Tuesday, August 7, 2012

நானும் கல்லுரியில் நடந்த வரலாற்று துறை நடத்திய செமினாரில் பேசினேன்.

கல்லூரியை தினம் காக்கும் விநாயகரை வணங்கி ,என்னைப் பற்றி உயர்வாய்ப் பேசிய கல்லூரிக்குழுத் தலைவருக்கும் 18-ஆம் முதல்வர் மீனாட்சி சுந்தரராஜன் அவர்களுக்கும் நன்றி. மேலும் என்னைப் பற்றி பேசி அமர்ந்திருக்கும் கோபாலன் அவர்களுக்கும் நன்றி.

வரலாறு –கழிந்த ஒரு வாரம் கல்லூரி முதல்வரின் வேண்டுகோளின் படி எல்லாத் துறைத்தலைவர்களும் தங்கள் துறைகளின் வரலாற்றை எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.-பரிசும் உண்டு நல்லதொரு வரலாற்றுக்கட்டுரைக்கு.
வரலாறு இல்லாத ஒன்று எதுவுமே இல்லை.


இன்று மலர்.
அதன் நேற்றைய வரலாறு மொட்டு.
நாளை அது வரலாறு படைக்கும் காயாய்க் கனியாய்.

நம் தாய் இந்துக் கல்லூரி
அதன் வரலாற்றை வளர்ச்சிப் பாதையை அறிந்து கொள்ளவே இந்த அருமையான வைரவிழாவை ஒட்டிய கருத்தரங்கம்.

நானும் மாணவனாய் மாறி உங்கள் முன் நிற்கிறேன். தெரிந்ததைச் சொல்கிறேன்.

South Travancore Hindu College is the brain child of Kavimani Desikavinaayakam Pillai. அவர் வாழ்த்திய வரிகளோடு என் உரையை ஆரம்பிக்கிறேன்.

தேசிகவிநாயக நின் சேவடியைச் சேவித்து
வாசமலர் தூவி வணங்குகின்றேன் –மாசிலா
இந்துக் கலாசாலை வளர்ந் திந்நாகை நன்னகரில்
சந்தமும் வாழ வரம் தா.


இந்த வரிகளுக்கும் வயது இன்று அறுபது.
இந்த அரஙகம் இந்துக் கல்லூரி வரலாறு பற்றி ஒரு வரலாறு படைக்கப் போகிறது. வாழ்த்திப் பேச வந்திருக்கும் என் வரலாற் பற்றி உங்களுடன் ஒரு நிமிடம்.


இந்துக் கல்லூரியில் மாணவனாக வந்த போது எங்கள் முதல்வர் வி.எம்.ஸ்ரீதரமேனன். கணித ஆசிரியனாக அனுமதித்தவர் தலைவர் பி. வீரபத்திரபிள்ளை. முதல்வர் எல்.சி.தாணு. இதுவே என் வரலாறு.
இம்மூவரையும் வணங்கி என் உரையை மேலும் தொடர்கிறேன்.
மேடையில் அமர்ந்திருக்கும் வரலாற்று நாயகர்களே !
தென் திருவிதாங்கூர் கல்லூரிச் சங்கத்தின் பங்குதாரர்களே, ஆசிரியப் பெருமக்களே ,நாளை வரலாறு படைக்கக் காத்திருக்கும் எனதன்பு மாணவர்களே ! என் அன்பு வணக்கம்.

தெ.தி.இந்துக்கல்லூரி இருக்குமிடம் தேசிகவிநாயகர் அருளிய பூமி. அது ஒரு ஞான பூமி ; புன்ணிய பூமி. எத்தனையோ ஆசிரியர்கள் பணியாற்றவும் மாணவர்கள் படிப்பதற்காகவும் வந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்.
நானும் அவ்வாறு வந்து போனவர்களில் ஒருவன். 1953-54 இல் வெளியான் முதல் கல்லூரி ஆண்டுமலரில் ஒரு கட்டுரையைப் படித்தேன். அதை எழுதியவர் அன்று கல்லூரியில் படித்த மாணவர்களில் ஒருவர்.

