Tuesday, December 18, 2012

கல்யாணக் கலாட்டாக்கள்.....

எனது மகளின் நிச்சயதாம்பூலம் நாகர்கோவில் ராமவர்மபுரம் பி.டி.பிள்ளை மண்டபத்தில் நடந்தது. பக்கத்தில் சுமங்கலி மண்டபம். அங்கும் அன்று ஒரு கல்யாண நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது.
 எனது வீட்டு நிகழ்ச்சிக்குப் பின் நடக்கும் விருந்துக்கு நான் அழைத்தவர்களில் முக்கியமான இருவர் என் கண்ணில் படவே இல்லை. அவர்கள் என்னுடன் கல்லூரியில் வேலை பார்க்கிறவர்கள்.
மத்தியானம் வந்து விடுவதாகச் சொன்னவர்கள் வரவில்லையா ?
 கல்லூரி அலுவலகத்துக்கு போனில் பேசி விவரம் கேட்டதில் அவர்கள் புறப்பட்டுப் போய் அரை மணிக்கூருக்கு மேல் ஆகிவிட்டதே.... !

என் கல்லூரி நண்பர் ஆறுமுகப்பெருமாளிடம்,“  நம்ம நடேசனும் அய்யனாப் பிள்ளையும் மண்டபம் எது எனத் தெரியாமல் திணறுகிறார்கள் என் நான் நினைக்கிறேன். கொஞ்சம் வெளியே போய் நின்று கொள்ளுங்கள்.....”

 நான் சொன்ன உடன் சத்தம் போட்டு சிரித்தார். சார் வாருங்கோ என என்னை அழைத்துப் போய் பி.டி.பிள்ளை மாடி மண்டபத்தில் இருந்து பக்கத்தில் உள்ள சுமங்கலி மண்டபத்தின் சாப்பாடு ஹாலைக் காட்டினார். அங்கே நான் தேடிய அந்த இருவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.


எனது மகள் திருமணம் சுமங்கலி மண்டபத்தில் நடந்தது. திருமணம் முடிந்து இரண்டு தினங்கள் ஆனபின் என்னுடன் வேலைபார்த்த பேராசிரியர் சுரேந்திரன்பிள்ளையை சந்தித்தேன்.

அது காலையில் நடக்கும் போது  நடந்த சந்திப்பு.

அவர், “ சார் !  பொண்ணு மாப்பிளையெல்லாம் எங்கே இருக்கிறார்கள் ?”

நான் பதில் சொல்லி முடிக்கக்கூட இல்லை. அவர் என்னிடம் , “ நான் கல்யாணத்துக்கு  சாயந்திரம் வந்தேன் உங்களைக் காணவே இல்லையே..... ஆறும்பிள்ளை சாரைக் காணவில்லை..... செயர்மேனைக் காணவில்லை...”

சரியான சமயத்தில் வரவேற்பு நிகழ்ச்சி தொடங்கி விட்டது. நான் வாசலில் நின்றுதான் அனைவரையும் வரவேற்றுக் கொண்டிருந்தேன்.... என்னை பார்க்காமல் இருக்கும் வாய்ப்பு இருக்கமுடியாதே......

அவர்,“ நான் உங்கள் மகளையும் மருமகனையும் பார்த்து ஆசீர்வதித்து விட்டு வரும்போது செல்லபெருமாளிடம் உங்களை எங்கே என்று கேட்டேன்... இன்னமும் வரவில்லை என்று சொன்னாரே...”

சார்...!  நீங்க எந்த மணடபத்துக்குப் போனீங்க....” நான் கேட்டேன்.

என்ன சார்.... இப்படிக் கேக்கறீங்க... பெருமாள் மண்டபத்துக்குத்தானே வந்தேன்.
நான் சிரித்தேன்....

சில முக்கியமான பெரியமனிதர் அடுத்த மண்டபத்திற்கு வரவேண்டியவர்....தவறுதலாக வந்து விட்டார்....ஆனாலும் தம்பதிகளை
ஆசீர்வதித்து விட்டுப் போனதும் என் மனதினை நெகிழச் செய்தது.

சமீபத்தில் டிசம்பர் மாதம் 10-ஆம் தேதி உடுப்பியில் எங்கள் உறவினர் வீட்டு மறுவீடு விருந்து சௌபர்ணிகா ஹாலில் நடந்தது.

ஆனால் சிலர் உடுப்பி என்றதும் எதனையும் பார்க்காமல் யாரிடமும் கேட்காமல் மாடியில் உள்ள சர்வமங்களா ஹாலில் போய் வேறொருவர் நடத்தும் விருந்தில் ......... இந்த நிகழ்வு தான் என் பழைய நினைவுகளக் கிளறியது.

இது போல் கலாட்டாக்கள்...... கல கலப்பாகவே இருக்கிறது....



No comments:

Post a Comment