சாலை....

என்ன செய்வது தலையில் தூக்கிக் கொண்டு செல்லவா....அல்லது ஆட்டோ ஏதேனும் பிடிப்பதா.....வேண்டாம்....

நான் ஒருவன் தானே....

சுமந்து சென்று  பஸ்நிலையம் போய் அங்கிருந்து பஸ்ஸில் ஏறி வீடுவந்து சேர்ந்தேன்...

“அப்பா.....உங்கள் தோள் சிவந்து போய் இருக்கே.... ஏம்பா..”
 என் மகள் கேட்டபோதுதான் பார்த்தேன். அது சிவந்துதான் இருந்தது.

அறுந்த வாரை சரிபடுத்த என்ன செய்ய .....Stapler pin -வைத்து முயற்சி செய்தேன்.... ம்ஹூம்.....

என் மகள் சொன்ன கடைப் பக்கம் போய் பார்த்தேன்...

பாதையோர நடை மேடை. அதனைத்தடுத்துக் கொண்டு ஒரு பெட்டிக்கடை. அதில் ஒருவர் செருப்பு ஒன்றைத் தைப்பதில் மும்முரமாய் இருந்தார். குளிர் சற்று கூடுதலாக இருந்ததாலோ என்னவோ இரண்டு சட்டை அணிந்து மேலே ஸ்வெட்டெரும் அணிந்திருந்தார். கண்களில் தங்க நிற சீதாப்பாட்டி அப்புசாமி கண்ணாடி.அவர் சற்று தடிமனாய் ஆடுகளம் தனுஷின் குருநாதர் போன்று இருந்தார்.அவர் முன்னால் உள்ள சாலையில் எங்கிருந்தோ வந்த தண்ணீர் தேங்கியும் , நகர்ந்தும் போய்க் கொண்டிருந்தது.சாலையில் கார்களும் மற்ற வாகனங்களும் வேகமாக....மிக வேகமாக....சர்...சர்... என ஓடிக் கொண்டிருந்தன.

என்ன வேணும் என்பது போல் பாவனையால் என்னை சற்று தலையைத் தூக்கிப் பார்த்தார்.. அறுந்த வாரைக் காண்பித்தேன். வாங்கிப் பக்கத்தில் வைத்தார். அரை மணிக்கூர் கழிந்து வரச் சொன்னார்.

நான் காத்திருக்கிறேன்.... எனக்கு திரும்பி வர நேரம் இல்லை எனச் சொல்லி அங்கேயே நின்ற ஒரு மரத்தில் சாய்ந்து நின்றேன். சற்று பின்னால் காலையில் திறக்காதக் கடைப் படிகளில் ஒரு பெரியவர் .....நீல நிறச் சட்டை.... பேண்ட்ஸ்....செருப்பில்லா கால்.....அமர்ந்திருந்தார்.

அவருடைய செருப்பை தான் தைத்துக் கொண்டிருந்தார்..... அவைகளைத் தைத்து முடிக்க நேரம் கூடுதலாகும்.....

நீலச் சட்டைக்காரர் என்னிடம் என்னை அழைத்து ஏதோ சொன்னார் .... ஒன்றும் புரியவில்லை.....இந்தியில் பேசினார்.....நான் அமைதியாய் நின்றதைப் பார்த்து அவர் எழுந்து செருப்புத் தைப்பவரிடம் எனக்கு  முதலில் வாரைத்தைத்துக் கொடுக்கும்படி சொன்னார்.

என் அவசரம் அந்தப் பெரியவருக்குப் புரிந்திருக்கிறது.

 சொன்னவர் அங்கிருந்த பழைய செருப்புகளை வாங்கித் தமது கால்களில் போட்டு ருபாயும் கொடுத்துவிட்டு சற்று நேரத்தில் வருவதாகச் சொல்லிவிட்டுப்  போனார். அந்த வயதான பெரியவர் அமைதியாய் போவதையே பார்த்துக் கொண்டிருந்தேன்.அவரது கம்பீரமான உருவம் அந்த வயதிலும் கம்பீரமாகவே இருந்ததில் மனதினுள் ஒரு பிரமிப்பு.....அவர் நின்று திரும்பிப் பார்த்து தான் இருந்த கடையைப் பார்த்தவாறே என்னவோ இந்தியில் சொன்னார்.

கடையின்  சொந்தக்காரராக இருப்பாரோ  என்று   நினைத்துக்  கொண்டே ,          “ என்ன சொல்லிவிட்டுப் போகிறார். கடையை கனித்துக் கொள்ள சொல்கிறாரா என்று கேட்டேன்.”

“இல்ல...இல்ல..... அவர் படியில் இருக்க ஒரு பை கொடுத்தேன். அதை யாராவது எடுத்துட்டு போயிடக்கூடாது. எடுத்து வைக்கச் சொன்னார்”

அவர் கப்பல் படையில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். எனது வாரைத் தைத்துக்கொண்டே சொல்லிக்கொண்டிருந்தார்.நாற்பதாயிரம் பென்சன் வாங்குகிறார். ஒருநாளைக்கு 1333 ருபாய்.........