கட்டுரையின் தலைப்பு 'கவிதை'. உள்ளத்து உள்ளது கவிதை-இன்ப உருவெடுப்பது கவிதை என்று ஆரம்பித்து வள்ளுவன் வரிகளில் முடிகிறது அந்தக் கட்டுரை. அதில் ஒரு கவிஞன் மனம் பற்றிய வரிகளும் இடம் பெற்றிருந்தன.
வானத்தில் இரவு நேரம் வெண்ணிலாவைப் பார்க்கிறான் கவிஞன். பல கோடி விண்மீன்கள் சூழ , அவை நடுவே ஒரு வெள்ளி ஓடம் போல் வருகிறது அவ்வெண்ணிலா.
ஆதாரம் ஒன்றில்லாமல் அது அந்தரத்தில் நிற்பதைக்கண்டு அதிசயிக்கிறது அந்த உள்ளம்.
சும்மா சுற்றித்திரியும் அதன் அநாதை நிலைகண்டு அதற்கு "சொந்த இடம் எதுவுமில்லையோ " என்று அனுதாபப்படுகிறது அந்த மனம்.
அந்த வருகை கண்டு அவனது உள்ளத்து உணர்ச்சி துள்ளிக்குதிகிறது. அந்த உனர்ச்சியின் பெருக்கம் இனிய தமிழில், " " பறக்கச் சிறகிருந்தால் வெண்ணிலாவே – உந்தன் பக்கம் வந்து சேருவேனே வெண்ணிலாவே " எனக் கவிதையாகிறது.
கவிதை கவிமணியினுடையது.
அந்தக் கட்டுரையை எழுதிய மாணவர், இந்துக் கல்லூரியின் முதல் மாணவர். 36 வருடங்கள் இக்கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றிய முதல்வர் எல்.சி.தாணிவின் முதல் மானவர்.அன்று மாநிலத்தில் அதிக மார்க்கு எடுத்தவர். இந்துக்கல்லூரி வருவதற்கு முதற் காரணமாய் இருந்த நாஞ்சில் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளையின் தம்பி மகன்.
அவர் தான் இந்துக்கல்லூரியில் பொருளாதாரத்துறை ஆசிரியராகவும் ,முதல்வராகவும் பணியாற்றி கல்லூரி இயகுநராகவும் இருந்த எங்கள் அன்புக்குரிய இரவிபுதூர் தே. வேலப்பன்.
1963-64-இல் Pre- University வகுப்பில் இங்கு படிக்கும்போது முதல்வராய் இருந்தவர் மறைந்த பேராசிரியர் வி.எம்.ஸ்ரீதர மேனன். அவர் நமது கல்லூரியின் ஏழாம் முதல்வர். கோட்டும் சூட்டும் அணிந்துதான் தினமும் வருவார். சற்று உயரம் குறைவாக இருந்தாலும் கதாநாயகன் போன்ற தோற்றம் உடையவர். அவர் நடந்தால் அது ராஜநடை.
ஆங்கிலப்பாடம் நடத்திய பாங்கு, சங்கீதம் போன்ற அவரது குரல் இரண்டுமே அன்று என்னைக் கவர்ந்தவை. அந்த வசீகரக்குரல் இன்றும் என் காதுகளில் ரீங்காரம் இட்டுக்கொண்டிருக்கிறது. அந்த நாட்களில் அவரது கண்டிப்பும், அதனால் ஏற்பட்ட மாணவர்கள் ஒழுக்கமும் பெரிதாகப் பேசப்பட்டன..
இப்பொழுது இருக்கும் கல்லூரி நூல்நிலையக்கட்டிடம் அவரது சிந்தனையில் மலர்ந்தக் கட்டிடம். 1
959-60 –இல் வடிவமைக்கப்பட்ட இந்துக்கல்லூரியின் சின்னம் அவரது முயற்சியினால் வந்தது. மாணவர்களிடையே இலச்சினை வரையும் போட்டி வைத்து சிறந்த ஒன்றைத் தேர்ந்தெடுத்த அந்தச் சின்னம் கல்லூரி பொன்விழா ஆண்டில் இரு யானைகளுடன் புதுப் பொலிவு பெற்றது..
