Thursday, October 24, 2013

அன்பு சோறு போடுமா ?........

சார்....எப்படி இருக்கீங்க ?  நான் என்னெதிரே வந்தவரிடம் கேட்டேன்.

நல்லா இருக்கேன் ..... உங்க பிள்ளைகள் எப்படி இருக்காங்க.... முருகன் எம்மீ முடிச்சுட்டானா.... தினேஷ் எப்பம் வாறான்.... மகள் பெங்களூர்லதானே...... கேட்டுக்கொண்டே இருந்தார்.

நானும் அவரிடம் அவர் பிள்ளைகளைப் பற்றியும் கேட்டேன்.

”பையன் யூஎஸ்ல ஃபேமிலியோட இருக்கான். பொண்ணு பீ இ படிச்சு வேலை பாத்தா..... வேலையை விட்டுட்டு இப்ப  வீட்ல இருக்கா. அலயன்ஸ் பாத்துக்கிட்டு இருக்கேன்.. ஒண்ணும் சரியா அமைய மாட்டேங்கு.”அவர் சொன்னார்.

ஏன் சார் வேலையை விட்டா..... ?

பொண்ணு பாக்க வந்தவங்க பொண்ணு வேலை பாத்தா எப்படி பிள்ள குட்டிகள பாக்கமுடியும் என்று சொல்லவே , அவள் வேலையை விட சொன்னேன்.

வேலை இல்லாமல் இருக்கா... இப்ப வர்றவங்க , “ பொண்ணும் வேலை பாத்தாதானே இரண்டு பேர் சம்பாதிக்கும் பணம் தான் குடும்பம் நடத்த வசதியாய் இருக்கும்.

 இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொண்ணா சொல்றத கேட்டு மனதுக்கு,நான் மகளை வேலையை விட்டுட்டு வரச் சொன்னது தப்பாய்ப் போச்சோ என்று மனம் பதை பதைக்கிறது ..... வீட்ல நான் இருக்கும் போதும் அவளப் பாக்கும்போதும் என் நெஞ்சே அடைக்குது.....அவ வயசும் கூடிற்றுப் போகுது. எனக்கும் வயசாச்சுல்லா..... நொந்து பேசினார்.

நான் உங்க மகள் அழகா இருக்கா... நல்ல அன்பான பொண்ணு..... நிச்சயம் நல்ல பையன் கிடைப்பான் என்றேன்.

”அன்பும் அழகும் சோறு போடுமா சார்.... அதெல்லாம் அந்தக் காலம் சார்.” என்று சொல்லவே  எல்லாம் கடவுள் நல்லதே செய்வார் எனச் சொல்லி நகர்ந்தேன்.

இரண்டு பேர் வேலை செய்யும்போது கிடைக்கும் அனுபவம் எல்லோருக்கும் ஒன்று போல் இல்லை. தன்மானம் (EGO) மேலே வராமல் தன்மனம் தனது கட்டுப்பாட்டில் இருக்கணும். அன்பும் வேணும். அறிவு பணிவோடு இருக்கணும்... அறிவை அலுவலகத்தில் Use பண்ணணும்.. அன்பை வீட்டில் காட்டணும்.... நிச்சயம் அன்பு சோறு போடும்.
நான் சாப்பிடும் சாப்பாடு என் அறிவால் என்னருகே வந்ததில்லை. அவள் அன்பால் நான் இருக்கும் இடம் தேடி வருகுது....

Tuesday, October 22, 2013

மழை காப்பாத்திற்று.... மழை வந்தால்.....வராவிட்டால்...

கடுக்கரையில் வயல்களில் உள்ள பயிர்கள் தண்ணீருக்காக ஏங்கி பரிதாபமாய் இருந்த நாளில் கிட்டண்ணனைக் கண்டேன்....
நான் அவனிடம் “ என்னா  மழையைக் காணவில்லை.... எப்படிண்ணே... இந்தப் பூ தப்பீருமா...”
அவன் தம்பி “ நம்ம தம்புரான் சாமி நம்ம கைவிட மாட்டாருப்போ.... மழை வரும்..... கண்டிப்பா வரும்... மழை நம்மைக் காப்பாத்தும்” என்று சொன்னான்.

அதுபோல் மழையும் வந்தது.....