என்னிடம் அவர் நட்பாய் பேசியதால் அவரிடம் பேசும்போது நான் பேட்டி காண்பது போலப் பேசினேன்....பல கேள்விகள் கேட்டேன்......

அவர் பெயர் சிவண்ணா.... தமிழ் தெரியும்... 1967-ல் சிவாஜி நகரில் வாழ்ந்தவர். எல்லா மத ,ஜாதி மக்களும் தமிழ் மொழி பேசுபவர்கள்தான் அப்போ....இப்போ தான் கன்னட மொழி பேசுபவர்களும் இருக்காங்க என்றெல்லாம் சொன்னவர் அடிக்கடி ஆங்கிலத்திலும் பேசினார்....

அவர் ஒரு முதலாண்டு பிகாம் வரை படித்தவர்.

அவரது அப்பாவால் செலவு செய்ய இயலவில்லை....வேலை பார்க்க வேண்டும் என்ற நிலை ..... படிப்பு பாதியில் நின்றது. வறுமை துரத்தியது.

கிடைக்கும் பஸ்ஸில் ஏற வேண்டியத்துதானே. இவரும் பஸ்ஸில் ஏறினார். தினமும் பயணம் தொடங்கியது.

அவருக்குக் கிடைத்த வேலை பஸ் கண்டக்டர்.....

பஸ் கண்டக்டராக வேலை பார்த்து தன் வாழ்க்கையை கழித்தார்.

நிறுவனம் -தொழிலாளர்கள் பிரச்சினை வந்தது.....

அவர் சொன்னார்... “ஜோசப் என்பவர்.... கேரளாவைச் சார்ந்தவர்....அவர் எங்கள் மேல் அக்கறை கொண்டவர். எங்கள்  எல்லோரையும் அழைத்துப் பேசினார். கேரளாவைப் பார்த்தீங்களா.....அங்கே இருப்பது போல்  யூனியன் ஒன்றை அமைக்கச் சொல்லி எங்களை ஒருங்கிணைத்து நியாயமாகப் போராடி அனைத்து உரிமைகளையும் வாங்கிவர வழி காட்டியாய் இருந்தார். மூன்றாம் வகுப்பு வரை படித்த அவரது மூளை.... சிந்தனை எல்லாமே அதிகம்.அவர் தான் எனக்கு கடவுள்....”

“ குடும்பச்சுமை கூடியது......பாசம் மனவலிமையைத் தந்தது....ஓய்வு பெற்றால் கிடைக்கும் பணத்தை வைத்து சில கடமையை முடிக்கலாமே ....நல்ல வரன் வந்தது.    காசு வேணுமே.......ஒரு வருடத்திற்கு முன்னமே கேட்டு வாங்கி ஓய்வு பெற்றேன். என் இரண்டு மகளைத் திருமணம் செய்து கொடுத்து விட்டேன். ஒரு மகள் வேலை பார்க்கிறாள்..... ஒரு மகன் உண்டு. அவனும் வேலை பார்க்கிறான்.”

”எனக்கும் பல வேலைகள் கிடைத்தன.....ஆனால் எனக்கு எங்கும் வேலை செய்யப் பிடிக்கவில்லை. இருக்கவே இருக்கு என் குலத்தொழில்.... என் அப்பா தாத்தா செய்த செருப்புத் தைக்கும் வேலை. மரத்தடியைத் தேடி இங்கு வந்து இருக்கிறேன். பத்து வருடங்களுக்கு மேல் ஆயிற்று....யாருக்கும் நான் அடிமை இல்லை. எனக்கு எப்போ கழியல்லையோ.... ஏன் நேற்று கூட கடையைத் திறக்கல்ல....நான் சுதந்திரமாக இருக்கேன் ”

 “தினசரி வருமானம் என்று சொல்ல முடியாது..... காசு கிடைக்காத நாளும் உண்டு.ஆனால் மாதம் எட்டாயிரத்தில் இருந்து பத்தாயிரத்துக்குள் கிடைக்கும். ”

வாரைத் தைக்கும் வேலை முடிந்தது. வாரை என்னிடம் தந்தார்.

நான் ,“எவ்வளவு”..... என்றேன்.  எப்படியும் பத்து அல்லது பதினைந்து கேட்பார் என மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.

நான் சற்று அதிர்ந்து விட்டேன் அவர்....சிவண்ணா சொன்னதைக்கேட்டு....

“வேண்டாம்... நான் என்ன செய்துட்டேன்னு பைசா வாங்க.....”

எனக்கு ஒண்ணுமே சொல்லத்தோணல்ல..... என் மனம் பைசா கொடுக்காமல் போகவும் இடம் கொடுக்கல்ல...

அவரையே பார்த்துக் கொண்டு நின்றேன்...... “ நான் மினிமம் வாங்குவது ருபாய் 15. ஆனால் அது செருப்புக்கு.... இது சின்ன ஒரு இன்ச் வார்... வேண்டாம் சார்.......”

