Tuesday, December 18, 2012

கல்யாணக் கலாட்டாக்கள்.....

எனது மகளின் நிச்சயதாம்பூலம் நாகர்கோவில் ராமவர்மபுரம் பி.டி.பிள்ளை மண்டபத்தில் நடந்தது. பக்கத்தில் சுமங்கலி மண்டபம். அங்கும் அன்று ஒரு கல்யாண நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது.
 எனது வீட்டு நிகழ்ச்சிக்குப் பின் நடக்கும் விருந்துக்கு நான் அழைத்தவர்களில் முக்கியமான இருவர் என் கண்ணில் படவே இல்லை. அவர்கள் என்னுடன் கல்லூரியில் வேலை பார்க்கிறவர்கள்.
மத்தியானம் வந்து விடுவதாகச் சொன்னவர்கள் வரவில்லையா ?
 கல்லூரி அலுவலகத்துக்கு போனில் பேசி விவரம் கேட்டதில் அவர்கள் புறப்பட்டுப் போய் அரை மணிக்கூருக்கு மேல் ஆகிவிட்டதே.... !

என் கல்லூரி நண்பர் ஆறுமுகப்பெருமாளிடம்,“  நம்ம நடேசனும் அய்யனாப் பிள்ளையும் மண்டபம் எது எனத் தெரியாமல் திணறுகிறார்கள் என் நான் நினைக்கிறேன். கொஞ்சம் வெளியே போய் நின்று கொள்ளுங்கள்.....”

 நான் சொன்ன உடன் சத்தம் போட்டு சிரித்தார். சார் வாருங்கோ என என்னை அழைத்துப் போய் பி.டி.பிள்ளை மாடி மண்டபத்தில் இருந்து பக்கத்தில் உள்ள சுமங்கலி மண்டபத்தின் சாப்பாடு ஹாலைக் காட்டினார். அங்கே நான் தேடிய அந்த இருவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.


எனது மகள் திருமணம் சுமங்கலி மண்டபத்தில் நடந்தது. திருமணம் முடிந்து இரண்டு தினங்கள் ஆனபின் என்னுடன் வேலைபார்த்த பேராசிரியர் சுரேந்திரன்பிள்ளையை சந்தித்தேன்.

அது காலையில் நடக்கும் போது  நடந்த சந்திப்பு.

அவர், “ சார் !  பொண்ணு மாப்பிளையெல்லாம் எங்கே இருக்கிறார்கள் ?”

நான் பதில் சொல்லி முடிக்கக்கூட இல்லை. அவர் என்னிடம் , “ நான் கல்யாணத்துக்கு  சாயந்திரம் வந்தேன் உங்களைக் காணவே இல்லையே..... ஆறும்பிள்ளை சாரைக் காணவில்லை..... செயர்மேனைக் காணவில்லை...”

சரியான சமயத்தில் வரவேற்பு நிகழ்ச்சி தொடங்கி விட்டது. நான் வாசலில் நின்றுதான் அனைவரையும் வரவேற்றுக் கொண்டிருந்தேன்.... என்னை பார்க்காமல் இருக்கும் வாய்ப்பு இருக்கமுடியாதே......

அவர்,“ நான் உங்கள் மகளையும் மருமகனையும் பார்த்து ஆசீர்வதித்து விட்டு வரும்போது செல்லபெருமாளிடம் உங்களை எங்கே என்று கேட்டேன்... இன்னமும் வரவில்லை என்று சொன்னாரே...”

சார்...!  நீங்க எந்த மணடபத்துக்குப் போனீங்க....” நான் கேட்டேன்.

என்ன சார்.... இப்படிக் கேக்கறீங்க... பெருமாள் மண்டபத்துக்குத்தானே வந்தேன்.
நான் சிரித்தேன்....

சில முக்கியமான பெரியமனிதர் அடுத்த மண்டபத்திற்கு வரவேண்டியவர்....தவறுதலாக வந்து விட்டார்....ஆனாலும் தம்பதிகளை
ஆசீர்வதித்து விட்டுப் போனதும் என் மனதினை நெகிழச் செய்தது.

சமீபத்தில் டிசம்பர் மாதம் 10-ஆம் தேதி உடுப்பியில் எங்கள் உறவினர் வீட்டு மறுவீடு விருந்து சௌபர்ணிகா ஹாலில் நடந்தது.