கிட்டண்ணன் ,“ பாத்தியாப்போ..... மழை காப்பாத்திற்று”.... என்றான்.. முகம் முழுவதும் ஆனந்தரேகைகள்......”

 தென் மேற்கு பருவமழை முடிந்து வடகிழக்குப் பருவமழை தொடங்கி மழை பெய்யும் என்று நினைக்கையில் பெய்யாமலும் மழை எங்கே வரப்போகிறது இன்று வராது எனக் குடையை எடுக்காமல் போகும்போது மழை வருவதுமாய்  விழையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தது.
அறுவடை ஆரம்பமான சமயம்..... மழை வந்தால் அறுவடை தடைபடும்....
அய்யோ இந்த மழை வந்து கெடுத்துருமோ...... நேரத்தே அறுத்தாதான் நல்ல விலையும் கிடைக்கும்..... நாட்கள் தள்ளிப் போனால் விலையும் கீழ்நீக்கிப் போயிரும்.

மழை பெய்யவில்லை சில நாட்கள்.....

மழை வராமல் இருந்ததால் விவசாயிகள்  வயலில் கதிர் அறுக்கும் மெஷின் வைத்துஅதிகம் நஷ்டப்படாமல் அறுத்துக் கிடைத்தநெல்லை விற்று பணமாக்கி சற்று மகிழ்வுடன் இருந்தனர்.

கிட்டண்ணன் , “ மழை அஞ்சாறு நாளா வரல்ல... எல்லா வயலையும் மெஷின் வைத்து அறுத்துட்டேன்.... நல்லவேளைப்போ.... மழை வரல்ல ... மழை நம்மை காப்பாத்திற்று.....” இப்போதும் முகம் முழுவதும் ஆனந்தரேகைகள்.....”

.காட்டுப்புதூரில்  எண்பது வயதுப் பாட்டி  கழிந்த வெள்ளிக்கிழமை அதிகாலைப் பொழுதினில் சிவனடியை அடைந்து விட்டாள்.

நான் காட்டுப்புதூருக்கு  ஞாயிற்றுக்கிழமை இரவு “துட்டி கேட்க” போயிருந்தேன்...
அவள் இயல்பாகவே நல்ல அன்பாகப் பழகுபவள்.

அங்கிருந்த ஒருவர் இன்னொருவருடன் பேசிக் கொண்டிருந்தார். என் காதிலும் விழுந்தது....

“ பாரு..... இந்த இரண்டு நாளும் ஒரு மழைகூட இல்லை.... இறுதிச் சடங்குக்கு  மழையால் தொந்தரவே இல்லை...... நாளைக்கு சுடுகாட்டுக்குப் போவதுவரை மழை வாரமல் இருந்தாலே போரும்.”

திங்கள் காலையில் இறுதியாத்திரையை மழை தொந்தரவு செய்யல்ல...

நேற்று பேசிக்கொண்டிருந்த அதே இரண்டு ஆட்கள் நடந்து செல்லும்போதே பேசிக்கொண்டே சென்றனர்.

“ பாத்தியா.... செத்தவள் இருக்கும் போதும் யாரையும் துன்புறுத்தல்ல.... இப்ப பாரு அவ போகும்போதும் யாரும் மழையால் கஷ்டப்படல்ல.... மழை மேகம் கறுப்பா இருந்து பயமுறுத்துகு.... ஆனா ஒரு துளிகூட விளல்ல.....”

வீட்டில் இருந்து சுடுகாடு வரை செல்லும் ரோடு  மஞ்சள், வெள்ளை, சிவப்புக் கம்பளம் விரித்தால் போல்  காட்சியளித்தது.  அத்தனையும் பூக்கள்..........அதனையும் மழை வந்து கெடுக்கவில்லை.....

சடங்குகள் முடிந்தன.......

அந்தத் தாயின் புதல்வர்களின் முகத்தில் சோகம் இருந்தாலும் மகிழ்ச்சியாய் சொன்னார்கள்.

“ நல்ல வேளை மழை காப்பாத்திற்று........”