அடுத்துள்ள வேலையைப் பார்க்க அந்த கப்பல் படை வீரரின் செருப்புகளை எடுத்தார்.

நான் அவரிடம் சொன்னேன்...... “நீங்கள் செய்த இந்த சின்ன வேலை கூட என்னால் செய்ய முடியாத ஒன்று....நீங்கள் வாங்க வில்லையென்றால் எனக்கும் சங்கடமாக இருக்கும் என்றேன்.”

“அப்போ..... அஞ்சு ருபா தாருங்க....”

நான் கொடுத்தேன்..... THANKS என்று சொல்லிஅதை வாங்கிப் பார்த்தார்.

“என்ன சார் முப்பது ருபா தாரீங்க....” அதிர்ச்சியும் ஆனந்தமும்  கலந்து சிரித்துக் கொண்டே கேட்டார் .

நானும் பதிலுக்கு சிரித்துக் கொண்டே மௌனமாய் தைக்கப்பட்ட “வாருடன்” அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன்.

சுமைதந்த வலியும் தோளில் கண்ட சிவப்பு நிறமும் என் மனதை விட்டுப் போயிற்று.

அந்தச் சுமை தந்த சுகம் தனை இப்போ நான் எழுதும் என் வரிகளில் காண்கிறேன்.....



Sunday, January 26, 2014

என் மனதை நனைத்த அனந்தாவின் அற்புதமான வரிகள்


Ananda Padmakumar தமது முகநூலில் பதிவு செய்தது........

