Friday, March 30, 2012

அறுவடை அன்றும் இன்றும்........


                          


Posted by Picasa நாங்கள் பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்கு மத்தியானம் போகும்போது அறுவடை காலங்களில் தெருவில் நெற்கதிர்கட்டை தலையில் வைத்து மிக வேகமாக நடந்தும் ஓடியும் செல்வதைப் பார்த்து பிரமித்திருக்கிறேன்.

சின்ன பிள்ளைகள் கட்டில் இருந்து நெல்லை உருகி வாயில் போட்டுக் கொறிக்க அவர்கள் பின்னால் போய் கதிரை உருகி எடுப்பதுண்டு.அது போன்ற சமயங்களில் சுமப்பவனுக்கு தெரிந்தால் அவன் நிற்காமலும் திரும்பிப் பார்க்காமலும் திட்டுவதுண்டு.

அவர்கள் தலைச் சுமட்டுடன் வரும்போது எதிரே யாராவது வந்தால்அவர்களது வேகம் தடைபடும்.
தலை சுமட்டின் முன்பக்கம் தாழ்ந்திருப்பதால் கண்ணை கொஞ்சம் மறைக்கும்.

வழி, வழி என்று சத்தம் போட்டுக் கொண்டே விரைவாக நடந்து செல்வான்.

வயல் அறுவடை காலத்தில் அறுக்க வருபவர்கள் ஒரு குழுவாக வருவார்கள். அவர்களுக்குப் பழக்கப்பட்ட ஒரு களத்தில் உள்ள தொழுவில் தங்கி இருப்பார்கள். ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு தலைவன் உண்டு.

 அவனை கூரடி என்று அழைப்பார்கள்.
 கூறு என்றால் ஒரு பங்கு என்று பொருள்.

விளைந்து கிடக்கும் வயலை அறுக்கும்போது யார் எந்த பாகத்தை அறுக்க வேண்டும் என்று பிரித்துக் கொடுப்பது அந்தக் கூரடிதான்.கூறு கூறாகப் பிரித்துப் போட்டு யார் எந்தக் கூறை அறுத்து சுமந்து செல்ல வேண்டும் என்று சொன்னபிறகு அவனவனுக்குள்ள கூறை அறுக்க ஆரம்பிப்பான்.

எப்படி பங்கு வைப்பான்.?

 கூரடியின் கையில் ஒரு தடிமனான கம்பு இருக்கும்.

அந்தக் கம்பின் நீளம் தான் ஒரு கூறின் அளவு.

 வரப்பின் அற்றத்தில் இருந்து கம்பை வைத்து அதன் மறுமுனையில் இருந்து கதிரை நேராக ஒதுக்கி கொடுப்பான்.

 கதிர்களை முதலில் வேகமாக அறுத்துப் போட்டு விட்டு தாங்கள் தங்கும் இடத்துக்கு வந்து ஆகாரம் பார்ப்பார்கள். 

இதற்கிடையில் வெயிலில் காய்ந்த பின் கதிரை படை படையாய் எடுத்து பனைநாரில் வைப்பார்கள்.
ஒவ்வோரு தடவை படையை வைக்கும்போது மாத்தி மாத்தி வைப்பார்கள்.அதாவது ஒரு தடவை வைக்கும்போது கதிரின் அடிப்பாகம் இருக்கும் அல்லவா. மறுதடவை அந்த பாகத்தின் மீது எடுத்து வந்த படையின் நெல் இருக்கும் பாகத்தை வைப்பார்கள்.

இரண்டு நார் கொண்டு மிகவும் இறுக்கி கட்டி தலையில் வைத்து களத்தில் கொண்டு போய் சேர்ப்பார்கள்.....

வயல் உரிமையாளன் நெற்கதிர்க் கட்டை வயலில் இருந்து எண்ணி அனுப்புவான் .களத்தில் ஒரு ஆள் எத்தனை கட்டு வந்தது என்று எண்ணுவான்.இருவர் சொல்வதும் சரியாக இருக்க வேண்டும்.

அவர்களது கூலி 21 மரக்கால் விதப்பாடு என்றால் 21 மரக்கால் நெல் கூலியாகக கொடுக்க வேண்டும்... ஒரு ஏக்கர் என்பது 21 மரக்கால் விதப்பாடு

சூடடிப்பவர்களும் ஒரு குழுவாய் இருப்பார்கள்.

 தலைவன் கூரடி என்றே அழைக்கப்படுவான். கதிரை வட்டமாகப் போட்டு மாடு வைத்து சூடடித்து நெல்லை தூசி நீக்கி வீசி வீட்டினுள் கொண்டு போடுவார்கள். படப்பு கூட்டவெண்டும். இவர்களது கூலி 21 கோட்டை நெல் கிடைத்தால் 21 மரக்கால் நெல். சமீபத்தில் நான் கடுக்கரைக்குப் போனபோது ,ஆட்களுக்குப் பதில் வயலிலேயே அறுத்தும் நெல்லை எடுத்து தந்து விடுகிற வண்டிகளைத்தான் கண்டேன்....


No comments:

Post a Comment