Sunday, May 13, 2012

என்னுடையத் தேடல்கள்



   நாடு உனக்கு என்ன செய்தது என்று கேட்காதே….நீ நாட்டுக்கு என்ன செய்தாய் என்று கேள். இதையே சற்று மாற்றி என் மனசாட்சி என்னிடம் கேட்டது ,” ஓய்வுற்ற போதும் வாழ்வளித்துக் கொண்டிருக்கும் உன் கல்லூரிக்கு நீ என்ன செய்தாய் ?  சரி விடு….என்ன செய்யப் போகிறாய்..?”

என்னால் என்ன செய்ய முடியும்? காமதேனுவை வணங்கத்தான் முடியுமே தவிர வேறென்ன செய்ய இயலும்…..
என் சிந்தனை முழுவதும் இந்துக் கல்லூரியின் நினைவாகவே இருந்ததால் ஒரு எண்ணம் உருவானது.
 ”கல்லூரி வரலாறு ஒன்றை விரிவாக எழுதலாமே” என என் மனதில் தோன்றவே, கூடவே அது முடியுமா என்ற சந்தேகமும் என்னுள் தோன்றி சற்று பயமுறுத்தியது.
முயன்றுதான் பார்ப்போமே……..ஜனவரி 2012-ல் என் தேடல் தொடங்கியது. என்னிடம் இருக்கும் கல்லூரி ஆண்டுமலரைத் தேடினேன். சில கிடைத்தன.

நூலகத்தில் இருக்குமே…….1974 முதல் 2011 வரை உள்ள ஆண்டுமலர்கள் மாத்திரமே கிடைத்தன. இருப்பினும் நானும் கல்லூரி அலுவலர் திரு. காந்திநாதனும் நூலகத்துக்குப் போய்த் தேடலாம் என்று ஒருநாள் கல்லூரி நூலகத்துக்குப் போனோம். அங்கு போனதால் 1958,1960,1962,1970 ஆண்டுமலர்கள் கிடைத்தன .ஆனால் 1960 ஆண்டுமலர் மிகவும் கிழிந்த  நிலையில் இருந்தது.  கிடைத்ததை எடுத்துக் கொண்டு வந்தேன்.

கல்லூரித் தலைவர் திரு. P.ஆறுமுகம்பிள்ளையிடம் வரலாறு எழுதும் என் எண்ணத்தையும் ஆண்டுமலர்கள் முழுவதும் கிடைக்காததையும் மிகவும் வருத்தத்தோடுக் கூறினேன். அவர் ,’ கவலைப் படாதே. நம்ம கல்லூரியில் ஒருவர் M.Phil –க்காக கல்லூரி வரலாறு பற்றி thesis எழுதிய ஒரு book உண்டு. அதை வாங்கிப்பாரேன்.” என்று கூறினார்.
மிக்க மகிழ்சியுடன் வெளியே வந்து அதனைப் பெற முயன்றேன்.  ஆனால் அது எனக்குக் கிடைக்கவே இல்லை.
1952-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட கல்லூரியின் ஆரம்பகால ஆண்டுமலர்கள் எதுவும் இல்லாத நிலையில் என்னால் எதுவும் எழுத இயலவில்லை.
என்னுடன் புகுமுகவகுப்பில் படித்த என் நண்பன் திரு.A.வேதாசலம் என் முயற்சியை அறிந்து அவரிடம் இருந்த ஆண்டுமலர்களை கொடுத்தனுப்பினார்.
N.SP சாரை அவருடைய வீட்டில் போய் பார்த்து என்னுடைய முயற்சி பற்றிக் கூறினேன். அவரது நூலகம் வீட்டின் பின் பக்கம் சற்று தூரத்தில் இருந்தது. கால் வலியால் வீட்டினுள் கூட மிகவும் மெதுவாகவே நடக்கும் அவர், என் முயற்சியை ஊக்குவிப்பதற்காக மிகுந்த சிரமத்துடன் நடந்து மாடியில் உள்ள அறைக்கு என்னுடன் அவரே வந்து அவரிடம் இருந்த அனைத்து மலர்களையும் காண்பிக்க என்னிடம் இல்லாத ஆண்டுமலர்களை அவரிடம் இருந்து வாங்கி வந்தேன்.