10 January


என் ரெயில் பயணங்கள்
சின்னஞ்சிறு வயதில் ரெயில் கடப்பதற்காக
காத்திருக்கும் தருணங்களும் பேரின்பம். புகை கக்கும் வண்டி
அடுக்கி வைக்கப்பட்ட தொடர் பெட்டிகள் அது எழுப்பி செல்லும்
ஒலி இவை யாவும் மன அடுக்குகளின் மகிழ்ச்சி பக்கங்கள்.
ரெயில்வே கேட் மூடி இருக்க வேண்டும் என்ற
சிறு பிள்ளை வேண்டுதலை ஏற்கும் கடவுள் மற்றவர்களின் சலிப்பை
ஒரு நாளும் கண்டு கொள்வதில்லை
கடைசி பெட்டி கண்ணை விட்டு அகலும் வரை இமை மூடாது
வியந்த நாட்கள் அன்று.கடைசி பெட்டி வந்தவுடனே சீறும் வண்டிகளில் நாம் இன்று.
கடக்கும் ரயில்களில் பலவித உணர்வுடன்
பயணிக்கும் மனிதர்களின் உருவம் சின்ன மனதில் தேவ தூதர்களை
பார்த்த வியப்பு மேலிடும்.
அந்த பயணத்தின் முடிவில் அவர்கள் அடையும் இடம் பற்றிய
பெருங்கனவு பல நாள் இரவுகளை நிறைத்திருந்தது
காத்திருந்த தருணங்கள் முடிந்து பயணப்பட்ட நாட்களை அதில்
கண்ட மனிதர்களை மனம் எண்ண தொடங்குகிறது.
unreserved இல் அத்தான் விரித்து தந்த தினசரிகளுள் படுத்த போதும்
தூக்கம் கண்களை நிறைத்திருந்தது.கழிவறையில் இருக்கும்
wash basin கள் புதுமையாய் இருந்தது.
இளைஞர் பருவம் அடைந்த போதினில் பயணங்கள் வெவ்வெறு
கோணங்களை அடைந்ததை மடை மாற்றம் என்று சொல்லலாமா ?
அப்படிப்பட்ட ஒரு பயணத்தில் மொட்டை தலையுடன் வந்த இன்னொரு இளைஞன் என் வகுப்பு தோழன் என்பதுவும்
அவனது தந்தைக்கு இறுதி சடங்கு முடிந்து பணி நிமித்தமாக பயணம் செய்யும்
தகவலும் தடக் தடக்கென ஒலிக்கும் ரயில் வண்டியின் ஓசையோடு
அவனது அழுகுரல்கள் அமுங்கி போனதுவும் மனதை தழு தழுக்க வைத்த நிகழ்வுகள்.
வாழ்வெனும் பெரும் கடலில் நாம் எதிர் பாராமல் சந்தித்த நல்ல மனிதர்கள் நம்
தவப்பலனோ? "தீதும் நன்றும் பிறர் தர வாரா".
இந்த ஆண்டின் முதல் நாளே இன்னொரு ரயில் பயண வாய்ப்பு கிடைத்தது
இரண்டாவது முறையாக கருவுற்றிருக்கும் என் மனைவி யும் வண்ண கனவுகளோடு என் மகனும் பயணப்பட்ட நாள்.
சூச்சு போகணும் சூச்சு போகணும் ன்னு சொல்லி நாலஞ்சு தடவை toilet யை வேடிக்கை பார்த்ததை
ஒரு நாள் என் மகனும் அந்த பயணம் ஏற்படுத்திய பரவசங்களாய் பகிரக்கூடும்.
தட்காலில் பதிவு செய்த போது இரண்டு படுக்கையும் மேல் அடுக்கிலே கிடைத்திருந்தது
கணினிக்கு புரிய வைக்க முடியாத சூழல்.
அருகாமையில் ஒரு முதிய தம்பதி தன் பேரப்பிள்ளைகளுடன் வந்து உட்கார்ந்தனர்
கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைகள் கழிந்து புறப்பட்டிருக்க கூடும்.
மெதுவாக பேச்சை ஆரம்பித்தாள் என் இல்லாள் கீழ் படுக்கையின் தேவை அவர்களை பொருத்தவரையில்
மிக முக்கியமானது அவர்கள் வயதின் காரணமாக.இருப்பினும் என்னவள் கருவுற்றிருப்பதை அறிவித்த
அடுத்த நொடியில் அவர்கள் மனம் கனிந்தது கண்டிப்பாக மகளே உனக்கு ஒரு கீழ் படுக்கை(lower) தருவோம்
என்றனர்.அவர்களது ஒரு மேல் படுக்கை (upper) அடுத்த இரண்டு,மூன்று அடுக்குகள் தாண்டி (34) இருந்தது அதில் என்னை
படுத்து கொள்ள சொன்னனர்.முதிர்ந்த அந்த மனிதர் மேலும் சொன்னார் அடுத்த இரயில் நிலையத்தில் ஏறும்
ஒற்றை மனிதரை அந்த படுக்கைக்கு செல்ல வேண்டலாம் அப்பம் நாம் ஒரு குடும்பமாய் ஒரே பகுதியில் சிதறாமல்
பயணிக்கலாம் என்றார்.பயணித்த அந்த அரை மணி நேரத்திலேயே சக மனிதனின் உணர்வை புரியும் மனதும்
தாயினும் சாலப்பரிவும் மனதை கரைத்திருந்தது.அவரது எண்ணம் போன்றே நிகழ்ந்தது அடுத்த இரயில் நிலையத்தில்
ஏறியவருக்கு 35,36 மற்றும் 1 ம் படுக்கை கொடுத்திருந்தார்கள் அவருக்கும் 34 வது படுக்கை தேவையாய் இருந்தது.
மேலும் பேச்சை தொடர்ந்தோம்.திடகாத்திரமான அவரது உடலும்
அவரது பேச்சும் அவரது வயதை 50ற்குள் இருக்கும் என்று எண்ண தோன்றியது எனினும் அவரது வயது 66 என்றார்.
உடற்பயிற்சியின் மிதான தீராத அவரது ஆர்வம் அவரது பேச்சில் கொப்பளித்தது.Thumbles,pull worker என்று அவர் தற்போதும்
உபயோகபடுத்தும் கருவிகளின் பெயர்கள் என் ஈரக்குலையை பதற செய்தது.
திருநெல்வேலியில் உள்ள ஹோட்டல் களை பட்டியல் இட்டு ஒவ்வொன்றின் தனித்தன்மைகளை விளக்கினார்
பிரபு ஹோட்டல் - முன்னாடி நல்லா இருந்தது எங்க சாதி தான் அனா இப்பம் சரியில்லன்னார்
சகுந்தலா ஹோட்டல் நல்லா இருக்கும் அனால் நான் மற்றும் என் நண்பர் ஒருவரும் வந்து ஒரு நாள் சாப்பிட்ட அடுத்த நாளிலிருந்து
இவர்களை கண்டால் அந்த ஹோட்டல் மேலாளர் பதருவாராம் இப்படி "இவனுகெளுக்கு உடம்பு முழுக்க வயறு கடைய இழுத்து முடுங்க்கெடே"
அன்ன பூரணா ஹோட்டல் அஞ்சாறு வருசம் முன்னாடி முஸ்லிம் கைல மாறிடுச்சி ஆனாலும் உங்க இந்து கடவுள் படங்களும்
பட்டையோடு கல்லாப்பட்டியில் நிற்கும் கந்த சாமி மாட சாமிகளும் மாறவில்லை என்றார் .
பேச்சு வெவ்வெறு தளங்களை தொட்டது தான் பிறப்பால் ஒரு கிறிஸ்தவர் எனினும் ரிஷி கேஸ் வரை சென்றிருக்கிறேன் என்றார்
ஆனாலும் ஊர் கோவில் போல் சிற்ப வேலைப்பாடு கொண்ட கோவில்கள் அபூர்வம் என்றார்
ராமனும் கிருஸ்ணனும் இந்த தேசத்தின் வெவ்வெறு பகுதிகளை ஆண்ட மன்னர் என்றும் அவர்கள் தாங்கள் வாழ்ந்த பெரும் வாழ்வால் கடவுளாக ஏற்று கொள்ளப்பட்டவர் என்று கூறினார்.எங்கள் ஏசுவும் ஒரு மனிதரே இடையில் வந்தவர்கள் அவரை
கடவுளாக்கி பின்னர் மதமாக்கி விட்டனர் என்றார்.ஏசுவும் ஒரு கலகக்காரர் தான் யூத குருமார்களின் தவறுகளை சுட்டிக்காட்டி
அவர்களை துரத்தியதால் சிலுவையில் அறைந்ததாய் கூறினார்.
சைவமும் வைணவமும் இணைந்தது போன்ற பறந்த மனது வரும் போது
எல்லா மதமும் இணையும் என்றார். இந்து மத இளைஞர்களுக்கு எந்த கட்டுப்பாடுகளும் இல்லாதலால் அவர்களால் பைபிளையும் படிக்க முடிகிறது குரானையும் உணர முடிகிறது ஆனால் எங்கள் மதத்திலும், இஸ்லாமிய மார்கத்திலும் அந்த வழிகள்
அடைக்கபட்டிருப்பதாக சுட்டிக்காட்டி வருந்தினார்.மதம் நம்மை எப்படி துண்டாடி கொண்டுருக்கிறது என்பதை சுட்டிக்காட்டினார்
தன் ஊரில் 90 வயதிற்கு மேலான முதியவரை பார்க்கும் போது 100 வயதை தொட வேண்டும் என்று கூறுவாராம் கிறிஸ்து மனது வைத்தால் என்பாராம் அந்த முதியவர். சீனா வில் தான் 20,000 துக்கும் மேலான 100 வயதை தொடும் மனிதர்கள் இருக்கிறார்கள்
அவர்களை என்ன கிறிஸ்துவா காப்பாற்றினார் அவர்களது வாழ்க்கை முறை தான் அவர்களை காப்பாற்றியது என்றார்.
TTR வந்த போது எங்கள் உரையாடல் முடிந்தது.படுக்கைக்கு போன போது அவரது உரையாடல்கள் என் மன இடுக்குகளில்
படிந்திருந்தது.மேல் படுக்கைக்கு போகும் முன்னர் அவரது வலது கால்களில் களிம்பிட்டார் என்ன என்று கேட்டேன்
தகரம் அவரது கால்களை கிழித்திருந்ததை அப்போதுதான் சொன்னார் திடுக்கிட்டேன் மேலே ஏற சிரமமாய் இருக்குமே என்றேன்
ஒரு சிரமும் இல்லை தம்பி நான் பார்த்து கொள்கிறேன் என்றார் காலையில் நாங்கள் இறங்க வேண்டிய இடம் வந்த போது தானாகவே விழித்தெழுந்தார் என் பெட்டி மற்றும் அனைத்து பொருட்களையும் ஒற்றை மனிதராய் எடுத்து தந்து God bless you என்றார்.
முன்னிரவில் அவர் எனக்கு சொன்ன கடவுள் பற்றிய கோட்பாடுகள் புரிந்திருந்தது.மத எல்லைகளற்ற அந்த கடவுள் பற்றிய புதிய
கோணங்களை என்னுள் விதைத்து விட்டு அவர் விடை பெற்றிருந்தார்.”