ஆனால் சிலர் உடுப்பி என்றதும் எதனையும் பார்க்காமல் யாரிடமும் கேட்காமல் மாடியில் உள்ள சர்வமங்களா ஹாலில் போய் வேறொருவர் நடத்தும் விருந்தில் ......... இந்த நிகழ்வு தான் என் பழைய நினைவுகளக் கிளறியது.

இது போல் கலாட்டாக்கள்...... கல கலப்பாகவே இருக்கிறது....



Thursday, December 13, 2012

எனது மன்னர் பாலராமவர்மா......


கன்னியாகுமரி மாவட்ட மக்கள் திருவிதாங்கூர் மன்னர் ஆட்சியிலும் 1947-க்குப்பின் மக்கள் ஆட்சியிலும் வாழ்ந்து வந்தனர். மன்னர் ஆட்சி என்பது ஒருவர் நாட்டை ஆழும் ஆட்சி. இவருக்கு ஆலோசனைகள் கூறுவதற்கு சட்டசபை உண்டு. திவான் ஒருவர் மன்னருக்கு உதவியாக இருப்பார்.அவர் திவான் என்று அழைக்கப்படுவார். திவானாக இருந்தவர்களில் சர்.சி.பி.ராமசாமி ஐயரும் ஒருவர்.
 திருவிதாங்கூர் ஸ்ரீசித்திரைத் திருநாள் பாலராமவர்மா தமது 19-ஆவது வயதில் 1931-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மன்னராக மகுடம் சூட்டப்பட்டார்.கடல் கடந்து செல்வது மறுக்கப் பட்ட நிலையில் – அந்த மூடத்தனத்தை எதிர்த்து மேலை நாடுகளுக்குப் பயணம் செய்து அந்நாடுகளின் வளர்ச்சிதனைக் கண்டு வந்தார். 
கால காலமாக மூடநம்பிக்கையில் ஆழ்ந்திருந்த பல பழக்கங்களை அகற்ற முற்பட்டார். எல்லா ஜாதியினரையும் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்க ‘ஆலயப் பிரவேசனம்” என்ற சட்டத்தை அமல் படுத்தினார். இந்த சட்டத்தைக் கொண்டு வந்ததற்காக மகாத்மாவால் பாராட்டப்பட்டார்.
காசி சர்வகலாசாலை இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளித்து கௌரவித்தது. 2012 ஆம் ஆண்டு மாமன்னரின் நூறாவது ஆண்டு. 
இவர் தான் கடைசியாக திருவிதாங்கூர் ராஜ்ஜியத்தை ஆண்ட மன்னர். 1947-இல் இந்தியாவுடன் இணைந்தது. இணையும் பொழுது கேரளாவில் இருந்த நாஞ்சில்நாடு 1956-இல் தமிழகத்தோடு இணைந்தது.
நான் பிறந்த வருடம் 1947 ஏப்ரல் மாதம்.
 நான் பிறக்கும் போது எனது மன்னர் ஸ்ரீ சித்திரைத் திருநாள் பாலராமவர்மா

Wednesday, December 12, 2012

வேரை மறவாத அனந்தபுரத்தார் -அய்யாவு


கடுக்கரை, அனந்தபுரம் இரண்டு பேர்களும் ஒரு கிராமத்தின் பெயர்கள். .திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஒரு பகுதியான நாஞ்சில்  நாட்டின் முக்கிய கிராமங்களில் அனந்தபுரம் கிராமமும் ஒன்று.மன்னர் ஆட்சியிலும் சட்டசபை உண்டு. தகரவீட்டு திரு. மாதேவன்பிள்ளை  சட்டசபையில் ஒரு உறுப்பினர்.

அவரது ஒரே மகன் அய்யாவு . சென்னையில் ஓவியராக தனியார் கம்பெனியில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். கைரேகை பார்ப்பதில் , ஜாதகம் ,எண் சாஸ்திரம் -இவைகளிலும் தேர்ச்சி பெற்றவர்.
மிகவும் அன்பாகப் பேசும் இயல்புடையவர். தாமும் தந்தையைப் பின்பற்றி
மக்களுக்கு தொண்டு செய்யவேண்டும் என எண்ணினார் . அதற்கான ஒரு அறக்கட்டளையை  பதிவு செய்ய விரும்பி 2011-ல் "அனந்தபுரத்தார்  இசை,கலை அறக்கட்டளை " என  பதிவு செய்தார்.

கழிந்த வருடம் சேலத்தில் மாற்றுத்  திறனாளிகளுக்கு தேவையான உதவிகளை அறக்கட்டளை வழி செய்தார்.