ஏப்ரல் மாதம் ஒருநாள் Dr.D.வேலப்பன சாரை அவரது வீட்டில் போய் பார்த்துக் கேட்டேன். 80 வயதான, கல்லூரியை மிகவும் நேசித்த அவர் மிக்க ஆர்வத்துடன் ஆண்டுமலர்களைத் தேடினார். மின்சாரம் இல்லாத அந்த நேரத்தில் Emergiency light ஒளியில் தேடினார். அலமாரியில் உள்ள கீழ்த் தட்டில் இருக்கிறதா என்று பார்ப்பதற்காக கஷ்டப்பட்டு தரையில் இருந்து தேடியதைப் பார்த்த எனக்கு வருத்தமாக இருந்தது……” சார், வேண்டாம்…. இவ்வளவு தூரம் கஷ்டப்பட வேண்டாம்…….உங்களுக்குத் தெரிந்த தகவல்களை மாத்திரம் என்னிடம் சொன்னால் போதும்……” என்று கூறினேன்.
பேசினோம். தேவையான பல தகவல்களும் சுவராஸ்யமான செய்திகளும் அவர் சொல்ல நான் தெரிந்து கொண்டேன். ஆனால் அவருக்குத் திருப்தி இல்லை.  எழுந்து உள்ளே போய் 1977-ஆம் ஆண்டில் வெளியான தினமலரை எடுத்துக் கொண்டு வந்தார். ஒன்றரைப் பக்கத்துக்கும் அதிகமான அளவிலான கல்லூரியின் வெள்ளிவிழா நிகழ்ச்சி நிரலும் இந்துக்கல்லூரி பற்றிய திரு L.C.தாணு சார் எழுதிய கட்டுரையும் மற்றும் சில கட்டுரைகளும் இடம் பெற்றிருந்த அந்த செய்தித் தாளை என்னிடம் தந்தார். மின்சார தட்டுப் பாடு இருந்ததால் அந்த ஊரில் செராக்ஸ் எடுக்க முடியாததால் என்னிடமே தந்து விட்டார், அந்தக் கட்டுரை எல்லாத் தகவல்களைக் கொண்டதாக இருந்தது.முக்கியமானப் பலத் தகவல்களைக் கொண்ட அந்தச் செய்தித் தாள் பத்துக்கும் மேலான ஆண்டுமலருக்கு சமமாக இருந்தது.
அது கிடைத்ததும் நான் உற்சாகமாக எழுதத் தொடங்கி விட்டேன். நான் எழுதத் தொடங்கும் முன்னமே வேலப்பன் சார் தந்த தினமலர் தாளைக் செராக்ஸ் காப்பி எடுத்தபின் ஒரு கவரில் மிகப் பாதுகாப்பாக வைத்து அவருக்கு அவரது பேரன் மூலம் கொடுத்தனுப்பி விட்டேன்.

என்னுடன் இயக்குனராக இருக்கும் திரு.R. ஆறுமுகத்திடம் என் தேடல் முயற்சியினைக் கூறினேன். அவர் சொன்னார்”மறைந்த முன்னாள் மலையாளப் பேராசிரியர் K.G.உண்ணிகிருஷ்ணன் நாயர் சார் எல்லா ஆண்டுமலர்களையும் வைத்திருந்தார்…..அவர் வீட்டில் இருந்து வாங்கி வரணும்……உங்களால் முடியுமா….? “.


அவர் அவரது நணபருக்குத் தகவல் கொடுத்து தேவையான ஆண்டுமலர்களை எடுத்து வைக்கும்படிச் செய்தார்.


கிழிந்து போன 1960 மலரில் இருந்து தெரிந்து கொண்ட,இந்துக் 
கல்லூரியின் சின்னத்தினை வடிவமைத்த திரு. முகம்மத் கானைக் காண நானும் N.S.P சாரும் திருவனந்தபுரம் போனபோது கிடைத்த ஆண்டு மலர்களை திரு.அஜீந்திரநாத் மூலம் வாங்கி வந்தேன். ஆகா....! எவ்வளவு நாள் முயற்சி பண்ணினேன்.....எல்லாம் கிடைத்து விட்டதே.....மனம் பரிபூரண திருப்தியை அடைந்தது.

வீட்டிற்கு வந்து ஆவலுடன் பார்த்தபோது 1973 ஆண்டு மலர் இல்லாததைக் கண்டேன்.  இதுவரை 59 ஆண்டுமலர்கள் தான் வெளிவந்திருக்கின்றன. 58 ஆண்டுமலர் என்னிடம் இருந்தாலும் இல்லாத அந்த ஒன்றை மட்டுமே நினைத்துக் கொண்டு திரு.காந்திநாதனிடம் விவரத்தைக் கூறினேன். மறுநாள் காலையில் காந்திநாதன் என்னிடம் அந்த ஆண்டுமலரையும் தந்தார்.

முயன்றால் முடியாதது எதுவும் இவ்வுலகில் இல்லை. ஆனால் தனி ஒருவனால் எளிதில் முடியக்கூடிய விஷயம் இதுவல்ல அல்லவா.
என் எண்ணம் நல்ல வண்ணம் செயல்பட உதவிய நல்லோர்கள் எல்லோரையும் ,ஒடி ஒடித் தேடிக் கிடைத்தபின் திரும்பிப் பார்க்கும்போது நினைத்துப் பார்க்கிறேன்.
அந்த நல்லோர் அனைவரும் இந்துக் கல்லூரியின் மாணவர்கள்.

கல்லூரியின் ஆண்டு மலர்கள் (தகவல்கள்) அனைத்தும் ,கல்லூரியில் ஒரு ஆவணக்காப்பகம் இருந்தால் இருந்திருக்குமோ……….!

No comments:

Post a Comment