அன்று முதல்வராய் இருந்த திரு மேனன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அந்தச் சின்னத்தைப் பற்றி மிகவும் பொருத்தமாகப் பாட்டு எழுதியவர் Dr.D. வேலப்பன் .
திரு. மேனன் அவர்கள் 1962 முதல் 1969 வரை முதல்வராக இருந்தார். ஒரு கல்லூரி முதல்வர் எவ்வாறு கல்விச்சாலையை நிர்வகிக்க வேண்டும். எவ்வாறு ஆசிரியர்களை வழி நடத்திச்செல்ல வேண்டும் . எவ்வாறு மாணவர்களை ஒழுங்கு படுத்திடல் வேண்டும் என்று நடத்திக் காட்டியவர்.
அவரது Annual Report ஒவ்வொன்றிலும் ஒரு message இருக்கும். 1964- ஆண்டு மலரில் அவர் சொன்னது.
" A College is not a market selling knowledge with one eye or both eyes on the University examinations. It is an Alma matter, a kind and loving mother who trains her children to lead a life , " dominated by principles as distinguished from a life dominated by mere impulses from within and mere circumstances from without."
"We must thank our students for whom this college exists, in whom our hopes are centred and who by their obedience and hard work do their best to fulfill their hopes"
"சுயநலமற்ற பாரபட்சமற்ற உண்மையான வெளிப்படையான கண்டிப்புதான் மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும். இதனையே பின்னர் மாணவர்களே பாராட்டுவார்கள்"
வரலாற்று ஆவணமாய் இருக்கும் கல்லூரி ஆண்டுமலர்கள் எனக்குக் கிடைத்ததால் தான் என்னால் இத்தனை தகவல்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள முடிந்தது. ஆண்டு மலர்களை பாதுகாப்பாக வைப்பது ஒரு நல்ல செயல்.
பல சுவையான செய்திகள் ஆண்டு மலர்கள் அனைத்தையும் படிக்கும்போது கிடைத்தது. 59 மலர்கள் பார்த்ததில் ஒன்றே ஒன்றில் ஒரு வித்தியாசம் இருப்பதைக் கண்டேன். அந்த ஒரு மலரில் இரண்டு தலைவர்கள், இரண்டு முதல்வர்கள் போட்டோ இருக்கக் கண்டேன்.
நீங்கள் தேடுங்கள்...... தேடலில் ஒரு அனுபவம் இருப்பதை நீங்களும் உணர்வீர்கள் என்று கூறி , இந்த அருமையான வாய்ப்பினை எனக்களித்த முதல்வர் ,வரலாற்றுத்துறைத்தலைவர் உட்பட நல் உள்ளம் கொண்ட அனவருக்கும் நன்றி கூறி , நடைபெறப் போகும் செமினார் நல்லதொரு வரலாறு படைக்க வேண்டும் என்று மனமாற வாழ்த்துகிறேன்.
கவிமணியின் வரிகளோடு தொடங்கிய எனது உரையை அவர்தம் வரிகளோடு முடித்து விடை பெறுகிறேன்.
எத்தொழிற்கும் முன்னின்ற எமக்குத் துணைபுரியும்
அத்தி முகத்தண்ணல் அருளாலே- சித்தமகிழ்
இந்நாகை நன்னகரில் இந்துக் கலாசாலை வளர்
தெந்நாளும் வாழ்க இனிது.
நன்றி வணக்கம்.

No comments:

Post a Comment