Sunday, January 6, 2013

கருத்தரங்கம் ஒன்றில் பேசியது-----2


ஒன்றின் நீட்சி அதற்கு முந்தினதை பின் தள்ளிவிடுவதுதான் இயல்பாக இன்றும் இருந்து கொண்டிருக்கிறது.  
                 
இலக்கியம், புராணம், காப்பியம் முதலியவற்றிலிருந்து கதைகளையும் கதைச் சூழல்களையும் கூத்துக்கள் பெற்றுக் கொண்டது போல், பழைய நாடகங்களில் அல்லது கூத்துக்களில் இருந்து இன்றைய இலக்கியம் பல கூறுகளை  எடுத்துக் கொண்டதும் உண்டு

உதாரணமாக சிறிய காப்பியமான  பாரதியின் பாஞ்சாலி சபதம் . இது, 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் அதன் பிறகும் பிரசித்தமாக இருந்த “திரவுபதி, வஸ்திராபரணம்” என்ற தெருக்கூத்தைப் பின்பற்றி எழுந்த காப்பியமாகும்
.
 தமிழில் நாடக நூல் இல்லை என்கிற குறையும் பின்னாட்களில் மனோன்மணியத்தின் வரவால் நீங்கிற்று. (ஆனாலும் இது ஒரு தழுவல் நாடகம் என்கிற குறையும் உண்டு.)

  இவ்வாறு, கூத்து அல்லது நாடகம் என்ற நிகழ்த்துக்கலை, தமிழ் இலக்கியத்தோடு நெருக்கமாகவே உள்ளது.

என் உரையை முடிக்குமுன் நான் சமீபத்தில் படித்த ஒரு தகவல்.
நீலகிரி மாவட்ட வனப்பிரதேசத்தில் வாழும் கோத்தர்களின் நடனங்கள் ஆதிகாலத்தவை.. பக்தியை முன்னிறித்தி ஏராளமான வாய்மொழிப்பாடல்கள் இவர்களிடம் இருக்கின்றன. நாதஸ்வர வடிவிலான  கட்டைக் குழலான கொல் என்னும் ஊது கருவி, கொப் எனும் இசைக்கருவி, தபக், பர், குணர் ,…. போன்ற தோல் கருவிகள், மூலம் இசைத்து பாடுகிறர்கள். கொப் என்னும் இசைக்கருவி விலங்குகளின் கொம்புகளால் ஆனது. இப்போது செம்பால் செய்யப்படுகிறது. இவர்களில் ஆண்கள் ஆடும் ஆட்டத்தின் பெயர் கண்மு ஆட்டு. பெண்கள் ஆடுவது பெமு ஆட்டு. இன்றும் தினை விதைப்புத் திருவிழா, அறுவடைத்திருவிழா, மாடுகளுக்கு உப்பு புகட்டும் திருவிழா, கில்லிப் பண்டிகை என விழாக்கள் கொண்டாடி தங்களுடைய பாரம்பரிய கலைகளை அழியாமல் பாதுகாத்து வருகிறார்கள்.

பொம்மலாட்டக் கலயைப் போற்றும் விதமாக,ஒவ்வொரு ஆண்டும் மார்ச்சு மாதம் 21-ஆம் தேதி உலக பொம்மலாட்ட தினம் கொண்டாடப்படுகிறது.

நமது பாரம்பரியக் கலைகள் அழியாமல் காத்திட, தமிழ் நாட்டு உயர்கல்வித்துறை பாடுபட்டுக் கொண்டிருக்கிறது.

தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் நாடகத்துறை சேர்க்கப்பட்டுள்ளது. பாளையாங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் நாட்டார் வழக்காற்றியல் பட்ட மேற்படிப்புத்துறை மிகச் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இது போல் அனைத்துக் கல்லூரிகளிலும் தமிழ்த்துறையில் கூத்து மற்றும் நாடகத்துறை, தமிழ்ப்பாடத்தின் பகுதியாக வரவேண்டும். படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பும் இருக்க வேண்டும்.

இந்தக் கருத்தரங்கத்தின் கட்டுரைகள் அனைத்தும் நிகழ்த்துக்கலைகளுக்கும் தமிழுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று உளமாற விரும்புகிறேன்.

நாடகத்தமிழ் வளம் பெற தரம் வாய்ந்த படைப்புகளை உருவாக்கிட உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

நான் பேசிய தமிழில் தவறேதும் இருப்பின் பொறுத்துக் கொள்ளவேண்டுகிறேன்.

திறம்பட மிகச் சிறப்பாக கருத்தரங்கத்தை நடத்திய தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் Dr. சாந்தாள், கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் Dr.தெ.வே.ஜெகதீசன் ,மற்றும் தமிழ்த் துறைப்பேராசிரியர்கள் அனைவரையும் பாராட்டி மகிழ்ந்து மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன்.
வாய்ப்பளித்தமைக்கு என் நன்றியைப் பதிவு செய்து விடை பெறுகிறேன்.
நன்றி….. வணக்கம்…..

No comments:

Post a Comment