கடுக்கரையில் உயர்நிலைப்பள்ளி
இல்லாத அந்த வருடத்தில் அதாவது 1960-இல் பூதப்பாண்டி சர்.சி.பி.ராமசாமிமுதலியார் உயர்நிலைப்
பள்ளிக்கூடத்தில் 9-ஆம் வகுப்பில் அவன் சேர்ந்து படித்தான். வசதி இருந்தும் நடந்து
தான் பள்ளிக்கூடத்துக்கு செல்வது தான் அவனுக்கும் பிடித்திருந்தது.
அவனுடன் ஆனந்தம்பிள்ளை,
வேலப்பன்,அய்யப்பன் மற்றும் பலர் தினமும் காலையில் பள்ளிக்கூடத்துக்கு நடந்து செல்வார்கள்.
இரண்டு வழிகள் உண்டு. ஒன்று குறத்தியறை, தெரிசனம்கோப்பு வழியாக பஸ்களெல்லாம் செல்லும்
சாலை. மற்றொன்று கடுக்கரை ஆற்றங்கரை வழித்தடம். தெள்ளாந்தி வழியாக சென்று சானல் அருகே
செல்லும் பதைவழியாகப் போய் வயல் வரப்பில் வரிசையாக நடந்து செல்வது அனைவருக்குமே ஆனந்தமாய்
இருக்கும்.மாலையிலும் நடந்தே பள்ளிக்கூடத்தில் இருந்து வீட்டுக்கு வருவார்கள்.
வகுப்பாசிரியர்
சமூகப்பாடம் நடத்தி அவ்வப்போது வகுப்பில் டெஸ்ட் எழுதச் சொல்வார். ஒரு தடவை அதிக மார்க்கு (மதிப்பெண்) எடுத்தவர்களுக்கு
ருபாய் பத்து பரிசளிப்பதாகச் சொன்னார். டெஸ்டும் நடந்தது. அவன் தான் அதிக மார்க்கு
எடுத்தான். மார்க்கு எடுத்த விவரம் ஆசிரியர் சொல்வதற்கு முன்னரே மாணவர்கள் அனைவருக்கும்
தெரிந்து விட்டது.
அவனுடன் படித்தவர்களில்
வசதி குறைந்தவர்கள் பலர் உண்டு. அவர்களில்
சாம்ராஜும் ஒருவன். தனக்கு கிடைத்த பரிசுத்தொகயை சாம்ராஜுக்கு கொடுத்தால் சாம்ராஜுக்கு
பிரயொஜனமாக இருக்குமே என்ற எண்ணத்தில் தனது சக நண்பர்களிடம் அதைப்பற்றிக் கூறினான்.
ஒருவன் கூட அதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை.
வகுப்புக்கு ஆசிரியர்
வந்தார்…. விடைத்தாளை அனைவருக்கும் கொடுத்தார்.
“ யாரப்பா கூடுதல்
மார்க்கு எடுத்தது ?”
அவன் எழுந்து நின்றான்.
“ உன் பேரென்ன?” ஆசிரியர் கேட்டார்.
அவன் தன் பெயரைச்
சொன்னான்.
ஆசிரியர் பரிசுத்தொகையை
அவனுக்கு கொடுக்க அவர் அமர்ந்திருக்கும் மேசை பக்கம் வரும்படி அழைத்தார்.
மிகவும் மகிழ்வுடன்
எழுந்து நின்று, “சார்….. எனக்குத் தரவேண்டிய
ருபாயை சாம்ராஜுக்கு கொடுங்க சார்…. அவன் மிகவும் பாவம்…” என்று சொன்னான்.
அவன் சொன்னதும்
ஆசிரியர் முகம் சிவப்பாய் மாறியது…… கோபக் குரல் ஆவேசமாய் பாய்ந்தது……
அவனைப் பாத்து
,” நீ என்னடே…. பெரிய பணக்காரன்….இந்தக்காசு உனக்குப் பிச்சக்காசு…. மிகவும் அதிகமாகவே
கோபப்பட்டு பேசினார்.
அவனுக்கு ஒன்றுமே
புரியவில்லை….. தன்னை எதற்காக திட்டுகிறார்….. மாணவர்கள் மத்தியில் கூனிக் குறுகிப்
போனான்.
நல்லது செய்ய நினைத்த
தனக்கு வந்த நிலைகண்டு வருந்தினான்…. கண்களில் நீர்….
மறுநாள் வகுப்பாசிரியர்
வந்தார். வகுப்பில் இருந்த அவன் அமைதியாய் நொந்த உள்ளத்தோடு முந்தினநாள் ஏற்பட்ட மனவலி
மாறாமல் ஒரு அமைதியற்ற நிலையில் அமர்ந்திருந்தான்.
ஆசிரியர் அவனை
பெயர் சொல்லி அருகே அழைத்தார். பரிசுத்தொகையைக் கொடுத்தார். சாம்ராஜையும் அழைத்தார்.
அவனை அந்தப் பணத்தை சாம்ராஜிடமே கொடுக்கச் சொன்னார்.
அவன் செய்த தப்பு
என்னவென்று புரிந்ததால் ஆசிரியர் மீதுள்ள மதிப்பு மேலும் கூடியது.
காலச்சக்கரம் சுழன்றது…….
கல்லூரியில் ஆசிரியராய் பணியில் இருந்தபோது பொன்னப்பநாடார் காலனியில் வீடெல்லாம் கட்டி
வசித்து வந்தான். ஒருநாள் அதே காலனியில் தற்செயலாக ஒருவரைப் பார்த்தான். ஹோலி க்ராஸ்
கல்லூரிச் சாலை கடைவீதியில் உள்ள ஒருவீட்டில் இருந்து வெளியே வந்த அவர் அவன் பயணம்
செய்த பஸ்ஸில் ஏறினார்.அவன் எழுந்து அவருக்கு இடம் கொடுத்தான். அவர் அவனை அறியவில்லை.
அவனே அவரிடன் தான் பூதப்பாண்டி பள்ளியில் படித்த உங்கள் மாணவன் என அறிமுகப்படுத்தினான்.
உன் பேரென்ன ?
அவர் கேட்டார்.
”பொன்னப்பன்”.
அவன் சொன்னான்.
’அப்பம் நீ கடுக்கரை
ஆறுமுகம்பிள்ளை அண்ணாச்சியின் மகன்லா…!’ என்றார்.
ஓய்வு பெற்ற வயதிலும்
மிகக் கனிவாகப் பேசியது மிக மகிழ்ச்சியாய் இருந்தது.
அந்த ஆசிரியர்
இன்றில்லை.
அவர் திரு. மரியேந்திரன்.