Friday, December 12, 2014

சிங்கப்பூர்.....1

மாலைப்பொழுதில் ஒரு சனிக்கிழமையன்று நானும் எனது அத்தையின் மகனும் என் அத்தானுமான இந்துக்கல்லூரித் தலைவர் திரு.பெ. ஆறுமுகம்பிள்ளை அவர்களும் நடக்கவேண்டும் என்பதற்காக நடந்து போய்க்கொண்டிருந்தோம்......பேசிக்கொண்டும் போனோம்....
சிங்கப்பூருக்கு நாம் இருவரும் போலாமா ? எனக் கேட்டார்.

அங்கெல்லாம் போகணும்னா பாஸ்போர்ட் வேணுமே. உங்களிடம் இருக்கா ?

அது  உன் அக்கா இருக்கும்போதே எங்க இருவருக்கும் தட்கல் முறையில் பாஸ்போர்ட் எடுத்தோம்லா என்று சொல்லி முடிக்குமுன்னமே நான் ஆமாம்....தெரியுமே....மறந்துபோச்சு.....என்றேன்.

என்னிலும் பத்து வயது அதிகமான அவர் கேட்கும்போது என் மனநிலை மாறுபட்டு இருந்தாலும் சிங்கப்பூர் போய்வர என் சம்மதத்தை தெரிவித்தேன்.

அதற்கான வேலைகள் தங்கு தடையின்றி தொடர்ந்தது.....விசாவும் வந்தது.ஒரு நபருக்கு விசாவுக்கான கட்டணம் 50 சிங்கப்பூர் டாலர். ஒரு சிங்கப்பூர் டாலரின் இந்திய ருபாய் 47.7. ஆனால் ஒரு ட்ராவல்ஸ் மூலம் எல்லா செலவும் உட்பட 2400 ருபாய். கொடுத்து  விசா வாங்கினோம்....போக வர டிக்கட் 31300/- சிங்கப்பூர் செல்ல திருவனந்தபுரத்தில் இருந்து எங்கும் இறங்காமல் போகும் விமானம் ஒன்றே ஒன்று தான் உண்டு. அது சில்க் ஏர்(SILK AIR). மற்றபடி இலங்கை வழி பயணம் செய்தால் இரண்டு விமானங்களில் பயணம் செய்யணும்... இரண்டாவது பயணம் இலங்கையில் இருந்து வேறோர் விமானத்தில் பயணிக்கணும்...நேர விரயம் கூடுதலாகும்..... நாங்கள் நாலரை மணி நேரப் பயணத்தை விரும்பியதால் ....நினைத்த  உடனே
சிங்கப்பூர் செல்ல விரும்பியதால்.....கூடுதல் கட்டணம் கட்ட வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானோம்.

திருவனந்தபுரம் வெளிநாட்டு விமானதளத்திற்கு (TERMINAL II )நவம்பர் 15-ஆம் தேதி சனிக்கிழமை இரவு 7 மணிக்குவந்து சேர்ந்தோம்.  காரில் ஜெயராம் ஓட்ட,...எங்கள் பயணம் நாகர்கோவிலில் மாலை 4 .30 மணியளவில் தொடங்கியது......வழியனுப்ப நெய்வேலியில் வேலைபார்த்த மைத்துனர் கிருஷ்ணன் எங்களுடன் வந்தார்,,,,

Check in அறிவிப்பைக் கண்டு நாங்கள் உள்ளே போனோம்......
கூட்டமே  இல்லாதது கண்டு சற்று வியந்தேன்.......இதற்கு முன் வேறொரு வெளிநாட்டுப் பயணத்தின் அனுபவம் வேறு மாதிரியாக இருந்ததால் அந்த வித்தியாசம் என்னை வியப்படையச் செய்தது....

முன்பயணப் பணிகள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக நடந்தது.......

எங்கள் பொருள்கள் நகரும் ஒரு மேடையில் வைக்கப்பட்டு அது ஒரு சின்னஞ்சிறு குடிலுனுள் நுழைந்து மறுபக்கம் வந்தது..சோதனை செய்யப்பட்ட எங்களது சுமைகள் மறுபடியுமெங்கள் கையில்......

சிங்கப்பூர் விமானப் பணிபெண்கள்(Ground Staff) எங்களை அழைத்து அடுத்துச்  செய்து முடிக்க வேண்டிச் செல்ல வேண்டியஇடத்தைச் சுட்டிக் காண்பிக்க நாங்கள் அந்த இடம் சென்றோம்... எங்கள் பொருள்களின் மொத்த எடை ஒரு  ஆள் கொண்டு செல்ல அனுமதிக்கும் 30 கிலோவை விட குறைவு....அதனால் எங்களிடம் விசயத்தைக் கூறி ஒரே பெயரில் டேக் போட்டு கட்டி நகரும் மேடையில் வைத்தார்கள்.... அது எங்கோ நகர்ந்து போனது போல் இருந்தது.
Boarding Pass தந்தார்கள். அதன் பின் மாடியில் மறு நாட்டுத்தங்கல் அனுமதிச் சான்று ( IMIGRATION STAMBING ) பெற போனோம். பாஸ்போர்ட்டில் சீல் அடித்து தந்தார்கள்......அதன்பிறகு என்ன செய்யலாம்........ யோசிக்க ஆரம்பித்த உடனே ஜெயராம் போன் பண்ணினான்.

“ நீங்கள் ஏறிப்போன மாடியில் இருந்து திரும்பி வந்த திசையைப் பாருங்கள்”..

பார்த்தோம்...... கிருஷ்ணனும் அவனும் கைகளை அசைத்துக் கொண்டு நின்றது எங்களுக்கு தெரிந்தது....

காத்திருக்கும் மண்டபம் நுழையுமுன் மறுபடியும் அனைத்துப்பொருள்களும் சோதனை செய்யப்பட்டு எங்களிடமே வந்தன....
உள்ளே போனோம்..... எல்லாமும் அங்கே கிடைக்கும் படி கடைகள் பல இருந்தன... நகர பஸ்நிலையத்தில் அல்லது ரயில் நிலையங்களில் இவை இருந்தால் பிளாட்பாரத்துக்கடை என்போம்.....இவற்றை என்ன பேர் சொல்லி அடையாளம் காட்ட......எல்லா நாட்டு நாணயங்களையும்  மாற்றிக் கொள்ளும் வசதி கொண்ட இடம்..... படிக்க, பசிதீர,உடுக்க,ருசிக்க என அனைத்தும் கிடைக்கும் காமதேனு..... விலை சற்று அதிகம்.....இரண்டு காப்பி 96 ருபாய்.....

திருவனந்தபுரம்விமானநிலயம்
9 மணியளவில் ஒரு வாசல் வழி அழைத்துச் செல்லப்பட்டு விமானத்தினுள்ளே நடந்தே சென்றோம்.... படியேறிச் செல்ல வேண்டியிருக்குமோ என நான் நினைத்தேன்.எவ்வளவு சுமையிருந்தாலும் நாமே கொண்டு செல்ல வசதியாக பாதை இருந்தது...
விமான எண். MI-491
Economy class. Seat No: 17 A and 17 B.....  நான் மூன்று செயர்கள் உள்ள வரிசையில் நடுவில் அமர்ந்தேன்.....நான் இருந்த இருக்கையின் முன் பகுதியில் பாதையோரமுள்ள யாருமில்லா இருக்கையில் வசதியாகப் போய் அமர்ந்து கொண்டேன்.
இருபது நிமிடநேர தாமதத்துடன் விமானம் பயணிக்க ஆரம்பித்தது.

.குளிர்பானம் வந்தது......குறுஞ்சாப்பாடும் வந்தது.....

என் நெஞ்சம் கொஞ்ச நேரம் கலங்கியது.......என் மனம் சற்று படபடத்தது.......
இவை எதுவும் பயத்தினால் அல்ல...
.என் முதல் பயணம் என் மனைவியோடு....அனைத்து விமானப்பயணமும் அவளுடன் தான்....ஆனால் இந்த  அழகான  அருமையான சந்தர்ப்பத்தில் ஒரு சுயநலவாதியாய் நான் மட்டுமே போகிறேனே .....இந்த ஆதங்கம் என்னை மெல்ல தின்று கொண்டே இருந்தது. இனி இது போன்றதொரு வாய்ப்பு கிட்டுவதென்பது மிகவும் அரிதான ஒன்று.....அவள் எங்களுடன் அழைத்துச் சென்றிருக்கப்பட வேண்டும்... தவறிவிட்டேன்......நான் அவள் விரும்பி இருந்தாலும் இல்லா விட்டாலும் அவளை வரும்படி அழைத்திருந்தால் அவள் என்னுடன் வந்திருப்பாள்....
நான் விரும்பவில்லையோ என நினைத்து விட்டாள்.....

குற்றமுள்ள நெஞ்சல்லவா ......தவித்துக்கொண்டிருந்தேன் 

தவறிழைத்ததால்....அப்படியே தூங்கிவிட்டேன்..... கண் மலர்ந்தது.....சாங்கி விமான நிலையத்தில் விமானம் தரை இறங்கியது. என் கைக் கடிகாரம் 3.15 எனக் காட்டியது. சிங்கப்பூர் மணியோ 5.45 எனக் காட்டியது.....
சிங்கப்பூர்வந்தடைந்தவர் செல்லவேண்டிய திசை.
இரண்டரை மணி நேர வித்தியாசம்...
எங்கள் பைகளை  எடுக்குமுன் பாஸ்போர்ட்டில் சீல் வைக்க வேண்டும்.... நாங்கள் அதற்குமுன் ஒரு DISEMBARKATION/EMBARKATION form-ஐ  வாங்கி பூர்த்தி செய்தோம்....
அந்த பார்மில் உள்ள வாசகம் : WARNING
                                     DEATH FOR DRUG TRAFFICKERS UNDER SINGAPORE LAW ....சிவப்பு எழுத்துக்கள்.....
20,000 சிங்கப்பூர் டாலருக்கு அதிகமாக கையில் வைத்திருந்தால் ஒரு ஃபார்மில் எழுதிக் கொடுக்க வேண்டும்...இந்த இரண்டு தகவலடங்கிய பகுதியை கிழித்து எம்மிடமே தந்து விட்டார்கள்...அதனைப் பாதுகாப்பாக வைத்து நம் நாடு திரும்புகின்ற பொழுதில் அதனைக் காண்பிக்க வேண்டும்...

பைகளை வாங்கி வாசலுக்கு வந்தோம்,,,அங்கே எங்களுக்காக காத்திருந்தார் மணி.(குமாரசுவாமி).அதன் பிறகு விரைவாக நகர்ந்து சென்று கொண்டிருந்த மக்கள் வரிசையில் நாங்களும்
சேர்ந்து நகர்ந்தோம்.....

வெளியே  டாக்சி வர வர ஏறிச் சென்று கொண்டிருந்தார்கள்....எங்களுக்கும் அதுபோன்று டாக்சி வந்தது..... அதில் ஏறிப்பயணித்தோம்.....இருள் பிரியும் நேரம் நெருங்க நெருங்க சிங்கப்பூர் நகரம்  சிங்காரமாய் காட்சி அளிக்கத் தொடங்கியது..... பட்டிக்காட்டான் பார்வையாய் என் பார்வை இருந்தது என்று சொன்னால் அதுதான் உண்மை....
சாலையில் பயணித்த கார் பூமிக்கடியில் உள்ள சாலையிலும்  பயணம் செய்தபோது மணி சொன்னது மிகவும் வியப்பாக இருந்தது....அது கடலோரச் சுவர் என்றும் அதன் மறுபக்கம் கடல் என்றும் அறிந்து கொண்டோம்.............
டாக்சி ஹோட்டல் அமரா எதிர்புறம் உள்ள tanjong pagar plaza அருகில் நிற்க நாங்கள் மணியுடன் நடந்து சென்றோம். எட்டாம் தளத்தில் பத்தாவது வீடு.......

1 comment:

  1. இனிதாய் தொடங்கியிருக்கிறது சிங்கப்பூர் பயணம். தொடர்கிறேன்.

    ReplyDelete