Tuesday, December 24, 2013

தெய்வமே குடிகொள்ள விரும்பும் ஒரு அன்புஇல்லம்

ஒரு வியாழன் அதிகாலையில் எனது மொபைல் தனது பணியை தவறாமல் செய்து எனை உறக்கத்தில் இருந்து எழச்செய்தது.....

காலையில் மார்த்தாண்டம் பக்கம் உள்ள அதங்கோடு எனும் ஊருக்குப் போகவேண்டும்... எட்டரை மணிக்கு மேல்தான்....அதனால் காலை நடையினை ரத்து செய்திருந்தேன்...

அதனைத் தூங்கப் போகுமுன் மொபைலிடம் நான் சொல்லியிருக்கணும்... சொல்லல......

மொபைலின் வாயை மூடினேன்... இல்லையெனில் நான் எழுந்து அதனைத் தொடுவது வரை ரெண்டு நிமிடத்திற்கொரு முறை அலறும்.....

மறுபடியும் கண் மூடி தூங்க எத்தனித்தேன்......

மறுபடியும் என் காதருகே சத்தம்... ”எழந்திங்கோ.... ஆறுமணிக்கு ராமு வந்துருவான்.... வெள்ளமடத்துக்கு துட்டிக்குப் போகணும்.....” இது என் அவள்.

நான் வரல்ல.... நீப்......போ.....

”வாருங்கோ... மாத்தம்மாச்சிக்கு அக்காள்லா அது...... (அவள் இறந்து நாலு நாளாச்சு.....) போகல்லண்ணா அவ என்னமா நினச்சுருவா......வாங்க...... “

சொல்லிவிட்டுப் போய்விட்டாள்....

பாதிமனசோடு எழுந்தேன்.....

