Sunday, December 14, 2014

சிங்கப்பூர்....2 அமரா ஹோட்டல் எதிர்புறம் tanjeng pagar plaza-----16-NOV-2014 (Sunday)

சிங்கப்பூர் முதல் நாள் 16-11-14
அதிகாலைப் பொழுது...... நாங்கள் இருவரும் முதன்முதலாக இறங்கிய இடம் டாஞ்செங்க் பகார்  ப்ளாஷா .அதன் எதிர்புறம் ஹோட்டல் அமரா.
அந்த இடம் ஒரு வணிகவளாகம். எல்லாமே அங்கு கிடைக்கும்.... பல அடுக்கு கட்டிடம்.....கட்டிடத்தினுள் நடந்து செல்கையில் “தமிழ் முரசு” பத்திரிகை விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. பத்திரிகை விலை 60 செண்ட் (28 ருபாய்)Home

பல கட்டிடம் உள்ள அந்த இடத்தில் 4ஆம் பகுதியில் போய் நின்றோம். எங்கள் முன்னே உள்ள லிஃப்ட் கதவு திறந்து வரவேற்றது....  எட்டாவது மாடியில் லிஃப்ட் நின்று அது வழி அனுப்பி வைத்தது.... வலது பக்க வராந்தாவில் பத்தாம் எண் வீட்டு வாசலில் போய் நின்றோம்.

வாங்கோ..... வாங்கோ..... என்ற தேந்தமிழ் எங்களை வரவேற்றது.....தமிழர்களுக்குத் தனிநாடு இல்லையென்றாலும் தமிழர்கள் எல்லா நாட்டிலும் வாழ்கிறார்கள்.
எங்களை வரவேற்றவர் 84 வயதுப் பெரியவர்.....விவேகானந்தரை விரும்பிப் படிப்பவர்.....காந்தியை விரும்பியவர்.....வாழும் காந்தியாகவே வாழ்ந்து வருபவர்..... அவர் எங்களை அழைத்துச் சென்ற மணியின் தந்தை......எனக்கு என்னுடைய மதினியைத் திருமணம் செய்த முறையில் அண்ணன்.....ராசப்பத்தானின் தங்கைதான் மணியின் அம்மா.

அறுபத்தி ஏழாம் வள்ளுவரின் வரிகளுக்கு உதாரணமான ஒரு தந்தை,அறுபத்தி ஒன்பதாம் வரி சொல்லும் தாய்,எழுபதாம் குறள் காட்டும் மகன் ......இவர்கள்......

பெரியவர் பெயர் காந்தி.....அன்னையவள் அய்யம்மை..... இருவரும் அகமும் முகமும் மலர எங்களை வரவெற்றனர்.

விமானம் காலதாமதமின்றி வந்ததா......பிரயாணம் வசதியாக இருந்ததா... அக்கறையுடன் விசாரித்தார்...மைத்துனர் ராசப்பனிடம் ,” உனக்கு இது தானே முதல் விமானப்பயணம்.....அன்போடு கேட்டார்.

“விமானப் பயணம் என்றால்...... வெளிநாட்டு விமானப்பயணம் இது தான் முதல் வெளிநாட்டுப் பயணம்.....டெல்லிக்கு,சென்னைக்கு ஃப்ளைட்டில் பல தடவை போனதுண்டு.....” என்றார்.

என்னிடம் மதினி கேட்டா....சுப்பம்மையையும் கூட்டிட்டு வந்திருக்கலாம்லா....

அமைதியும் சிரிப்பும்தான் என் பதில்....... உள்மனம் சிரிக்கவில்லை.....

இரண்டு கதைப் புத்தகங்கள் கொண்டு போயிருந்தேன்......படிப்பதற்காக.

அண்ணனிடம் படிப்பதற்காகக் கொடுத்தேன்.

சிங்கப்பூர் எப்படி இருக்கு....? நான் கேட்டேன்.

அப்போ அவர் சொன்னதைதான் முதல் பகுதியில் குறிப்பிட்டிருந்தேன்... காந்தியின் கனவு....... நனவாக அமைந்த நாடு என.......

இங்கு எல்லாமே காஸ்ட்லி.... காப்பிக்கே அதிக விலை கொடுக்கணும்....