செவ்வாய்கிழமை...... காடாத்து.... சுடுகாட்டில் நடைபெறும் ஒரு நிகழ்வு.... காலையில் பத்தரைக்கு மேல்.... நான் போனேன். மழை வருவது போன்று இருந்தது.....ஆனால் வரல்ல...... பக்கத்தில் ஒரு வயல்..... அறுத்த வயல்.... நெல்லில்லா கதிர் வயல் முழுவதும் கிடந்தது.....

என்னருகே நின்ற ஒரு ஆளிடம் கேட்டேன்.... அவன் சொன்னான்.
“ வயல அறுத்தான்..... நெல்ல எடுத்துட்டான்.... ஆனா இந்தப் பாவி மழை வந்து கெடுத்திட்டு.... வக்கீல் எல்லாம் தண்ணியில மாட்டிற்று....”

எல்லாம் முடிந்து வீட்டுக்கு காரில் கிளம்பினோம்...... தெரிசை நெருங்கும்போது மழை பெய்ய ஆரம்பித்தது.... மழை அதிகமாய் பொழிந்தது....

என்னுடன் வந்த டிரைவர்.... பாருங்க இந்த மழை .... ஹோட்டலுக்குப் போகவிடாது போலிருக்கே.... அவன் துட்டிவீட்டில் சாப்பிடமாட்டான்.... அதனால் தெரிசையில் சாப்பிட இறங்கிப் போக முடியாத நிலை..... குடையும் இல்லை... குடை கொண்டுவந்திருந்தால்தான் மழையே வந்திருக்காதே....
சாலை வழியே சென்ற ஒருவர் குடை தந்து உதவ அவன் சாப்பிடப்போனான்....

சாப்பிட்ட பின்  மழை நின்றபின்...... வந்தான்....

பாருங்க சார் இந்த மழையை.... என் உடுப்பெல்லாம் நனைஞ்சிருச்சு....மழை ....
சொல்ல ஆரம்பிக்க..........  நான் சொன்னேன் ......

“ மழை ஒரு நாளும் கெடுக்காது.......  முன்யோசனையின்றி செயல்படுவதால் ஏற்படும் விளைவுகளுக்கு மனிதனான நாமே தான் பொறுப்பு.”

மழைக்காலத்தில்  மழை வருவது மனிதகுலம் வாழவே.....

ஒருவன் மழை வந்தால் அது காப்பாத்திற்று என்கிறான்......
இன்னொருவனோ மழை வந்து கெடுத்திற்று என்கிறான்.... மழை வராமல் இருந்தாலும்......... இதே பல்லவிதான்.

உப்பு விக்கப் போகிறவன் மழைக் காலத்தில் போவானா........
புட்டுமாவு விக்கப் போறவன் காற்றடித்தால் என்ன செய்வான்.....





Monday, October 14, 2013

அந்தநாள் இனிய நாள்.........

இன்ற விஜய தசமி.... பத்தாம் நாள்..... காலையில் பேப்பருக்காக காத்திருந்தேன்.... பேப்பர்காரன் போடல்லையே...

என் மனைவியை அழைத்தேன். பேப்பர் சரியாய் போட மாட்டாங்கானே.. போட்டாலும் எங்கோ தூக்கிப் போட்டு தண்ணியில் போடுகான். பாரு இண்ணைக்கு எவ்வளவு நேரம் ஆச்சு... இன்னமும் ஆளக் காணல்ல...நாள முதல் பேப்பரே போடாண்டாம்ணு சொல்லிரு.

இண்ணைக்கு பேப்பர் கிடையாதுங்க...... இது அவள்  சொன்னபிறகு தான் உறைத்தது.

போரடிக்குதே........ படிக்கும் மனப்பக்குவம் எங்கே போனது. நான் எழுதினா மற்றவங்க படிக்கணும்னு எதிர்பார்ப்பு சரியா ?......

 என்ன செய்யலாம். இருக்கவே இருக்கு... நம்ம கம்ப்யூட்டர்......

யோசித்தேன்.......

சின்னஞ்சிறு வயதில் விளையாடிய அந்த நாட்கள்  நெஞ்சினில் வந்து வந்து போனது.

மின் கம்பங்கள் இல்லாக் காலம். ஆறு மணிக்கெல்லாம் விளையாடிவிட்டு வீட்டுக்கு வந்துவிட வேண்டும் என்ற  சட்டம் எல்லா     இல்லங்களிலும்  இருந்த காலம்  .காரணம் இரவுப் போழுதில் தெருவில் கடந்து செல்வது
 இன்று போல் அன்று எளிதாய் இருந்ததில்லை என்பதுவே.

 வசதிஉள்ளவ்ர்களிடம் மட்டுமே டார்ச் லைட் இருக்கும். மூன்று பேட்டரிக் கட்டை போடும் பெரிய டார்ச்சுக்கு உறை போட்டு பாதுகாப்பாய் வைத்திருக்கும் பெரியவர் ஒருவர் எங்கள் கிராமத்தில் இருந்தார். அவரைத் தவிர யாரும் அதை தொடக்கூட முடியாது. அந்த உறை நூல் கயிறால் அவரால் பின்னப்பட்டது. அதை அதிசயாமாய் பார்த்த காலம்.

லாந்தர் லைட்டைக் கையில் வைத்து ச் செல்வோரும் உண்டு. வசதி படைத்தவர்கள் இரவு தெருவில் செல்லும்போது அவரது பின்னால் வெளிச்சம் தெரியும்படி லாந்தர் லைட்டை கொண்டு செல்பவர்கள் அவர்கள் வீட்டில் வேலை செய்பவர்கள்.
மற்றபடி இரவு தெருக்களும் வீடுகளும் இருளாகவே இருக்கும்.

 ஒவ்வொரு ரூமிலும் சின்னச் சிம்மணி விளக்கு இருக்கும். அது பிள்ளைகள் படிப்பதற்கு. அந்த விளக்கு இருக்கும் அந்த குறுகிய இடத்தில் தான் வெளிச்சம் இருக்கும். இரவில் கருமையான இருள் கூடி வெளிச்சம் குறைவாகவே இருக்கும்.

கடுக்கரை ஊர் தெருக்கள் எல்லாமே ஏற்றமும் இறக்கமும் கொணடது வாகவே  இருக்கும். இரத வீதி இல்லா கிராமம்.  வட்டவடிவமானதாகவும் இல்லை. சதுரமாகவோ நீள்சதுரமாகவோ இல்லாத ஊர். சும்மா பேருக்காக கீழத்தெரு ,மேலத்தெரு, வடக்குத்தெரு, தெற்குத்தெரு, புதுகுளத்தெரு, கடைத்தெரு,பள்ளிக்கூடத்தெரு,ஆத்துப்பாறைத்தெரு,தரிசு என்று பெயர் பல உண்டு. கொல்லக்குடிப் பாறை,ஆனைக்கல் பாறை, மயிலாடும் பாறைகளும் உண்டு.... ஊரைச் சுற்றி வரும் ஒரே ஆறுக்கு பல பெயர்...... நல்லாறு, பீயாறு, கஞ்சியாறு,அலத்துறையாறு.......

நான் வசிக்கும் இடம் தரிசு. கடுக்கரையின் தலைநகரம்... என் சமவயது பள்ளித்தோழர்கள், உறவினர்கள் இருப்பதோ கீழத்தெருவில்... வாரவிடுமுறையில் கீழத்தெருவுக்கு விளையாடப்போவது வழக்கம். இருட்டுவதற்கு  முன்னால் விளையாட்டு முடிந்து வீட்டுக்குப் போக வேண்டும். போகவில்லையெனில் பிள்ளையைக் காணவில்லையே என பதறுவாள் அம்மா.


 சில சமயங்களில் நேரமாகிவிடும். தனியாய் வீட்டுக்குப் போக முடியாது.நாய்த்தொல்லை வேறு..... கீழத்தெருவில் அத்தை வீட்டிலிருக்க வேண்டிய சூழ்நிலை ஏறபடும். அங்கேயே சாப்பிட்டு தூங்கி காலையில் எழுந்து வீட்டுக்கு போவதும் உண்டு.

விளையாடப்போன பையன் வீட்டுக்கு வரவில்லையே என்று பயந்து அம்மா
வேலையாளிடம் சொல்லி பார்த்து வரச்சொல்வாள்.

 அவரும் வருவார்.

அவரிடம் நாளை வருவான் எனச் சொல்லி அனுப்பி விடுவர்கள்.