  தான் பிறந்த ஊர் மக்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடத்தவும்  கலையில் ஆர்வம் உள்ளோருக்கு பரிசுகள் கொடுக்கவும் , இந்தவருடம் 16-ஆம் தேதியன்று ஒரு நிகழ்ச்சி அனந்தபுரம் பள்ளிக்கூடத்தில் நடைபெறவிருக்கிறது.

ஒரு ஏழைத்  தவில் வித்வானுக்கு, இலவசமாகத் தவில் ஒன்றும் கொடுக்கிறார் .
அனைவரும் பாராட்ட வேண்டிய  செயல் இது. 

Tuesday, December 4, 2012

ஞாபக சக்தி வளர்ந்திட எளிய வழிகள்



 திருமண வரவேற்பிற்கு போய் திரும்பும்போது எல்லோருக்கும் கொடுத்த அச்சடித்த தாள் வித்தியாசமாக இருந்ததை உணர்ந்தேன். படித்துப் பார்த்தேன்.
அதனை இத்துடன் பதிவு செய்திருக்கிறேன்.

   TIPS TO IMPROVE YOUR  MEMORY POWER & SKILL

To improve the memory power and skill of a person the right side of the brain should be activated. This can be achieved by doing the following exercises using LEFT HAND. (Left handers should do this with right hand).
Write
   1.  A  to Z           2. Z   to   A            3.   A= 1, B = 2 ………Z= 26          4.  Z=26, Y = 25, ……A=1    
 5.     i1  to 100       ii.   100  to  1 
  6. Write the ALPHABETS in your mother tongue  in the same way.(m>M> .../) (f.q>r.d)

OTHER EXERCISES:
7. Try to create as many new words (in capital letters)as possible from the following words.
                                         [Use Right or Left hand as you do normally]
TEAM, PLANETS, YESTERDAY & OBSERVATION   ( 12, 65, 100 & 250 words  respectively can be formed)
8. Close your eyes and then draw a circle.
9. Everyday try to learn a new ENGLISH word with its meaning.
10.Everyday try to remember a new phone number.

N.B:SCHOOL GOING CHILDREN  TO ELDERS OF ANY AGE CAN PRACTICE THESE EXERCISES .

______________________________________________________________________________
Courtesy :            S.DEIVANAYAGAM, M.Sc.,(I.T) C.A.I.I.B.,               
                           Mob:  9442583040
.                       
Compiled By :     Prof.S.MURUGAN
                           Mob:  9443313526  

                                                                                                                 

Saturday, December 1, 2012

மறக்க முடியாத யாத்திரை

வாடிய பயிர் போல் எல்லோர் முகமும் காணப்பட்டது. நேரம் போகப் போக மழைத் துளி பட்டால்போல் முகங்கள் இறுக்கத்தில் இருந்து சற்று மாறத் தொடங்கியது.வயறு பசித்தாலும் சாப்பிட மனமில்லாமல் சாப்பிட்டோம் .

ரயில் சங்கீத ஒலியை  ஒரே தாளத்துடன் ரீங்காரமிட்டுக் கொண்டே  சென்று கொண்டிருந்தது. வெளியே  மழை பெய்தசுவடுகள் ஆங்காங்கே  தெரிந்தன.

காசிக்கு சென்றால் எதையாவது விடவேண்டுமே .....

நான் காசிக்கு வந்து போவது இது இரண்டாம்  முறை. போன தடவை  ஒன்றை விட்டாச்சுல்லா.........

ஒருவர் சொன்னது . நான் பித்தளை கப்பில் காப்பி குடிப்பதை விட்டு விடுவேன்.

நான்  திருக்கார்த்திகை அன்று வாழை இலையில் செய்யும் பணியாரத்தை சாப்பிடமாட்டேன்.  அதை  பூவரசு இலையில்  சாப்பிடுவேன் .....

இதனையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ஒரு பெரியவர் சொன்னார் .கெட்ட  பழக்கத்தை தான் விடணும் ..... ஆகாரத்தை  விட யாரும் சொல்லல்ல .

வியாழன் இரவு வந்தது.பிரயாணக் களைப்பு அனைவரின் முகத்திலும் தெரிய ஆரம்பித்தது. தூங்க ஆரம்பித்தோம் ..... மறுநாள் மதியம் இரண்டரை மணி. மிக சரியான நேரத்தில் ரயில் சென்னை மைய நிலையத்தை அடைந்தது.

