1958-ல் புதிய பள்ளிகூடம். புதிய ஊர். 6-ஆம் வகுப்பில் சேர்ந்த எனக்கு புதிய நண்பர்கள் வெவ்வேறு ஊரிலிருந்தும் கிடைத்தார்கள். என்னை விட கூடுதல் படித்தவர்களுடனும் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அப்படி ஒருவர் தான் கருணாகரன். கதை எழுதும் திறமை உண்டு. ஒரு நாடகம் எழுதி கடுக்கரையில் நாடகம் போட்டதும் உண்டு. நடித்து வீட்டில் அப்பாவின் கோபத்துக்கு ஆளான கதையெல்லாம் நடந்தது.
முருகன் அவன் எம்.ஜி.ஆர் ரசிகன்..சுமாராகத்தான் படிப்பான்... நன்றாகப் படிக்கும் நாங்கள் கொஞ்சம் பேர் சிவாஜி ரசிகர்கள்....வெளியூருக்கு சினிமா பாக்கப் போணுண்ணா அவன் கூடத்தான் போகணும்...அவன் கூடப் போய் எம்.ஜி.ஆர் படம் பார்த்து நானும் காட்சியும் கட்சியும் மாறுவது போல் முருகனோடு சேர்ந்து மாறிவிட்டேன்....அவன் ஒரு தி.மு.க. கடவுள் இல்லையென்று சொன்னான் .ஒரு நாள் தனது நாக்கில் வேலைக் குத்தி காலையில் குறத்தியறைக்கு பள்ளிக்கூடம் போகும் போது வந்து விட்டான். நாக்கில் ஒரே சிவப்பு நிறம்...
பள்ளிக்கூடம் நெருங்கியதும் வேலை எடுத்து விட்டான்.... ஒரே ஆச்சரியம்... வகுப்புக்கு போய் பின் மதிய உணவு சாப்பிடும் போது நான் கேட்டேன். “உனக்கு வலிக்கவே இல்லையா ?
எப்படி சாப்புடுவே ?”. என்னைத் தனியே கூட்டிக்கொண்டு போய் அந்த வேலை என்னிடம் மட்டுமே காட்டினான். நாக்கில் வைப்பதற்கு வசதியாய் நடுப்புறம் ஒரு வளைசல் இருந்தது. என் நாக்கிலும் வைத்துக் காண்பித்தான். இப்படித்தான் பலர் ஏமாற்றுகிறார்கள்.. ரகசியம் காப்பாற்றப்பட்டது. போகும் வழியில் உள்ள சாமிகளை எல்லாம் கிண்டல் பண்ணி அதன் மீது ஏறி தன் வீர பிரதாபங்களைக் காட்டினான். சின்ன வயசல்லவா எனக்கு. முருகனைப் பிடித்துப்போய் கடவுள் முருகனை ஏச ஆரம்பித்தேன். திருநீறு பூசாமல் இருந்தேன்....இவை எதுவும் எங்க அப்பாவுக்குத்தெரியாது.
எம்.ஜி.ஆரிடம் இருந்து எனக்கு அவருடைய போட்டோ ஒன்று வரவழைத்துத் தந்தான்..
இப்படியாக காலம் கட்ந்து 7-ஆம் வகுப்பில் படிக்கும்போது எனக்கு டைபாய்டு காய்ச்சல் வந்தது.
‘காச்சல் வந்ததே அந்த முருகனால் தான். அவன் உன்னை சாமி கும்பிட விடாமல் ஆக்கி விட்டான்’ இது சிவாஜி ரசிகர்கள் என்னிடம் மாத்திரம் இல்லாமல் என் வீட்டிலும் சொன்னது.
புத்தேரி ஆஸ்பத்திரியில் போய் சுகமாய் வீட்டிற்கு வந்தேன்... தினமும் என் அப்பா எனக்கு திருனீறு பூசுவார் நெற்றியில். எனக்காகவே நான் குணம் அடைவதற்காக முருகன் கோவிலில் புஸ்பாபிசேகம் நடத்தியது என் அப்பா. நான் அமைதியாய் ஏற்றுக்கொண்டேன்.
நான் மெள்ள மெள்ள நணபன் முருகனின் கொள்கையை விட்டு விலக ஆரம்பித்தேன்.
எனது அம்மாவின் அம்மை பொன்னம்மை, “சாமி யெல்லாம் கும்பிடணும் தங்கம்.சாமி இல்லெண்ணு சொல்லக்கூடிய பயக்க கூடெல்லாம் சேரக்கூடாது”
அம்மா எதுவுமே என்னிடம் சொன்னது இல்லை. என் மனக் குழப்பத்தை புரிந்து கொண்டாள்.
“எப்பவும் போல் பள்ளிகூடத்துக்கு அந்த முருகன் கூடவே போ...”
பள்ளிக்கூடம் போக ஆரம்பித்தேன். ஒரு வாரம் நான் வில்லு வண்டியில் பள்ளிக்கூடம் போனேன். மதிய உணவு வீட்டில் இருந்தே வந்தது . நணபர்கள் யாரும் வண்டியில் என்னுடன் வர வில்லை. எனக்கு என்னவோ போல் இருந்தது
ஒரு வாரம் கழிந்தது. நடந்து போக வேண்டும்.... யாருடன் போவது ? சிவாஜி ரசிகர்களுடனா ? முருகனுடனா..?
காலையில் நான் புறப்பட்டு வெளியே வந்தேன்.... அங்கே முருகன் மட்டும் எனக்காக காத்திருந்தான்....அப்பாவும் அம்மையும் முருகனிடம் என்னை பாத்துக்கோ என்று கூற நான் அவனுடன் பள்ளிக்குப் போனேன்.
“முருகா, ஆனாலும் நீ என்னைப் பாக்க வரவே இல்லையே?”
“ உங்க அப்பாவோ அம்மையோ என்னை ஏசுவாங்களோண்ணு நினைச்சேன்.அதான் வரல்ல. இப்பம் உங்க அப்பாதான் வீட்டு நடையில் எனக்காகக் காத்திருந்து என்னை நிக்கச் சொன்னார்கள்.அதான் உனக்காக காத்திருந்தேன்.”
இப்போ எனக்கு இரண்டு முருகனையும் பிடித்தது. இதையெல்லாம் விட என் அப்பா அம்மையும் மிக அதிகமாக பிடித்திருந்தது.
முருகன் சொன்னான், “ உனக்கு எது மனசுக்கு பிடிச்சிருக்கோ அப்படியே இரு”
முருகனும் நானும் நல்ல நண்பர்கள் .அதன் பிறகு சிவாஜி ரசிகர்களும் நாங்களும் ஒன்றாகவே போவோம் வருவோம் விளையாடுவோம்.
நட்புக்கு இடையே கொள்கைகள் குறுக்கே வரவில்லை.
அதனால் தான் இன்றும் எல்லோரையும் அனுசரித்துப் போகும் பழக்கம் உள்ளவனாகவே வாழ்ந்து வருகிறேன்.
No comments:
Post a Comment