Sunday, January 6, 2013

கருத்தரங்கம் ஒன்றில் பேசியது-----1


புது ஆண்டு 2013.-ல் 3-1-13 முதல் 5-1-13 வரை தெ.தி.இந்துக்கல்லூரியில் தமிழ்த்துறை ஒரு கருத்தரங்கத்தினை மிக நேர்த்தியாக நடத்தி முடித்தது. ஒருங்கிணைப்பாளர் திரு.தெ.வே.ஜகதீசன் எனை அன்போடு அழைத்ததை ஏற்று இறுதி நாள் நிகழ்வில் நானும் பேசினேன்.

”பழந்தமிழ் இலக்கியங்களில் நிகழ்த்துக்கலைகளும் அவற்றின் நீட்சியும்” என்பது தான் கருத்தரங்கத்தின் தலைப்பு.
நான் தயாரித்து வைத்திருந்த அனைத்தும் முதல் நிகழ்வில் கிட்டத்திட்ட எல்லா பேச்சாளர்களும் பேசிவிட்டனர். எதனைப் பேசுவது என்ற கலக்கம் என் மனதில் எழுந்தது. ஆனாலும் உலக வலைத்தளம் கைகொடுத்தது. தினகரன்  தீபாவளி மலரும் உதவிற்று.

நான் பேசியது:-

அனைவருக்கும் என் அன்பான மாலை நேரத்து வணக்கம்.
தனித்துவம் வாய்ந்த இந்தத் தமிழ் கருத்தரங்கத்தில் கழிந்த மூன்று நாட்களாக பழந்தமிழ் இலக்கியங்களில் உள்ள ,ஒருவர் அல்லது பலர்  அரங்கமேடையில் நிகழ்த்தும் பொம்மலாட்டம், நாடகம் ,கூத்து, நடனம்,வில்லுப்பாட்டு போன்ற  நாட்டார் கலைகள் பற்றிய தகவல்கள் நிறைந்த கட்டுரைகளை பலரும் அழகு தமிழில் வாசிக்கக் கேட்டிருப்பீர்கள்.
மனிதன் தனது துன்பச் சூழலில் இருந்து விடுபட, அதில் இருந்து மீள்வதற்கு கலைகளின் துணையை நாடுவது இயல்பாக இருந்த காரணத்தால் நிகழ்த்துக்கலைகள் உருவாயின.
கால மாற்றத்தால் நம் உணவு,உடை மாறின. உழைப்பவர்கள் போற்றிய நிகழ்த்துக் கலைகளும் மாறிற்று . பகுத்தறிவின் பேரால் பல கலைகள் புறக்கணிக்கப்பட்டன. பாரம்பரிய கலைகள் பல  இன்றைய தொழில் நுட்ப யுகத்தின் வளர்ச்சிக்கு பலியாயின..
நமது குமரி மாவட்டத்தில்  இருந்த அறுபத்தி மூன்று  வகையான நிகழ்த்துக் கலைகளில் பதினொரு கலைகள் மட்டுமே  எஞ்சியிருக்கின்றன என்பதை நாட்டார் வழக்காற்றியல் அறிஞர் அ.கா.பெருமாள் அவர்கள் நூலில் இருந்து அறிந்து கொள்ளலாம்.
நாடகத்தின் முதல் நிலை தெருக்கூத்து..கோவில் திருவிழாக்களிலும் தெருவில் முச்சந்தியை மேடையாக்கி கூத்து மூலம் ஆடியும் பாடியும் மக்களை மகிழ்வித்தார்கள். கூத்து என்பதன் வளர்ச்சியே நாடகம் என்று  மாறியது. நாடகத்திற்கு பண்ணை என்ற ஒரு பெயரும் உண்டு.
 நாடு + அகம் என்பதே நாடகம். நாடு என்பது மக்கள். அகம் என்பது மக்களின் உள்ளங்கள். மக்களின் உள்ளத்தை மகிழ்விக்கும் ஒரு கலை வடிவமே நாடகம்.
ஒரு நாட்டின் சென்ற காலம், நிகழ்காலம்,வருங்காலம்- மூன்றையும் தன்னகத்தே காட்டுவது நாடகம்.
நாட்டு நடப்பை , நாட்டின் கலாச்சாரத்தினை,நாகரீகத்தை நாடகம் பார்த்து தான் மக்களால் அறிய முடிந்தது., கூத்தைப் பின்னுக்குத் தள்ளிய நாடகமும்
இன்று காணாமல் போய்க் கொண்டிருக்கிறது. பொம்மலாட்டத்தின் இன்னொரு பரிணாமம் என்று சொல்லப்படும் திரைப்படம் வந்தது. கிராமங்களில் நாடகம் போடுவது குறைந்து போய் பின் அறவே நின்று போயிற்று
ஒன்றின் நீட்சி அதற்கு முந்தினதை பின் தள்ளிவிடுவதுதான் இயல்பாக இன்றும் இருந்து கொண்டிருக்கிறது. 
                  
தொடரும்

No comments:

Post a Comment