Sunday, May 20, 2012

வடக்கு வீட்டு குடும்பத்துக் கொடைவிழா


நான் அப்போது ஒரு சிறுவன். குறத்தியறைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். பள்ளியில் தமிழ் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர் திரு.R.சுப்பிரமணியபிள்ளை அவர்கள் மாணவர்களிடம் ஒரு வேண்டுகோள் வைத்தார். இங்கு படிக்கும் பணக்கார வீட்டுப் பிள்ளைகள் தங்களிடம் இருக்கும் பழைய சட்டை ,நிக்கர் ஏதாவது இருந்தால் கொண்டு வாருங்கள் என சொன்னார். நான் வீட்டுக்கு வந்த பின் என் அம்மையிடமும் அப்பாவிடமும் சொல்லி என் பழைய உடுப்புகளை கொடுக்க அனுமதி கேட்டேன். அனுமதி கிடைத்ததால் மறுநாளே என்னிடம் இருந்த பழைய ஆனால் கிழிசல் இல்லாதச் சட்டையைக் கொண்டு ஆசிரியரிடம் கொடுத்தேன். அவர் பகிரங்கமாக சொன்னது இன்னமும் என் காதினில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. சொன்ன வார்த்தைகள் என்னது தெரியுமா. " ஒரே ஒருவன் தான் நான் கேட்ட உடன் கொண்டு வந்து தந்திருக்கிறான்……எனக்குத் தெரியும். அவன் தான் கொண்டு வருவான். ஏனென்றால் அவன் வடக்கு வீட்டு வம்சத்தின் பிள்ளை…………….." எனக்கு ஒன்றுமே புரியவில்லை. என்ன சார் வடக்கு வீட்டுப் பிள்ளை…..தெக்கு வீட்டுப் பிள்ளை என்று கூறுகிறார்
எனது அம்மாவிடம் கேட்டேன்." நாம் எல்லாம் வடக்குவீட்டு வம்சத்தினரா ?" .
அம்மா சொன்னாள்." உங்க அப்பாவும் அவரது அப்பாவும் வடக்கு வீட்டுக் குடும்பம். அதனால் நீயும் அதேக் குடும்பம் தான். நான் இலங்கநேரிக் குடும்பம்.உன்னுடைய வாத்தியார் இருக்கும் இப்போதுள்ள வீடுதான் வடக்கு வீடு. அந்த வீட்டில் தான் உங்க அப்பா எல்லோரும் பிறந்தாங்க"
வாத்தியார் எனச் சொன்னது என்னுடைய ஆசிரியர் சுப்பிரமணியபிள்ளை அவர்களைத்தான்.
அந்தக் குடும்பத்திற்கென்று ஒரு கோவில் உண்டு. அது கடுக்கரையில் இருக்கும் தம்பிரான் கோவிலின் அருகில் உள்ள ஆயினூட்டு பூதத்தான் கோவில். 22 வருடத்திற்குப் பின் 2012-ஆம் ஆண்டு மே மாதம் 17,18,19 ஆகிய தேதிகளில் கொடை நடந்தது..உள்ளூர், வெளியூரில் வசித்து வரும் வடக்கு வீட்டுக் குடும்பத்தார் பெரும் திரளாக வந்து சாமியின் அருள் பெற்றுச் சென்றனர்.
ஆரம்ப காலங்களில் கொடை விழா எப்படி நடந்ததோ அது போலவே சம்பிரதாயங்கள் எதனையும் மீறாமல் இப்பொழுதும் எங்க வீட்டுக் கொடை நடந்து முடிந்தது.
பூதத்தான் கோவில் வளாகத்தில் கடுக்கரை ஊரில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் சாமி உண்டு. சிவனணைந்தபெருமாள்,பண்ணிமாடன்,புலமாடன்,காளமாடன்,………………………… சாமிகள் உண்டு.
பூதத்தான் சாமி ஆடுவது சிவராமன். சிவனணைந்த பெருமாள் சாமிக்கு வடக்குத்தெரு ராஜேந்திரன்,
பண்ணிமாடன் -----கடுக்கரை மங்களா வீட்டு குத்தாலம் பிள்ளையின் அக்காள் மகன் மாதேவன் பிள்ளை.
புலமாடன் ----------- தெங்கரி மற்றும் உடுக்கு தாணப்பன், மேலத்தெரு தம்பிரான்பிள்ளை, ஐயப்பன் ஆகியோரும் விரதம் இருந்து சாமி ஆடினார்கள்.
நய்யாண்டி மேளம் ,கணியான் கூத்து,வில்லுப்பாட்டு எனக் கிராமீயக் கலைகள் எல்லாமே இங்கே அரங்கேறின. முதல் நாள் ரோசினி நாட்டியாலயாவின் நடன நிகழ்ச்சியோடு விழா துவங்கியது.
கணியான் கூத்து மிகவும் ரசிக்கும்படியாக இருந்தது. அவர்களை ஆதரித்து அந்தக் கலை மென்மேலும் வளர்ந்து அந்தக் கலைஞர்களின் வாழ்வும் வளம் பெற வேண்டும்..
சாமி ஆடுபவர்களில் ராஜேந்திரன் ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியர். பண்ணிமாடன் சாமி ஆடியவர் கல்லூரியில் தமிழ்த் துறைத்தலைவராய் வேலை பார்ப்பவர். கொடை பார்க்க வந்தவர்கள் அனைவருக்கும் மூன்று நேர உணவு பரிமாறினார்கள். அனைத்து உறவினர்களுக்கும் தகவல் கொடுத்து மிகப் பிரமாண்டமான இந்தக் கொடையை நடத்தியவர் திரு. வடக்கு வீட்டு முருகன் என்ற அணஞ்சபெருமாள் பிள்ளை. இவர் ஓய்வு பெற்ற ஒரு ஆசிரியர். முதுகலைப் பட்டதாரி.கௌரவத்தலைவர்: 94 வயதான வடக்கு வீட்டில் வசித்து வரும் வாத்தியார் திரு. R.சுப்பிரமணிய பிள்ளை.
தலைவர்: திரு.தி.ஆறுமுகபெருமாள்பிள்ளை,நாவல்காடு, திரு.பெ.மெய்க்கும்பெருமாள்பிள்ளை,கீழத்தெரு,கடுக்கரை.
செயலாளர்கள்: திரு. பெ. ஆறுமுகம்பிள்ளை,கடுக்கரை, திரு.கி.பத்மநாபபிள்ளை, சென்னை.
பொருளாளர்: திரு.சி.நல்லகுற்றாலம்பிள்ளை,கடுக்கரை.
நான் பார்த்த மூன்று கொடைகளும் பிரம்மாண்டமாய் நடந்தன. என் மனதில் பசுமையாய் இருப்பதுவும் எல்லா நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு உறவினர்களோடும் நண்பர்களோடும் சேர்ந்திருந்து விடிய விடிய கண் விழித்துப் பார்த்து ரசித்ததும் இந்தக் கொடை விழா தான்.

 

No comments:

Post a Comment