அந்த வீட்டுக்குப் போனோம்.....அது ஒரு பழைய வீடு... அதன் வாசல் அருகே மொட்டைத் தலையோடு நின்றிருந்தார் ஒருவர்... இறந்துபோன ஆச்சியின் நாலு மகன்களில் ஒருவர்

சிரிக்காமல் ..... ஆனால் வாஞ்சையோடு வா என்பதுபோல் தலையசைத்து அழைத்தார்.....

உள்ளே போக நினைத்து வாசல் பக்கம் போனேன். அந்த வீட்டு முற்றத்தில் உறவுக்கார பெண்கள் அனைவரும் மாரடித்துக்கொண்டு  அம்மாடி-தாயர  எனப் பல முறை முணு முணுத்தபடி சுற்றி வந்து கொண்டிருந்தனர்.

 அச்சமயம் உள்ளே ஆண்கள் போலாமா..... தெரியாது... நான் போகமல் தெருவில் உள்ள படிப்பரைல ....கருங்கல் பதித்த இடம்....அதில் இருந்தேன்.

வீடு புதுப்பிக்காமல் பழமை மாறாமல் இருந்ததைக் கண்டு ஆச்சரியமாய் பார்த்துக் கொண்டிருந்தேன். அது ஒரு சுத்துக்கட்டு வீடு. முற்றம் ...அதன் தெற்கிலும் மேற்கிலும் வாசல்கள்.... வடக்குப் பக்கம் ஜன்னல்.... ஓட்டுவீடு

அதன்பிறகு ஒருவர் எனை அழைக்க நான் உள்ளே போய் இருந்தேன்.....

எனக்குத் தெரிந்த ஒரு மொட்டை போட்ட இன்னொரு மகன் என் பக்கம் வந்தமர்ந்தார்...

அவர், “ அம்மை படுத்து ரொம்பநாளாயிற்று...வயசும் 90-க்கும் மேல.... கொஞ்சம் கஷ்டப்பட்டுற்றா.....மகளுக்கு நிச்சயதாம்பூலம்  இரண்டு நாட்களுக்கு முன்தான் நடந்தது. மே மாதம் கல்யாணம்...”.

என்னிடம் பேசியவரின் பெயர் சண்முகம்....

சண்முகத்தின் தந்தை  மறைந்து வருடங்கள் பல கடந்து விட்டன.....அவருக்கு நான்கு ஆண்...ஏழு பெண் பிள்ளைகள்..... தனதும் தன் மனைவியின் மறைவுக்குப் பின்,இருவரது இறுதிச் சடங்குகள் நடந்து முடிவது வரை வீட்டை ஒன்றும் செய்யக்கூடாது என்று சொன்ன அப்பாவின் வாக்கினை தெய்வ வாக்காகப் போற்றிப் பாதுகாப்பாய்  மாற்றம் எதுவும் செய்யாமல் அப்படியே வைத்திருக்கின்றனர்.. இது அவரது  உறவினர் பாபு என்னிடம் சொன்னது......
அப்பாவையும் அம்மாவையும் மிகப் பாதுகாத்த பல விசயங்களை அவர் சொல்லச் சொல்ல எனக்கு அந்த சண்முகம் மீதும் அவர் மனைவி மீதும் மிகுந்த மதிப்பும் மரியாதையும் ஏற்பட்டது...

சண்முகம் தான் அந்த வீட்டில் இளையவர். அவர்தான் அந்த வீட்டின் முதுகெலும்பாய் இருந்தார்.

சண்முகத்துக்கு ஒரே ஒரு பிள்ளை...அது பெண்.... பீஇ படித்து வேலை பாக்குறா.....அவளுக்கும் கல்யாணம் நிச்சயாமாயிருக்கு.... ஆனால் அவளைவிட அதிகம் வயதான தனது அண்ணன் மகள் திருமணம் முடிந்தபின் தான் தம் மகளுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்ததையும் அறிந்தேன். அவர் மீதுள்ள மதிப்பு கூடிக் கொண்டே போயிற்று....


அவருடன் பிறந்த சகோதரிகளில் ஒருத்தி திருமணம் முடிந்த ஓரிரு வருடத்தில் அகால மரணம் அடைந்து விட்டாள் பல வருடங்களுக்கு முன்னால். அப்போது அவளது பெண் குழந்தைக்கு வயது இரண்டு மாதம்.
என்ன செய்வது....

 யாரும் முன்வராத நிலை....... அந்தக் குழந்தையை எடுத்து வந்தார்கள் சண்முகமும் அவர் மனைவியும்.....

தன் பிள்ளைபோல் வளர்த்து படிக்க வைத்தார்கள். B.E பட்டம் பெற்றாள்.வேலையும் கிடைத்தது...அந்தப் பெண்பிள்ளைக்குத் திருமண வயது வந்தது. மாப்பிள்ளை பார்த்தார்.
சொந்தத்தில் ஒரு பையனை அதுவும் இவர் செலவு செய்து படிக்க வைத்த பையனை மணமுடிக்க முடிவெடுத்து திருமண வேலை நடந்தது....

திருமண அழைப்பிதழ் அச்சடிக்க எழுதி அந்தப் பெண்ணிடம் காண்பித்தார்கள்.

