Wednesday, September 5, 2012

இந்துக் கல்லூரியின் இனிய வைர விழா

மாதங்கள் சில மழை இல்லாத மாதங்களாக இருந்தால் மனிதன் அவதிப் படுவதும்  அதனை பற்றி அங்கலாய்ப்பதுவும்  பருவகால மாற்றத்தை அனுபவிக்கும் போதெல்லாம் நடக்கும் விஷயம். ஒரே வார்த்தைப் பிரயோகம்  தான். ஒவ்வொருதடவை வெயில்கொடுமையை உணரும் போதும்  அனைவரும் பேசுவது  " சேச்ச என்னா வெயில் .இந்த வருஷம் வெயில் கொஞ்சம் கூடுதல் தான் " ........

ஆனால் உண்மையிலேயே இந்த வருடம் வெயிலும் சற்று அதிகம் தான். மழை இல்லாமல் இருந்ததும் எங்கள் பகுதியில் உள்ளவர்களின் மனதையும் வாட்டி வதைத்தது . மழை  வேண்டும் என கடுக்கரைத் தம்பிரான் கோவிலில் பாயசம் வைப்பு எனும் பூஜையும் நடந்தது.  ஏனோ ! வருண பகவான்  கண்ணா மூச்சி  விளையாடிக்கொண்டே இருந்தார். வானத்தினை தினமும் ஏக்கத்துடன் பார்ப்பது அன்றாட வழக்கமாகி விட்டது

இந்த நிலையில் இந்துக்கல்லூரியில்  ஆகஸ்டு  மாதக் கடைசியில் 30,31 -ஆம் தேதிகளில்  வைர  விழா    நடத்தவேண்டும் என திட்டமிட்டு அதற்கான ஆரம்பக்கட்ட பணி தொடங்கியது. விழாவில் கலந்து கொள்ள பிரமுகர்களை அழைக்கும் பொருட்டு சென்னை சென்று திரும்பியவர்கள் தேதி மாற்றத்தோடு வந்தார்கள். செப்டம்பர் மாதம் ஒன்று, இரண்டு தேதிகளில் அதாவது சனி ஞாயிற்றுக் கிழமைகளில்   விழா   நடத்துவதென   தீர்மானிக்கப்பட்டது .

பலருக்கும் இந்த மாற்றம் சலிப்பையே ஏற்படுத்தியது.  காரணம்   அந்த இரண்டு நாள்களும் விடுமுறை நாட்கள் என்பதுவே

ஆகஸ்டு மாதம் விழாப்  பந்தல் --மிக அழகான  பிரமாண்டமான பந்தல் நிர்மாணிக்கப்பட்டது.  கலையரங்கில் நின்று பார்த்தால் கல்லூரி மைதானம் மிகப் பெரியதாக இருந்ததால் அந்தப் பெரிய பந்தல் சிறியதாக ஆனால் மிக அழகாக கண்களுக்குத் தெரிந்தது.

விழா நாள் நெருங்கிற்று . மழையும் சிணுங்க ஆரம்பித்தது .சின்னதாக ஆரம்பித்த மழை விழாவுக்கு முந்தின நாள் கொட்டித் தீர்த்தது. முன்னிரவிலும் மழை ஓயவில்லை. இது என்ன விளையாட்டுக்  கடவுளே என்று எல்லோருமே நொந்து போயினர். வர வேண்டும் மழை என ஏங்கிய மனம், மழையே போ...போ எனக் கதறியது . விடிந்தால் விழா ...... மைதானமே நீர்க்காடாகி விடுமே !  பதறிய மனத்தோடு அந்த இரவு போய் காலை மலர்ந்ததும் வீட்டின் வெளியே வந்து வானத்தை அண்ணாந்து பார்த்தேன். என் முகமும் மலர்ந்தது. நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான்   ஆனால் ஒருபோதும் கைவிட மாட்டான்  என்கிற சினிமா வசனம் ரீங்காரமிட்டு ஒலித்தது . சூரியன் சந்திரன் போல் குளுமையைத் தந்து கொண்டிருந்தான் . மழையை, சற்றே தள்ளி இரும் பிள்ளாய் ..... என்பிள்ளைகளை மன வேதனைப் படுத்தாதே ..... என்று சொன்னது யாராய் இருக்க முடியும் எங்கள் கல்லூரிப் பிள்ளையாரைத்தவிர .....

இரண்டு நாள் விழா மிக சிறப்பாய் முடிந்தது.

என்னைக் கவர்ந்தது  எது ? என்னையே கேட்டேன் ..... என்னைக் கவராதது எதுவுமே இல்லை. இது உண்மை.  நான் புகழ்ந்துரைத்தால்   அதற்கு வேறு அர்த்தம் கற்பிக்கப்படும்... அதனால் மற்றவர்கள் என்னிடம் கூறியதையும் பதிவு செய்வது நல்லது என நினைக்கிறேன்.

காலையில் கல்லூரிக்குள் நான் வந்ததும் ,என்னை அறியாமல் விநாயகர் கோவில் சென்று வணங்கி பின் விழா நடக்கும் மேடையழகை ரசித்து மேடையில் நின்ற வாறே  ஆளில்லா அரங்கத்தின் அழகை ரசித்து படமும் பிடித்து மகிழ்ந்தேன். வைரவிழாக் கட்டிடத்தில் பூஜை நடந்த விவரம் அறிந்து அங்கும் போய் ,அந்த உயரமான கட்டிடத்தில் நின்று கொண்டு மைதானத்தினை அரங்கத்தோடு இணைத்து படம் பிடித்தேன்.

