Saturday, December 1, 2012

மறக்க முடியாத யாத்திரை

வாடிய பயிர் போல் எல்லோர் முகமும் காணப்பட்டது. நேரம் போகப் போக மழைத் துளி பட்டால்போல் முகங்கள் இறுக்கத்தில் இருந்து சற்று மாறத் தொடங்கியது.வயறு பசித்தாலும் சாப்பிட மனமில்லாமல் சாப்பிட்டோம் .

ரயில் சங்கீத ஒலியை  ஒரே தாளத்துடன் ரீங்காரமிட்டுக் கொண்டே  சென்று கொண்டிருந்தது. வெளியே  மழை பெய்தசுவடுகள் ஆங்காங்கே  தெரிந்தன.

காசிக்கு சென்றால் எதையாவது விடவேண்டுமே .....

நான் காசிக்கு வந்து போவது இது இரண்டாம்  முறை. போன தடவை  ஒன்றை விட்டாச்சுல்லா.........

ஒருவர் சொன்னது . நான் பித்தளை கப்பில் காப்பி குடிப்பதை விட்டு விடுவேன்.

நான்  திருக்கார்த்திகை அன்று வாழை இலையில் செய்யும் பணியாரத்தை சாப்பிடமாட்டேன்.  அதை  பூவரசு இலையில்  சாப்பிடுவேன் .....

இதனையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ஒரு பெரியவர் சொன்னார் .கெட்ட  பழக்கத்தை தான் விடணும் ..... ஆகாரத்தை  விட யாரும் சொல்லல்ல .

வியாழன் இரவு வந்தது.பிரயாணக் களைப்பு அனைவரின் முகத்திலும் தெரிய ஆரம்பித்தது. தூங்க ஆரம்பித்தோம் ..... மறுநாள் மதியம் இரண்டரை மணி. மிக சரியான நேரத்தில் ரயில் சென்னை மைய நிலையத்தை அடைந்தது.

எழும்பூர் சென்றோம். இரவு 7.30 அனந்தபுரி ரயிலுக்காக காத்திருந்தோம். மீனா திரவியம் எங்கள் பத்து பேருக்கு இடியாப்பம் கொண்டு வந்தாள்.
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்று சொல்லும் அளவுக்கு எங்கள் மனம் இருந்தது.
இரவு நேரப்பயணம் இனிதாக முடிந்தது. நால்வர் ஆரல்வாய்மொழியில் இறங்கினார்கள். நாகர்கோவிலில் நாங்கள் இறங்கி ,மறக்காமல் முருகதாஸ் சாமியிடம் விடை பெற்று வீடுவந்து                 சேர்ந்தோம்.

 ஒன்பது நாட்கள் தென் கோடியில் இருந்து வடகோடியில் உள்ள காசிக்கு சென்று வந்தது இரண்டாம் முறையெனினும் முன்னதை விட என் மனதுக்கு மிகவும் பிடித்திருந்தது.

மக்களின் வாழ்க்கை முறை, ஒரு சிறிய கோவிலை வைத்துக் கொண்டு அனைத்து மக்களும் வளமுடன் வாழ்கிறார்கள் என்றால் ஆன்மீகம் நம்மை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது என்பது தானே பொருள்.

கடவுளின் தேசமே இந்தியா தான் என நான் எங்கோ படித்த ஞாபகம்.இங்கு வயோதிகம் பிரச்சினையே
இல்லை. வறுமை அகல அன்னதானம் எங்கும் உதவி செய்கிறது.
வறுமை ஒரு காலத்தில் நம் தேசத்தில் இருந்திருக்கும். ஆனால் இன்று இல்லை. அரசு செய்ய வேண்டிய அனைத்து நல்ல காரியங்களைக் கோவில்கள் செய்து கொண்டிருக்கின்றன. கோவில்கள் இருக்கும் இடத்தில் வறுமை இல்லை. மனதில் நிம்மதி கிடைப்பதும் இங்கே தான்.

உடல் நோய் போக மருத்துவ மனைகள்.
 மன நோய் அகல தெய்வம் இருக்கும் கோவில்கள்.

மறக்க முடியாத ஆன்மீக சுற்றுலா.
முத்து,குமரேசன்,முருகன்,ராமு
படத்தில் இருக்கும் இவர்கள்  எங்கள் அனைவருக்கும் உதவிக்கரம் நீட்டியவர்கள். இவர்களையும் என்னால் மறக்க முடியாது.  இந்த வரிகளைப் படிப்பவர்களும் எல்லா நலமும் பெற்று வாழ இறைவனை வணங்குகிறேன்.

வாழ்க வளமுடன்..... நலமுடன்.....



No comments:

Post a Comment