அந்தப் பெண்ணின் தந்தைபெயர் இருந்த இடம் அவள் கண்டாள்.

அவள் சண்முகத்திடம்,“ மாமா..... என்னை வளர்த்தது நீங்க....நான் வளர்ந்தது இங்க.. அத்தை தானே மாமா எனக்கு அம்மா.....கல்யாண லெட்டரில் உங்கள் பெயரை இப்படிக்கு சண்முகம் எனப் போடணும். என் பெயர் வரும் இடத்தில் எனது மகள் என்று போடணும்...” என்றாள்.

கேட்டுக் கொண்டிருந்த என் கண்கள் பனித்தன. இப்படியும் மனிதர்கள் உள்ளனரா....நன்றியை எவ்வளவு அழகாய் காண்பித்து விட்டாள்...மகளைப் போல வளர்த்த அந்தத் தாய் எப்படி அகம் மகிழ்ந்திருப்பாள்....

ஆசை மகள் ஆசைப்பட்டது போல் ..... எல்லாம் நடந்து முடிந்தது....

கணவனுக்கும் வேலை உண்டு..

இறையருளால் அவர்களுக்கு பெண் குழந்தை..... அவர்கள் இருவரும்வேலைக்குப் போகணும்..... பிள்ளையைப் பேணிப் பாதுகாத்து வளர்க்கணும்.... என்ன செய்ய....

இப்போதும் ஆதரவுக் கரங்கள், அவளை அணைத்து வளர்த்த அதே கரங்கள் உதவிக்கு வந்தன.

“நான் இருக்கேன்.... பிள்ளையை நான் பாத்துக்கேன்.... நீங்க இருவரும் வேலைக்குப் போங்கோ....”

இரண்டு மாதக் குழந்தையை தாயினும் மேலாய்ப் பேணி வளர்த்து வருகிறாள். அந்தப் பிள்ளையை தரையில் விட்டு யாரும் பார்த்திருக்க மாட்டார்கள்....

அவள் வளர்த்த இரண்டு பெண்பிள்ளகளும்...ஒன்று அண்ணிபெற்றபிள்ளை...மற்றொன்று தான் பெற்ற பிள்ளை....பொறியியல் பட்டதாரிகள்......

இதோ மூன்றாம் பெண் பிள்ளை..... இடுப்பில் இருந்து இறங்காமல் ஆச்சியிடம்
வளர்கிறது.
அந்தப் பால்குடி மாறா சிசுவை வைத்திருக்கும்  ஆச்சிக்கு அது சுமையாய் இல்லை.  சுகமாய் இருக்கு.

மங்கையராய் பிறந்திட மாதவம் செய்திடல் வேண்டுமம்மா....

எனக்கு, என் உணர்வுகளும் என் புலன்களும் நெகிழ்ந்து போய்க் கொண்டே இருப்பது போன்ற உணர்வு....நானென்ற அகந்தை என்னிடம் இருந்து வேகமாய்ப் போவது போன்ற உணர்வு....

நான் அதிசயமாய்க் கேட்டுக் கொண்டே இருந்தேன்....

ஒரு பெண்.... சண்முகத்தின் மனைவி.... குழந்தைக்கு மட்டுமா தாயாய் இருந்தாள்.

அவள் கணவரைப் பெற்ற தாய்....அந்தத் தாய்க்கு எத்தனைப் பிள்ளைகள் இருந்தாலும் அவளை அன்போடு அரவணைத்த கரங்கள் இவளுடையதே.

தள்ளாத வயதில் வயோதிகம் காரணமாய்  சுருங்கிக் கிடந்த    மாமியாரை அன்னைபோல் அருகே அமர்ந்து, அமுதூட்டி அகமும் முகமும் மலர அரவணைத்தாளே....... அது மாமியார் பெற்ற பாக்கியம்.

தன் அருகே படுக்க மருமகளை அழைப்பாளாம் அவளை அன்னையாய் நினத்து.

மாமியார் உயிர்  இருக்கும்வரை மறவாமல் உச்சரித்த பெயர் ,ஒரே ஒரு பெயர் தான்.....   அது சண்முகத்தின் மனைவியின் பெயரே.

நல்ல மகள்..... நல்ல மனைவி..... நல்ல தாய்....  எல்லாமே  --- தான்...

முதலில் வீட்டைப் பார்த்த போது இருந்த என் நினைப்பு , இப்போ மாறி விட்டது. வீடு பழசானது... சின்னதாய் இருந்தது. அங்கு வாழும் மனிதர்களின் மனம் விசாலமானது. இதயம் சிறிதெனினும் எத்தனைபேர் இருந்தாலும் அத்தனை பேர்களையும் அந்த இதயம் தாங்குகிறதே.....

அது... ஒரு இல்லம்... அன்பு இல்லம்... தெய்வமே குடி கொள்ள விரும்பும் இல்லம்.... அன்னை இல்லம் அது.

