Saturday, July 16, 2011

ஆறாங்கிளாஸ் ...முதல் நாள் மூத்திரக்குளத்தில்....

கடுக்கரையில் ஐந்தாம் கிளாஸ் வரைதான் இருந்த காலம் அது. அடுத்த ஊரான குறத்தியறை பள்ளிக்கூடத்திற்குப் போய்தான் அடுத்த கிளாஸ் படிக்க வேண்டும். அதுவும் நடந்து போய் வர வேண்டும்.என்னையும் மற்ற என் உறவினர்களையும் அங்கே சேத்துட்டாங்க.

முதல் நாள் குறத்தியறைக்கு நடந்து போகும் போது நாங்கள் அடைந்த சந்தோசத்திற்கு அளவே இல்லை. எங்களுக்கு ‘பி’ டிவிசன். ஒரே டிவிசனில் எல்லோருக்கும் இடம் கிடைத்து விட்டதில் பரம திருப்தி. ஒரு பீரீயடு முடிந்ததும் பெல் அடித்தது. அதுவே மிகுந்த ஆச்சரியம்.ஒவ்வொரு பாடத்திற்கும் தனித் தனி வாத்தியார்....எல்லாமே வித்தியாசமாக இருந்தது. ஒரு ஆசிரியர் வந்தார். அவர் எங்கள் ஊர்க்கார சுப்பிரமணிய பிள்ளை சார். அவரைக் கண்டதும் பேய் அறைந்தது மாரிஆகிப்போனோம்.அடி வெழுத்து விடுவார். அவர், “ இண்ணைக்கு இவ்வளவுதான். எல்லாரும் வீட்டுக்குப்போலாம். நாளைக்கு நோட்டு புக்கெல்லாம் என்ன வேணும்னு சொல்லுவேன். போங்க.. பொங்க... சத்தம் கீச்சுண்ணு கேக்கப்டாது...கேட்டா தொலச்சுருவேன்”.

 
Posted by Picasa


முதன் முறையாக பள்ளிக்கூடத்துக்குப் போய் கிளாஸ் இல்லாமல் இருந்ததை கண்டு சந்தோசப்பட்ட அனுபவம் புதுவிதமாக இருந்தது.

ஒரே கொண்டாட்டம். போகும் வழியில் கீரங்குளத்துக்கு முன்னால் ஒரு மூத்திரக்குளம்.சின்ன குளம். தண்ணீர் பளிங்கு போல் தெளிவாக இருந்தது. எவனுக்கோ குளிக்கணும் போல் இருந்தது. அவ்வளவு தான். எல்லோரும் உடுப்பு, நிக்கரெல்லாம் கழற்றி விட்டு ஒரே சாட்டம்.
ஒரு மணி நேரம் கடந்தது.....அந்த வழியே நடந்து ஊருக்கு வந்து கொண்டிருந்த சுப்பிரமணியபிள்ளை சார் பார்த்து விட்டார்....அவரைக்கண்டதும் பெட்டிப் பாம்பாய் மாறி கரையேறினோம்....அய்யோ என்ன செய்வாரோ....முறைத்துப் பார்த்தார்...ஒருவனின் செவியை முறுக்கி ஒரு நுள்ளும் கொடுத்தார். நாங்கள் தப்பித்தோம்.


வீட்டுக்குப் போன என்னைப் பார்த்த அப்பா, “ ஏண்டா...சட்டுணு வந்திட்டே... கண்ணெல்லாம் செவந்திருக்கு...” கேட்டார்

நான் பயந்து போய் குளித்த விசயத்தை முழுங்கி முழுங்கிச் சொல்லிவிட்டேன்.

சிரித்துக்கொண்டே , “ துட்டிக்காடா போய்ற்று வாற..பள்ளிக்கூடத்துக்குல்லாடா போன..”

ஆ..ஆ... அப்பாவின் ஏச்சுப்பேச்சிலிருந்து தப்பி விட்டதில் பெருமூச்சு விட்டேன்.

அடுத்த நாள் அந்த சார் எல்லாருக்கும் கையில் பிரம்படி தந்தார்....

மாதா பிதா குரு இம்மூவரும் இல்லையெனில் மனிதன் மிருகம்தான்.என்னை உருவாக்கியதில்
அந்தக்குருவுக்கும் என்னை நெறிமுறைப் படுத்தியதில் பெரும் பங்கு உண்டு.

No comments:

Post a Comment