மணி சொன்னது “ சிங்கப்பூரில் வாங்கும் ஊதியத்திற்கு ஏற்றவிலைதான். இது...  வீட்டு வாடகை ஒன்றரை லட்ச ருபாய்.... இங்கே சிங்கப்பூரில் 3000 சிங்கப்பூர் டாலர்.. வீட்டில் வேலை செய்யும் நபருக்கு 500 டாலர்...

அவர்கள் தந்தையும் தனையனும் பேசிக் கொண்டிருந்த போது நான் அவர்கள் பேசுவதையும் அவர்கள் இருவரது முகபாவங்களையும் கேட்டுக்கொண்டும் கவனித்துக் கொண்டுமிருந்தேன்.....

மகன் மிகவும் பொறுமையாய் தந்தை கேட்கும் கேள்விகளுக்கு தெளிவாகச் சொல்லிக் கொண்டிருந்தான். ஆசிரியருக்கான தகுதிகள் மணியிடம் என்னைவிட அதிகம் இருப்பது கண்டு ரசித்தேன்.

எனக்கு எங்கோ  வீடியோ ஒன்றில் பார்த்த மீச்சிறு குறும்படம் நினைவுக்கு வந்தது........ ஒரு பூங்கா..... அதில் ஒரு நாற்காலியில் அதிக வயதான தந்தையும் மகனும் இருக்கிறார்கள். பேப்பர் படித்துக் கொண்டிருக்கிறார் மகன்.
பெரியவர் ஒரு வண்ணத்துப் பூச்சியைப் பார்க்கிறார்.... தமது கண்ணுக்கு சரியாகத் தெரியாததால் மகனிடம் கேட்கிறார் அது என்னவென்று....

மகனும் சொல்கிறார்.....

”அது எங்கே போகிறது ?” அப்பா கேட்கிறார்.

”ஒரு செடியை நோக்கிப் போகிறது.”.....மகன் சொல்கிறான்

”இன்னமும் பறந்துட்டே இருக்கா....” இது அப்பா

”இல்ல செடியின் மீது இருக்கு ”பேப்பரைப் படித்துக் கொண்டே  மகன் சொன்னான்.

இப்பவும் அது அங்கதான் இருக்கா.....அப்பா கேட்கிறார்.

பொறுமை இழந்த மகன் அப்பாவிடம், “ என்னப்பா  சும்ம எதாவது கேட்டுகிட்டே இருக்க.....” சற்று கோபத்துடன் கேட்டான்.

அவர் மகனிடம், “ மக்கா..... உனக்கு அப்போ சின்ன வயசு......என்னிடம் நான் இப்பம் ஓங்கிட்ட கேட்கிறேன்லா.....அப்போது நீ என்னிடம் கேட்டதையேத் திரும்பித்திரும்பி கேட்டுட்டே இருப்ப...... நான் ஒருநாள் கூட உன்னிடம் கோபப்பட்டதே இல்லை.....”

கேட்ட மகன் தந்தையைப் பார்க்கிறான்..... தந்தையின் கண்களில் கண்ணீர்,,,,

மன்னிப்பு கேட்கிறான் மகன்...... படம் முடிகிறது. நிழல் இது. ஆனால்.........

நிஜத்தில் தந்தையும் மகனும் பொறுமையில் சிகரங்கள்.....

மிகவும் பொறுமையாய்த் தந்தையைப் பேணுவதில் மணியிடம் இருந்து பாடம் கற்றேன். அடுக்களை வேலைகளை முன்னின்று வயதான தாய்க்கு உதவும் பொருட்டு அவள் பணியைச் செய்யும் பாங்கினைக் கண்டேன்.

ஊருக்கு ராஜா ஆனாலும் உனக்குப் பிள்ளைதானே என்று ஒவ்வொரு முறையும் செயலால் காண்பித்துக் கொண்டிருந்த மணி எங்களையும் உபசரித்த விதம்...... எழுதிக் கொண்டே போகலாம்.  எத்தனை வரிகள் வேண்டுமானாலும் எழுதலாம் ........

விமானப்பயணமும் களைப்பைத் தரும்..... சற்று அசதி.....கண் மன்றாடியது..

கொஞ்ச நேரம் ஓய்வுதேவை........ தூங்கிவிட்டேன்.












1 comment:

  1. இனிமையான அனுபவம் தான். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    தொடர்கிறேன்.

    ReplyDelete