Monday, June 27, 2011

என் மகன் ரசித்த (அவனுக்கு எழுதிய) என் கடிதம்

என் மகனுக்கு எழுதிய கடிதம். எழுதியவை எல்லாமே இரவல்

Posted by Picasa

Dear Dinesh,
அப்துல்கலாம்-ன் அக்னிச்சிறகுகள்—புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தேன்.24-June.2000-ல் சென்னையில் நீ வாங்கியது

அப்துல்கலாமின் தந்தை தன் மகனிடம் கூறிய அறிவுரை

“அபுல்..! முன்னேற்றம் காண்பதற்காக நீ இங்கிருந்து புறப்பட வேண்டியிருக்கும் என்பது எனக்குத் தெரியும். ஒரு கூடு கூட இல்லாமல் தன்னந்தனியாக வானவெளியில் நாரைப் பறக்கவில்லையா ? உன்னுடைய மகத்தான ஆசைகள் நிறைந்த இடத்தை அடைவதற்காக நீ பிறந்த இடத்தின் ஏக்கத்தை உதறியே தீரவேண்டும். எங்களுடைய அன்போ தேவைகளோ உன்னைக் கட்டுப்படுத்தி வைக்காது”......பக்கம் 36

கலீல் ஜிப்ரானின் வார்த்தைகள்: “உங்களுடைய குழந்தைகள் எல்லாம் உங்களுடைய குழந்தைகள் அல்ல. தமக்காகவே ஏங்கிக் கொண்டு இருக்கும் வாழ்க்கையின் வாரிசுகள் அவர்கள்.உங்கள் மூலமாக வந்தவர்கள், அவர்கள். ஆனால் உங்களுக்குள் இருந்து வரவில்லை.அவர்களிடம் நீங்கள் உஙகள் அன்பை வழங்கலாம் .ஆனால் ,உங்களுடைய சிந்தனைகளை அல்ல. தங்களுக்கு என்ற சுய சிந்தனை கொண்டவர்கள்,அவர்கள்.”..பக்கம் 36

ராமேஸ்வரம் ரயில்நிலையத்தில் ,ரயில் ஏற்றியபோது அப்துல்கலாமின் அப்பா சொன்னது: “உன்னுடைய உடலுக்கு இந்த ராமேஸ்வரம் தீவு இடமளித்திருக்கலாம். உன் ஆன்மாவுக்கு அல்ல. எதிர்காலம் என்ற வீடுதான் உன் ஆன்மாவின் வசிப்பிடம். ராமேஸ்வரத்தில் இருக்கும் நாங்கள் யாரும் அங்கு வரமுடியாது. கனவில்கூட அது நடக்காது. கடவுள் உனக்கு அருள்புரியட்டும்,என் செல்வமே....”பக்கம் 37

“வீட்டு ஏக்கம் என்னை வாட்டினாலும், புதிய சூழ்நிலைக்கு ஏற்ப என்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று திட்டவட்டமாக முடிவு செய்தேன். மூலகாரணம் என் அப்பா”....பக்கம் 38

“வாழ்க்கையில் வெற்றி அடையவேண்டும், நினைத்ததை சாதிக்க வேண்டும் என்றால் ஆசை,நம்பிக்கை,எதிர்பார்ப்பு என்ற மூன்று வலுவான சக்திகளை புரிந்து கொண்டு அதில் கைதேர்ந்தவராகிவிட வேண்டும்”....பக்கம் 40

“மற்றவர்களை அறிந்தவன் பண்டிதன். தன்னை அறிந்தவன்தான் உண்மையான கல்விமான்”

பேரனைக்காட்டி பாடம் புகட்டிய அப்பா

என் பிதா மனம் பித்து என் மனம் கல்லு
_____________________________________________

 
Posted by Picasa


1979-ல் கடுக்கரையில் ஒரு நாள். நல்ல வெயில்..

நானும் எனது உறவினரும் நண்பருமான ரவியும் என் வீட்டின் முன்னே சாலையோரத்தில் ஒரு பாரவண்டியின் பக்கத்தில் நின்று பேசிக்கொண்டிருந்தோம்.

வீட்டின் உள்ளே என் மூன்றுவயது மகன் விளையாடிக்கொண்டிருந்தான்.

தற்செயலாக வெளியே வந்த என் தந்தை வெயிலில் நின்ற எங்களைப் பார்த்ததும் , “வெயில் சுடல்லியா,உள்ள வந்து நிழல்ல இருந்து பேசப்டாதா” கூறினார்.

நாங்கள் அதனைப் பொருட்படுத்தாமல் பேச்சை தொடர்ந்தோம்.என் தந்தைக்கு எங்கள் செயல் பிடிக்கவில்லை.

உள்ளே போன என் தந்தை என் மகனை அழைத்து நாங்கள் காணும்படியாக வெயிலில் நிற்கவைத்தார்கள்... பேச்சு சுவராஷ்யத்தில் எனக்கு ஒன்றுமே தோன்றவில்லை.