அந்த வீட்டில் நாங்களும் அவர்களுடன் சேர்ந்து சாப்பிடுவோம். சில சமயங்களில் மரவையில் எல்லா கறிகளையும் போட்டு நன்றாய் விரவி வரிசையாய் உட்கார்ந்திருக்கும் எங்களுக்கு உருட்டித் தருவார்கள்.

எல்லோருக்கும் இருப்பதை பங்கிட்டு தரும் பாங்கு...

அப்படி சாப்பிடுவதற்கே அடிக்கடி போவதுண்டு.

இரவில் கீரை , நெல்லிக்காய்,தயிர் உணவு சாப்பிடக்கூடாது என்பதை அங்கிருந்துதான் அறிந்தேன். மீன் சாப்பிட்டால் மோர் எடுக்கக்கூடாது.........

 இருள் நீங்கும் பூரண நிலா வெளிச்சம் தரும் பௌர்ணமி நாட்களில் இரவு வெகு நேரம் “கல்லா ... மண்ணா விளையாட்டு விளையாடிய நினைவுகள்......

 மாசிமாதம் ஒரு  பௌணர்மி இரவில்...... எங்கள் மாமா எங்களை அழைத்து தெருவில் கிடக்கும் நெல்லை எடுத்துவந்தால் பரிசு தருவேன் என்றார்கள்.

நாங்கள் தெருவில் சுவர் ஒரங்களில், சின்னச் சின்ன பாறை இடுக்குகளில் இருந்தும் நெல்லைப் பொறுக்கிக்  கொடுத்தது நினைவில் வந்து போகிறது.அன்று மகம் நட்சத்திரம்.... அது நெல் பிறந்த நாளாம்.....

கள்ளன், சிப்பாய் விளையாட்டு, மட்டக்காளை ,ரப்பர் வண்டி, பாண்டி விளையாட்டு ........ இந்த நாள் அன்று போல் இல்லையே.......

 

சரஸ்வதி பூஜைநாளில் நான் சந்தித்த ஒருவர்.......

காலையில் அதுவும் அதிகாலையில் கண்விழித்தேன்.  அதன்பிறகு தூங்க முடியாமல் புரண்டு கொண்டிருந்தேன்.

நேற்று சரஸ்வதிபூஜை..... கடலை, பொரி........இரவுச் சாப்பாட்டுக்கு விடுமுறை......

 நாலு மாதமாக ஜெயமோகன் எழுதிய அறம் கதைபுக்கை படிக்க எண்ணி எழுந்தேன். முகம் கழுவியபின் என் இருக்கையில் இருந்து மேசையில் இருந்த புத்தகத்தைத் தேடினேன்..... யாரோ அதை படிக்க எடுத்திருக்கிரார்கள்.....

 என்ன செய்ய  ..... இருக்கவே இருக்கிறது

கணினி. தூங்கிக் கொண்டிருந்த கணினியை ஒளியேற்றினேன்.

என் பக்கம், வரிகளைத் தாங்கத் தயாராய் வெண்மையாய் எனை பார்த்துக் கொண்டிருந்தது..

என்ன எழுத...... ?எதை வேண்டுமானாலும் எழுதலாமா...?

யோசித்துக் கொண்டிருந்தேன்.... ஆங்க்..... ஞாபகம் வருதே.

நேற்றுக் காலையில் நான் வீட்டில் இருந்த போது ஒரு நண்பர் வந்தார்.

“நல்லா இருக்கீங்களா”  கேட்டுக் கொண்டே வந்தார். அவர் குரல் ஆரோக்கியமற்று இருந்தது. அவர் தேக நலம் குன்றி இருந்தார்.

என்ன விசயமாய் வந்தீங்க என நான் கேட்காமலேயே எதற்கு வந்திருக்கிறார் என்பதனை புரிந்து கொண்டேன்.  அதற்குக் காரணம் அவர் கையில் இருந்த ரசீது புக்கும் நோட்டீசும் தான்.  வாடகைக் கார் ஓட்டும் அவர் வேட்டாளி அம்மன் கோயில் பக்கம் உள்ள ஆட்டொ ஸ்டேண்டில் ஆண்டுதோறும் நடக்கும் சரஸ்வதி பூஜை விழாவுக்கு வேண்டி ருபாய் கேட்கவே வந்தார்.

