மே மாதம் ஆறாம் தேதி மாலையில் தக்கலையில் ஒரு வீட்டிற்குப் போனோம்.வீட்டின் பெயர் நிர்மல் பவன்.எங்களுடன் வந்த இந்துக் கல்லூரிப் பொருளாதாரத் துறைப் பேராசிரியர் ஜோசப்ராஜ் எங்களை அந்த வீட்டில் வசிக்கும் ஒருவரைச் சந்திக்க அழைத்துச் சென்றார். அவரது பெயர் கில்பெர்ட் ராஜ். அவரும் இந்துக் கல்லூரியின் முன்னாள் மாணவர் தான். நாங்கள் சந்திக்க வேண்டும் என விரும்பியதற்கு முக்கியமான காரணம் ஒன்றே ஒன்றுதான். 52 வருடங்களுக்கு முன் கல்லூரியில் நடந்த மாணவர்களுக்கான ஒரு போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் பரிசு பெற்ற அவரது பெயர் 1960 –ஆம் ஆண்டு மலரில் இருந்ததைப் பார்த்தபின் நாங்கள் அவரைச் சந்தித்துப் பேச வேண்டும் என ஆசைப் பட்டோம்.
அவர் எங்களை அன்போடு அதிக ஆர்ப்பாட்டமில்லாத சொல்லில் வாங்க வாங்க என உள்ளே அழைத்தார். இரண்டு நாற்காலிகள் தான் இருந்ததால் உள்ளே அவரே போய் நாற்காலியை எடுத்து வந்தார்.76 வயதான அவர் சற்று சோர்வுற்றிருந்தார். செயர் கொண்டு அவர் போடும்போதே போண் பண்ணிட்டு வந்திருக்கலாமே…….என்ற தனது ஆதங்கத்தை மென்மையாகச் சொன்னார்.
இந்துக் கல்லூரி 1960 ஆண்டு மலரை அவரிடம் காண்பித்தோம். அவருடைய பெயர் அதில் இருந்தது. அதனைக் கண்டு அவர் மிகவும் மகிழ்ந்தார்.இந்துக் கல்லூரியின் சின்னம் வடிவமைத்ததில் இரண்டாம் பரிசு பெற்றது அவரது நினவுக்கு வந்தது. முதல் பரிசு பெற்ற முகம்மத்கான் படத்தைப் பார்த்து." அவன் மிகவும் அழகாக இருப்பான் அந்த வயதில்" எனச் சொன்னார். சிறிது நேரம் பேசி விட்டு ,விடை பெற்றபின் அங்கிருந்து திரும்பினோம்.
நான் என்னுடன் வந்த N.S.P சாரிடம் ," சார், நான் அறிந்த மானுட மகோன்னதம்…….எனது Blog-ல் எழுதினதைப் படித்தீர்களா" என்று கேட்டேன்.
"படித்தேன். ஏற்கனவே எழுதுவதற்கு முன் என்னிடம் சொல்லித் தெரிந்த விசயம் ஆனதால் அது எனக்கு சுவராஸ்யமாக இல்லை…ஆனாலும் நன்றாக இருந்தது" என்றார். மேலும் அந்த blog –ல் வந்த பேராசிரியர் முருகனைப் பற்றி மிகவும் புகழ்ந்து பேசினார்.
நான் இப்போ ஒரு விசயம் சொல்கிறேன்……மிகவும் ஆச்சரியப்படுவீர்கள் எனக் கூறிவிட்டுச் சொல்ல ஆரம்பித்தேன்.
"சூசையம்மாள் ஒரு ஏழைப் பெண். வீட்டு வேலை செய்து தான் தன் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தாள். தனது 50 வயதில் ஒரு வீட்டில் வேலைக்குச் சேர்ந்தாள். 18 வருடம் வேலை பார்த்த அவள் வயோதிகம் காரணமாக அதன்பின் வேலைக்குச்செல்வதை நிறுத்தி விட்டாள்.
ஒரு மாதம் கடந்தது .சூசையம்மாள் வீடு தேடிப் போய் 500 ருபாய் கொடுக்கிறார் அந்த நல்ல மனதுக்குச் சொந்தக்காரர். இது எல்லா மாதமும் தொடர்கிறது.சூசையம்மாள் தன் வசிப்பிடத்தை வள்ளியூர் பக்கம் உள்ள தளபதிசமுத்திரம் (மேலூர்) என்ற ஊருக்கு மாற்றி விட்டாள். அதனால் மாதம் தோறும் கொடுக்கும் 500 ருபாய் கொடுப்பதில் சற்று சிரமம் ஏற்பட்டது.
வள்ளியூர் அருகே உள்ள அஞ்சல் அலுவலகத்தில் சூசையம்மாள் பெயருக்கும் அவரது சகோதரி பெருக்கும் ஒரு இலட்சம் ருபாயை 6 வருடத்திற்கு Deposit பண்ணி , Pass book –ஐ அவர்களிடமே கொடுத்தார்.
அதில் கிடைக்கும் மாதவட்டியை சூசையம்மாளே வாங்கி வாழ்ந்து வருகிறாள்."
'அந்த நல்ல மனம் கொண்ட மனிதன் முருகன் தானே…….' சார் கேட்டார்.
'ஆம் பேராசிரியர் முருகன் தான்'
No comments:
Post a Comment