என் மனதில் மலர்ந்த மலர்களையும் மலரும் நினைவுகளையும் நாளை எனது பேரன்கள் பார்த்து சிரிக்கவும் எனை நினைக்கவும் தனிமை என்னை வாட்டும் போதெல்லாம் இந்த வரிகள் என்னை இதமாக வருடவும் மாத்திரமே பதிவு செய்கிறேன்...... தங்கம்
Monday, June 27, 2011
நான் சிறுவனாக இருந்த அந்த நாள்...
என் வயது ஞாபகம் இல்லை. சிறுவர்கள் கொஞ்சம் பேர் கடுக்கரையில் இருந்து சினிமா பார்க்க புறப்பட்டுப் போனோம். தியேட்டர் இருந்த இடம் மணத்திட்டை . அது திட்டுவிளைக்கும் தெரிசனம்கோப்புக்கு இடையே உள்ள ஒரு ஊர்.முதல் இரவுக்காட்சி படம் பார்த்தோம். சிவாஜி கணேசன் நடித்த நானே ராஜா... படம் மிக நன்றாக இருந்ததால் மறுபடியும் டிக்கட் எடுத்து இரண்டாம் காட்சியையும் பாத்தோம்.
வீட்டிலோ சினிமா பாக்கப்போன பிள்ளைகளைக் காணல்லியே என்று என் அப்பா ஒரு ஆளை தெரிசனம்கோப்பில் என் உறவினரின் வீட்டில் போய் விசாரித்துவர அனுப்பி இருந்தார்.அந்த வீட்டில் இருந்த நண்பனும் என்னுடன் படம் பார்த்துக் கொண்டிருந்தான்.அவனும் வீட்டில் சொல்லாமல் தான் வந்திருந்தான். என்னைத் தேடி வந்த ஆள் விசயம் தெரிந்து போய்விட்டான். காட்சி முடிந்து நாங்கள் வீட்டுக்குப் போனதும் நான் அப்பாவுக்குத் தெரியாமல் அம்மாவின் உதவியோடு போய்ப் படுத்து உறங்கி விட்டேன். என்னை ஏசவே தெரியாத என் அம்மை, ‘அப்பா ரொம்ப கோபத்தில இருக்கா’ என்று மாத்திரம் கூறினாள்.
காலையில் அடி கிடைக்கும்...ஒருவிதமான பயத்துடன் இருந்த என்னை அப்பா ,”தங்கம்... இங்க வா....நேத்தைக்கு எங்க போன.....யார்ட்ட கேட்டுட்டுப்போன....யாருக்கு கூடப்போன...ஒருத்தரும் உருப்படவே மாட்டீங்க... எப்படியோ போங்க...”
அடியில் இருந்து தப்பி விட்டதில் நிம்மதி....ஆனால் என்னோடு வந்த அனைவரும் அவர்களின் அப்பாவிடம் அடி பட்டார்கள்...என்னால் தான் அடி பட்டார்கள் அவர்கள்....
இன்று நான் நினைத்துப்பார்க்கிறேன்
என் தந்தை சொல் அடி தரும் வலியை விட மிகவும் அதிகமாக வேதனையையும் மனவலியையும் தந்தன. தலை குனியவைத்துவிட்டேனோ என் தந்தையை !...செய்தபின்தானே செய்தது தப்பு என்று தெரிகிற பருவமல்லவா சிறுவயதுப் பருவம்.
என் வாழ்க்கையில் அது ஒரு பாடமாக எனக்கு அமைந்தது...அதன் பிறகு என் தாயிடம் கூட நான் பொய் சொன்னதே இல்லை...கோபப்பட்டுக்கூட எங்க அம்மையை பேசியது கிடையாது.87 வயது வரை என்னுடன் இருந்த என் தாயின் மனம் நோகும் படி நானோ என் மனவியோ நடந்து கொண்டதே இல்லை. என் அம்மையின் வார்த்தைக்கு எதிராக ஒரு வார்த்தை கூடப் பேசாதது என் பிள்ளைகளுக்கு பாடமாக அமைந்தது..அதுவே என் பிள்ளைகள் அவர்கள் தாயை எதிர்த்து இதுவரை பேசாமல் இருந்ததற்கு காரணம் ..... இதுதான் அவர்கள் கற்ற பாடம்....(என் தாய் என் பிள்ளைகளாலும் அன்பாக நேசிக்கப்பட்டவள்.)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment