Saturday, September 8, 2012

சாவே ! நீ வீழ்வது எப்போது ?


என் வயது அறுபத்தைந்து ஆண்டுகள் நான்கு மாதங்கள். அவருக்கு 64 வயது. நானும் அவரும் ஒரே கல்லூரியின் ஆசிரிய நண்பர்கள்.

அவர் கே. வித்யாசாகர். இயற்பியல் ஆசிரியராகத் தன் பணிதனைத் தொடங்கி  வரலாற்றுதுறையில் பணிதனை முடித்தவர்.

அவர்  புதனன்று இரவு ரோட்டரி கூட்டத்திற்கு போவதற்காக கல்லூரி நிர்வாக அலுவலகத்தின் மாடிப் படிக்கட்டு வழியே இறங்கிப் போய்க்கொண்டிருந்தார். அந்தச் சமயத்தில்  என்னிடம் ,“ பொன்னப்பா நான் போறேன்....” என சொல்லிவிட்டுப் போனார். அது தான் அவர் பேசியக் கடைசிப் பேச்சு.

அடுத்த நாள் அவர் இல்லை இந்த உலகில்.  கேள்விப்பட்ட உடன் அடைந்த மனவேதனை..... அந்த இடத்தின் அனைவரின் அமைதி.....

ஒரு நாளா....இரண்டு நாளா---- 39 ஆண்டுகள் பழகிய நட்பல்லவா அவரது நட்பு.  நட்புக்கு மரணமில்லை.

வாஞ்சையோடு பழகும் குணம் கொண்ட; உதவி செய்வதைத் தன் மிக முக்கியமான குணமாகக் கொண்ட வித்தியாசமான மனிதர் அவர்.

தன் ஆணித்தரமான விவாதத்தில் தனியாளானாலும் துணிந்து சொல்வதில் அவருக்கு நிகர் அவரே. 

மிகச் சிறந்த மேடைப் பேச்சாளர். ரோட்டரி மாட்டச் செயலர்.என்.சி.சி மேஜர் . ஓய்வுக்குப் பின்னும் அவர் மேஜர்.

இந்துக் கல்லூரியை மிகவும் நேசித்த அவர் ,வரலாற்றுத் துறைக்கு தமது நூல்கள் அனைத்தையும் அளித்தவர். பத்து வருடங்களுக்கும் மேலாக கல்லூரி நிர்வாகத்தில் ஆசிரியர் என்ற முறையிலும் இயக்குனர் என்ற முறையிலும் பங்காற்றியவர்.

‘சாவே ! உனக்கு சாவே வராதா........ ” கண்ணதாசன் சொன்னது .

அறிவுக் கடல், அன்புக்கடல் ......அதனால் அவர் பெயரில் சாகரம். ,இன்று அவர் பால் மிக மதிப்பும் அன்பும் கொண்ட என் மகன் முருகன் பதித்த வரிகளை என் மகன் தினேஷ் தொலைபேசியில் வாசித்து எனக்குச் சொன்னபோது, நேற்றும் இன்றும் தேங்கி நின்ற ,அடக்கி வைத்திருந்த கண்ணீர் விம்மலோடு பொட்டித்திறந்து சிதறியபோது நான் தனிமையில் எனது அறையில்.......அந்த துளிகளே நண்பனுக்கு என் அஞ்சலி.

No comments:

Post a Comment