சிங்கார் மேளம் முழங்கிக் கொண்டே இருந்தது. அமைச்சரும் அதிகாரியும் , தலைவர் ,முதல்வர் மற்றும் அனைவராலும் வரவேற்கப்பட்டனர். மேடைக்கு நேராகச் சென்றனர்.

கூட்டம் எங்கள் துணைத்தலைவர் திரு. கோபாலன் பாடிய தமிழ் வாழ்த்துடன் ஆரமபம் ஆனது.  முதல்வரின்  வரவேற்புரையும், பேராசிரியர் ஹரிஹரனின் விருந்தினர் அறிமுகப் பேச்சும் தெளிவாக இருந்தது..தலைவர் விளக்கமான தலைமையுரை ஆற்றினார். வைரவிழாக்கட்டிடம் அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது. உயர் கல்வித்துறைச் செயலாளர் தமது உரையில் அமைதி காக்கும் மாணவர் பற்றிக் குறிப்பிட்டு ஒரு குடும்ப விழாவில் தான் பங்கேற்பது போன்ற உணர்வுடன் இருப்பதாகக் குறிப்பிட்டார். சட்ட மன்ற உறுப்பினரின் உரை சற்று வித்தியாசமாக இருந்தாலும் ரசிக்கும்படியாகவே இருந்தது. செயலர் நன்றி கூற கூட்டம் முடிந்து விருந்து ஆரம்பம் ஆனது.

விருந்திற்குப் பின் கலை நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றது.


மாணவர் நலனும் நாம் பிறந்து வளர்ந்த நாடும்   நன்றாக இருக்கவேண்டும் என்ற  சிந்தனை கொண்ட ,கல்லூரி மீது  அதிக பற்று கொண்ட ஒரு  பொருளாதாரப்    பேராசிரியர்  சொன்னதை என் வரிகளில் எழுதுகிறேன் ...

இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் வைரவிழா கதாநாயகன்  இப்பொழுது தலைமையுரையாற்றுவார் என்று கூற, தலைவர்  தமது பேச்சினை  ஆரம்பிக்கும்போது ," கதாநாயகன்   மட்டுமே சோபித்தால் படம் சொதப்பிவிடும் . இங்கு எல்லோருமே கதாநாயகர்களே " என தெளிவாகச் சொன்னது மிகவும் ரசிக்கும் படியாக இருந்தது.

வருண பகவானுக்கு நன்றி என்று ஆரம்பித்து அத்தனை பேருக்கும் நன்றி கூறியதும் நன்றாக  இருந்தது. 

ஓய்வு  பெற்ற ஆசிரியர்களைக்  கௌரவிக்கும்  விதமாக  தலைவரே  தமது வயதினையும் பொருட்படுத்தாமல் மேடையில் இருந்து கீழே இறங்கி வந்து  நினைவுப்   பரிசைக் கொடுத்தது தம்மை மட்டுமல்ல  வந்திருந்த அனைவரையும்  மிக அதிகமாகவே நெகிழச் செய்து விட்டது.

மாணவர்களின் ஒழுக்கம் ,அவர்களின்  கலை நிகழ்ச்சிகள் , தேவராட்டம் அனைத்துமே தம்மை மகிழ்விக்க செய்ததாகவும் கூறினார். கல்லூரி   முதல்வரின் திறமையைப் பற்றியும் புகழ்ந்துரைத்தார் .

விருந்து உண்ண வந்தவர்களை அன்பாக உபசரித்தும் உணவு பருமாறியவர்களை வழிப்படுத்தலையும் செய்து கொண்டிருந்த கல்லூரிச் சங்க இயக்குனர்  திரு ஆறுமுகத்தின் சுறு சுறுப்பான அணுகுமுறையும்  வந்தவர்களின்   வயிறும் மனதும் நிரம்புவதாக இருந்தது.

இந்த விமர்சனங்களை எல்லாம் நான் எங்கள் கல்லூரித் தலைவர் திரு. ஆறுமுகம்பிள்ளையிடம்  சொன்னேன்.

அவர் சொன்னார். " நாம் வைரவிழா நடத்திட திட்டமிட்ட தேதியை ,அன்றே மாற்றியதும் கடவுள் தானே .......... "

அவன் அறியாததா... மழைவரும் தேதியினை அறிந்து , மாற்ற வைத்ததும்   தினமும்  காக்கும் விநாயகன்தானே .

இந்துக் கல்லூரியின் இனிய வைர விழா இறையருளால் இனிதாக முடிந்தது.

முதல்வர், ஆசிரியர்கள் , ஒடி ஓடி உழைத்த எங்கள் கல்லூரியின் பணியாளர்கள், மாணவர்கள்  என அனைவரின் பணிகளும் மிகவும் உயர்வாக இருந்தது .  இறையருள் அவர்கள் அனைவருக்கும் கிடைக்கவே
எனது வாழ்த்துக்கள் . இன்று ஆசிரியர் தினமல்லவா ........ அதனால் இந்த வாழ்த்து அவர்களுக்கு .

No comments:

Post a Comment