”நாலைந்து வருடமாகவே நீங்கள் வருவது இல்லையே..” நான் கேட்டேன்

”கழிந்த வருடம் நானும் சேர்ந்து கொண்டேன்.  ஆனா உங்களைப் பார்க்க வரல்ல.”

 “நான் மனதாலும் உடலாலும் ரொம்பவும் கஷ்டப்பட்டேன்லா..... உங்களுக்கும் தெரியும்லா.... எதிலும் பிடிப்பு இல்லாமல் வாழ்வே அஸ்தமித்து விடுமோ என்று கலங்கி இருந்த நாட்களில், என் சொந்தங்களே என்னைப் புழுவாய் பார்த்த காலங்களில் எனக்கு ஒரே ஆறுதலாய் இருந்த தலைவர் பெருமாள் ..... அவர் நடத்தும் விழா சிறப்பாய் நடக்கணும்கிறதுக்காக அவரோடு நானும் சேர்ந்து போக ஆரம்பித்தேன். இந்த வருடமும் அவருக்காக........”

”பணமும் பகட்டும் கொண்ட கனவுலகில் வாழும் என் உறவினரின் புறக்கணிப்பு என்னை எங்கோ துரத்தியது.  எனதருமை மகள் பெற்ற சிசுவை எடுக்கவோ பார்க்கவோ விரும்பாத அந்த உறவு இருந்தென்ன...... இல்லாமல் இருந்தென்ன.... வேண்டாம் . அந்த உறவே வேண்டாம்.  என் கடவுள் என்னைக் காப்பாற்றினார்.ஒரு கதவு மூடியது. பல கதவுகள் எனக்காக திறந்தது .”

மிகவும் நொந்து சொந்தக் கதையை என்னிடம் சொல்லி மனப்பாரத்தை இறக்கி வைத்தார்...

நான் கேட்டேன்........ நான் எத்தனை ருபாய் எழுத வேண்டுமென....?

“ எவ்வளவோ நல்ல காரியங்களுக்கு நீங்க கொடுத்திருப்பீங்க. நாங்கள் இலவசமாக அரிசி கொடுக்கிறோம். உங்கள் பங்கும் இருக்கவேண்டும் என்ற  ஆசையில் தான் வந்திருக்கிறேன்...... ஒரு ருபாய் தந்தாலும் மகிழ்ச்சியே....”

விடைபெற்று போகும் போது அவர் என்னை வணங்கி,” உங்கள்ட்ட நான் போனில் பேசி அந்தக் குரல் கேட்டாலே அன்று எனக்கு ஆனந்தமாய் இருக்கும்” என்றார். அவர் கண்களில் தழும்பிய நீர்........

நானும் திகைத்து நின்று அவரை வழி அனுப்பி வைத்தேன்.......

அவர் யார்....?  இருபத்தைந்து வருடங்களாக ஒவ்வொரு ஆங்கில ஆண்டு தொடக்க ஜனுவரி முதல் தேதியன்று அவர் ஓட்டும் டாக்ஸியில் முதல் பயணிகளாக  நாங்கள் பயணிப்பது நடந்து கொண்டிருக்கிறது.....

கோயில்களுக்கு செல்வோம். எங்களுடன் அவரும் வருவார்......

அவர் பெயர் பெனடிக்ட்.  ஆம் அவர் பிறப்பால் வாழ்வால் ஒரு கிறிஸ்தவர்.
என்னைவிடவும்  அவர்தான் பெரியவர் என்று என் மனம் கூறிக்கொண்டே இருக்கிறது.............. 

Thursday, October 3, 2013

நாட்கருதுப் பானையை நிறைக்கும் ஒரு கிராமிய இனிய வீட்டு விழா

அக்டோபர் மாதம் முதல் நாள். காலையில் வந்த முதல் தொலைபேசி அழைப்பு சுரதவனம்  சுவாமிகளிடம் இருந்து வந்ததால் மிகவும் அன்பாகப் பேசிய குரல் கேட்டு மகிழ்ந்தேன்.  மகாராஷ்டிரா ஆன்மீகச் சுற்றுலா இருவாரங்கள் சென்று வந்த அவர், என்னைப் பார்க்க வருவதாக சொன்னது மனதுக்கு இதமாக இருந்தது. அன்று எங்க வீட்டில் “ நிறை”.

