Wednesday, September 26, 2012

எழுபதில் எழுதிய ஒரு கடிதம்

காலமெலாம் கரைக்காணாக் கடலிலே
கழித்திடும் மீனவன் தன் வாழ்விலுமோர்
களிப்புணர்ச்சி உண்டென்பது உண்மை
அந்தத் தொழில் செய்வோன் அடையும் ஆனந்தம் கூட
எந்தன் உள்ளத்தில் இல்லையே நண்பா !

வரும் வரும்  இன்னும் சில நாளிலே
தரவும் செய்யும் நல்லதொரு பலனை
என்றெண்ணியபடி அஞ்சலகம் சென்று
என்றும் நின்றிருப்பேன் ஓலைதனை எதிர்நோக்கி
இது நாள் வரை வந்திடவும் இல்லை
அது ஒரு நாளும் வாராதோ  என எண்ணியே
ஒதுங்கி ஓய்ந்தும் போய் விட்டேன் நண்பா

உன் கவித்துவ கடிதம் கண்டேன்
கவியெழுத ஒரு கண்ணதாசன்  தான் என்றிருந்த
புவிதனில் அந்நிலைமை தனை மாற்றிடவே  வந்துதித்த
பொன்னன் நானுட்பட ராம தனத்தோடு வேதா நீயும்
சேர்ந்ததை எண்ணித் தமிழ்த் தாய் மகிழ்கின்றாள்

சோதனை எனக்கு வேதனை அப்பாவுக்கு
எதனால்  மேலும் படிக்க முடியவில்லை
படித்திட துடித்தாலும் மனதிலேன்னவோ
மடியாய் இருக்கு பயமாவும் இருக்கு
பெற்ற வயிறும் பெற்றவன் முகமும்
வாடிடுவதால் படிப்பெனும் பெருஞ்சுமையை
மறுபடியும் சுமக்க இருக்கின்றேன்

வருத்தம் என் நெஞ்சில் ..... வருமா எனக்கு படித்தம்
வகுத்தவன் வழி காட்டுவான் .... வருவேன் அப்போது
விழித்திருப்பேன் ....மறுமுறை வீழ மாட்டேன்.....
உன் விழியும் என்னைக் காக்கும் என்பதால்
உன்னிடமே வருவேன் நான்.


இந்த வரிகள் என் நண்பன் ஆலப்புழையில் இருக்கும்போது  நான் எழுதிய கடித வரிகள். முதல் ஆண்டு தேர்வு எழுதாமல் ஆலப்புழையில் இருந்து ஊருக்கு வந்தபின்  அவனுக்கு எழுதிய கடிதம். அவன் பெயர்  வேதாசலம்  .வங்கியில் வேலை பார்த்தவன் .... மற்ற நண்பன்கள் ராமநாதன்,தனம் மருத்தவர்கள்.

No comments:

Post a Comment