Tuesday, September 11, 2012

நட்புக்கும் உறவுக்கும் இடையே இன்னோர் ‘ஒன்று’

நான்கு நாட்கள் நகர்ந்து விட்டன நண்பனவன் போய்.  என் மனதினை விட்டு அகலாமல் இன்றும் என்னோடு பேசிக் கொண்டிருக்கிறானே!.என் காதுகளில் அவன் குரல் ஒலித்துக் கொண்டிருக்கிறதே! அவனது புகழ் பற்றிப் பேசும்போதெல்லாம் நாக்கு தடுமாறுகின்றதே!

அவர் பிறப்பால் இந்து பிராமணன். அந்த நாளில்... இறுதி ஊர்வலத்தில்..... பார்த்தால்....அவரது உறவினர்கள் அதிகம் பேர் இல்லை. அத்தனை பேரும் நண்பர்களே. முஸ்லீம் நண்பர்கள் காலத்தால் செய்ய வேண்டிய உதவிகளை செய்து கொண்டிருந்தனர்.

யாருமே... மனைவியோ மக்களோ பக்கத்தில் இல்லாத நிலையில் மூன்று தினங்கள் அவருடைய உயிர் நீங்கிய உடலைப் பாதுகாக்க முயற்சிகள் செய்தது அவரது நண்பர்களே.

கண்ணீரோடு காணப்பட்ட பிரபலமான டாக்டர்....... இரண்டு கைகளையே இழந்துவிட்டதாய் புலம்பிய ,பூனாவில் இருந்து பறந்து வந்த கிறிஸ்தவ நண்பர் சுந்தர்,.....எழுதிக் கொண்டே போகலாம்.

காடுவரை யாரோ ? -இந்தக் கேள்விக்கு பதில் நண்பர்கள் என்றும் சேர்த்துக் கொள்ளலாம்.

சுடுகாட்டில் தகனத்திற்கு முன் நண்பர்களும் உடலின் மீது அரிசி போட அழைக்கப் பட்டனர். இதனை இதற்கும் முன் எங்கும் பார்த்ததில்லை. நாங்கள் சிலரும் அந்த மரியாதை செய்யும் வாய்ப்பை தவறவிடாமல் உள்ளே போய் சுற்றி வந்தோம்.

அங்கு அந்த இடத்தில் ஓரமாய் இருந்த ,சடங்கைச் செய்து கொண்டிருந்த பிராமண வாத்தியார் ஏதோ புரியும்படியான மந்திரம் சொல்வது போல் இருக்கிறதே.... காதில் விழுவது மந்திரமா.... “ வித்யா சாகர் நல்லவர்.... அவருக்கு ஜாதிமதமே கிடையாது. எல்லோருக்குமே உதவி செய்பவர்...இப்படி ஒரு ஆளைப் பார்க்கவே முடியாது......” தொடர்ந்து நிறுத்தாமல் மந்திரம் போல் சொல்லிக் கொண்டே இருந்தார்.

இவை எல்லாமே புதியதாகவே இருந்தன.


வைரவிழா இரண்டாம் நாள் இறுதி நிகழ்ச்சியில்  எனது கையில் கேமராவுடன், இருந்த இடத்தில் இருந்தே மேடையில் நடை பெற்றுக் கொண்டிருந்த நிகழ்வுகளை நான் கேமராவில் பதிவு செய்து கொண்டிருந்தேன். ஒரு குரல், “ பொன்னப்பா......” கேட்டு எனது இடது பக்கம் திரும்பிப் பார்த்தேன். ராமகிருஷ்ணன்,ஆறுமுகப்பெருமாள் இருவருக்கும் இடையே வித்யாசாகர்... சிரித்த முகத்துடன் வித்யாசாகர்.... அதனையும் பதிவு செய்து கொண்டேன்.  பிரிந்து போவாரென யார் அறிவார் ? அதுதான் அவரது இறுதிப் படம் ....  அந்தப் படம்தனை பதிவு செய்து எழுதிய பிளாகில் அழகான முகம் கண்டு என் கண்கள் இன்றும் பனிக்கிறதே!

எத்தனையோ பேர் எனை விட்டுப் போனவர்கள் உண்டு. அவர்கள் மறைவு பாதித்ததுவும் உண்டு. வருத்தியதுவும் உண்டு. ஆனால் வித்தியாசாகரின் மறைவு அப்படியல்ல....நண்பனவன் மரணச்செய்தி கேட்டு அவன் நண்பனும்  என் வீட்டுக்கு வந்து துக்கம் தந்த சுமையை இறக்கி வைக்க என்னிடம் அவன் புகழ் பாடிச் செல்வது புதியதே.

நட்புக்கும் உறவுக்கும் இடையே இன்னோர் ‘ ஒன்றும் ’இருக்கிறது. அதற்கு என்ன பெயர்......?

தாங்கும் மனது இன்றில்லை என்னிடம்.  அதனால் அவன் நினைவு எனை விட்டு அகன்றிட காலம் சற்று அதிகமாகும்....... இரயில் நட்பாய் இருந்திருக்கக் கூடாதா...?   வேண்டாம்..... நட்பு என்பது  அதுவல்ல.

என் நினைவில் தினமும் அவன் வந்து போகட்டும்.  கண்களில் இருக்கும்வரை; கன்னங்களில் வழியும் நீர் அவனுக்கு அஞ்சலியாக இருக்கட்டும்..... வற்றுவதற்கு அதென்ன பழையாறா ?

No comments:

Post a Comment