[ உண்மைப் பெயரை குறிப்பிடவில்லை.... அடுத்தவீட்டு ஜன்னல் வழியாய்ப் பார்த்ததை வெளியே சொல்லாதே என்று யாரோ ஒருவர் சொன்னது  இன்று என் நினைப்புக்கு வந்து தொலைத்தது......  கேட்டவை அனைத்தும் பதிவு செய்யப்படவில்லை. நான் செய்தது சரியோ? தவறோ? நானறியேன்]


Wednesday, December 18, 2013

குறும்படத் தகடு வெளியிட்ட செந்திலுக்கு நான் எழுதிய கடிதம்

தாத்தாதம் பெயர் கொண்ட அனந்தபத்மனாபனுக்கு.
வாழ்க…. வளர்க…..
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் அண்ணா என்று உரக்கக் கூவணும் போல் இருக்கிறது. எனது உடன்பிறவா சகலர்- உன் அப்பாவை நினைத்து……

காலங்கள் உனை எங்கோ அழைத்துச் சென்றது. காற்றடித்த திசையில் பறந்தாய்….. தெற்குப் பக்கம் காற்றின் திசை இருந்தால் கிரிக்கட்.
மேற்குப்பக்கமோ அலுவலகப்பணி. வடக்கே காற்றிழுத்தால் வேதனை ….கிழக்கே இப்போ காத்தடிக்குது. கிழக்கே போகும் ரயில் பயணம்…போல் நிழலில் உண்மையைத் தேடும் பயணம்..

 உன்னாலும் முடியும் தம்பி என்பதை உணர்ந்து இன்று எவரும் எதிர்பாராவண்ணம் இரகசியமாய் பொறுமையாய் ஒரு பணிதனை செய்திருக்கிறாய்…… பாரதியாய். பாரதியே நேரில் வந்துவிட்டாரோ என்ற பிரம்மையை நிகழ்த்தி இருக்கிறாய்….. இதைக் கண்டு நெகிழ்ந்திட தந்தை இல்லை…பாராட்டிட நடிகர் திலகம் இல்லை. பாரதி வேடப் பொருத்தம் மிகுந்த சுப்பையா இல்லை. இருந்திருந்தால் எல்லோர் கண்ணிலும் நீர்… அது ஆனந்தக் கண்ணிராய் வடிந்திருக்கும்…..


சிப்பிக்குள் முத்து நீ. முத்துவின் தனயன் நீ

உன்னுள் ஏதோ ஒன்று இருக்கு. வெள்ளைத்தாளில் வந்த வெள்ளமில்லாக் கிணறு உன் அறிவின் ஆழத்தைக் காட்டிற்று—வைரவிழாமலர்………… கணிதமும் தமிழும் கொஞ்சி விளையாடும்….கம்பனே கல்லூரிக்கு வந்தால் கலகலத்துப் போவான் என்றெல்லாம் எழுதிய போதே உன்னுள் ஏதோ ஒன்று இருக்கு என எண்ணினேன். எண்ணம் கனவல்ல….. நனவே… சான்று.. கதை- வசனம்- நடிப்பு என்ற மூன்றிலும் ஒற்றை மனிதனாய் “பாரதியின் பாதிக்கனவு” எனும் குறும்திரைக் காவியம்தனை வெளியிட்டது நீ என்பதுவே….

ஒன்று எனச் சொல்… அனைவரும் ஒன்றே.
வித்தியாசாகர் நினைவப் போற்றும் போதே உன் தெளிவு புரிகிறது….. எவரை எப்படி நினைக்கவேண்டுமோ அப்படி நினைத்து மிகத் தெளிவாய் அஞ்சலி செலுத்திய பாங்கு பாராட்டப்படவேண்டிய ஒன்று.

  முகம், முகவரி தந்தவர்களை வணங்கிய விதம் கவர்ந்தது…..


நடிப்பு…. என் பாராட்டுதல் கோடிக் கோடி….. ஒப்பனையாளர், கேமரா எல்லாமே மிக பாராட்டும்படி இருந்தது….. இருப்பினும் ஒலிப்பதிவில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கிலாமோ என்று எண்ணினேன்…. தவறு என்று சொல்ல எனக்குப் போதிய அறிவில்லை….

உன் நடிப்பு… ஆஹா… என்ன அழகு…செந்திலா இது என என் விரலை மூக்கில் வைக்கும்படியாய் இருந்தது…. என்ன ”பாவம்”…ரசித்தேன்…..

எத்துறையாயினும் நீ அத்துறையில் உன் திறமையைக் காட்டு….. பெருமை கிட்டும்….. அடக்கம் ஒன்றே உயர்ந்தது…. உன் சுபாவத்தால் எல்லோரிடமும் அன்பாய் பணிவாய் நடந்து, இன்னமும் பல முத்துக்களும் வைரங்களும் உன் கிரீடத்தை அலங்கரிக்க வேண்டும் என பிரார்த்தனை செய்கிறேன்….

   எல்லாப் புகளும் இறைவனுக்கே……

அன்புடன்
தங்கப்பன்.
11-12-13