அவர்கள் சென்ற இடங்களை வலைத்தளத்தில் பார்த்து ஆங்கிலத்தில் உள்ளனவற்றை தமிழில் மொழிபெயர்த்து சுருக்கமாகவும் தமிழில் தெளிவாகவும் அச்சுப்பிரதியெடுத்து கொடுத்திருந்தேன். அதை பல பிரதிகள் எடுத்து அவர் அனைவருக்கும் கொடுத்தார். ராமருக்கு அணில் செய்த உதவி போல் என் செயலையும் உயர்வாய் எண்ணி நன்றி பாராட்ட வந்ததாக அவர் வருகையை நான் என் மனதில் கொண்டேன்.

 காலையில் கடுக்கரையில் இருந்து ஐயப்பன் கதிர் (நெற் கதிர் ) கொண்டு வந்தான்.  நாங்கள் தனி அறையில் (அரங்கு  or Store room) தீபஒளி விளக்கின் முன்னால் வைக்கப்பட்டிருந்த இலையில், கொண்டுவந்த நெற்கதிர்களை ஐயப்பன் வைத்தான். பக்கத்தில்  ஓலைவட்டி இல்லாததால்  ஒரு பேசினில் பழைய நெல்லும் இருந்தது. வெற்றிலை, பாக்கு, பழம் , கதிர் முன்னால் இருந்தது.

சாம்பிராணி புகைத்து , தேங்காய் உடைத்து , சூடத்தட்டில் நெய்யூற்றி திரிவைத்து தீபமேற்றி தீபாராதனைக் காட்டினேன்..... நாள்கதிர்பானையில் முதலில் பழைய நெல்லை ஒரு கைப்பிடி அளவு எடுத்துப் போட்டதற்குப் பிறகு நெற்கதிர்களை எடுத்து அதனை சுருட்டி பானையினுள் வைத்தேன். மூன்று தடவை இது போல் செய்தேன். என் மனைவியும் பானையில் கதிர் வைத்து நிறைத்தாள்.

” நிறைநாள்” அன்று காலையில் சர்க்கரை போட்ட அவல் தான் காலை உணவாக எடுத்துக் கொண்டோம்.
 11 மணியளவில்  முருகதாஸ் சுவாமி வீட்டுக்கு வந்தார்.அவர் அஷ்டவிநாயகர் உருவப் படம் கொண்ட லிகித ஓலை ,சீரடி சாய்பாபா படம் தந்தார்.

 சற்றும் எதிர் பாராமல் அவருடன் நான் பெரிதும் மதிக்கும் நண்பர் ஒருவரும் வந்தார்.
  அவர்களை பானையில் கதிர் வைத்து நிறைக்கும்படி வேண்டினோம்.

அதன்பின் பலவிசயங்களைப் பேசிக் கொண்டிருந்தோம்.... ‘நிறை” பற்றி பேச்சு வந்தது.

ஏன் பழைய நெல்லை முதலில் அந்தப் பானையில் போடச்சொன்னீர்கள் என்று வந்தவர்களில் ஒருவர் கேட்டார்.
விவாசாயிக்கு நெல் தான் கடவுள். பழையன போகும்போதும் அதனை மறக்காமல் நன்றியாய் இருப்பதை காண்பிக்கவே அச்செயல் என்றேன்.

நாள்கதிர் பானையை வித்தியாசமாக ஓவியம் தீட்டி வைத்திருக்கிறீர்களே ...ஏன் என்று கேட்டார். வருடத்திற்கு இரண்டு தடவை மட்டுமே அதனைப் பயன்படுத்துவது வழக்கம். வேறு எதற்கும் அதனை பயன்படுத்த எடுக்க மாட்டார்கள்... அது நிறை பானை என்று தனியாய்த் தெரியவே கடவுள் படம் ஓவியமாய் வரைந்து வைத்திருக்கிறோம்.
அவர் மேலும் பல கேள்விகள் கேட்டார். நான் சொன்னவை ....................