“ஏய்! ஓம்மகன் வெயில்ல நிக்கான்.உனக்கு சுடல்லியா.. நீ வெயில்ல நிக்கது எனக்கு மேலல்லாம் சுடுகே”

நான் சிறுவனாக இருந்த அந்த நாள்...

 
Posted by Picasa


என் வயது ஞாபகம் இல்லை. சிறுவர்கள் கொஞ்சம் பேர் கடுக்கரையில் இருந்து சினிமா பார்க்க புறப்பட்டுப் போனோம். தியேட்டர் இருந்த இடம் மணத்திட்டை . அது திட்டுவிளைக்கும் தெரிசனம்கோப்புக்கு இடையே உள்ள ஒரு ஊர்.முதல் இரவுக்காட்சி படம் பார்த்தோம். சிவாஜி கணேசன் நடித்த நானே ராஜா... படம் மிக நன்றாக இருந்ததால் மறுபடியும் டிக்கட் எடுத்து இரண்டாம் காட்சியையும் பாத்தோம்.

வீட்டிலோ சினிமா பாக்கப்போன பிள்ளைகளைக் காணல்லியே என்று என் அப்பா ஒரு ஆளை தெரிசனம்கோப்பில் என் உறவினரின் வீட்டில் போய் விசாரித்துவர அனுப்பி இருந்தார்.அந்த வீட்டில் இருந்த நண்பனும் என்னுடன் படம் பார்த்துக் கொண்டிருந்தான்.அவனும் வீட்டில் சொல்லாமல் தான் வந்திருந்தான். என்னைத் தேடி வந்த ஆள் விசயம் தெரிந்து போய்விட்டான். காட்சி முடிந்து நாங்கள் வீட்டுக்குப் போனதும் நான் அப்பாவுக்குத் தெரியாமல் அம்மாவின் உதவியோடு போய்ப் படுத்து உறங்கி விட்டேன். என்னை ஏசவே தெரியாத என் அம்மை, ‘அப்பா ரொம்ப கோபத்தில இருக்கா’ என்று மாத்திரம் கூறினாள்.

காலையில் அடி கிடைக்கும்...ஒருவிதமான பயத்துடன் இருந்த என்னை அப்பா ,”தங்கம்... இங்க வா....நேத்தைக்கு எங்க போன.....யார்ட்ட கேட்டுட்டுப்போன....யாருக்கு கூடப்போன...ஒருத்தரும் உருப்படவே மாட்டீங்க... எப்படியோ போங்க...”

அடியில் இருந்து தப்பி விட்டதில் நிம்மதி....ஆனால் என்னோடு வந்த அனைவரும் அவர்களின் அப்பாவிடம் அடி பட்டார்கள்...என்னால் தான் அடி பட்டார்கள் அவர்கள்....

இன்று நான் நினைத்துப்பார்க்கிறேன்

என் தந்தை சொல் அடி தரும் வலியை விட மிகவும் அதிகமாக வேதனையையும் மனவலியையும் தந்தன. தலை குனியவைத்துவிட்டேனோ என் தந்தையை !...செய்தபின்தானே செய்தது தப்பு என்று தெரிகிற பருவமல்லவா சிறுவயதுப் பருவம்.

என் வாழ்க்கையில் அது ஒரு பாடமாக எனக்கு அமைந்தது...அதன் பிறகு என் தாயிடம் கூட நான் பொய் சொன்னதே இல்லை...கோபப்பட்டுக்கூட எங்க அம்மையை பேசியது கிடையாது.87 வயது வரை என்னுடன் இருந்த என் தாயின் மனம் நோகும் படி நானோ என் மனவியோ நடந்து கொண்டதே இல்லை. என் அம்மையின் வார்த்தைக்கு எதிராக ஒரு வார்த்தை கூடப் பேசாதது என் பிள்ளைகளுக்கு பாடமாக அமைந்தது..அதுவே என் பிள்ளைகள் அவர்கள் தாயை எதிர்த்து இதுவரை பேசாமல் இருந்ததற்கு காரணம் ..... இதுதான் அவர்கள் கற்ற பாடம்....(என் தாய் என் பிள்ளைகளாலும் அன்பாக நேசிக்கப்பட்டவள்.)

Saturday, June 25, 2011

ஏதோ ஒரு பாட்டு ஒவ்வொரு வயதிலும்

பிடித்த பாடல்கள்

ஒருவயதில் எனை உறங்க வைத்தது தாயின்தாலாட்டு
ஒன்பது வயதில் எனை உணர வைத்தது தந்தையாரின் பாட்டு
பதினெட்டில் எனைக் கிறங்க வைத்தது திரைப்பாட்டு
இருபத்தேழில் மயங்க வைத்தது தாரத்தின் பாட்டு
இருபத்தொன்பதில் இனிது எதென உணர்த்தியது மழலைப்பாட்டு
இப்பமென் அறுபதில் பிடித்தது பேரன் பாடும் தாத்......தாத்.......தாத்தாப்பாட்டு
எப்பவும் பிடிப்பது தினமும் வணங்கிப்பாடும் ’அம்மா’ என்ற நான் பாடும் பாட்டு.