எழும்பூர் சென்றோம். இரவு 7.30 அனந்தபுரி ரயிலுக்காக காத்திருந்தோம். மீனா திரவியம் எங்கள் பத்து பேருக்கு இடியாப்பம் கொண்டு வந்தாள்.
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்று சொல்லும் அளவுக்கு எங்கள் மனம் இருந்தது.
இரவு நேரப்பயணம் இனிதாக முடிந்தது. நால்வர் ஆரல்வாய்மொழியில் இறங்கினார்கள். நாகர்கோவிலில் நாங்கள் இறங்கி ,மறக்காமல் முருகதாஸ் சாமியிடம் விடை பெற்று வீடுவந்து                 சேர்ந்தோம்.

 ஒன்பது நாட்கள் தென் கோடியில் இருந்து வடகோடியில் உள்ள காசிக்கு சென்று வந்தது இரண்டாம் முறையெனினும் முன்னதை விட என் மனதுக்கு மிகவும் பிடித்திருந்தது.

மக்களின் வாழ்க்கை முறை, ஒரு சிறிய கோவிலை வைத்துக் கொண்டு அனைத்து மக்களும் வளமுடன் வாழ்கிறார்கள் என்றால் ஆன்மீகம் நம்மை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது என்பது தானே பொருள்.

கடவுளின் தேசமே இந்தியா தான் என நான் எங்கோ படித்த ஞாபகம்.இங்கு வயோதிகம் பிரச்சினையே
இல்லை. வறுமை அகல அன்னதானம் எங்கும் உதவி செய்கிறது.
வறுமை ஒரு காலத்தில் நம் தேசத்தில் இருந்திருக்கும். ஆனால் இன்று இல்லை. அரசு செய்ய வேண்டிய அனைத்து நல்ல காரியங்களைக் கோவில்கள் செய்து கொண்டிருக்கின்றன. கோவில்கள் இருக்கும் இடத்தில் வறுமை இல்லை. மனதில் நிம்மதி கிடைப்பதும் இங்கே தான்.

உடல் நோய் போக மருத்துவ மனைகள்.
 மன நோய் அகல தெய்வம் இருக்கும் கோவில்கள்.

மறக்க முடியாத ஆன்மீக சுற்றுலா.
முத்து,குமரேசன்,முருகன்,ராமு
படத்தில் இருக்கும் இவர்கள்  எங்கள் அனைவருக்கும் உதவிக்கரம் நீட்டியவர்கள். இவர்களையும் என்னால் மறக்க முடியாது.  இந்த வரிகளைப் படிப்பவர்களும் எல்லா நலமும் பெற்று வாழ இறைவனை வணங்குகிறேன்.

வாழ்க வளமுடன்..... நலமுடன்.....



ஓர் இதய அஞ்சலி----- யாத்திரையின் நடுவில்


ஒன்றாம் தேதி அதிகாலை ...... ஒரு பெண்ணின்  அழுகுரல் என் காதில் விழுந்தது .அதிர்ச்சியில்  எழுந்து பார்த்தேன். விசயத்தைப் புரிந்து கொண்டேன் ..நதியில்  துள்ளி ஓடும் மீன்களில்  ஒன்று   தரையில் தவறி விழுந்து துடி துடித்தது  போல் , எங்களுள் ஒருவர் உயிர் ஓடும் ரயிலில் பறந்து விட்டது. இரவிபுதூர் குழுவில் வந்தவர். அவரது அன்பான           நடவடிக்கையால் அனைவரையும் அவர் எல்லோருக்குமே அறிமுகமானவராய் இருந்தார் ....தாய் அருகில் இருக்கும்போது நடந்த சோகம் எல்லோரையும் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது ...... பறக்கும் விமானத்தில் ,ஓடும் ரயிலில் ,பஸ்ஸில் ..... ஏன்  இந்தக்   காலன் வருகிறான்.
இந்த சோகத்திலும் அவரது தாய் உட்பட உறவினர்கள் ,ஊருக்கு செய்தியை அறிவித்த முறை , குழுவில் உள்ள அத்தனை பெரும் உதவி செய்ததைக் கூறி யாருக்கும் எந்த மன நெருடல் வராதவாறு சொன்ன பாங்கு என்னை உலுக்கியது. என் இதயத்தை நனைத்தது. கண்களில் கண்ணீர் . என்ன செய்ய......

பாதிவழியில் அவரது உடல் ரயில் பயணத்தை முடித்துக் கொண்டது. பின்னர் சட்டபூர்வ நடைமுறைகள் முடிந்து விமானத்தில் சொந்த ஊருக்கு .........