 55 வருடங்களுக்கு முன்னால் நேரிடையாய் நான் கலந்து ,பார்த்தவைகளை அவரிடம் சொன்னேன்.
வயல் அறுவடைக்குத் தயாராகும் நாள் நெருங்கும் போது, நல்ல நாள் பாத்து நல்ல விளைந்த வயலின் ஒரு மூலையில் (  வடகிழக்கு மூலை என்று ஞாபகம்)  கதிர் அருவாளை வைத்து என் அப்பா, வானத்தில் கதிரவனை வணங்கிக் கதிர் அறுப்பார். அதன் பின் வேலையாட்களும் நண்பர்களும் கதிர் அறுத்து வைப்பார்கள்.... அப்பா போதும் என்று சொல்லும் வரை அறுத்து சிறு சிறு கட்டாக கட்டி வைப்பார்கள்.

அதன்பிறகு மாட்டுச் சாணத்தில் பிள்ளையார் பிடித்து அருகம்புல்லை அதன் மீது வைத்து, கொன்னைப்பூ வைத்து பூஜை செய்வார் அப்பா. பூஜை முடிந்த பின் வயது மூப்படிப்படையில் ஒவ்வொருவருக்கும் கதிர் கொடுப்பார்கள்.

 அப்பாவின் அப்பா (தாத்தா) உயிரோடு இருந்தவரை எனது சின்னப்பாமார்கள் அவரது பிள்ளைகளும் எங்களுடன் கதிர் அறுக்க வயலுக்கு வருவார்கள்.

எல்லோரும்  எங்க அப்பாவிடம் இருந்து  கதிர் பெற்றுக் கொண்டு, அவர் பின்னால் வயல் வரப்பில் வரிசையாய் செல்வது கண்டு சந்தோசமாய் இருக்கும்.
தெருவழியாய் வரும்போது, வீட்டின் வாசலில் காத்திருந்து நிற்பவர்களைக்  கண்டு அவர்களுக்கும் கதிர் கொடுப்பார் அப்பா. அப்படி வாங்குவோர்களில் அப்பாவின் அம்மையும் (ஆச்சி) உண்டு. சொந்த மில்லாதாரும் உண்டு....  பின்னாட்களில் இந்த வழக்கம் இல்லாமல் போனது.

வீட்டு வாசலை அடையும்போது எனது அம்மா அங்கு நின்று கதிர் கட்டு ஒன்றை அப்பாவிடம் இருந்து வாங்குவாள்.

பூஜை முடிந்து நாட்கருதுபானையை நிறைப்பார்கள்.
பின் வயிறும் நிறையும் காலை உணவான சர்க்கரைபோட்ட அவல் சாப்பிடுவதால்.......

நாங்கள் கிராமத்தை விட்டு வந்தாலும் வீட்டில் நிறைப்பதை வழக்கமாய் கடவுள் அருளால் கடைபிடித்து வருகிறோம்....

இன்றைய நாளில் அதாவது இது போன்ற நாளில் எனது அப்பா, அம்மா என்னோடு இருப்பது போன்ற உணர்வு என் நெஞ்சில் ஒரு மூலையில் இருந்து கொண்டே இருக்கும்.

           புதுநெல் அரிசி சாப்பிடும் நிகழ்வு ஒன்று உண்டு. புத்தரிசி சாப்பாடு அது. அன்று  எல்லோரும்  சேர்ந்துதான் சாப்பிடுவோம்.                       அறுவடைக்காலங்களில் நடக்கும்   திருமணத்திற்குப் போனால் பந்தியில் சாப்பிடவேண்டும். அநேகமாய் அந்த சாதம் புது அரிசியில் தான் சமைத்திருப்பார்கள். வீட்டில் புத்தரிசி சாப்பாடு சாப்பிடாமல் எனது அப்பா வெளியே எங்கும் சாப்பிட மாட்டார்கள்...... திருமணத்திற்கு கண்டிப்பாய் போக வேண்டும் எனில் புத்தரிசி சாப்பாடு வீட்டில் வைத்துவிடுவார்கள்....  அரிசி தயாராகவில்லை என்றால் நாட்கருதுப் பானையில் உள்ள கதிர் நெல்லினை எடுத்து உமியை உரித்து ஒரு கைப்பிடி அளவெடுத்து பழைய அரிசியுடன் கலந்து சமைத்து புத்தரிசி சாப்பிடுவதுண்டு.

சீடை செய்வது ( கடையடைக்காய்) அந்த நாளில் தான் செய்து தருவார்கள்....